Skip to content
Post Views: 12,732
அத்தியாயம் 24
Advertisement
மணி ஏழரையைக் கடந்துவிட்டது. தமிழ் இன்னும் எழவில்லை. அவனிற்கோ, தூக்கம் தூர ஓடிப் போனது. வழக்கமான நேரத்திற்கே விழித்தவன், என்ன செய்வதென்று புரியாமல் படுக்கையில் புரண்டு நிமிடங்களைக் கடத்திக் கொண்டிருந்தான்.
Advertisement
அன்று வெள்ளிக்கிழமை என்பதால், கடை விடுமுறை. அதனால் காலையில் பணி என்று ஏதும் இல்லை.
Advertisement
திரும்பிப் படுக்கும் பொழுது மனையாளின் மீது ஆடவனின் கரங்கள் அழுத்தமாய் உரசிட.. “ப்ச்ச்.. இடிக்காம படேன்!” எனச் சலித்துக் கொண்டு அவள் தள்ளிப் படுக்க, இவனிற்குக் கடுப்பானது, ‘தான் விழித்திருக்கும் பொழுது, அவள் மட்டும் உறங்குவதா?’ என்று.
Advertisement
முதல்நாள் இரவின் மிச்சமாய் அவனுள் மறைந்திருந்த குறும்புக் காரன் எட்டிப்பார்க்க.. நெருங்கிப் படுத்தவன் அவளின் மூக்குத் துவாரத்தில் சுண்டு விரலை நுழைக்க, அதுவோ வெளியிலேயே நின்றது.
“இதென்ன இம்புட்டுக் குட்டியா இருக்கு மூக்கு?” என அடுத்ததாய்க் காதிற்குள் நுழைக்க, “ஐயோ! ச்சை இம்சை பிடிச்சவனே!” என்று சேரலின் கரத்தினைத் தட்டி விட்டு, போர்வையை இழுத்து முகத்தோடு மூடிக் கொண்டாள் தமிழ். ஆடவனின் விளையாட்டில், பெண்ணவளின் மரியாதை காற்றில் பறந்திட, தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
“அடிப்பாவி! கொஞ்சமாது புருஷன் மேல அக்கறை இருக்கா உனக்கு?” எனப் போர்வையை விலக்க, “என்னத்த பெரிய அக்கறை?” என்றவளின் இமைகள் மட்டும் இன்னும் பிரியவில்லை.
“காலையில வெள்ளனா எழுந்திருச்சோம். குளிச்சு, சாமி கும்பிட்டோம். டீ போட்டுக் கொண்டு வந்து, புருஷன் காலைத் தொட்டு கும்பிட்டு அவனை எழுப்புனோம்! என்ன வேணும்னு கேட்டுச் சமைச்சுக் கொடுப்போம். இதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீ எல்லாம் என்ன பொண்ணோ?”
“ஏது, காலைத் தொட்டுக் கும்பிடணுமா? சரி, இந்தா கும்பிடு!” என்று சற்றே உடலைத் திருப்பியவள் அவனின் கைகளிற்கு வாகாய் தனது காலை நீட்ட, “கொழுப்புக் கொழுப்பு! நானு உன்னோட காலைத் தொட்டுக் கும்பிடவா.?” என இடக்கையால் அவளின் இரு முழங்காலிற்குக் கீழே ஒன்றாய் இறுக்கிப் பிடித்தவன், வலக்கையால் இடையில் கிச்சுக்கிச்சு மூட்டி, “ஒரு மனுஷனுக்கு வாழ்க்கையில தும்மல், விக்கல், இருமல்.. இப்படி எது வேணும்னாலும் வரலாம். ஆனா நக்கல் மட்டும் வரக்கூடாது. அதுவும் என்கிட்ட, உனக்கு வரவே கூடாது!” என்றிட, அவளோ கூச்சத்தில் உடலை நெளித்துத் தூண்டிலில் சிக்கிய மீனாய் துள்ளிக் கொண்டிருந்தாள்.
