ராகம் – 13
ஸ்டேரிங்கில் தாளமிட்டவாறே, “எனக்கும் யாழியை கடத்திட்டு போக தோணுது கடத்திடலாமா..??” என்று புருவம் உயர்த்தி அதி கேட்கவும்,
அவன் பதிலில் தூக்கி வாரி போட அவனை பார்த்தாள் யாழி.
அதற்குள் வாகனத்தை மருத்துவமனையின் முன் நிறுத்திய அதி ‘அதுக்கு இன்னும் நாள் இருக்கு இப்போ இறங்கு’ என்றான்.
யாழியோ எந்த இடம் என்று புரியாமல் முன்னே கண்ணாடி வழியே பார்க்க அங்கு ‘அக்ஷரா மருத்துவமனை’ என்ற பலகையை பார்த்து ஆசுவாச மூச்சை விட,
Advertisement
அதிரோ குனிந்து, ‘சோ பார் நீ நார்மலா இருந்தாலும் இஞ்சுரி ஏதாவது இருக்க போகுது டாக்டர் கிட்ட செக் பண்ணிட்டு கிளம்பலாம் வா..’ என்று அழைக்க,
ஏற்கனவே அவன் பேசிய பேச்சில் திகைத்து போயிருந்தவள் “இல்ல வேண்டாம் எனக்கு ஒண்ணுமில்லை நல்லா இருக்கேன் நா.. நாம.. என்னை வீட்டுல விட்டுடுங்க ப்ளீஸ்” என்றவளுக்கு ஊசி என்றால் அத்தனை பயம் அதனாலேயே அவள் பின்வாங்க.,
மீண்டும் இருமுறை அழைத்தும் அவள் வர மறுக்க ‘யாழி இதென்ன அடம்..?? சொன்னா கேளு டாக்டர் பார்த்துட்டு கிளம்பிடலாம்’ என்று கதவை திறந்தவன் அவள் மீண்டும் மறுப்பதற்கு முன் கதவை திறந்து அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.
Advertisement
‘என்ன இது என்.. என்னை கீழ விடுங்க’ என்று அவள் விடுபட பார்க்க,
Advertisement
‘ஷ்ஷ்ஷ்.. உன்னால சரியா நடக்க முடியாது கால்ல அடிபட்டிருக்கு’ என்றிட அவள் விழிகளோ எப்படி தெரியும் என்பதாக விரிந்தது.
ஆம் உடை மாற்றி இறங்கிய போது தான் அவளே அந்த வித்யாசத்தை உணர்ந்தாள் ஆனால் அவன் அதையும் கவனித்து கூறிட,
‘உங்களுக்கு எப்படி தெரியும்..??’ என்றவளின் குரலிலும் முகத்திலும் அத்தனை ஆச்சர்யம்.
Advertisement
‘தெரியும்’ என்று கண் மூடி திறந்தவன்,
‘இரண்டு அடிக்கு மேல உன்னால நடக்க முடியாது அதனால அமைதியா வரணும் புரியுதா..??’ என்று கதவை சாற்றி பூட்டியவன் அவளை ஏந்தி கொண்டு மருத்துவரின் அறையில் சென்று நின்று, ‘பிரஷா எங்க..??’ என்று அங்கிருந்த செவிலியரிடம் கேட்க,
திரையின் பின்னே கைகளை கழுவி கொண்டு இருந்த பிரஷாந்தி அவன் குரலை இனம் கண்டு கொண்டு,
“அடடா என்ன திடீர்ன்னு இந்த பக்கம் காத்தடிக்குது, சார் கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணீட்டீங்களா..?? எங்க நம்மூர் ஆஞ்சநேயருக்கு பக்கத்துல உனக்கு கோவில் கட்ட வச்சிடுவியோன்னு நெனச்சேன் ஆனா அதுக்கு …” என்று கேட்டவாறு திரையை விலக்கிக்கொண்டு புன்னகையுடன் வந்தவர் அவன் கையில் இருந்தவளை கண்டு தன் பேச்சை நிறுத்தி,
“அதி வாட் எ சர்ப்ரைஸ் கல்யாணமே ஆகிடுச்சா..?? எப்ப கல்யாணம் பண்ண ஒரு வார்த்தை சொல்லலை” என்றவர்
‘இன்னும் இல்ல பிரஷா..’ என்ற அதிரின் வார்த்தையை பொருட்படுத்தாமல்,
“உன் வைப்பை தவிர வேற யாரையும் விளையாட்டுக்கு கூட தூக்க மாட்டேன்னு அன்னைக்கு கெட்டூகெதர்ல சொன்னவன் தானே நீ..?? இப்போ தூக்கிட்டு வந்திருக்கன்னா இவங்க உன் வைப்ன்னு தானே அர்த்தம்..??” என்று புன்னகைத்தவர்,
“எப்படி சரியா கண்டுபிடிச்சேனா..?? இதுக்கே எனக்கு தனியா ட்ரீட் கொடுக்கணும் மேன் நீ..” என்றவரின் பார்வை யாழி மீது..,
அவளோ ஒன்றும் புரியாமல் அவரை தான் பார்த்திருந்தாள்.
