எங்கே இருந்தாலும் அவளது கண்கள் ஒரு நொடி அவனைத் தொட்டு மீள்வதைக் கவனித்திருக்கிறான். அவளுடைய பார்வையில் ஒரு போதையை உணர்ந்திருக்கிறான். ஆனால் அவை எல்லாம் இல்லாமல் கஷ்டமாக இருந்தது.
அன்றைய நிகழ்வை ஸ்ருதி தேன்மொழியிடம் சொல்லிப் புலம்ப தேன்மொழிக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை. தோழிக்கு நிம்மதியைக் கொடுக்க அவள் மனம் விளைந்தது. ஆனால் ராகவனிடம் சென்று தோழிக்காக பேச தைரியம் இல்லை.
Advertisement
ஸ்ருதி அங்கே வேலைக்கு சேர்ந்து கிட்டத் தட்ட ஒரு மாதம் முடிந்திருந்தது. இது வரை வேலை அதிகம் இருந்ததால் பிரஷர்ஸ் டே கொண்டாடப் படாமல் இருந்தது.
Advertisement
புராஜெக்ட் எல்லாம் முடிந்து அடுத்த புராஜெக்ட் ஆரம்பிக்க இருப்பதால் அதற்கு முன் அதை கொண்டாடி விடலாம் என்று மேனேஜ்மெண்ட் பிளான் போட்டது.
Advertisement
ஒரு நாளைக் குறித்து அன்றே கொண்டாடி விடலாம் என்று அனைவருக்கும் சொல்லப் பட்டது. அன்றைய நாளுக்காக புடவையில் வந்திருந்தாள் ஸ்ருதி. அலுவலகத்துக்கு உள்ளேயே விருந்து எல்லாமே ஏற்பாடு செய்யப் பட்டது.
Advertisement
இந்த விருந்தில் பாடத் தெரிந்தவர்கள் பாடலாம் என்றும் ஆடத் தெரிந்தவர்கள் ஆடலாம் என்றும் சொல்லப் பட்டது. ஒவ்வொருவரும் தங்களின் திறமையை வெளிக் காட்டினார்கள்.
ராகவனின் இசை உலகம் தெரியும் என்பதால் அவனைப் பாடச் சொல்லிக் கேட்டார்கள். அவன் முதன்முதலில் திரையில் பாடிய காலைக் காற்றே என்ற பாடலைப் பாடினான். அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.
ரகு சேகர் நடனம் ஆடினார்கள், பெண்கள் குருப் டென்ஸ் ஆடினார்கள், சிலர் மிமிக்கிரி செய்தார்கள். விக்கி ஜோக் சொன்னான், வைஷ்ணவி பரதநாட்டியம் ஆடினாள். அவளை முதல் முறையாக ரசித்துப் பார்த்தான் பிரகாஷ்.
ஸ்ருதி எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். மற்ற எல்லாருமே தங்களின் புது பிம்பத்தை மற்றவர்களிடம் காட்டி இயல்பாக இருந்தார்கள்.
அப்போது பிரகாஷ் காதில் எதையோ சொன்னான் ராகவன். அதைக் கேட்டு வியந்த பிரகாஷ் “இப்போது ஸ்ருதி வந்து பாடுவாங்க”, என்று அறிவித்தான்.
அவள் திகைத்து விழிக்க “சூப்பர் சார், நாங்களே சொல்லணும்னு நினைச்சோம். காலேஜ்ல ஸ்ருதி நல்லா பாடுவா”, என்று போட்டுக் கொடுத்தான் ரகு.
அனைவரும் அழைப்பதால் வேறு வழியில்லாமல் எழுந்து சென்றாள் ஸ்ருதி.
அவனையே பார்த்து “எங்கே எனது கவிதை?”, என்ற பாடலை அவள் பாட ஆரம்பிக்க அனைவருமே அவள் குரலில் மெய் மறந்து நின்றார்கள்.
ராகவனை அவளது குரலும் அசைத்தது, அதில் இருந்த சோகமும் அசைத்தது. அந்த காதல் தோல்வி பாடலில் ஸ்தம்பித்து நின்றான் ராகவன். அவள் தான் எடுத்த சங்கல்பம் எல்லாம் மறந்து அவனையே பார்க்க அவளுடைய விழி வீச்சில் கொஞ்சம் கொஞ்சமாக அடித்துச் செல்லப் பட்டான் ராகவன்.