“விடு.. விடு.. என்னை. ஐயோ முடியல. விடேன்!” என உடல் கூசிட சிரிப்பை அடக்க முடியாமல் தொண்டை அடைக்க உரைத்தவளைக் கண்டு சிரித்த சேரல், தனது பிடியின் இறுக்கத்தை மேலும் கூட்டினான்.
“இனிமே.. மரியாதை இல்லாம பேசுவியா.?”
“அப்படித்தான் பேசுவேன்!”
அவன் கூச்சமூட்டுவதை அதிகரிக்க, “ஐயோ முடியல. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிது..”
“மரியாதையா வாங்க போங்கனு பேசுவேன்னு சொல்லு! அப்பதான் விடுவேன்!”
“சரி, மரியாதையா பேசுறேன்!”
“புருஷன் சொல்லுறதைக் கேட்பியா.?”
“நான் எதுக்குக் கேட்கணும்.?”
“அப்ப, கேட்க மாட்ட.?” என்றவன் பெண்ணவளின் இடையில் பற்களைப் பதிக்க, “ஹா.. அச்சோ.. கேட்கிறேன் கேட்கிறேன்.”
“ஆனா ஊன்னா, சண்டைக்கு நிக்காம நல்லபிள்ளயா இருப்பியா.?”
“அநியாயம் செய்யிற நீயி!”
“சொல்லு, நல்லபிள்ளையா இருப்பியா.?” என்றபடி அவளின் பாதத்தில் நகத்தால் சுரண்டிட, “அச்சோ.. அச்சோ.. ஏய்.. இம்சை விட்டுத் தொலை என்னை!” எனக் கணவனது கைகளில் படாதபாடு பட்டவள், அங்கும் இங்கும் அசைந்ததில் உடை முழுவதும் கசங்கி, ஏறுக்கு மாறாய் விலகி இருந்தது.
“சரினு சொல்லு!”
அதிகப்படியாய் மூச்சு வாங்கியவள் சமாளிக்க இயலாது, “சரி சரி.”
“என்ன சரி?”
“சண்டை போடாம, நல்லபிள்ளயா இருப்பேன்.”
“எங்க, அத்தான்னு சொல்லு பார்ப்போம்!”
“சரிங்க அத்தான்.. விடுங்க என்னை. மூச்சுவிட முடியல, தொண்டையும் வயிறும் வலிக்கிது!” என்றிட, “சரி, பிழைச்சு போ. பெரிய மனசு பண்ணி, உன்னை விட்டுடுறேன்!” என்று தனது பிடியைத் தளர்த்தினான்.
மெல்ல எழுந்தவள், “எருமைய அத்தான்னு கூப்பிடணுமா? அதை நானா தான் கூப்பிடுவேன், நீயி சொல்லுறதுக்காக எல்லாம் கூப்பிட முடியாது. சண்டைப் போட கூடாதாம், அப்ப நீயி என்ன செஞ்சாலும் கம்முனு இருக்கணுமா.? நல்ல பிள்ளையானா எப்படி? அப்ப, இவ்வளவு நாளா கெட்டவளா இருந்தேனா.? மரியாதையா வேற பேசணுமாம்! எவ்வளவு கொழுப்பு இருக்கணும் உனக்கு? கையையும் காலையும் லாக் பண்ணிக்கிட்டா, பேரம் பேசுற? உன்னை!” என்றவள் கணவனது கால்களின் மீது நான்கைந்து முறை ஏறி இறங்கி குதித்து விளையாடிவிட்டுச் செல்ல, “ஐயோ, காலை உடைச்சிட்டாளே!” என அவன் அலறியது, இல்லத்தின் வாயில் வரை கேட்டது.
தமிழ் குளித்துத் தயாராகி வர.. இல்லத்தின் பின்புறம் இரண்டு வாளிகளை எடுத்து வைத்து பணி செய்து கொண்டிருந்தான்.
“என்ன செய்யிறீங்க அத்தான்?”
“காலையில என்னமோ கூப்பிட முடியாதுனு சொன்ன?”
