Skip to content
Post Views: 5,059
அத்தியாயம் 10
அழகு என்ற சொல்லுக்கு
இலக்கணமே என்னவள் தான்!!!
Advertisement
“இவ என்ன இவ்வளவு அழகா ஆகிட்டா?”, என்று ராகவனின் மனம் சொல்லியது. அவளையே தலை முதல் கால் வரை அளவிட்டான். குழந்தையில் இருந்து குமரி ஆகி இருந்தாள். முன்பு பார்த்ததை விட கொஞ்சம் ஒள்ளியாகி இருந்தாள். ஆனாலும் அவளது அழகு இன்னும் ஏறி இருந்தது.
ராகவன் எங்காவது தெரிகிறானா என்று அவளது கண்களும் அலைபாய்ந்தது. அவள் தன்னைத் தான் தேடுகிறாள் என்று புரிந்து கொண்ட ராகவன் அடுத்த நொடி பார்வையை மாற்றிக் கொண்டு நண்பனைப் பார்த்தான். விஷ்ணுவோ சிறு புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
Advertisement
Advertisement
“கண்டு பிடிச்சிட்டானே? இப்ப எப்படி சமாளிக்கிறது?”, என்று எண்ணிய ராகாவன் “என்ன டா சிரிக்கிற?”, என்று கேட்டான்.
“நான் சிரிக்கிறது இருக்கட்டும். நீ என்ன டா பண்ணின இவ்வளவு நேரம்?”, என்று கேட்க ராகவன் முகம் சிவந்தது.
Advertisement
நண்பன் மனது தெள்ளத் தெளிவாக விஷ்ணுவுக்கு புரிய “யாரு டா அந்த பொண்ணு?”, என்று கேட்டான்.
“தேனு பிரண்டு டா”
“அப்படியா? அப்ப அந்த கிஃப்ட் கொடுத்தது?’
“இவளே தான்”
“அப்படின்னா பேசியே ஆகணுமே?”
“டேய் சும்மா இரு”, என்று ராகவன் அவனை அரட்டும் போது “ஏய் பொண்ணு இங்க வா”, என்று அழைத்தான் விஷ்ணு.
அவன் குரல் கேட்டு திரும்பி பார்த்த ஸ்ருதி அங்கே ராகவன் இருக்கவும் மலர்ந்த முகத்துடன் அங்கே ஓடி வந்தாள்.
அவள் ஓடி வந்த வேகத்தைப் பார்த்து விஷ்ணு மலைத்து போய் நிற்க அவளோ அவனை துளியும் கண்டு கொள்ளாது ராகவனையே பார்த்தாள். அவள் பார்வை அவனை பருகு பருகு என்று பருகிக் கொண்டிருந்தது.
ராகவனோ வீரப்பாக நின்றிருந்தான். இருவரையும் பார்த்து குழப்பமாக இருந்தது விஷ்ணுவுக்கு;
“நல்லா இருக்கீங்களா? நான் இங்க தான் பர்ஸ்ட் இயர் சேந்துருக்கேன். உங்க டிப்பார்ட்மெண்ட் தான். தேனு சொன்னாளா?”, என்று சந்தோஷமாக கேட்டாள் ஸ்ருதி.
அதைக் கேட்ட ராகவன் எந்த பதிலும் சொல்லாமல் நிற்க “என்ன டா நடக்குது இங்க?”, என்று தலையை பிய்த்துக் கொண்டான் விஷ்ணு. அந்த பெண்ணைத் தேடி தான் ராகவன் இங்கே வந்து நின்றது என்று விஷ்ணுவுக்கு புரிந்தது. கூடவே அவளை அவன் ரசித்துப் பார்த்ததும் புரிந்தது. ஆனால் அதே பார்வையை அவளிடம் கண்ட பிறகு அவன் முகத்தில் இருந்த மாற்றம் அவனுக்கு புரியவே இல்லை.
மழைக்கு ஏங்கும் சாதகப் பறவை போல அவனுடைய பதிலுக்காக அவள் அவனுடைய முகம் பார்த்து நிற்க எங்கோ பார்த்துக் கொண்டு நின்றான் ராகவன்.
