Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ஒளி சிந்தும் இரவு 1.2

“கவிதையே தெரியுமா…

  என் கனவு நீதானடி…” என்று பாடியபடி உள்ளே வந்தவளின் பாட்டு சட்டென நின்றது.

  மகளின் பாட்டு சத்தத்தில் வெளியே வந்த ஜானகி “வா முல்லை” என அவளின் அறைக்கு அழைத்துச் சென்று, “இப்படி இருக்காதேனு அப்பா எத்தனை முறை சொல்றார்?” என கடிந்து, “நீ எங்க தங்கம்டா. இது உன் வீடு. உனக்கில்லாத உரிமை இங்க யாருக்கும் கிடையாது” என்றார் மன்றாடலாக.

   “ம்” என தலையசைக்க, “இன்னைக்கு எவன் இந்த பாட்டை பாடினான்? டைப் இன்ஸ்டியூட் பசங்களா? இல்ல ஜிம்முக்கு வர தடிமாடுங்களா?” என்றார் விசாரணையாக.



Advertisement

   “என்னைப் பார்த்து பாடுறான். உன் பேரென்ன? எதுக்காக இந்த பக்கம் வந்தேன்னா கேட்க முடியும்?” என லேசாய் சிரிக்க, மகள் இயல்புக்கு வந்துவிட்டாள் என்று “போய் முகம் கழுவிட்டு வா, டீ வைக்கறேன்” என்று வெளியே வந்தார் ஜானகி.

   “அவன் வீட்டுலயும் ஒரு பொண்ணிருக்கா, இன்னும் எழெட்டு வருசம் கழிச்சு எவனாவது இப்படி பாடினா அப்போ தெரியும் நம்மளோட வலி” என அன்பரசுவையும், அங்கு பயிற்சிக்கு வரும் ஆண்களையும், மற்றும் அன்பரசு அப்பாவிடம் தட்டச்சு பயில வரும் மாணவர்களையும் மனதில் சாடியபடி மகளுக்கு டீ வைத்துக்கொண்டிருந்தார்.

   ஜானகி ரங்கசாமி இருவரின் வளர்ப்பு மகள் முல்லை. குழந்தை பாக்கியம் வேண்டி ஜானகியின் நாற்பத்தைந்து வயதுவரை வைத்தியம் பார்த்தார் ரங்கசாமி. ஆனால் பலன்தான் இல்லை.

Advertisement

    தனது திருமணத்திற்கு பிறகு நான்கு வருடம் கழித்து தம்பிக்கு திருமணம் நடைபெற, நாராயணன் உஷா தம்பதிக்கு அந்த வருடமே குழந்தை பாக்கியம் கிட்டியது.

Advertisement

    முதல் குழந்தை விக்னேஷ் பிறந்து இரண்டு வருடம் முடிந்திருக்க மகளும் பிறந்தாள். தம்பி மகள் லட்சணமாய் இருக்க, அபர்ணாம்பிகை என பெயரிடச் சொன்னார் ரங்கசாமி.

   அண்ணனின் ஆசைக்காக அபர்ணா என பெயர் வைத்தார் நாராயணன். குழந்தைக்கு ஐந்து மாதம் வந்த பின்னே, அபர்ணாவை தனக்கு கொடுக்க கேட்டார். மிகுந்த தயக்கத்தோடுதான் கேட்டார்.

   குழந்தை யார்கிட்ட இருந்தா என்னண்ணா? அபர்ணா நம்ம குழந்தை என்றுவிட்டார் நாராயணன். தம்பியின் மறுப்பை தவறாக நினைக்கவில்லை ரங்கசாமி. தன் உதிரத்தை விட்டுக்கொடுப்பது கடினம்தான் எனப்புரிந்திருந்தார்.

