Skip to content
Post Views: 4,625
தினமும் நடப்பதை தன்னிடம் மூச்சு விடாமல் ஒப்பிக்கும் ஸ்ருதி இவ்வளவு பெரிய விஷயத்தை தன்னிடம் சொல்ல வில்லையே என்று வேதனையாக இருந்தது.
“என்னக்கா ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டான் அமர்…
Advertisement
“அண்ணா கூட சேந்து ஸ்ருதி பாட்டு பாடிருக்கா டா. அவளுக்கும் விருது உண்டாம். ஸ்ருதின்னு பேர் பாத்தேன். ஆனா இந்த ஸ்ருதின்னு தெரியாது டா. இப்ப வரை அவ ஒரு வார்த்தை கூட சொல்லலை பாரேன். கஷ்டமா இருக்கு டா. அவளுக்காக நான் எப்பவும் யோசிப்பேன். ஆனா அவ என்னையே மறந்துட்டால்ல?”
Advertisement
“இதை உனக்கு யார் சொன்னா?”
Advertisement
“அப்பா தான் சொன்னாங்க?”
Advertisement
“அப்பாவுக்கு யார் சொல்லிருப்பா?”
“இப்ப அதுவா முக்கியம்? இவ ஏன் டா என் கிட்ட சொல்லலை?”
“ஸ்ருதி அக்கா கிட்டயே கேட்டுறலாமா? எனக்கும் கூட தான் சொல்லலை?”
“ப்ச் வேண்டாம். இப்ப நான் அதைக் கேட்டேன்னா கண்டிப்பா ஏதாவது திட்டிருவேன். அவளே எனக்கு தெரியக் கூடாதுன்னு தானே நினைச்சா. அது எனக்கு தெரியாமலே போகட்டும்”, என்று சொல்லும் போதே ஸ்ருதி அவளை அழைத்து விட்டாள்.
“அவ தான் டா கால் பண்ணுறா”
“பேசுக்கா”
“ப்ச்”
“பேசு”
போனை எடுத்ததும் “சொல்லு ஸ்ருதி”, என்றாள் தேன்மொழி.
“உன் கிட்ட ஒரு சாரி கேக்கணும் தேனு”
“என் கிட்ட எதுக்கு சாரி?”
“எல்லாத்தையும் சொல்ற நான் உன் கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேன்”
“என்ன?”
“அன்னைக்கு ஒரு நாள் உங்க அண்ணா என்னை எங்கயோ கூட்டிட்டு போனாங்க. போய் ஒரு பாட்டு பாடச் சொன்னாங்க. எதுக்கு என்னன்னு எல்லாம் தெரியாது. போன வாரம் தான் தெரிஞ்சது அந்த பாட்டு அது படத்துல வருதுன்னு. இப்ப அந்த பாட்டுக்கு அவார்ட் கிடைச்சிருக்கு”
“ஓஹோ, இத்தனை நாள் கழிச்சு மேடம் இப்ப சொல்ல ரீசன் என்னவோ?”
“சொல்ற அளவுக்கு இது பெரிய விஷயம் இல்லைன்னு நினைச்சேன் டி. அது மட்டுமில்லாம உங்க அண்ணன் கூட்டிட்டு போனதுனால தான் சொல்லலை. ஆனா நான் செஞ்சது தப்பு தான்”
“என்னோட நட்பை விட உன் காதல் பெருசுன்னு எனக்கு எப்பவோ தெரியும் தான். ஆனாலும் என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்”
“தப்பு தான் டி. வீட்லயும் நான் சொல்லலை. அதை பெருசா நானே எடுக்கலை டி. வீட்லயும் ஒரே திட்டு. அண்ணா கூட திட்டிட்டான். உன் கிட்டயும் நான் சொல்லிருக்கணும். அமர் கிட்டயும் சொல்லலை”
“சரி விடு. அதுக்கு மேல என்ன சொல்ல தெரியலை. எனிவே வாழ்த்துக்கள்”
“என் மேல கோபமா?”
“அப்படி தான்னு நினைக்கிறேன்”
“பிளீஸ் டி சாரி டி”
“அவார்ட் வாங்கிட்டு வந்து அதை என் கையில கொடுத்துரு. அப்ப மன்னிக்கிறேன்’”, என்று தேன்மொழி சொல்ல புன்னகை அரும்பியது ஸ்ருதிக்கு.
