Skip to content
Post Views: 4,844
அதேநேரம் அதே அன்பு வேறு ஒருவரிடம் இருந்து கிடைத்த போது , அதுவும் நீ இல்லையென்றால் உயிரையே விடுவேன் என்றதும் , அவள் கண்களுக்கு அவன் உயர்வாகவே தெரிந்தான் .
அவர்கள் இனத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதைத் தவிர , பாண்டியிடம் குறை சொல்லும்படி ஒன்றும் இல்லை . அவன் நல்லவன் தான் . ஆனால் தன் குடும்பம் எப்பேற்பட்டது , இதெல்லாம் நடக்குமா எனக் கயல்விழி யோசிக்க மறந்தாள் .
அந்த நேரத்தில் பிரச்சனை முடிந்தால் போதும் என்றுதான் இருவருமே நினைத்தனர் . எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க மறந்தனர் . அவர்களின் வயது அப்படி . இளங்கன்று பயம் அறியாது .
காதலிக்கிறேன் என ஒத்துக்கொண்டாளே தவிர , கயல்விழியிடம் வேறு முன்னேற்றம் இல்லை . காதலை வளர்க்க தேவையான சூழ்நிலையும் இல்லை . அதனால் அவள் எப்போதும் போலவே சாதாரணமாக இருந்தாள் .
Advertisement
பாண்டி தாங்கள் காதலிப்பதாக அவன் நண்பனிடம் சொல்ல … அவன் சென்று இன்னொருவனிடம் சொல்ல … அவன் சென்று கயல்விழியின் சொந்தக்காரன் ஒருவன் , அதே கல்லூரியில் படிக்கிறான் , அவனிடம் சொல்லிவிட்டான் .
கல்லூரியில் இருக்கும்போதே , அவன் தன் நண்பர்களோடு வந்து பாண்டியை அடித்துவிட்டு எச்சரிக்கை செய்தவன் , கயல்விழியையும் பார்த்து முறைத்து விட்டுச் சென்றான் .
எப்படியும் இன்றே வீட்டிற்குத் தெரிந்துவிடும் என்று கயல்விழிக்கு தெரியும் . அப்போதுதான் வீட்டினரை பற்றிய பயம் வந்தது .
Advertisement
அவளை எதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தை விட , பாண்டியை எதுவும் செய்து விடுவார்களோ என்றுதான் அவள் பயந்தாள் .
Advertisement
“ நீ எங்கையாவது போயிடு பாண்டி .” கயல்விழி சொல்ல …
“ நீயும் வா .” என்றான் அவன் .
அவனுக்கு நன்றாகத் தெரியும் , இன்று கயல்விழியை விட்டுவிட்டால் , அவனால் திரும்ப அவளைக் கண்ணால் கூடப் பார்க்க முடியாது என்று .
Advertisement
“ நானா …” கயல்விழி அதிர்ந்து போய்ப் பார்க்க ,
“ நீ மட்டும் இப்ப என்னோட வரலைனா . நான் செத்துடுவேன் . உண்மையிலேயே அதுதான் நடக்கும் கயல் .” பாண்டி அழுத்தம் திருத்தமாகச் சொல்ல … பாண்டியின் நண்பர்களும் அவன் சொல்வதுதான் சரி என்றனர் .
கயல்விழிக்கு யோசிக்க நேரமே கொடுக்கவில்லை . அப்போதே கல்லூரியின் பின்பக்க வாயில் வழியாக வெளியே சென்று , அந்தப் பக்கம் வந்த பேருந்தை கைகாட்டி அதில் ஏறிவிட்டனர் . அதுவரை உடன் வந்த தேன்மொழி பேருந்தில் ஏறவில்லை .
ராம்நாட் வந்து , அங்கிருந்து மதுரைக்குப் பஸ் ஏறி , மதுரைக்குச் செல்லும் பாதி வழியிலேயே ஒரு கோவிலை பார்த்ததும் அங்கேயே இறங்கி விட்டனர் .
கல்லூரியில் பாண்டியை அடித்தவன் , நேராகக் கயல்விழியின் அப்பா எங்கிருக்கிறார் என விசாரித்து , அவரின் மில்லுக்குச் சென்று அனைத்தையும் அவரிடம் சொல்லி முடித்தான் .
அவன் சொல்லி முடித்ததும் , அன்பரசு அவனை விட்ட அறையில் , அவனின் ஒருபக்க காதே கேட்கவில்லை .