“ஹாய் ஐ ஆம் பிரஷாந்தினி அதியோட ஸ்கூல்மெட்” என்று அவளிடம் கை கொடுத்தவர் அவள் நிலையை கண்டு அதிரிடம் “இப்படியே தான் வச்சிருக்க போறியா..?? கீழ இறக்கி விடற எண்ணம் இல்லையா..??” என்று புருவம் உயர்த்தி கேட்க,
‘ஆமா, உன்னை நம்ப முடியாது’ என்ற அதிரதுடியனிடம் இதழ்களை மீறா புன்னகை..,
“நம்பி கீழ விடு மேன் உன் வைப்பை பத்திரமா ட்ரீட் பண்ணி திருப்பி கொடுத்துடுவேன், அதுக்கு தானே வந்திருக்க..??” என்று கேட்க,
இப்போது ப்ரஷாந்தினியிடம் இருந்து பார்வையை திருப்பி யாழி அதியை பார்த்தாள் அவனோ புன்னகையுடன் ப்ரஷாந்தினியை பார்த்தவன் யாழியை நாற்காலியில் அமர்த்தி,
‘இப்போ ஒத்துக்குறேன் நீ டாக்டர் தான்னு எதிர்பாராம தண்ணில விழுந்துட்டா கால்ல அடிபட்டிருக்கு வேற எங்கயாவது இருக்கான்னு செக் பண்ணு’ என்று அவளருகே அமர,
“தண்ணில விழுந்தாங்களா..?? பிரஸ்ட் எயிட்..” என்று அவர் முடிக்கும் முன்னமே,
“அதெல்லாம் நானே பார்த்துட்டேன் அதான் உன் முன்னாடி உட்காந்து இருக்கா” என்றிட
“ஓஒ சரி சரி, ஆமா நீ எங்க இங்க உட்காந்துட்ட வெளியே போ மேன் நான் பார்த்து சொல்றேன்” என்று அவனை அதட்ட,
‘எல்லாம் என் நேரம் பேச வேண்டிய இடத்துல பேசிக்கிறேன் உன்னை’ என்று அவனும் குறுநகையுடன் மிரட்ட,
நானும் “உன்னை பேச சொல்லி பல வருஷமா சொல்லிட்டு தான் இருக்கேன் எங்க நீதான் எனக்கு அல்வா கொடுத்துட்டு இப்ப கமிட் ஆக்கிட்ட” என்று தொடர்ந்த இருவரின் இணக்கமான பேச்சும் புன்னகையையும் கண்டவளுக்கு ஏனோ மனதை பிசைந்தது.
ஏதோ ஒன்று கைநழுவி போவது போன்ற நிலையில் பேதை நெஞ்சம் தத்தளிக்க அதை இனம் காண முடியாமல் கண்களை முட்டி நின்ற கண்ணீரை கட்டுபடுத்தியவளாக இருவரையும் பார்த்திருந்தாள்.
‘சரி நான் வெளியே வைட் பண்றேன் சீக்கிரம் பாரு’ என்று அதி கிளம்பவும் அவளிடம் பேச்சு கொடுத்த ப்ரஷாந்திக்கு ஏனோ பதில் கூற பிடிக்காமல் முகத்தை திருப்பி சுவரை வெறித்தாள்.
