Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kannaa Varuvaayaa

Kannaa Varuvaayaa 7 4

ஆனால் சோலை அவனை அழைத்து “ஊருக்கு வந்திட்டியா மாப்பிள்ளை….” என்றவன், தான் காவேரியையும், சந்தியாவையும் தொடர்ந்து செல்வதாகச் சொல்ல, சுபாஷும் அங்கே வருவான் என்ற சந்தேகத்தில் கதிரும் உடனே மதுரைக்குக் கிளம்பினான். 

அவன் நினைத்து வந்தது வேறு, ஆனால் இங்கோ இருவரும் திருமணம் வரை சென்றுவிட்டனர். தங்களுக்குத் தெரியாமல் தங்கள் பிள்ளைகள் திருமணம் செய்துகொள்வது, பெற்றோருக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். அது இந்த முட்டாள்களுக்குப் புரியவில்லையே என்று மனதிற்குள் குமுறியபடி கதிர் காரில் உட்கார்ந்திருந்தான். 

சந்தியாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவள் தன் உடம்பில் இருந்த சக்தி எல்லாம் வடிந்து, சக்கையாகச் சுருண்டு போய் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு இன்று நடந்தது அதிகப்படியான அதிர்ச்சியைத் தந்திருந்தது. காலையில் வீட்டுக்கு வந்த கதிரின் முகம் சரியே இல்லை. அவன் வந்ததில் இருந்து காவேரியை பற்றியே விசாரித்தது வேறு லக்ஷ்மிக்குக் கலக்கமாக இருந்தது. அதுவும் வந்ததும் எங்கோ கிளம்பி சென்றுவிட்டான். க

திர் இப்படியெல்லாம் நடந்து கொண்டதே இல்லை. அதனால் மதியம் உணவு அருந்த வந்த தன் கணவர் பெரியசாமியிடம் லக்ஷ்மி புலம்ப, அவர் கதிரை செல்லில் அழைத்தார். 



Advertisement

ம்ம்…. சொல்லுங்கப்பா. வீட்டுக்கு தான் வரேன், காவேரி என் கூடத் தான் இருக்கா…” என்று மட்டும் சொல்லிவிட்டு கதிர் ஃபோன்னை வைக்க, பெரியசாமிக்கும் எதோ தவறாகவே பட்டது.

 பெற்றவர்கள் இருவரும் கலக்கத்தில் இருக்கஅப்போது சந்தியாவின் அம்மா வேதவல்லி அழுது கொண்டே வந்தவர் “இவளுங்க ரெண்டு பேரும் வந்துடாளுங்களாஎங்க பக்கத்து வீட்டு சொந்தகார பையன் மதுரையில, அந்தக் காலேஜ்ல தான் படிக்கிறான். அவன் அவங்களுக்குப் போன் செஞ்சு, சந்தியாவும், காவேரியும் யாரோ ஒரு ஆளோட ஆட்டோவுல போனதா சொல்லியிருக்கான்.

எனக்கு அதைக் கேட்டதுல இருந்து வயித்த கலக்குது. இவ அப்பாவுக்குத் தெரிஞ்சா. அவளை வெட்டி போட்டுடுவாரு….” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. 

Advertisement

சந்தியாவும், காவேரியும் உள்ளே வந்ததும் இருவரின் அம்மா மார்களும், ஆளுக்கு ஒரு துடைப்பத்தை எடுத்து இருவரையும் விளாசிவிட்டனர். கதிர் யாரையும் தடுக்கும் நிலையில் இல்லை. அவனே விட்டால் கதறி அழும் நிலையில் இருந்தான். 

Advertisement

சோலை தான் பெரியசாமியை தனியே அழைத்துச் சென்று நடந்ததைச் சொல்லி “பார்த்துக்கங்க ஐயா…. நான் வரேன்.” என்று சொல்லிவிட்டுச் சென்றான். அவர்கள் பேசியதை லக்ஷ்மியும், வேதவல்லியும் கேட்டுவிட்டு சந்தியா, காவேரியை இன்னும் மொத்தினார்கள். 

பெரியசாமி சிலையாக அமர்ந்துவிட்டார். அவருக்குத் தான் எங்கே தவறு செய்தோம் என்று தெரியவில்லை. அவளுக்குத் தேவையானது எல்லாம் பார்த்து, பார்த்து தானே செய்தோம். பின்ன ஏன் இப்படிச் செஞ்சா?…. என்று மனதிற்குள் தவித்துக் கொண்டிருந்தார். 

