Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – 28

அத்தியாயம் 28

 

 



Advertisement

 

ஒன்றரை லிட்டர் பாலில் தேநீர் தயாரித்து வைத்திருந்தாள் கீதா. சிலபல பழங்களும், பிஸ்கட் பாக்கெட்டுகளும் பையில் இருந்தன. பரமசிவம் இரவு பத்து மணிக்கே சென்று விட்டார், ஆடுகளை அறுப்பதற்கு.

Advertisement

மோகன், “ராணிமா..” எனக் குரல் கொடுக்க, “வந்திட்டேன் மாமா..” என்றவாறே ஓடி வந்தாள் அவள்‌.

Advertisement

“ஏய்..‌ மெதுவா மெதுவா..”

Advertisement

“ஒண்ணுமில்ல மாமா, பயப்படாதீங்க!” எனச் சிரிக்க, “எல்லாத்தையும் எடுத்துக்கிட்டியா.?”

“ம்ம்..”

“சரி, கிளம்புவோம்!” என வாகனத்தை இயக்க, “தம்பி வீட்டுக்குப் போங்க மாமா. தமிழை ஒரு எட்டுப் பார்த்திட்டுப் போயிடலாம்!” என்றாள்.

கதவு தட்டும் ஒலியில் திறந்த செந்தமிழ், “என்ன அண்ணி, இந்த நேரத்துல?”

“சேரல் போயிட்டானா.?”

“இப்பதான், அஞ்சு நிமிசம் இருக்கும்.”

“தனியா இருந்துக்குவியா நீயி.?”

“அது பிரச்சனை இல்ல அண்ணி, பார்த்துக்கிறேன்.”

“சரி.‌. இடையில டீ காபி தேவைப்பட்டா, மாமாவை அனுப்புறேன்‌‌. சிரமம் பார்க்காம, அதை மட்டும் கொஞ்சம் போட்டுக் கொடுத்திடு!” என, தான் வாங்கி வைத்திருந்த பாலைக் கொடுத்து விட்டுக் கிளம்பினாள்.

சூரிய வெளிச்சம் தோற்று விடும் போலும், அவ்வளவு ஒளி வெள்ளம் சேரலின் கடையில்.

கூடுதலாய் இரண்டு கட்டைகளை அடுக்கி, அதிகப்படியாய் நால்வரை பணிக்கு அமர்த்தி இருந்தான். அவனோடு சேர்ந்து ஐவர் கறியை வெட்ட, இயந்திரத்தின் மூலம் நூறு கோழிகள் வரை, ஏற்கனவே உரித்து எடுத்து வைத்திருந்தான் குமார். அதிலும் பணி தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆடுகளை வெட்டி உரிப்பதற்கு என்று சங்கத்தில் இணைந்தவர்களிற்குத் தனிப்படையாய் இடம் இருக்க, அங்குதான் பணியைக் கவனித்தார் பரமசிவம். அவருக்கு உதவியாளனாய் இருந்தான் சாரங்கன்.

குறைந்தது பதின்மூன்று கிலோ அதிகப் பட்சம் இருபத்தொன்று என்ற விகிதத்தில் ஒவ்வொரு ஆடையும் தேர்வு செய்திருந்தான் சேரல்.

கீதா அனைவருக்கும் தேநீரைக் கொடுக்க.. பசிக்கு வயிற்றில் அதை ஊற்றிக் கொண்டு, பணியைத் தொடர்ந்தனர்.

வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த, அளவு வாரியான அண்டாக்களில் கறி வெட்டிப் போட.. எடைப் போட்டுப் பிரித்து, வாடிக்கையாளர் முன்னரே கொடுத்திருந்த வாளிகளில் எடுத்து வைத்தான் மோகன்.

நூறு கிலோ கறியோடு.‌. ஞாயிற்றுக் கிழமை வியாபாரத்திற்கு எனத் தனியாய் இருபது கிலோ வெட்டி முடிக்க, அதிகாலை நான்கு மணி ஆகிவிட்டது.‌ பரமசிவமும் வந்து சேர, கோழிக்கான பணியைத் துவக்கினர்.

ஐந்து மணியில் இருந்து கடைக் கல்லாவில் அமர்ந்து, வியாபாரத்தைத் துவக்கி விட்டாள் கீதா. அத்தோடு குடலை சுத்தம் செய்து, அதை வெட்டும் பணியையும் செய்தாள்.

தமிழ் அனைவருக்குமே காலை உணவைத் தயார் செய்து வைத்திருக்க, மோகன் வந்து வாங்கிச் சென்றான். இரவில் இடையில் நான்குமுறை தேநீர் தயாரித்தும் கொடுத்திருந்தாள், சாரங்கனும் மோகனும் மாறி மாறி வந்து சென்றனர்.

