Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 6 2

ஆர்த்தியும் சந்தோஷமாக வினோதினியிடம் பேசினாள். அவளைப் போல ஒரு கவர்ன்மெண்ட் வேலை வாங்க வேண்டும் என்ற கனவு இருப்பதாகவும் சொன்னாள். அதற்கான டிப்ஸை வினோதினி சொன்னாள்.

பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே அவர்களுக்கு தெரியவில்லை. இரவு ஏழு மணிக்கு தான் ரவியும் விஜியும் வீட்டுக்கு வந்தார்கள். இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட விஜிக்கு பொறாமை பொங்கியது. ஆர்த்தி அவளை மதிக்க கூட மாட்டாள். ஆனால் தன்னுடைய அக்காவிடம் அப்படி சிரித்து பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு எரிச்சல் வந்தது.



Advertisement

அந்த கோபத்தில் “இவ்வளவு நேரமா ரெண்டு பேரும் வெட்டிக் கதையா பேசிட்டு இருந்தீங்க? நைட்டுக்கு ஏதாவது சாப்பாடு செஞ்சிருக்க வேண்டியது தானே?”, என்று கேட்டாள்.

Advertisement

அவளுடைய அரட்டலில் முகத்தைச் சுருக்கி அவளைப் பார்த்தாள் வினோதினி. வினோதினிக்கு இந்த அரட்டல் எல்லாம் பிடிக்காது. ஆனாலும் தங்கையை எதுவும் சொல்லி விடக் கூடாது என்று பொறுமையாக நின்றாள்.

Advertisement

அந்த பொறுமை எல்லாம் ஆர்த்தியிடம் இல்லை. “நாங்க சமைக்கிறது எல்லாம் இருக்கட்டும். நீங்க ரெண்டு பேரும் எங்க ஊரு சுத்திட்டு வரீங்க? நீங்க வெட்டியா ஊரைச் சுத்துவீங்க. நாங்க உங்க பிள்ளைக்கு ஆயா வேலை பாக்கணுமா?”, என்று கேட்டு விட்டாள்.

Advertisement

“பாத்தீங்களாங்க, உங்க தங்கச்சி எப்படி பேசுறான்னு?”, என்று விஜி ரவியிடம் கேட்க தங்கையை ஒரு பார்வை பார்த்த ரவி “சரி விஜி, நீ போய் ஏதாவது பாரு”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டான்.

தங்கையை அவன் ஒரு வார்த்தை கேட்டால் அவனது அப்பா ஒத்த ரூபாய் கூட கொடுக்க மாட்டார் என்பதால் அவன் அமைதியாக சென்று விட்டான்.

“இந்த எடுத்துக் கொடுத்து திட்டு வாங்க வைக்கிற வேலை எல்லாம் இங்க வேண்டாம் மதினி. ஆமா என் வண்டியை பெரிய மதினி எடுத்ததுக்கு நான் திட்டினேன்னு அவன் சொல்லிருக்கான். நான் எங்க அப்படிச் சொன்னேன்?”, என்று கேட்டாள் ஆர்த்தி.

அதில் முகம் கன்றிப் போய் வினோதினியைப் பார்த்தாள் விஜி. இது தங்கை சொல்லிக் கொடுத்ததாக தான் இருக்கும் என்று வினோதினிக்கு புரிந்தது. ஊர் சுற்றுவதற்காக பொய்ச் சொல்லி வாங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு “சரி விடு ஆர்த்தி”, என்றாள் வினோதினி.

“நீங்க சும்மா இருங்க மதினி”, என்றவள் விஜி புறம் திரும்பி சொல்லுங்க “மதியமே போய் வண்டியை எதுக்கு அவன் பிடுங்கிட்டு வந்தான்?”, என்று கேட்டாள்.

“அது உங்க அண்ணன் தான்…. பொய் சொல்லி வாங்கிட்டு வந்தாங்க”, என்று உளறினாள் விஜி.

