Skip to content
Post Views: 1,510
குழந்தையைக் கொஞ்சியவாறு விழா இடத்தை நோக்கி அன்னமும் அவளின் அண்ணி மதுர நங்கையும் நடந்து சென்றிருந்தனர்.
“எப்படி அன்னம் புடவை கட்டிக்கிட்டு பாப்பாவையும் தூக்கி வச்சிக்கிட்டு மேனேஜ் செய்ற! எனக்கு இன்னும் புடவையைக் கட்டிக்கிட்டு மேனேஜ் செய்யத் தெரியாது” என்றவளாய் அன்னத்திடம் இருந்த தனது மகள் நந்திதாவை தன் கையில் வாங்கிக் கொண்டாள் மதுர நங்கை.
மிதமான வேலைப்பாடுகள் உள்ள நீளமான கவுன் போன்ற சல்வாரை உடுத்தியிருந்தாள் நங்கை. மெல்லிய பட்டுப்புடவையை உடுத்தியிருந்தாள் அன்னம்.
“அது சின்ன வயசுலருந்தே பண்டிகைனாலே புடவை கட்டிக்கனும்னு அடிக்கடி கட்டினதால வந்த பழக்கம் அண்ணி” என்றாள் அன்னம்.
Advertisement
“என்னோட உருண்டு திரண்ட உடம்புக்கு புடவை சரிவராதுனு ரொம்பக் கட்ட மாட்டேன் நான். கண்டிப்பாகத் தேவைனா மட்டும் தான் கட்டுறது! அதுவும் என் புருஷனுக்காகக் கல்யாண டைம்ல யூ டியூப் பார்த்து புடவை கட்ட பழகினது தான். உன் பொண்டாட்டிக்கு ஒழுங்கா புடவை கட்டக்கூடத் தெரியலை பாருன்னு அவனை யாரும் குறை சொல்லி பேசிட கூடாதேனு நினைச்சே கத்துக்கிட்டேன்” என்றாள் நங்கை.
“சோ ஸ்வீட்! மேட் ஃபார் ஈச் அதர் தான் நீங்க இரண்டு பேரும்” என்றாள் அன்னம்.
அவளின் கூற்றில் சிரித்தவளாய், “அப்படி ஈசியா தானா மேட் ஃபார் ஈச் அதர் ஆகலை. மேட் ஃபார் ஈச் அதரா நாங்க எங்களை மாத்திக்கிட்டோம்னு சொல்லலாம்” என்றாள் நங்கை.
Advertisement
“ஹ்ம்ம் ராஜாண்ணா பத்தி பேசினாலே மூஞ்சில பல்ப் எறிஞ்சிடுதே உங்களுக்கு” அன்னம் அவளைக் கேலி செய்ய,
Advertisement
சிரித்தவளாய், “இன்னிக்கு ஏதோ மீட்டிங்னு இன்னும் ஃபோனே செய்யலை அவன். நானும் பாப்பாவும் ரெடியாகிட்டு போட்டோ அனுப்பி விட்டோம். பார்த்தானா இல்லையானு தெரியலை” வாட்டமான குரலில் உரைத்தாள்.
மதுர நங்கையும் சுந்தரராஜனும் உற்ற தோழமைகளாய் இருந்து கணவன் மனைவி பந்தத்திற்குள் வந்தவர்கள். இருவரும் வெவ்வேறு அலுவலகத்தில் மென்பொருளாளராய் பணிபுரிகிறார்கள்.
பணி நிமித்தமாக ராஜன் ஹைத்ராபாத் சென்றிருந்ததினால் தான் அவனால் இந்நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை.
Advertisement
திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக அவனைப் பிரிந்திருக்கிறாள் மதுர நங்கை.
“அண்ணாவை ரொம்ப மிஸ் செய்றீங்களா அண்ணி?” அன்னம் கேட்க,
“அப்படியா வெட்ட வெளிச்சமா மூஞ்சுல தெரியுது” என்று சிரித்த நங்கை, “என்னை விட என் பொண்ணு அவங்க அப்பாவை ரொம்ப மிஸ் செய்றா” என்றாள்.
இருவரும் பேசியவாறு நிகழ்ச்சி அரங்கை நோக்கி நடந்து கொண்டிருந்த நேரம், வழியில் தன்னுடன் கல்லூரியில் பயின்ற பெண்ணை அங்குக் கண்ட நங்கை, “அன்னம்! அந்தப் பொண்ணு பிரவீணா என் கூடக் காலேஜ்ல படிச்ச பொண்ணு அன்னம். இங்கயா வேலை செய்றா! நான் போய்ப் பேசிட்டு வரேன்” என்றவளாய் அந்தப் பெண்ணை நோக்கிச் செல்ல,
“அண்ணி என் டீம்லருந்து கால் செய்றாங்க! நான் போய்ப் பேசிட்டு இருக்கேன். நீங்க பேசிட்டு வாங்க” என்றவாறு குழந்தையுடன் முன்னே சென்றாள் அன்னம்.
