Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 5 3

“நீ கேட்டதே போதும் மா. வேலை பாக்குறியா?”

“ஆமா தாத்தா, அதோ அந்த பேங்க்ல தான்”



Advertisement

“ரொம்ப நல்லது மா, சரி போய்ட்டு வா”, என்று அவர் சொன்னதும் மீண்டும் அவருக்கு நன்றி சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

Advertisement

சரியாக அவள் பேங்க் அருகே வரும் போது அங்கு நின்றிருந்த ரவி “மதினி, சாப்பாடு வாங்கப் போனீங்களா?”, என்று கேட்டான்.

Advertisement

“ஒரு வேளை எனக்கு சாப்பாடு கொண்டு வந்திருப்பானோ? விஜி கொடுத்து விட்டுருப்பாளோ?”, என்று எண்ணியவள் “நீங்க என்ன இங்க வந்துருக்கீங்க?”, என்று கேட்டாள்.

Advertisement

“என் தங்கச்சி ஊர்ல இருந்து வந்திருக்கா மதினி. அவ வண்டியை எடுத்து உங்க கிட்ட கொடுத்துட்டேன்னு ஒரே பிரச்சனை. அதான் வண்டியை எடுக்கலாம்னு வந்தேன். சாவி தந்தீங்கன்னா நல்லா இருக்கும்”, என்று அவன் சொல்ல அவளுக்கு என்னவோ போல இருந்தது. ஏதோ அவமானமாக உணர்ந்தாள். இதற்கு இவன் அதை தராமலே இருந்திருக்கலாம் என்று தான் அவளுக்குத் தோன்றியது.

“இருங்க எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு அவள் திரும்பி நடக்கப் போகும் போது “இது என்ன கடைச் சாப்பாடா மதினி? இதை எனக்கு கொடுக்குறீங்களா? ரிஷிக்கு தான் கேக்குறேன்”, என்றான் ரவி.

அவன் அப்படிக் கேட்கும் போது “இல்லை இல்லை, எனக்கு தான் வேணும். நீங்க வேற வாங்கிக்கோங்க”, என்று சொல்ல மனதில்லை.

“இந்தாங்க”, என்று அவனிடம் கொடுத்தவள் சாவியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.

அதை வாங்கிக் கொண்ட ரவி “சாயங்காலம் வரும் போது பஸ்ல வந்துருங்க”, என்று சொல்லி விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான். போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் பேங்க் உள்ளே சென்று தன்னுடைய சீட்டில் அமர்ந்து விட்டாள்.

வயிறு பசியால் ஓலமிட்டது. ஆனால் மீண்டும் சென்று அந்த கூட்டத்தில் வாங்க அவளது மனதில் தெம்பில்லை. அதற்கு வயிறு பசியே மேல் என்று தோன்றி மீதம் வைத்திருந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். மற்றவர்கள் கேட்டதற்கு சாப்பிட்டேன் என்று பொய்ச் சொல்லி சமாளித்தாள்.

அன்று மாலை ஆனதும் அவள் பேங்க் விட்டு வெளியே வந்து பஸ் ஸ்டாண்டுக்கு நடந்தாள். கொஞ்ச தூரம் நடக்க வேண்டும் என்று எண்ணி அவளுக்கு சோர்வாக இருந்தது. சாப்பிடாத உடல் அவளை பாடாய்ப் படுத்தியது. டீக் குடிக்கலாம் என்று எண்ணி அங்கிருந்த கடையைப் பார்த்தாள். அங்கே ஆண்களின் கூட்டம் அதிகம் இருக்க அந்த எண்ணத்தைக் கை விட்டுவிட்டு நடந்தாள். அப்போதும் ஒரு மரத்தடியில் நின்றிருந்தார்கள் கதிரும் இன்பாவும்.

