Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennavalin Innisai

Ennavalin Innisai 1 2

அவனிடம் தெரிந்த வசீகரம் அவள் மனதை மயக்கியது. அவனையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை அவள் மனதில் எழுந்தது. மனம் எல்லாம் படபடக்க கை கால் எல்லாம் நடுக்கம் எடுக்க ஏதோ ஒரு புது வித உணர்வு அவளை ஆட்கொண்டது. இதெல்லாம் அவளுக்கு புதிய உணர்வு. ஏற்கனவே அவள் படித்த பள்ளியில் அருண், கிஷோர், கார்த்தி என்று ஆண் நண்பர்கள் உண்டு. அது போக நவீனின் நண்பர்கள் கூட வீட்டுக்கு வருவார்கள்.

அவர்களை எல்லாம் அண்ணன் என்று அழைத்து சாதாரணமாக கதை பேசும் ஸ்ருதி முதல் முறையாக ஒருவனிடம் மயங்கி நின்றாள்.



Advertisement

“என்ன டி நின்னுட்ட? வா”, என்று சொல்லி அவளுடைய கை பற்றி அழைத்துச் சென்ற தேன்மொழி ராகவன் முன்னே நின்றாள்.

Advertisement

அவன் அருகே நின்றதும் ஸ்ருதியின் படபடப்பு கூடியது. அவள் கை கால்கள் எல்லாம் தந்தி அடிப்பது போல இருந்தது.

Advertisement

“ஸ்ருதி இவன் தான் என்னோட அண்ணன் ராகவன். டுவல்த் படிக்கிறான். மேக்ஸ் குருப்”, என்று அறிமுகப் படுத்திய தேன்மொழி அவனிடம் திரும்பி “அண்ணா இது என்னோட புது ஃபிரண்ட். இன்னைக்கு தான் நம்ம ஸ்கூல்க்கு வந்திருக்கா. பேர் ஸ்ருதி”, என்று சொன்னாள்.

Advertisement

அவள் சொன்னதைக் காதிலே வாங்காதவன் “கிளாஸ் முடிஞ்சி வர நேரமா டி இது? எனக்கு எவ்வளவு நேரம் ஆகுதுன்னு தெரியுமா? நான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நீ ஆடி அசைஞ்சு நடந்து வர. உன்னை கூட்டிட்டு வரலைன்னா அம்மா வேற திட்டுறாங்க. சீக்கிரம் வந்து தொலை. எனக்கு பல வேலை இருக்கு”, என்று சொன்னவன் அவனுடைய சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அவன் ஸ்ருதியை லேசாக கூட பார்க்க வில்லை. தேன்மொழி அறிமுகப் படுத்தியதும் அவன் தன்னைப் பார்ப்பான், ஒரு ஹாயாவது சொல்லுவான் என்று எதிர் பார்த்த ஸ்ருதி அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் அவள் புறம் திரும்பக் கூட இல்லை.

அவன் பாரா முகத்தால் அவள் முகம் வாடி நிற்க “சாரி ஸ்ருதி, அவன் இப்படி தான். சரியான சிடுமூஞ்சி. இப்படி ஒரு அண்ணன் எனக்கு. சரி வா போகலாம். வெளிய நின்னுட்டு இருப்பான். லேட்டா போனா இன்னும் கத்துவான். நாம நாளைக்கு பாக்கலாம்”, என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு கேட்டுக்கு வர அங்கே நின்றான் ராகவன்.

“சரி டி நான் வரேன்”, என்று தேன்மொழி ஸ்ருதியிடம் சொல்லிக் கொண்டிருக்க “சீக்கிரம் வா தேனு”, என்று கத்தினான் ராகவன். அவன் கத்தியதும் தோழியிடம் கண்ணைக் காட்டி விட்டு கிளம்பினாள் தேன்மொழி. “அவன் ஏன் என்னைப் பாக்கலை? எதுக்கு ஒரு ஹாய் கூட சொல்லலை? என்னைப் பாத்து சின்னதா சிரிக்க கூட செய்யலையே?”, என்று எண்ணிக் கொண்டிருந்தவளின் மனதை ராகவனே ஆக்ரமித்திருந்தான். அவனது பாராமுகம் அவள் மனதில் பெரியதாக பதிந்தது.

