Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – நிறைவு பகுதி

இறுதி அத்தியாயம்‌ 

 

நிறைவு பகுதி

 



Advertisement

மூன்று ஆண்டுகளிற்குப் பின்..

Advertisement

Advertisement

“கோயில் ஸ்டாப் இறங்குங்க!” என்று நடத்துநர் குரல் கொடுக்க, பேருந்தில் இருந்த பாதி மக்கள் அந்த நிறுத்தத்தில் இறங்கி, முன்புறம் கற்கள் பதித்த பாதையில் நடக்கத் துவங்கினர்.

வழி எங்கிலும் தோரணம் கட்டப்பட்டு இருந்தது‌. முன்பு மண் பாதையாய் இருந்ததை, தற்போது நடப்பதற்கு ஏதுவாகக் கற்பாதையாய் மாற்றி இருந்தனர் ஊரார்.

Advertisement

அதன் முடிவில் சிறிய அளவிலான பாலம் இருக்க, கல்யாண சுந்தரரின் இருப்பிடத்திற்குச் செல்ல பரிசல் தேவைப்படவில்லை. ஆனால் தற்போது பரிசல் சவாரி என்பது ஆசைக்காகவும், விளையாட்டிற்காகவும், பொழுது போக்காகவும் நடைபெற்றது‌.

கோவிலைச் சுற்றிலும் பந்தல் அமைத்து, வாழை மரமும் கரும்பும் கட்டி அலங்கரித்து இருந்தனர். ஒலிப்பெருக்கியும் தன் பங்கிற்கு, இனிமையான மெல்லிசைப் பாடல்களைச் சிந்தியது.

கல்யாண சுந்தரருக்கும் அங்கயற்கண்ணிக்கும், அதிகாலையே திருக்கல்யாணம் நடந்து முடிந்திருந்தது. சிவப்புப் பட்டுடுத்தி பொற்தாலி மின்ன அன்னையவள் அழகுப் பதுமையாய் வீற்றிருக்க, வெண்பட்டிலும் துண்டிலும் மிளிர்ந்த மணவாளரின் காந்த முகத்தில் வசீகரம் சொட்டியது.

பக்தர்கள் அனைவருக்கும் பூ, மஞ்சள், குங்குமம், வளையலோடு தேன் கலந்த தினை உருண்டையைப் பிரசாதமாய் வழங்க ஏற்பாடு செய்து இருந்தாள் செந்தமிழ்‌.

பரமசிவம் தன் வயதை ஒத்தவர்களுடன் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருக்க, இளஞ்சேரல் ஊரார் கொடுத்துச் செல்லும் நன்கொடை பணத்தை எழுதி வைத்து, பத்திரப் படுத்தினான்.

“மாமா.‌. போட்டு போட்டு..” என யுகபாலன் பரிசலில் செல்ல அடம்பிடிக்க, அவனது ஒரு வயது தங்கை கவிமொழியும், “ஆன் ஆன்..” என்று தமையனை வால் பிடித்துக் கேட்டாள்.

“இப்ப தானடா போயிட்டு வந்தோம், திரும்பவும் போகணும்னா எப்படி? நீயி மட்டும் போனா போதுமா, மத்த பிள்ளைக எல்லாம் என்ன செய்யிவாங்க பாவம்? போயி விளையாடு, அப்புறமா போகலாம்!” என மோகன் சொல்லிப் புரிய வைக்க முயல, அவனோ முறைத்துவிட்டுத் தந்தையிடம் ஓடினான்.

தளிர் நடையிட்டு மூத்தவனின் பின்னோடு சென்ற கவி.. பட்டுப் பாவாடைத் தடுக்கி கீழே விழுந்து வாயைத் திறக்க, மாமனாவன் பதறிப் போனான்.

“அச்சோ.. என் தங்கமே. கீழ விழுந்திட்டீங்களா? மெதுவா போகக் கூடாதா, அவன் ஓடுறான்னு நீயும் ஓடுற.? ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல அழாத. மாமா, சாக்லெட் வாங்கித் தர்றேன்!” எனச் சமாதானம் செய்ய, அதற்குள் உறவுகள் மொத்தமும் கூடிவிட்டனர்.

“பிள்ளைய கொடுங்க இங்க. இவளைப் பார்க்கிறதைத் தவிர, அப்படி என்ன வேலை உங்களுக்கு? நல்ல நாளு அதுவுமா, விழுக விட்டு அழுகிறதை வேடிக்கைப் பார்த்தீங்களாக்கும்.?” எனக் கீதா கணவனிடம் சண்டையிட, மோகனோ பாவமாய் நின்றிருந்தான்.