அவளது வண்டி வரும் என்று தான் காத்திருந்தார்கள். ஆனால் அவளே நடந்து வரவும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

இப்போது வினோதினிக்கு தெளிவாக தெரிந்தது, அவர்கள் தன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. ஏனோ இருக்கும் எரிச்சலில் இதுவும் சேர்ந்து கடுப்பாகிப் போனாள்.

வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவள் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்க “மச்சான் பேசு டா. இதை விட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காது”, என்றான் கதிர்.

“சரி மாப்பிள்ளை”, என்றவன் வினோதினி அருகில் வரவும் “என்னங்க ஒரு நிமிஷம்”, என்றான்.

அவள் கடுப்புடன் நிற்க “உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்”, என்றான்.

“என்ன பேசணும்?”, என்று சற்று எரிச்சலுடன் தான் கேட்டாள்.

“சொல்றேன். முதல்ல உங்க வண்டி எங்கன்னு சொல்லுங்க? எதுக்கு நடந்து போறீங்க?”, என்று அக்கறையாக தான் கேட்டான் இன்பா. ஒரு வேளை பஞ்சர் ஆகி இருந்தால் சரி செய்து கொடுக்கலாமே என்ற எண்ணம் தான்.

ஆனால் அதை புரிந்து கொள்ளும் நிலையில் அவள் இல்லையே. “ஹலோ யாருங்க நீங்க? நீங்க எதுக்கு என் கிட்ட இதைக் கேக்குறீங்க? உங்களுக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும்? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல? உங்க உயிரைக் காப்பாத்தினதுக்கு என்னை இப்படி டார்ச்சல் பண்ணுவீங்களா? காலைல என்னன்னா ஊர் எல்லைல வந்து நிக்குறீங்க? பின்னாடியே பேங்க் வரைக்கும் வரீங்க? இப்ப என்னடான்னா என் கிட்ட சம்பந்தம் இல்லாம கேட்டுட்டு இருக்கீங்க? எனக்கு ஏண்டா உங்களைக் காப்பாத்தினேன்னு இருக்கு”, என்று பொரிந்து தள்ளி விட்டாள்.

விஜியின் வீட்டை நினைத்து, வேலையை நினைத்து, உணவு உண்ணாதது, பஸ்ஸில் போவது என அனைத்து எரிச்சலையும் சேர்த்து வைத்து அவன் மீது கொட்டி விட்டாள்.

அவள் பேசிய பேச்சில் இன்பா முகம் அப்படியே சுண்டிப் போனது. அவனை எப்போதுமே அப்படிப் பார்த்திறாத கதிருக்கு கஷ்டமாகி விட்டது.

“வார்த்தையை பார்த்து பேசுங்க சொல்லிட்டேன். அவன் தப்பான நோக்கத்தோட உங்க கிட்ட பேச வந்திருந்தா என்னை பக்கத்துல வச்சிட்டு பேசிருக்க மாட்டான்”, என்று அவளிடம் எகிறினான் கதிர்.

“டேய் மாப்பிள்ளை, சும்மா இரு டா”, என்று அவனை அடக்கினான் இன்பா.

“நீ சும்மா இரு மச்சான்”, என்று சொன்ன கதிர் அவள் புறம் திரும்பி “உங்க வண்டிக்கு ஏதாவது பிரச்சனைன்னா அதை சரி பண்ணிக் கொடுக்கத் தான் கேட்டான். இதுக்கு அப்படி அவன் கிட்ட கத்துவீங்களா? அப்புறம் உங்க கிட்ட தேவையில்லாம எதுவும் பேச வரலை. அவன் உயிரைக் காப்பாத்தினதுக்கு நன்றி சொல்ல தான் உங்க பின்னாடி வந்தோம். ஆனா உங்க வண்டியை வழி மறைச்சு பேசுறது தப்புன்னு தான் அவன் காலைல உங்க கிட்ட பேசலை. இப்ப நடந்து வரவும் தான் பேசினான். அதுக்கு ஓவரா பேசுவீங்களா? இவனைக் காப்பாத்தினதுக்கு இவன் முதற்கொண்டு எங்க வீட்ல எல்லாரும் உங்களை எங்களோட குலதெய்வவமா நினைச்சிட்டு இருக்கோம். ஆனா நீங்க?…. இனி உங்க பின்னாடி வர மாட்டோங்க. இவன் உயிரைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி. இப்ப போங்க”, என்று பதிலுக்கு பொங்கி விட்டான் கதிர்.

