Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – 31

அத்தியாயம் 31

 



Advertisement

 

 

Advertisement

கடைக்கு வந்த சேரல், “குமாரு, பெரியப்பா நம்ம தொழுவுல ஆடு ஒண்ணை அறுக்கப் போறாரு. நீயி போயி உரிச்சு எடுத்திட்டு வந்திடு!” என்றிட.. அவனோ கேள்வியாய், “இந்த நேரத்துக்கா.?”

Advertisement

“ஆமா..”

Advertisement

“இன்னும் ஒரு சப்பை இருக்கே? அதுவே வித்துப் போகல.”

“ராயல் ஹோட்டல்ல இருந்து கறிக்கு ஃபோன் போட்டாங்க.‌ அஞ்சு கிலோ வேணுமாம்.”

“சரி!”‌ என்றவன் கிளம்பிச் செல்ல.. சில நிமிடங்களில்,‌ “ரங்கா, கடைய பார்த்துக்க!‌” என்றுவிட்டு தானும் புறப்பட்டான்.

“அண்ணே.‌. நானு எப்படி? எனக்குச் சரியா வெட்டவும் தெரியாதே?”

“பதினோரு மணி ஆச்சுடா‌.‌ இனி சின்ன வியாபாரத்துக்கு ஆள் வருவாங்க‌‌. அரைக் கிலோவுக்கு வெட்ட மாட்டியா.? பழகிக்க!‌” என்றுவிட்டு, நேராய் ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்குச் சென்றான் சேரல்.

முன்னே வந்திருந்த குமார்.. அவனைக் கண்டதும், “என்ன அண்ணே, பெரியவரைக் காணோம்? ஆட்டை உரிக்கணும்னீங்க.?”

“ஆட்டை உரிக்க இல்ல, உனைய உரிக்கத்தான்!” என்றவன் ஓங்கி விட்ட ஒரு அறையில், அடைத்து வைத்திருந்த ஆடுகளிற்கு இடையே அவைகளின் சிறுநீர் மற்றும் புழுக்கைகளின் மீது கிடந்தான் குமார். அடுத்ததாய்க் காலணியோடு காலை அவனது தாடையில் வைத்து அழுத்த, மூச்சு விட முடியாமல் திணறிப் போனான்.

“பொறுக்கித்தனம் செய்யிறியோ.? ஒரு மடக்குத் தண்ணி குடிச்சாலும், அதைத் தந்தவங்க வீட்டுக்கு விசுவாசமா இல்லைனாலும், துரோகம் நினைக்கக் கூடாது.‌ அதுதான் நியாயம், தர்மம். ஆனா நீயி? என்னோட காசைத் தின்னுட்டு, என் பொண்டாட்டிக்கிட்டயே பேசிட்டு வந்திருக்க.?

அவ, யாருனு தெரியுமாடா? என்னோட உசுரு‌. மகாராணி மாதிரி பார்த்துக்கணும்னு.. நானு ஒவ்வொன்னையும் ஒண்ணுக்கு நாலு தடவை யோசனை பண்ணிச் செஞ்சா.. கவுச்சி வாடைப் பழக வழி சொல்லட்டுமானு கேட்டிருக்க? ஏன், எனக்கு அதைச் செய்யத் தெரியாதா? நானு, ஆம்பளை இல்லனு நினைச்சிட்டியோ.? எனைய பத்தித் தெரிஞ்சிருந்தும், இவ்வளவு தூரத்துக்குப் பேசி இருக்கனா.. அப்ப உன்னோட எண்ணம் எவ்வளவு கேவலமா இருந்திருக்கு?” என்றவன் ஆடுகளிற்கு இடையே இழுத்து விட.. அவை மிரண்டு அங்கும் இங்கும் தாவியதில், அவனது உடலில் அங்கங்கு ஏறி மிதித்திருந்தது.

ஒவ்வொரு கிடாவும் பதினைந்து கிலோவிற்கும் குறைவில்லாமல் இருக்கும்‌. அவற்றின் கால்தடம் பதிந்த இடத்தில் எல்லாம், தோல் நைந்து குருதி வெளியே எட்டிப் பார்த்தது.