நம் நாட்டில் பெற்றோரின் எண்ணம் இது தான். அவர்கள் பிள்ளைகளுக்காக இரவு, பகல் பார்க்காமல் உழைப்பார்கள். அவர்களுக்குத் தேவையானது எல்லாம் பார்த்து பார்த்துச் செய்வார்கள். ஆனால், பிள்ளைகள் தங்கள் விருப்பப்படி தான் நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். 

Advertisement

பிள்ளைகளின் மனம்… அவர்களுக்கென்று ஒரு ஆசை, கனவு இருக்கும். திருமணத்தில் மட்டும் இல்லை… சில பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்த படிப்பை கூட விட்டு, பெற்றவர்களுக்கு பிடித்த படிப்பை படிப்பார்கள்.  அதைப் பெற்றவர்களிடம் மனம் திறந்து பேச, பிள்ளைகளுக்குத் தைரியம் இருக்காது. அதை யார் கொடுத்திருக்க வேண்டும் பெற்றவர்கள் அல்லவா.

எத்தனை பெற்றோர் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுகின்றனர். பெற்றவர்கள் மேல் பிள்ளைகளுக்குப் பாசம் இருக்க வேண்டுமே தவிரப் பயம் இருக்கக் கூடாது. நம்ம அம்மா, அப்பா கிட்ட சொன்னா அவங்க பார்த்துப்பாங்க என்ற நம்பிக்கையைப் பெற்றோர் தன் பிள்ளைகளுக்குத் தர வேண்டியது அவசியம் இல்லையா.

 காவேரியும் அதைத் தான் சொன்னாள். தன் அப்பாவின் காலை கட்டி கொண்டு அழுதவள் “பயமா இருந்துச்சுப்பா…. அது தான் சொல்லலை.” என்றாள்.

 சந்தியா முன்பே சொல்லி இருந்தா, இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது என்பது போல் லக்ஷ்மி சந்தியாவைக் குறை சொல்ல, அதைக் கேட்ட வேதவல்லி இவங்க பொண்ணுக்கு எங்க போச்சாம் அறிவு என்று பதிலுக்குச் சாட, வீடே போர்களம் போல் இருந்தது. 

வீட்டில் நடந்த பிரச்சனை தெரிந்ததும் பாண்டியனும், துரையும் வந்துவிட்டனர். ஆளாளுக்கு ஒன்று பேச, எல்லோரும் விஷயம் வெளியே தெரிவதற்குள் காவேரிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து விடுவோம் என்றனர். இப்படி ஆளாளுக்கு ஒன்று பேச, பெரியசாமி வாயே திறக்கவில்லை. 

எல்லோரும் அவரவர் வீட்டுக்குச் சென்றதும், கதிர் தன் அப்பாவின் எதிரே சென்று உட்கார்ந்தவன் “அவ விரும்பின பையனுக்கே கல்யணம் செஞ்சு வச்சிடுவோம்ப்பா. அந்தப் பையனுக்கே அவளைக் கல்யாணம் செஞ்சு தர்றதா, வாக்கு கொடுத்து தான் நான் கூட்டிட்டு வந்தேன். அவன் நம்ப ஆளுங்க இல்லைங்கிறத தவற… அவன் கிட்ட வேற எதுவும் குறை இல்லை. 

அவன் நல்லா படிச்சிருக்கான், நல்ல வேலையிலும் இருக்கான். அதோட அவனுக்குக் காவேரிய ரொம்பப் பிடிச்சிருக்கு. எங்கே அவளை இழந்துடுவோமோங்கிற பயத்தில தான் அவசரமா கல்யாண ஏற்பாடு செஞ்சிருக்கான். மத்தபடி அவனுக்குக் காவேரிய அவனோட கூட்டிட்டு போகணும்னு எண்ணம் இல்லை. அதோட நாம காவேரிய வேற இடத்தில கல்யாணம் பண்ணாலும், அவ முழு மனசோட வாழ மாட்டாப்பா…” என்று தெளிவாக விளக்க, பெரியசாமி அப்போதும் அமைதியாக இருந்தார். 

மறுநாள் திரும்ப எல்லோரும் அமர்ந்து பேச “காவேரிய வேற   இடத்தில செஞ்சா, நாளைக்கு அவங்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தா, பெரிய பிரச்சனை ஆகும். பொம்பள பிள்ளைய பத்தி தப்பான பேச்சு வந்தா…. அது நம்ம குடும்பக் கௌரவத்தையும் பாதிக்கும். 

