Skip to content
Post Views: 4,696
நந்தா முதலில் வருணை அழைத்து எல்லா விவரமும் சொல்லி இருந்தான். அடுத்து தன் அன்னையை அழைத்தான்.
“ஹலோ….”
“அம்மா எப்படி இருக்கீங்க?”
“நந்தா, நீ இந்த நேரத்தில போன் பண்ண மாட்டியே, என்ன விஷயம்?”
Advertisement
“அம்மா, நான் ஒரு பெண்ணை விரும்புறேன். அவளை உடனே கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சுழ்நிலையில இருக்கேன். வருணுக்கு எல்லாம் தெரியும். அவன் உங்ககிட்ட விவரமா சொல்லுவான். நீங்க எல்லாம் உடனே கிளம்பி இங்க வாங்க.”
“என்ன நந்தா சொல்ற? கல்யாணம் உனக்கு விளையாட்டா போச்சா?”
“ப்ளீஸ் மா… எனக்கு வேற வழி இல்லை. புரிஞ்சிக்கோங்க மா.”
Advertisement
அந்தப் பக்கம் குழலி பேசவே இல்லை. அவருக்கு யோசிக்க வேண்டியது இருந்தது. போன்னை வைத்து விட்டார்.
Advertisement
அவர் யோசிக்கட்டும் என நந்தாவும் நினைத்தான். கமிஷனருக்கு அழைத்துத் தான் அன்பரசுவின் மகளைத் திருமணம் செய்யப்போவதாகச் சொன்னான்.
அவருக்கு அவனைப் பற்றித் தெரியும். அதனால் ஒன்றும் சொல்லவில்லை… உன் விருப்பம் என்றுவிட்டார்.
உதவிக்கு அங்கு அவனுக்கு நன்கு பழக்கமான காவல்துறை நண்பர்கள் இருவரிடம் அழைத்து விவரம் சொன்னான்.
Advertisement
“அய்யாவோட பொண்ணா… பெரிய இடம்தான்.” என்றவர்கள், உடனே கிளம்பி வருவதாகச் சொன்னார்கள்.
நந்தா மீண்டும் ஹாலுக்கு வந்து அமர்ந்து கொண்டான். பத்மா அவனைச் சாப்பிட அழைத்தார். அன்பரசுவும் அவனை அழைத்துக் கொண்டு உணவு மேஜைக்குச் சென்றார்.
சாப்பிட அமர்ந்தவனுக்குப் பத்மா வந்து பரிமாறினார். அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. சப்பாத்தியும் குருமாவும் செய்து இருந்தார்.
“கயல்விழி எங்க காணோம்.” அவன் அன்பரசு முன்பே தைரியமாகக் கேட்க….
“உள்ள இருக்கா…” பத்மா சொல்ல…
“வர சொல்லு.” என்றார் அன்பரசு.
அவரை ஆச்சர்யமாகப் பார்த்தபடி அறைக்குள் சென்ற பத்மா, மகளை அழைத்துக் கொண்டு வந்தார்.
நடப்பதை எல்லாம் இன்னும் நம்பியும், நம்பாமலும் இருந்தாள் கயல்விழி. அவளுக்குக் காய்ச்சல் போய் ஜன்னி வந்துவிடும் போல் இருந்தது.
அவளைப் பரிமாறச் சொல்லிவிட்டு பத்மா உள்ளே சென்றார். அவனது முகம் பார்க்காமல் அவள் பரிமாற, நந்தா அவளைத் தவிர வேறு யாரையும் பார்க்கவில்லை.
தன் கணவர் வந்து பேசி சென்ற பிறகு பத்மா மகளுக்குப் புடவை கட்டிவிட்டு, தலைவாரி பூ வைத்து இருந்தார். சின்னப் பெண்ணாக இருந்தாலும், புடவை அவளுக்குப் பாந்தமாக இருந்தது.
அவள் நிறத்திற்கு ஒப்பனை எதுவுமே தேவை இல்லை. சின்னப் பொட்டு மட்டும்தான் வைத்திருந்தாள். அதற்கே அவ்வளவு அழகாகத் தெரிந்தாள்.
