Skip to content
Post Views: 13,587
அத்தியாயம் 17
Advertisement
“அத்தான் இதெல்லாம் தப்பு. பொண்டாட்டியாவே இருந்தாலும் இப்படி நடந்துக்கக் கூடாது. நம்ம நாட்டுச் சட்டம் சொல்லுது!” என்ற மனைவியைக் கேலியாய்ப் பார்த்தவன், “நானு, நல்ல பையனா பேசணும்னு தான சொன்னேன்? நீயும் நல்லா பொண்ணா என்னனு கேட்டிருந்தா, இதெல்லாம் எதுக்கு.?”
Advertisement
“என்ன பேசப் போறீங்க.?”
Advertisement
“அதுக்கு முன்னாடி, ஒரு கேள்வி.”
Advertisement
அவள் ‘என்ன?’ என்பது போல் பார்க்க, “இப்படி உன்னோட பக்கத்துலயே இருந்தாதான், அத்தான்னு கூப்பிடுவியா? ஏன், எப்பவும் கூப்பிட்டா ஆகாதா.?”
மறுத்துத் தலையசைத்தவள், “ஆகாது!”
“ம்ம்.. கொழுப்பு ஓவரா இருக்கே உனக்கு.”
“நீங்க போட்டதைச் சாப்பிட்டு ஒண்ணும் எனக்குக் கொழுப்பு ஏறல!”
“சரிதான்! அப்ப இரு, உன்னை நல்லா வேலை வாங்கி, அந்தக் கொழுப்பை எல்லாம் கரைக்கிறேனா இல்லையானு பாரு!”
“ஏது.. என்னை நீங்க வேலை வாங்கப் போறீங்களா? உங்களையே அதை எல்லாம் செய்ய வைக்கல, நானு தமிழ் இல்ல!”
“அதான் சேரலோட பொண்டாட்டி ஆகிட்டியே?” எனச் சிரித்தவனை முறைக்க, “இப்படி முறைச்சா, நானு எப்படிப் பாதியில விட்டதை ஆரம்பிக்கிறது?”
குழப்பத்துடன் நோக்கியவள், “என்ன பாதியில விட்டீங்க.?”
“என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மங்கை பேரும் என்னடி.?”
கண்களில் நாணம் குடியேற, அனிச்சையாய் மலர்ந்த புன்னகையை இதழ்களிற்கு உள்ளேயே மறைத்தவளின் காது மடல்களை ஒற்றை விரலால் வருடிய சேரல், “பேரைச் சொல்லுமா..”
“ம்கூம்ம்..”
“ப்ளீஸ்..”
தாழ்ந்திருந்த இமைகளை மேலேற்றி அவனது பார்வையை எதிர்கொண்டவள், “செந்தமிழ்!”
“நான்.?”
“மன்னன் பேரு இளஞ்சேரல்!” எனத் திணறலுடன் மொழிந்தவளின் கண்களின் மீது தனது முதல் முத்திரையைப் பதித்தவன், “விசயம் என்னடி, எனக்குச் சொல்லடி.!”
அவனின் தீண்டலில் நரம்புகளின் ஊடே உச்சி முதல் பாதம் வரை மின்சாரம் பாய்ந்திட, அதன் எதிரொலியாய் மூச்சுக்காற்றுத் தகித்தது தமிழிற்கு.
அவளது முகத்திலும் உடல்மொழியிலும் உள்ளுக்குள் நடக்கும் இளமைப் போராட்டத்தை உணர்ந்தவன்.. மேலும் சீண்டலாய், “விசயம் என்னமா.?”
கண்களை இறுக மூடியவள் இதழ்களையும் பற்களால் கடித்துக் கொண்டு, “ம்கூம்ம்..”
“சொல்லு, தமிழ்மா..”
“அத்தான் வேணாம்..”
“ஏன்.?”
“எதுக்கு இப்படி என்னைப் படுத்துறீங்க? அதுல அப்படி என்ன உங்களுக்குச் சந்தோஷம்? சொல்ல மாட்டேன், சொல்ல முடியாது!”
மெலிதாய்ச் சிரித்தவன், “சொல்லலேனா பரவாயில்ல, என்ன விசயம்னு தெரிஞ்சிடுச்சு இல்ல? அது போதும். என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கேல தமிழ்மா? அப்புறம் ஏன், எப்பவும் ஒரு விலகலோடவே நடந்துக்கிற.?”
அவள் அமைதிக் காக்க, “ஏதாவது கேட்கணுமா.?”
தமிழ் கேள்வியாய்ப் பார்க்க, “நானு நெருங்கி வரும் போதுதான், மறுயோசனை இல்லாம மனசுல இருக்கிறதை கேட்க முடியுதுனு நேத்து சொன்னியே..?”
