Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kannaa Varuvaayaa

Kannaa Varuvaayaa 9 2

பெரியசாமி உறுதி கொடுத்தவுடன் தான் துரை வேதவல்லியை  அங்கிருந்து அழைத்துக்கொண்டு சென்றார். வீட்டிற்குச் செல்லாமல் பெரியசாமியின் தோட்டத்துக்குத் தான் வந்திருந்தனர். அதனால் பெரியசாமி, கதிர் இருவருக்கு மட்டுமே அங்கு நடந்தது தெரியும்.

வேதவல்லி சொல்லி முடித்ததும் “இவ்வளவு நடந்திருக்கு ஏன் மா என்கிட்டே எதுவும் சொல்லலை….?” என்று சந்தியா கேட்க,

சொன்னா, நீ உங்க அப்பாக்கிட்ட சண்டைக்கு நிற்ப, அவர் உடனே உனக்கு வேற மாப்பிள்ளை பார்த்துக் கட்டிவைக்கப் பார்ப்பார். அதுக்குத் தான் சொல்லலை. இத்தனை நாள் நீ உங்க மாமா வீட்டுக்குப்   போறதையும் சொல்லாதன்னு சொன்னது இதுக்குத் தான். நீ இப்படி வந்து உளறி வைப்பேன்னு தெரியாது. என்றார்

இப்ப என்னம்மா பண்றது…? எனக்கும் கதிர் மாமாவுக்கும் கல்யாணம் நடக்காதா, என்னால வேற யாரையும் நினைச்சு கூடப் பார்க்க முடியாது மா….” என்றாள் சந்தியா பரிதாபமாக,



Advertisement

நீ முதல்ல நல்லபடியா படிச்சு முடி. அதுக்கு எப்படியும் மூன்று வருஷம் ஆகும். அதுக்குள்ள உங்க அப்பா மனசு மாறுதான்னு பார்ப்போம். இல்லைன்னா வேற வழி தான் யோசிக்கணும். உங்க அப்பாவை ஜாதி பேய் பிடிச்சு ஆட்டுது. வேப்பில்லை தான் அடிக்கணும்…” என்றார் வேதவல்லி நக்கலாக.

அப்பா சம்மதிக்காம கதிர் மாமா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்கம்மா….” என்றாள் நன்றாகக் கதிரை பற்றித் தெரிந்த சந்தியா.

அதுக்கு இன்னும் நாளு இருக்கு, இப்பவே ஏன் அதைப் பத்தி நினைச்சு மனசை வருந்திக்கிற? பார்த்துக்கலாம் கவலைப்படாம இரு…” என்ற வேதவல்லி எழுந்து செல்ல, சந்தியாவிற்கு அவள் அம்மா பேசியதில் சிறிது நம்பிக்கை ஏற்பட்டாலும் என்ன நடக்கப்போகிறதோ என்ற பயமும் மனதை வருத்தியது. 

Advertisement

சந்தியாவிற்கு உடனே சித்துவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவனிடம் நடந்தை சொல்லாவிட்டால் அவளுக்குத் தலை வெடித்துவிடும். அதனால் உடனே அவனைச் செல்லில் அழைத்து எல்லாவற்றையும் சொல்லி ஒரு மூச்சு அழுதாள்.

Advertisement

அவள் சொன்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட சித்தார்த் “எனக்கு இது முன்னாலயே தெரியும் சந்தியா. உங்க மாமா வீட்ல உன் மேல பெரிசா யாருக்கும் கோபம் இல்லை. ஆனா, அப்படி இருந்தும் கதிர் ஏன் உன்னிடம் இருந்து விலகி இருக்கார்னு யோசிச்ச போது, பிரச்சனை உங்க வீட்ல தான்னு எனக்குப் புரிஞ்சது. கதிரே அதை உன் கிட்ட சொல்லாத போது, நாம் எப்படிச் சொல்றதுன்னு தான் சொல்லைலை…..” என்றான் சித்தார்த் விளக்கமாக, 

பாவம் கதிர் மாமா. ஏற்கனவே காவேரி மதினி கல்யாணம், பெரிய மாமாவுக்கு உடம்பு முடியாம போனது. பிறகு எங்க அப்பா பேசினதுன்னு மனசுக்குள்ள நிறைய வேதனையோடு இருந்தவங்களை, நான் வேற ரொம்ப நோகடிசிட்டேன். இப்ப என்னடா பண்றது?” 