இப்போது வினோதினிக்கு என்னவோ போல இருந்தது. தான் அவசரப் பட்டு வார்த்தைகளைக் கொட்டி விட்டோம் என்று புரிந்தது. இன்பாவை நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளைத் தான் பார்த்தான். அந்த பார்வை ஒரு சாதாரண ஆளைப் பார்க்கும் பார்வை அல்ல.  நமக்கு பிடித்தவர்களை ஆசையாக ரசிக்கும் பார்வை. அவள் திட்டினாலும் அவன் அந்த பார்வையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையில் ஒரு நொடி உறைந்து போன வினோதினி அவன் கண்களைப் பார்த்தவாறே “சாரி”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து நடந்து விட்டாள்.

போகும் அவளையே பார்த்த படி நின்ற இன்பாவைக் கண்டு தலையில் அடித்த கதிர் “மச்சான், இன்னும் என்ன அங்க பார்வை? வா போகலாம்”, என்ற படி வண்டியைக் கிளப்பினான்.

அவன் பின்னே ஏறி அமர்ந்த இன்பா “ரொம்ப நல்ல பொண்ணு மாப்பிள்ளை”, என்றான்.

“அவ அப்படி பேசிட்டு போறா. நீ நல்ல பொண்ணுன்னு சொல்ற?”, என்று எரிச்சலுடன் கேட்டான்.

“அவ பேசினதுல என்ன தப்பு இருக்கு?”

“என்ன மச்சான் இப்படிச் சொல்ற? நன்றி சொல்ல வந்த உன்னைத் திட்டினது தப்பு தானே?”

“நான் நன்றி மட்டுமா சொல்ல வந்தேன்?”

“பின்ன?”

“உன்னைப் பிடிச்சிருக்கு. எனக்கும் உன்னைப் பிடிச்சிருந்தா உன் வீட்டு அட்ரஸ் சொல்லுன்னு சொல்ல வந்தேன்”, என்றதும் அவனை அதிர்ச்சியாக பார்த்தான் கதிர்.

“என்ன மச்சான் சொல்ற?”

“பின்ன நானும் கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டியை எல்லாம் படிக்க வைக்க வேண்டாமா? இதை எல்லாம் சொல்ல வறேன்னு அவளுக்கு புரிஞ்சச்சோ என்னவோ? அதான் அப்படி பேசிட்டுப் போறா”

“அவ உன்னை அப்படி பேசினதுல தப்பே இல்லை மச்சான். சரி பாத்த ரெண்டு நாள்ல கல்யாணம் வரைக்கும் போவாங்களா?”

“ஒரு பொண்ணை மனசுக்கு பிடிக்க வருசக் கணக்கா வேணும்? ஒரு நொடி போதும். சில பேர் மாதிரி ஆயுசுக்குமா முடிவெடுக்க முடியாம திரியுவாங்க”

“நீ யாரைச் சொல்ற?”

“நான் யாரையோச் சொல்றேன். உனக்கு ஏன் குத்துது? சரி சரி ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டு”, என்று சொன்ன இன்பா அதன் பிறகு கதிரிடம் எதுவும் சொல்ல வில்லை.

பஸ் ஸ்டாண்டில் பஸ்க்காக நின்றிருந்தாள் வினோதினி. அவளைக் கடந்து தான் அவர்கள் வண்டி சென்றது. கதிர் அவளை முறைக்க இன்பாவோ அவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்து விட்டுச் சென்றான்.

காதல் தொடரும்…. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!