அடுத்த இரண்டு நாள் கழித்து ஸ்ருதி சேகருடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். அவனிடம் மட்டும் அல்ல. அங்குள்ள அனைவரிடமும் அவள் நன்கு பேசுவாள். சேகர் அவனுடைய வீட்டில் நடந்ததைச் சொல்லிக் கொண்டிருக்க ஸ்ருதி அதற்கு கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் பேச்சை அலுவலகமே ரசித்தது. ஸ்ருதி சேகர் பேசுவதைப் பார்த்த ராகவனுக்கு ஏதோ உள்ளுக்குள் கோபம் பொங்கியது. நேராக அவர்கள் அருகில் சென்று “இது என்ன ஆஃபிசா? இல்ல உங்க வீடா? சிரிப்பெல்லாம் பலமா இருக்கு?”, என்று கேட்டான்.
அவனுடைய கோபத்தில் பயந்து போனாள் ஸ்ருதி. அவள் உடல் நடுங்கியது. சேகருக்கோ குழப்பமாக இருந்தது. அவனுக்கு தெரிந்த அளவில் ராகவன் இப்படி கிடையாது.
“உங்களைத் தான் கேக்குறேன். வேலை நேரத்துல என்ன நடக்குது இங்க?”, என்று ஸ்ருதியை முறைத்த படி அவன் கேட்க அவன் கோபத்தில் அவளுடைய கண்களில் கண்ணீர் வந்தது. அவள் அழ ஆரம்பித்ததும் ராகவனுக்கு கஷ்டமாக இருந்தது தான். ஆனால் அவன் கோபம் போக வில்லை.
“சாரி சார், ஸ்ருதி அவங்க வேலையை தான் பாத்துட்டு இருந்தாங்க. நான் தான் அவங்க கிட்ட ஒரு சந்தேகம் கேக்க வந்தேன். என்னை மன்னிச்சிருங்க”, என்று சொல்லி விட்டு சேகர் அங்கிருந்து சென்று விட்டான்.
அவன் சென்ற பின்னரும் தலை குனிந்த படி அழுது கொண்டே இருந்தாள் ஸ்ருதி. இந்த இடத்தில் ராகவன் இல்லாமல் வேறு யார் திட்டி இருந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் போயிருப்பாள். ஆனால் ராகவன் அப்படிச் சொல்லவும் தான் அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
“ப்ச் இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்ப அழுது சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க?”, என்று அவன் மீண்டும் கோபமாக கேட்க அவள் அழுகை மேலும் கூடியது.
“இப்ப அழுகையை நிறுத்தப் போறியா இல்லையா ஸ்ருதி? நான் உன்னை எதுவும் சொல்லக் கூடாதுன்னா நீ அழுதுட்டே இரு”, என்றான்.
அவன் சொன்னதில் இருந்த அர்த்தம் புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள். “என்ன பாக்குற? நான் உன்னைக் கண்டிக்கலாமா கூடாதா?”, என்று அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
கண்ணீருடன் மண்டையை உருட்டினாள். சிரிப்பு வந்தது அவனுக்கு. “நான் சொன்னா கேப்பியா? மாட்டியா?”, என்று கேட்டான்.
“கேப்பேன்”
“இப்ப நீ அழுகையை நிறுத்தணும். அப்படி நிறுத்தலைன்னா என் பேச்சைக் கேக்க மாட்டேன்னு நான் எடுத்துக்குறேன்”, என்று அவன் சொல்ல அவள் கைகள் உயர்ந்து அவளது கண்ணீரைத் துடைத்துக் கொண்டது.
அதை பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “குட், வேலையைப் பாரு”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். போகும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் ஸ்ருதி. அவள் தன்னையே பார்த்த படி நிற்பது கண்ணாடியில் தெரிய சிரித்துக் கொண்டான்.
கூடவே தான் ஏன் அவளிடம் அப்படி கோபப் பட்டோம் என்றும் அவனுக்கு வியப்பாக இருந்தது.
