Skip to content
Post Views: 4,459
இப்போதும் அவள் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். சுள்ளென்று ஒரு வித எரிச்சல் அவனுக்கு தோன்றியது. அவளை முறைத்துப் பார்த்தவன் பின் அவள் பக்கம் திரும்பவே இல்லை. அவன் பார்வையில் அவள் முகம் வாடிப் போனது.
அன்று மாலை தேன்மொழி சைக்கிள் எடுக்கச் செல்லும் போது அவளுடன் எதிர்பார்ப்புடன் சென்றாள் ஸ்ருதி. ராகவனைப் பார்க்க அவளுக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஏனோ இந்த நேரத்துக்காக அவள் காலையில் இருந்தே ஏங்கிய ஏக்கம் அவளுக்கு தானே தெரியும்? அவளுடைய எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அங்கே நின்றான் ராகவன்.
Advertisement
அவளைக் கண்ட ராகவன் “ஐயோ இவளா?”, என்று உள்ளுக்குள் திணறினாலும் வெளியே சாதாரணமாக நின்றான். அவள் அவனை ஆர்வமாக பார்க்க அவனோ பெயருக்கு கூட அவள் பக்கம் திரும்பவே வில்லை.
Advertisement
அவளுடைய பார்வை உணர்ந்து அவளைத் திட்ட வேண்டும் என்றும் இதெல்லாம் தப்பு என்று அவளுக்கு அறிவுரை கூற வேண்டும் என்றும் அவன் மனம் பரபரத்தது. ஆனால் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று முழுதாக தெரியாத போது இல்லாத ஒன்றை அவன் பேசி வரவைத்து விடக் கூடாதே என்று எண்ணி பேசாமல் இருந்தான்.
Advertisement
கூடவே என்றாவது அவள் காதல் என்று வந்து நின்றால் அன்று அவளுக்கு புத்தி சொல்ல வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அந்த வாய்ப்பு வரவே வராது என்று அவன் அப்போது உணரவே வில்லை. அவள் ஒரு நாளும் அவன் முன்பு வந்து உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லப் போவதில்லை என்பது தான் அப்பட்டமான உண்மை.
Advertisement
அவளைப் பார்க்காமல் தேன்மொழியை வரச் சொல்லி விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு செல்வதற்குள் ராகவன் உண்மையிலே திணறித் தான் போனான். ஆனால் அவன் அப்படிப் போகவும் முகம் வாடிப் போனாள் ஸ்ருதி.
அடுத்த நாளும் இதே தொடர “தேனு நான் இனி சைக்கிள் ஸ்டாண்ட்ல நிக்க மாட்டேன். நீ நேரா கேட் வெளிய வந்துரு”, என்று சொல்லி விட்டான். அந்த நாளில் ஸ்ருதி அவனைக் காண ஆவலாக வர அங்கே அவன் இருக்க வில்லை.
“அவங்க எங்க டி?”, என்று கேட்டாள் ஸ்ருதி.
“அண்ணன் கேட் வெளிய நிப்பான் டி. என்னை சைக்கிள் எடுத்துட்டு வெளிய வரச் சொன்னான். இங்க சைக்கிள் எடுக்க நிறைய பொண்ணுங்க வருதுல்ல? அதான் அவனுக்கு இங்க நிக்க என்னவோ போல இருக்கு போல?”, என்று சொன்னவள் சைக்கிளை எடுத்துக் கொண்டு நடந்தாள்.
அவன் தன்னைத் தவிர்க்கிறானா என்று எண்ணி நடந்த ஸ்ருதி கேட் அருகே வந்து அவனைத் தேட அவனோ பள்ளிக்கு சற்று தள்ளி நின்று கொண்டிருந்தான்.
“அண்ணா அங்க நிக்குறான் டி, சரி நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் தேன்மொழி. ஸ்ருதிக்கு ராகவனின் பின் புறம் மட்டுமே தெரிந்தது. அவன் முகத்தை அவளால் காண முடியவில்லை.