ஆனால் அவள் எண்ணியது போல அவன் அவளை பார்க்காமல் செல்ல வில்லை. தேன்மொழியுடன் அவள் நடந்து வரும் போதே அவளைப் பார்த்தான்.

“என்ன இந்த தேனு ஒரு புது பொண்ணு கூட வரா. இது யாரா இருக்கும்?”, என்று தான் எண்ணினான். ஆனால் அவள் தன்னைக் கண்டு சிலை என நிற்பதையும் அவள் கண்களில் வந்து போகும் ஆர்வத்தையும் பார்த்து திகைத்து தான் போனான்.

தேன்மொழி போல ஸ்ருதியும் “ஹாய் அண்ணா”, என்று சொல்லி பேச ஆரம்பித்திருந்தால் அவனும் அவளிடம் பேசி இருப்பான். ஆனால் அதற்கு முன்னே அவளுடைய கண்களில் ஒரு ரசிக்கும் பாவனையும், சிறு வெட்கமும், ஆர்வமும் உருவாக அவளை திரும்பிப் பார்க்கவே கூடாது என்று எண்ணிக் கொண்டான்.

ஆனாலும் “இந்த பொண்ணு எதுக்கு முதல் நாளே இப்படி ஒரு லுக் விடுது?”, என்று அவன் மனதில் சிறு யோசனை வந்தது.

அவனைப் பற்றி எண்ணிக் கொண்டு ஸ்கூல் கேட்டில் அமர்ந்திருந்த ஸ்ருதியை தேவேந்திரன் தான் வந்து அசைத்தார்.

“என்ன பாப்பா யோசனை? வீட்டுக்கு போகலாமா?”, என்று கேட்டதும் “கிளாஸ் பத்தி நினைச்சிட்டு இருந்தேன் பா. போகலாம்”, என்று சொல்லி அவர் பின்னே அமர்ந்து கொண்டாள்.

வீட்டுக்குச் சென்றதும் “அம்மா”, என்று உற்சாகமாக அழைத்த படி உள்ளே சென்றாள் ஸ்ருதி.

“முதல் நாள் மகளுக்கு எப்படி இருந்ததோ?”, என்ற கவலையில் இருந்த வேணிக்கு அவளது சந்தோஷம் திருப்தியைக் கொடுத்தது.

“முதல் நாள் ஸ்கூல் எப்படி இருந்தது ஸ்ருதி. ஸ்கூல் பிடிச்சிருக்கா?”

“சூப்பரா இருந்துச்சு மா. நான் இங்கயே படிக்கிறேன். எனக்கு இந்த ஸ்கூல் ரொம்ப பிடிச்சிருக்கு. அப்புறம் எனக்கு நிறைய பிரண்ட்ஸ் கிடைச்சாங்க. குளோஸ் ஃபிரண்ட் தேன்மொழி தான்”

“சரி அவளை ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வா. மிஸ் எல்லாம் நல்லா பேசுறாங்களா? நல்லா சொல்லித் தந்தாங்களா?”

“புரியும் படி நடத்தினாங்க மா. எனக்கு பிடிச்சிருக்கு”

“சரி டிரஸ் மாத்திட்டு முகம் கழுவிட்டு வா. அம்மா உனக்கும் அப்பாவுக்கும் டீ போடுறேன்”

“சரி மா, அண்ணன் கால் பண்ணினானா?”

