Skip to content
Post Views: 2,699
“ஹலோ அத்தை! எப்படி இருக்கீங்க?” காதோடு கைபேசியை வைத்துப் பேசியவளாய்ச் சமையலறையில் அடுப்பில் கடாயில் காய்கறியைக் கிண்டிக் கொண்டிருந்தாள் சிந்துஜா.
மறுபுறம் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தவளாய்,
“நல்லா இருக்கேன் அத்தை! அவருக்கு ஃபோன் செஞ்சீங்களா? எடுக்கலையா? இன்னிக்கு வர்க் ஃப்ரம் ஹோம் அத்தை! ஏதாவது ஆபிஸ் மீட்டிங்க்ல இருந்திருப்பாரு! என்னது அவர்கிட்ட போனைக் கொடுக்கவா?” எனக் கேட்டவாறு அடுப்பைச் சிறு தீயில் வைத்தவளின் மனமோ, ‘ஆமா அப்படியே நான் கொடுத்த உடனே வாங்கிப் பேசிட போறாரு’ என்றெண்ணியவாறு இருக்க,
“யுகி பார்த்து விளையாடுடா! விழுந்து தொலைக்காத” வரவேற்பறையில் சோஃபாவில் இருந்து குதிக்கத் தயாராகிக் கொண்டிருந்த மகனை பார்த்து கத்தியவளாய் போனை மியூட்டில் போட்டுக் கொண்டே இன்பா வேலை செய்து கொண்டிருந்த அறை நோக்கி சென்றாள்.
Advertisement
கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவள், “அத்தை உங்ககிட்ட பேசனுமாம்” மடிகணிணியில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தவன் முன்பு நின்று கூறினாள்.
காதில் இருந்த ஹெட்செட்டை காண்பித்து மீட்டிங்கில் இருப்பதாய் சைகை செய்தவன் அவளை வெளியே போகச் சொன்னான்.
அவனின் சைகை புரிந்தும் புரியாதவளாய், “எனக்கு அங்க அடுப்புல இருக்கக் காய் தீஞ்சிடும்ங்க! இந்தாங்க அதை நீங்களே உங்கம்மாகிட்ட சொல்லுங்க” என்று கைபேசியை அவனது கையினில் வைக்க,
Advertisement
கோபம் உச்சத்தில் ஏற, தனது மீட்டிங்கை மியூட்டில் போட்டவன், “அடியேய் அறிவுக் கெட்டவளே! கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா உனக்கு! மீட்டிங்ல இருக்கேன்னு சொல்றேன். வந்து நொய் நொய்யினுட்டு இருக்க” என்று கத்தினான்.
Advertisement
அவனைப் பார்த்து முறைத்தவளாய், “அத்தை கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்” என்று கைபேசி இணைப்பைத் துண்டித்தவள் சமையலறைக்குச் சென்று அடுப்பை அணைத்து விட்டு மீண்டுமாய் அறைக்குள் வந்து, “யாரை ஏமாத்தப் பார்க்கிறீங்க? அது ஒன்னும் அவ்ளோ முக்கியமான மீட்டிங்கா இருக்காதுனு எனக்குத் தெரியும். உங்களுக்கும் உங்க அம்மாக்கும் இடையில் நான் தான் கிடந்து அல்லாடிட்டு இருக்கேன். நீங்க அவங்ககிட்ட பேச மாட்டீங்கனு தெரிஞ்சும் இடைல உங்கம்மா என்னைக் கோர்த்து விட்டா, இது தான் சாக்குனு அவங்க மேல உள்ள கோபத்தைலாம் என்கிட்ட காண்பிச்சிட்டு இருக்கீங்க! அவ்ளோ தான் சொல்லிட்டேன்” அவனை நோக்கி விரல் நீட்டி கண்களில் நீர் மின்னப் பேசினாள்.