Advertisement

   பின்னே அக்காள் (வனிதா) மகனை கேட்டார். மகனுக்கு பத்து வயதென்பதால் இங்கே இருக்கமாட்டான் என்றும், மாமியார் மாமனார் விடமாட்டார்கள் என்றும் சங்கடத்தோடு மறுத்துவிட்டார் வனிதா.

   வனிதாவிற்கும் திருமணமாகி பத்து வருடங்கள் கழித்துதான் மகள் பிறந்தாள். மேலும் இரண்டு வருடங்கள் கழித்து இரட்டை குழந்தைகளாய் மகன்கள் பிறந்தார்கள். விட்டுக்கொடுப்பது மிகக்கடினம்தான். தனக்காக அக்காள் ஒப்புகொண்டாலும் மாமா மற்றும் குடும்பத்தினர் ஒப்புகொள்வது கடினம். எனவே வனிதாவின் மறுப்பும் நியாமானதுதான் என்று அக்காவையும் கோபிக்கவில்லை ரங்கசாமி. ஆனால் குழந்தை வரம் வேண்டி இனி மனைவியை நோக வைக்கக்கூடாது என்று திடமாய் முடிவெடுத்தார்.

    பின்னே ஐ.வி.எஃப் முறை எத்தனை கடினமென்று உடனிருந்து பார்த்தார் அல்லவா? அதுவும் நான்கைந்து முறை முயற்சி செய்தும் பலன் கிட்டவில்லை என்றதும், அப்படியென்ன குழந்தை என்று வெறுத்துவிட்டார் ரங்கசாமி.

   இரண்டு வருடங்கள் கடந்தது. தம்பி வாரிசு, அக்காள் வாரிசுக்கு பிறந்தநாள், மற்றும் பண்டிகைகள், திருவிழாக்கள் என அனைத்திற்கும் அவர்கள் விரும்பும் பொருள் மற்றும் உடை வாங்கி கொடுத்து மகிழ்வார். பள்ளி விடுமுறை என்றால் தம்பி மற்றும் அக்காள் வாரிசுகள் ரங்கசாமி வீட்டில்தான் இருப்பார்கள்.

    ஆனாலும் பள்ளி நாட்கள் வந்துவிட்டால் அவரவர் அவர்களின் வீட்டிற்கு சென்றிட மிகவும் வெறுமையாய் உணர்வார் ரங்கசாமி. கணவனின் சோர்ந்த முகம் ஜானகிக்கு பெருத்த குற்றவுணர்வை உண்டாக்கியது.

    ஆமாம்… குழந்தை விசத்தில் ஜானகிக்குத்தான் குறை என்று மருத்துவர் சொல்லியிருக்க, தன்னால்தான் கணவன் வாழ்க்கை செழிப்பிழந்து விட்டது என்று வேதனை கொண்டார்.

    திருமணம் முடிந்த நான்கைந்து வருடத்திலேயே ஐ.வி.எஃப் முறைக்கு முயன்றிருக்க வேண்டும் என்று வருந்துவார் ஜானகி. தான் என்ன நினைப்பேனோ என கணவன் தனக்காக யோசித்ததுபோல் நாம் அவருக்காக யோசிக்கவில்லையோ என்ற வருத்தம் அனுதினமும் ஆட்கொள்ளும்.

    இப்படி வருத்தத்தோடு ஆறு மாதங்கள் கழிந்திருக்க, தனக்கென வாரிசு வேண்டும் என்று குழந்தை தத்தெடுக்க ஆலோசனை கூறினார் கணவனிடம்.

   உனக்கு நாற்பத்தேழு, எனக்கு ஐம்பத்தி நாலு வயசாகுது. இதுக்கு மேல எதுக்கு என மறுத்தார் ரங்கசாமி. பெரியம்மா, அத்தைனு கூப்பிட ஆளிருக்காங்க. அம்மானு கூப்பிட வாரிசு வேணும் என பிடிவாதம் செய்தார் ஜானகி.