“அவன் ஏன் என்னைக் கண்டுக்கவே மாட்டிக்கான்? நான் பாக்குறது அவனுக்கு தெரிஞ்சிருக்குமோ?”, என்று எண்ணி கவலைப் பட ஆரம்பித்தாள். தேன்மொழிக்கும் தோழியின் எண்ணம் புரியவே இல்லை.
அடுத்து வந்த நாட்களில் ஸ்ருதியால் ராகவனைக் காண முடியவில்லை. அதே நேரம் மாலையில் அவனுடைய பின் பக்கம் தெரிய அதைப் பார்க்க கூட ஆவலாக இருந்தாள். ராகவனும் அவனால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அவளிடம் இருந்து விலகிப் போனான்.
ஆனாலும் “இந்த பொண்ணு ஏன் இப்படி படுத்துது?”, என்று அடிக்கடி எரிச்சலுடன் எண்ணிக் கொள்வான்.
இப்படியே நாட்கள் செல்ல அந்த வருடத்தில் கடைசி மாதத்தில் இருந்தார்கள். ராகவன் பன்னிரெண்டாம் வகுப்பு என்பதால் மியூசிக்கை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினான்.
அப்போது தான் ஸ்கூல் டே வந்தது. மாலை நான்கு மணியில் இருந்து இரவு ஏழு மணி வரை தான் பங்ஷன் என்று சொல்லி இருந்தார்கள்.
பெரிய அளவில் எல்லாம் விழா ஏற்பாடு நடக்க வில்லை. வகுப்பில் முதலில் வந்தவர்களுக்கு அவார்ட் கொடுப்பது, பரீட்சை எழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வது, இடை இடையே இரண்டு மூன்று நடனங்கள், ஒரு நாடகம், ஐந்தாறு பாட்டு இவை தான் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இத்தனை நாள் அவனைக் காண முடியவில்லையே என்று ஏங்கி இருந்த ஸ்ருதிக்கு இன்று அவனைக் காணலாம் என்று எண்ணி கொண்டாட்டமாக இருந்தது. அவனையே தேடிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“என்ன டி தேடிட்டு இருக்க?”, என்று கேட்டாள் தேன்மொழி.
“ஒண்ணும் இல்லை சும்மா தான்”, என்று சொன்னாலும் அவள் கண்கள் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்துக்கே சென்றது.
அவள் பார்ப்பதை வாசு பார்த்து விட்டான். “அந்த பொண்ணு இவனைத் தான் தேடுது போல? ஆனா இவன் கிட்ட சொன்னா கத்துவான். இவனைத் தான் பாக்குறாளான்னு நாமளே கண்டு பிடிப்போம்”, என்று எண்ணிய வாசு “டேய் ராகவா நீ இந்த சீட்டுக்கு வா டா. நான் அங்க போறேன்”, என்று சொன்னான்.
“உன்னோட பெரிய தொல்லை. வந்து தொலை”, என்று சொல்லி எழுந்த ராகவன் இடம் மாற்றி அமர்ந்தான். அவன் எழுந்ததும் அவனை கண்டு கொண்டாள் ஸ்ருதி. அதன் பிறகு அவள் கண்கள் யாரையும் தேடாமல் அவனிடமே நிலைத்திருக்க வாசுவுக்கு தெளிவாக புரிந்து விட்டது. ஆனால் அதைச் சொல்லி நண்பனிடம் திட்டு வாங்க விரும்பாமல் அமைதியாக இருந்தான்.
ராகவனோ பாடல் பாட வேண்டி இருந்ததால் அவன் ஸ்ருதியைப் பற்றி நினைக்க கூட இல்லை. அவளோ அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எப்பவும் போல விழா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எல்லாரோட மனசும் அமைதியாகனுமே. எல்லார் மனசையும் அமைதியாக்க ஒருத்தரால தான் முடியும். நம்ம ஸ்கூல்லோட பாட்டு நாயகன் ராகவனைப் பாட வருமாறு அழைக்கிறேன்”, என்று அறிவிப்பு வந்ததும் சிறு புன்னகையுடன் எழுந்து சென்றான்.
