Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – 20

அத்தியாயம் 20

 



Advertisement

Advertisement

Advertisement

இரவின் அடர்த்தியில் தேய்ந்து கொண்டிருந்தான் சந்திரன். அவனோடு இணைந்து இளஞ்சேரலும்.

Advertisement

ஆறரை மணியைப் போல் இல்லத்தில் இருந்து கிளம்பியவன் தான், மணி எட்டைக் கடந்த பின்பும் இன்னும் செல்லவில்லை. இரண்டு முறை கைப்பேசியில் அழைப்பு விடுத்து விட்டாள் செந்தமிழ். மாமியார் முறைக்கு, சவிதாவும் ஒருதடவை அழைத்திருந்தார். இருவருக்குமே பதில் உரைக்கவில்லை அவன்.

“அன்பே ஓடி வா.. அன்பால் கூட வா..

ஓ பைங்கிளி…

நிதமும் என்னைத் தொட்டு..

என்னைத் தொட்டு.. நெஞ்சைத் தொட்டு..

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மங்கை பேரும் என்னடி.?”

சுவர்ண லதாவின் காந்த வலையில் துவங்கி பாலசுப்ரமணியனின் குரலோடு, மீண்டும் ஒலித்தது கைப்பேசி.

திரையில் பெண் அழைப்பின் போது அவன் எடுத்த அவளின் புகைப்படத்தோடு பெயருமே ‘Tamizhma’வாக மிளிர்ந்தது. இதற்கு மேலும் பதில் உரைக்காமல் இருக்க இயலாது என்பதால் பேசினான்.

“ஹலோ..”

“எங்க போனீங்க அத்தான்? ரெண்டு தடவைக் கால் பண்ணியும் ரிப்ளை பண்ணல? எங்க இருக்கீங்க இப்ப.?”

வரிசையாய் வினாக்களை அடுக்கியவளின் குரலில் தன்மீதான உண்மையான அக்கறையை உணர்ந்தவன்.. மனதில் இருந்த வெறுமையை ஓரமாய் ஒதுக்கி விட்டு, “பக்கத்துல தான். வீட்டுல இருந்து, என்ன செய்யப் போறேன்? அதான் ‘பேசாம நடப்போமே. தூங்குற நேரத்துக்குப் போனா, சாப்பிட்டுப் படுக்க சரியா இருக்கும்’னு நினைச்சு சுத்திக்கிட்டு இருக்கேன்.”‌ எனப் பதிலளித்தான்.

“ஆச்சி, அப்படிப் பேசுனதால வருத்தப்பட்டுப் போயிட்டீங்களோனு நினைச்சேன்.”

அவன் வலிந்து சிரித்து, “அவங்க சொல்லுற எதுவும், எனைய எந்த விதத்துலயும் பாதிக்காது.‌ அதுனால நீயி அதைப்பத்தி எல்லாம் யோசிக்காத.”

“சரி, ஏன் ஃபோன் எடுக்கல?”

“சைலண்ட்ல வச்சிருந்தேன்.”

“உங்கக்கூட, நாலு நாள் முழுசா இருந்திருக்கேன். இது நம்புற மாதிரி இல்ல.”

“சரி, நம்பலேனா விடு!”

“அசால்டா சொல்லுறீங்க? என்னை டென்ஷன் பண்ணுறதுல, உங்களுக்கு என்ன அவ்வளவு சந்தோஷம்.?”

அவன் அமைதியாய் இருக்க, “வீட்டுக்கு வாங்க!” என்று அழைத்தாள் தமிழ்.

“ம்ம்..‌” என இணைப்பைத் துண்டித்தவன், ஒரு பெருமூச்சை விட்டபடிச் சென்றான்.

அனைவருக்கும், இரவு உணவைப் பரிமாறினார் சவிதா.‌ பேச்சு வார்த்தை என்று, எதுவும் பெரியதாக இல்லை. அமைதியாகவே உணவை முடித்தனர்.

அதன்பின்னர் கோபாலன், அவனது பணியைப் பற்றி வினவ, பட்டும் படாமல் பதிலளித்துக் கொண்டிருந்தான். அவளும் கூட‌‌, ஆச்சியிடம் பேசிப் பொழுதைக் கழித்தாள்.

