Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedமனவீணையின் புதுராகமே

ராகம் 2.1

கைபேசியை பார்த்துக்கொண்டே சாலையின் ஓரம் சென்ற யாழி  சிறு பள்ளத்தில் கால் வைப்பதை பார்த்து உடனே ‘ஏய் பார்த்துடி இந்த பக்கம் வா’ என்று விஷ்ணு  அவளை தன் புறம் இழுத்து  நிறுத்தியிருந்தான்.

‘தேங்க்ஸ்டா’ என்று மீண்டும் அவள் கைபேசியை பார்க்க,

‘யாழி அப்படி என்ன பார்ப்ப முதல்ல போனை வச்சிட்டு சீக்கிரம் வாடி, நீ ஆடி அசைஞ்சு வரதுக்குள்ள கியூ பெருசாகிட்டே போயிடும் அப்புறம் சோறு கிடைக்காது ” 

‘இருடா நம்ம புது சேனல் அக்கா இப்ப ஷார்ட்ஸ் அப்லோட் பண்ணுவாங்க எப்பவும் நான் தான் முதல் லைக் முதல் கமென்ட் போடுவேன் ரெண்டு செக்கன்ட் இருடா போட்டுட்டு வந்துடுறேன்’



Advertisement

அவள் பேச்சில் எரிச்சல் கொண்டு.., “ஏன்டி  ரெண்டாவதா போட்டா அவங்க வேண்டாம்ன்னு சொல்லிடுவாங்களா…??” என்று கேட்க 

“அப்படி இல்ல தம்பி ஊரார் சேனலை நாம லைக் போட்டு வளர்த்தா நம்ம சேனல் தானா வளரும்..” என்று மிதப்பாக கூற,

“இதை எங்கயோ கேள்வி பட்டிருக்கேனே” 

Advertisement

“எங்கயும் கேள்வி பட்டிருக்க முடியாது ஏன்னா இதெல்லாம் யாழியின் பொன்மொழிகள் ”

Advertisement

“அது என்னவா இருந்துட்டு போகட்டும் பசி உயிர் போகுது சோறு முக்கியம் வாடி முதல்ல கியூல நின்னுட்டு கூட லைக்கை போடு யார் வேண்டாம் சொன்னா..??” என்று அவளை இழுத்துக்கொண்டு சென்று நின்றான் .

“யாழி விஷ்ணு இருவரும் வரிசையில் நிற்க அவர்களின் வரிசை மெதுவே நகர்ந்தது”

‘டேய் என்னை சொல்லிட்டு நீ என்னடா பண்றே..??’ என்றால் கைபேசியை ஆராய்ந்து கொண்டிருந்த தம்பியிடம்.

Advertisement

“அங்க பாரு” என்று அவர்களுக்கு இடப்புறம் காண்பித்தவன் சூரியன் மெல்ல மலைகளுக்கு இடையில் மறைந்து கொண்டிருப்பதை காண்பித்து

‘இதை கேப்சர் பண்ணி நடுநடுவுல சேர்த்துக்கலாம் யாழி நல்லா இருக்கும்’ என்றவன் கேமரா வழியே பார்க்க அங்கிருந்து சரியான கோணத்தில் அதை காணொளியாக பதிவு செய்ய முடியாமல் போக யாழியிடம்.., 

‘நீ எனக்கும் சேர்த்து பிரசாதம் வாங்கிடுடி நான் போயிட்டு  வரேன்’ என்று அவன் உட்புறம் செல்ல முயல,

‘டேய் எவ்ளோ நேரம் ஆகும்..??’

‘தெரிலடி எப்படியும் இருபது நிமிஷம் மேல எடுக்கும் நினைக்கிறேன்’

‘அவ்ளோ நேரமா…??’

‘ஆமாடி அப்படியே அந்த ஆங்கிள்ள இருந்து மொத்த இடத்தையும் சன் செட் ஆகறப்போ கவர் பண்ணிடுறேன்’ என்றான் அங்கிருந்த சிறு குன்றை காண்பித்து,

“அவ்ளோ நேரம் நான் என்ன பண்ண..??” என்றவள்

“சரி நான் அங்க இருக்க ராகவேந்திரர் கோவில் உள்ள கொஞ்சம் வீடியோ எடுக்குறேன் நீ அங்க வந்துடு இல்ல கால் பண்ணு நான் வெளியே வரேன்” என்று தூரத்தில் இருந்த கோவிலை சுட்டி காண்பித்து சொல்ல,

‘சரிடி’ என்று அவன் முன்னே நகரவும்

‘விஷ்ணு’

‘என்ன..??’