பணி செய்த அவர்களிற்கு மட்டும் அல்ல, இவளிற்குமே இரவு உறக்கம் இமை சேராது போனது.

பத்து மணிக்கு அறுநூறு கிலோ மொத்தக் கறிக்கான, வேலையை முடித்தனர். அதற்குள்ளேயே நான்கு முறை, அவ்வப்போது சென்று வெட்ட வெட்டக் கறியைக் கொடுத்துவிட்டு வந்திருந்தான் மோகன்.

குமார் மற்றும் சாரங்கனைத் தவிர மற்ற அனைவருக்கும் ஊதியத்தைக் கொடுத்து பதினோரு மணிக்கு அனுப்பிவிட்டு.. கீதாவிடமும், “அக்கா போதும், இனி நானு பார்த்துக்கிறேன்.‌ பெரியப்பாவையும் மாமாவையும் கூட்டிட்டுக் கிளம்பு.” என்றான் சேரல்.

இரவில் கண்விழித்ததும், அதிகப்படியான பணியும் சோர்வைத் தர, மூவரும் கிளம்பி விட்டனர்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு, “தமிழ்மா.. சாப்பிட ஏதாவது கொடு‌. ரொம்பப் பசிக்கிது!” என்றவாறு இல்லத்திற்குள் நுழைந்தவனுடன், இணைசேர்ந்து அனுமதியின்றி வந்தது அந்த வாடையும்.

அறையில் இருந்து வெளியே வந்த தமிழின் முகம் அனிச்சையாய் சுருங்கிட, “அண்ணே டிஃபன் கொண்டு வந்தாரே அத்தான், சாப்பிடலயா?”

“பசங்க, ரொம்பப் பசியில இருந்தாங்க. அவங்களுக்குக் கொடுத்திட்டேன்மா.”

“கால் பண்ணியிருந்தா, கொண்டு வந்திருப்பேன்ல?‌ இல்லேனா ஆளையாவது அனுப்பி இருக்கலாம்ல.?”

மெலிதாய்ச் சிரித்தவன், “முதலிது, உன்னால முடியாது. ரெண்டாவதுக்கு நேரம் இல்ல.”

“ஏன், நானு கொண்டு வர மாட்டேனா.?”

“கடையைச் சுத்தி, எங்கேயும் கால் வைக்க முடியாது, ரெத்தமா இருக்கும்.‌”

தமிழ், “ச்சீ..” என்றிட, “டிஃபன் வேண்டாம். சாப்பாடு செஞ்சிட்டேனா, கொஞ்சம் கஞ்சியா கொடு.” என்றான்.

“ம்ம்.. குளிச்சிட்டு வாங்க.”

“இல்லமா, கடைக்குப் போகணும். கொடுத்தேனா.. ஒரு அஞ்சு நிமிசம், சாப்பிட்டுக் கிளம்பிடுவேன்.”

சேரல், எப்பொழுது கடை முடிந்து வருவான் என்று தெரியாது‌‌. ஆனால் வந்ததுமே பசி‌ என்பான்.‌ திருமணத்திற்குப் பின் அவனது நடவடிக்கைகளை அறிந்திருந்ததால், காலை பதினோரு மணிக்கு எல்லாம் சோறை வடித்து விடுவாள் தமிழ்.

வடித்திருந்த நீரில் சோறு போட்டுத் தயிரையும் கலந்து, கரைத்துக் கொண்டு வந்து தந்தாள். அதற்குத் துணையாய் மோர் மிளகாய். இதுதான் பெரும்பாலான நாட்களில் சேரலின் அவசர உணவு. அத்தோடு மிகப் பிடித்தமானதும் கூட.

நிதானமாய்ச் சாப்பிட நேரமில்லை அவனிற்கு. கிண்ணத்தோடு தூக்கிக் குடித்தான். மறுமுறைக்குப் பரிமாற அவனருகே சென்றவளால், சுவாசிக்கக் கூட இயலவில்லை. மூச்சு அடைத்தது.

இடது கையால் மூக்கை மூடிக் கொண்டவள், “என்ன அத்தான், இன்னைக்கு இப்படி ஸ்மெல் அடிக்கிது‌?”

“பெரியப்பாவால முடியல.‌ அதுனால அவரை அறுக்க மட்டும் சொல்லீட்டு, இன்னைக்கு நானு ரெண்டு ஆடு உரிச்சேன். வெட்டுறதைக் காட்டிலும், உரிக்கிறது ரொம்பக் கவுச்சி வாடை வரும். கடைக்குப் போயி சாப்பிடலாம்னு தான் பார்த்தேன். பணம் கொடுத்து சாப்பிட வர்றவங்க, இந்த வாடைக்குச் சங்கடப் படுவாங்க இல்ல.? அதான் வீட்டுக்கே வந்திட்டேன். ஒரு ரெண்டே நிமிசம், கிளம்பிடுவேன்‌. பொறுத்துக்கோ!” எனும் பொழுதே, ஓங்கரித்து விட்டாள் தமிழ்.

