Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மழை 4

கௌசியின் அறைக்கு பணியாள் மூலம் மாலை நிகழ்வுக்கு அவள் போடவேண்டிய உடை, நகைகள் எல்லாம் கொடுத்தனுப்பட்டிருந்தது.

அதில் இருந்த வெண்கற்கள் பதித்த, மயில் கழுத்து நிற சுடிதாரை தான் கையில் வைத்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.

பார்க்கவே கண்ணை பறித்தது. அதை அவள் அணிந்தால் வேறு நகைகளே வேண்டாம்! அத்தனை ஜொளிஜொளிப்பாய் மின்னும்.

இதை அணிவதா? வேண்டாமா? என்ற குழப்பமே அவளுக்கு!



Advertisement

இதுவே ஆடம்பரம் என்றால், அன்னை கொடுத்துள்ள நகைகள்!? அம்மம்மா! நகைக்கடை பொம்மை போலல்லவா இருப்பேன்?

இதை தவிர்த்து வேறு எதை உடுத்தினாலும் பெற்றவளிடம் பேச்சு வாங்க முடியாது! நேரமும் கடந்துக்கொண்டிருக்க, முடிவாய் அந்த சுடிதாரையே உடுத்தினாள்.

நகைகள் மட்டும் அத்தனையும் போட முடியாது என்பதில் உறுதியாய் இருந்தவள், கழுத்தோடு ஒட்டி இருக்கும் மெல்லிய சங்கலி ஒன்றையும், மயில் தொகை விரித்ததை போன்ற வடிவில் இருக்கும் வளையல்கள் இரண்டையும் மட்டும் அணிந்துக்கொண்டாள்.

Advertisement

அவள் சின்ன காதை அடைப்பது போன்ற மயில் உருவ தோடும் இருக்க, அதை போட்டுக்கொண்டு கண்ணாடி முன்னால் நின்றவளுக்கு, ‘இதெல்லாம் தேவையா நமக்கு?’ என்ற ஆயாசம் தான் தோன்றியது.

Advertisement

எப்படியும் மீதம் இருக்கும் நகைகளை போடாமல் வைத்துவிட்டதற்கு அன்னையிடம் கச்சேரி உறுதி என்றானபின், அதன் காலளவை குறைக்கும் பொருட்டாவது இதெல்லாம் இருக்கட்டும் என தன்னை சமாதானம் செய்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

வந்தவள் அப்படியே விழிவிரித்து நின்றுவிட்டாள்.

வீட்டின் மாடி வளைவுகள், தூண்கள், கைபிடிகள் அத்தனையும் பலவண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது

Advertisement

‘என்ன பங்ஷனா இருக்கும்? ஒருவேளை இன்னைக்கே நிச்சயம் வச்சுட்டாங்களோ?’

கீழே கூடத்தில் வேறு சத்தமாய் இருந்தது.

‘போறதா? வேண்டாமா?’

“அம்மா, உங்களை முதலாளியம்மா கீழ கூப்பிட்டாங்க!” என்று வந்து நின்றாள் ஒருத்தி.

‘அழைப்பு வந்துடுச்சு! போய்தான் ஆகணும்’ என்று எண்ணியவள், “வரேன்” என்றாள் அவளிடம்.

மாடி விட்டு கீழே போகும்போது அவர்கள் வீட்டின் அகண்ட கூடமே இடம் போதாத அளவுக்கு நிரம்பி வழிந்திருக்க, கூட்டத்தை பார்த்து மிரண்டு நின்றாள் கௌசி.

“அதோ என் பெரிய பொண்ணு வந்துட்டா!” என்ற புவனா, இவளை நோக்கி கைநீட்டி, “வாடி தங்கம்… வா வா!” என அழைக்க, மௌனமாய் நடந்து சென்றாள் அவரிடம்.