அறிவுரை என்ற பெயரில் அவர் நிறைய உரைக்க, ‘ம்ம்.’ கொட்டி அனைத்திற்கும் தலையசைத்தாள். ஆனால் அவை எல்லாம் உள்சென்று நினைவுகளில் பதிந்ததா, அன்றிக் காதோடு நின்று விட்டதா என்று அவள் மட்டுமே அறிவாள்.

கணவன் உறங்கியதாய் நினைத்துப் பேசிவிட்டாள் தமிழ். சவிதாவுமே அவளைச் சமாதானம் செய்வதற்காக,  பதிலளித்து விட்டார். அன்னைக்கும் மகளிற்கும் இடையே உணர்வுப் பகிர்தல் என்பது இயல்பானது. அதனுள் ஒரு ஆண் நுழைதல், நாகரிகம் அற்றது.

எதையுமே வெளிப்படையாய் எவரிடமும் பகிர்ந்து பழக்கம் இல்லாத சேரல், இந்த விசயத்திலும் அதையே தான் பின்பற்றினான்.‌

திருமணம் முடிந்து, மனைவியுடனான வாழ்வும் துவங்கிவிட்டது‌‌. கணவனது தொழிலைப் பிடிக்கவில்லை எனினும், அவனைப் பிடித்திருக்கிறது தமிழிற்கு. அந்தப் பிடித்தம் ஒன்றே, ‌இருவரது உறவிற்கான அச்சாரம். வாழ்க்கைப் பயணத்தின், வலிமையான முதல் அடி.

அவள் தன்னால் இயன்ற அளவிற்கு, அவனோடு வாழ நினைத்தாள். அதை உணர்ந்து கொண்ட சேரலும் கூட,‌ அதையே செய்ய முனைந்தான்.

நேற்று, இன்று,‌ நாளை, உறவுகள், தங்களுக்கு இடையேயான பிடித்தம், பிணைப்பு என அனைத்தையும் சிந்தித்தே இந்த முடிவிற்கு வந்தான்.‌

ஆனால் ‘சிந்திக்க மட்டுமே தெரிந்த மூளையின் எண்ணங்களை, உணர்வுப் பூர்வமாய் அணுகும் மனம் ஏற்க வேண்டுமே? அதற்குத் தகுந்தாற் போல் செயலாற்ற வேண்டுமே.?’

தமிழின் அறையில் படுத்திருந்தனர் இருவரும். திருமணத்திற்கு முன்பு அவள் ஒருவள் மட்டும்தான்‌ என்பதால், சிறிய கட்டில் தான் பயன்படுத்தி வந்தாள்.‌ சவிதா இவர்களது வருகையால், பெரியதாய் மாற்றி விடலாம் என்று தான் ‌எண்ணினார்.‌

ஆனால் அவன் தான், “நான் வந்தா, அதிகமா ஒண்ணு ரெண்டு நாள் தங்குவேனா? எதுக்கு அத்தைத் தேவையில்லாத செலவு? இருக்கிறது, அப்படியே இருக்கட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்!‌” என்று உரைத்து மறுத்து விட்டான்.‌ உண்மையில் இருவருக்குமான உடல் மற்றும் மனதளவிலான நெருக்கத்திற்கு, அதுவே போதும் என்றே நினைத்திருந்தான்.

நினைப்பது அனைத்தும் நடப்பது இல்லையே.? இருவரது கருத்துக்குமான வேறுபாடு, அகம் புறம்‌ என இரண்டிலுமே பெரும் இடைவெளியை ஏற்படுத்தி இருந்தது. அந்த இடைவெளியானது, தற்போது கட்டிலின் அகலத்தை விட அதிகம்.

ஒரு கணவனாய், தமிழின் அருகில் செல்வதற்குக் கூட அவனின் மனம் ஒப்பவில்லை. ‘நாத்தம்‌!’ என்ற சொல், தொழிலிற்கு மட்டும் இல்லாததாய், அதனோடு இணைந்த தன்னையும் சேர்த்துச் சொல்லப் பட்டதாய் உணர்ந்தான்.

