Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maiyam Kollum Puyal

Maiyam Kollum Puyal 5 1

அத்தியாயம் 5

நீ அழகென்று கண்டு

கொண்ட போது உன் மீதான

காதலையும் உணர்ந்தேன் நான்!!!



Advertisement

கல்லூரி திறந்து கிட்டத் தட்ட ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் இது வரை அவனால் யுக்தாவிடம் பேச முடியவே இல்லை. சில நேரம் அவளுக்கு எதிரே அவன் நடந்து வந்தால் கூட அவள் தலையை குனிந்து கொண்டு செல்லும் பழக்கத்தை வைத்திருந்தாள்.

Advertisement

அவனுக்கும் அவளிடம் எப்படி பேச என்று தெரியவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் முதல் முறையாக அவனுக்கு அவளிடம் பேசும் வாய்ப்பு வந்தது. இங்கிலீஷ் லேபில் இவர்களுடன் சேர்த்து இன்னும் மூன்று பேர் ஒரே குருப் என்பதால் யுக்தாவும் யுவனும் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.

Advertisement

இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று சார் சொல்லிக் கொடுக்காததால் அனைவரும் கதை பேசிக் கொண்டிருக்க யுக்தா மட்டும் ஒன்றுமே இல்லாத கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

Advertisement

அப்போது “ஹாய்”, என்று அவளிடம் பேசினான் யுவன். அவன் குரலில் தன்னை அறியாமலே திரும்பிப் பார்த்தவள் பின் மீண்டும் திரும்பிக் கொண்டாள். அவள் செய்கை அவனுக்கு முகத்தில் அடித்தது போல இருந்தது.

முகத்தை திருப்பிக் கொண்ட யுக்தாவுக்கு “எல்லார்க் கிட்டயும் தைரியமா அவங்க கண்ணைப் பாத்து பேசணும்”, என்ற அன்னையின் அறிவுரை நினைவில் வந்தது, உடனே அவனைத் திரும்பிப் பார்த்தவள் “ஹாய்”, என்று அவனைப் பார்த்து சொன்னாள். அவள் அப்படிச் சொன்னதில் வியப்பாக அவளைப் பார்த்தான் யுவன்.

அவன் அவளை ஆராய்ச்சியாக பார்க்க அவளுக்கோ அடுத்து என்ன பேச என்று தெரிய வில்லை. யுவன் அடுத்து அவளிடம் என்ன பேசலாம் என்று எண்ணிக் கொண்டிருக்க அங்கு வந்த சார் “ஸிஸ்டம் ஆன் பண்ணி எல்லாரும் இங்கிலிஷ்னு இருக்குற போல்டரை ஓப்பன் செய்ங்க. அப்புறம் உங்க பக்கத்துல இருக்குற ஹெட்செட் எடுத்து போட்டுட்டு அதுல இருக்குற ஆடியோ கேளுங்க. அதுக்கப்புறம் நான் என்ன செய்யணும்னு சொல்றேன்”, என்று ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

அதற்கு பின்னர் அவனுக்கு அவளிடம் பேச வாய்ப்பு கிடைக்க வில்லை. அன்று மாலை வீட்டுக்குச் சென்றதும் யுவன் பேசியதை தாமரையிடம் சொன்னாள் யுக்தா.

“திடீர்னு ஹாய்ன்னு சொன்னான் மா. நான் பயந்துட்டேன் தெரியுமா?”

“நீ பயப்படாம இருந்தா தான் அதிசயம். பதிலுக்கு ஹாய் சொன்னியா பாப்பா?”, என்று புன்னகையுடன் கேட்ட படி மகளின் பேகில் இருந்த உணவு பாத்திரத்தை வெளியே எடுத்துக் கொண்டிருந்தாள் தாமரை.