“ உனக்குத் தெரிஞ்சதும் விஷயத்தை என்கிட்டே வந்து சொல்ல வேண்டியது தான வெண்ணை , உன்னை யாருடா அவனை அடிக்கக் சொன்னது ? அதுவும் பொண்ணு அங்க இருக்கும் போது …..” என்றவர் ,
“ டேய் கிருஷ்ணன் , வாசு உடனே காலேஜ் போய்க் கயலை கூடிட்டு வாங்க . மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம் .” என்றார் . ஆனால் அவருக்கு முன்தான் பாண்டி முந்திக்கொண்டானே .
ரோட்டோரம் இருந்த கோவில் உள்ளே அவர்கள் சென்றபோது , அந்நேரத்திற்குக் கோவிலில் யாருமே இல்லை .
கோவிலில் மரத்தில் இருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து பாண்டி கயல்விழியின் கழுத்தில் கட்டிவிட்டான் . அதோடு உடனே அங்கிருந்து கிளம்பி , அவனின் நண்பனின் ஊருக்கு வந்துவிட்டனர் .
எப்படியாவது தப்பித்து மெட்ராஸ் சென்றுவிட வேண்டும் எனப் பாண்டி நினைத்திருக்க . ஆனால் நடந்ததோ வேறு …
கயல் கல்லூரியில் இல்லை என்றதும் , அவள் அண்ணன்கள் உடன்பயின்றோரை விசாரிக்க … அவர்கள் அவள் தேன்மொழியோடு சென்றதாகச் சொன்னார்கள் .
தேன்மொழியின் வீட்டிற்கு அவர்கள் சென்றபோது , அவள் அப்போதுதான் கல்லூரியில் இருந்து வந்திருந்தாள் . அவளை அடித்து மிரட்டி விஷயத்தை வாங்க . பாவம் அவள் குடும்பமே அரண்டு போய்விட்டது .
கயல்விழி பாண்டியோடு ராம்நாட் செல்லும் பேருந்தில் சென்றது தெரிந்து , இவர்கள் ஆட்களோடு அங்கே சென்று தேட … பிறகுதான் அவர்கள் மதுரை சென்ற விவரம் தெரிந்தது .
இவர்கள் மதுரையில் தேடிக்கொண்டிருக்க …. வேறு ஒருவரின் மூலம், அவனின் நண்பனின் ஊரில் இருக்கிறார்கள் எனத் தகவல் கிடைத்தது . இரவில்தான் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடிந்தது .
பாண்டி செத்து விடுவேன் என மிரட்டியே , கயல்விழியை அவன் இஷ்ட்டதிற்கு வளைத்தவன் , அவள் அவனுக்காக வந்தும் செத்துதான் போனான் . அதுவும் அவள் கண் எதிரிலேயே .
எல்லாவற்றையும் கேட்ட உமாவுக்குக் கயல்விழியை நினைத்துப் பாவமாக இருந்தது . இந்தப் பெண்ணின் இரக்க குணத்தைப் பயன்படுத்தி , அவள் வாயாலையே காதலிப்பதாகச் சொல்லவும் வைத்து , கல்யாணத்துக்கும் அவசரப்படுத்தி , கடைசியில் அவள் கண் எதிரிலேயே உயிரையும் விட்டால் … இந்தப் பெண்ணுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்காதா ?
ஏற்கனவே மென்மையான மனம் படைத்தவள் , அவளுக்கு இதைத் தாங்கிக்கொள்வது கஷ்ட்டம் தானே . கையால் பறிக்க வேண்டிய பூவை , கோடாரியால் வெட்டினால் என்ன ஆகும் ? அதுதான் இப்போது நடந்திருக்கிறது .
இவளை எப்படியாவது இதிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என நினைத்த உமா , “ இதுல உன் தப்பு என்ன கயல் ?” எனக் கேட்க ….
“ எல்லாமே என்னோட தப்புதான் .” என்றாள் அவள் .
இந்த எண்ணம் இருக்கும்வரை , அவளை இயல்பாக மாற்றுவது சிரமம் என்று உணர்ந்தவள் ,
“ சும்மா எல்லாத்தையும் தூக்கி உன் தலையில போட்டுக்கக் கூடாது . நீ போய்ப் பாண்டியை காதலிக்கிறேன்னு சொன்னியா ? இல்லை அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னியா ?”