விழா இடத்தினை அடைந்த அன்னத்தினை நோக்கி, “ஹாய் அன்னம்! யூ லுக் சோ பியூட்டிபுல் டுடே” என்ற பாலாஜி, அவனருகில் நின்றிருந்த மனைவியை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
“சோ கியூட் பேபி! யாரோட பாப்பா?” எனக் கேட்டவாறு மோகன் அன்னத்தின் கையிலிருந்த குழந்தையைத் தனது கைகளில் வாங்கிக் கொள்ள,
“அண்ணியோட பொண்ணு! அண்ணி வந்துட்டு இருக்காங்க” என்றாள் அன்னம்.
“பாப்பா பேரு என்ன? சொல்லுங்க” என்று குழந்தையிடம் மோகன் பேச,
அச்சமயம், “ஹாய் கைஸ்” என்ற வண்ணம் அவர்களின் அருகில் வந்து நின்றான் இன்பா.
தனது குழு மக்களிடம் சிரித்த முகமாய் முகமென் கூறியவனைப் பார்த்து அனைவரும் சிரித்தவாறு பேசினர்.
“புடவைல ரொம்ப அழகா இருக்க அன்னம்” என்ற இன்பாவின் கரத்தினைப் பற்றியவாறு நின்றிருந்தான் அவனது மகன் யுகேந்திரன்.
“ஆமாங்க! அப்படியே அன்னம்ன்ற பேருக்கேத்த மாதிரி இருக்கீங்க” என்றாள் சிந்துஜா.
அவளின் பாராட்டுதலில் மென்னகை புரிந்தவளாய், “தேங்க்யூ” என்ற அன்னம், யாரிந்த பெண் என்பது போல் இன்பாவை பார்த்தாள். இன்பாவின் கரத்தை விட்டு ஓடியாட துடித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனையும் பார்த்தாள்.
“இவங்க தான் என் மனைவி சிந்துஜா. இது என் பையன் யுகேந்திரன்” என்றான் இன்பா.
அதிர்ச்சியில் அன்னத்தின் கண்கள் விரிய, ‘என்னது இன்பாக்குக் கல்யாணம் ஆகிடுச்சா’ என்ற மைண்ட் வாய்ஸூடன் அவள் பார்த்திருக்க,
“உங்களைப் பத்தி இன்பா என் கிட்ட பேசாத நாளில்லை அன்னம்” என்றாள் சிந்துஜா.
சுழற்சி முறையில் அனைத்து ஷிப்ட்டும் இருக்கும் அவர்களின் பிராஜக்ட்டில் பெரும்பாலும் பெண்களை எடுக்க மாட்டான் இன்பா. இது வரைக்கும் பெண்களையே எடுத்ததில்லை என்று தான் கூற வேண்டும். ஒரு நெருக்கடியான சூழலில் தான் அன்னத்தை அந்தப் பிராஜக்ட்டிற்கு எடுத்திருந்தான் இன்பா. அதிலும் கல்லூரி முடித்த கையோடு இந்த அலுவலக வேலையில் சேர்ந்த அன்னத்திற்கு இது தான் முதல் பிராஜக்ட் என்பதால் அவளது குழுவில் அனைவருமே அவளைச் சிறுப்பெண்ணாய் பாவித்துத் தான் பழகினர்.
“பாருங்க என்னைப் பத்தி உங்ககிட்ட சொல்லிருக்க என் மேனேஜர், உங்களைப் பத்தி என்கிட்ட சொல்லவே இல்ல. நம்ம டீம்ல கூட யாருமே என்கிட்ட சொல்லவே இல்லை” என்ற அன்னம்,
“ஹாய் குட்டிப்பையா! அப்படியே உங்கப்பா மாதிரியே இருக்கீங்க” என்றவாறு சிறுவனின் உயரத்தினளவு அமர்ந்து அவனது கன்னத்தைக் கிள்ளியவாறு கூறினாள்.
தந்தையின் கால்களைக் கட்டிக் கொண்டான் அவன்.
“புது ஆளுங்ககிட்ட சட்டுனு பழக மாட்டான்” என்றவாறு மகனை கைகளில் தூக்கிக் கொண்டான் இன்பா.
“உங்களை மாதிரியேனு சொல்லுங்க” என்று சிரித்தாள் அன்னம்.
அன்னத்தின் செயல்களைப் பார்த்து சிரித்தவாறு நின்றிருந்த சிந்துஜா,
“இந்தப் பேச்சு தான் அவருக்கு உங்ககிட்ட பிடிச்ச விஷயம். நீங்க இருக்கிற இடம் கலகலனு தான் இருக்கும்னு சொல்வாரு. அன்னிக்கு நீங்க மயங்கி விழுந்ததுல ரொம்பவே பயந்துட்டாருனு சொன்னாரு. ஆமா இப்ப உடம்பு எப்படி இருக்கு?” என்று வாஞ்சையுடன் அன்னத்தின் கைப்பற்றிச் சிந்துஜா கேட்க, நெகிழ்ந்து விட்டாள் அன்னம்.