“அண்ணி, இதெல்லாம் ஓவர்! அவ விழுந்ததுக்கு, அண்ணே என்ன செய்யிவாங்க? அத்தை மாமாக்கு நடுவுல சண்டையை இழுத்து விட்டுட்டு, கண்ணு ரெண்டையும் உருட்டி உருட்டி பார்க்கிறதைப் பாரு? சூ.. வாயை மூடு!” என்ற அன்னையின் அதட்டலில், அழுகையை அடக்கியது ஒரு வயது சிட்டு.

“என்ன தமிழ், பிள்ளைய இப்படி அதட்டுற.?” என அத்தையானவள் மனம் தாளாமல் வினவ, “இருங்க வர்றேன்!” என்றவள் மகளை வாங்கி ஆராய்ந்து பார்த்து, “அடி எதுவும் படலயே, அதுக்குள்ள வாயைத் திறந்து ஊரைக் கூட்டிட்ட? இவளுக்குத்தான் சப்போர்ட் பண்ணீங்களா அண்ணி, நீங்க.? பாசம் இருக்க வேண்டியது தான், மருமக மேல. அதுக்குனு இப்படியா.?”

கீதாவிற்குச் சிரிப்பு பொங்கி வர, “என்ன நடிப்பு, நடக்கிற?” எனக் கவியிடம் வினவ.. குழந்தை மழலையில், “வின்னு வின்னு வச்சு வச்சு!” என்று ‘விழுந்ததால் வலித்தது!’ என உரைக்க, “அதெல்லாம் சரியாப் போச்சு. மெதுவா போயி விளையாடு!” என்று காலைத் தேய்த்து விட்டு அனுப்பினாள் தமிழ்.

‘இதுக்குத்தான், எனைய அந்தத் திட்டு திட்டுனியா?’ என்ற ரீதியில் மோகன் மனைவியை முறைக்க, அவளோ இதழ்களைச் சுளித்துச் சென்றாள்.

நடந்ததைப் பார்த்திருந்த சேரல் சிரிப்புடன் நகர, உடையைப் பற்றி இழுத்தான் யுகபாலன்.

“என்னடா.?”

“மாமா.. போட்டு மிடியாது சொல்றார்..” எனப் புகார் வாசிக்க, “நானு பார்த்தேனே இங்க இருந்து, நீயும்‌ உன்னோட தங்கச்சியும் பரிசல்ல போனதை?”

அவன் விழிக்க, “அம்மாக்கிட்டச் சொல்லவா.?”

“வேணா வேணா, அதிக்கும்!” என்றவன் ஓடிவிட.. அருகே இருந்த காயத்திரி, “ஏன் மாமா, பிள்ளைக்கிட்ட அக்காவைப் பத்தி இப்படிச் சொல்லுறீங்க.?”

“ரெண்டும் அவளைத் தவிர, வேற யார் சொன்னாலும் கேட்காதுக. அக்கா மாமாக்கிட்ட எல்லாம் செல்லம் கூடுதலு. ஏதாவது வேணும்னு கேட்டா, அடுத்த நிமிசமே வாங்கிக் கொடுத்திடுவாங்க..”

“இவர் மட்டும் என்னவாம்? உங்க மாமாவும் அப்படித்தான். வீட்டுல யாராவது ஒருத்தருக்காவது பயப்படணும்ல, அதான்..” என்றபடி வந்த தமிழ், “அத்தான், சமையல் நடக்கிற பக்கம் போயி, என்னனு பார்த்திட்டு வாங்க. மணி ஒண்ணாச்சு, எல்லாரும் சாப்பிடணும்ல.?” என அனுப்ப, எழுந்து சென்றான் சேரல்.

காயத்திரியிடம் திரும்பியவள், “எங்க, உன்னோட மகன்.?”

“தண்ணியில விளையாடணும்னு ஒரே அழுகை. அப்பா, இப்பதான் தூக்கிட்டுப் போனாரு.”

“எல்லாம், ஒண்ணு போலதான் இருக்குதுக!” எனச் சொல்லிச் சிரிக்க, “தமிழ்மா ரெடியாகிடுச்சு. எல்லாரையும் கூப்பிடு!” என்று குரல் கொடுத்தான் சேரல்.

கோவிலிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட, உண்டுவிட்டுச் சென்றனர். இவர்களும் வயிற்றை நிறைத்து, ஒரு பக்கமாய் அமர்ந்து கொண்டனர்.‌ சுத்தம் செய்வதற்கு ஆட்களை வரச் சொல்லி இருந்தான் சேரல். அதன் பின்னர், இல்லத்திற்குக் கிளம்புவதாக ஏற்பாடு.

தூக்கத்திற்கு அழுத மகளின் பசியை ஆற்றுவதற்காக, சற்றுத் தள்ளிச் சென்று அமர்ந்து கொண்டாள் தமிழ்.