“முதல்ல பயந்து தலையை திருப்பிட்டேன். அப்புறம் நீ சொன்னது நினைவு வந்துச்சா? உடனே ஹாய்ன்னு சொன்னேன். ஆனா அப்புறம் சார் வந்ததுனால எதுவும் பேசலை”

“குட், உன் கிட்ட நல்ல முன்னேற்றம் தான். இப்படி தான் இருக்கணும். ஆமா உன் கிட்ட பேசின அந்த பையன் பேரு என்ன டா?”

“யுவன் மா”

“ஓ அந்த பையனா?”

“அவனை உனக்குத் தெரியுமா மா?”

“முதல் நாள் உன்னை விட வந்த அன்னைக்கு பாத்தேன். உன்னை நல்லாப் பாத்துக்கச் சொல்லி அவன் கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். அதான் பேசிருப்பான். ரொம்ப நல்ல பையன். இனி அவன் உன் கிட்ட பேசினா முகத்தை திருப்பாத. நல்ல படியா பேசு சரியா?”

“சரி மா”, என்று சொன்ன யுக்தாவுக்குள் யுவனிடம் தாயே பேசச் சொன்னதால் அவன் மீது நம்பிக்கை என்னும் விதை விதைக்கப் பட்டது.

அடுத்து வந்த நாட்களில் எப்போதும் போல் யுக்தா அனைவரிடம் இருந்து ஒதுங்கியே இருந்தாள். அனைவரும் அவளைப் பற்றி புறணி பேசுவதை யுவனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். கூடவே அவள் அழகும் மற்றவர்களால் புகழப் பட்டது.

எந்த ஆணையும் சுண்டி இழுக்கும் வகையில் அவ்வளவு அழகாக இருந்தாள். வசீகரமான கண்களும் அடர்ந்த இமைகளும் அவளுக்கு தனி அழகைக் கொடுத்தது.

அவள் அழகை மற்றவர்கள் புகழ்ந்து பேசுவது யுவனுக்கு எரிச்சலாக வந்தது. கூடவே யுக்தா மேல் கோபமும் வந்தது. அவள் மற்ற பெண்கள் போல் அனைவரிடமும் சாதாரணமாக பேசிப் பழகி இருந்தால் மற்றவர்கள் இப்படி அவளைப் பற்றி தவறாக பேச மாட்டார்கள் என்று அவனுக்குப் புரிந்தது.

அதை அவளிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தான். மற்றொரு லேபில் அவளிடம் தனியே பேச அவனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

லேபில் வைத்து மற்றவர்கள் தங்களின் அருகில் அமர்ந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்க யுவனுக்கு தன்னுடைய அருகில் இருந்த யுக்தாவிடம் பேசலாமா வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது.

அவளோ “அவன் பேசினா நாமளும் பேசணும்”, என்று தான் எண்ணிக் கொண்டிருந்தாள். “அந்த உம்மணா மூஞ்சியை எதுக்கு டா பாத்துட்டு இருக்க? எங்க கூட வா. மேம் தான் இந்த லேப் பிரீன்னு சொல்லிட்டாங்களே? இங்க வா”, என்று சத்தம் போட்டே யுவனை அழைத்தான் அவனுடைய நண்பன்.

அவன் தன்னைத் தான் உம்மணாமூஞ்சி என சொல்கிறான் என்று புரிந்து கொண்ட யுக்தாவுக்கு கஷ்டமாக இருந்தது. அப்படி பேசியவனை முறைக்க கூட தெரியாமல் அவள் முகம் சுருக்கி அமர்ந்திருக்க யுவனுக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.

இங்கிருந்தே நண்பனை முறைத்து பார்த்தான். அவன் ஒரு தோள் குலுக்களோடு திரும்பிக் கொண்டான். பின் “யுக்தா”, என்று அழைத்தான் யுவன்.

கலங்கிய கண்களுடன் அவள் அவனை நிமிர்ந்து பார்க்க “உன்னைத் தான் அவன் அப்படிச் சொல்றான். அவனை கோபமா திட்டலாம்ல?”, என்று கேட்டான்.