யாழியை பரிசோதித்து கொண்டே அவர் கேள்விகளுக்கு எல்லாம் வெறுமனே தலை அசைத்து அமர்ந்திருந்தவளுக்கு அங்கிருந்து உடனே கிளம்பிவிடும் வேகம்.
உள்ளே வந்த அதிர்துடியனிடம் “பெரிதாக காயம் எதுவும் இல்லை காலில் மட்டும் கட்டு போட்டிருக்கேன் இந்த டேப்லெட்ஸ் ரெண்டு நாளைக்கு கொடுங்க” என்று சீட்டை கொடுக்கவும் எங்கே மீண்டும் பிரஷாந்தினி உடன் பேச்சை தொடங்கி விடுவானோ என்று பயந்தவள் அவனருகே சென்று தைரியமாக அவன் கையை பிடித்து கொண்டு,
‘இப்ப ஓகே கிளம்பலாமா..?? ‘ என்று கேட்க,
அதை கண்ட ப்ரஷாந்தினிக்கு அடக்க முடியாத சிரிப்பு,
அதை கண்டு முறைத்த அதி ‘எதுக்கு சிரிக்கிற..??’ என்பதாக பார்க்க,
“அடுத்து மேரேஜ் இன்விடேஷனோட வருவியா இல்ல ஸ்ட்ரெயிட்டா டெலிவரிக்கா..??’ என்று கேலியுடன் கேட்க,
‘ப்ரஷா’ என்ற அதட்டல் அதிரிடம்..,
‘என்னை ஏன் முறைக்கிற உன் ஆளை பாரு’ என்று கண்ஜாடை காட்டியவர்,
‘முரளி நாளைக்கு தான் மும்பைல இருந்து வரார் ரெண்டு மாசம் இங்க தான் இன்விடேஷன் அனுப்பு வந்துடுறோம்’ என்று அவர்களுக்கு விடை கொடுக்க வெளியே வந்த யாழிக்கு அப்போது தான் நிம்மதியாக சுவாசிக்க முடிந்தது.
“எத்தனை வருஷ லவ் அதி.., ஒரு வார்த்தை சொல்லலை.., எங்கே நான் உன்னை கொத்திட்டு போயிடுவேனோன்னு உன் ஆளு கண்ணுல மரண பீதி” என்று அடுத்ததடுத்து வந்த பிரஷாந்தினியின் மெசேஜை பார்த்து புன்னகையுடன் வண்டியை எடுத்தான் அதிர்துடியன்.
****************************************
மருத்துவமனையில் இருந்து திரும்பிய அதிர் இடது வளைவில் இண்டிகேட்டர் போட்டுக்கொண்டு காரை திருப்ப முயல அதற்குள் அவன் பின்னே வந்த இருவாலிபர்கள் அதை கவனிக்காமல் ராங் ரூட்டில் அவனை முந்தி கொண்டு செல்ல முயல கண்ணாடியில் அதை கவனித்த அதிர் விபத்தை தவிர்ப்பதற்காக காரை வேகமாக முன்னே செலுத்துவதற்குள் அவன் பின்னே அதிவேகமாக வந்தவர்கள் கட்டுபடுத்தமுடியாமல் காரின் பின்பகுதியில் இடித்து கீழே விழுந்திருந்தனர்..,
அனைத்தும் ஓரிரு நொடிகளில் நிகழ்ந்துவிட்டது இத்தனைக்கும் அதிர்துடியன் சுதாரிக்காமல் போயிருந்தால் அவன் காரில் இன்னுமே பலமாக மோதி தூக்கி எறியபட்டிருப்பர்.
முதல் முறையாக விபத்தை நேரில் பார்க்கும் யாழிக்கு தூக்கி வாரி போட நிலை குத்திய விழிகளுடன் திரும்பி பார்த்திருந்தாள். அதி கீழே இறங்கி அவர்களை நோக்கி செல்லவும் பதட்டத்துடன் அவளும் கதவை திறந்து இறங்கினாள்..
