Skip to content
Post Views: 4,361
அடுத்து ஒரு நடனம் நாடகம் என்று வர “கடைசியாக ஸ்ருதி பிரம் நயன்த் ஸ்டாண்டர்ட் பி இப்போது நமக்காக ஒரு பாடல் பாட வரப் போறாங்க”, என்று அறிவிப்பு வர தயக்கத்துடன் மேடை ஏறினாள்.
ஸ்ருதி நன்கு பாடுவாள் என்று தேன்மொழிக்கு மட்டும் தான் தெரியும். தேன்மொழி தான் அவளை பெயர் கொடுக்கச் சொன்னாள். அப்போதும் ஸ்ருதி தயங்கத் தான் செய்தாள்.
Advertisement
ஆனால் அவள் உள் மனதோ “இங்க பாரு டி, இது தான் உனக்கு கிடைச்சிருக்க கடைசி வாய்ப்பு. நீ நல்லா பாடி அதை ராகவன் கேட்டா உன் கிட்ட வந்து பேச வாய்ப்பு இருக்கு”, என்று குரல் கொடுக்க முழு மனதுடன் பெயர் கொடுத்து விட்டாள்.
மேடை ஏறும் போது படபடப்பாக இருந்தது. பழைய பள்ளி விழாக்களில் அவள் பாடி இருப்பதால் அவளுக்கு மேடை பயம் வரவில்லை. ராகவனை நினைத்து தான் பயமாக இருந்தது. அதுவும் சற்று நேரத்துக்கு முன் ராகவனின் குரலைக் கேட்டவளுக்கு இன்னும் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை.
Advertisement
Advertisement
அது மட்டுமில்லாமல் அவனும் இதே ஹாலில் இருக்கிறான் என்றும் தான் பாடினால் அவனும் கேட்பான் என்ற உண்மையும் புரிய அவளது படபடப்பு இன்னும் அதிகம் தான் ஆனது. அவன் குரலின் முன் தன்னுடைய குரல் எல்லாம் நிற்க கூட முடியாது என்று எண்ணியவள் தயங்கிய படியே மைக் முன்னே வந்து நின்றாள்.
ஆனால் எப்படியாவது அவன் தன்னை பார்த்து விட வேண்டும். ஒரு வார்த்தையாவது பேசி விட வேண்டும் என்று வேண்டினாள். அவன் தன்னுடைய பாடலை பாராட்ட வில்லை என்றாலும் கேவலமா பாடின என்றாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. மைக்கைப் பிடித்ததும் அவள் கண்கள் அவன் இருந்த இடத்தை நோக்கியது.
Advertisement
“இந்த சுண்டெலி எல்லாம் பாட வந்துட்டு?”, என்று எண்ணி தெனாவெட்டாக பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன். அருகில் அமர்ந்திருந்த வாசுவுக்கு நடப்பது எல்லாம் சுவாரசியமாக இருந்தது. அவன் ஸ்ருதியையும் தன்னுடைய நண்பனையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண் முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் காதல் நாடகத்தை மறைமுகமாக ரசித்தான்.
மைக்கை வாங்கிய பின்னும் அவள் அமைதியாக இருக்க மாணவர்கள் கத்தினார்கள். அதில் இன்னும் பயந்து போனாள்.
“பாடு மா, நிகழ்ச்சியை முடிக்க வேண்டாமா?”, என்று தொகுப்பாளர் கேட்க “காற்….றில் ….”, என்று இழுத்தாள்.
திடீரென்று பாட ஆரம்பித்ததும் தொண்டை கமர ஆரம்பிக்க “க்கூம்ம்”, என்று தொண்டையை செருமிக் கொண்டாள். “சரியான வேஸ்ட் பீஸ்”, என்று எண்ணிக் கொண்டான் ராகவன்.
“இவ எல்லாம் பாடுறதைக் கேக்க வேண்டிய கொடுமையை என்ன செய்ய?”, என்று எண்ணியது அவன் மனம்.
“ஸ்ருதி எப்படியாவது பாடிரு டி. நீ பாடலைன்னா ராகவன் உன்னை தப்பா நினைப்பாங்க”, என்று அவள் மனது எடுத்துரைக்க தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “காற்றில்…. எந்தன் கீதம்…”, என்று பாட ஆரம்பித்தாள்.