“ஏய் பொண்ணு, உன்னைக் கூப்பிட்டது நான். நீ என்ன அவன் கிட்ட பேசிட்டு இருக்க? இவனை உனக்கு தெரியுமா?”, என்று கேட்டான் விஷ்ணு.
அவள் ஏதாவது உளறி விட கூடாதே என்று எண்ணி “விஷ்ணு வா போகலாம்”, என்று அவனை அழைத்தான்.
“இரு டா பேசிட்டு வரேன்”, என்று நண்பனிடம் சொன்ன விஷ்ணு “சொல்லு மா, இவனை தெரியுமா? ஆமா உன் பேர் என்ன?”, என்று கேட்டான்.
“என் பேர் ஸ்ருதி”
“நைஸ் நேம், சரி இவனை உனக்கு தெரியுமா?”
“ம்ம்”
“ஓ டிவில அவனைப் பாத்தியா?”
“அதுக்கு முன்னாடியே அவங்களை எனக்கு தெரியும்”
“அதுக்கு முன்னாடியேவா? எப்படி?”, என்று அவளிடம் கேட்ட விஷ்ணு வேண்டும் என்றே “ராகவா, அதுக்கு முன்னாடியே உன்னை இந்த பொண்ணுக்கு தெரியுமாம் டா. உனக்கு இவளைத் தெரியுமா?”, என்று கேட்டான்.
“எனக்கு யாரையும் தெரியாது. கண்டவங்களை எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க முடியுமா? எனக்கு அது தான் வேலையா? நீ வரியா இல்லையா? நான் போறேன்”, என்று சொல்லி விட்டு அவன் செல்ல ஸ்ருதியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. கூடவே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
அதைக் கண்டு மனது கனத்துப் போனது விஷ்ணுவுக்கு. நண்பன் மேல் கோபமும் வந்தது. “நீ கிளாசுக்கு போ மா. அதோ பர்ஸ்ட் இயர் அங்க தான் இருக்கு”, என்று அவளிடம் சொல்லி விட்டு ராகவன் பின்னே ஓடினான் விஷ்ணு.
கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு கிளாசுக்கு சென்றாள் ஸ்ருதி. ராகவன் பின்னால் சென்ற விஷ்ணு “டேய் நில்லு டா, ஏன் டா இப்படி பண்ணின? பாவம் டா அந்த பொண்ணு. எவ்வளவு ஆசையா உன்னைப் பாக்க வந்துச்சு. இப்படி அழ வச்சு அனுப்பிட்டியே? இப்ப உனக்கு சந்தோஸமா? அவளை முதல் நாளே அழ வைக்க தான் காலையிலே இங்க வந்து நின்னியா?”, என்று கோபமாக கேட்டான். அவனுக்கு பதில் சொல்லாமல் தூரத்தில் செல்லும் ஸ்ருதியையே இமைக்காமல் பார்த்தான் ராகவன்.
“உன் கிட்ட தான் கேக்குறேன் ராகவா. ஸ்ருதியை தான் உனக்கு தெரியுமே டா? அப்புறம் ஏன் அவ ஹர்ட் ஆகுற மாதிரி பேசின? எனக்கு இப்ப காரணம் தெரியணும்”, என்றான்.
“நான் இப்ப அப்படி பேசலைனா அவ அவளா இருக்க மாட்டா டா”
“என்ன டா சொல்ற?”
“அவ இந்த காலேஜ்க்கு எதுக்காக வந்துருக்கானு நினைக்கிற?”
“வீணா போன இன்ஜினியர் படிக்கணும்னு அவளுக்கும் கனவு இருந்துருக்கலாம்”
“அது தான் இல்லை. நான் இந்த காலேஜ்ல படிக்கிறேன்னு தான் அவ இங்க வந்து சேந்துருக்கா”
“என்ன டா சொல்ற?”