சேரல் வலியுடன் பார்க்க, அவசரமாய்ப் பின்பக்கம் ஓடினாள். முகம் கழுவி வந்தவளிடம், “சரி, கிளம்புறேன்!” என, துரித கதியில் அரை வயிறை மட்டும் நிறைத்துக் கொண்டு ஓடினான்.

அவளிற்குமே தனது செயல் சற்று வலிக்கத்தான் செய்தது‌‌. ஆனால் உணர்வுகளைக் கட்டுப் படுத்திட இயலாது தவித்தாள்‌‌. கணவனவன் அமர்ந்திருந்து விட்டுச் சென்ற இடத்திலும் வாசம் வீசுவதாய்த் தோன்ற, நீரை வைத்துத் துடைத்துவிட்டு, சாம்பிராணியையும் ஏற்றி வைத்தாள் இல்லத்தில்.

ஒரு மணிக்கு வந்த சேரல்.. வீட்டில் மாற்றத்தை உணர்ந்து மனைவியிடம் கேட்க, அவளோ பதிலின்றி நின்றிருந்தாள்.

“என்ன தமிழ்மா, உன்னைத்தான் கேட்கிறேன். இந்நேரத்துக்கு, ஏன் சாம்பிராணி போட்டிருக்க? சாமி கும்பிட்டியா‌ என்ன.? காலையில தான கும்பிடணும், மட்ட மத்தியானத்துலயா செய்யிவாங்க.?”

“சாமி எல்லாம் கும்பிடல அத்தான்.”

“அப்புறம்?”

“ஸாரி..” என்றவளை அவன் கேள்வியாய்ப் பார்க்க, “நீங்க வந்திட்டுப் போனதும் ஒருமாதிரி இருந்திச்சு‌, அதான்.”

இரண்டு நொடிகள் மௌனம் மட்டுமே.‌ அவன்,‌ முகத்தில் எதையும் காட்டவில்லை‌.

சின்னதாய்ச் சிரித்தவன், “இங்க வா..” எனக் கைநீட்டி அழைத்தான்.

அவள் தயக்கத்துடன் ஏறிட, “அக்கா வீட்டுலயே குளிச்சிட்டேன் மா, வா..”

தமிழிற்குக் கண்கள் கலங்கிவிட்டது.

“ஸாரி அத்தான்!” என்றபடி அருகே சென்று அணைத்துக் கொள்ள, “உனக்கு, ஒரு விசயம் தெரியுமா தமிழ்மா.?”

அவளிடம் இருந்து மறுமொழி வரவில்லை.‌ கண்ணீர் துளிகளின் ஈரத்தை உணர்ந்தான் சேரல்.

“ச்சு..‌ அழக்கூடாது!”

“எனக்குத் தெரியும், நானு செய்யிறது உங்களைக் கஷ்டப்படுத்தும்னு‌‌. ஆனா, என்னை மாத்திக்க முடியல. அந்த ஸ்மெல்லை பிடிக்கலைன்றதை விட, ஏத்துக்க முடியல.”

“அது, எனக்கே தெரியும். நீயி எதுக்கு விளக்கம் கொடுத்துட்டு இருக்க.?”

“ப்ளீஸ் அத்தான், ஸாரி..”

“என்ன விசயம்னு கேட்க மாட்டியா.?”

“ம்ம்..”

“சொல்லவா வேணாமா.?”

“உங்க இஷ்டம்.”

“நீயாவது பரவாயில்ல, வாந்தியோட நிறுத்திக்கிட்ட. முதல் தடவை ஆடு உரிச்சப்ப, எனக்குக் காய்ச்சல் வந்திடுச்சு தெரியுமா.?”

அவள் சட்டென்று நிமிர்ந்து கணவனின் முகம் பார்க்க, “ஒரு சிலருக்கு அலர்ஜி மாதிரி இருக்கும், தெரியும்ல.? மாத்திரையோ, மருந்தோ, சாப்பிடுற பொருளோ,‌ ஏன் சிலருக்குக் குங்குமம் கூட. அம்மாக்குக் குங்குமம் அலர்ஜி‌. மதுரை மீனாட்சியம்மன் கோவில்ல கொடுக்கிற தாழம்பூ குங்குமம் மட்டும் தான், அவங்களுக்குச் சேரும். மத்த எந்தக் குங்குமம் வச்சாலும்.. அந்த இடமே கருப்பாகி அரிப்பெடுக்க ஆரம்பிச்சிடும்.‌ குங்குமம் வாங்குறதுக்காகவே, அப்பா மதுரைக்குப் போயிட்டு வருவாரு.”