ஒருநொடி ‘அனைத்தையும் கேட்டு விடலாமா?’ என்று எண்ணியவள், அடுத்த நொடியே அதனை மாற்றிக் கொண்டாள்.
முன்தினம் இதேபோலான தருணத்தில் ஆச்சியைப் பற்றிப் பேசி அவனின் உணர்வுகளிற்குத் தடையிட்டது நினைவில் வர, தன்னைப் புரிந்து கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் நிதானத்துடனும் பக்குவத்துடனும் கையாள்பவனை வதைக்க விரும்பாது, மறுத்துத் தலையசைத்தாள்.
“அப்ப ஓகேவா.?”
என்னதான் மூளை நேராய்ச் சிந்தித்தாலும்.. பிடிவாதம் கொண்ட மனம், “நேத்து ஏன் தூங்கிட்டீங்க? ஆச்சியைப் பத்திப் பேசுனதால கோபமா.?” என இதழ்களின் வழியாய் வினவியிருந்தது.
சின்னதாய்ச் சிரித்தவன், “எதுக்குக் கோபம்.? எனக்கு, உன்மேல கோபம் எல்லாம் வராது தமிழ்மா. அதுவும் இவ்வளவு பக்கத்துல படுத்துக்கிட்டுக் கேட்டா, கோபப்படத்தான் முடியுமா சொல்லு.?”
“ஏன் அப்படி.?”
“எப்படி.?”
“என்மேல, ஏன் கோபம் வராது.?”
“ஏன்னா.. நீயி என்னோட.. ம்ச்ச்.. சொல்லத் தெரியல!” எனச் சில நொடிகள் இடைவெளி விட்டவன், “உன்கூட இருக்கும் போது.. அம்மா, அப்பா, மாமா மூணு பேருக்கூடவும் இருக்கிற மாதிரி தோணும். உன்னோட சிரிப்பு, அம்மாவோட சிரிப்பு மாதிரியே இருக்கு தமிழ்மா. பேச்சு, அப்பாவை ஞாபகப்படுத்தும். அவரும் இப்படிதான், மனசுல எதையும் வச்சுக்காம பேசிடுவாரு. மாமாவைப் பத்திச் சொல்லணுமா? அவரோட வளர்ப்பு நீயி! மனசும் கூட, அப்படியே தான்.”
அவனை வியப்பும் வலியுமாய்ப் பார்த்தவள், கலங்கிய கண்களை மறுபுறம் திருப்ப, “என்ன எமோஷனல் ஆகிட்டியா.?”
“சொல்லுறதையும் சொல்லீட்டு, எமோஷனல் ஆகிட்டியானு கேலி வேற? போங்க அத்தான்!” என அவனைத் தள்ளி விட்டு எழ, “ஏய்.. ஏற்கனவே ஒருநாள் நைட் வேஸ்ட் ஆகிடுச்சு. அதைப் பகல்ல ஈடுகட்டலாம்னு பார்த்தா இப்படி ஓடுற.?”
“ஏது, பகல்லயா.? நோ! என்னால முடியாது.”
“தமிழ்மா ப்ளீஸ்.. ப்ளீஸ்..”
“விளையாடாதீங்க அத்தான்!”
“சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன், விளையாடுறேனு சொல்லுற.?” என்றவன் மனைவியை இழுத்து அணைத்துக் கொள்ள, முதலில் விலக முயற்சித்த தமிழ்.. கணவனது மென்மையான இதழ் ஒற்றல்களில் அமைதியானாள்.
சற்றே தயக்கமும் பயமும் அவளைத் திணற வைக்க, ஆசையும் உரிமையும் அவனை முன்னேற்றிச் சென்றது.
பயமானது, அவனின் கனிவான பார்வையில் பனியாய் உருகிட.. தயக்கமோ, கணவனது தன்மையான நடவடிக்கையில் தானாய் தாழ்திறந்து கொண்டது.
‘பிடிச்சிருக்கா?’ , ‘ஓகேவா?’ , ‘வலிச்சா, சொல்லு தமிழ்மா.’ என்பன போன்ற அவ்வப்போதான அவனின் மெல்லினங்கள், உண்மையில் பெண்மையை வல்லினமாய் மாற்றியது. இடையினம் இருவரையும் இணைத்திட, உயிர் மெய்யில் கரைந்தது.
கார் காலமாம் கார்த்திகை. கருமேகங்கள் கனம் தாங்காது சிந்திச் சிதறி களைத்து ஓய்ந்து சரம் சரமாய் இறங்கிட.. தரணி, நீரின் குளுமையில் சிலிர்த்து நின்றது.
கீதா நான்கைந்து முறை தம்பிக்கும் அவனது மனையாளிற்கும் அழைப்பு விடுத்துத் தோற்றிருந்தாள்.
