Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 14 4

அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்கள் கலங்கி சிவந்து இருந்தது. அதைப் பார்த்த அவளுக்கு கஷ்டமாக இருந்தது. எப்போதுமே கம்பீரமாக சுற்றிக் கொண்டிருப்பவனின் அந்த கண்ணீர் தனக்கானது என்று எண்ணி அவள் நெஞ்சம் விம்மியது.

தான் பசியில் இருந்த போது உணவு கொடுத்து ஒரு அன்னையாக தன்னைக் கவனித்துக் கொண்டவன். தனக்கு ஒரு பிரச்சனை என்றதும் தோழனாக தோள் கொடுத்தவன். விஜி வீட்டில் மூச்சு முட்டிப் போய் இருந்தவளுக்கு விடுதலை கொடுத்தவன்.



Advertisement

தான் இது வரை பார்த்தே அறியாத பாதுகாப்பைக் கொடுத்து தந்தையாக தனக்கு இருந்தவன் இன்று தன்னிடம் காதலுக்காக யாசகம் கேட்டு கண்ணீர் வடிப்பதா என்று எண்ணி அவள் கண்கள் கலங்கியது.

Advertisement

“அவ்வளவு சந்தோசத்தை உனக்கு கொடுத்தவனை இப்படி அழ வைக்கிறியே டி? உண்மையை மறைச்சு நீ என்ன பண்ணப் போற?”, என்று மனசாட்சி கேட்க முழு காதலைக் கண்ணில் காட்டி அவனைப் பார்த்தாள்.

Advertisement

“இப்ப கூட நீ பாக்குறது எனக்கு காதலா தான் டி தெரியுது. ஆனா நீ இல்லைன்னு சொல்ற. உனக்கு என்னை ஏன் பிடிக்கலைன்னு தெரியலை டி. ஆனா நீ எனக்கு உயிர் வினோ. இந்த ஜென்மத்துல நீ மட்டும் தான் டி என் பொண்டாட்டி. நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ. நீ சந்தோஷமா இருந்தா போதும்”, என்று அவன் கண்ணீருடன் சொல்ல அவனுடைய கண்ணீர் சுமந்த முகம் அவளை வதைத்தது.

Advertisement

அடுத்த நொடி “இன்பா”, என்று அழைத்த படி அவளாகவே அவன் மார்பில் சாய்ந்து அவனைக் கட்டிக் கொண்டாள். அவள் செய்கையில் அவன் வியந்து போய் “வினோ”, என்று அழைத்தான்.

அவனைக் கட்டிக் கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தவள் “பிளீஸ் அழாதீங்க இன்பா. உங்க கண்ணீரைப் பாக்குற சக்தி எனக்கு இல்லை. நீங்க அழுதா எனக்கு கஷ்டமா இருக்கும். ஏன்னா எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும். உங்களை மட்டும் தான் பிடிக்கும்”, என்ற சொல்லிய படி அவன் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

அவள் அப்படிச் சொன்னதும் முகம் மலர்ந்து போனவன் “நீ சொல்றது எல்லாம் உண்மையா டி? என்னை ஏமாத்தலையே? சத்தியமா நான் ஒரு பொண்ணு மேல இப்படி பைத்தியமா திரியுவேன்னு நினைக்கலை டி. தயவு செஞ்சு உண்மையைச் சொல்லு. எனக்கு சந்தோசத்தைக் காட்டி என்னை ஏமாத்திறாத? அதுக்கு பதிலா என்னைக் கொன்னுறு”, என்றான்.

“இப்படி பேசக் கூடாது இன்பா. நான் சத்தியமா உண்மையைத் தான் சொல்றேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்”

“அப்படினா அப்பா கிட்ட போய் சொல்லவா?”

“யார் கிட்ட வேணும்னாலும் சொல்லுங்க”, என்று அவள் சொல்ல சந்தோஷமாக அவளை அணைத்துக் கொண்டான்.

