Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vaazhkai Vaazha Thaanae

VVT 8

EPISODE 8

அன்றைய சந்திப்புக்கு பிறகு அஜையிடம் மனதால் தான் இன்னும் நெருக்கமானதை போல உணர்ந்தாள் மாதங்கவதனா.



Advertisement

 

உண்மையில் அவனை அவளுக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த பிடித்தம் எந்த அளவுக்கு என்பதை மட்டும் அவள் யோசிக்க தயாராயில்லை.

Advertisement

 

Advertisement

அஜய் அவளிடம் ஓரடி நெருங்கி வந்தாலும் அவள் இரண்டடி விலக நினைத்திருக்கலாம், வாய்ப்புண்டு!

 

Advertisement

ஆனால், கள்ளன் தள்ளி நின்றே அவள் மனதில் இடம் பிடித்துவிட்டான்.

 

எப்போதும் போன்றதொரு நடைபாதை சந்திப்பு!

 

ரயிலில் ஏறி நின்றதும் அவன் முகம் பார்த்தாள் மாதங்கவதனா.

 

அஜய், “சோ…?” என்றான்.

 

“சோ…? நீங்க தான் சொல்லணும்!”

 

“வீடு பாக்க மறுநாளே வரோம்ன்னு சொன்னோம்! மேடம் கால்ஷீட் தான் கிடைக்க மாட்டேங்குது!” என்றான் கிண்டலாய்.

 

“ம்ச்! அஜய்… நான்தான் சொன்னேன்ல? இந்த வாரத்தோட வேலை முடிஞ்சுடும்! இனி இப்படி ட்ரைன்’ல அலையாம ஆபிஸ்’ல உட்காந்து வேலை பாப்பேன்! அப்போ எல்லாரும் வாங்கன்னு சொன்னேன் தானே?” அவன் கிண்டல் செய்கிறான் என்று தெரிந்துமே தன்னிலை விளக்கமளித்தாள்.

 

“சும்மா…” என்றவன், “கார் இல்லனா ஸ்கூட்டி வாங்கலாம்’ல?” என்றான்.

 

“வாங்கலாம்! ஆனா யார் ஓட்டுறது?” என்றவள் கேட்க, திகைத்தவன், “வாட்? வண்டி ஓட்ட தெரியாதா?” என்றான் வியப்பு மேலிட.

 

சிரித்துக்கொண்டே, ‘ம்ஹும்…!’ என்று தலையசைத்தாள் அவள்.

 

“எப்படி இவ்ளோ நாள் வண்டி ஓட்டாம மேனேஜ் பண்ணீங்க? அதுவும் சென்னை’ல?”

 

ஆச்சர்யமாய் கேட்டவனிடம், “வேற எப்படி? எல்லாம் நடராஜா சர்விஸ் தான்! அதைவிட்டா அரசாங்கம் விட்ட பஸ், ட்ரைன்… அதையும் விட்டா நம்ம ஊரு அண்ணனுங்க ஆட்டோ, கேப்’…” என்று சிரிக்க,

 

“நான் சொல்லித்தரவா?” என்றான் அவன்.

 

இப்போது வியப்பது அவள் முறையானது.

 

“சும்மா இருங்க அஜய்!”

 

“நோ… ஐ வில்… அண்ட் போர் ஷுர்!” என்றான். லேசான தலைக்குலுக்களோடு அந்த பேச்சை காற்றில் விட்டாள் அவள்.

 

அவள் அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு வர, “சோ ஆடிட்டர் மேடமை இனி ட்ரைன்’ல பாக்க முடியாது?” என்றான் அஜய்.

 

உதடு பிதுக்கியவள், “யெஸ்!” என்றுவிட, “ஹும்! எல்லாரும் நம்மளை மாதிரியே ‘மிஸ்’ பண்ணுவாங்கன்னு நினைக்கலாமா அஜய்?!” என்று தன்னைத்தானே திட்டுவதை போல அவளை திட்டினான் அவன்.

 

புன்னகைத்தவள், “மிஸ் பண்ற அளவுக்கு ஒன்னும் இல்லை! சீக்கிரமே என் அப்பார்ட்மென்ட்’ல வீடு வாங்கிட்டு வாங்க!” என்றாள்.