மகளைக் கண்ட பரமசிவம், “மழை பெய்யிதுலமா. நின்னதும் வருவாங்க. எதுக்கு இத்தனை தடவை ஃபோன் போடுற.?”
“ரெண்டு மணிக்கு வர்றேன்னு சொன்னான். இப்ப நாலாச்சு. இந்நேரம் வரைக்கும் சாப்பிடாம இருந்தா, உடம்பு என்னத்துக்கு ஆகும்.? எதுவும் சாப்பிட்டு இருந்தாங்கனா, பரவாயில்ல. ஃபோனை எடுத்து ஒரு வார்த்தை சொன்னா தான் என்னவாம் இவன்? தமிழும் எடுக்க மாட்டிறா.”
மூத்தவர் சிரித்து, “அவன் சாப்பிடாம இருந்தாலும் இருப்பான், அந்தப் பிள்ளயோட வயிறைக் காய விடமாட்டான். கோயிலுக்குப் போயிட்டு வந்தாங்க இல்ல? அந்த அசதியில தூங்குவாங்களா இருக்கும்!”
“ம்ம்.. மழையும் நிக்கிற மாதிரி தெரியல. நானே போயி, சாப்பாடைக் கொடுத்திட்டு வந்திடவா அப்பா.?”
“கொஞ்சம் பொறு பார்க்கலாம், மழை நிக்கிதான்னு. இல்லேனா நான் போறேன்!” என்றிட, அதேநேரம் வாயிலில் நின்றபடி மழையைப் பார்த்திருந்தான் சேரல்.
குழலில் இருந்து சொட்டிய நீரை துவாலையில் துடைத்தபடி வெளியே வந்த தமிழ்.. மென்தூரலைக் கண்டு, “என்ன அத்தான், மழை பெய்யிது?”
இல்லத்தின் முன்பு ஆறு போல் ஓடும் நீரைப் பார்த்தவன், “ம்ம்.. ரொம்ப நேரமா பெய்யிது போல. சரி, ஃபோனை எடுத்திட்டு வா தமிழ்மா. அக்கா காத்திருக்கும்.”
எடுத்து வந்து தந்தவள், “அண்ணி, நம்ம ரெண்டு பேருக்குமே கால் பண்ணி இருக்காங்க அத்தான். மழை சத்தத்துல கேட்கல போல?”
“மழையே பெய்யலனாலும் கேட்டிருக்காது!”
அவள் புரியாமல் பார்க்க, “மழை சத்தம் மட்டும், கேட்டுச்சா நமக்கு? இதை எல்லாம், கவனிக்கிற நிலைமையிலயா இருந்தோம்.?”
முகம் வெட்கத்தில் சிவந்திட.. அதற்கு முற்றிலும் மாறாய் கணவனை முறைத்தவள், “ரொம்ப அசிங்கமா பேசுறீங்க அத்தான்.”
“ஏது, இது அசிங்கமா.? உன்கூட எல்லாம் குடும்பம் நடத்துறது ரொம்பக் கஷ்டம் போலயே.?”
“அப்படிக் கஷ்டப்பட்டு ஒண்ணும், நீங்க என்னோட குடும்பம் நடத்த வேணாம்.”
“அது ஏன், தமிழ்மா? உனக்குப் பொசுக்குப் பொசுக்குனு கோபம் வருது.? மூக்குக்கு மேலயே அதை வச்சிருப்பியோ? அதோட எஃபெக்ட்டால, கண்ணுல அனல் அடிக்கிது. நாக்குல இருந்து, கத்தியா வார்த்தைக் கொட்டுது!”
அவள் எதுவும் உரைக்காமல் முறைத்து விட்டுச் செல்ல.. சிரித்தபடி தமக்கைக்கு அழைத்தவன், “அக்கா.?”
“அக்கா தான்டா நானு. ஞாபகம் இருக்கா உனக்கு.? எத்தனை தடவை ஃபோன் போட்டேன்? பதிலையே காணோம். நீயும் உன்னோட பொண்டாட்டியும் அப்படி என்னடா செஞ்சீங்க.?”
“ஐயோ அக்கா.. நானு அவளைக் கூப்பிட்டேன், ‘நமக்காக வெயிட் பண்ணுவாங்க, வா போகலாம்’னு. உங்க அக்கா சமைக்கிறது, அப்படி ஒண்ணும் நல்லா இல்ல. வாயிலயே வைக்க முடியல. அந்தக் கேவலமான சோறை, அப்படிப் போயி சாப்பிடலேனா என்ன.? கடையில நல்ல சாப்பாடா வாங்கிச் சாப்பிடலாம்னு சொல்லிட்டா அக்கா.”