அவனை வியப்பாக பார்த்தவள் “எனக்கு திட்டத் தெரியாது”, என்று சொல்லி உதட்டைப் பிதுக்கினாள்.

அதைக் காண ஒரு குழந்தை உதடு பிதுக்குவது போல இருந்தது. அவள் செய்கையிலும் சன்நாதிலும்  உருகிப் போனவன் “அட்லீஸ்ட் முறைக்கவாது செய்யலாம்ல? அப்படின்னா தான் அடுத்த தடவை உன்னை அப்படிச் சொல்ல மாட்டாங்க”, என்று சொன்னான்.

“அப்படி முறைச்சு அவன் என் கிட்ட சண்டைக்கு வந்துட்டா எங்க அப்பாவுக்கு தெரிஞ்சிரும். எங்க அப்பா என்னை யார்க் கிட்டயும் பேசக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க”, என்று அவள் சொன்னதிலே அவளது பயம் அவனுக்குப் புரிந்தது.

“இவளோட அப்பா பயத்தை எப்படி போக்க?”, என்று மனதில் எண்ணிக் கொண்டவன் “அப்படின்னா என் கிட்ட பேசுறதுக்கு உங்க அப்பா ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?”, என்று கேட்டான்.

“அப்பாவுக்கு தெரிஞ்சா அடிப்பாங்க தான். அதனால நீ சொல்லிக் கொடுத்துறாத. அப்புறம் எங்க அம்மா உன் கிட்ட பேசச் சொன்னாங்க. அதனால தான் பேசுறேன்”

“நீ ஏன் இப்படி இருக்க? நீ இப்படி அமைதியா இருந்தா உன்னை எல்லாரும் கிண்டல் அடிப்பாங்க யுக்தா”

“நான் எப்படி இருக்கேன்?”, என்று அவள் அவன் கண்களைப் பார்த்து கேட்க அவனுக்கு தான் இப்போது பதில் சொல்ல முடியாத நிலை.

“அதானே இவ எல்லாரையும் போலத் தானே இருக்கா. ஆனாலும் சிறகடித்துப் பறக்க வேண்டிய கல்லூரி வாழ்க்கையில் இப்படி சிறகொடிந்து அமைதியாக இருப்பது சரியா?”, என்று யோசித்தான்.

“இங்க பாரு யுக்தா. நாம எல்லாரும் ரொம்ப நாள் ஒண்ணா தான் படிக்க போறோம். அதனால எல்லாருமே எல்லார்க் கிட்டயும் பேசணும். நீயும் எல்லார்க் கிட்டயும் பேசு. முதல்ல கிளாஸ்ல உன் பக்கத்துல உக்காந்துருக்குறவங்க கிட்ட பேசு”

“அவ கிட்ட என்ன பேசுறது?”

“உன் பக்கத்துல இருக்குற கீர்த்தி அவ பக்கத்துல இருக்குற வினிதா கிட்ட பேசுறா தானே? அவங்க என்ன பேசுறாங்கன்னு கேட்டது இல்லையா?”

“காதுல விழும். அவங்க அப்பா நேத்து அது வாங்கிட்டு வந்தாங்க, இது வாங்கிட்டு வந்தாங்க. டூர் போனாங்கன்னு பேசுவாங்க. அவங்க கிட்ட போய் எங்க அப்பா என்னை இங்க அடிச்சாங்க, இங்க அடிச்சாங்கன்னு சொல்ல முடியுமா?”, என்று அவள் கேட்டதும் அவளைப் பரிதாபமாக பார்த்தான். அவளை எப்படியாவது மாற்றி விட வேண்டும் என்று அவன் மனம் ஆசை கொண்டது. ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை.