நந்தா தன் மகளை விரும்பிதான் பெண் கேட்கிறான் என நேரில் பார்த்தே தெரிந்து கொண்ட அன்பரசு, அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றார்.
அவனுக்குச் சப்பாத்தி எடுத்துக் கொண்டு வந்த பத்மாவிடம், “என்ன அத்தை உங்க பொண்ணு கேட்ட காரக்குழம்பு பண்ணலையா?” எனக் கேட்டு நந்தா சிரிக்க, அவரும் மகளை பார்த்து சிரித்து விட்டார். கயல்விழி அப்போதுதான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, அவன் என்ன என விழியால் கேட்க, சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள்.
அவளுக்கு மனதில் ஆயிரம் குழப்பம் இருந்தது. அதை யாரிடமும் சொல்ல முடியாமல் இருந்தாள். சாவில் இருந்து தப்பித்ததை நினைத்து சந்தோஷப்படுவதா… அல்லது மீண்டும் திருமணம் நடக்கபோவதை நினைத்து வருந்துவதா என ஒன்றும் தெரியவில்லை.
காற்று அடிக்கும் திசையில் செல்லும் படகை போல் அவள் நிலைமை. அவள் கைகளில் ஒன்றும் இல்லை.
நந்தா சாப்பிட்டு முடிக்கவும், பூசாரி வரவும் சரியாக இருந்தது. அவர் அவர்களது குலதெய்வ கோவில் பூசாரிதான்.
அவருக்குத்தான் நந்தாவை நன்றாகத் தெரியுமே. அதோடு கயல்விழியின் நிலையையும் அறிந்தவர் ஆயிற்றே.
“ரெண்டு பேருக்கும் பேர் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு. நாளைக்கே நல்ல முஹுர்த்தம் இருக்கு. கல்யாணத்தை நாளைக்கே கூட வச்சிடலாம்.” என்றார்.
“நான் எங்க அம்மாகிட்ட பேசிட்டு வந்திடுறேன்.” என நந்தா அறைக்குள் போன் பேச சென்றான்.
வருண் கயல்விழியைப் பற்றி எல்லாவற்றையும் குழலியிடம் சொல்லி இருந்தான்.
நந்தா ஒன்றை நினைத்து விட்டால், அதிலேயே நிற்கும் ரகம். நாளை அவன் பயப்படுவது போல், அந்தப் பெண்ணுக்கு எதுவும் நடந்து விட்டால், தன் மகனின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற எண்ணத்தில், குழலி கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டார்.
நந்தா அழைத்ததும் வருண்தான் போன்னை எடுத்தான். நந்தா விவரம் சொல்ல, “எல்லோரையும் அங்க கூடிட்டு வர்றது என் பொறுப்பு. நீ நாளைக்கே கல்யாணத்தை வைக்கச் சொல்லு.” என்றான்.
வருண் சொன்னால் முடித்து விடுவான் என நந்தாவுக்குத் தெரியும். அறையை விட்டு வெளியே வந்தவன், “நாளைக்கே கல்யாணத்தை வச்சுக்கலாம்.” என்றான்.
கல்யாணத்தைக் குல தெய்வ கோவிலில் வைப்பது என்று முடிவு ஆனது. அப்போதே கோவிலை அலங்கரிக்க ஒரு கும்பல் சென்றது.
“ஜவுளி கடைகாரருக்கு சொல்லி விடு.” அன்பரசு வாசுவிடம் சொல்ல, “அப்படியே அவரை மறக்காம ரெடிமேட் ஜாக்கெட் கொண்டு வர சொல்லுங்க.” எனப் பத்மா நியாபகப்படுத்தினார்.
கீதாவுக்கு நடப்பதை எல்லாம் பார்த்து ஆத்திரமாக வந்தது. தனது தம்பியிடம் அப்பாவுக்குத் தகவல் சொல்ல சொல்லி அனுப்பி இருந்தாள்.
சரி என்று சொல்லி வந்திருந்தாலும், விக்னேஷ்க்கு அவன் தந்தையிடம் சென்று சொல்லும் எண்ணம் எல்லாம் இல்லை. அவனுக்குத்தான் கயல்விழியைத் திருமணம் செய்ய விருப்பம் இல்லையே.