சேரலின் அருகே இருந்த ஜக்கையின், “உங்கப்பா செய்ய ஆசைப்பட்டதை எல்லாம், நீயி செஞ்சு சாதிச்சிட்டடா. இந்நேரம் உசுரோட இருந்திருந்தா, உனைய பார்த்துப் பார்த்துப் பூரிச்சுப் போயிருப்பாரு!”

“அட, நீங்க வேற மாமா! ரோடு போட்டு, கோவிலுக்குப் பாலம் கட்டி, சின்னதா ஆஸ்பத்திரி, விளைஞ்சதை வைக்கிறதுக்குக் கட்டிடம்னு எல்லாம் செஞ்சது தமிழ்தான். குளத்துல இருந்து வாய்க்கால் வெட்டி, ஊருல எல்லா நிலத்துக்கும் தண்ணிப் போறது மாதிரி செஞ்சிட்டா.‌ என்ன, கவர்மெண்ட் பஸ்ஸைத்தான் ஊருக்குள்ள கொண்டு வர முடியாம போச்சு!”

மோகன், “அதான் நீயும் தமிழும் தனியார்ல பேசி, இங்க வரைக்கும் டவுன் பஸ்ஸை ஓட வச்சிட்டீங்களே.?”

“நாம என்ன, சும்மாவா வரச் சொன்னோம்? டிக்கெட்டுக்குக் காசு தான மாமா, அவனுக்கு!”

பரமசிவம், “அதுக்குக்கூட, முன்னாடி வரமாட்டேனு இல்ல சொன்னாங்க?”

“எதைச் செய்யவும், பதவியும் அதிகாரமும் தேவை பெரியப்பா.”

கீதா, “ஸ்கூல் விசயம் என்னாச்சு சேரா?”

“நேத்துக்கூட இதைப் பத்திப் பேசுனோம் அக்கா. எப்படியும் ஒண்ணு, ரெண்டு வருசம் ஆகும்னு சொன்னா தமிழ்.”

ஜக்கையன், “நல்ல பிள்ளப்பா, உனக்கு ஏத்தமாதிரியே அமைஞ்சிருக்கு!”

கீதா கேலியாய், “அமைஞ்சது இல்ல மாமா, அவளை வேணும்னு கேட்டுக் கட்டிக்கிட்டு வந்திருக்கான் உங்க மருமகன்.”

காயத்திரி வியப்பாய், “அவ்வளவு பிரியமா மாமா, அக்கா மேல?”

அவன் சிரித்துச் சமாளிக்க.. பரமசிவம், “ரத்னமும் கங்காவும் கூட இப்படித்தான் இருப்பாங்க‌. உங்கம்மா ஒண்ணைச் சொன்னா, உடனுக்குடனே செஞ்சு முடிச்சிடுவான் உன்னோட அப்பன்‌.‌ கங்காவும் அப்படித்தான்! என்ன, ரெண்டு பேருக்குமே அல்ப்பாயுசா போச்சு! நீயாவது, உன் பொண்டாட்டியோட ரொம்ப வருசத்துக்குச் சந்தோஷமா இருக்கணும்டா.‌”

“அம்மாவும் அப்பாவும் கொடுத்து வச்சவங்க பெரியப்பா. அதான், கடைசி வரைக்கும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரியவே இல்ல. நானும், அதுமாதிரி வரம் வேணும்னு தான் கேட்பேன். என்னால எல்லாம், அவ இல்லாம ஒரு நாளுக்கூட இருக்க முடியாது!” என்றவனின் தோளில் கனிவுடன் தட்டிக் கொடுத்தார் மூத்தவர்.

ஒலிப்பெருக்கியில் கசிந்த பாடலில்.. தமிழ், சேரல் இருவரது பார்வையும் அனிச்சையாய் மற்றவரிடம் திரும்பியது.

சொந்தம் பந்தம் உன்னைத் தாலாட்டும் தருணம்..

சொர்க்கம் சொர்க்கம் என்னைச் சீராட்ட வரணும்..

பொன்னி பொன்னி நதி நீராட வரணும்..

என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்..

அவள் புருவம் உயர்த்தி ‘என்ன’ என்பது போல் பார்த்திட.. பதிலிற்குப் புன்னகையை உதிர்த்தவன், மடியில் இருந்த மகனைத் தூக்கிக் கொண்டு மனையாளை நோக்கிச் சென்றான்.

வலிமையும் தகிப்பும் நிறைந்த தினையான அவனோடு, குளிர்ச்சியும் இனிமையுமான தேனாய் அவள் இணைந்தால்.. வாழ்க்கை தான் எத்தனை ருசிக்கிறது.? உணர்வுகளோடு நினைவுகளும் கூட கூட, சுவை கூட்டிச் செல்கிறது!

என்னில் நீயடி.. உன்னில் நானடி..

ஓ.. பைங்கிளி.‌.

நிதமும் என்னைத் தொட்டு.. நெஞ்சைத் தொட்டு..

 

 

???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!