“டேய் பேசி முடிச்சிட்டியா இல்லையா டா? எனக்கு இங்க பக்கு பக்குன்னு இருக்கும். இந்த சிங்கம் எப்ப வேணும்னாலும் கர்ஜிக்கும் டா. சீக்கிரம் வெளிய வா”, என்றான் கதிர்.

“கதிர் கூப்பிடுறான் போகலாமா?”

“போகலாம்”, என்று சொல்லி அவளுடைய கை பற்றி அழைத்து வந்தான்.

அவர்கள் அறையை விட்டு வெளியே வந்ததும் அவர்களைப் பார்த்த கதிருக்கு அவர்கள் முகத்தில் இருந்த சந்தோசமே ஒரு நிறைவைத் தந்தது.

“மச்சான்”, என்று கதிர் சந்தோஷமாக அழைக்க “வினோதினி சரின்னு சொல்லிட்டா டா”, என்று புன்னகையுடன் சொன்னான் இன்பா.

“தேங்க்ஸ் வினோதினி”, என்று கதிர் சொல்ல “எங்கயாவது அண்ணன் தங்கச்சிக்கு தேங்க்ஸ் சொல்லுவாங்களா?”, என்று கேட்டு அவனையும் வியப்படையச் செய்தாள் வினோதினி.

“சரி சரி அதெல்லாம் அப்புறம் பேசலாம். இப்ப கீழ போய் எல்லாம் தடுத்து நிறுத்தணும்”, என்று கதிர் சொல்ல இன்பா பயத்துடன் கீழே இறங்கினான் என்றால் வினோதினியோ சிறு சிரிப்புடன் இறங்கினாள்.

சிதம்பரம் “என்ன எல்லாரும் கிளம்பிட்டீங்களா? போகலாமா?”, என்று கேட்டுக் கொண்டே அறையை விட்டு வெளியே வர அவர் முன்பு போய் நின்றான்.

தன் முன்னே வினோதினியின் கையைப் பற்றி நின்ற மகனைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனைக் கேள்வியாக பார்த்தார் சிதம்பரம்.

பாமா, பார்வதி, சண்முகநாதன், வினோதினி நான்கு பேரும் சிறு புன்னகையுடன் நின்றிருக்க இளவரசி அனைவரையும் குழப்பமாகப் பார்த்தாள்.

கதிரும் இன்பாவும் மட்டும் அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்து போய் நின்றனர்.

“எல்லாரும் கிளம்பிட்டீங்க தானே? போகலாமா?”, என்று சிதம்பரம் மீண்டும் கேட்க “அப்பா உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்”, என்றான் இன்பா.

“நல்ல நேரம் வரப் போகுது டா. எல்லாம் அப்புறம் பேசலாம்”

“நான் எங்கயும் வர மாட்டேன்”

“வம்பு பண்ணாத இன்பா. கிளம்பு. பொண்ணு வீட்ல காத்துட்டு இருப்பாங்க”

“நான் எந்த பொண்ணையும் பாக்க வர மாட்டேன். நான் வினோதினியைத் தான் விரும்புறேன். அவளும் என்னை விரும்புறா. எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க”, என்று இன்பா சொல்ல மற்றவர்களுக்கு சிரிப்பை அடக்குவதே பேரும் பாடாக இருந்தது.

இளவரசியோ “அண்ணா வினோதினியை விரும்புறானா? வினோதினியும் அவனை விரும்புறாங்களா?”, என்று வியப்புடன் எண்ணிக் கொண்டாள்.

“ஆமா மாமா, கடைசி நேரத்துல தான் இந்த உண்மையை உங்களுக்கு தெரிய படுத்த முடிஞ்சது. எப்படியாவது இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி மச்சானுக்கும் வினோதினிக்கும் கல்யாணம் பண்ணி வைங்க”, என்றான் கதிர்.

சிதம்பரம் தாடையைத் தடவி யோசிக்க “ஏய் கிழவி, என்ன கம்முன்னு இருக்குற? உன் பிள்ளை கிட்ட சொல்லி மச்சான் காதலை சேத்து வைக்கச் சொல்லு”, என்று பார்வதியின் காதைக் கடித்தான் கதிர்.