“சும்மா இருந்தாலே மரியாதையா பேசி இருப்பேன். நீங்கதான் வீணா வம்பிழுத்து, என்னை டென்ஷன் பண்ணுறீங்க.”
சின்னதாய்ச் சிரித்தவன், “அடுப்புல தண்ணிய கொதிக்க வச்சிருந்தேன். தூக்கிட்டு வா, தமிழ்மா.”
அவனைக் குழப்பத்துடன் பார்த்தவள், “நீங்க, பச்ச தண்ணியில தான அத்தான் குளிப்பீங்க.?”
“அது குளிக்க இல்ல, துவைக்க!” என்றவனைப் புரியாது பார்த்தவள், நீரை தூக்கி வந்தாள். நீராவி முகத்தில் அடித்தது.
சலவைப் பொடி மற்றும் சலவை சோடாவை நீரில் கரைத்து ஊற்றி.. அதைச் சுடுநீரில் விலாவி தனது உடைகளை அதில் அழுத்தி வைத்தான்.
“என்ன இது.?”
“நானு கறிக்கடைக்குப் போட்ட துணிமா.”
இதுநாள் வரை, அவள் இதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. கணவனவன் கழட்டி போட்ட உடைகள் எல்லாம் அழுக்கு ஏறாது, கசங்கல் இல்லாமல் இருக்கும். துவைப்பதற்கும் கூட இயந்திரம் வாங்கி வைத்திருந்ததால், தமிழிற்குப் பெரியதாய் எவ்வித சிரமமும் இல்லை.
“எங்க வச்சிருந்தீங்க அத்தான், இந்தத் துணி எல்லாம்.?”
“கடையில தான். நேத்து மதியம் சாக்குப் பையில கொண்டு வந்து, பின்னாடி போட்டேன்.”
“எப்பவுமே இப்படித்தானா.?”
“இல்ல, தினமும் அக்கா வீட்டுக்குச் சாப்பிட போறப்ப அங்க போட்டுடுவேன். அது துவைச்சு வச்சிடும். கல்யாணத்துக்குப் பின்னாடியும் துவைக்கச் சொன்னா, நல்லா இருக்காதுல? உனக்கும் இதெல்லாம் பழக்கம் இல்ல, அதான்.”
“எதுக்கு அத்தான் இவ்வளவு துணியைச் சேர்த்து வச்சிருக்கீங்க, அப்பப்ப துவைக்கலாம்ல.?”
“தினமும் சுடுதண்ணி காய வச்சு, இந்த வேலை பார்க்கிறது சிரமம்மா.? அதுனால வாரத்துக்கு ஒருதடவை செய்யிறேன். சரி, நீயி போயி வேலையப் பாரு!” என்றவன், பணியைக் கவனிக்க.. உடைகளிற்குப் பயன்படுத்திய டெட்டால் வாசனையும், அவ்விடத்தைக் கழுவி விட்ட பினாயிலின் நெடியும் அவளிற்குத் தலைச் சுற்றலைக் கொடுத்தது.
தமிழ் அதிகமாய் அறியாதவைகளை எல்லாம், மெல்ல மெல்ல அறிமுகம் செய்து கொண்டிருந்த சேரல்.. வேலையை முடித்துவிட்டு வர, இரண்டு மணி நேரம் ஆனது.
உணவு தயாராய் இருப்பதைக் கண்டவன், “நீயி சாப்பிடுமா. நானு குளிச்சிட்டு வர்றேன்.”
“இல்ல, நீங்க வாங்க. நானு வெயிட் பண்ணுறேன்!” என்றவள் காத்திருந்து கணவன் வந்த பின்பு, அவனுடனே உண்டாள்.
வெளியே அழைத்துச் சென்ற சேரல்.. ஊரில் இருக்கும் காய்கறி கடை, மருந்துக்கடை என அவசர தேவைகளுக்கான இடங்களைக் காட்டி, அங்கு இருந்தவர்களிடம் அறிமுகமும் செய்து வைத்தான்.