“கண்டிப்பா டி. அப்புறம் அவார்ட் வாங்க உன் அண்ணா கூட தான் போவேன்னு நினைக்கிறேன்”
“போறது சரி தான். ஆனா அப்பவாது உன் காதலை அவன் கிட்ட சொல்லிரு”
“அவங்க கிட்ட வந்தாலே வாயில காத்து தான் வருது. இப்ப ஏதோ அக்கறையா பேசுற மாதிரி இருக்கு. ஆனா என்னன்னு தெரியலை. பாப்போம்”
“எப்படியாவது பேசு டி. நீ சொன்னா தான் அவன் யோசிப்பான். தயவு செஞ்சு அவனை யோசிக்க வை. சரி நான் அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி போனை வைத்தாள்.
அப்போது ராகவன் வருவது தெரிய “இருந்தாலும் இவங்க இப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கலைக்கா”, என்று கோபமாக கத்தினான் அமர்.
தேன்மொழி அவனை குழப்பமாக பார்க்க அவன் ராகவனைக் கண்ணைக் காட்டினான். அதை தெரிந்து கொண்ட தேன்மொழி “ஆமா டா, என்ன தான் இருந்தாலும் பிரண்ட்ஷிப் எல்லாம் வேஸ்ட் தான். என் கிட்ட சொன்னா நான் பொறாமையா பட போறேன். எனக்கு அவ கிட்ட பேசவே இஷ்டம் இல்லை டா. அவ பிரண்ட்ஷிப்பையே கட் பண்ணப் போறேன்”, என்று கோபமாக சொன்னாள் தேன்மொழி.
“என்ன ஆச்சு? என்ன பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?”, என்று கேட்டான் ராகவன் .
“இந்த ஸ்ருதி அக்கா ரொம்ப மோசம் அண்ணா. அவார்ட் வாங்க போறதை எங்க கிட்ட சொல்லவே இல்லை. அதை தான் பேசிட்டு இருக்கோம்”, என்றான் அமர்.
“ஆமா அண்ணா, என் கிட்ட எல்லாம் சொல்லுவா. ஆனா இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிட்டா. சரியான ஆளு”, என்று தேன்மொழியும் திட்ட “முதல்ல அவ அதை மறைக்கணும்னு நினைக்கலை தேனு. அவ அதை பெரிய விசயமாவே எடுத்துக்கலை. நான் சும்மா பாட கூடடிட்டு போனேன். சாருக்கு அவ குரல் பிடிச்சிருச்சு. அது படத்துல வரப் போகுதுன்னு அவளுக்கே தெரியாது. படம் பாக்கும் போது தான் தெரியும். அவங்க வீட்டுக்கு கூட சொல்லலை. அவ அந்த மாதிரி சுய நலமா நினைக்கிற ஆள் கிடையாது. அவளை தப்பா நினைக்காத. அவளோட பிரண்ட்ஷிப் எல்லாம் உண்மையானது தான்”, என்று அவளுக்காக பரிந்து பேசினான் ராகவன்.
அமரும் தேன்மொழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “அவ மேல கோபப் படாதீங்க என்ன?”, என்று சொல்லி விட்டு ராகவன் சொல்ல “பாத்தியாக்கா அண்ணனோட மாற்றத்தை”, என்றான் அமர்.
“ஆமா டா, முன்னாடி எல்லாம் அவளைப் பத்தி பேசினாலே திட்டுவான். இப்ப அவளுக்கு பரிஞ்சு பேசுறான். கூடிய சீக்கிரம் நல்லது நடக்கும் போல?”
“ஆமா, சரி உன் கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன். உன் ஆள் என்ன சொல்றார்?”
“பாத்தாலே கண்டுக்காம போறார்”
“இன்னொரு தடவை ஜோசப் வச்சு மிரட்ட வேண்டியது தானே?”
“ஜோசப் கிட்ட நவீன் என்ன சொன்னாங்கன்னு தெரியலை டா. என்னைக் கண்டாலே அவர் கண்டுக்காம போறார். பாப்போம் நவீன் என்ன தான் பண்ணுறான்னு. வீட்லயும் கல்யாணம் பத்தி பேசலைல்ல? அதனால அப்படியே போகட்டும் விடு”, என்றாள் தேன்மொழி.
உண்மையிலே ஜோசப்பிடம் நவீன் பேசி இருந்தான். தானும் தேன்மொழியும் விரும்புவதாகவும் வீட்டில் நிச்சயத்துக்கு நாள் பார்த்து விட்டதாகவும் இந்த விஷயம் தேன்மொழிக்கு தெரியாமல் சர்பிரைசாக நடக்கப் போவதாகவும் சொல்லி இருந்தான். அதனால் தான் ஜோசப் அவளைக் கண்டாலே விலகி ஓடினான்.