‘பத்திரமா போயிட்டு வாடா இருட்டிட்டு வருது ஏதாவது பூச்சி இருக்க போகுது’ என்றால் தம்பி மீதான அக்கறையில்

‘ஏய் லூசு நான் என்ன சின்ன குழந்தையா..?? எங்கயும் விழுந்து வைக்காம நீ பார்த்து போடி’ என்றவன் நடக்க தொடங்கினான்.

அவள் வரிசை இப்போது சற்று வேகமாக நகர அதிர்துடியனின் அலைபேசி ஒலித்தது.

அதை துண்டிக்க போனவன் தந்தையின் அழைப்பு என்று தெரியவும் அருகே இருந்த சொக்கலிங்கத்தை, ‘சித்தப்பு’ என்று அழைக்கவும் அவரும் புரிந்தார் போல,

‘நான் பார்த்துக்குறேன் துடியா நீ பேசிட்டு வா’

அவன் சற்று ஒதுங்கி அழைப்பை ஏற்கவும் லைன் கட்டாகவும்  சரியாக இருந்தது, ஆனாலும் தந்தை அவசியம் இன்றி அழைக்க மாட்டார் என்பதால் உடனே அவருக்கு அழைத்து விட்டான்.

மறுபுறம் அழைப்பு சென்று கொண்டிருக்க அவர் எடுக்கவில்லை அதி மீசையை இருவிரலால் நீவியவாறே மீண்டும் அவருக்கு அழைப்பு விடுத்தவன் பக்தர்களின் மீது பார்வை பதிக்க அவன் விழிவட்டத்தில் விழுந்தாள் யாழி.

அந்தி சூரியக்கதிர்கள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு  பட்டு தெறித்ததில் மாசுமருவற்ற அவள் பால் வர்ண முகத்தின்  தேஜஸ் இன்னுமே கூடிட  அதுநேரம் வரை விரித்து விட்டிருந்த கூந்தலை சாப்பிடுவதற்கு ஏதுவாக மொத்தமாக தூக்கி உச்சியில் கொண்டையாக கட்டிக்கொண்டிருந்தவளின் முகத்தில் இப்போது துளி ஒப்பனை இல்லை. அதிலும் இடப்புற நாசியில் அவள் அணிந்திருந்த ஒற்றை கல் மூக்குத்தி அவளுக்கு தனி வசீகரத்தை கொடுக்க அதியின் பார்வை அவனையும் அறியாமல் அவள் மீது இரண்டு நிமிடங்கள் அழுத்தமாக படிந்தது.

ஆம் இதற்கு மேல் இருட்டில் எதற்க்காக ஒப்பனை என்று வரும் வழியிலேயே முகத்தை கழுவி துடைத்து நெற்றியின் மத்தியில் சிறு பொட்டை ஓட்டவைத்து  திருநீறை சிறு கீற்றாக அதன் மேல் வைத்திருந்த யாழி வரிசை கிட்டே நகர்வதால் கைபேசியை ஜீன்ஸ் பேக்கட்டில் வைத்து விட்டு  அவ்வப்போது முன்னே எட்டி பார்த்து இன்னும் எத்தனை பேர் என்பதை கணக்கிட்டு கொண்டு வந்தாள்.

இதுவரை எந்த பெண்ணின் மீதும் அவன் பார்வை நொடிக்கும் அதிகமான நேரம்  படிந்ததில்லை அந்த அளவு எந்த பெண்ணும் பெரிதாக அவனை ஈர்த்ததில்லை ஆனால் இப்போது ஏதோ ஒன்று அவனை யாழியின் பால் கட்டி இழுக்க பார்வையை திருப்ப முடியாமல் அவள் மீது நிலைக்கவிட்டான்.

காவி நிற டாப்சில்  தோள்பையை ஒரு பக்கமாக பிடித்து கொண்டு செவியோரம் புரண்ட கூந்தல் கற்றையை ஒதுக்கி விட்டவாறே அங்குமிங்கும் அலைபாய்ந்த அவள் கருவிழிகளோடே அவனும் பயணிக்க தொடங்கி விட்டான்.