ஆரம்பத்தில் அவளுடைய குரல் ஒரு மாதிரி இருந்தாலும் அதன் பிறகு அவள் பாடல் அனைவருக்கும் அமைதியான நதியில் கால் வைப்பது போன்ற உணர்வைத் தந்தது.
“பரவால்ல, நல்லா தான் பாடுறா”, என்று ராகவனே மனதுக்குள் புகழ்ந்தான். இசையில் முழு ஈடுபாடு கொண்ட ராகவனே அவளுடைய பாடலில் கரைந்து தான் போனான். அவளுடைய குரலில் இருந்த இதமான இனிமை அவன் மனதை அப்படியே கட்டிப் போட்டது.
என்ன பாடினோம் எப்படி பாடினோம் என்று தெரியாமலே அவள் பாடலை முடிக்க அரங்கமே கை தட்டியது. அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவள் ராகவனைத் தான் பார்த்தாள். அவள் பார்வையை உணர்ந்த ராகவன் தலை குனிந்து தன்னுடைய விரலை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.
அப்போதும் அவன் பாராமுகம் அவளை வருத்த சோகமான முகத்துடன் கீழே இறங்க போனாள். “ஒரு நிமிஷம் இரு மா”, என்று சொல்லி மேடைக்கு வந்த ஸ்கூல் பிரின்சிபால் “ஸ்கூல் முடியப் போறதுனால இனி ராகவனோட பாட்டைக் கேக்க முடியாதுன்னு எல்லாருமே கவலைப் பட்டோம். ஆனா அதை ஈடு கொடுக்குற விதமா நீ இந்த ஸ்கூல்ல வந்து சேந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் மா. அவ்வளவு அருமையா பாடின. எங்களுக்கு ராகவனோட மறு பிம்பமா தான் நீ தெரியுற? இனி உன் பாட்டு இல்லாம இந்த ஸ்கூல்ல எந்த விழாவும் நடக்காது”, என்று பாராட்ட அவள் தலையில் ஜில்லென்று ஐஸ் மழை விழுந்த உணர்வு தான்.
அவருடைய பாராட்டோ மற்றவர்களின் கை தட்டலோ அவளுடைய சந்தோசத்துக்கு காரணம் இல்லை. ராகவனின் மறு பிம்பம் என்று சொன்னது அவளை அப்படியே புரட்டிப் போட்டிருந்தது. சந்தோஷமாக புன்னகைத்து விட்டு கீழே வந்து அவளுடைய இருக்கையில் அமர்ந்தாள்.
“சூப்பரா பாடின டி”, என்று தேன்மொழி சொல்ல “உன் அண்ணாவை விடவா?”, என்று மனதில் எண்ணிக் கொண்டவள் அவனை திரும்பிப் பார்த்தாள். அவன் மேடையைப் பார்த்துக் கொண்டிருக்க இவள் அவளுடைய கண்ணனை ரசித்தாள்.
“அந்த பொண்ணு சூப்பரா பாடுச்சுல்ல? யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ? ரொம்ப கியூட்டா வேற இருக்கா. காலேஜ் படிக்கிறப்ப பாரு. அவ்வளவு பசங்க அவளைச் சுத்தி வருவாங்க”, என்று சொல்லி ராகவனிடம் இருந்து ஒரு முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டான் வாசு.
“சரி சரி விடு முறைக்காதே. திரும்பி மேடையைப் பாரு”, என்று சொன்ன வாசு நண்பனின் கோபத்தைக் கண்டு சிரித்துக் கொண்டான்.
பங்ஷன் முடிந்ததும் அனைவரும் வெளியே வந்தார்கள். “ஏய் ஸ்ருதி ஒன் பாத்ரூம் போகணும் டி வரியா?”, என்று கேட்டாள் தேன்மொழி.
“நீ போயிட்டு வா. நான் வரலை”
“சரி இங்கயே இரு. நான் வந்துறேன்”, என்று சொல்லி விட்டு தேன்மொழி சென்றதும் அங்கே இருந்த தூணில் சாய்ந்து நின்றிருந்தாள் ஸ்ருதி.
ஆடிட்டோரியத்தில் இருந்து வெளி வரும் ஆட்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால் வெளியே வரும் ராகவனைக் காண அவளுக்கு ஆசை.