 

“வந்துடுவோம்!” என்றவன், “வீட்ல அம்மா அப்பா இருக்காங்களா?” என்றான்.

 

“அவங்க ஊருல இருப்பாங்க”

 

“தனியாவா இருக்கீங்க?” புருவம் சுருக்கினான்.

 

“ஏன், தனியா இருந்தா என்ன? நீங்க எல்லாம் பத்து பேர் கூட கூட்டமா தான் இருக்கீங்களோ?”

 

கேட்டது தப்பு தான் என ‘சரண்டர்!’ ஆனான் உடனே!

 

அஜய்யின் அசைவுகள் ஒவ்வொன்றும் அவளை அசைத்துதான் பார்த்தது.

 

தான் யார்… எப்படி… என்பதை கூட மறந்துபோகும் அளவு அவன் அருகாமையில் என்னவோ வசியத்தை உணர்ந்திருக்கிறாள்.

 

அவன் கண்களையும், சிரிப்பையும் விட்டு வேறு யோசிக்க முடியாது செய்துவிடுவான்!

 

‘மாயக்காரனோ?’ என்றுக்கூட அபத்தமாய் நினைத்திருக்கிறாள்.

 

நின்றுக்கொண்டே கனவு கண்டவளின் முகத்துக்கு நேரே சொடுக்கிட்டவன், “முழிச்சுக்கிட்டே தூக்கமா?” என்று கேட்க, “இல்லையே!” என்றாள்.

 

“நான் ஒன்னு கேட்பேன்… கோச்சுக்காம பதில் சொல்லுவீங்களான்னு கேட்டேன் உங்ககிட்ட!” என்றான்.

 

“கேளுங்களேன்!”

 

“எதுக்காக டிவோர்ஸ்!?”

ஒற்றை கேள்வி அவள் உடல்மொழி, மனநிலை அத்தனையும் மாற்றிப்போட்டது.

 

முகத்தை அசூயையுடன் திருப்பிக்கொண்டவள், “எனக்கு அந்தாளை சுத்தமா பிடிக்காது! வீட்டுல நல்ல இடம்’ன்னு போர்ஸ் செஞ்சு தான் கட்டி வச்சாங்க!” என்று சொல்ல, ‘இன்பத்தேன் வந்து பாய்ந்தது’ அஜய் காதுக்குள்ளே!

 

“மேரேஜ் முடிஞ்ச பிறகு கொஞ்ச நாள் ஒன்னும் தெரியல! ஆனா, அதுக்கு பிறகு தான் அவன் நடவடிக்கை ஒன்னும் சரியா படல… வீட்டுல சொன்னேன்! என்னை தான் அட்ஜஸ்ட் பண்ண சொன்னாங்க! மூணு வருஷமா முட்டி மோதி இப்போதான் எல்லாரையும் எதிர்த்துக்கிட்டு விவாகரத்து வாங்க தைரியம் வந்துருக்கு எனக்கு!”

 

அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிட, “ஓகே அஜய், ஸீ யூ டுமாரோ!” என்று இறங்கப்போனாள்.

 

“என்ன பிரச்சனைன்னு சொல்லவே இல்லையே!” என்று பின்னால் அவன் குரல் கேட்க, சுற்றிலும் இருந்த ஆட்களை பார்த்துவிட்டு, “ஈ.எம்.ஏ!” என்றவள் சொன்னதும் ரயில் அங்கிருந்து கிளம்பி சென்றது.

 

            “ஏன்டா, ஒரு பொண்ணு ஈ.எம்.ஐ கட்டுறதுக்கு எல்லாமா டிவோர்ஸ் பண்ணுவா?” ஆச்சர்யம் தாளாமல் வினவினான் விவேக்.

“ஈ.எம்.ஐ இல்லடா… ஈ.எம்.ஏ!” திருத்தினான் அஜய்.

“அதென்ன ஈ.எம்.ஏ?” ரீனா வினவ,

“மாசாமாசம் கட்டுற ஈ.எம்.ஐ மாதிரி இது வாராவாரம் கட்டுறதோ? ஆனாலும் இதுக்காக எல்லாம் டிவோர்ஸ் ரொம்ப ஓவர்’டா!” என்றான் குரு.