வழியில் பள்ளி மாணவிகள் ஊரிற்குள் வருவதைக் கண்ட தமிழ் குழப்பத்துடன் பார்க்க.. சேரல், “என்னாச்சுப்பா?”
மாணவன் ஒருவன், “பஸ் போயிடுச்சு அண்ணே.”
“அதுக்குள்ளயா, நேரம் ஆகிடுச்சு?” என அவன் தனது கைக்கடிகாரத்தைப் பார்க்க, “பஸ்ஸுக்காரன், வர்றது தான நேரம்? நம்ம நேரப்படியா மாமா, வர்றான்?” என்று சிறுமி ஒருவள் உரைக்க, “சரி, வீட்டுக்குப் போங்க. சீக்கிரமே இதுக்கு ஒரு வழி செய்யிவோம்!” என வண்டியைத் திருப்பினான் சேரல்.
தமிழ் ஒன்றும் புரியாது, “இவங்க எல்லாம் ஸ்கூலுக்குப் போகலயா அத்தான்.? எதுக்குத் திரும்ப வீட்டுக்குப் போறாங்க.?” என்றிட, “இது அடிக்கடி நடக்கிறது தான் தமிழ்மா. பஸ்ஸு போயிடுச்சாம்.”
“அடிக்கடியா.? அப்ப இன்னைக்கு ஸ்கூலுக்குப் போக மாட்டாங்களா.?”
“இல்ல, லீவுதான். மாசத்துக்கு ஏழெட்டு தடவை இப்படித்தான்.”
“இப்படி இருந்தா, அவங்க படிப்பு என்னாகும் அத்தான்.?”
“இப்போதைக்கு வேற வழி இல்ல. கவர்மெண்ட் பஸ்ஸு, காலையில ஒரு தடவையும் சாயங்காலம் ஒரு தடவையும் தான் வரும். இடையில, பிரைவேட் காரன் விடுற டவுன் பஸ் வரும். ஆனா, முன்ன பின்ன ஆகும். ரோடு இல்லாததால, ஊருக்குள்ள ரெண்டுமே வர்றது இல்ல. ஏதாவது பேசுனோம்னா, முதல்ல ரோடைப் போட சொல்லுங்கனு வாயை அடைச்சிடுறாங்க.”
“இதை, இவ்வளவு வருசமா யாருமே கண்டுக்கலயா?”
“அவனவனுக்கு, அவனவன் பிரச்சனை. பதவியில உட்காருறவனுக்குச் சம்பாதிக்கணுமேனு கவலை.”
“சரி.. ஊர்க்காரவங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்தாவது எதுவும் செய்யலாம்ல.?”
“செய்யணும். அவங்களை வழிநடத்த ஒருத்தர் வேணும்ல? அந்தப் பொறுப்பை ஏத்துக்க, யாரும் முன் வர மாட்டிறாங்க. வெளிய தனியா ஆளுங்களைப் பிடிச்சு, ரோடு போடுறதுக்கு எல்லாம் பேசிட்டேன். காசு தான் கொஞ்சம் பத்தல. நிலத்தோட பத்திரத்தை வச்சு, பேங்க்ல லோன் கேட்டிருக்கேன். இன்னும் சேன்ஷன் ஆகல. அது வந்திட்டா, ரோடை போட்டு, ஸ்கூல் பிள்ளைகளுக்கு எல்லாம் ஃபிரீயாவே ஒரு வண்டியை விடலாம்னு இருக்கேன்.”
இல்லம் வந்திருக்க இறங்கியவள்.. கணவனை வியப்புடன் நோக்கி, “நீங்களே, தனியா ரோடு போட போறீங்களா அத்தான்.?”
