Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 6 1

அத்தியாயம் 6 

உந்தன் சுவாசங்கள் என்னைத்

தீண்டுகையில் எந்தன் கர்வம்

தோற்றுத் தான் போகிறது!!!



Advertisement

“கொஞ்சம் அவசரப் பட்டு தான் கத்திட்டோமோ? அவனை எல்லாரும் நல்லவன்னு தானே புகழ்றாங்க. அப்படி இருக்க அவன் எப்படி கெட்டவனா இருப்பான்? எங்க வீட்டு ஆட்கள் மேல இருக்குற கோபத்தை அவன் மேல காட்டிட்டேனே?”, என்று வினோதினி எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவள் செல்ல வேண்டிய பஸ் வந்தது.

Advertisement

அதில் இருந்த கூட்டத்தில் ஏறி இறங்குவதற்குள் வாழ்க்கையே வெறுத்து தான் போனது அவளுக்கு. சென்னையில் அவள் கூட்டத்தைப் பார்த்திருக்கிறாள் தான். ஆனால் இங்கு இன்னும் அதிகமாக தோன்றியது.

Advertisement

நான்கு ஸ்டாப் கழித்து அவள் இறங்கும் போது எதிலிருந்தோ தப்பித்த உணர்வு தான் அவளுக்கு வந்தது. விஜியின் வீட்டை நோக்கி நடந்தாள்.

Advertisement

இன்பாவும் கதிரும் வீட்டுக்கு போகும் போது எப்போதும் போல் பார்வதி மற்றும் சண்முகநாதன் இருவரும் முற்றத்தில் தான் அமர்ந்திருந்தார்கள். இன்று எப்போதும் போல் அவர்கள் அருகில் சென்று அமர்ந்தான் இன்பா. கதிர் எப்போதும் போல இரண்டு வார்த்தை பேசி விட்டு உள்ளே சென்று விட்டான்.

அவனுடைய அறைக்குள் காலடி வைத்ததும் அங்கு தெரிந்த காட்சியில் அதிர்ந்து போனான் என்று தான் சொல்ல வேண்டும்.

தன்னுடைய அழுக்குச் சட்டையைப் போட்டுக் கொண்டு கண்ணாடி முன்பு நின்றிருந்தாள் இளவரசி. அந்த காட்சியைக் கண்டு அவன் அதிர்ந்து விழிக்கும் போதே அந்த சட்டையில் இருந்து வந்த அவனுடைய வாசனையை முகர்ந்து பார்த்தாள். அவளுடைய செய்கையில் இவனது நாடி நரம்புகள் அனைத்தும் சிலிர்த்தது. இது அவனுக்கான அவனின் தேடல் அல்லவா என்று அவன் மனம் உருகிப் போனது.

அவன் உருகி நின்றது ஒரு நொடி தான். தாத்தா மற்றும் அம்மாச்சியிடம் பேசி விட்டு எப்போதும் வேண்டும் என்றாலும் இன்பா உள்ளே வரலாம் என்ற உண்மை புரிய தன்னுடைய குளிர்ந்த மனதை அடக்கிக் கொண்டு “அரசி, என்ன காரியம் பண்ணிட்டு இருக்க?”, என்று அதட்டினான்.

அவன் குரல் கேட்கவும் அவசரமாக திரும்பியவள் அவனைக் கண்டு அதிர்ந்து போனாள். அவசரமாக அந்த சட்டையைக் கழட்டி அது கிடந்த இடத்தில் வைத்து விட்டு தலை குனிந்து நின்றாள். அவனை நிமிர்ந்து பார்க்கவே அவளால் முடிய வில்லை. தன்னைப் பற்றி அவன் என்ன நினைப்பான் என்று எண்ணி அவளுக்கு அவமானமாக இருந்தது.

அவனுக்குமே அடுத்து என்ன செய்ய என்று தெரியாத நிலை தான். அதனால் அவனும் அமைதியாக தான் நின்றான்.