வந்தவளை தன் கைப்பிடியில் பிடித்து வைத்து, “பாக்கணும் பாக்கணும்ன்னு கேட்டுட்டே இருந்தீங்களே? இவதான் என் மூத்த மவ கௌசல்யா! இஞ்சினியர் படிப்பை முடிச்சுட்டு இன்னைக்கு தான் வந்து சேர்ந்தா!” என்றார் பெருமை குரலில்.

அங்கிருந்த அத்தனை பேரின் பார்வையின் இவள் மீது விழ, சங்கோஜமாய் இருந்தது அவளுக்கு. குனிந்த தலையை நிமிர்த்தவில்லை.

எதிரே இருந்தவரில் ஒரு பெண்மணி, “இங்க வாமா” என்று அழைப்பது தெரிந்தது. பக்கவாட்டில் தன் அன்னையை பார்த்தாள்.

அவர் ‘போ’ என்று சொல்ல, தயக்கமாய் எழுந்து அவரிடம் சென்றவளை இழுத்து தன் அருகே அமர்த்திக்கொண்டார் அவர்.

குனிந்திருந்த அவள் முகத்தை நிதானமாய் பார்த்தார் அந்த பெண்மணி.

“லட்சணமா இருக்கா!!!”

அவர் அப்படி சொன்னதும் லேசாக சிரித்து வைத்தாள்.

“இவ்வளவு நாளா ஏன் எங்க கண்ணுலேயே காட்டலை நீங்க?” என்றவரின் குரலில் என்ன இருந்தது என்று புவனாவுக்கே விளங்கவில்லை.

“பெங்களூருல இருக்க என் ஒன்னு விட்ட நாத்தனார் கல்யாணமே செஞ்சுக்காம ஒண்டிக்கட்டையா தான் இருக்காப்படி! இவளோட பன்னெண்டாவது பரிட்ச லீவப்போ இங்க வந்தவரு இவளை கூட்டிட்டு போய் படிக்க வச்சு பாத்துக்குறதா சொல்லவும், தங்கச்சி தனியாளா நிக்குதேன்னு எங்க வீட்டுக்காரர் மனசு கேட்காம புள்ளையை கூடவே அனுப்பி வச்சாரு! இதுவும் அத்தைக்கிட்ட உசுரா ஒட்டிகிச்சு! சரி எப்படியும் படிப்பு முடிஞ்சு வரதானே போறான்னு நாங்களும் விட்டுட்டோம்!” என்றார் கோர்வையாய்.

புவனா சொன்னது எல்லாம் உண்மைதான்! ஆனால், அவள் இந்த வீட்டை விட்டு அத்தையுடன் சென்ற காரணம் அதுவல்லவே! அதை நினைக்கும்போதே கொடும்கசப்பு வந்து தொண்டைக்குழியில் சிக்கி நிற்பதை போல இருந்தது அவளுக்கு.

குனிந்திருந்தவளிடம், “உனக்கு அத்தைன்னா ரொம்ப பிடிக்குமா?” என்றார் அவர்.

அது உண்மை தான் என்பதால் உடனே ‘ஆம்’ என தலையசைத்தாள் அவள்.

“நான் கூட உனக்கு அத்தை தான்!!!” என்று அவர் சொல்ல, கௌசி விளங்காத பாவனையில் சமாளிப்பாய் தலையாட்டினாள்.

பூரித்த முகத்துடன் மகளையும் அவள் மீதிருந்த அப்பெண்மணியின் கரத்தையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தார் புவனா.

அவரோ, “நீங்க பொண்ணு கேட்டு வந்தபோவே நாங்க இவளை பார்த்துருந்தா எங்க முடிவு வேறயா இருந்துருக்கும்!” என்று பூடகமாய் சொல்லி,

“என்னை நிமிர்ந்து தான் பாரேன்” என கௌசியின் முகத்தை தூக்கி அவரை பார்க்க செய்தார்.

“நான் பவானி! என் பொண்ணை உன் அண்ணன் தான் கட்டிக்கப்போறாரு!” என்றிட,

‘ஓ! இவங்க தான் அண்ணனோட மாமியாரா?’ என்று அப்போது தான் தெளிந்தாள் கௌசி.