அலுவலகத்தில் மோகன் விளையாட்டாய் அவளைப் பயமுறுத்த செய்த வேலை தான் அவளை மயங்க செய்திருந்தது. அதன் பின்பு சிறிது நாள் ஓய்வெடுத்து விட்டு வேலைக்கு வந்திருந்த அன்னத்தை இன்று முதல் முறையாகப் பார்த்ததினால் அதனைக் கூறி அவளின் நலனை விசாரித்திருந்தாள் சிந்துஜா.
மேனேஜரின் மனைவி என்ற எந்தவிதமான அலட்டலும் இல்லாமல் சகஜமாக நட்புணர்வுடன் பேசிய சிந்துஜாவை நிரம்பப் பிடித்து விட்டது அன்னத்திற்கு.
இன்பாவும் மனைவியின் இந்த இயல்பான பேச்சை கனிவுடன் பார்த்திருந்தான்.
“நான் நல்லா இருக்கேன்க்கா! எல்லாம் இந்த மோகன் செஞ்ச வேலை தான்” என்றவாறு அருகில் நின்றிருந்த மோகன் கையில் ஒரு அடி வைத்தாள்.
இன்பாவின் கையிலிருந்த குழந்தையிடம், “அக்கா கிட்ட வா! நான் உனக்கு நிறைய சாக்லேட் வாங்கித் தரேன்” எனக் கைகளை நீட்டி அன்னம் அழைக்க, தாவினான் அவளிடம்.
“ஸ்வீட் பாய்” என்றவாறு அவன் கன்னத்தை வருடியவளின் கைபேசி அலற, ஒரு கையால் அவனைத் தூக்கி கொண்டு மறுகையால் அழைப்பை ஏற்றுக் கைபேசியைக் காதினுள் வைத்தாள் அன்னம்.
அசோக் மற்றும் பாலாஜியுடன் பேசியவாறு இன்பா நின்றிருக்க, அன்னத்துடன் நின்றிருந்தாள் சிந்துஜா.
“ஹான் அண்ணி! எங்க இருக்கீங்க?” என்றவளாய் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வருவதற்கான பாதையை உரைத்தாள்.
“ஹான் பார்த்துட்டேன் அன்னம்” என்றவாறு அவர்களின் அருகே வந்த நங்கையைக் கண்டு ஸ்தம்பித்து நின்றான் இன்பா.
பெரும் அதிர்ச்சி நெஞ்சை தாக்க, கண்கள் அவளை விட்டுத் துளியும் அசையாமலிருக்க, மூச்சடைப்பதுப் போன்ற உணர்வு அவனுக்கு.
‘நங்கை’ அன்னிச்சையாய் மொழிந்தன அவன் இதழ்கள்.
“ஹாய் அன்னம்” என்று அவளின் அருகே வரவும், மோகன் கையிலிருந்த குழந்தை, “ம்மாஆஆஆ ம்மாஆஆஆ” என நங்கையிடம் தாவினாள்.
நங்கையையும் குழந்தையையும் பார்த்தவனின் கண்கள் சுற்றுப்புறம் சுற்றிப் பார்த்தவாறு அவளின் கணவனைத் தேடின.
குழந்தையைக் கையில் வாங்கியவாறு மோகனிடம் பேசிய நங்கையைத் தன் பக்கமாகத் திருப்பி, “இவங்க தான் என் மேனேஜர் இன்பா! இவங்க அவங்க மனைவி சிந்துஜா! இந்தக் குட்டிப்பையன் அவங்க மகன் யுகேந்திரன்” என்று அறிமுகம் செய்தவள், “இவங்க என் அண்ணி மதுர நங்கை! இது அவங்க மக நந்திதா” என்று அறிமுகம் செய்தாள்.
முகம் முழுக்க மகிழ்வாய் குழந்தையுடன் நின்றிருந்த நங்கையைப் பார்த்தவனின் மனமும் மகிழ்வில் திளைத்தது.
அனைவரிடமும் மென்னகை புரிந்தவாறு, “ஹாய்” என்ற நங்கையின் முகத்திலும் பேச்சிலும் எவ்வித மாற்றமும் இல்லை.
முகத்தில் சிறு துளி மாற்றமோ அதிர்வோ இல்லாமல் இயல்பாக நங்கை தன்னை எதிர்கொண்ட தன்மையில் குழம்பிப் போனான் இன்பா.
அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. தன்னை, தனது முகத்தை இவள் மறந்தே விட்டாளா என்ற கேள்வி அவனின் மனத்தை குடைந்தது.
‘ஏன் என்னைத் தெரியாதது போல் தவிர்க்கிறாள்? இயல்பாகப் பேசலாமே!’ என்றவன் உள்ளுக்குள் மருக, ‘அவள் இயல்பாகப் பேசுமளவா நீ நடந்து கொண்டாய்’ என்று அவனைக் குற்றம் சாட்டியது அவனின் மனசாட்சி.
error: Content is protected !!