தன்னுடைய அறைக்குள் வந்த மதனை பார்த்த ராகவன் “என்னப்பா?”, என்று கேட்டான்.
“உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் பா. என்னோட பிரண்டுக்கு ஒரு பொண்ணு இருக்கா”
“அதெல்லாம் வேண்டாம் பா”, என்று அவரை தர்மசங்கடமாக பார்த்தான்.
“ஏன் டா?”
“எனக்கு ஸ்ருதியை பிடிச்சிருக்கு பா”
“இதைச் சொல்ல இவ்வளவு நாளா டா உனக்கு?”
“அப்பா?”
“போய் பொண்ணு எல்லாம் கேக்க தெரியுது. என் கிட்ட ஏன் சொல்லலை?”
“ஏதாவது நினைச்சிக்குவீங்கன்னு பயமா இருந்துச்சு பா”
“அவளை மாதிரி ஒரு பொண்ணை லவ் பண்ணினா நான் ஏன் டா தப்பா நினைக்க போறேன்? இன்னைக்கு தான் சம்பந்தி பேசினார். ஸ்ருதி உன்னை லவ் பண்ணுறதாக சொன்னார். எனக்கும் சம்மதம்னு சொல்லிட்டேன்”, என்று சொல்ல “தேங்க்ஸ் பா”, என்று சொல்லி அவரைக் கட்டிக் கொண்டான். ராஜிக்கு விஷயம் தெரிய அவளுமே சந்தோஷமாக சரி என்று சொன்னாள். ஆனால் அமர் தேன்மொழிக்கு அந்த விஷயம் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.
அன்று ராகவன் அலுவலகம் சென்று ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவனுக்கு தேவேந்திரனிடம் இருந்து கால் வந்தது. ஸ்ருதியை ஒரு பார்வை பார்த்து விட்டு அதை எடுத்து “சொல்லுங்க அங்கிள்”, என்றான்.
“இன்னும் என்ன அங்கிள்? மாமான்னு சொல்லுங்க மாப்பிள்ளை”
“சரி மாமா, அப்பா நீங்க கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டீங்கன்னு சொன்னாங்க. ரொம்ப தேங்க்ஸ் மாமா”
“நமக்குள்ள என்ன மாப்பிள்ளை? உங்களை மாதிரி ஒரு பையன் நான் தேடினாலும் கிடைக்காது. அப்புறம் நான் ஒரு முக்கியமான விஷயம் பேச தான் கூப்பிட்டேன்”
“என்ன மாமா?”
“நவீன் உங்க கூட வர மாட்டான். அவன் டிக்கட்டை கேன்சல் பண்ணிருங்க”
“ஏன் என்ன ஆச்சு? ஸ்ருதி எப்படி நீங்க யாரும் இல்லாம தனியா வருவா?”
“அதான் நீங்க இருக்கீங்களே அவளுக்கு?”
“மாமா?”
“ஆமா மாப்பிள்ளை. வாழ்க்கை முழுக்க அவளைப் பாத்துக்க போறீங்க? இந்த நாலு நாள் அவளை பாத்துக்க மாட்டீங்களா?”, என்று கேட்க அவன் சந்தோசத்தில் திக்கு முக்காடிப் போனான்.
“மாமா…. நான்”
“உங்க அப்பா உங்களைப் பத்தி எல்லாம் சொன்னார். இந்த வயசுலே உங்களோட பொறுப்புணர்ச்சியை பாத்து எனக்கு வியப்பு தான் வருது. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்க வருங்கால மனைவியை கூட்டிட்டு போயிட்டு பத்திரமா கூட்டிட்டு வரது உங்க வேலை. நீங்க அங்க இருந்து வந்து அடுத்த நாள் உங்க ரெண்டு ஜோடிக்கும் என்கேஜ்மெண்ட் சரியா?”
“சரி மாமா. ரொம்ப சந்தோஷம். கண்டிப்பா ஸ்ருதியை நான் நல்லா பாத்துக்குவேன். உங்க நம்பிக்கையைக் காப்பாத்துவேன்”
“சரிங்க மாப்பிள்ளை, வைக்கிறேன்”, என்று சொல்லி போனை வைத்தார்.
இசை தொடரும்….
error: Content is protected !!