அவளின் பேச்சிலும் கண்களை நிறைத்த நீரிலும் பெருமூச்சு விட்டுத் தன்னைச் சமன் செய்தவனாய் எழுந்து அவளருகில் செல்ல, தன்னை நோக்கி வந்த அவனின் கையைத் தட்டி விட்டவளாய் கண்களைத் துடைத்தவாறு வெடுக்கென வெளியே சென்றாள்.
“ம்ப்ச்” எனத் தலை முடியை அழுந்த கோதியவன், “மனுசனை நிம்மதியா வேலை பார்க்க விடுறாங்களா? இதுக்குத் தான் வர்க் ஃப்ரம் ஹோமே எடுக்கிறது கிடையாது” தனக்குள்ளேயே புலம்பியவனாய் அலுவலக வேலையைப் பார்க்கலானான்.
Advertisement
அன்று மாலை அலுவலக நிகழ்ச்சிக்கு குடும்பத்தினரை அழைத்துச் செல்ல வேண்டி இருந்ததால், வீட்டிலிருந்தே வேலை பார்த்து விட்டு மாலை குடும்பத்தினரை அழைத்துச் செல்லலாம் எனத் திட்டமிட்டிருந்தான் இன்பா.
“அம்மாவுக்கும் பிள்ளைக்கும் நான் தான் கிள்ளுக்கீரையா கிடைச்சேன் போல! என் கல்யாணம் முன்னாடிலருந்தே தான் அவர் அவங்கம்மாகிட்ட பேசாம இருக்காரே! என்னமோ கல்யாணத்துக்குப் பிறகு நான் தான் இவரை முந்தானைல முடிஞ்சிக்கிட்டு இவரைப் பேச விடாம செய்றேன்னு அந்தம்மா என்னைக் கேள்வி கேட்குறாங்க” கண்களில் நீர் துளிர்க்க புலம்பியவாறே சமைத்திருந்தாள்.
இவளின் கைபேசியை அவனின் அறையிலேயே அவள் வைத்துவிட்டு வந்திருக்க, மீண்டுமாய் அவளின் அலைபேசியில் அவளின் அத்தை பூர்ணம் அழைக்க, அதைப் பார்த்த இன்பா, அந்தக் கைபேசியை எடுத்து அழைப்பைத் துண்டித்து விட்டுத் தனது கைபேசியில் தந்தைக்கு அழைத்தான்.
அவரின் மூலம் அன்னை பேச வந்த செய்தியை அறிந்து கொண்டவன், தனது பதிலைக் கூறிவிட்டு கைபேசியை வைத்து விட்டான்.
மதிய உணவினை சமைத்து முடித்தவள், அவனின் அறையை எட்டிப் பார்த்தவளாய், “சாப்பிட வாங்க” என்று அவன் முகம் பாராது உரைத்து விட்டு வந்து முகப்பறையில் அமர்ந்தாள்.
உணவு மேஜையில் அவனுக்கான உணவினை அவள் பரிமாறிக் கொண்டிருக்க, நாற்காலியில் அமர்ந்திருத்தவன், “நீ சாப்பிட்டியா?” எனக் கேட்டான்.
‘ஆமா இப்ப தான் அக்கறை அரகரானு ஆடுது. மனசாட்சி இல்லாம திட்டும் போதுலாம் எங்கே போச்சாம்’ என வாய்க்குள் முனங்கியவளாய் அவனை முறைத்துப் பார்த்து விட்டு ஒன்றும் கூறாமல் உணவினைப் பரிமாறினாள்.