“நான் அவ கிட்ட தெரிஞ்ச மாதிரியோ பாசமாவோ பேசினா கண்டிப்பா அவ அவளா இருக்க மாட்டா. அவளை திட்டினா தான் அவ வாழ்க்கைல உருப்படுவா. முன்னாடி அவளைத் திட்டப் போய் தான் இப்ப இவ்வளவு மார்க் வாங்கி இங்க படிக்க வந்துருக்கா”
“அப்படின்னா….?”
“அவ என்னை லவ் பண்ணுறாளான்னு எனக்கு தெரியாது. ஆனா அவளுக்கு நான்னா பைத்தியம்”
“மச்சான்”
“ஆமா, அவ சின்ன பொண்ணு டா. அவ கிட்ட காதல் கத்திரிக்காய்ன்னு பேசி அவ எதிர்காலத்தை வீணாக்க சொல்றியா? இப்படி பேசினா தான் அவ நல்லா படிப்பா. என்னோட வெறுப்பு அவ மனசையும் மாத்தும்”
“அவ மனசு மாறுறது இருக்கட்டும். உன் மனசுல என்ன இருக்கு?”
“தெரியலை”
“ராகவா”
“நிஜமாவே தெரியலை டா. தேனோட ஃபிரண்ட். அதை தவிர வேற எதையும் நான் யோசிக்க விரும்பலை. இப்ப இல்லை எப்பவுமே? வா கிளாஸ்க்கு போவோம்”, என்று சொல்லி நடந்த ராகவனை விஷ்ணுவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அன்று மட்டும் அல்ல. அதன் பிறகு வந்த நாட்களிலும் அவனை விஷ்ணுவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தினமும் ஒரு அரை மணி நேரமாவது ஸ்ருதி கொடுத்த கிஃப்டை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருக்கும் ராகவனைக் கண்டு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருக்கும் விஷ்ணுவுக்கு.
அன்று மாலை வீட்டுக்கு வந்ததும் தேன்மொழி எப்போது அழைப்பாள் என்று காத்திருந்தாள் ஸ்ருதி. தேன்மொழி அழைத்ததும் ஓ என்று அழ ஆரம்பித்து விட்டாள்.
அவளது கண்ணீரில் திகைத்து போன தேன்மொழி “சொல்லிட்டு அழு டி. என்ன நடந்துச்சு?”, என்று கேட்டாள்.
“உங்க அண்ணா என்னை திட்டிட்டாங்க டி. என்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லி கண்டவங்கன்னு சொல்லிட்டாங்க”, என்று ஆரம்பித்தவள் நடந்ததை விளக்கமாகச் சொன்னாள்.
“நான் தான் சொன்னேன்ல அவன் ஒரு சிடு மூஞ்சின்னு. இனி அவனைப் பாத்தா பேசாதே”, என்று தோழியை சமாதானப் படுத்திய தேன்மொழிக்கு அவன் ஏன் காலையிலே காலேஜ் என்ட்ரன்சில் சென்று நின்றான் என்று கேள்வி எழும்பியது.
அதற்கு பிறகு ஸ்ருதியால் ராகவனைக் காண முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு முதலாம் வருட மாணவர்களுக்காக வரவேற்பு விழா நடந்தது.
விழா எப்போதும் போல ராகவனுடைய பாட்டால் ஆரம்பிக்க ஸ்ருதியோ தன்னுடைய கிளாஸ் நண்பர்களுடன் அமர்ந்திருந்தாள். ராகவன் மேடை ஏறியதும் அவளுடைய கண்கள் அவனை விட்டு இங்கும் அங்கும் அசைய வில்லை.
“விழிகளில் ஒரு வானவில்”, என்ற பாடலை அவன் மெய் மறந்து பாட அவன் பாடலில் ஸ்ருதி மட்டும் அல்ல அனைவருமே மயங்கி தான் போனார்கள். அதற்கு பின்னர் பாட்டு டேன்ஸ் என்று பங்ஷன் களை கட்டியது.
புரோகிராம் தொகுப்பாளாராக விஷ்ணு தான் இருந்தான். “ஓகே விஷ்ணு, நேரம் ஆகிருச்சு. பங்க்ஸனை முடிச்சிக்கலாம்”, என்று சொன்னார் சிதம்பரம்.
error: Content is protected !!