அப்போது தான் இருக்கும் இடம் உணர்ந்தவன் ‘அதி எங்க இருந்துட்டு என்ன பண்ணிட்டு இருக்க..??’ என்று தன்னை தானே கடிந்து கொண்டு  கைபேசியை பாக்கெட்டில் வைத்து பின்னந்தலையை அழுந்த கோதி விட்டுக்கொண்டே  தன் பார்வையை  திருப்ப முயன்றான்.

முயன்றான், ஆனால் முடிந்தால் தானே..??

வேட்டி நுனியை ஒரு கையால் பிடித்து கொண்டு மீசையை நீவியவாறே அவன் தன் பார்வையை  திருப்ப முயன்ற நொடி  முன்னே இருந்த பெண்ணின் கையில் இருந்த குழந்தையை பார்த்து கண்களை சுருக்கி இதழ்களை குவித்து கொஞ்சிக்கொண்டே முன்னேறிக்கொண்டு இருந்தவள் இறுதியாக சிரித்த சிரிப்பில் தோன்றிய அவள் கன்னக்குழி விளிம்பில் மொத்தமாக தன்னை தொலைத்து நின்றான் அதிர்துடியன்.

சில கணங்கள் ஏதோ மாயசுழலில் சிக்கி தவித்து அவனுள் ஏற்ப்படும் ரசாயன மாற்றங்களை தாள முடியாமல் மூச்சை இழுத்து வாய் வழியே வெளியேற்றி நெஞ்சை நீவிவிட்டவாறே அதிர் அரும்பாடு பட்டு தன்னை மீட்கவும் தான் யாழி அவர்களை நோக்கி வந்து கொண்டிருப்பதையே உணர்ந்தான்.

********************************************************

உடனே சொக்கலிங்கத்திடம் சென்றவன் ‘நான் பார்த்துக்குறேன் சித்தப்பு’ என்று கூற அதே நேரம் மீண்டும் அவன் தந்தையின் அழைப்பு.., யாழியை பார்த்தவாறே அதை அவன் துண்டிக்க உடனே மீண்டும் அழைத்திருந்தார் சுந்தரலிங்கம்.

அதையும் அவன் துண்டிக்க,

‘துடியா அண்ணன் கால் பண்ற மாதிரி இருக்கு போய் பேசிட்டு வா’ என்று சொக்கலிங்கம் சொல்லவும் தான் தந்தையின் நினைவு வரவும் உடனே எடுத்தான்.

‘அப்பா’ என்றவனின் பார்வை இப்போதும் யாழி மீதே..!!

‘அதி  ரொம்ப சத்தமா இருக்கு நான் பேசுறது கேட்குதா கொஞ்சம் தள்ளிவா’ என்று அவர் கூற,

‘ப்பா என்ன சொன்னீங்க..??’ என்றான் அவர் சத்தத்தில்

‘ஒன்னும் கேட்கலை கொஞ்சம் தள்ளி வா’ என்று அவர் கூறவும் கடைகளை தாண்டி மெல்ல உள்புறமாக நகர்ந்தான். 

‘சொல்லுங்கப்பா’

எடுத்ததுமே ‘அதி வேலாயுதம் தன் வேலையை காட்டிட்டான்’ என்றவர் குரலில் பதட்டம்.

‘என்னப்பா ஆச்சு..??’ என்றவனின் பார்வை இப்போது யாழியிடம் இருந்து திரும்பி அழைப்பில் கவனம் பெற்றது.

‘பாக்டரில முட்டி மோதி முடியாம போக இப்போ நம்ம ஸ்கூல் பேரை கெடுக்க கிளம்பி இருக்கான்’ என்றிட அதியின் நெற்றி சுருங்கி விரிந்தது.

‘ஸ்கூல்ல என்ன பண்ணான்..??’ என்று ஏற்றிய புருவங்களுடன் அதி கேட்கவும் அவர் விவரிக்க தொடங்கினார்.