உங்க அப்பாவா உன்னைக் கதிருக்கு தரேன்னு சொல்லாம, கதிர் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டார். என்ன செய்றதுன்னு யோசிப்போம்.” என்ற சித்தார்த் செல்லை வைக்க, சந்தியாவும் யோசனையோடு செல்லை வைத்தாள். 

Advertisement

சந்தியா மனதிற்குள் கோபம் கொந்தளித்தாலும் அதைத் துரையிடம் காமிக்காமல் அமைதியாக இருந்தாள். இரண்டு நாட்கள் சென்று சந்தியா வந்ததைக் கேள்விப்பட்டுச் சித்ரா அவளைப் பார்க்க வந்தாள்.

ஏன் புள்ள, டாக்டருக்கு படிக்கிற திமிரா, நீ வந்ததைக் கூட ஒரு போன் பண்ணி சொல்லலை…”

இல்ல சித்ரா ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் சொல்லலை. ஆனா, இங்க வந்த பிறகு எனக்கு யார்கிட்டயும் பேச முடியும்னு தோணல….” என்றாள் சந்தியா புதிராக.

என்னடி சொல்ற புரியும்படி சொல்லு…” 

இங்க வேண்டாம் சித்ரா.  வெளிய போய் பேசுவோம்…” என்ற சந்தியா, தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு சித்ராவையும்  அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றாள். 

அவர்கள் ஊர் கோவில் மிகவும் பெரியது. சந்தியாவும், சித்ராவும் சாமி தரிசனம் செய்துவிட்டு ஓரமாகச் சென்று அமர்ந்தனர். அப்போது நந்தினி உள்ளே நுழைந்தாள். அவளைப் பார்த்ததும் சந்தியா, சித்ரா இருவரின் கண்களும் மகிழ்ச்சியில் பெரியதாக விரிந்தது. நந்தினி முன்பே அழகு தான். இப்போது இன்னும் தங்க சிலை  போல் அழகாக இருந்தாள். 

கோயம்புத்தூரில் அவள் சித்தப்பா வீட்டில்,  தங்கி இன்ஜினியரிங் படிக்கிறாள். படிப்போ இல்லை இருக்கும் ஊரோ எதோ நந்தினியை இன்னும் அழகாக மாற்றியிருந்தது. நீளமான தலைமுடியை தோள்வரை குட்டையாக வெட்டி இருந்தாள். அவள் போட்டிருந்த உடைக்குப் பொருத்தமாக ஆபரணங்கள் அணிந்து, விரல் நகங்களில் அழகாகப் பாலிஷ் போட்டு பார்க்க கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தாள். 

நந்தினி கோவிலுக்குள் சென்றுவிட, சித்ரா திரும்பி சந்தியாவைப் பார்த்தவள் “நீயும் அவளை மாதிரி சிட்டியில தான இருக்க. அந்தப் புள்ள எப்படி இருக்கு? நீ எப்படி இருக்க?” என்றாள் சந்தியாவின் தோற்றத்தை ஆராய்ந்து கொண்டே, 

சந்தியா பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது எப்படி இருந்தாலோ, இன்னும் அப்படித்தான் இருந்தாள். “நீயெல்லாம் டாக்டருக்கு படிக்கிறேன்னு வெளிய சொல்லிடாத….” என்று சித்ரா அவளைக் கேலி செய்துகொண்டிருந்த போது, சாமி கும்பிட்டுவிட்டு நந்தினி வெளியே வந்தவள், இவர்களைப் பார்த்ததும் இவர்கள் அருகில் வந்தாள். 

ரொம்ப நாள் கழித்துத் தோழிகள் மூவரும் சந்தித்ததால், அந்த இடமே அழகாய் மாறியது. நந்தினியும் சந்தியா மீது இருந்த வருத்தம் மறைந்து இயல்பாகப் பேசினாள். சித்ரா விருதுநகரில் ஒரு கல்லூரியில் இளங்கலை படிக்கிறாள். ஆளுக்கொரு இடம், வெவ்வேறு படிப்பு என்பதால் மூவருக்கும் பேச நிறைய விஷயம் இருந்தது. 