‘ராகவன் ராகவன்’ என்று அனைவரும் அவனைப் புகழ ஸ்ருதிக்கு தன்னையே புகழ்வது போல உடல் சிலிர்த்தது. அவனையே இமைக்காமல் பார்த்தாள். அவன் பாடுவான் என்று கேள்விப் பட்டிருக்கிறாள். ஆனால் இது வரை நேரில் கேட்டதில்லை என்பதால் அவள் மனதில் எதிர்பார்ப்பு கிளர்ந்தது.
எப்போதும் போல ராகவன் பாடல் பாட மேடை ஏறி மைக்கை கை பற்றினான். அவன் கையில் மைக் வந்ததும் கூட்டம் அமைதியானது. அவன் என்ன பாடல் பாடப் போகிறான் என்று அனைவரும் எதிர் பார்த்தார்கள்.
சுற்றி தன்னுடைய பார்வையை செலுத்திய ராகவனின் பார்வை ஸ்ருதியிடம் ஒரு நொடி நிலைத்தது. ஏதோ அவனைக் கண்டு பரவசத்தில் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்தவனுக்கு சிரிப்பு கூட வந்தது.
“இவ என்ன என்னைக் கடவுள் மாதிரி பாத்துட்டு இருக்கா?”, என்று எண்ணி பார்வையை திருப்பிக் கொண்டவன் “சலங்கை இட்டாள் ஒரு மாது… சங்கீதம் நீ பாடு…. இரு விழிகளில் ஒரு நவரசம்.. அதை காண்கையில் ஒரு பரவசம்…”, என்று பாட ஆரம்பித்தான்.
பாதி பேருக்கு இப்படி ஒரு பாட்டு இருக்கிறதா என்று கூட தெரிய வில்லை. தெரிந்தவர்களோ அவன் பாடலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவன் பாடுவதைக் கேட்ட ஸ்ருதிக்கு கூட அந்த பாடல் தெரியவில்லை. ஆனால் அவன் பாடுவதை இமைக்காமல் பார்த்த படி கேட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அவன் குரல் அவள் அடியாழத்தில் நுழைந்து ஏதோ இம்சை செய்தது.
“இவன் குரலை எங்கயோ கேட்டுருக்கோமே? எங்க எங்க?”, என்று எண்ணியவளின் மனது அலை பாய்ந்தது. கண்களை மூடி அவன் பாட்டை ரசித்தவளுக்கு அந்த குரலை எப்போது கேட்டோம் என்று நினைவில் வந்து விட்டது.
நவீனுக்கு மெடிக்கல் கவுன்சிலிங்க் போன போது ஒரு டீக்கடையில் காலைக் காற்றே என்ற பாடல் ஓடிக் கொண்டிருக்க அந்த பாட்டை ரசித்தவள் வீட்டுக்கு வந்தும் அந்த பாட்டை நவீனை டவுன்லோட் பண்ணித் தர கேட்டாள். அது போக மதன்ராஜ் என்ற பாடகர் பாடிய பாடல்களை எல்லாம் டவுன்லோட் செய்து கேட்டாள்.
இப்போது இவன் குரல் அந்த குரலுக்கு இணையாக இருக்கவும் அவளுக்கு இரண்டும் ஒன்று தான் என்று புரிந்தது. ஆனால் இவன் எப்படி சினிமாவில் பாட முடியும் என்று குழப்பமாக இருந்தது.
இப்போது ஆராய்ச்சியை விட்டுவிட்டு அவனுடைய பாடலில் கவனம் செலுத்தினாள். அந்த பாடல் பெண்மையை பற்றியும் பெண்ணைப் பற்றியும் இருக்க ஏனோ அவன் தன்னைப் பற்றி பாடுவதைப் போல தோன்றி வைத்தது.
அவன் பாடி முடித்ததும் கை தட்டல் காதைப் பிளந்தது. “இந்த ஸ்கூல்ல என்னோட கடைசி பாட்டு இது தான் பிரண்ட்ஸ். இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி”, என்று சொல்லி விட்டு மேடையில் இருந்து இறங்கினான் ராகவன்.
error: Content is protected !!