அவளின் முனங்கலையும் முறைப்பையும் பார்த்தவனாய், “நீ பதில் சொல்லாம நான் சாப்பிட மாட்டேன்” எனக் கைகளைக் கட்டிக் கொண்டு அவளைத் தீர்க்கமாகப் பார்த்தவாறு நிமிர்ந்து அமர, கோபம் கொண்டவளாய், “ஏன் எனக்குக் கோபப்படக்கூட உரிமை இல்லையா? நீங்க செய்ற அழிசாட்டியத்துக்குலாம் உங்கம்மா என் மேல தான் பழியைத் தூக்கி போடுறாங்க. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடிலருந்தே நீங்க உங்கம்மாகிட்ட பேச மாட்டீங்க தானே. அதுக்கான காரணத்தை இது வரைக்கும் நீங்க என்கிட்ட சொல்லிருக்கீங்களா? இப்ப நீங்க போன் பேசாம இருந்ததுக்கும் நான் தான் காரணம்னு எனக்குப் போன் போட்டு திட்டுவாங்க. எனக்காக ஒரு வார்த்தை உங்கம்மாகிட்ட பேச கூடாதா?”
அவளின் பேச்சை கைக்கட்டி கேட்டுக் கொண்டிருந்த இன்பா, டம்ளரில் தண்ணீரை ஊற்றி அவளிடம் பருக நீட்டினான். அதை வாங்காது மேலும் அவள் அவனை முறைக்க, அவளின் கைப்பற்றித் தன்னருகில் அமர வைத்தவனாய், “சாரி” என்றான்.
“நிஜமா முக்கியமான மீட்டிங்கல தான் இருந்தேன் சிந்து” கண்களைச் சுருக்கி கெஞ்சும் பாவனையில் உரைத்தான்.
அவனை முறைத்தவாறே அவனளித்த நீரை வாங்கிப் பருகியவள், “எனக்காக உங்கம்மாகிட்ட பேச மாட்டீங்களா?” எனக் கேட்டாள்.
“என்னை வச்சி அம்மா உன்னை ரொம்பத் திட்டுறாங்களா?” எனக் கேட்டான்.
ஏற்கனவே இப்படியான ஒரு சூழலில் தான் அவளைத் தாயிடம் இருந்து பிரித்துத் தனிக்குடித்தனமாக இங்கே அழைத்து வந்தான்.
அதை நினைத்தவளாய், “அது எப்பவும் நடக்குறது தானே!” என்றாள்.
“நான் அப்பாகிட்ட பேசி அம்மாவை கண்டிக்கச் சொல்றேன்” என்றதும்,
“ஆமா அப்படியே உங்கம்மா கேட்டுடுவாங்க பாருங்க! எனக்குப் பழகிடுச்சு விடுங்க. எதுக்கு மாமாவை வேற இதுல இழுத்து கஷ்டப்படுத்தனும்” என்றவாறே அவனுக்கு உணவினை அவள் பரிமாற, அவளின் இந்தக் குணம் தானே தன்னை அவளிடம் சரணடைய வைத்தது என்றெண்ணியவனாய் மென்னகை புரிந்தவாறு உண்ண ஆரம்பித்தான்.
மேஜை மீது அமர்ந்திருந்த மகனுக்கு உணவினை ஊட்டியவாறு அவளைத் தன்னுடன் அமர்ந்து உண்ண வைத்து என அந்த மதிய உணவுப்பொழுது குடும்பத்துடனான அழகிய பொழுதாகக் கழிந்திருந்தது அவனுக்கு.
‘பரவாயில்லை இதுக்காக அப்பப்ப வர்க் ஃப்ரம் ஹோம் எடுக்கலாம்’ மனதோடு நினைத்துக் கொண்டவனாய் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
மாலை நான்கு மணியளவில் மகனை குளிக்க வைத்து அவனை இன்பாவிடம் கொடுத்து உடை அணிவிக்குமாறு கூறியவள் குளிக்கச் சென்றாள்.
மகனை தயார் செய்து முகப்பறையில் அவன் விளையாடும் பொம்மைகளைக் கொடுத்து உட்கார வைத்தவன் படுக்கையறையின் கதவைத் தட்டியவாறு உள்ளே சென்று, “யுகி மேல ஒரு பார்வை வச்சிட்டே கிளம்பு சிந்து” என்று புடவை உடுத்திக் கொண்டிருந்த மனைவியிடம் உரைத்தவனாய் துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றான்.
