Skip to content
Post Views: 5,238
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 14
மறுநாள் காலை கயல்விழி கண்விழித்த போது, நன்றாக விடிந்து இருந்தது. பக்கத்தில் நந்தா படுத்திருந்த இடம் காலியாக இருக்க…. அதைப் பார்த்தவள், உடனே படுக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்.
Advertisement
இரவு முழுவதும் நன்றாக உறங்கி எழுந்ததால்… சுறு சுறுப்பாக உணர்ந்தாள். குளித்து முடித்துப் புடவையைச் சுற்றிக்கொண்டு வந்தவள், அப்போதுதான் திறந்திருந்த மறுபக்க கதவை கவனித்தாள்.
அந்தக் கதவை மூடிவிட்டு, உடைமாற்றியவள், வேகமாகத் தயாராகி அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள். அப்போது கூடப் பூட்டிய அறையில் இருந்து நந்தா எப்படி வெளியே சென்றிக்க முடியும் என்று அவள் யோசிக்கவில்லை.
அவள் கீழே வந்த போது, இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை. பால் பாக்கெட் எடுப்பதற்காக வாசல் கதவை திறந்தவள், வெளியே ஒரு பெண்மணி வாசல் கூட்டி பெருக்குவதைப் பார்த்து, அங்கேயே நின்றாள்.
Advertisement
“நீதான் இந்த ஊட்டுக்கு புதுச்சா வந்திருக்க மருமகளா?” என்றபடி தண்ணீர் தெளித்தவர், கோலப்பொடி எடுக்கச் செல்ல….
Advertisement
“அதை என்கிட்டே கொடுங்க. நான் கோலம் போடுறேன்.” என்றபடி அதை வாங்கிய கயல்விழி, எழிலாகக் கோலம் போட அந்தப் பெண்மணி நின்று பார்த்துக் கொண்டு இருந்தார்.
“ரொம்ப ஜோரா போடுறியே. எனக்கு இம்மாம் பெரிசா எல்லாம் போட வராது. ரெண்டு மூன்னு கம்பி கோலம்தான் தெரியும். அதையே எல்லா ஊட்லையும் போட்டுடுவேன். இனிமே நான் தண்ணி தொளிச்சிட்டு போயிடுறேன். நீயே கரீட்டா போட்டுடு.”
அந்தப் பெண்மணி மெட்ராஸ் பாஷையில் பேச…. அவர் எதோ வேற்று மொழி பேசுவது போல் கயல்விழி அதிசயமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
Advertisement
இவளிடம் பதிலை எதிர்பார்க்காமல், அவர் அதே வரிசையில் இருந்த அடுத்த வீட்டிற்குச் செல்ல…. கயல்விழி விட்ட இடத்தில் இருந்து மீண்டும் கோலம் போட ஆரம்பித்தாள்.
அப்போது அவள் தலையில் எதோ பட… மேலே அண்ணாந்து பார்த்துவிட்டு, மரத்தில் இருந்து எதோ விழுந்தது என நினைத்துக் கொண்டு, மீண்டும் அவள் குனிந்து கோலம் போட, இந்தமுறை முதுகில் எதோ வந்து பட்டதும், சட்டென்று அவள் எழுந்து நின்று மேலே பார்க்க… அங்கே மாடியில் அவள் கணவன்தான் நின்று கொண்டிருந்தான்.
அவள் அவனைப் பார்க்க… மேலே வரும்படி விரலை அசைத்து அவன் கூப்பிட.. விரைந்து கோலத்தை முடித்துவிட்டு கயல்விழி மாடி ஏறினாள்.
அவள் அறைக்குச் செல்ல… அங்கே நந்தா இல்லை. பக்கவாட்டு கதவை தட்டும் சத்தம் கேட்க, “ஐயோ இங்கயா இருந்தாங்க.” எனப் பதறியபடி கதவை திறந்தாள்.
“எதுக்கு என்னை இங்க வச்சு பூட்டிட்டு போன?” நந்தா முறைத்து பார்த்தபடி கேட்க, “எனக்கு நீங்க இங்க இருந்தீங்கன்னு தெரியாது.” என்றாள் கயல்விழி பாவமாக.
நந்தா வேண்டுமென்றே இன்னும் முறைக்க, “சத்தியமா தெரியாது. நீங்க கீழே போயிடீங்கன்னு நினைச்சேன்.”
இன்னும் சிறிது நேரம் அவன் முறைத்தால், நிச்சயம் அழுது விடுவாள் எனத் தெரியும்.
“சரி இங்க வா…” என அவளை அழைத்துக் கொண்டு வெளிப்புறம் மாடிக்குச் சென்றான்.
மாடியில் ஒரு அறை மட்டுமே இருக்க, மீதி இடம் வெட்டவெளியாக இருந்தது. அதில் நிறையப் பூ செடிகள் வைத்து இருந்தனர். ஒரு பக்கம் நந்தா உபோயோகபடுத்தும் உடற்பயிர்ச்சி கருவிகள் இருந்தது.