“பொண்ணு ரொம்ப பேச மாட்டாளோ?” பவானி கேட்க, “ஆர்த்தி அளவுக்கு பேச மாட்டா! தேவையை தாண்டி பதில் வராது” என்றார் புவனா.

‘தான் அப்படி தானா? அதுவா நான்?’ கசப்பாய் எண்ணியது கௌசியின் உள்மனம்.

“வெடுக்குன்னு பேசுறவங்களை கூட நம்பிடலாம்! ஊமைக்கொட்டான் மாதிரி இருக்கவங்களை தான் நம்பவே முடியாது!” என்றாள் ஆர்த்தி உர்ரென.

ஆர்த்தியின் குரல் கேட்டதும் தான் தங்கை பவானியின் மறுப்பக்கம் அமர்ந்திருப்பதே தெரிந்தது கௌசிக்கு.

பட்டு புடவை கட்டியிருந்தாள். தலைநிறைய ஜாதிமல்லியும், ஏகப்பட்ட நகைகளும் என அலங்கார பொம்மை போல அவள் அமர்ந்திருக்க, ‘எதுக்காக இவ இவ்ளோ அலங்காரத்தோட இருக்கா?’ என்று எண்ணினாள் கௌசி.

பவானி ஆர்த்தியின் சுள்ளென்ற பேச்சை பொருட்படுத்தாது, “அதுவும் உண்மைதான் ஆர்த்திமா! படபடன்னு பேசுறவங்க மனசுல என்ன இருக்குன்னு கூட சொல்லிடலாம்! ஆனா, அமைதியான ஆளுங்க மனசு ஆழ்கடல் மாதிரி… அவங்க நினைப்பு என்னன்னு தெரிஞ்சுக்கவே முடியாது!” என்றார் அவளிடம்.

ஆர்த்தியின் பேச்சு நடவடிக்கை எல்லாம் வித்தியாசமாய் தெரிய, தங்கையை உற்றுநோக்கியவளின் பார்வை வட்டத்தில் சற்று தள்ளி ஒற்றை சோபாவை நிரக்க அடைத்துக்கொண்டு இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த ஒருவன் பட, நொடியில் தீப்பிடித்தார் போல உடல் தகித்தது.

குப்பென வியர்க்க, தடதடக்கும் மனதுடன் அவஸ்தையாய் நெளிய ஆரம்பித்தாள் கௌசி.

பவானியின் கரங்களில் அவளது நடுக்கம் தெரிய, “என்னமா?” என்று பரிவுடன் கேட்டவரிடம், திக்கித்தெணறி, “சில நிமிடங்களில் வந்துவிடுவதாக” சொல்லிவிட்டு அன்னையின் முறைப்பை ஏறெடுத்தும் பாராது விடுவிடுவென தோட்டத்தை நோக்கி சென்றுவிட்டாள் கௌசி.

அங்கே கடைசியில் விஸ்த்தாரமாய் செழித்து நிமிர்ந்திருந்த வேப்ப மரத்தின் கீழான கல்பெஞ்சில் அமர்ந்து மூச்சை இழுத்து விட்டவளுக்கு அப்போது தான் நடுக்கம் குறைந்து ஆசுவாசமாய் இருந்தது.

எம்.எல்.ஏ வந்ததும் அவ்வீடு இன்னும் சுறுசுறுப்பாய் மாறியது. அன்பழகனும் வந்துவிட்டிருக்க அனைவருக்கும் மாலை நேர சிற்றுண்டியாக புவனாவின் மேற்ப்பார்வையில் பல உருப்படிகள் தயாராகியிருந்தன.

ஒருவருக்கும் மனம் கோணக்கூடாது என பார்த்து பார்த்து கவனித்தனர்.