இதே கயல்விழியை ஒரு காலத்தில் திருமணம் செய்யும் ஆசையுடன் அவனும் சுற்றி சுற்றி வந்தவன்தான். அதெல்லாம் ஒரு கனாக்காலம் போல் ஆகிவிட்டது.
பத்மா மறுநாள் கல்யாணத்திற்குத் தேவையானவற்றை எல்லாம் பூசாரி சொல்ல சொல்ல எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார்.
தனது காவல்த்துறை நண்பர்கள் வந்ததும், நந்தா அவர்களோடு வெளியே நின்று பேசிக் கொண்டு இருந்தான். அவனுக்கு வீட்டுக்கு போகும் எண்ணம் எல்லாம் இல்லை.
மறுநாள் வரும் அவன் உறவினர்களுக்கு நல்ல ஒரு விடுதியில் அறை ஏற்பாடு செய்தாகிவிட்டது. அவனுக்கு உடையும் கயல்விழிக்கு தாலியும் வாங்க வேண்டும்.
காலை பத்தரை பன்னிரென்டு தான் முஹுர்த்தம். அதனால் பரவாயில்லை காலையில் வாங்கிக்கொள்ளலாம்.
கயல்விழி அவள் அறையில் படுத்து இருந்தாள். “நீ மட்டும் கல்யாணம் செஞ்சு சந்தோஷமா இருக்கப் போறியா?” எனப் பாண்டியின் நண்பர்கள் கேட்டதே, காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது.
திருமணம் செய்து கொண்டால் கூடத் தன்னால் சந்தோஷமாக இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. வீணாக ஏன் ஒருவரின் வாழ்க்கையை வேறு வீணாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன், எழுந்து தன் அம்மாவை தேடி சென்றாள்.
“அம்மா, எனக்குக் கல்யாணம் வேண்டாம் மா… எதோ தப்பு பண்ற மாதிரியே இருக்கு.” என அவள் சொல்ல….பத்மா கதிகலங்கி போய் விட்டார்.
“என்ன இப்படிப் பேசுற? இனியாவது நீ நல்லா இருப்பேன்னு பார்த்தா இப்படிச் சொல்ற? நான் தவிச்ச தவிப்பு உனக்குத் தெரியும் தான, இப்ப எல்லாம் கூடி வர்ற நேரத்தில இப்படிப் பேசினா எப்படிக் கயல்?”
“நீ மட்டும் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா நாம ரெண்டு பேரும் சாகிறதை தவிர வேற வழியில்லை.”
“பழசையெல்லாம் மறந்துடு டா… இங்க வந்து பாரு.” என அறையின் ஜன்னல் வழியாக நந்தாவை காட்டியவர்,
“உனக்கத்தான் அந்தத் தம்பி இந்த நேரத்தில் கூட இங்க நின்னுட்டு இருக்கு. உன்னை விட்டுட்டுப் போக மனசு இல்லாமத்தான்.”
“நாம நினைச்ச வாழ்க்கை அமையலைனா… கிடைச்ச வாழ்க்கையாவது நல்லா அமைச்சுக்கனும்.”
“கண்டதையும் யோசிக்காம இந்த அம்மாவுக்காக நீ கல்யாணம் பண்ணிக்கணும்.” பத்மா கெஞ்சலாகச் சொல்ல…. கயல்விழி நந்தாவை பார்த்தாள்.
தெரு விளக்கு வெளிச்சத்தில் அவன் முகம் நன்றாகத் தெரிந்தது. அவன் உடன் இருந்தோரிடம் எதோ சிரித்துப் பேசியபடி இருந்தான்.
அவளுக்கு என்ன தெரியும் அவனைப்பற்றி. இதற்கு முன் இரண்டு முறைதான் பார்த்து இருக்கிறாள். அதுவும் தனிப்பட்ட முறையில் அவனைப் பற்றி எதுவுமே தெரியாது.
யாரிவன் திடிரென்று வந்தான், எல்லாவற்றையும் மாற்றுகிறான் என்றுதான் தோன்றியது.
error: Content is protected !!