வாயில் ஏறி மிதித்ததில்.. வாயோடு சேர்ந்து இரண்டு பற்கள் உடைந்து, நாக்கிலும் பலமான காயம்.‌ வலிக்காகக் கூடக் கத்த இயலவில்லை.

சேரல் கன்னத்தில் ஒருமுறை அறைந்து, தாடையில் மிதித்ததோடு சரி‌. அதன்பின்னர் வேடிக்கை மட்டுமே பார்த்தான்.

“ஹேய்.. ஹேய்.. சுச்.. சுச்..‌” எனக் குரல் கொடுக்க, ஆடுகள் முழுவதும் ஒரு பக்கமாய் ஒதுங்கி நின்றன.

“அஞ்சறிவு இருக்க ஜீவன். அதுக்குத் தெரியிது.. நமக்கு ஆகாரம் போடுறவன் குரலு, அதுக்குக் கட்டுப்பட்டு நடந்துக்கணும்னு. நீயி.?

இதுதான், உனக்கு முதலும் கடைசியும். இனிமேல், என்னோட கண்ணுல படவே கூடாது. போயி.. உன் பொண்டாட்டியோட கையிலயோ காலுலயோ விழுந்து கூட்டிட்டு வந்து ஒழுக்கமா குடும்பம் நடத்துற வழியைப் பாரு.‌ ஒருவேள அந்தப்பிள்ள வரலனு சொல்லீடுச்சுனா, கேட்கிற விவாகரத்தைக் கொடுத்திட்டு ஒதுங்கீடு. ஏதாவது தொழிலைச் செஞ்சோமா, தின்னுட்டு பேசாம படுத்தோமானு இருந்துக்கணும்.

அதை விட்டுட்டு போற வர்ற‌ பொம்பளைப் பிள்ளைகளைப் பார்க்கிறது, பேசுறது, ஆம்பளைங்க இல்லாத நேரத்துல வீட்டுக்குள்ள நுழையிறதுனு ஏதாவது திமிருத்தனம் செஞ்சேனு கேள்விப்பட்டேன், கழுத்தை அறுத்துடுவேன்.

ஆட்டை அறுக்கிறதுக்குத் தான், பழி பாவம்னு யோசிப்பேன். உனைய மாதிரி ஆளைக் அறுக்கிறதுக்குத் தயங்கவே மாட்டேன். வியாதி வந்து செத்துப் போச்சு, குடலு கெட்டுப் போயி நாத்தம் அடிக்க ஆரம்பிச்சிடுச்சுனு சொல்லி..‌ ஆட்டோட சேர்த்து உன்னோட தோலையும் உரிச்சுக் கூறு போட்டு ஒண்ணா கலந்து இந்தத் தொழுவுக்கு உள்ளேயே குழியைத் தோண்டிப் புதைச்சிடுவேன்.‌

என்னைப் பொறுத்தவரை தோலை உரிச்சாலே, கறிதான். அது ஆடோ ஆளோ! எப்பேர்ப்பட்ட கொம்பனாலயும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு தெளிவா இருக்கும், என்னோட கை வேலை.‌ தெரியும் தான உனக்கு.? உங்கம்மா.. குடிக்கார பையன் எங்க போனானு, தேடிக்கிட்டே இருக்க வேண்டியது தான். உயிர் பிழைச்சிக்கிற வழியைப் பாரு!” என இரண்டு எட்டு நடந்தவன்,

“என்ன காயம்னு கேட்டா, ஆடுக மிதிச்சிடுச்சுனு சொல்லு. அதுக்குத்தான் நானு கை வைக்கல, உன்மேல.‌ ஆளு அடிக்கிறதும், ஆடு மிதிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல.? பார்க்கிறவங்க, கண்டுபிடிச்சிடுவாங்க பாரு!” என்று புன்னகைத்து விட்டுச் சென்றவனைக் கண்டு, உள்ளுக்குள் நடுங்கிப் போனான் குமார்.