மதனும் அவன் வருங்கால துணைவி திவ்யாவும் இந்த உலகத்திலேயே இல்லை. எவரையும் கண்டுக்கொள்ளும் நிலையிலும் இல்லை. அவர்களுக்குள் ரகசியம் பேசிக்கொள்ளவே நேரம் இல்லாத போது, மதனின் கண்களில் நான்கு வருடங்கள் சென்று வீட்டிற்கு வந்திருக்கும் தங்கையா தெரிந்திருப்பாள்!? ம்ஹும்…

மாலை நேர காற்றை சுவாசித்தபடி மரத்தடியில் அமர்ந்திருந்த கௌசிக்கு எப்போதடா இதெல்லாம் முடியும்? இந்த ஆடம்பர வேடத்தை களைந்துவிட்டு கட்டிலில் சென்று விழுவோம் என்று இருந்தது!!!

காலையில் இருந்து மனோகர் அவள் கண்களில் படாது வேறு உறுத்திக்கொண்டிருந்தது.

‘எங்கதான் போயிருப்பாரோ?’

அவள் சிந்தனையில் இருந்த நேரம், “ஹலோ கௌசி” என்ற ஆடவனின் குரல் வெகு அருகே கேட்க, பயத்தில் தூக்கி வாரி போட எழுந்து நின்றாள் கௌசி.

அங்கே கூடத்தில் இவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தவன் தான் நின்றிருந்தான்.

கிடுகிடுவென அவள் உடல் உதற ஆரம்பித்தது.

பயம் முகத்தில் பளிச்சென தெரிய, துப்பட்டாவை இறுக பிடித்துக்கொண்டு நின்றவளை கண்டவன், “ஹே! ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்!” என்றான் அவன் முன் கரம் நீட்டி.

வேகமாய் பின்னே இரண்டடி நகர்ந்தாள்.

“ஹே! எதுக்கு பயப்படுற? நான் என்ன அவ்ளோ பயங்கரமாவா இருக்கேன்?” அவன் இலகுவாய் கேட்டாலும், கௌசி அங்கிருந்து சென்றுவிடவே எண்ணினாள்.

சுற்றும் முற்றும் பார்க்க யாரும் இல்லை. அங்கிருந்து நகர்ந்து செல்ல அவனைத்தாண்டி தான் போக வேண்டிய நிலை. கையை பிசைந்துக்கொண்டு அவள் நிற்க,

“படிச்சதெல்லாம் பெங்களூர்’ன்னு சொல்லவும் நான்கூட நீ ‘பெங்களூர் மேக்’கா இருப்பன்னு நினைச்சேன்! ஆனா, இன்னும் நீ ‘புதுகோட்டை’யா தான் இருக்க போலயே!” என்றான் அவன்.

அவள் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தாள்.

“ஆனா, உன் தங்கச்சி இருக்கிறது புதுகோட்டையா இருந்தாலும், பேசுறது பழகுறது எல்லாம் அமெரிக்கன் ஸ்டைல் தான்” என்றான் நக்கலாய் சிரித்து.

கௌசிக்கு அவன் சொல்ல வருவது விளங்க, ஆர்த்தியின் மீது எரிச்சலாய் வந்தது.

“நீ ரொம்ப அழகா இருக்க தெரியுமா? எப்படியும் உன் காலேஜ்ல பல பேரு ஜொள்ளு விட்டுருப்பானுங்களே?” என்றவன், “எனி அப்ஃபெர்ஸ்?” என கிசுகிசுப்பாய் கேட்க,

“நான் போகணும்! வழியை விடு” என சொல்ல நினைத்த வார்த்தைகள் கூட அவள் தொண்டையை விட்டு வெளிவர மறுத்தது.

“யாருடா இவன், ரொம்ப உரிமையா வந்து பேசுறாரேன்னு பாக்குறியா? நான் உனக்கு மச்சான்!!!” என்றான் அவள் திடுக்கிட்ட பார்வையை ரசித்தபடி.