“பேசினான் டா. உன் கிட்ட நைட் பேசுறேன்னு சொன்னான். அவனுக்கும் காலேஜ் நல்லா இருக்காம். ஆனா ஹாஸ்டல் சாப்பாடு தான் சரி இல்லையாம். பிள்ளை என்ன செய்ய போகுதோ?”, என்று வேணி நவீனை நினைத்து கவலைப் பட “கொஞ்ச வருஷம் தானே டி. அதெல்லாம் அவன் பழகிருவான். அதுக்குள்ள நமக்கு டிரான்ஸ்பர் கிடைச்சா நாமளும் அங்க போயிருவோம்”, என்றார் தேவேந்திரன்.

தாயும் தந்தையும் பேச ஆரம்பிக்க ஸ்ருதி அவளுடைய அறைக்குள்ளே சென்று விட்டாள். மாற்றுடையை எடுத்துக் கொண்டு கண்ணாடி முன்பு நின்று தன்னையே பார்த்தாள்.

“நான் அவன் பாக்குற மாதிரி இல்லையா? ஏன் அவன் என்னை நிமிந்து கூட பாக்கலை?”, என்று எண்ணிக் கொண்டிருக்க “ஸ்ருதி யூனிபார்ம் வாங்கிட்டு வந்து உன் கபோர்ட்ல வச்சிருக்கேன் பாரு. அளவு சரியா இருக்கான்னு பாரு”, என்று வேணி குரல் கொடுத்ததும் ராகவனை மறந்து யூனிபார்மை பார்க்கச் சென்றாள். பின் உடை மாற்றி விட்டு முன்னறைக்கு வந்து தாய் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் தேன்மொழியும் ஸ்ருதியைப் பற்றி அவளுடைய அன்னையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் பேசுவதைக் கேட்டு எரிச்சலுடன் அமர்ந்திருந்தான் ராகவன்.

மதன் ராஜேஸ்வரி தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் ராகவன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு அடுத்து தேன்மொழி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். கடைக்குட்டி அமர் ஆறாம் வகுப்பு படிக்கிறான்.

புது தோழியைப் பற்றி அவள் விவரித்துக் கொண்டிருக்க அவள் தலையில் கொட்டினான் அவளது அண்ணன் ராகவன்.

“அம்மா”, என்று அவள் கத்த “ஏன் டா அவளைக் கொட்டின?”, என்று கேட்டாள் ராஜி.

“நான் பாட்டு பிராக்டிஸ் பண்ணனும்மா. இவ நண்டு மாதிரி குடைச்சல் கொடுத்துட்டு இருக்கா”, என்றான். ராகவனுக்கு மியூசிக் துறையில் சாதிக்க வேண்டும் என்று பெரிய ஆசை உண்டு. அதனால் அவன் மற்ற மாணவர்கள் போல நண்பர்களுடன் சுற்றுவதோ, டி‌வி பார்ப்பதோ, கிரிக்கட் விளையாடுவதோ கிடையாது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் ஹோம் வொர்க்கை வேகமாக முடித்து விட்டு இசையில் தான் கவனம் செலுத்துவான். பாடல் பாடிப் பார்ப்பான், இல்லை பாடலைக் கேட்பான். ஏதாவது இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருப்பான். அவனே ஏதாவது புதிய டியூனைப் போடுவான்.

ராஜி மியூசிக் டீச்சர் ஆக இருப்பதால் அவனுக்கு இந்த ஆசையா? இல்லை இசையின் மீது ஈடுபாடு அவன் ரத்தத்திலே இருக்கிறதா என்று தெரிய வில்லை.

சிறு வயதில் இருந்தே எந்த பாட்டுப் போட்டி என்றாலும் கலந்து கொள்வான். எப்போதும் அவன் குரலுக்கு தான் முதல் பரிசு கிடைக்கும். அந்த பள்ளியில் ராகவன் என்றால் அனைவருக்கும் அத்துப்படி. அவனுடைய குரலுக்கு மாணவர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் வரை அனைவருமே ரசிகர்கள்.