குளித்து விட்டு இடையில் துண்டுடன் வெளியே வந்தவன் முழுவதுமாகத் தயாராகிக் கிளம்பி நின்ற மனைவியைப் பார்த்தான்.
“அழகா இருக்கடா சிந்து” என்றவனாய் மனைவியை இறுக அணைத்தவன் கன்னத்தில் முத்தமிட்டு செல்ல, தன்னுடலில் உணர்ந்த அவன் உடலின் சில்லிப்பும் தன் மீது தெறித்திருந்த அவனது தலைமுடியின் ஈரத்துளிகளும் அவளைச் சிலிர்க்கச் செய்திருந்தது.
அவனைக் கண்டும் காணாத பார்வையுடன் நாணப்புன்னகை சிந்தியவளாய் முகப்பறைக்குச் சென்றாள்.
மகனைத் தூக்கிக் கொண்டு படுக்கையறைக்கு வந்தவள் கிளம்பி நின்ற கணவனைக் கண்டு மெச்சுதலாய் புருவத்தை உயர்த்தினாள்.
தனது நெற்றியில் வைப்பதற்காகத் தண்ணீரில் கலந்து வைத்திருந்த சந்தனத்தை எடுத்து, கணவனை லேசாகத் தலையைத் தாழ்த்தக் கூறி நெற்றியில் சிறு கீற்றாய் வைத்தவள், மகனுக்கும் வைத்தாள்.
“இப்ப பெர்ஃபெக்ட்” என்றவள், “செம்ம ஹேண்ட்சம்மா இருக்கீங்கப்பா” என்று அவனை லேசாக அணைக்க, “நானு நானு” எனத் தாய் தந்தையரின் காலை மகன் கட்டிக்கொள்ள இருவரும் வாய்விட்டு சிரித்திருந்தனர். இன்பா குனிந்து மகனை தூக்கிக்கொண்டு மனைவி மகனுடன் தற்படங்கள் எடுத்துக் கொண்டான்.
“கேஸ் சிலிண்டர் ஆஃப் பண்ணியாச்சா? எல்லா ரூம்லயும் லைட் ஃபேன்லாம் ஆஃப் பண்ணியாச்சா? எல்லா வாட்டர் டேப்பும் கிளோஸ் ஆகிருக்கா?” என இன்பா ஒவ்வொன்றாய் சரி பார்த்து கதவின் சாவியை எடுத்து வெளியே வர, மகனைத் தூக்கியவாறு வெளியே வந்தாள் சிந்துஜா.
“குடும்பச் சகிதமாக வெளில கிளம்பிட்டீங்க போலருக்கே” என்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர்களின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருந்த கீதாக்கா இவர்களின் வீட்டை கடந்தவராய் கேட்க, “ஆமாக்கா அவரோட ஆபிஸ் ஃபங்கஷனுக்குப் போறோம்” என்று அவருடன் சிரித்தவாறு பேசியவாறே மின்தூக்கியின் (lift) அருகே சென்று நின்றாள் சிந்துஜா.
கதவைப் பூட்டிவிட்டு சரி பார்த்து கொண்டவனாய் அவர்களுடன் மின் தூக்கியினுள் நுழைந்தான் இன்பா.
மாலை ஐந்தரை மணியளவில் மகிழுந்தில் அலுவலகம் நோக்கி பயணித்திருத்தனர் இன்பா குடும்பத்தினர்.
அலுவலகத் தரிப்பிடத்தில் மகிழுந்தை நிறுத்தி விட்டு இறங்கிய இன்பா, மகனை கைகளில் தூக்கியவனாய் மனைவியின் கையைப் பற்றியவாறு விழா நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
error: Content is protected !!