“ஏண்டா நீ தான் அவங்களைச் சேத்து வைக்க ஐடியா பண்ணி வினோதினியை இங்க வர வச்சியா?”, என்று கூர்மையாக கேட்டார் பார்வதி.

“ஆமா, இளவரசி கூப்பிடுறான்னு சொல்லி வினோதினியை இன்பா கூட பேச வச்சேன்ல? அதான் ஒண்ணு சேந்துருக்காங்க”

“ஓஹோ, உன்னை அப்புறம் பாத்துக்குறேன். ஆனா நான் என் மகன் கிட்ட சொல்ல மாட்டேன்”

“ஏன் கிழவி?”

“எனக்கு வினோதினியை விட சிதம்பரம் பாத்த பொண்ணு தான் டா ரொம்ப பிடிச்சிருக்கு”

“என்ன நீ இப்படி குண்டைத் தூக்கி போடுற?”, என்று அவன் அதிர “பேசாம வேடிக்கை பாரு. இல்லைன்னா உனக்கும் இளவரசிக்கும்  ஜாதகம் சரியில்லைன்னு போலி ஜோசியர் கிட்டச் சொல்லச் சொல்லி இளவரசிக்கு வேற மாப்பிள்ளை பாத்துருவேன்”, என்று பார்வதி சொல்ல உண்மையிலே அரண்டு போனான் கதிர்.

“ஆத்தி, இது என்ன எனக்கே ஆப்பு வைக்கப் பாக்குது?”, என்று எண்ணி வாயை கப்பென்று மூடிக் கொண்டான்.

“இப்ப எதுக்கு பா இல்லாத தாடியை தடவிட்டு இருக்க? கல்யாணம் பண்ணி வைக்கப் போறியா இல்லையா?”, என்று கேட்டான் இன்பா.

“முடியாது டா”

“அப்பா”

“நான் என்ன சொன்னேன் உன் கிட்ட?”

“நான் விரும்புற பொண்ணு கிட்ட சம்மதம் வாங்கிக் கூட்டிட்டு வரச் சொன்ன? அதான் கூட்டிட்டு வந்துட்டேன்”

“என்னைக்குள்ள வரச் சொன்னேன்?”

“அப்பா”

“இதை நீ நேத்தே சொல்லிருந்தா சரின்னு சொல்லிறுப்பேன். இன்னைக்கு சொன்னதுனால இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்”

“அப்பா”, என்று அவன் அதிர “பொண்ணு வீட்ல எல்லாரும் காத்துட்டு இருக்காங்க? எல்லாரும் என்ன வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க? பாமா நிச்சயத் தட்டைத் தூக்கு. எல்லாரும் கிளம்புங்க. கதிர் காரை எடு”, என்று சொல்லி விட்டு வாசல் பக்கம் நடந்தார் சிதம்பரம்.

இன்பா நே என்று விழிக்க அவனைக் கண்டு களுக்கென்று சிரித்தாள் வினோதினி. அவளிடம் இருந்து ஏதோ சத்தம் வரவும் அவளைத் திரும்பிப் பார்த்தான் இன்பா. அவன் திரும்பவும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்.

அவள் கவலையில் அழுகிறாள் என்று எண்ணி “நீ கவலைப் படாதே வினோ. எல்லாம் நான் பாத்துக்குறேன். உன்னையும் என்னையும் யார் பிரிக்கிறான்னு பாப்போம்”, என்று வீராப்பாக பேசினான் இன்பா.

“நீங்க இருக்கும் போது எனக்கு எதுக்கு கவலை வரப் போகுது இன்பா? மாமா வெளிய போயிட்டாங்க. போய் பேசுங்க”, என்று சொன்னாள் வினோதினி.

“வா பேசுவோம்”, என்று சொல்லி அவளை வெளியே அழைத்துச் சென்றான். மற்றவர்களும் வெளியே சென்றார்கள்.

காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!