வேலாயுதம் அவர்களது தொழில்முறை போட்டியாளர் சுந்தர்லிங்கத்திடம் பல முறை மோதி தோற்று போனவர்  இப்போது வேறு விதத்தில் அவர்கள் பெயரை கெடுக்கும் முயற்சியில் இறங்கி இருந்தார். ஒவ்வொரு முறையும் வேலாயுதத்தின் சூழ்ச்சியை முறியடித்து அதிர்துடியன் அவரை வீழ்த்திய போதும் விடாமல் தந்தைக்கு குடைச்சல் கொடுக்கும் நபரின் பார்வை இப்போது  பள்ளி குழந்தைகள் மீது எனும் போது அதியின் முகத்தில் அத்தனை ரௌத்திரம்.

மறுபுறம் மகன் அமைதியாக இருக்கவும் பேச்சை தொடர்ந்தவர், ‘இப்ப என்னப்பா பண்றது..?? பசங்களும் பாதிக்க படகூடாது ஸ்கூல் பேரும் கெடக்கூடாது பேசாம நான் எம்எல்ஏ கிட்ட பேசட்டுமா..??’ என்றவரின் குரலில் தவிப்பு.

அதே நேரம் அதியை கடந்து சில பெண்கள் செல்வதை கண்டவன் வேறு புறம் திரும்பி செல்ல முனைய அவர்கள் பின்னே கையில் அலைபேசியை தூக்கி பிடித்தவாறு விஷ்ணு சென்று கொண்டிருந்தான்.

அதை கண்ட அதிர் அவன் சட்டையை இழுத்து பிடித்து நிறுத்தி இருந்தான்.

அதை எதிர்பாராமல் அவன், ‘யார் சார் நீங்க சட்டையை விடுங்க’ என்றான்,

“ப்பா ஒரு நிமிஷம் நான் கூப்பிடுறேன் இருங்க” என்று அழைப்பை துண்டித்தவன் விஷ்ணுவிடம்,

‘எங்கடா போற..??’

‘அதை கேட்க நீங்க யாரு..??’ என்று அவன் தெனாவட்டாக கேட்கவும்,

‘கேட்ட கேள்விக்கு பதில்’

‘நீங்க யார் என்னை கேள்வி கேட்க..?? கை எடுங்க’ என்றவாறு அவன் யாழிக்கு அழைக்க,

அதியோ அவன் சட்டையை விடுத்து ஒருகையால் அவன் கழுத்தை வளைத்து பிடித்தவன்  கண்ணிமைக்கும் நேரத்தில் மறுகையால் அவன் கையில் இருந்த கைபேசியை பறித்திருந்தான்.

“என் போன் போன்” என்ற விஷ்ணு அதியிடம் இருந்து விடுபட முயல அவன் முயற்சியில் அதிரின் பிடி இறுகி கொண்டே சென்று ஒரு கட்டத்தில் அவன் கழுத்தில் வலி கூடி கொண்டே போனது.

அதியின் கையை  பற்றிக்கொண்டே ‘விடுங்க’ என்று அவன் போராட,

‘டேய் எங்க போறன்னு கேட்டேன்’ என்று மீண்டும் அழுத்தமாக வந்து விழுந்தது அதிரின் வார்த்தைகள்.

“அதெல்லாம் நீங்க எதுக்கு சார் கேட்குறீங்க..?? முதல்ல விடுங்க  என் போனை கொடுங்க ” என்றான் அதிகாரமாக,

‘அப்போ நீ சொல்லமாட்ட..??’ என்று அதிர் தலைசாய்த்து புருவம் உயர்த்த,

“யோவ், நீ யாருய்யா அதை …” என்று அவன் முடிக்கும் முன்னமே விஷ்ணுவை சுழற்றி தன் முன் கொண்டு வந்து அதே வேகத்தில் ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டிருந்தான் அதிர்துடியன்.

‘ஆ ஆஅம்மா…’ என்று வலியில் முனங்கியவன் மூக்கில் ரத்தம்  வருவதை உணர்ந்து ‘சார்ர்ர்ர்’ என்று அச்சத்துடன் அவனை பார்க்க,

‘மரியாதை’ என்று சுட்டு விரல் நீட்டி விஷ்ணுவை எச்சரித்தவன்,

‘இன்னும் மீசை கூட ஒழுங்கா முளைக்கலை உனக்கு..’ என்றவனின் கண்களில் கனல் கனன்றது.

“இப்ப சொல்லு பொண்ணுங்க பின்னாடி போனை எடுத்துட்டு எதுக்கு போன..?? ” என்றவனின் குரலிலே விஷ்ணுவை கதி கலங்க செய்து இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!