“எனக்கென்னவோ இதுக்கு வேற அர்த்தம் இருக்கும்ன்னு தோணுது” என அஜய் சொல்லும்போதே,

“இனஃப் கைஸ்! ஈ.எம்.ஏ’ன்னா ‘எக்ஸ்ட்ரா மேரிட்டல் அப்ஃபெர்ஸ்’ [EXTRA MARITAL AFFAIRS]” என்று கூகுளிடம் கேட்டுவிட்டு சுவாதி சொல்ல,

“ஓ…..” என்றிழுத்த நால்வரிலும் குரு, “உன் ஆளு புருஷன் வேறொரு ஆளை வச்சுருக்கானாம் டோய்!” என்று கவுண்டமணி ஸ்டைலில் அஜையிடம் சொல்ல, நொடிபொழுதில் அங்கொரு தள்ளுமுள்ளு அரங்கேறியது.      
 

            பெரிய கார் ஒன்றில் ஐவர் படை வந்திறங்கியது, கொசுறாய் பிரபுவுடன்!

அவர்களுக்காக பார்க்கிங் ஏரியாவில் காத்திருந்த மாதங்கவதனா, “வாங்க… வாங்க…” என்று இன்முகமாய் வரவேற்க, அவளை ஆசையாய் பார்த்துக்கொண்டே இறங்கினான் அஜய்.

அஜையை கண்களால் வரவேற்றவள், “ரூட் கண்டுப்பிடிக்க கஷ்டமா இருந்துச்சா?” என்றாள் பொதுவாய்.

“நோ… மேப்’ல நீ அனுப்புன லொகேஷன் வச்சு வந்தோம்! ஈசியா தான் இருந்துச்சு!” என்றாள் ரீனா.

முதல்முறையாய் மாதங்கவதனாவை நேரில் பார்க்கும் பிரபு, ‘சூப்பர்’ என அஜய்யிடம் சைகை செய்துவிட, அதை கவனித்த மாதங்கவதனா கேள்வியாய் புருவம் சுருக்க,

“மாது, இவர் என் ஹஸ்பன்ட்! டாக்டர் பிரபு!” என்று அறிமுகப்படுத்தினாள் சுவாதி!

அவள் ‘ஹலோ’ சொல்லும்முன்னே தான் ‘ஹலோ’ சொன்ன பிரபு, “ரெண்டு முறை அடி வாங்குனபோதும் அஜய்க்கு வைத்தியம் பார்த்தது நான் தான்!” என்றிட, மாதுவுக்கு தர்மசங்கடமாய் போனது.

பிரபுவோ, “என்ன… செகன்ட் டைம் நான் சுவாதிக்கு ஹஸ்பன்ட்! பர்ஸ்ட் டைம் வுட் பீ ஹஸ்பன்ட்!” என்றுவிட்டு பெரிய ஹாஸ்யம் சொல்லிவிட்டதை போல சிரிக்க, அவஸ்தையாய் சிரித்து வைத்தாள் மாது.

“சுவா, உன் புருஷனை கொஞ்சம் மாடியேத்துறியா?” அஜய் கேட்டதும், “வாங்க!” என இழுத்துக்கொண்டு லிப்டு இருந்த பக்கம் சென்றாள் சுவாதி.

விவேக்கும் குருவும் கூடவே போக, அவர்களுக்கு பின்னே மற்றவர் சென்றனர்.

தனக்கு சற்று அருகே நடந்து வந்துக்கொண்டிருந்த மாதங்கவதனாவிடம், இம்முறை விவரமாய், “ஷராரா வெரி நைஸ்!” என்றான் அஜய்.

மாது ‘களுக்!’ என்று சிரிக்க, தலையில் அடித்துக்கொண்ட ரீனா, “டேய், இது டுனிக் டா!” என்றாள்.

சிரித்துக்கொண்டே இரு பெண்களும் லிப்ட்க்குள் நுழைந்துவிட, “ச்சை! என்ன பேரு வைக்குறாங்க… நமக்கெல்லாம் சட்டை, பேன்ட் அவ்ளோதான்!” என சலிப்பாய் புலம்பிக்கொண்டு சென்றான் அஜய்.