“நான் இங்கதான் இருந்தேன். நீதான் பார்க்காம பூட்டிட்டு போயிட்ட. ஆமாம் முனியம்மாகிட்ட ரொம்பச் சுவாரசியமா பேசிட்டு இருந்த போலிருக்கு.”
“அவங்க பேர் முனியம்மா வா? அவங்க பேசின பாஷையே எனக்குப் புரியலை.”
“தமிழ்ல தான பேசினாங்க.”
“அது தமிழா?”
“என்னமா கண்ணு? இது கூடப் புரியாட்டி காட்டியும், நீயெல்லாம் இம்மாம் பெரிய ஊர்ல எப்படிக் குப்பை கொட்ட போற?” நந்தா மெட்ராஸ் தமிழில் பேசிக்காட்ட,
“குப்பை எங்க கொட்டனும்ன்னு சொல்லிட்டு போனாங்களா?” கயல்விழி அப்பாவியாகக் கேட்க, அவன் வாய்விட்டுச் சிரித்தான்.
“போங்க, நீங்க பேசுறதே எனக்கு ஒன்னும் புரியலை. நான் கீழ போறேன்.”
கயல்விழி திரும்ப, நந்தா அவள் கையைப் பிடித்து இழுத்தவன், “சாரி, சும்மா விளையாட்டுக்கு. இங்க வா உனக்கு ஒன்னு காட்டுறேன்.” என ரோஜா செடியின் பக்கம் அழைத்துச் சென்றான்.
“எனக்கு ரோஜா பூன்னா ரொம்பப் பிடிக்கும். நீ இதுக்குத் தினமும் தண்ணி ஊத்துறியா?”
“ம்ம்... சரி, எவ்வளவு ஊத்தணும்.”
“இன்னைக்கு நான் ஊத்துறேன் பார்த்துக்கோ. நாளையில இருந்து நீ ஊத்து.” என்றவன், ரோஜாவிலேயே நிறையத் தினுசு வைத்திருந்தான்.
“கயல், இன்னைக்கு உன்னைக் காலேஜ்ல சேர்க்க போறேன்.”
“எந்தக் காலேஜ்?”
“அம்மா வேலை பார்க்கிற காலேஜ்ல கூடச் சேர்க்கலாம். ஆனா நீ அவங்களையே எல்லாத்துக்கும் எதிர்பார்ப்ப. அதனால வேற காலேஜ்தான்.”
“இங்க இருந்து ரொம்பத் தூரமா?”
“இல்லை, ரெண்டு ஸ்டாப்பிங்தான். மெயின் ரோடு போய்ப் பஸ் ஏறி போயிடு.”
“தனியாவா? இந்த ஊர்ல எனக்கு எதுவும் தெரியாதே.”
“ரெண்டு நாள் போனா பழகிடும். அதை நான் பார்த்துகிறேன்.
இருவரும் பேசியபடி செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி முடித்தனர். காலை உணவு முடிந்ததும், நந்தா கயலை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். அவளின் சான்றிதல்களையும் மறக்காமல் எடுத்துக் கொண்டனர்.
அது ஒரு பிரபலமான மகளிர் கல்லூரி. கல்லூரி வாயிலில் காரை நிறுத்திவிட்டு, இருவரும் இறங்கி அலுவலகத்தை நோக்கி நடந்தனர்.
“நான் திரும்பி மேத்ஸ் தான் படிக்கனுமா?”
“உனக்கு மேத்ஸ் வேண்டாமா? அப்ப வேற கோர்ஸ் படிக்கிறியா?”
“ம்ம்…”
“பி.ஏ இங்கிலீஷ் படிக்கிறியா?”
“ஐயோ இங்கிலீஷ் வேண்டாம். வேற எதாவது?”
“நீ எதாவது யோசிச்சு வச்சிறிக்கியா?”
“ஹோம் சயின்ஸ் படிக்கவா? அது ரொம்ப ஈஸியா இருக்கும்.”
“இங்க அந்தக் கோர்ஸ் இருக்குமான்னு தெரியலை…”
நந்தா சொன்னதைக் கேட்டு கயல் முகம் வாட… “இங்க இல்லைனா வேற காலேஜ்ல சேர்த்து விடுறேன்.” என்றான்.
கல்லூரி தாளாளர் ராஜலக்ஷ்மி அவர் அறையில் இருந்தார். நந்தா தன்னை அறிமுகம் செய்துகொள்ள… அவனை மிகவும் மரியாதையாகப் பார்த்தார்.
கயலின் நல்ல நேரம் அவள் கேட்ட கோர்ஸ் அந்தக் கல்லூரியில் இருந்தது. கயலை மீண்டும் முதல் ஆண்டில் சேர்ப்பதால்… அவள் முன்னே கல்லூரியில் படித்ததைப் பற்றி நந்தா சொல்லவில்லை.