அவனின் தீண்டலில் அவளின் முகம் லேசாய் சுருங்கினாலும், மனமானது,‌ ‘பிடிக்கலயோ.? அதுனால தான் இப்படி நடந்துக்கிறாளா.?‌’ என அனிச்சையாய்ச் சிந்திக்கத் துவங்கிவிடும்.

அவனைப் பொறுத்தவரை.. மனைவிக்குப் பிடித்தமில்லை என்பது, கணவனால் செலுத்தப்படும் வன்முறையின் துவக்கம். அதைச் செய்வதற்கு ஒரு ஆண்மகனாய் துணிவில்லை அவனிடம். எதிரில் நிற்பவரை எதிர்க்கலாம். அன்புடன் உடலைப் பகிர்ந்து உணர்வை நிறைக்கும் துணையை எதிர்ப்பதெல்லாம், தன்னைத் தானே கொன்று கூறு போடுவதற்குச் சமம்.

ஆனால் மனதில் ஒன்றை வைத்து, வெளியில் இயல்பாய் இருப்பதைப் போலான முகமூடியுடன் வாழ்வைக் கடத்தி விட இயலாதே?

இளமையின் வேகத்திற்கு, நிதானம் கிடையாது.‌ ஹார்மோன்கள் உணர்வுகளை ஆட்டுவிக்கும் போது.. சரி தவறு, பிடித்தம் பிடித்தமற்றது, சினம் இயலாமை என்பதைப் பற்றி எல்லாம் மூளை மனம் இரண்டுமே சிந்திக்காது‌. அதற்கு வேண்டியது எல்லாம், உடல் நிறைவு மட்டுமே! அதுவும் கணவன் மனைவி உறவுக்கு இடையே உரிமையும் இருக்கும் பொழுது, கட்டுப்பாடு என்பது எல்லாம் வெறும் கண்கட்டி வித்தைதான்.

இருப்பது இல்லாததாய்த் தோன்றும். இல்லாதது, இருப்பதாய்க் காட்சி மாற்றம் அடையும். உடல் தனது தேவைக்கு ஏற்றபடி உணர்வுகளை ஆட்டுவிக்கும். இதுவே நிதர்சனம்.

அவள் சொன்ன வார்த்தை, இன்று அவனை விலக்கி வைத்து விட்டது‌. தமிழ் மேலேயும், சேரல் கீழேயும் படுத்திருந்தனர். இங்குப் பெரியவர்கள் பார்த்துக் கேட்டால், கட்டிலைக் காரணமாய்ச் சொல்லலாம். ஆனால் ஆதிக்குடிலில்.?

நான்கைந்து நாட்களோ, ஒரு வாரமோ சென்று.. “ஏன் அத்தான், விலகிப் போறீங்க.?” என்று அவளே கேட்டால், என்ன பதில் உரைப்பது.?

“நீதான் நாத்தம் அடிக்கிதுனு சொன்னியே.?”‌ எனக் கேட்க, ஒரு நொடி போதும். ஆனால் அதற்குப் பின்பு..?

‘என்ன செய்வது? தன் மனதிற்கு எப்படிச் சமாதானம் சொல்வது? தமிழிற்கு எவ்வாறு புரிய வைப்பது? புரிந்தாலும் அவள் மனதார ஏற்க வேண்டும், சகித்துக் கொள்ளும் நிலையில் நிறுத்தி விடக் கூடாது‌‌. அதற்கு என்ன வழி.?’ என்று சிந்தித்தே, இரவு உறக்கத்தைத் தொலைத்தான் சேரல்.

பொழுது புலர்ந்தது.

“அத்தான், எழுந்திரிங்க! டீ குடிங்க.” என அவள்தான் எழுப்பினாள்.

‘வா, போ’ என்று பேசியது எல்லாம் திருமணத் தினத்தன்று மட்டும் தான். மறுநாள் இருந்தே அத்தான் என்று தான் அழைக்கிறாள். பிடித்தம் இன்றி, அது இயலுமா.?