“முதல்ல புது வீடெல்லாம் பார்த்துடலாம்! அப்பறம் என் வீட்டுக்கு அழைச்சுட்டு போறேன்! டோன்ட் மிஸ்டேக் மீ!” என்றாள் மாது.

அறுவரும் ‘நோ ப்ரோப்ளம்!’ என்றுவிட, ஒரே அமைப்பில் இருக்கும் மூன்று வீடுகளையும் சுற்றி பார்த்தனர்.

வந்தது என்னவோ அஜய்’க்காக தான் என்றாலும் உண்மையில் அவர்களுக்கு வீடு வெகுவாய் பிடித்துப்போனது. அவர்கள் அலுவலகத்தில் இருந்து அரைமணி நேர பயணம் மட்டுமே…

விலையும் இவர்கள் எதிர்ப்பார்த்த பட்ஜெட்டில் தான் இருந்தது.

விவேக் தன் மனைவிக்கு வீடியோ காலில் வீட்டை காட்டிக்கொண்டிருந்தான். எந்த வீட்டை யார் எடுப்பது என இப்போதே சின்ன பசங்க சண்டை ஆரம்பித்திருந்தது.

அதையெல்லாம் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அஜய், “அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு மாது… ஒனர்க்கிட்ட பேசிடலாம்! நம்பர் குடுங்க! வேற யாருக்கும் போய்ட போகுது!” என்றான்.

அவளும் நம்பர் கொடுக்க உடனே அழைத்து பேசிவிட்டான்.

பிடித்த விதத்தில் ஒரே இடத்தில் பக்கம் பக்கமாய் வீடு கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தங்கள் நெடுநாள் ஆசை நிறைவேறியதில் முகம் ‘ஈஈ’ என்றே இருந்தது.

வீடு வாங்க மேற்கொண்டு என்ன என்ன பேச வேண்டுமோ, விசாரிக்க வேண்டுமோ அந்த நிலைக்கு தாவியிருந்தது அவர்கள் பேச்சு!

எல்லாம் சரிப்பட்டு வந்தால் இன்னும் ஒரே மாதத்தில் கிரகபிரவேஷம் வைத்துவிடலாம் என்ற அளவுக்கு இருந்தது.

இப்படி ஒரே நாளில் ஆசைப்பட்டபடி கிடைக்கும் என அவர்களே நினைக்கவில்லை. மாதுவுக்கு நன்றி சொல்லி ஓய்ந்துப்போயினர்.

அவர்கள் மகிழ்ச்சியை ஆதூரத்துடன் பார்த்துக்கொண்டு அஜய் நிற்க, “அப்போ உங்களுக்கு? நீங்க எங்க இருப்பீங்க?” என்றாள் மாது.

“வேறெங்க? இப்போ இருக்க வீட்டுல தான்!” அவள் குரலில் இருந்த வருத்தத்தை கண்டுக்கொள்ளாதவன் போல சொன்னான் அஜய்.

‘ஓ!’ என்றவளின் குரலில் சுருதி குறைந்து வர, “நான் வேணுன்னா இங்க பக்கத்து அப்பார்ட்மென்ட்’ல வீடு இருக்கான்னு விசாரிக்கவா?” என்றாள்.

அவள் தவிப்பை உள்ளூர ரசித்துக்கொண்டே, “எதுக்கு மாது? அதெல்லாம் வேண்டாம்! குடும்பமா அவங்க இங்க இருந்துக்கட்டும்! நான் ஒண்டிக்கட்டை தானே… எங்க இருந்தா என்ன?” என்றான்.

லேசாக முறைத்தாளோ?!

திரும்பி பார்த்தால் தானே தெரிய?!

வேண்டுமென்றே எங்கோ பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

சில நிமிடங்கள் அவனருகே நின்றவள், பின்பு ‘தங்கு.. தங்கு…’கென நடந்து, நகர்ந்து போவது தெரிய, இவன் அதரங்கள் அகலமாய் விரிந்தது.

சற்று நேரத்தில் அனைவரையும் அவள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டிருந்தாள், கவனமாய் அவனை மட்டும் தவிர்த்து.

‘நீ கூப்பிடலன்னாலும் நான் வருவேன் மாதுக்குட்டி!’ மனதுக்குள் கொஞ்சிக்கொண்டே தான் புகப்போகும் புகுந்தவீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்து சென்றான் அஜய்.

