Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 12 2

“சரிங்க அத்தை. நீங்க பெரியவங்க. நீங்களே பேசிருங்க”, என்று பாமா சொல்லிக் கொண்டிருக்கும் போது “என்ன இந்த நேரம் இங்க மாநாடு நடக்கு?”, என்று கேட்ட படி வந்தார் சிதம்பரம்.

“உன் மகன் கல்யாண விஷயம் தான் பேசிட்டு இருக்கோம். தேவிக்கு போனைப் போடு. நல்ல விஷயத்தை ஆறப் போட வேண்டாம் சிதம்பரம்”, என்று பார்வதி சொன்னதும் சிதம்பரம் தேவிக்கு அழைத்து போனை பார்வதியிடம் கொடுத்தார்.



Advertisement

தேவி எடுத்ததும் சில நலம் விசாரிப்புக்கு பின் இன்பாவுக்கு வினோதினியைக் கொடுப்பார்களா என்று பார்வதி கேட்க தேவி சந்தோசத்தில் திக்கு முக்காடிப் போனாள்.

Advertisement

கடவுளின் முடிவு இது என்பதால் தான் வினோதினிக்கு அந்த ஊரில் வேலை கிடைத்ததோ என்று எண்ணிக் கொண்டு பார்வதி லைனில் இருக்கும் போதே கிருஷ்ணனிடம் சம்மதம் கேட்டார் தேவி.

Advertisement

அவரும் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையும் போது ஏன் தடை சொல்லப் போறாராம்? அவர்கள் சம்மதம் சொல்ல “சரி தேவி ஒரு நல்ல நாள் பாத்துட்டு சொல்றேன். நீங்க கிளம்பி வாங்க. முதல்ல நிச்சயம் முடிச்சிட்டு கல்யாணத்துக்கு நாள் பாத்துறலாம். அதுக்கு முன்னாடி உங்க பொண்ணு கிட்ட நீயே சம்மதம் வாங்கிரு. நாங்களே அவ கிட்ட பேசினா அது நல்லா இருக்காது. வினோதினி கிட்ட பேசிட்டு எனக்கு தகவல் சொல்லு தேவி”, என்று சொல்லி விட்டு வைத்தார் பார்வதி.

Advertisement

உடனேயே மகளை அழைத்து விட்டாள் தேவி. தேவி அழைக்கவுமே வினோதினிக்கு விஷயம் புரிந்து விட்டது. “இது சரியா தவறா?”, என்ற குழப்பத்துடனே போனை எடுத்து “என்ன மா இந்த நேரத்துல?”, என்று கேட்டாள்.

“ஒரு முக்கியமான விஷயம் பேசணும் வினு”

“சொல்லுங்க மா”

“உனக்கு ஒரு வரன் வந்துருக்கு மா. உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்”

“உங்க விருப்பம் மா. நான் தான் முன்னாடியே உங்க விருப்பம்னு சொல்லிட்டேனே?”

“மாப்பிள்ளை யாருன்னு கேக்க மாட்டியா?”

“அதை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க”

“ரொம்ப சந்தோஷம் டா. நீ எங்களை பெருமைப் படுத்திட்ட”, என்று தேவி அவளைப் பாராட்ட வினோதினிக்கு குற்ற உணர்வாக இருந்தது.

இப்போது இன்பாவைத் தவிர வேறு யாரையும் அவர்கள் மாப்பிள்ளையாக காட்டியிருந்தால் கட்டாயம் சரி என்று சொல்லியிருப்பாளா என்று அவளுக்கே தெரியாது.

“மாப்பிள்ளை இன்பா தம்பி தான் வினு. பார்வதி அம்மா இப்ப தான் பேசினாங்க. அவங்க வீட்ல எல்லாருக்கும் விருப்பமாம். இது கடவுள் போட்ட முடிச்சு போல? அதான் உனக்கு அங்க வேலை கிடைச்சிருக்கு. உனக்கு சம்மதம் தானே வினு மா?”

“நீங்க சொன்னா சரி தான் மா”

“சரி நீ வேலையைப் பாரு. நான் பார்வதி அம்மா கிட்ட நீ சரின்னு சொல்லிட்டேன்னு சொல்லிறேன். உனக்கு நைட் பேசுறேன்”, என்று சொல்லி போனை வைத்தாள்.