“இங்க பாரு யுக்தா, இது உன் வாழ்க்கை. காலேஜ் படிக்கிற வரைக்கும் தான் நாம சந்தோஷமா இருக்க முடியும். அதுக்கப்புறம் வேலை, கல்யாணம்னு வாழ்க்கை ஓடிட்டே இருக்கும். நீ இப்பவே மிஷின் மாதிரி இருந்தேன்னா உன்னோட வாழ்க்கை ரொம்ப மோசமா போகும். அதனால காலேஜ் குள்ள வந்தா உன்னோட வீட்டை மறந்துரு. இங்க நடக்குறது உன் அப்பாவுக்கு தெரிஞ்சிருமோன்னு பயப்படாத. இங்க தனி உலகம். உன் வீட்டப் பத்தி பேசாம வேற எல்லாத்த பத்தியும் பேசு”

“முயற்சி செய்றேன்”, என்று அவள் சொன்னதும் அவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அவளைப் பார்த்து புன்னகைத்தவன் “உனக்கு போன் இருக்கா?”, என்று கேட்டான்.

அவனை சந்தேகமாக பார்த்தவள் “இல்லையே”, என்றாள்.

“என்னை தப்பா நினைக்காத. மத்த எந்த தப்பான அர்த்தத்துலயும் நான் உன் கிட்ட பழகலை. நீ எனக்கு ஜஸ்ட் ஃபிரண்ட் மட்டும் தான். உன்னை என்னால பாத்துக்க முடியும்னு உங்க அம்மா நம்பினாங்க. உங்க அம்மாவோட அந்த நம்பிக்கையை நான் காப்பாத்துவேன். இனிமே உனக்கு நான் இருக்கேன்னு நினைச்சிக்கோ. ஒரு பிரண்டா நீ என் கிட்ட எல்லாமே பேசலாம். என்ன உதவின்னாலும் கேக்கலாம்”, என்று சொன்னவன் தன்னுடைய போன் நம்பரை அவளுடைய நோட்டில் எழுதிக் கொடுத்தான்.

“சரி”, என்று சொல்லி முதல் முறையாக அவனைக் கண்டு புன்னகைத்தாள். “குட் நீ இப்படி தான் எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும்”, என்று அவன் சொன்னதும் அவளும் தலையசைத்தாள்.

அன்றில் இருந்து இருவருக்கும் இடையே அழகான நட்பு என்ற பூ மலர்ந்தது. அவர்கள் இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பதை அந்த கிளாசில் இருந்த அனைவரும் வியப்பாக தான் பார்த்தார்கள்.

அடுத்து வந்த நாட்களில் யுக்தாவுக்கு உண்மையான நண்பனாக இருந்தான் யுவன். தினமும் கல்லூரிக்கு யுவன் வருகிறானா என்று

தேடும் அளவுக்கு யுக்தா முன்னேறியிருந்தாள்.

அவனும் வந்ததும் தன்னுடைய இருக்கையில் அமர்ந்து அவளைத் தான் பார்ப்பான். அவளும் அவனுக்கு அழகான புன்னகையை பரிசளிப்பாள்.

அவன் சொன்னதற்காக தனக்கு அருகில் அமர்ந்தவளிடம் அவள் பேச ஆரம்பித்தாள். ஆனால் அவளோ அவள் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லி விட்டு அந்த பக்கம் திரும்பி பேச ஆரம்பித்து விடுவாள். அவளுக்கு தன்னிடம் பேசுவது பிடிக்கவில்லை என்று உணர்ந்து கொண்ட யுக்தா அதன் பின் அவளிடம் அதிகம் பேசுவதில்லை.

அடுத்த லேபில் அவன் பேசுவதற்கு முன்பே “நீ சொன்னேன்னு தான் நான் அவ கிட்ட பேசினேன். ஆனா அவ பதில் மட்டும் சொல்லிட்டு திரும்பிட்டா. நான் என்ன செய்ய?”, என்று அவளே அவனிடம் கேட்டாள்.