வந்தவர்களுக்கு ஸாஃப்ட் ட்ரிங்க்ஸ், ஸ்நேக்ஸ் என்று அவள் கொண்டு வந்து கொடுக்க, கொஞ்சமும் கூச்சமின்றி ரவுன்ட் கட்டி அடித்தனர்.

அஜய் மட்டும் வீட்டை அங்குலம் அங்குலமாய் அளவெடுத்துக்கொண்டிருந்தான். அதே அமைப்பில் தான் இருந்தது அந்த மூன்று புதிய வீடுகளும்.

சற்று நேரம் அவர்களுடன் அமர்ந்து அளவளாவிக்கொண்டிருந்த மாதங்கவதனா, “ஒரு நிமிஷம்! இதோ வரேன்” என்றுவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றாள்.

அவள் போனதும் அஜய்யை பிடித்துகொண்டது நால்வர் படை.

“டேய், என்னடா ஆரத்தி எல்லாம் எடுத்து உள்ளே கூப்பிடுவாங்கன்னு பார்த்தா இப்படி மொக்கையா போச்சு!?”

“துரை, வலது காலை எடுத்து வச்சு தான் வந்தான் பாத்தீங்களா?”

“அஜய், கல்யாணம் முடிஞ்சதும், முதல் வேலையா கப்போர்ட்’ல ரெண்டு ரேக் உங்களுக்குன்னு பேசி இடஒதுக்கீடு வாங்கிடுங்க! இல்லனா ‘ஹேங்கர்’ தான் எப்பவும்” பிரபு சொல்ல அவன் முதுகிலேயே சுவாதி கையால் ஒன்று விழுந்தது!

ஆளாளுக்கு அவனை ஏதேதோ சொல்லி ஓட்ட, எப்போதும் போல அவர்கள் ஒன்றாய் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இன்றி போனதால் அவர்கள் நகையொளி பலமாய் எதிரொலித்துக்கொண்டிருந்தது.

சந்தோஷமாய் சிரித்து பேசி விளையாடிக்கொண்டிருந்தவர்கள் வாசலில் அரவம் உணர்ந்து திரும்ப, அங்கே கண்ட காட்சியில் அப்படியே உறைந்து நிற்க,

“சர்ப்ரைஸ்!!! இது என்னோட பொண்ணு பிரசன்னவதனா!” என்றபடி இரண்டு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தாள் மாதங்கவதனா.

அங்கே குண்டூசி விழுந்தால் கூட இடியென சப்தம் கேட்கும்… அப்படி ஒரு நிசப்தம் நொடியில் சூழ்ந்துக்கொண்டது.

அங்கிருப்பவர்களில் யார் அதிகம் அதிர்ந்து நின்றனர் என்பதற்கு பாகுப்பாடே இன்றி அனைவரும் ஸ்தம்பித்து நிற்க,

கொஞ்சம் கூட அதிர்ச்சி இன்றி மலர்ந்த முகத்துடன் எழுந்து சென்று தன் கரங்களில் குழந்தையை வாங்கிக்கொண்டான் அஜய்.

அவனது அதிர்சியற்ற நிலைக்கண்டு இன்னும் அதிர்ந்தவர்கள் அவனிடம் கண்களாலேயே, ‘உனக்கு முன்னாடியே தெரியுமா?’ என்று வினவ, ‘இல்லை!’ என்று தீர்கமாய் மறுத்தான் அஜய்.

சிறிது நேரம் அவன் மட்டுமே குழந்தையுடன் விளையாடினான்.

மற்றவர்களால் என்ன முயன்றும் இயல்பாய் இருக்க முடியவில்லை.

மாது சற்று நகர வேண்டி காத்திருந்தவர்கள், அவள் கிட்சன் பக்கம் சென்றதும்,

“உனக்கு கொஞ்சம் கூட ஷாக்கா இல்லையா?” என்றனர்.

“எதுக்கு ஷாக் ஆகணும்?” என்றான் அவன்.

“டேய், குழந்தை இருக்குடா!”