    அப்பொழுதும் அரைகுறை மனதோடு ஏழு மாதங்களை கடத்தியிருந்தார் ரங்கசாமி. ஜானகி தேகம் கவலையில் மெலிந்திட, மனைவி ஆசைக்காவது தத்தெடுக்கலாம் என்று ஆஸ்ரமத்திற்கு சென்றனர் இருவரும்.

   செல்லும்போதே ஆண்மகனைதான் தேர்ந்தெடுக்க வேண்டும். நமக்கு வயதாகிவிட்டது என்று மனைவிக்கு அறிவுருத்தியபடிதான் பயணித்தார். ஜானகியும் கணவன் கூற்றிற்கு சம்மதித்தார்தான். ஆனால் ஆஸ்ரமத்திற்குள்ளே சென்றதும் கண்ட காட்சி இருவரின் மனதையும் மாற்றியது.

    பௌர்ணமி நிலவாய் குழந்தை முகம். அகன்ற விழிகளில் குண்டுமணி போன்ற கருவிழியும், சாயம் பூசியதைப் போன்ற சிப்பி உதடுகளும், பிறைநெற்றியை மறைக்கும் சுருண்ட முடிகளும், ஆப்பிள் கன்னங்களும் என்று அழகின் மொத்தத்தையும் தன்னுள் புதைத்திருக்கும் ஐந்து மாத பெண் குழந்தை தவழ முயற்சிக்கும் அழகைப் பார்த்து இருவரும் மயங்கினர்.

    “ஏங்க, இந்த பாப்பாவை வாங்கிக்கலாம்” என்று ஜானகி சொல்ல, பெண்குழந்தை வேண்டாமென நினைத்தோமே என்று யோசித்தார் ரங்கசாமி.

    “ஆணென்ன? பெண்ணென்ன? இந்த பாப்பாவையே வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்” என்று பிடிவாதம் செய்தார் ஜானகி.

    ஐந்து வயது குழந்தையை கூட விட்டு வைக்காத ராட்சன்கள் வாழும் நாட்டில், தனக்கும் வயதாகிவிட்டதே, குழந்தை பருவத்திற்கு வரும் பொழுது தனக்கு எழுபது ஆகிடுமே என்று பலமாய் யோசித்தாலும் ரங்கசாமியின் கால்கள் தன்போல் குழந்தையை நோக்கி நடந்தது.

   “சார் யார் சார் நீங்க? அவசரத்துக்கு நகர்ந்த நேரம் நீங்க பாட்டுக்கு உள்ள போய்ட்டிங்க?” என்ற காவலாளியின் அதட்டலில் கவனம் கலைந்தவர், காவலாளியிடம் விசயத்தை சொன்னார்.

   “தத்தெடுக்கனும்னா நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு சார். சார் அடுத்த வாரம்தான் வருவார். உங்க பேரையும் மத்த டீடெய்லயும் சொல்லுங்க, சார் வந்த பின்ன சொல்றேன். அவருக்கு ஃப்ரீ டைம்ல கால் பண்ணுவார், அப்போ வாங்க. இப்போ கிளம்புங்க. இந்த ஏரியா தாண்டி உள்ள போகக்கூடாது” என்று கட்டளையிட்டான் காவலாளி.

    பின்னே காவலாளி சொன்னதுபோல் செய்து வீடு வந்தனர். இரண்டு வாரம் ஆகியும் ஆஸ்ரமத்திலிருந்து அழைப்பு வராமல் போகவே, இருவரும் நேரில் வந்தனர்.

    “சார் வர இன்னும் இரண்டு நாள் ஆகும்” என்று காவலாளி சொல்ல, இருவர் கண்களும் அக்குழந்தையை தேடியது.

    ரங்கசாமியின் தவிப்பறிந்து, “அன்னைக்கு எதாவது குழந்தையை பார்த்திங்களா?” என்றார் காவலாளி.

    ஆமாம் என்பதாய் தலையசைத்து, குழந்தையின் அடையாளம் சொல்லி ஒருமுறை பார்க்க வேண்டும் என வேண்டினார் ஜானகி.