கல்யாணம் வரை போய்ட்டாங்க, இனி எனக்கு வேற இடத்தில செய்ய மனசு இல்லை. அதனால அந்தப் பையனுக்கே செஞ்சு வச்சிடலாம்னு பார்க்கிறேன்.” பெரியசாமி சங்கடத்துடன் சொன்னபோது, அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மற்றவர்கள் இல்லை. 

இந்த கழுதை சொன்ன பேச்சு கேட்கலைன்னா கழுத்த திருகி கொல்லுங்க இல்லைன்னா. கல்யாணம் ஆகாம வீட்லயே கிடக்கட்டும். ஆனா வேற ஜாதிகாரனுக்கு கட்டி தர்ற வேலை வேண்டாம்…” பாண்டியன் துள்ள,

அட பாருங்கப்பா அடுத்தவன் பிள்ளைன்னா கொல்ல சொல்வீங்களோ. இந்த காலத்து பிள்ளைங்களை நம்பி வார்த்தைய விடாத பாண்டியா. நீயும் ரெண்டு பிள்ளைங்கள  வச்சிருக்க. நாளைக்கு உனக்கும் இதே நிலைமை வரலாம், ஞாபகம் இருக்கட்டும்…” பெரியசாமியின் மச்சினர் பேச (அவர் கதிரின் தாய் மாமா).

பாண்டியனும், துரையும் அவருக்கு எதிராக நின்றனர். துரையைப் பார்த்து கதிரின் மாமா “உங்க பொண்ணும் சேர்ந்து செஞ்ச வேலை தான….” என்ற போது துரை அவரை அடிக்கவே வந்துவிட்டார். 

இரண்டு பக்கமும் வாய்த்தகராறு தடித்து, ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சாடிக்கொண்டனர். இறுதியாக எல்லோரும் ஒருவழியாகப் பேச்சுவார்த்தையை முடித்தபோது, காவேரி, சுபாஷ் திருமணம் நடப்பது உறுதி செய்ப்பட்டது.

(கதிர், சந்தியாவின் திருமணம் அந்தரத்தில் நின்றது.) 

சுபாஷின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள், பண்பு நிறைந்தவர்கள். அவர்கள் தங்கள் மகன் செய்த செயலுக்குப் பெரியசாமியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். இரு குடும்பத்தாரும் சேர்ந்து பேசி அடுத்த வாரத்திலேயே, நெருக்கமான உறவினர்களை மட்டும் அழைத்து, திருமணம் செய்வது என்று முடிவு செய்து, அதன்படியே திருமணமும் நடந்துகொண்டிருந்தது. 

வேறு வேறு ஜாதி என்பதால் உறவினர்கள்இரு குடும்பத்திற்கும் இடையே எதாவது பிரச்சனை உண்டு பண்ண, அதற்கு சுபாஷின் பெற்றோர் இடம் தரவில்லை. அவர்கள் சொந்தக்காரர்கள் வந்து எதாவது குறை சொன்னால்அவங்க வழக்கபடியே செய்யட்டும் என்று விட்டுக்கொடுத்தனர்.   

சந்தியா அன்றைக்குப் பிறகு இன்று தான் கதிரை பார்க்கிறாள். அவன் அவளைக் கண்டுகொள்ளாமல் இருந்தான். கதிர் சுபாஷுடன் பேசினாலும், காவேரியுடன் பேசவில்லை. அதைப் பார்த்த சந்தியா என் மேலயும், காவேரி மதினி மேலயும் இருக்கக் கோபம் இன்னும் போகலை போல என்று நினைத்துக்கொண்டாள். 

எல்லோரும் சந்தியாவும் காவேரிக்கு உதவி செய்ததாக தான் நினைத்துக்கொண்டிருந்தனர். சந்தியா அதை மறுத்து எதுவும் சொல்லவில்லை. ஏற்கனவே காவேரியின் மீது கோபமாக இருக்கும் தன் பெற்றோர், இது வேறு தெரிந்தால், இன்னும் கோபப் படுவார்கள் என்று மறைத்துவிட்டாள்.

துரையும், பாண்டியனும் பெரியசாமியை விட்டுகொடுக்க முடியாமல் தான் திருமணத்திற்கு வந்திருந்தனர். திருமணம் முடிந்த உடனேயே துரை கிளம்ப, அவரோடு வேதவல்லியும் சந்தியாவும் கிளம்பினார்கள். சந்தியாவின் கண்கள் கதிரை தேடிப்பிடித்தது. அப்போது கதிரும் சந்தியாவைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களில் தெரிந்தது என்ன? இப்போது வரை சந்தியாவுக்குப் புரியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!