ஆனால் அவள் ஒரு அடி எடுத்து வைக்கும் முன் ‘அங்கேயே இரு’ என்ற அதிரின் பார்வை புரிந்தவளாக கார் கதவை பிடித்து கொண்டு நடப்பதை பார்த்திருந்தாள்.
கீழே விழுந்தவன் முறிந்த கையை தூக்க முடியாமல் ஒரு கையால் பிடித்து கொண்டு எழ முற்ப்பட அதற்குள் அவர்களை நெருங்கிய அதிரிடம்,
‘யோவ் உனக்கென்ன கண்ணா தெரியலை நாங்க தான் வீடியோ எடுத்துட்டு வந்துட்டு இருக்கோமே ஒழுங்கா வழி விட்டு வண்டி ஓட்ட தெரியாதா உனக்கு..??’ என்றிட,
அவர்களை எழுப்பி நிறுத்தி ‘ஏன்டா இது என்ன உங்கப்பன் போட்ட ரோடா..?? இண்டிகேட்டர் போட்டது கூட தெரியாத அளவு போன் உங்க கண்ணை மறைக்குது’ என்று கேட்டவாறே இருவரையும் ஓங்கி அறைந்திருந்தான்.
‘எதுக்கு சார் அடிக்கிறீங்க..??’ என்று கேட்க, அதற்குள் சிறு கூட்டம் கூடிவிட்டது.
நடந்ததை அருகே இருந்த கடைகளில் இருந்து பார்த்தவர்கள் அவர்களை திட்டி அதிரிடம் போலீசில் ஒப்படைக்க சொல்ல அதிர்துடியனோ அவர்கள் பைக்கில் முன்னே பொருத்தி இருந்த கைபேசியை பார்க்க அதுவோ காரின் சக்கர இடுக்கில் சிக்கி உடைந்து உயிர்விட்டிருந்தது.
‘வண்டி டேமேஜ், நியூசன்ஸ் கேஸ் எதுவும் போடாம விடுறேங்கிற சந்தோஷத்தோட ஒழுங்கா வீடு போய் சேருங்க’ என்று எச்சரித்து திரும்பியவன் குறையாத ஆவேசத்துடன் காரில் வந்து அமர்ந்தான்.
பின்னே அவர்கள் இருவரும் வீலிங்(wheeling) செய்தவாறு அதை கைபேசியில் பதிவு செய்து கொண்டு வந்தவர்கள் அதிர்துடியன் இண்டிகேட்டர் போட்டதையும் கவனிக்கவில்லை, அவன் வளைய முற்படுவதையும் கவனிக்கவில்லை இறுதி நொடியில் தான் சுதாரித்து நிறுத்துவதற்குள் முடியாமல் இடித்து கீழே விழுந்திருந்தனர்.
அதிர் ஏறுவதை கண்ட யாழியும் உடனே கதவை திறந்து கொண்டு அமர அவன் வண்டியை எடுத்திருந்தான்.
யாழியை பார்த்தவாறே வாகனத்தை எடுத்தவன் அவள் அதீத அதிர்ச்சியில் இருப்பதை கண்டு சிறிது தூரம் தள்ளி காரை நிறுத்தி, ‘ரிலாக்ஸ் யாழி’ என்றவாறு தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்ட,
அதை வாங்கி கடகடவென குடித்தவள் வாயை துடைத்து விட்டுக்கொண்டே, “நீ..நீங்க… எல்லாரையும் இப்படி தான் அடிப்பீங்களா..??” என்ற கேட்க அவள் கேள்வியே நாளை என்னையும் இப்படி தான் அடிக்க போகிறாயா..?? என்ற மறைபொருளை கொண்டிருந்தது.
அவள் குரலை கேட்டவனிடம் அத்தனை நேரம் இருந்த ஆவேசம் மறைந்து இதம் பரவியது.
“அப்படி இல்லடா, முன்னெல்லாம் கார் ரேஸ் பைக் ரேஸ் நடக்க குறிப்பிட்ட இடம் இருக்கும் அதே போல தான் சினிமா ஷூட்டிங்கும் ஆனா அதுக்கு முறைப்படி அனுமதி வாங்கி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத அளவு நடத்துவாங்க. ஆனா எப்போ இந்த ஸ்மார்ட் போன் வந்ததோ அப்பவே எல்லாருக்கும் பிசி ஸ்ரீராம்ன்னு நினைப்பு…!!”