கைக்கால்கள் எல்லாம் ரணமாய் வலித்தது.‌ உடலை அசைக்கக்கூட இயலவில்லை. உண்மையை உரைக்க வேண்டுமானால், தற்போது உயிரோடு இருப்பதே அதிசயம் தான்.

நடந்த நிகழ்வினால்.. சேரலின் வழக்கமான நடவடிக்கைகள் மாற்றமடைந்து இருக்க, தொழுவில் இருந்து வந்து சட்டென்று அறைக்குள் நுழைந்து விட்டான்.

மனைவி அங்கு இருப்பதைக் கவனியாது, அவளின் உணர்வுகளைப் பற்றிய சிந்தனையும் இல்லாது..‌ உடையை மாற்றி, பழைய உடையையும் அப்படியே போட்டுவிட்டு வெளியேற, அவனை இடித்துக் கொண்டு வேகமாய்ப் பின்புறத்திற்கு ஓடினாள் தமிழ்‌.

“ச்சோ..‌ இதை மறந்திட்டேனே!” எனத் தலையில் தட்டிக் கொண்டவன் பின்தொடர்ந்து செல்ல, வயிற்றில் இருந்ததை எல்லாம் வெளியேற்றிக் கொண்டிருந்தாள் மனையாள்.

“தமிழ்மா.‌. போதும் போதும். குடல், வாய் வழியா வெளிய வந்திடப் போகுது!”

திரும்பிப் பார்த்து முறைத்தவள், “போன வாரம் என்னமோ கதைக் கதையா சொல்லீட்டு.. இப்பப் பாருங்க. என்ன அத்தான்.?”

“ஏதோ நினைப்புல வந்திட்டேன், விட்டுடேன்!” எனக் கெஞ்சலாய்ப் பார்த்தவனைக் கண்டு மனம் கனிய, முகத்தைக் கழுவி கொண்டு வந்தாள் தமிழ்.

அவனை நெருங்கக்கூட இல்லை. அதற்குள் மீண்டும் வாந்தி எடுத்தவளைப் பார்த்துத் திகைத்த சேரல், “தமிழ்மா, இதெல்லாம் ரொம்ப அநியாயம்.‌ நானு சட்டையை மாத்திட்டேன். வாடை எதுவும் வரல.‌ சும்மா சும்மா வாந்தி எடுத்தேனா, என்ன அர்த்தம்?”

“அச்சோ! கொஞ்சம் சும்மா இருக்கீங்களா அத்தான்‌? எனக்குத் தலை எல்லாம் சுத்துது!” எனச் சுவற்றில் சாய்ந்து நின்றவளின் அருகே சென்றவன், “ஏய்.. என்னாச்சுமா.?”

“தெரியல. நேத்து இருந்து, நெஞ்சு கரிக்கிற மாதிரியே இருந்திச்சு‌. நீங்க வரவும், அந்த ஸ்மெல்லுக்கு வாமிட் வந்திடுச்சு.”

“சரி, வா. முதல்ல கொஞ்சம் தண்ணிக் குடி!” என அழைக்க, “இல்ல.‌. இதைக் கிளீன் பண்ணீட்டு வர்றேன்.”

“அதை, நானு பார்த்துக்கிறேன். நீ போ.”

“அத்தான் வேண்டாம்!” என அவள் சங்கடமாய்ப் பார்க்க.. சட்டென்று சிரித்து, “ஆட்டு கோமியத்துலயும் புழுக்கையிலயும் படுத்து எழுந்திரிச்சவன் நானு. இதெல்லாம் ஒண்ணுமே இல்ல! நீயி, உள்ள போ.” என்றுவிட்டுச் சுத்தம் செய்தவனைப் பார்த்து, மனம் வலித்தது.

ஜெயராம்.. தனது மகளை எந்த அளவிற்குத் தாங்கினாரோ, அதே அளவிற்குத் தங்கையின் மகனிடமும் அன்பைக் காட்டினார்.