மூவரின் கல்லூரி கதை பேசி முடித்ததும் சித்ரா “சரி இப்ப சொல்லு என்ன பிரச்சனை?” என்றாள் சந்தியாவைப் பார்த்து, 

சந்தியா நந்தினி அங்கே இருக்கிறாள் என்று எல்லாம் யோசிக்கவில்லை. அவளுக்கு நந்தினியும் நல்ல தோழி தான். அதோடு நந்தினிக்கு கதிர் மீது இருக்கும் விருப்பமும் அவளுக்குத் தெரியாது. சந்தியா அவர்கள் வீட்டில் நடந்த பிரச்சனை. இப்போது அதனால் அவளுக்கும், கதிருக்கும் திருமணம் நடக்குமா என்றகேள்வியில் நிற்பது வரை அனைத்தையும் சொல்ல, சித்ரா அவளுக்காக வருத்தப்பட, நந்தினி கவனமாகக் கேட்டுக்கொண்டாள்.

நந்தினியின் மனதில் அடி ஆழத்தில் இருந்த கதிரின் நினைவுகள் மேலே எழுந்தது. நந்தினி கதிரின் வாழ்கையில் நுழைய, சந்தியாவே சந்தர்ப்பம் அமைத்து கொடுத்தாள். 

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய சந்தியா படிப்பில் கவனம் செலுத்தினாள்.

ஓரளவுக்கு அவருடைய வேலையை அவரே பார்க்க ஆரம்பித்ததும் பெரியசாமி தன் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். 

அப்பா நீங்க ஊருக்கு போனா, நம்ம சொந்தக்காரங்க, ஊர்க்காரங்க பிறகு அக்கம் பக்கம் இருக்கவங்க வந்து எதாவது காவேரி கல்யாணத்தைப் பத்தி பேசத்தான் செய்வாங்க. நீங்க அதை பெரிசா எடுத்து மனசை போட்டு குழப்பி, உங்க உடம்பையும் கெடுத்துக்கிறதா இருந்தா தயவு செஞ்சு போகாதீங்க…” என்றான் கதிர். 

அவனையே சிறிது நேரம் பார்த்த பெரியசாமி “இல்லப்பா நான் என்னோட தவறை உணர்ந்துட்டேன். நான் ஒழுங்கா மாத்திரை சாப்பிடாம இருந்ததுனால, எனக்கு மட்டுமா கஷ்டம் ஆச்சு? நீயும், உங்க அம்மாவும் சேர்ந்து தான் கஷ்டப்பட்டீங்க. உங்களுக்காகவாவது நான் என்னை நல்லா பார்த்துப்பேன்…” என்றார் பெரியசாமி உறுதியாக.

உங்களைப் பார்த்துக்கிறதை விட எங்களுக்கு வேற என்னப்பா முக்கியம். நான் அதுக்குச் சொல்லலை, நீங்க மத்தவங்க பேசுறதை கேட்டு மனசு ஒடிஞ்சு போய்டகூடாது. அதுக்கு தான் சொல்றேன்.” 

நீ எனக்காகத் தான் சொல்றேன்னு தெரியும் கதிரு. யாருப்பா இந்தக் காலத்தில பெத்தவங்களை இப்படிப் பார்த்துக்கிறாங்க. சாஞ்ச மரமா இருந்த என்னை, நிமிர்ந்து நிற்க வச்சிட்டியேப்பா, நீ நல்லாயிருப்ப கதிரு. இன்னும் என்னைப் பத்தியே நினைச்சு கவலைப்படாம, நீ உன் வேலையில முன்னேறும் வழியைப் பாரு.”

இந்த வாரமே நானும், அம்மாவும் ஊருக்கு போறோம். அங்க இருந்து வர்ற வருமானம் எங்களுக்குப் போதும். இனி நீ சம்பாதிக்கிறதை சேர்த்து வை. உனக்குக் கல்யாணம் ஆனா தேவைப்படும்…” என்றதும் கதிரின் முகம் சந்தியாவின் நினைவில் வாடியது. 