அடுத்த நாள் அவளுக்கென்று புதிய வேலை கொடுக்கப் பட திருதிருவென்று விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்த ராகவனுக்கு சிரிப்பு தான் வந்தது. என்ன தான் செய்கிறாள் என்று பார்ப்போம் என்று காத்திருந்தான்.
மதிய உணவு இடைவேளையில் அனைவரும் உணவு உண்ணச் செல்ல இவள் மட்டும் அந்த டாக்குமென்ட்டில் மூழ்கி இருந்தாள்.
“ஹலோ ஸ்ருதி, என்ன சாப்பிட வரலையா? அதெல்லாம் அப்புறம் பாக்கலாம் வாங்க”, என்று அழைத்தான் ராம்.
சரி என்று சொல்லி அவனுடன் நடந்தாள். ஒரு டேபிளில் இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள் அமர்ந்திருக்க அங்கே அவளை அழைத்துச் சென்றான் ராம். ரகு மற்றும் விக்கி இருவரும் வேறு டேபிளில் இருந்து எழுந்து வந்து ஸ்ருதி அருகில் அமர்ந்து கொண்டார்கள். வைஷ்ணவியும் வந்து விட்டாள்.
ராம் பழைய டீம் மேம்பர் ஒவ்வொருவரையும் ஸ்ருதி மற்றும் அவளுடைய நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்தான். பின் தேவையானதை வாங்கிக் கொண்டு தங்கள் இடத்தில் அமர்ந்தவர்கள் பேசிக் கொண்டே உண்ண ஆரம்பித்தார்கள்.
சாப்பிடுவதற்காக தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்த ராகவன் ஸ்ருதியைத் தேடினான். அவள் அவளுடைய இடத்தில் இல்லை என்றதும் கேண்டீன் சென்றான். அங்கே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்த கூட்டத்தில் புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.
அதுவும் அவள் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க அதைக் கேட்ட மற்றவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
ஸ்ருதி தேன்மொழி மற்றும் அமரிடம் நன்கு பேசுவாள் என்று அவனுக்கு தெரியும். மற்ற படி அவள் பயந்த சுபாவம் என்று தான் எண்ணியிருந்தான். ஆனால் இன்றோ அவர்களுடன் அவள் கலகலத்துக் கொண்டிருக்க “அப்ப என் முன்னாடி மட்டும் ஏன் பயந்தவ மாதிரி நிக்குறா”, என்று வியப்பாக எண்ணிக் கொண்டு உணவு வாங்கச் சென்றான்.
அவள் கண்ணில் படாதவாறு அதே நேரம் அவளுடைய பேச்சு கேட்கும் தூரத்தில் அமர்ந்து உணவு உண்ண ஆரம்பிக்க ஸ்ருதியோ அங்கே இருப்பவர்களை வா டா போ டா என்று சொல்லும் அளவுக்கு முன்னேறி இருந்தாள்.
உணவு உண்டு முடித்து விட்டு எழுந்த ஸ்ருதியின் கண்களில் விழுந்தான் ராகவன். அவனோ அவளைக் கோபமாக பார்த்துக் கொண்டிருக்க “ஐயோ இவர் ஏன் கோபமா பாக்குறார்?”, என்று பயந்த படியே கை கழுவச் சென்றாள் ஸ்ருதி.
அவள் பயத்தைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தான் ராகவன். அவனுக்கு அவளை புரிந்து கொள்ள முடிய வில்லை. அவ்வளவு நேரம் புதிய நண்பர்களுடன் அவ்வளவு சந்தோஷமாக பேசிச் சிரித்தவள் தன்னுடைய ஒற்றைப் பார்வைக்கே ஊமையாகிப் போனது அவனுக்கு வியப்பாக தான் இருந்தது.
அடுத்த நாள் மீட்டிங் காலில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். ராகவன் சற்று நேரத்தில் வந்து புராஜெக்ட் பற்றி பேசப் போகிறான் என்று தெரிந்து அவனைக் காண ஆவலும், அதே நேரம் அவன் எதிரே அமர்ந்து அவன் பேச்சைக் கேட்க போகிறோம் என்ற படபடப்பும் கொண்ட படி அமர்ந்திருந்தாள் ஸ்ருதி.