“நான் செஞ்சது தப்புன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா என்னால இதை நிறுத்த முடியலை. இனி மேல் செய்யாம இருக்க முயற்சி செய்றேன்”, என்று தலை குனிந்த படியே சொல்லி விட்டு கீழே போட்டிருந்த பெருக்குமாரை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

பெருக்குவதற்காக இந்த அறைக்கு வந்தவள் தான் இந்த வேலை பார்த்திருக்கிறாள் என்று புரிந்தது. கூடவே அவளது பேச்சில் இருந்து அவனது சட்டையைப் போடுவது இது முதல் முறை அல்ல என்றும் புரிந்தது.

மெதுவாக அவள் வைத்து விட்டுச் சென்ற சட்டை அருகில் சென்றான். கைகள் நடுங்க அந்த சட்டையை எடுத்தான். இப்போது அதிலிருந்து அவளுடைய வாசனை வருவது போலவே அவனுக்கு தோன்றியது.

அவன் மேல் எந்த அளவுக்கு உயிரை வைத்திருந்தால் அவள் இப்படி ஒரு காரியம் செய்வாள் என்ற உண்மை அவனுக்கு தெரிந்தது. அவனுக்குமே அவள் உயிர் தான். ஆனால் அதை ஒரு நாளும் வெளியே சொல்ல முடியாது என்று தன்னையே நொந்து கொண்டு நின்றான்.

“நான் ஆச்சி தாத்தா விசாரணையில் இருந்தே தப்பிச்சு வந்துட்டேன். நீ என்ன டா இன்னும் குளிக்காம இருக்க? அதுவும் அழுக்கு சட்டையை கையில வச்சிட்டு?”, என்ற இன்பாவின் குரலில் தான் நடப்புக்கு வந்தான்.

தன்னுடைய முகத்தை மாற்றிக் கொண்டவன் “துவைக்கலாமான்னு யோசிச்சிட்டு இருந்தேன் மச்சான்”, என்றான்.

“நீ உன் சட்டையை துவைச்ச அம்மா உன்னை துவைச்சு தொங்க விட்டுரும். அதை அப்படியே போடு, அம்மா துவைக்கும். போ, போய் முகம் கழுவு”

“சரி”, என்ற படி அங்கிருந்து சென்றான் கதிர்.

அதே நேரம் வினோதினி வீட்டுக்குச் சென்ற போது அங்கே ரிஷியை வைத்துக் கொண்டு ஒரு இளம் பெண் நின்றிருந்தாள்.

அவள் தான் ரவியின் தங்கை என்று நினைத்துக் கொண்ட வினோதினிக்கு அவளிடம் என்ன பேச என்று தெரியவில்லை. அவளைப் பார்த்து சிரிக்கவா வேண்டாமா என்று அவள் எண்ணும் போதே “வாங்க பெரிய மதினி, வேலை முடிஞ்சிருச்சா? நான் ரவியோட தங்கச்சி. என் பேர் ஆர்த்தி”, என்று புன்னகையுடன் சொன்னாள்.

அவளது புன்னகை மனதுக்கு இதத்தைத் தர “ம்ம்”, என்று சொல்லி அவளைப் பார்த்து சிரித்தாள்.

“விஜி அண்ணி சொல்லும், நீங்க ரொம்ப அழகுன்னு. அது உண்மை தான்னு இப்ப புரியுது”

அதற்குள் ரிஷியும் வினோதினியிடம் தாவி இருக்க அவனை வாங்கிய படியே “ஐயோ சும்மா இருங்க ஆர்த்தி. ஆமா விஜி எங்க?”, என்று கேட்டாள்.

“தூத்துக்குடிக்கு போயிருக்காங்க. ஊர் சுத்திட்டு மெதுவா வருவாங்க”, என்று சொன்னவள் குரலில் சற்று எரிச்சல் வெளிப்பட்டது போல வினோதினிக்கு தோன்றியது.

அதைப் பற்றி எதையும் கேட்காமல் “ரிஷி குட்டி, அத்தை கிட்ட இரு. பெரியம்மா டிரஸ் மாத்திட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

அவள் குளித்து உடை மாற்றி கீழே வரும் போது சூடான டீயை அவளிடம் நீட்டினாள் ஆர்த்தி. அதைக் கண்டு வினோதினியின் கண்கள் கலங்கியே விட்டது.