“என்ன பாக்குற? உன் அண்ணனுக்கு மச்சான்னா உனக்கும் நான் மச்சான் தானே?” என்று கேட்டு கண்ணடிக்க, மொத்தமாய் பதறிப்போனாள் அவள். முகமெல்லாம் வெளிறி சிவந்துப்போனது.

அதை வெட்கம் என்று நினைத்தானோ?

“உன்னை முன்னாடியே பார்க்காம போயிட்டேன்! பார்த்துருந்தா….” மேற்கொண்டு அவன் பேச்சு போகும் முன்னே,

“யாரது?” என சீறலாய் வந்தது மனோகரின் குரல்.

அதுவரை இருந்த படபடப்பும், நடுக்கமும் சட்டென குறைய, நிம்மதியாய் வாய்வழி காற்றை ஊதித்தள்ளினாள் கௌசி.

அதட்டல் போல வந்த அவன் குரல் கேட்டு திரும்பியவன், “நான் அசோக்! எம்.எல்.ஏ பையன்!” என்றான் திமிராக.

‘இருந்துட்டு போ’ என்ற அலட்சிய பாவம் அவனிடம்.

“எல்லாரும் கிளம்பிட்டு இருக்காங்க! உங்களை தான் தேடுறாங்க” என்றான் மனோகர். குரலில் கடுமை குறையவில்லை.

தான் யார் என சொன்னதும் பணிவுடன் பேசுவான் என நினைத்திருந்தவனுக்கு பெருத்த ஏமாற்றமே!

ஆயினும் அதை மறைத்து, “ஓகே, ஐ லீவ்! கீப் இன் டச்” என்றவன் போகும் வரை அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றான்.

அவன் சென்றதும், “ஹப்பா!” என நிம்மதியாய் நெஞ்சை பிடித்தவளை கூர்மையாய் நோக்கினான் மனோகர்.

“எதுக்கு அவனை பார்த்து பயப்படுற? எதாவது தப்பா பேசுனானா?” என்றான்.

“இல்லையே!” என்றாள் அவசரமாய்.

“அப்பறம் ஏன் அவனை பார்த்து நடுங்குற?”

எப்படி சொல்வதென யோசித்தவள், பின் ‘இவனிடம் சொல்லாமல் யாரிடம் சொல்வது?’ என்ற எண்ணம் வர,

“எனக்கு கொஞ்ச நாளா இப்டிதான்! யாராது ஆம்பளைங்க என்னை பார்த்தாலோ, இல்ல பேசுனாலோ இப்படி தான்! இப்டிதான்.. உடம்பு எல்லாம் கிடுகிடுன்னு… என்ன என்னவோ பண்ணுது!” என்றாள்.

“எவ்ளோ நாளா?”

ஒரு நொடி மௌனித்தவள், “நாலு வருஷமா?” என்றாள்.

சில நிமிடங்கள் அசாத்திய அமைதி அங்கே…

“எதனால இப்படி?”

‘உனக்கு புரியலையா?’ என்றதொரு பார்வை பார்த்தவள், “தெரியல” என்றாள் அவனிடம்.

“ஆம்பளைங்களை பார்த்தாலே இப்படி தான் ஆகுதா?” என்றான்.

“ஹ்ம்!”

“இப்பவும் அப்படி தான் பண்ணுதா?” என்றான்.

“இல்லையே! இப்போ நல்லா தான் இருக்கேன்! அதான் அவங்க போயிட்டாங்களே!” என்றவள் சொல்ல, அவளை ஆராய்ச்சியாய் பார்த்தவன்,

“அப்போ நான் ஆம்பளை இல்லையா?” என்றான் அவளிடம்.

அவளிடம் இருந்து மௌனத்தை எதிர்ப்பார்த்தவனுக்கு,

“நீங்க ஆம்பளை தான்! ஆனா, எல்லா ஆம்பளையும் நீங்களா ஆகிட முடியாதுல!” பளிச்சென்று வந்த அவளது பதில் அவன் செவிகளையே நம்ப முடியாத அளவுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!