“பையைத் தூக்கிட்டு ஸ்கூலுக்கு நடந்து போகச் சிரமமா இருக்கும். வாங்க, நானு வண்டியில விடுறேன்!” என மிதிவண்டியின் முன்புறத்தில் தமிழையும், பின்பக்கத்தில் சேரலையும் அமரவைத்து மூச்சிரைக்க ஓட்டிச் செல்வார்.

பள்ளி வாயிலில் இறங்கியதும், “என்னடா, தலை கலைஞ்சுப் போச்சு?” என்று காற்றிற்கு மடிப்பு விலகிய குழலைச் சீவி, எப்பொழுதுமே தனது சட்டைப் பையில் வைத்திருக்கும் திருநீறை பூசிவிட்டு வழி அனுப்புவார் சேரலை.

“கசங்குன சட்டையை, ஏன்டா போடுற.?‌ நல்லா இருக்கிறதைப் போடு!” என அவளின் தந்தை பார்த்துப் பார்த்து வளர்த்தவன், இன்று செய்து கொண்டிருக்கும் பணியை எண்ணி மனம் கலங்கியது‌.

சுத்தம் செய்துவிட்டு வந்தவன், “உள்ள போகச் சொன்னா, இங்கயே நிக்கிற? திரும்பவும் வாந்தி வரப் போகுது பாரு.?” என அவளை அழைத்துச் செல்ல, “ஸாரி அத்தான்.?”

“எதுக்கு.?”

“உங்களுக்கு வேலை வச்சிட்டேன்.”

சிரிப்பால் பதிலைத் தந்துவிட்டு, “இப்ப எப்படி இருக்கு, கொஞ்சம் பரவாயில்லயா? ஹாஸ்பிடல் எதுவும் போகணுமா.?”

“அந்தளவுக்கு அவசியம் இல்லனு நினைக்கிறேன்.”

“சரி, போய்ப் படுத்துக்கோ.‌ இன்னைக்குச் சமைக்க வேணாம். நானு அக்காவைச் செய்யச் சொல்லீடுறேன்!” என்றவன் மனையாளிற்காகச் சிறிது எலுமிச்சையைப் பிழிந்து, பழச்சாறு தயாரித்துக் கொடுத்து விட்டுச் சென்றான்.

மதிய நேரத்தில் இருவருக்குமான உணவோடு வந்த கீதா.. அவளின் உடல்நிலையை விசாரித்துவிட்டு, “நானு அவன்கிட்ட சொல்லீடுறேன் தமிழ். சாயங்காலம் ஒரு எட்டு, டாக்டரைப் பார்த்திட்டு வந்திடுங்க!”

“ஏன் அண்ணி.?”

“என்னனு தெரிஞ்சிக்கலாம். ஒண்ணும் இல்லனு சொல்லிட்டா, நிம்மதியா இருக்கும்ல? கல்யாணம் ஆகி, ரெண்டு மாசத்துக்கு மேல ஆச்சு, இன்னுமா இந்தக் கறிக்கடை வாடை பழகாம இருக்கு உனக்கு.?”

அவள் பாவமாய்ப் பார்க்க, “என்னாச்சு.?”

“நானு, வேணும்னு செய்யல அண்ணி.”

தலையசைத்துச் சிரித்தவள், “நானும் அப்படிச் சொல்லலையே.? சரி, சாப்பிடுறியா?”

“இல்ல.. அவர் வந்ததுக்கு அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்.”

“ம்ம்.. அப்ப நானு கிளம்புறேன். அப்பாவும் மாமாவும் சாப்பிடாம இருக்காங்க!” என விடைப்பெற்றுச் செல்ல, உணவைத் திறந்து பார்த்தாள் தமிழ்.

எல்லா வயது பெண்ணிற்கு உள்ளுமே, சிறு குழந்தை உண்டு. அது தனக்கு வேலை வைக்காமல் எவரேனும் சமைத்துக் கொடுத்தால்..‌ அதுவும் பிடித்ததாய் இருந்தால், அத்தனை கொண்டாட்டம் கொள்ளும். இதில் திருமணமான பெண்கள் என்றால், உணவைப் பசியைக் கடந்து ஆசைக்காகவே உண்பர்.