“எதுக்கு இதெல்லாம் சொல்லுறீங்க அத்தான்.?”

“எனக்குக் காய்ச்சல் வந்துச்சுனு சொன்னதை, மறந்திட்ட பார்த்தியா.?”

அவள் லேசாய்ப் புன்னகைக்க, “அந்த மாதிரி, எனக்கு ஆடுகளோட வாசனை ஒத்துக்கலயோனு பெரியப்பா பயந்துட்டாரு‌. காய்ச்சல் சரியானதும்.. ‘உனக்கு ஒத்து வந்தாதான், கறி வெட்டச் சொல்லித் தருவேன்‌. இல்லேனா இதை இப்படியே நிறுத்திட்டு, வேற தொழிலுக்குப் போற வழியைப் பாரு’னு உறுதியா சொல்லிட்டாரு.

என்னைக் கூட்டிட்டுப் போயி, ஜக்கையன் மாமாக்கிட்ட விட்டு விபரத்தைச் சொல்லி ஒப்படைச்சாரு. நாலு மாசம், அவரோட சேர்ந்து ஆடு மேய்ச்சேன். சாப்பிடுறதுக்கு மட்டும் தான் வீட்டுக்கே வருவேன். ராத்திரி தூங்குறது எல்லாம், ஆடுகளோட தொழுவுல தான். அப்புறம், அதுவே செட்டாகிடுச்சு எனக்கு. உனக்கும் பழகும், ஆனா நாளாகும். வீணா வருத்தப்படாத. நானு சங்கடப்படுவேனும் நினைக்காத‌.

பொறுத்துப் போகாம, விட்டுக் கொடுக்காம எப்படி ஒண்ணா வாழ முடியும்? இதைத்தவிர, மத்த விசயத்துல நீயி என்னை விலக்கி வைக்கலேல.? அதேபோல, நானும் இந்த விசயத்துல உன்னைக் காயப்படுத்தாம இருக்க முயற்சி செய்யிறேன். இன்னும் காலம் இருக்கு. சரியாகிடும், என்ன?

இனிமேல்.‌. சாப்பிட வரும்போது, ரூமுல போயி இரு தமிழ்மா.‌ எடுத்து மட்டும் வச்சிடு, நானே போட்டு சாப்பிட்டுக்குவேன். நீயி, பரிமாற வேணாம்!” என்றவனிற்கு மறுமொழி உதிர்க்க, அவளிடம் எதுவும் இல்லை. அத்தை மகனின் மீது கொண்டிருக்கும், அன்பையும் பிடித்தத்தையும் தவிர.

சிறு குழந்தையாய்த் தலையசைத்தவள் கண்களைத் துடைத்துக் கொள்ள, அவனோ பணி செய்த அலுப்பில்.. உள்ளே சென்று படுக்கையில் விழுந்தான்.

அவள் முதன்முதலில் நாத்தம் என உரைத்த பொழுது, அவனிற்கு வலிக்கத்தான் செய்தது. வாழ்க்கை முழுமைக்கும், எப்படி அனுசரித்துச் செல்வது என்ற பயமும் இருந்தது.

‘அங்கேயே இருந்தால், மனைவியிடம் தன்னை அறியாமல் அதைப் பற்றிக் கேட்டு விடுவோமோ.? அன்றிச் சொற்களால் காயத்தைக் கொடுத்திடுவோமோ?‌’ என்று எண்ணியே கிளம்பி விட்டான்.

ஐந்து நாட்களின் பிரிவில்.. அவனது ஆரம்பக் கால அனுபவத்தில், இனி எது போலான சூழல்கள் எல்லாம் உருவாகலாம் என்று கணித்து, அதைக் கடந்து செல்வதற்கான வலிமையோடு, மனைவியைக் கையாள்வதற்கான பக்குவத்தையும் தன்னுள் உருவாக்கிக் கொண்டான்.

அந்தக் காரணத்தால் தான்.. அவள் அடித்ததையும் ஏற்று, ஒவ்வொரு தினத்தின் இரவிலும் உணர்வுகளோடு போராடாது, இயல்பான தாம்பத்யத்தின் வழி வாழ்வை நகர்த்த முடிகிறது‌‌ அவனால்.

“அவளைத் தனியா விடாத‌‌. நீயி எந்த அளவுக்கு உன் கூடவே வச்சுக்கிறியோ, அந்தளவுக்கு அவளோட மனசுல நம்ம புருஷன் நம்ம‌ மேல பிரியமா இருக்கிறாருன்ற‌ எண்ணம் ஆழமா பதியும்.!” என்ற தமக்கையின் அறிவுரை, எந்த அளவிற்கு உண்மை என இந்நொடி உணர்ந்து கொண்டான் சேரல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!