சற்று தள்ளி நின்றிருந்த தமிழ் இவனின் பேச்சில் அதிர்ந்தாள். அவசரமாய் ஓடி வந்தவள் கைப்பேசியைப் பறித்து, “அச்சோ! அண்ணி, நானு அப்படி எல்லாம் எதுவும் சொல்லல. அவரா தான் சொல்லுறாரு!”
“நிஜமாவா தமிழ்.?”
“நிஜமா தான் அண்ணி.”
“சரி, ஏன் வரல இவ்வளவு நேரமா.?”
சற்றே திணறியவள், “தூங்கிட்டேன்.”
“இன்னும் சாப்பிடலயா.?”
“இல்ல.”
“வீட்டுல பழம் ஏதாவது இருக்கும். இப்போதைக்குச் சாப்பிடு. மழை நிக்கவும், நானு அப்பாக்கிட்ட கொடுத்து விடுறேன்.”
“ம்ம்..”
“என்னாச்சு, சத்தத்தையே காணோம்.”
“இல்ல. அவரு சொன்னதை வச்சு, எனைய தப்பா எதுவும் நினைச்சிட்டீங்களோனு.”
“அவன் எங்க தமிழ்.?”
“பக்கத்துல..” என்றவள் அத்திசையில் திரும்பிப் பார்த்து கணவனைக் காணாது, உள்ளே சென்றாள்.
எதிர்புறம் கீதா, “என்ன இல்லையா.?”
“ஆமா அண்ணி, எங்க போனாருனு தெரியல.”
“அடுப்படியில பாரு. என்னத்தையாவது வயித்துக்குப் போட்டு அரைச்சுக்கிட்டு இருப்பான். சாப்பிட உனக்கும் ரெடியாகி இருக்கும்.”
செந்தமிழ் சமையலறை சென்று பார்க்க, அடுப்பில் எதையோ வைத்துக் கிண்டிக் கொண்டிருந்தான் சேரல். இடக்கையில் நிறைந்திருந்த மசாலா கடலைகள் ஒவ்வொன்றாய் வாய் வழியே வயிற்றிற்குள் சென்று கொண்டிருந்தது.
“ஏதோ செய்யிறாரு அண்ணி.”
“சரிமா..” என்றவள் இணைப்பைத் துண்டிக்கச் செல்ல கைப்பேசியை வாங்கிய சேரல் ஒலிப்பெருக்கிக்கு மாற்றி, “நீ எல்லாம் என்ன நாத்தனாரு.?”
“ஏன்டா.?”
“உன்னோட சமையலை என்ன வார்த்தைச் சொல்லி இருக்கா, என்னோட பொண்டாட்டி? உடனே கத்திக் கம்போட கிளம்பி வந்திருக்க வேண்டாமா.?”
“எதுக்குடா தம்பி, உனைய அடிக்கவா.?”
“உனக்குச் சப்போர்ட்டா பேசுறேன்ல, என்னை அடிக்கத்தான் வேணும்.!”
“நல்லா மிதிக்கணும்டா. அந்தப் பிள்ள பயந்திடுச்சு, நீயி செஞ்ச வேலையில.”
“நான் என்ன செஞ்சேன்.?”
“நீயி இருக்கியே!” எனச் சலித்துக் கொண்ட கீதா, “அவக்கிட்ட கொடு!”
“ஸ்பீக்கர்ல தான் இருக்கு, பேசு!”
“தமிழ், அவன் சும்மா உன்னை வம்பு இழுக்கிறதுக்காக அப்படிப் பேசி இருக்கான்மா. நீயி எதுவும் நினைச்சிக்காத. அப்புறம் ஒரு விசயம்.. உன்னோட வீட்டுக்காரன் யாரைப் பத்தியும் உன்கிட்ட என்ன சொன்னாலும் சரி, அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்திடாத. அவங்கக்கிட்ட முதல்ல பேசிப் பாரு.”
புரியாது திகைத்த தமிழ், “ஏன் அண்ணி.?”
“சண்டை முடிஞ்சு விடுறதுலயும், நம்புற மாதிரியே பொய்ச் சொல்லுறதுலயும் கெட்டிக் காரன் அவன்! நிஜத்துக்குப் பேசுறானா, விளையாட்டா சொல்லுறானானு தெரிஞ்சிக்கிறது ரொம்பச் சிரமம்!” என்று அவள் பேச்சை முடித்துக் கொள்ள, கணவனை நோக்கினாள்.
“கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டிவிட்டு கண்சிரிக்கும் சுந்தரியே..
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணை கட்டிவைத்த பைங்கிளியே..” எனப் பாடியவாறு கண்சிமிட்டிச் சிரித்தவனை ‘என்னதான் செய்யலாம்.?’ எனச் சிந்தித்தவளின் இரத்த அழுத்தம் ஏகத்திற்கும் ஏறி இறங்கியது.
error: Content is protected !!