“கல்யாணம் ஆனா குழந்தை இருக்கத்தானே செய்யும்? உங்களுக்கெல்லாம் இருக்கு தானே? அப்பறம் என்ன?”

 

அசால்ட்டாய் கேட்டான் அஜய்.

  

சுவாதி, “உங்க அம்மாக்கிட்ட என்ன சொல்லுவ? டிவோர்ஸ் ஆன பொண்ணுன்னு தெரிஞ்சாலே ஒத்துக்க கஷ்டம்… இதுல குழந்தையோட இருக்குன்னா…! ம்ச்! கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க…”

“திஸ் இஸ் மை லைஃப் சுவா!” என்றுவிட்டான்.

ரீனா, “அஜய்… ஐ தின்க் திஸ் வோன்ட் வொர்க் அவுட்… விட்டுடு”

“இப்போதான் நான் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்’கா இருக்கேன்! ஐ நீட் ஹர்! அவ தான் எனக்கு வேணும்!” அழுத்தமாய் உரைத்தான் அஜய்.

“சுத்த பைத்தியக்காரத்தனம்! உனக்கு என்ன குறைச்சல்’ன்னு…” ரீனா துவங்கும்போதே,

“அவளுக்கும் எந்த குறைச்சலும் இல்லையே!” என்றான் அஜய்.

அவன் மிகவும் தெளிவாக ஸ்திரமாக இருப்பது புரிந்தது ஐவருக்கும்.

இதற்குமேல் பேசுவது ‘வீண்’ என்றும் புரிந்துப்போனது.

இறுதி முயற்சியாய், “மாதுக்கு இன்னொரு கல்யாணம் பண்ற ஐடியா இல்லனா என்னடா பண்ணுவ?” என்று விவேக் கேட்க, அதேநேரம் அடுக்களையில் இருந்து வெளியே வந்த மாதங்கவதனா,

“அஜய், ஏன் கூல்ட்ரின்க் எடுத்துக்கல? வேற ஏதாவது கொண்டு வரவா? என்ன வேண்டும்?” என்றாள்.

பிரசன்னவதனாவை தூக்கி தோளில் வைத்துக்கொண்ட அஜய், “எனக்கு நீதான் வேணும் மாது! நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்!” என்றான் பட்டென!

 

‘பண்ணிக்கலாமா?’ என்றுக்கூட கேட்கவில்லை.

 

‘பண்ணிக்கலாம்’ என்று தகவல் போல தான் சொன்னான்.

 

கொஞ்சமும் தயங்காமல், பூசி மொளுகாமல், வார்த்தை அலங்கரிப்பு இல்லாமல் நேரிடையாய் கேட்டுவிட்டான்.

 

மீண்டும் ஓர் அதிர்ச்சி!!!

 

‘என்னடா இவன்!’ என்பதை போல…

 

அவனையே வெறித்துக்கொண்டு நின்றாள் மாதங்கவதனா.

 

அவன் கண்கள் அவன் விளையாடவில்லை என்று உரைத்தது.

 

ஒன்றும் சொல்லாமல் அவனிடம் இருந்து தன் பிள்ளையை வாங்கிக்கொண்டவள், அமைதியாய் அவள் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள்.

 

அடைப்பட்டது கதவு மட்டுமா அல்லது…?!

 

விடை தெரியாத கேள்வியாய் அஜய் நிற்க, அவனை சூழ்ந்தவர்கள், “வா போலாம்!” என்று வெளியேறினர்.

 

காரில் ஏறியதும், “இனி அவ உன்னை பாக்கவோ, பேசவோ மாட்டா! நீ அவசரப்பட்டுட்ட!” என்றான் குரு.

 

‘இல்லை’ என்று திடமாய் மறுத்த அஜய்,

 

“அவ வருவா! என்னைத்தேடி! என்கிட்ட! கண்டிப்பா வருவா!” என்றான்.

 

அவனது ஆதாரமில்லா உறுதிக்கண்டு கவலைக்கொண்டனர் ஐவரும்.

 

ஆனால், அஜய்யின் உறுதியை பொய்க்கவிடாமல் வந்தாள் அவள்.

 

அவனைத்தேடி…!

அவனிடம்…!

 

ஆனால், தேம்பி தேம்பி அழுதுக்கொண்டு…!!!

 

=வாழலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!