பாட்டியின் புத்திசாலித் தனத்தை மெச்சிய படியே தன்னுடைய வேலையை அவள் தொடர சரியாக பன்னிரெண்டரை மணிக்கு பேங்க்க்கு வந்தான் இன்பா.

அவனைக் கண்டு திகைத்தவள் அடுத்த நொடி தன்னுடைய பார்வையை விலக்கி கொள்ள அவளது பாராமுகம் அவனை வருத்தியது.

அதுவும் அவள் உதட்டில் இருந்த காயம் நடந்ததைச் நினைவு படுத்த தான் ஏன் அப்படி நடந்து கொண்டோம் என்று நூறாவது முறையாக எண்ணினான்.

பணம் எடுப்பதற்காக சலான் எழுதி அவளிடம் நீட்ட அவன் முகம் பார்க்காமல் வாங்கி அதை சரி பார்த்து பணத்தை எண்ணிக் கொடுத்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு துண்டு சீட்டை அவள் டேபிளில் யாருக்கும் தெரியாமல் தூக்கிப் போட்டு விட்டுச் சென்று விட்டான்.

அவன் வெளியே போனதும் அதை எடுத்து பிரித்துப் பார்த்தாள். “நான் செஞ்சதுக்கு மன்னிப்புன்னு ஒரு வார்த்தை கேட்டா அது சரியாகாது தான். அதை கேக்க கூட எனக்கு தகுதி இல்லை. ஆனா அந்த வார்த்தைக்கு ஈடா வேற எதுவுமே இல்லை. அதனால கேக்குறேன் என்னை மன்னிச்சிரு வினோ. கோபத்துல தான் நான் அப்படி நடந்துக்கிட்டேன். ஆனா சத்தியமா சொல்றேன் அந்த இடத்துல உன்னைத் தவிர வேற யார் இருந்தாலும் கண்டிப்பா அப்படி நடந்துட்டு இருக்க மாட்டேன். என் மனசுல இருந்த ஏக்கமா எதிர்ப்பார்ப்பா ஏதோ ஒண்ணு என்னை அப்படி நடந்துக்க தூண்டிட்டு. மறுபடியும் சொல்றேன், அந்த இடத்துல நீ இல்லாம வேற யார் இருந்தாலும் என் விரல் கூட அவங்க மேல பட்டிருக்காது. என்னை மன்னிச்சிரு. இப்படிக்கு இன்பா”, என்று எழுதி இருந்தான். மன்னிப்பு என்ற பெயரில் மறைமுகமாக அவனுடைய காதலையும் சொல்லி இருந்தான்.

அது வினோதினிக்கு புரிந்தது. உதடு கடித்து ஏதேதோ யோசித்தவள் அடுத்த ஆள் வரவும் வேலையில் கவனம் செலுத்தினாள்.

அன்று மாலை பஸ்ஸில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள். காம்பவுண்டுக்குள் நுழைந்ததுமே பார்வதி மற்றும் சண்முகநாதன் இருவரும் தோட்டத்தில் அமர்ந்திருப்பது தெரிந்தது .

அவளைக் கண்டதும் “முகம் கழுவிட்டு துணி மாத்திட்டு இங்க வா மா”, என்று அழைத்தார் பார்வதி.

“சரி பாட்டி”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றவள் குளித்து உடை மாற்றி விட்டு வந்து அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இளவரசியும் அவர்களுடன் வந்து அமர்ந்து விட்டாள்.

திருமணப் பேச்சைத் தவிர மற்ற அனைத்தும் அங்கே அலசி ஆராயப் பட்டது. அப்போது கதிரும் இன்பாவும் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் வினோதினி எழுந்து கொள்ள முயல அவள் கையை பற்றிய பார்வதி அவளை அங்கிருந்து செல்ல விட வில்லை. எப்போதும் கதிர் வந்ததும் எழுந்து சென்று விடும் இளவரசி இன்று அப்படியே இருந்தாள். அவனும் அவளைக் காதல் பார்வை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான்.

அவர்கள் இருவரும் முகம் கழுவி வந்ததும் பாமா அனைவருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்தாள். மற்ற அனைவரும் சாதாரணமாக இருக்க இன்பாவை நிமிர்ந்து பார்க்க முடியாமல் சங்கடமாக அமர்ந்திருந்தாள் வினோதினி.