பெருங்காதல் கொண்ட மனம் மனைவிக்குச் சாதகமாய் எண்ணியபடியே எழ, கண்களிற்கு விருந்தளித்தாள் செந்தமிழ். நாராயணியின் கட்டளையில் அதிகாலையே எழுந்து குளித்து விட்டாள். புதிய புடவை அணிந்திருந்தாள்.

“இன்னைக்கு வெள்ளிக் கிழமைல? அம்மா.. நம்ம ரெண்டு பேரையும் கோவிலுக்குப் போயிட்டு வர சொன்னாங்க. எழுந்திரிங்க.” என்றுவிட்டு நகர்ந்தாள். ஆசையும் உறவும், அவளின் இழுப்பிற்குச் செல்ல வைத்தது.

“நீங்களும் வாங்க அத்தை.” என்று அழைத்திட, “நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க‍, சேரா. இன்னொரு நாளைக்கு எல்லாரும் சேர்ந்து போகலாம்!” என மறுத்து விட்டார் சவிதா. கோபாலன் வயதைக் காரணம் காட்டி வரவில்லை என்றிட, நாராயணி அவனது முகத்தைக் கூடக் காணாது அறையிலேயே இருந்து கொண்டார்.

கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வர, சேரலின் கைப்பேசி ஒலித்தது. வாடிக்கையாளர் ஒருவர் அழைத்திருந்தார், மொத்தக் கறிக்காக.

“எத்தனை கிலோ அண்ணே வேணும்.?”

“பதினஞ்சு கிலோ சேரா. நாளை காலையில வெள்ளனா நாலு மணிக்குக் கிடைச்சா, சமைக்கிறதுக்கு வசதியா இருக்கும்.”

“சரிங்க‌‌ அண்ணே, வாங்கிக்கங்க.”

“பிரியாணிக்கு பத்து கிலோ‌, கொஞ்சம் பெரிய பீஸா போட்டுடு.‌ மீதி குழம்புக்கு, எலும்புக் கறியா வேணும். இருபது கிலோ கோழிப்பா. எவ்வளவுனு கணக்குப் பார்த்துச் சொல்லீடு. பணத்தை அக்கௌண்ட்ல டிரான்ஸ்பர் பண்ணீடுறேன்.”

“காசை எல்லாம், அப்புறம் பார்த்துக்கலாம் அண்ணே.‌ நீங்க காலையில வாங்க, கறி ரெடியா இருக்கும்!” என்றவன், உடனே பரமசிவத்திற்கு அழைத்து விபரம் உரைத்தான்.‌

“சரி, நானு ஆடுகளைப் பார்க்கிறேன். ஆட்வான்ஸ் கொடுத்து வச்சதை எல்லாம் தூக்கிட்டு வரச் சொல்லீடுறேன் சேரா.”

“எதுவும் பெரிய கிடாவா இருந்தாலும் பாருங்க பெரியப்பா‌. வளர்ப்பை விசாரிச்சுக்கோங்க. கறி, கெட்டியா இருக்கணும். வேக்காடுக்கு நேரம் ஆனாலும் பரவாயில்ல, சக்கையா இருந்திடக் கூடாது!”

“சரிப்பா..”‌ என்றவர் பட்டியின் பக்கம் ஆடுகளைப் பார்க்கச் செல்ல, தமிழ் கணவனைக் கேள்வியாய்ப் பார்த்தாள்.

“என்ன அத்தான்?”

“உடனே ஊருக்குப் போகணும்.”

சற்றே திகைத்தவள், “இப்பவா? நேத்து தான வந்தோம்?”

“நீயி வேணும்னா ரெண்டு மூணு நாளைக்கு இருந்திட்டு வா. ஆனா, நானு போயாகணும். தேடி வர்ற வியாபாரத்தை வேணாம்னு சொல்லீட்டா, நாளப்பின்ன மத்தவங்களும் வர்றதுக்கு யோசனை செய்யிவாங்க. அதுனால, உனைய வீட்டுல விட்டுட்டு அப்படியே கிளம்புறேன்.‌”

“ஆனா அத்தான்..” என அவள் பேச முயல.. அதற்காக வாய்ப்பைக் கொடாது, “நேரமாச்சு!” என்றுவிட்டு வேக எட்டுகளில் முன்னே சென்றான்.