அவனது இசை ஆசையை உணர்ந்த மதன் “அவன் ஆசை என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். அவன் எந்த துறைல வேணும்னாலும் சாதிக்கட்டும். என்ன இன்ஸ்ட்ரூமென்ட் வேணும்னாலும் கத்துக்கட்டும். இல்லை விலைக்கு வாங்கிக் கொடுக்கணும்னாலும் நான் வாங்கித் தருவேன். ஆனா அவன் எனக்காக செய்ய வேண்டியது ஸ்கூலை முடிச்சு ஒரு இன்ஜினியரிங் டிகிரி முடிக்கணும்”, என்று சொல்லி விட்டார்.

“மியூசிக்ல சாதிக்கிறவன் எதுக்குங்க இன்ஜினியரிங் படிக்கணும்? ஏதாவது மியூசிக் காலேஜ்ல சேந்து படிச்சா போதாதா?”, என்று மகன் சார்பில் கேட்டாள் ராஜி.

“இங்க பாரு ராஜி, இசை துறைல அவன் எப்ப வேணும்னாலும் சாதிக்கலாம். அவனுக்கு அறுபது வயசு ஆனாலும் கூட அவன் குரல் அப்படியே தான் இருக்கும். ஆனா அது ஆப்சன் தான். அது தான் வாழ்க்கைன்னு நாம இப்பவே நம்ப முடியாது. அதுல அவனால ஒரு வேளை பெரிய ஆளா வர முடியலைனா அவனுக்கு வேற ஒரு வாய்ப்பு வேணும். அவன் இன்ஜினியரிங் படிச்சா எப்படின்னாலும் ஒரு வேலை அவனுக்கு கிடைக்கும். அவன் வாழ்க்கையை அவன்  பாத்துக்குவான்னு எனக்கும் நம்பிக்கை இருக்கும். எனக்கு அப்புறம் இந்த குடும்பத்தை பாத்துக்க வேண்டிய பொறுப்பு அவன் கிட்ட தான் இருக்கு. தேன்மொழியையும் அமரையும் அவன் தான் கைட் பண்ணனும். அவன் கனவு வேறயா இருந்தாலும் அதுக்கு முதற்படியா ஒரு சம்பாத்தியம் வேணும். அவனை எப்பவும் புக்கும் கையுமா இருக்கணும்னு நான் சொல்ல வரலை. கிளாஸ்ல அவன் தான் பர்ஸ்ட் மார்க் வாங்கணும்னும் நான் சொல்ல வரலை.  ஸ்கூல்ல படிக்கட்டும். மத்த நேரம் பாட்டு கிளாஸ், மியூசிக் கிளாஸ்ன்னு அனுப்பு. அவன் நூறு மார்க் வாங்க வேண்டாம். ஆனா முப்பத்தஞ்சு மார்க் வாங்கி கண்டிப்பா பாஸ் பண்ணனும்”, என்று முடிவாக சொல்லி விட்டார்.

ராஜி அதை அப்படியே மகனிடம் சொல்ல அவனோ ஒரு நொடி யோசனையிலே இருந்தான்.

“என்ன டா யோசிக்கிற? நான் திருப்பியும் அப்பா கிட்ட பேசிப் பாக்கவா?”

“வேண்டாம் மா, எனக்கு அப்பா சொன்னதுல எந்த தப்பும் இருக்குறதா தெரியலை”

“என்ன டா சொல்ற?”

“அவர் ஒண்ணும் மத்த அப்பா மாதிரி இதை தான் செய்யணும், அதை தான் செய்யணும்னு சொல்லலையே மா. அவர் இப்படிச் சொன்னதும் எனக்காக தானே? கண்டிப்பா அவர் ஆசையை நான் நிறைவேத்துவேன். அதே மாதிரி என்னோட ஆசையை எப்படி அடையணும்னும் எனக்கு தெரியும்”, என்று ஒன்பதாவது படிக்கும் போதே தெளிவாகச் சொன்னான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!