அவனோ மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவளைத் தான் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். தான் எழுதிய மன்னிப்பு கடிதத்துக்கு அவளிடம் என்ன ரெஸ்பான்ஸ் இருக்கும் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.

அவளோ அவனை நிமிர்ந்து பாக்க தயங்கினாள். உண்மையைச் சொல்லப் போனால் இப்போது அவன் மீது கோபம் இருக்கிறதா இல்லையா என்று கூட அவளுக்கு தெரிய வில்லை.

அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தடுமாறுவது கோபத்தாலா வெட்கத்தாலா என்று அவளுக்கே குழப்பமாக தான் இருந்தது. அப்போது அங்கே வந்து அமர்ந்தார் சிதம்பரம். அவருக்கும் டீ கொடுக்கப் பட்டது.

டீ குடித்து முடித்ததும் “இன்பா”, என்று அழைத்தார் சிதம்பரம்.

“சிங்கம் எதுக்கு நம்மளைச் சொரியுது?”, என்று எண்ணிக் கொண்டு “என்ன பா?”, என்று கேட்டான்.

“உனக்கு ஒரு பொண்ணு பாத்து வச்சிருக்கேன்”, என்று அவர் சொன்னதும் அவன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. கதிர் இளவரசியை தவிர மற்ற அனைவருக்கும் வினோதினி தான் பெண் என்ற உண்மை தெரியும் என்பதால் சாதாரணமாக இருந்தார்கள்.

இன்பாவுக்கு திருமணம் என்றதும் இளவரசி சந்தோஷப் பட்டாள். ஆனால் இன்பாவின் மனநிலை புரிந்த கதிருக்கு அவனைப் பார்த்தால் பாவமாக இருந்தது.

“என்ன டா முழிக்கிற? உண்மையா தான் சொல்றேன். இன்னும் ரெண்டு நாள்ல ஆடி மாசம் ஆரம்பிக்க போகுது. ஆடி முடிஞ்சதும் நிச்சயம் பண்ணப் போறேன். அதுக்கு அடுத்த இருபது நாள்ல உணக்கு கல்யாணம். பொண்ணு யாருன்னா…..?”, என்று சிதம்பரம் ஆரம்பிக்க “எனக்கு கல்யாணம் வேண்டாம் பா”, என்றான் இன்பா.

“பொண்ணு யாருன்னு கேளு டா”, என்றாள் பாமா.

தன்னுடைய மனதைப் பற்றி எல்லாம் தெரிந்த அன்னையே அப்படிச் சொல்லவும் “நீ கொஞ்சம் பேசாம இரு மா. என்னால அப்பா பாக்குற பொண்ணை எல்லாம் காட்டிக்க முடியாது”, என்றான். அவன் கண்கள் வினோதினியைத் தழுவ அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் பார்க்கவும் தலை குனிந்து கொண்டாள்

பார்வதி தான் இருவரையும் சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம்னு சொன்ன? நானும் பொறுமையா இருந்துட்டேன். இனி முடியாது. அப்பான்னு என்னை மதிக்கிறதா இருந்தா இதுக்கு நீ சம்மதிக்கணும்”, என்றார் சிதம்பரம்.

“உங்க மேல எனக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கு பா. ஆனா இது மட்டும் வேண்டாம்”, என்று அவனும் பிடிவாதமாக இருந்தான்.

“அவன் இவ்வளவு தூரம் சொல்றான். நீ என்ன டா கதை விட்டுட்டு இருக்க?”, என்று கேட்டார் பார்வதி.

“ஆச்சி, பிளீஸ் என்னை புரிஞ்சிக்கோ. இது வேண்டாம்”, என்று அவன் கெஞ்ச “அதான் ஏன்?”, என்று கேட்டா பார்வதி.

“ஏன்னா நான் ஒரு பொண்ணை விரும்புறேன்”, என்று அவன் சொல்ல சிதம்பரம் அதிர்ச்சி அடைந்தார்.

“அப்படியா? அது யாருன்னு சொல்லு பாப்போம்”, என்று பார்வதி கேட்க “என்ன போட்டு வாங்குறியா? அது யாருன்னு சொல்ல முடியாது ஆச்சி”, என்றான் இன்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!