“என்ன ஆச்சு மதினி? கண் எல்லாம் கலங்கிருச்சு?”

“ஒண்ணும் இல்லை ஆர்த்தி. அம்மா நினைவு வந்துருச்சு. அதான். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்”

“ஐயோ இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லுவாங்களா? வாங்க உக்காந்து குடிப்போம்”, என்று சொல்லி அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்.

அவள் அருகே அமர்ந்த வினோதினி “சாரி ஆர்த்தி, உங்க கிட்ட கேக்காம உங்க வண்டியை எடுத்ததுக்கு. கண்டிப்பா யாருக்குனாளும் கோபம் வரத் தான் செய்யும்”, என்றாள்.

“என்ன வண்டி? என்ன கோபம்?”, என்று குழப்பமாக கேட்டாள் ஆர்த்தி.

“உங்க வண்டியை நான் வேலைக்கு எடுத்துட்டுப் போய்ட்டேன்னு நீங்க உங்க அண்ணன் கிட்ட கோபப் பட்டதா சொல்லி மதியம் வந்து வண்டியை எடுத்துட்டு போனாரே”

“அவன் சொன்னதை அப்படியே நம்பிட்டீங்களா? சும்மா வீட்ல நிக்குற வண்டியை எடுத்து யூஸ் பண்ணினதுக்கு நான் எதுக்கு மதினி கோபப் படப் போறேன்? எங்க அண்ணன் என்ன சொன்னாலும் நம்பிறாதீங்க? சரியான பிராடு அவன்”, என்று அவள் சொல்ல அவளைத் திகைப்பாய் பார்த்தாள்.

“நான் உண்மையைத் தான் சொல்றேன் மதினி. அண்ணா ரொம்ப மோசம். ஆனா கூடப் பிறந்தவனா போய்ட்டான். எங்க அம்மா அப்பா ரொம்ப நல்லவங்க. இப்ப வரைக்கும் இவன் குடும்பத்தை அவங்க தான் தாங்குறாங்க. மாசம் மாசம் ஐயாயிரம் ஆறாயிரம்னு கொடுத்துருவாங்க. அது போக காய்கறி பருப்புன்னு வாங்கிக் கொடுப்பாங்க. அரிசி நம்ம தோட்டத்துல விளையுறது தான். பயிறு, உழுந்து எல்லாம் இவங்களுக்கும் பங்கு வந்துரும். ஆனா இவன் சுயநலப் பிசாசு. அம்மா அப்பாவை மதிக்கவே மாட்டான். திடீர்னு கல்யாணம் பண்ணிட்டு வந்ததும் எங்களுக்கு அதிர்ச்சி தான்”

…..

“அதுக்கப்புறமும் மாறுவான்னு பாத்தா மாறவே இல்லை. நான் சொல்லக் கூடாது. ஆனாலும் சொல்றேன், விஜி மதினியும் ரொம்ப மோசம் தான். அம்மா அப்பாக்கு உடம்பு சரியில்லைன்னா கூட எட்டிப் பாக்க மாட்டாங்க. இந்த குட்டிப் பயலைக் கூட கூட்டிட்டு போய்க் காட்ட மாட்டாங்க. அவங்க பாக்க வந்தாலும் வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்க. எல்லாமே கொடுக்குற எங்க அம்மா அப்பா இங்க இருந்து எல்லாத்தையும் எடுத்துட்டு போக வார மாதிரியே உங்க தங்கச்சி பேசுவாங்க”, என்றாள் ஆர்த்தி. அந்த சிறு பெண்ணின் பேச்சைக் கேட்டு வினோதினிக்கு கஷ்டமாக இருந்தது.

தன்னுடைய தங்கை அப்படித் தான் இருப்பாள் என்ற உண்மை தெரிந்த வினோதினிக்கு என்ன சொல்ல என்று கூட தெரிய வில்லை.

“சரி விடு ஆர்த்தி. அவ குணம் ஒரு நாள் மாறும். சரி உன் படிப்பு எல்லாம் எப்படிப் போகுது?”, என்று பேச்சை மாற்றி அவளுடன் உரிமையாக பேச ஆரம்பித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!