“ அவன்தான் எல்லாத்தையும் ஆரம்பிச்சு இருக்கான் . அப்ப பின்விளைவுகளைப் பற்றி அவன்தான் யோசிச்சு இருக்கணும் .”
“ என்னைக் கேட்டா இதெல்லாம் பாண்டியோட அவசரத்துனால வந்ததுன்னு சொல்வேன் . அப்படியும் நீ அவனை ஏமாத்த நினைக்கலையே . அவன் கூப்பிட்டதும் போகத் தான செஞ்ச .”
“ எத்தனை பெண்கள் காதலிச்சவனைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறாங்க ?”
“ உன் அப்பா இப்படிச் செஞ்சா , நீ என்ன பண்ணுவ ?”
உமா சொன்னதைக் கேட்டதும் கயல்விழி வேறு விதமாகவும் யோசிக்க ஆரம்பித்தாள் .
“ அவங்கவங்களுக்கு என்னவோ அதுதான் நடக்கும் புரியுதா ? சும்மா கண்டதையும் நினைச்சுக் குழப்பிக்கக் கூடாது .”
“ பழசை மறந்திடுன்னு சொல்லலை … நினைக்காமல் இருக்க முயற்சி செய் .”
“ அதையே நினைச்சு உன்னையே நீ வருத்திகிட்டா மட்டும் ? நடந்தது எதுவும் மாறப்போறது இல்லை . உனக்குப் புது வாழ்க்கை அமைஞ்சிருக்கு . அதை நல்லபடியா தக்க வச்சுக்கோ .”
“ நான் ஒரு பத்து நாளுக்கு மாத்திரை தரேன் . அதைப் போட்டுட்டு தூங்கு . நல்லா தூக்கம் வரும் . நீ வேணா பாரு கனவே வராது .” என்றவள் , விட்டமின் மாத்திரைகளை தான் கொடுத்தாள் .
எப்போதுமே மருந்து மாத்திரையை விட நம்பிக்கையே சிறந்தது . உனக்கு ஒன்றும் இல்லை . நீ நன்றாக இருக்கிறாய் என்பதே மிகுந்த ஊட்டமளிக்கும் .
பிறகு இருவரும் வேறு விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தனர் . சிறிது நேரத்தில் வந்த நந்தா காரில் இருந்தே ஹாரன் அடிக்க … கயல்விழி எழுந்து சென்றாள் .
நந்தா உமாவிடம் பிறகு போன் செய்வதாக ஜாடை காட்டினான் . அதைப் புரிந்து கொண்டு உமா கை அசைத்தாள் .
என்ன பேசினார்கள் எனக் கயல்விழியிடம் நந்தா கேட்கவே இல்லை . அவளை அழைத்துக் கொண்டு கடற்கைரைக்கு எதிரே இருந்த உணவகத்திற்குச் சாப்பிட சென்றான் . லாபியில் இருந்து பார்க்க கடற்கரை நன்றாகத் தெரிந்தது .
“ இதுதான் மெரீனா பீச் . நீ சொன்ன சிற்பம் எங்க இருக்கு ?” நந்தா கேட்க … பார்த்த கயல்விழியின் முகத்தில் அசடு வழிந்தது .
“ இது அது இல்லை போலிருக்கு .” என்றாள் .
“ ஹா . . . ஹா … புரிஞ்சிடுச்சா ?”
“ உங்களுக்கு அப்பவே தெரியும் இல்ல , பிறகு ஏன் சொல்லலை ?”
“ நீ பேசினது பார்த்து எனக்கே சந்தேகம் வந்துடுச்சு .” என்றான் .
கயல்விழி அதையும் நம்ப …. நந்தாவுக்குச் சிரிப்பை அடக்குவது சிரமாக இருந்தது .
“ அங்க போகலாமா ?” கடற்கரையைக் காட்டி கயல்விழி கேட்க ,
“ இந்த நேரத்திலேயா ? எப்படியும் உன் அண்ணன் இன்னைக்கு உன்னை இங்க கூடிட்டு வருவான் பாரு .” என்றான் .
இருவரும் வீடு வந்து சேர நான்கு மணி ஆகிவிட்டது . ஹாலில் வீட்டினர் இருக்க … எல்லோருமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் .
“ இன்னைக்கு நைட் மெரீனா பீச் போகலாமா ?” வருண் கேட்க …. கயல்விழி நந்தாவை பார்க்க …. அவன் அவளைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்தான் .
error: Content is protected !!