“நெனச்ச நேரம் போனை எடுத்து எங்க எப்படி இருக்கோம்ன்னு கூட பார்க்காம பப்ளிக் நியூசன்ஸ் க்ரியேட் பண்ணி அவங்க உயிர் மட்டும் இல்லாம நம்ம உயிரையும் ஆபத்துல கொண்டு நிறுத்துற ஆட்கள் இப்போ அதிகமாகிட்டாங்க… அப்படி பட்டவங்களுக்கு சில நேரம் வாயால சொன்னா புரியறதில்ல அப்பப்போ கையால சொல்ல வேண்டி இருக்கும் அதான்” என்றவாறு வண்டியை எடுத்தான்.
இன்னுமே அடங்காத படபடப்புடன் கைகளை கோர்த்து கொண்டு அமைதியாக அமர்ந்த யாழியை கண்டவனுக்கு உருகி போனது பின்னே தண்ணீரில் விழுந்ததில் தொடங்கி ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சியை தான் தாங்குவாள் என்று ..!!
‘இன்னும் அவனிடம் சகஜமாக பேச முடியாமல் இருப்பவள் முன் இப்போது அவர்களை அறைந்து வைத்து இன்னும் அவளை பயமுறுத்தி விட்டோமோ..??’ என்று தோன்ற அவள் மௌனத்தை உடைக்கும் பொருட்டு,
“யாழியோட ஆம்பிஷன் (ambition) என்ன..??” என்று கேட்டிருந்தான்.
சற்று முன் அடி வாங்கியவர்களை பற்றிய சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவளுக்கு திடீரென அவன் குரல் காதில் விழுந்தாலும் என்ன என்று புரியாததால், ‘என்.. என்னது..?? ஏதாவது கேட்டீங்களா..??’ என்றாள்.
ஆம் என்பதாக தலையசைத்து அவள் புறம் திரும்பிவன், “யாழிக்கு என்னவா வரணும்ன்னு குறிக்கோள்ன்னு கேட்டேன்” என்றான்.
ஒருவேளை அவள் ஏதேனும் லட்சியம் கொண்டு திருமணமானால் அது நிறைவேறாது என்ற பயத்தில் திருமணத்தை ஒத்தி போட நினைக்கிறாளோ.., என்று சந்தேகத்தை நிவர்த்தி செய்திட முனைந்தான்.
அவளுக்கோ அவன் கேள்வியில் உள்ளுக்குள் குளிர் பரவியது !!
‘பின்னே அவள் லட்சியத்தை மட்டும் அவனிடம் கூறினால் என்னவாகும் என்று அவளுக்கு தெரியாதா..?? சற்று முன் கைபேசியுடன் நடுரோட்டில் அவர்கள் வாங்கியதையும் அதனால் உதடு கிழிந்து உண்டான குருதி பெருக்கையும் நேரில் கண்டவளுக்கு இனியும் அந்த தைரியம் தான் இருக்குமா என்ன..??
அதை விட அவள் தன் லட்சியத்தை கூறி அதனால் அவனுக்கு அவளை பிடிக்காமல் போனால் அல்லது அவளை வெறுத்து மறுத்துவிட்டால் என்னவாவது என்ற சிந்தனை பிறக்க யாழி முகம் அச்சத்தில் வெளிறி போனது.
ஆம்.., நேற்று திருமணத்தை மறுத்த போது கூட பெரிதாக ஒன்றும் தெரியவில்லை அமேசானில் பொருளை ஆர்டர் போட்டு கேன்சல் செய்வது போல எளிதாக செய்துவிட்டாள் ஆனால் எங்கே அவன் தன்னை நிராகரித்து விடுவானோ என்ற பயம் அடிமனதை ஆட்டிபடைக்க இப்போது வாழ்வு குறித்த பயம் முதன்முறை எழுந்து பெண்ணவள் மனமெங்கும் ரணம் பரப்பியது.
‘சொல்லு யாழி ..?? what’s your ambition..??’என்றான் மீண்டும்.
***********************************************