அதே போல அவனும் வாசுவுடன் வந்தான். இவள் அவனையே ஆசையாக பார்த்துக் கொண்டிருக்க அவனோ ஆடிட்டோரியத்தின் பின் பக்கம் சென்றான். அவளைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை. ஆனால் வாசு கவனித்து விட்டான். அவளைப் பார்க்கவே அவனுக்கு பாவமாக இருந்தது. ராகவனின் பார்வைக்காக ஏங்கி நிற்கும் பறவை போல அவனுக்கு தோன்றி வைத்தது.
ஸ்ருதிக்கு அவன் திரும்பிப் பார்க்காதது எப்போதும் போல வருத்தத்தை தந்தாலும் அவனையே தான் பார்த்திருந்தாள். அவன் ஆடிட்டோரியத்தின் பின் பக்கம் போகவும் அவனுடைய சைக்கிளை எடுக்க செல்கிறான் போல என்று எண்ணி அவனையே பார்த்திருந்தாள். அவனுடைய சைக்கிள் அருகே சென்று நின்றான் ராகவன்.
அப்போது “ராகவா”, என்று அழைத்தான் வாசு.
“என்ன டா, பாட்டு பாடினதுக்கு டிரீட் தரணுமா? இப்ப தேனை வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் டா. உனக்கு நாளைக்கு டிரீட் தரேன்”, என்றான் ராகவன்.
“நீ எனக்கு டிரீட் எல்லாம் தர வேண்டாம்”, என்று வாசு சொல்ல அவனை வியப்பாக பார்த்தான்.
“நீயா டா இப்படி சொல்றது?”
“ஆமா டா, நீ எனக்கு எந்த டிரீட்டும் தர வேண்டாம். அதுக்கு பதிலா ஒரு விஷயம் செய்யணும்”
“என்ன?”, என்று புருவம் உயர்த்தினான்.
“அதோ அங்க நிக்குற தேனு ஃபிரண்ட் கிட்ட நீ பேசணும்”
“வாட்? உனக்கு என்ன பைத்தியமா டா?”
“பிளீஸ் டா. எனக்காக. பெருசா ஒண்ணும் இல்லை, நீ நல்லா பாடின அப்படின்னு ஒரு வார்த்தை மட்டும் சொன்னா போதும்”
“இது தேவையில்லாத வேலை வாசு. அவ நல்லா பாடினா எனக்கு என்ன? பாடலைனா என்ன?”
“பிளீஸ் டா, எனக்காக”
“ஏன் இப்படிச் சொல்ற?”
“என்னைக் காரணம் எல்லாம் கேக்காத. எனக்கு இதைக் கேக்கணும் போல இருந்துச்சு. அதைச் செய்யுறதும் செய்யாம போறதும் உன்னோட விருப்பம். சரி நான் கிளம்புறேன்”, என்று சொன்ன வாசு தன்னுடைய சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.
யோசனையுடன் நின்ற ராகவன் ஸ்ருதி புறம் திரும்பி பார்த்தான். அதற்கே அவளுக்கு மூச்சு முட்ட நெகிழ்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
“கடவுளே அவ பார்வை எப்படி இருக்குனு தெரியாம இவன் வேற அவ கிட்ட பேசச் சொல்லிட்டு போய்ட்டானே? இன்னைக்கு என்ன நடக்க போகுதோ?”, என்று எண்ணிக் கொண்டு “இங்க வா”, என்னும் விதமாய் அவளைப் பார்த்து கை அசைத்தான். நண்பன் சொன்னதை அவன் கண்டு கொள்ளாமல் போயிருக்கலாம் தான். ஒரு வேளை அவனுடைய ஆசை கொண்ட மனதும் அவளுடன் பேச ஆசைப் பட்டதோ என்னவோ?
அவன் தன்னையா அழைத்தான் என்று அதிர்ந்து போனாள் ஸ்ருதி. அவள் அதிர்ச்சியில் பிரமித்து போய் நிற்க மீண்டும் அழைத்தான். அவன் மீண்டும் அழைக்கவும் படபடப்பாக அவனை நோக்கி நடந்தாள். “திடீர்னு என்ன நம்மளைக் கூப்பிடுறான். ஒரு வேளை தேன்மொழி எங்கன்னு கேக்க கூப்பிடுறானோ? ஆமா, அதுக்கா தான் இருக்கும்”, என்று எண்ணி அவனை நோக்கி நடந்தவளுக்கு அவனை நெருங்க நெருங்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
error: Content is protected !!