அதை உணர்ந்த பெரியசாமி “பார்ப்போம் கதிரு….” என்று தன் மகனின் தோளில் ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தார். 

கதிர் மறுவாரமே தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு ஊருக்குச் சென்றான். ஒரு வாரம் அவர்களுடனே இருந்து, அவர்களுக்குத் தேவையானது எல்லாம் ஏற்பாடு செய்தான். வேதவல்லியும், துரையும் வந்து பெரியசாமியை பார்த்துவிட்டு சென்றனர். 

கதிர் ஒரு நாள் கூடத் தன் அத்தையின் வீட்டுக்கு செல்லவில்லை. கதிர் தங்கள் வீட்டுக்கு வராத கோபத்தை வேதவல்லி தன் கணவரிடம் காண்பித்தார்.

இப்ப எதுக்கு முனங்கிக்கிட்டே திரியற, உன் அண்ணன் மகன் உன்னைப் பார்க்க வரலையாக்கும். ரொம்ப ரோஷம் இருக்கிறவனா காட்டிக்கிறானா அவன்.  அப்படின்னா நான் சொன்னதையும் மீறி சந்தியாக்கிட்ட மட்டும் எதுக்குப் பேசினான்…” என்றார் துரை கோபமாக,

அவர் முன்பு தண்ணீர் சொம்பை நங்கென்று வைத்த வேதவல்லி “அவன் ஒன்னும் உங்க மகக்கிட்ட பேசலை, சந்தியா தான் நீங்க கதிர் பேசலைன்னு சொன்னா திட்ட போறீங்கன்னு, பேசுனதா சொல்லியிருக்கா. என் மருமகன் ஒன்னும் ரோஷம் கெட்டவன் இல்லை….” என்றார் வேதவல்லி குத்தலாக.

 துரை அவரின் பேச்சுக் காதில் விழாததுபோல் சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றார். கதிர் மதியம் உணவு சாப்பிட்டதும், அவன் நண்பன் சோலையின் கடையில் சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்பான். அன்றும் அது போல் பேசிக்கொண்டிருந்தனர். 

ஏன் டா சோலை உங்க அம்மா பார்க்கிற பெண்ணை எல்லாம் வேண்டாம்னு சொல்ற…?” 

ம்ம், அவங்க யாரையும் என் மனசுக்கு பிடிக்கலை…” என்ற சோலையைக் கூர்மையாகப் பார்த்த கதிர் “அப்ப வேற யாரை உன் மனசுக்கு பிடிச்சிருக்கு.” என்றதும், 

சிறிது நேரம் மௌனம் காத்த சோலை “வேண்டாம் விடு அது நடக்காது.” என்றான் மொட்டையாக,

ஏன் நடக்காது…? நீ உன் மனசுல இருக்கிறது யாருன்னு முதல்ல சொல்லு, நான் நடக்குமா, நடக்காதான்னு சொல்றேன்.” என்றான் கதிர் பிடிவாதமாக.

சித்ராவை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா, அது எப்படி டா என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கும். அது காலேஜ் எல்லாம் படிக்குது. நான் ஸ்கூல் வரை தான் படிச்சிருக்கேன்.” என்றான் சோலை உள்ளே சென்ற குரலில்.

அவன் சொன்னதைக் கேட்டு யோசித்த கதிர் “உன் கிட்ட படிப்பு இல்லைங்கிறத தவிர வேற என்னடா குறை…? சொந்த தொழில் செய்யிற, சொந்தமா வீடு வச்சிருக்க, இதையெல்லாம் விட எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத பையன். இதுக்கு மேல என்னடா வேணும்?” என்று தன் நண்பனின் சிறப்புகளைப் பட்டியலிட, அதைக் கேட்ட சோலையின் முகம் பளிரென்று ஒளிர்ந்தது. 

அப்படின்னா சித்ரா என்னைக் கல்யாணம் பண்ண ஒத்துக்குமா…..” என்ற சோலையின் குரலில் ஆசை பாதியும், நிராசை மீதியும் எட்டி பார்த்தது. 

அதைச் சித்ரா தான் சொல்லணும். பேசிப் பார்ப்போம்…” என்ற கதிர் சோலையிடம் விடைபெற்றுச் சென்றான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!