“அவன் பொய் சொல்வான் தான். ஆனா நீங்க வந்த அப்புறம் அவன் வாயிலிருந்து வரது எல்லாம் பொய்ய்யா மாறிருச்சு. அதுக்கு கண்டிப்பா எங்கயாவது நல்லா வாங்கிக் கட்டுவான். என்னமும் செய்ங்க. நான் கிளம்புறேன்”, என்று கத்திய ஆர்த்தி வினோதினி புறம் திரும்பி “நான் நாளைக்கு வரேன் மதினி. என் வண்டியை நீங்க எடுத்துட்டு போங்க. யாரும் கேக்க மாட்டாங்க”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

“இவளை மட்டும் மடக்கவே முடியலையே”, என்ற எரிச்சலில் நின்றாள் விஜி. அவளை மாற்ற எண்ணி “விஜி, பிளீஸ். எனக்கு ரொம்ப பசிக்குது. ஏதாவது செஞ்சுத் தாயேன். சாதமும் துவையலும் இருந்தாக் கூட பரவால்ல”, என்றாள் வினோதினி. சாப்பாடை பிச்சை கேட்பது போல தான் அவளுக்குத் தோன்றியது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி இல்லையே.

ஆர்த்தி மீது கோபத்தில் நின்ற விஜி அக்கா அப்படிச் சொல்லவும் இன்னும் கோபம் தலைக்கேற “நான் என்ன உனக்கு வேலைக்காரியா? என்னால எல்லாம் உனக்கு வடிச்சு கொட்ட முடியாது”, என்று சொல்லி விட்டாள்.

வினோதினிக்கு அவள் அப்படிப் பேசியதும் அவமானமாக தான் இருந்தது. ஆனாலும் அன்னைக்காக அடக்கிக் கொண்டு “சரி பரவால்ல, நானே செய்றேன். எல்லாத்துக்கும் சேத்து செஞ்சிறேன். எல்லாம் எங்க இருக்குனு மட்டும் சொல்லு”, என்ற படி அடுப்படிக்கு சென்றவள் உலை வைக்க சட்டியை எடுத்தாள்.

அதில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த விஜி “உன்னை சமைக்க வேண்டாம்னு சொல்ல மாட்டேன். ஆனா கேஸ் எல்லாம் யூஸ் பண்ணக் கூடாது. இதோ இருக்கு விறகு அடுப்பு. அதுல சமைக்கிறதா இருந்தா சமை”, என்று சொல்லி விட்டு ரிஷியை தூக்கிக் கொண்டு சென்று விட்டாள்.

“என்னது? விறகு அடுப்பில் சமைப்பதா?”, என்று அதிர்ந்து போனவள் அப்படியே சட்டியைக் கீழே வைத்து விட்டு அவளுடைய அறைக்கு வந்து விட்டாள்.

பசியில் அவளுக்கு அழுகையாக வந்தது. அப்போது தேவி அவளை அழைக்க அதை எடுக்க கூட அவளுக்கு பிடிக்க வில்லை. “எல்லாம் அம்மாவால தான்”, என்று கோபமாக வந்தது. ஆனால் “அம்மா என்ன செய்யும்?”, என்று எண்ணி சிறிது நேரத்தில் அழைத்தாள்.

“அம்மா”, என்று அழைத்தவளால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.

வயிறு பசியில் ஓலமிட அவள் என்ன பேசுவாளாம்? “என்ன வினோதினி உன் குரல் ஒரு மாதிரி இருக்கு? ரொம்ப வேலையா?”, என்று கேட்டாள்.

“அப்படி எல்லாம் இல்லை மா. சாப்பிட்டீங்களா?”, என்று பேச்சை மாற்றினாள்.

“இனி தான். சரி நீ சாப்பிட்டேனு இப்ப தான் விஜி சொன்னா. வெங்காய தோசை செஞ்சு கொடுத்தாளாமே? விஜி இப்ப எல்லாம் ரொம்ப மாறிட்டால்ல? இங்க ஒரு வேலையும் செய்ய மாட்டா”, என்று மகளைப் பற்றி பெருமையாக பேசினாள் அந்த தாய்.