அவள் மாற்றம் உணர்ந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் இருந்தவன் “அவ பேசலைன்னா விடு. இனி உன் கிட்ட யாராவது பேசினால் நீ பேசு சரியா?”, என்று சொன்னான்.

“என் கிட்ட நீ மட்டும் தான் பேசுற. அப்ப உன் கிட்ட மட்டும் பேசினா போதுமா? நீ தானே எல்லார்க் கிட்டயும் பேசச் சொன்ன?”

“இப்போதைக்கு என் கிட்ட மட்டும் பேசினா போதும் ஓகே வா? நம்ம கிட்ட பேச நினைக்காதவங்க கிட்ட நாம ரொம்ப இறங்கிப் போக தேவையில்லை. அப்புறம் படிக்கிற விசயத்துல ஏதாவது ஹெல்ப் வேணும்னாலும் என் கிட்ட கேளு. பொண்ணுங்க செய்யலைன்னா கூட உனக்கு நான் செய்வேன்”

“தேங்க்ஸ் யுவன். இனி நீ மட்டும் தான் எனக்கு ஃபிரண்ட்”

“அப்பாடி ஒரு வழியா என்னை பிரண்டா ஏத்துகிட்டியா? ரொம்ப சந்தோஷம். நம்ம பிரண்டா ஆனதுக்காக இன்னைக்கு உனக்கு டிரீட்.  சாயங்காலம் கிளாஸ் முடிஞ்சதும் உடனே போகாம வெயிட் பண்ணு”

“ஐயோ நான் போகணும் பா. இல்லைனா அப்பா அடிப்பாங்க”

“காலேஜ் குள்ள அப்பாவை மறக்கணும்னு சொன்னேன்ல. உங்க அப்பா நாலு மணிக்கு காலேஜ் முடியுதுன்னா அஞ்சு மணிக்கு தான் உன்னைக் கூப்பிட வராங்க. நீ சும்மா காலேஜ் வெளிய நின்னுட்டு தான் இருக்க”

“நான் வெயிட் பண்ணலாம். ஆனா அவரை வெயிட் பண்ண விடக் கூடாது. லேட்டா ஆச்சுன்னா அடிப்பாங்க”

“அவர் வெயிட் பண்ண வேண்டாம். அதே நேரம் நீயும் வெயிட் பண்ண வேண்டாம். எல்லாரும் அங்க இருந்து கிளம்பிப் போறப்ப நீ மட்டும் ரொம்ப நேரம் வெயிட் பண்ணுறதைப் பாக்க பாவமா இருக்கு யுக்தா, பிளீஸ் இன்னைக்கு ஒரு நாள் கொஞ்ச நேரம் என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு. நம்ம காலேஜ் கேண்டீனுக்கு தான் போறோம். வேற எங்கயும் இல்லை”

அவன் அக்கறையில் உள்ளுக்குள் ஒரு வித சந்தோஷ ஊற்று உருவானது அவளுக்கு. யுக்தாவைப் பொறுத்தவரையில் அவளுடைய தந்தை மட்டுமே அவளுக்கு தெரிந்த ஒரே ஆண் மகன். அவரும், அவளுக்கு அரக்கன் தான். அதனால் யுவனின் அக்கறை அவள் மனதை வசியம் செய்தது.

“நீ இவ்வளவு தூரம் சொல்றதுனால வெயிட் பண்ணுறேன். ஆனா நாலரை மணிக்கு காலேஜ் வெளிய போய் நின்னுருவேன்”

“ஓகே”

பின் அவளிடம் அவளுடைய அப்பா யார், என்ன வேலை செய்கிறார், அவள் வீடு எங்கிருக்கிறது என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான்.

கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் அவளும் அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்க தன்னுடைய பர்சில் இருந்த குடும்ப புகைப்படத்தைக் காட்டி ஒவ்வொருவரையும் அறிமுகப் படுத்தினான்.