பெரும்பாலும் பிறந்த வீட்டிற்குச் செல்ல நினைப்பதும் கூட இதற்காகத்தான்.. அன்னையானவர் தனக்குப் பிடித்ததை, தன்னை வேலை செய்ய அனுமதியாது, செய்து தருவார் என்று. ஈன்றவள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் வரை மட்டுமே, இந்த வரம் கிட்டும்.‌ கிடைக்கும் வரை, அனுபவித்துக் கொள்ள வேண்டியது தான்!

கோலா உருண்டை குழம்பும் வறுவலும் செய்திருந்தாள் கீதா. எப்பொழுமே அவளது கை மணமும், ருசியும், பக்குவமும் அலாதியானது தான்.‌ சேரல், தமிழ் இருவருக்குமே மிகப் பிடித்தம். மோகன் இதற்காகவே, மிக அவசியமான நேரத்தைத் தவிர வெளியில் உண்ண மாட்டான்.

ஒரு உருண்டையை எடுத்து, வாயில் போட்டுக் கொண்டாள்.

‘கறியை, இப்படி வெரைட்டி வெரைட்டியா சாப்பிடுவ. கடை வச்சிருக்க, அத்தானையும் ரொம்பப் பிடிக்கும். ஆனா, அந்த வாடை மட்டும் ஆகாது!‌‌ இது என்னடி நியாயம்?’ என மனசாட்சி கேள்வி எழுப்பிட, “இப்போதைக்கு உனக்குப் பதில் சொல்லுற மூடுல இல்ல. போ!” என்று துரத்தி விட்டவள், வாயில் இருந்ததை மட்டும் உண்டுவிட்டுப் படுத்தாள்.

தமக்கை உரைத்ததால், மாலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் சேரல். மருத்துவரோ புது வரவின் செய்தியை உரைத்து இன்ப அதிர்ச்சியைக் கொடுக்க, மகிழ்ச்சியோடு இல்லம் வந்து சேர்ந்தனர்.

இருவரது உறவுகளுக்கும் செய்தி பரிமாறப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில்.‌. இனிப்பு, பூ, பழங்கள், இரவு உணவோடு தந்தை மற்றும் ‌கணவனுடன் வந்து விட்டாள் கீதா.

தமிழிற்கு ஒரு வேலை வைக்காது, “நீயி ரெஸ்ட் எடு, நானு பார்த்துக்கிறேன்!” என்று இல்லத்தைத் தூய்மை செய்வது வரை அனைத்தையும் முடித்து.. தான் பார்த்த, கேட்ட, அறிந்த அறிவுரைகளை எல்லாம் சொல்லிச் சென்றாள்.

சவிதா‍, மறுநாள் வருவதாகச் சொல்லி இருந்தார்.

உடைமாற்றி வந்த தன்னை, வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த கணவனைக் கண்ட தமிழ் அருகே வந்தமர்ந்து, “என்ன அத்தான், இவ்வளவு நேரமா பார்க்குறீங்க.?”

“இல்ல.. இனி நீயி வாந்தி எடுத்தா, அது எனக்காகவா? என்னோட பிள்ளைக்காகவானு எப்படித் தெரிஞ்சிக்கிறதுனு ஒரு சந்தேகம்!” எனச் சிரியாமல் சொன்னவனைப் பார்த்து சிரிப்பும் சினமும் ஒன்றாய் வர, “எனைய பார்த்தா, உங்களுக்குக் கிண்டலா இருக்கா.?” என்று சில அடிகளைப் பரிசளித்தாள் அவள்.

மென்மையானவளின் மென் அடிகள் யாவும்.. பூக்கள் தீண்டிச் செல்வதைப் போல் மகிழ்ச்சியைத் தர, சிரிப்புடனே அதைப் பெற்றுக் கொண்டான் சேரல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!