“ம்ம்”, என்று முணுமுணுத்தாள் வினோதினி. “இல்லை அவ பொய்ச் சொல்றா”, என்று சொல்லி தேவியின் நிம்மதியைக் கெடுக்க அவளுக்கு மனதில்லை.

“சரி டா, உனக்கு டயர்டா இருக்கும். நீ தூங்கு”, என்று தேவி சொன்னதும் “அம்மா”, என்று அழைத்தாள்.

“என்ன வினு?”

“நான் வேற வீடு பாக்கட்டுமா?”

“அந்த பேச்சே வேண்டாம் வினோதினி. நீ அங்க தான் இருக்கணும். நீ இருக்குறது விஜிக்கு எல்லாம் கஷ்டம் கிடையாது. அவ உன்னை நல்லா தானே பாத்துக்குறா? அப்புறம் எதுக்கு இப்படிச் சொல்ற? தனியா போனா வாடகைக்கு அழனும். ஏற்கனவே நம்ம கஷ்டம் உனக்கு தெரியாதது இல்லை”

“சரி மா, இங்கயே இருக்கேன். எனக்கு தலை வலிக்குது. நான் வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு பதிலைக் கூட எதிர் பார்க்காமல் வைத்து விட்டாள்.

தேவியிடம் விஜி நன்றாக பொய் சொல்லி வைத்திருக்கிறாள் என்று புரிந்தது. கலங்கிய கண்களுடன் படுத்தாள். ஆனால் பசியில் அவளுக்கு ஒரு சதவீதம் கூட தூக்கம் வரவில்லை.

சிறிது நேரத்தில் அறைக் கதவு தட்டப் பட “ஒரு வேளை நம்ம மேல பாவப் பட்டு சாப்பாடு கொண்டு வந்துருக்காளோ?”, என்று எண்ணிக் கதவைத் திறந்தாள்.

அங்கு ரிஷி தான் நின்றிருந்தான். அவன் அருகே குனிந்தவள் “என்ன கண்ணா, தூங்கலையா?”, என்று கேட்டாள்.

“அம்மா, இங்க தூங்க சொன்னா”, என்று அவன் மழலை பாஷையில் சொல்ல விஜியை நினைத்து எரிச்சலாக வந்தது. அதைக் குழந்தையிடம் காட்ட மனதில்லாமல் அவனைத் தூக்கிக் கொண்டவள் கதவை அடைத்து விட்டு படுத்தாள்.

சமத்து பிள்ளையாக அவளை எந்த தொந்தரவும் செய்யாமல் இன்று உடனடியாக உறங்கிப் போனான் ரிஷி. ஆனால் காலை வரை பசியில் அவளால் உறங்க முடிய வில்லை.

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே அவளுக்கு மயக்கம் வரும் போல இருந்தது. ஏதாவது சாப்பிட்டால் தான் சோர்வு போகும் என்று அவளுக்கே புரிந்தது.

அவளுக்கு விறகு அடுப்பில் சமைக்க தெரியாது. விஜி அவ்வளவு பேசிய பிறகு அவளிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அவளது தன்மானம் இடம் கொடுக்க வில்லை.

அதனால் அவசரமாக கிளம்பியவள் ஏதாவது ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.

அவள் கிளம்பி கீழே வரும் போது விஜியின் அறைக் கதவு இன்னும் திறக்கப் படவில்லை. காலையிலே அவளை எதிர்க் கொள்ள வேண்டுமா என்று எண்ணி வந்தவளுக்கு அது நிம்மதியாக இருந்தது. அவசரமாக அங்கிருந்து சென்று விட்டாள். என்ன தான் ஆர்த்தி வண்டியை எடுக்கச் சொன்னாலும் விஜியிடம் சென்று சாவி கேட்க மனதில்லை.

மெயின் ரோட்டுக்கு வரும் போது நேற்று இன்பா நின்ற மரத்தடியைப் பார்த்தாள். அது அவள் மனதைப் போலவே வெறுமையாக இருந்தது. அவனை எதற்காக எதிர்பார்க்கிறோம் என்று கூட அவளுக்கு தெரிய வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!