எப்பொழுதுமே சூழல்களைத் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொள்பவன் சேரல். மனைவியின் விசயத்தில் ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்ற சிந்தனையிலேயே இருந்தவனிற்கு, இந்த மொத்தக் கறிக்கான அழைப்பு, நல் வாய்ப்பாய்த் தோன்றியது.

பிரச்சனைகளிற்கு உள்ளேயே இருந்து கொண்டு, தீர்வு காண்பது என்பது சற்றுச் சிரமம் தான். அதிலிருந்து விலகித் தேடும் பொழுது, ஒன்று என்ன ஓராயிரம் தீர்வுகள் தென்படலாம்.

தற்போது சேரலின் பிரச்சனை, தமிழின் உணர்வுகள். அதனால் அவளிடம் இருந்தே, தற்காலிமாய்த் தள்ளி நிற்கும் முடிவிற்கு வந்தான்.

இல்லத்திற்கு வந்ததும் பெரியவர்களிடம் உரைக்க.. கோபாலன், “என்னப்பா இது.?‌ வந்து உருப்படியா ஒரு நாள் கூட இருக்காம, இப்படிக் கிளம்புறேன்னு சொல்லுற.?”‌ என்று மனத்தாங்கலாய் வினவ, “தப்பா நினைக்காதீங்க தாத்தா. கடைப் போட்ட ஏழு வருசத்துல, என்னைத் தேடி வந்தவங்களுக்கு இல்லைன்ற பதில நானு கொடுத்ததே இல்ல.‌

கடைய முடிச்சதுக்கு அப்புறம் எவராவது கேட்டு வந்தாக்கூட, தெரிஞ்சவங்கக்கிட்ட காசுக்காவது வாங்கித் தந்திடுவேன். தொழில்ல என்னோட பேருக்குனு ஒரு மதிப்பும், நானு சொல்லுற சொல்லுல நம்பிக்கையும் வச்சிருக்காங்க ஜனங்க. அதுதான் மூலதனம்! அந்த மூலம், பலவீனமாகுறதை என்னைக்கும் அனுமதிக்க மாட்டேன்!” எனத் தீர்மானமாய் உரைத்துவிட, பேசலாம் என்று நினைத்த சவிதாவிற்கு அதன்பின்னர் வாய் வரவில்லை.

“நல்ல மாப்ளையைத் தேடிப் பிடிச்சீங்க?” என நாராயணி முணுமுணுக்க.‌. அதைச் செவியில் ஏற்காதவன், “அத்தை, தமிழ் ரெண்டு நாளைக்கு இங்கேயே இருக்கட்டும்!” என்றான்.

“மறுவீடுக்கு வந்திட்டு, அவளை விட்டுட்டுப் போறேன்ற? இது முறை இல்ல சேரா.”

“இல்ல அத்தை.‌ ஆச்சியும் வருத்தப்படுறாங்க, அவ இருக்கட்டும். அதுவும் இல்லாம,‌ நானு மொத்தக்கறி கொடுக்கிறதுக்கு ராத்திரி ஒரு மணிக்கு எல்லாம் எழுந்திரிச்சு போயிடுவேன். அடுத்து, ஞாயித்துக்கிழமை வியாபாரம்.‌ காலையில நாலு மணிக்குப் போனா, வீடு திரும்ப மதியம் மூணு மணிக்கு மேல ஆகும். அங்க வந்தாலும், அவ தனியா தான் இருக்கணும்.‌

இதுவரை, தமிழுக்குத் தனியா இருந்து பழக்கமும் இல்ல. அதுனால இங்கேயே இருக்கட்டும். திங்கள்,‌ செவ்வாய் போல வந்து கூட்டிட்டுப் போறேன்!” என்றவன், மனைவியிடமும் அதையே மீண்டும் ஒப்புவித்து விட்டுக் கிளம்பிச் சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!