“இவங்க அப்பாவுக்குப் பெண்ணை மேலே படிக்க வைக்க இஷ்ட்டம் இல்லை. ஆனா எனக்கு இவ படிக்கணும்னு ஆசை.”
நந்தா பேசும் போதே குறுக்கிட்ட தாளாளர், “அதுகென்ன பத்தொன்பது வயசு தானே ஆகுது. எங்க காலேஜ்ல நிறையக் கல்யாணம் ஆன பொண்ணுங்க இருக்காங்க. அதுல சில பேர் நிறை மாச கர்பிணியா இருந்து கூடப் பரிட்ச்சை எழுது வருவாங்க.”
“பசங்களைப் படிக்க வைக்க நினைக்கிற பெத்தவங்க, பொண்ணுங்களுக்குக் கல்யாணம் தான் முக்கியம்ன்னு நினைக்கிறாங்க.”
“பொண்ணுங்க அப்படியும் எப்படியாவது அடிச்சு புடிச்சு படிச்சிடுறாங்க.”
“கல்யாணம் பண்ணிட்டு படிக்க வர்ற பெண்கள்கிட்ட, நான் ரொம்பக் கறாரா நடந்துகிறது இல்லை. இந்த நிலைமையிலும் படிக்க வர்றாங்களே அதுவே பெரிசு.”
“கயலை நான் கண்டிப்பா எங்க காலேஜ்ல சேர்த்துக்கிறேன். ஏற்கனவே காலேஜ் திறந்து ஒரு மாசம் ஆகிடுச்சு. ஆனா இப்பவரை அட்மிஷன் நடந்திட்டுதான் இருக்கு.”
“அதெல்லாம் அவ பிக்அப் பண்ணிடுவா மேடம்.”
“ஓகே நந்தா. நீங்க பீஸ் பே பண்ணிட்டு போங்க. திங்ககிழமையில இருந்து காலேஜ் வர சொல்லுங்க.”
“ஓகே மேடம் தேங்க்ஸ்.”
இருவரும் அவரிடம் விடைபெற்று, அவர் சொன்னது போல் அலுவலகத்தில் பணம் கட்டிவிட்டு வெளியே வந்தனர். அடுத்து நந்தா அவளை அழைத்துக் கொண்டு மாம்பலத்தில் ஷாப்பிங் சென்றான்.
அவளுக்குத் தேவையான உடைகள், மற்றும் இன்னும் கல்லூரிக்கு செல்ல தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு, இருவரும் வீடு திரும்ப மதியமாகிவிட்டது.
மதிய உணவிற்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, இருவரும் மாலை தாரணியின் வீட்டிற்குச் சென்றனர். இன்று ஷாப்பிங் சென்றபோது, தங்கைக்கும் நந்தா சில உடைகள் வாங்கி இருந்தான். அதோடு இனிப்பு, பழங்கள், பூ என்று நிறையவே வாங்கிக் கொண்டு சென்றனர்.
வருணின் அம்மா சுமித்ரா வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்றார். அவரோடு தரணியும் இருந்தாள்.
“வா நந்தா… வா மா கயல்.”
நந்தா தான் வாங்கி வந்த இனிப்பு மற்றும் பழங்களைச் சுமித்ராவிடம் கொடுத்துவிட்டு நலம் விசாரித்தான். கயல் தாரணிக்கு வாங்கி வந்த உடைகளை அவளிடம் கொடுத்தாள்.
ஹாலில் வருண்னின் அப்பா ஆனந்துடன் நந்தா உட்கார்ந்து பேச… சுமித்ரா கயல்விழியை அழைத்துக் கொண்டு உணவு அறைக்குச் சென்றவர், அங்கிருந்த இருக்கையில் அவளை அமர வைத்துப் பேசிக்கொண்டு இருந்தார்.
“எங்க வருண் அண்ணாவை காணோம்? இன்னும் வீட்டுக்கு வரலையா?”
“நீங்க வர்றீங்கன்னு இன்னைக்கு அவன் சீக்கிரமே வந்துட்டான். உனக்கு எதோ ஸ்பெஷல்லா பண்ணிட்டு இருக்கான்.” அவர் சொல்லிக் கொண்டு இருந்த போதே… வருண் ட்ரேயில் குடிக்க எதோ பானம் கொண்டு வந்தான்.
“வா கயல்…. வாடா மச்சான்.” என்றவன், “முதல்ல என் தங்கச்சிக்கு தான்.” எனத் தான் கொண்டு வந்த பானத்தை கயலிடம் கொடுக்க….
உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து வேகமாக எழுந்து வந்த நந்தா, அவளிடமிருந்த இருந்ததைப் பறித்துக் கொண்டான்.
error: Content is protected !!