“உங்க அம்மா ரொம்ப அழகா இருக்காங்க யுவன்”, என்று சுந்தரியை காட்டிச் சொன்னாள்.

“அப்படியா? இன்னைக்கே அம்மா கிட்ட சொல்லிறேன்”

“ஐயோ வேண்டாம்., ஆன்ட்டி கோச்சிக்கப் போறாங்க”

“எங்க அம்மாவுக்கு கோபமே வராது. அழகா இருக்காங்கன்னு நீ சொன்னேன்னு சொன்னா சந்தோஷம் தான் படுவாங்க”, என்று சொன்ன யுவன் மேலும் சிறிது நேரம் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

லேபில் வைத்து இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பற்றி பல புரணிகள் கிளாசில் உலாவியது தான். அதை உணர்ந்தாலும் யுவன் அதை கண்டு கொள்ள வில்லை. அவனுடைய நண்பர்கள் கேட்டதற்கு மட்டும் “நீங்க எப்படியோ அது மாதிரி தான் எனக்கு யுக்தாவும். அவளை நீங்களும் பிரண்டா ஏத்துக்கணும்”, என்று சொல்லி வைத்து விட்டான்.

“அவ உன் கிட்ட பேசுறதே அதிசயம். இதுல எங்க கூட பிரண்டா ஆகப் போறாளா? அவ முதல்ல எங்களை நிமிந்து பாக்குறாளான்னு பாப்போம்”, என்று நண்பர்கள் கிண்டல் அடித்ததால் அவர்களிடம் அவளை பேச வைக்க தான் இன்று மாலை அவளை இருக்க சொன்னான்.

ஆனால் அவளுக்கு பெரிய விபரீதம் தன்னால் தான் ஏற்படப் போகிறது என்று தெரிந்திருந்தால் அவளை இருக்கச் சொல்லியிருக்க மாட்டானோ என்னவோ?

அன்று மாலையும் வந்தது. ஒவ்வொருவராக கிளாசில் இருந்து வெளியேற “யுக்தா நான் முன்னாடி போறேன். நீ கேண்டீன்க்கு வந்துரு”, என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தான் யுவன்.

“ஐயோ நான் வரலைப்பா”, என்று அவள் முணுமுணுத்ததும் திரும்பி அவளைப் பார்த்தான். பின் தன்னுடைய நண்பர்கள் புறம் திரும்பி “நீங்க முன்னாடி போங்க டா. நான் இவளைக் கூட்டிட்டு வரேன்”, என்றான்.

“கண்டிப்பா அவ வர மாட்டா. அவளை வழி அனுப்பிட்டு நீ சீக்கிரம் வந்து சேரு”, என்று கிண்டல் அடித்து விட்டுச் சென்றார்கள் அவனுடைய நண்பர்கள்.

“அவங்க சொன்னதைக் கேட்ட தானே? அவங்க கிட்ட இன்னைக்கு உன்னை அவங்க கூட பிரண்டா ஆக்குறேன்னு சொல்லிருக்கேன். நீ என்னோட ஃபிரண்ட்னா நீ என் கேங்க்ல இருக்குற எல்லார்க் கிட்டயும் பேசணும் யுக்தா. என் கூ வா. நான் சொன்னா கேப்ப தானே?”

“நீ சொன்னா கேக்கணும்னு தான் தோணுது. ஆனா அப்பா….”, என்று பயந்தபடி கேட்டாள்.

“உங்க அப்பாவை உன் மனசுல இருந்து கொஞ்ச நேரத்துக்கு அழிச்சுரு. ஒரு கால் மணி நேரத்துக்கு அப்புறம் மனசுல ஏத்திக்கோ வா”, என்று சொன்னவன் அவளுடைய கையைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றான்.

“ஐயோ கையை விடு. நானே வரேன்”, என்று சொல்லி விட்டு அவன் பின்னே சென்றாள் யுக்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!