    “இப்போலாம் பார்க்க முடியாதும்மா, அன்னைக்கு குழந்தை விளையாடுற நேரமா இருந்திருக்கும். அதனால வெளில விட்டிருப்பாங்க. சார் பர்மிஷன் இல்லாம பார்க்க முடியாது. இன்னும் இரண்டு நாள்தானே? பொறுத்துக்குங்க” என்றான் காவலாளி.

   வேறு வழியின்றி வீடு திரும்பியவர்களுக்கு இம்முறை இரண்டு நாட்களை கடத்துவது பெரும்பாடாகிப் போனது. மூன்றாம் நாள் காலை அழைப்பு வரும் முன்னே ஆஸ்ரமத்திற்கு வந்திருந்தனர் இருவரும்.

   சற்று நேர காத்திருப்பிற்கு பின்னே இல்ல உரிமையாளர் வர, ரங்கசாமி ஜானகியின் விருப்பம் சொல்லப்பட்டது. இல்ல நிர்வாகியை அழைத்து இவர்களின் விபரம் கேட்டறிந்தான் சூர்யா.

   பின்னே ரங்கசாமியை காண சூர்யா சம்மதிக்கவும், இத்தனை பெரிய ஆஸ்ரமத்தின் நிர்வாகி வயதானவராய் இருப்பார் என எதிர்பார்த்திருந்த ரங்கசாமி தம்பதிக்கு சூர்யாவை பார்த்ததும் ஆச்சர்யமாகிப்போனது.

   அரை மணி நேர விசாரணைக்குப் பிறகு, “குழந்தையை தத்தெடுத்துட்டு பின்னாடி வளர்க்க முடியலனு சொன்னா ஃபைன் கட்டனும். குழந்தை மேஜர் ஆகும் வரை கண்காணிச்சிட்டுதான் இருப்போம்” என்று தனது கட்டளைகளை சொல்லி, சம்மதம் வாங்கிய பின்னேதான் “எந்த வயது குழந்தை வேணும்? ஆண் வேண்டுமா? பெண் வேண்டுமா?” என்றான்.

    “ஆண்தான் வேண்டும். ஆனால் ஒருமுறை அந்த குழந்தையை பார்க்கனும்” என்று தான் முதல்நாள் பார்த்த குழந்தையின் அடையாளங்களை ஜானகி சொல்ல,

    “நீங்க பார்க்க நினைக்கிற குழந்தைக்கு நாலு வயசுக்கு மேலயிருந்தா அனுமதிக்கமாட்டேன். அஞ்சு மாசக் குழந்தைன்றதால பர்மிஷன் கொடுக்கிறேன்” என்று அக்குழந்தையை அழைத்து வர பணித்தான்.

   குழந்தையை பணியாள் தூக்கி வர, ஜானகி குழந்தையை வாங்க கை நீட்ட, அக்குழந்தை என்ன நினைத்ததோ? ரங்கசாமியிடம் தாவியது சிரிப்போடு.

    குழந்தையின் தெய்வீக சிரிப்பில் மயங்கியவர், “இந்த பாப்பாவையே எடுத்துக்குறோம்” என்றிருந்தார் தன்னை மறந்து.

    “ஆண் குழந்தை வேணும்னு சொன்னிங்க?” என்று சூர்யா கேட்க, “இல்ல, இந்த தெய்வம்தான் வேண்டும்” என்று இம்முறை திடமாய் சொன்னார் ரங்கசாமி.

    இரண்டு மணி நேர அறிவுரைக்குப்பிறகு பத்திரத்தில் கையொட்பமிட்டு முறைப்படி பெண் குழந்தைக்கு தகப்பனானார் ரங்கசாமி.

   மனைவிக்கு மிகவும் பிடித்த முல்லை மலரையே குழந்தையின் பெயராக சூட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!