“தனியா எங்க? பெரியப்பா எல்லார்க்கிட்டயும் பணம் வசூல் பண்ணி வச்சிருக்காரு. நானும் ஒரு லட்சம் போட்டிருக்கேன். பத்தாததுக்குத் தான், லோன். வண்டியும் வாங்கணும்ல.? ரோட்டை விட.. விதைக்கிறதுக்குத் தண்ணி அவசியம்ங்கிறதால, முதல்ல நம்ம கோயில் குளத்தைத் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டியதா போச்சு. அதான் கொஞ்சம் பண நெருக்கடி.”
“அப்ப.. கல்யாணத்துக்கு மறுநாள் கீதா அண்ணி வீட்டுக்குப் போயிட்டு வர்றப்ப, ரோடு, ஸ்கூல், கோயில் திருவிழானு நீங்க சொன்னது சும்மா இல்லையா.?”
“அடிப்பாவி! சும்மா சொல்லுறேன்னா நினைச்ச.?”
“இல்ல.. பொண்டாட்டிக்கிட்ட பெருமைக்குச் சொல்லிக்கிறீங்களோனு..”
அவளைப் பொய்யாய் முறைத்தவன், “இங்க வாயேன்.”
“ஏன்.?”
“நல்ல, தெளிவா தான் இருக்கியானு பார்ப்போம். பெருமைக்குச் சொல்லுறாங்களாம்.”
“நானு, இப்பதான அத்தான் இந்த ஊருக்கு வந்திருக்கேன். எனக்கு எப்படி, இங்க இருக்கிற பிரச்சனை எல்லாம் தெரியும்.?”
மெலிதாய்ச் சிரித்த சேரல், “சரி, உள்ள போ. நானு பட்டி வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வர்றேன்!” எனக் கிளம்பிச் சென்றான்.
மறுநாள் காலை அவன் நான்கு மணிக்கே கடைக்குச் சென்றுவிட, எட்டு மணி அளவில் இல்லத்திற்கு வந்தாள் கீதாராணி.
“என்ன அண்ணி, திடீர் விஜயம்.?” எனத் தமிழ் வரவேற்க.. அவள், “வாங்கனு கூப்பிடுறதை விட்டுட்டு, என்னனு கேட்கிற நீயி.?”
மெலிதாய்ச் சிரித்தவள், “அவர் வீட்டுல இல்லையே? என்ன காரணமா இருக்கும்னு தான்.”
“கடையில கூட்டமா இருக்கு. காலையில சாப்பாட்டுக்கு என்னால வீட்டுக்குப் போக முடியாது. அக்காவை ஒரு எட்டுப் போயி, என் பொண்டாட்டியைப் பார்த்துக்கச் சொல்லுங்கனு, அவன்தான் அப்பாக்கிட்டச் சொல்லி விட்டான்.”
வியப்பும் மகிழ்ச்சியுமாய்க் கீதாவைப் பார்த்தவள், “நிஜமாவா அண்ணி.?”
அவள் சிரித்து, “ஏன், இப்படிக் கேட்கிற.?”
“இல்ல.. வேலைக்கு நடுவுல வேற எந்த யோசனையுமே வராதுனு சொன்னாரு. அதான்.”
“அது, நிஜம்தான் தமிழு. ஆனா நீயி காத்திருப்ப இல்ல. ஃபோன் போட்டுக்கூடச் சொல்ல முடியாது.”
அவள் புரிந்து கொண்டது போல் தலை அசைக்க, “சரி, வா கிளம்புவோம்.”
“எங்க அண்ணி.?”
“அவன் வரமுடியாதுனு சொன்னதுமே, கஞ்சியை வச்சிட்டேன். அங்க உட்கார்ந்து, டிஃபன் தான் சாப்பிட முடியாது. கஞ்சினா, டம்ளர்ல ஊத்தி அப்படியே குடிச்சிக்கலாம். எவ்வளவு நேரம், பசியோட இருப்பான் பாவம்.? நாம போயி, கொடுத்திட்டு வருவோம். உனக்குச் சேரலோட கடை எங்க இருக்குனு தெரியாதுல? வா, காட்டுறேன்!” எனத் தம்பியின் மனைவியை அழைத்துச் சென்றாள் கீதாராணி.
error: Content is protected !!