Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 5

கள்வன் – 5

 

“இனியன் எப்படிடா இந்த பையனுடைய ஜாதகத்தை வாங்குவது?” என்று கீதா மகனின் காதைக் கடிக்க,

 



Advertisement

“அம்மா எதற்கு ஜாதகம்? அதெல்லாம் மூட நம்பிக்கை.” என்று சிணுங்கினான் மகன்.

 

“ஜாதகம், ஜோதிடம் மூட நம்பிக்கை இல்லைடா. சில போலிகளால் அது மூட நம்பிக்கையாய் சித்தரிக்கப் பட்டுவிட்டது…”

Advertisement

 

Advertisement

“இப்போ என்ன ஜோதிடம் உண்மை ஆனால் ஜோதிடர்கள் போலி என்று சொல்ல வருகிறாயா?”

 

“புரிந்தால் சரி …”

Advertisement

 

“உனக்கே இது முரணாய் தென்படவில்லை. இப்போது ஜாதகம் வாங்கி அந்த போலி ஜோதிடர்களிடம் செல்லப் போகிறாயா?” என்று கடிந்தான் மகன்.

 

“நான் ஏன்டா அவர்களிடம் போகப் போகிறேன்… நமக்கு தெரிந்த ஆஸ்தான ஜோதிடர் ஒருவர் இருக்கிறார் அவரிடம் தான் செல்லப் போகிறேன். நீ வளவளவென்று கேள்வி கேட்காமல் எனக்கு தேவையானதை எடுத்துக் கொடு.” என்று கீதா அரட்ட இனியன் தன் தந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீதாக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொடுத்தான். அன்னை ஒரு முடிவு செய்துவிட்டால் அதை மாற்றுவது கடினம் என்று அவனுக்குத் தெரியாதா என்ன…

 

“அப்படியே நான் சொன்ன அஜய்யோட டீடைல்ஸ் எடுடா…” ரமேஷும் தன் பங்கிற்கு சொல்ல,

 

“அவர்கள் பெரிய இடம், நமக்கு சரி வராதுங்க…” பெரிய இடம் என்றே ஒரே வார்த்தையில் அதை நிராகரிக்க முற்பட்டார் கீதா.

 

“நல்ல பையன் கீதா. முயற்சி செய்து தான் பார்ப்போமே… நம் இனியாவை புரிந்து நடந்து கொள்வார் என்று தோன்றுகிறது.”

 

“ம்… அப்பா சொல்றாருல்ல பாப்போம் அதையும் எடு இனியன்.” ரமேஷ் வாயடைக்க அஜயை பரிசீலனை செய்தாலும் கீதாவிற்கு ஏனோ அஜய்க்கு பெண் கொடுக்க மனம் ஒப்பவில்லை. 

 

இப்படி இவர்கள் அலசி ஆராய இனியா சத்தமில்லாமல் தன் அறைக்கு சென்றாள். மனம் ஒரு நிலையில் இல்லாமல் படபடவென்று அடித்துக் கொண்டது. அதுவும் அஜய்ரத்னம் பெயர் அவளுள் ஒரு சங்கடத்தை உண்டு செய்தது. 

 

தான் வியந்து பார்த்த ஒருவன் தான். தன் மனதில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவன் தான். தான் பழகிய ஒருவன் தான். ஆனால் இவையெல்லாம் மணந்துக்கொள்ள காரணி இல்லையே. ஒருவனை தன்னவனாக நினைக்க அவன் அவளின் ஆழ்மனதை   தொட்டிருக்க வேண்டும். அஜய்ரத்னம் அந்த விதத்தில் அவளை பாதிக்கவில்லை என்பதே நிதர்சனம். வீட்டில் கேட்டாலும் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட வேண்டும் என்ற முடிவோடு கண்ணயர்ந்தாள். 

◆◆◆

[the_ad id=”6605″]

“என்னமா இன்று தானே சரி சொன்னேன். அதற்குள் பெண் பார்த்து விட்டாயா என்ன?” அதிர்ச்சியாய் வந்து விழுந்தது இன்பனின் வார்த்தைகள்.

 

“என்னடா இவ்வளவு அதிர்ச்சி ஆகிறாய். பேச்சுவாக்கில் பக்கத்து வீட்டு அக்காவிடம் நீ சம்மதம் சொல்லிவிட்டாய், பெண் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அக்காவின் பெண் ஊரிலிருந்து வந்திருக்கிறாளா அவள் தான் ஏதோ இணையதளத்தில் உன் விவரங்களை போட்டால் பெண் தேட சுலபமாக இருக்கும், உங்களாலும் வெளியில் அலைந்து தேட முடியாது அதனால் இது தான் வசதி என்று சொல்லவும் நானும் சரி என்றுவிட்டேன். அவள் தான் உன் விவரங்களை அதில் பதிவிட்டு ஒன்றிரண்டு பெண்களின் பெற்றோர் நம்பரை எடுத்துக் கொடுத்தாள். நாளை தான் பேச வேண்டும்.” என்று நீண்ட விளக்கம் அளித்தார் அவ்வீட்டின் சிவகாமிதேவி.

 

“இவ்வளவு வேகம் ஆகாதுமா…” என்றவன் உள்ளே குறுகுறுவென்றது.

 

இத்தனை வருடங்கள் தானே ராஜா, தானே மந்திரி என்று சுதந்திரமாய் சுற்றிக் கொண்டு, ப்ரௌட் சிங்கிளாகவே இருந்துவிட்டு இப்போது ஒரு பெண்ணை தன் வாழ்க்கையுடன் இணைத்து பயணிக்க போகிறோம் என்பதே ஒருவித கலவையான உணர்வை கொடுத்தது அவனுக்கு. போதாக்குறைக்கு அவன் எடுத்துக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் முடிவு இதனால் தாமதப்படுமோ என்று வேறு மூலையில் ஒரு பயம் படருவதை தவிர்க்க முடியவில்லை.

 

“நீ சும்மா இரு. எதை எப்போது செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்.” என்று மகனை அடக்கியவர் மேலும் ஒருவித பரவசத்துடன் தொடர்ந்தார்,

 

“அதில் ஒரு பெண் பெயர் இனியா டா… பெயர் பொருத்தமே இனிமையா இருக்கு. இந்த பெண்ணே எனக்கு மருமகளா வருவானு என் உள்ளுணர்வு சொல்லுதுடா…”

 

பெயரைக் கேட்டதும் அவன் முகம் யோசனையை தத்தெடுத்துப் பின் மீண்டு தன் அன்னையிடம் வந்து நின்றது, “நீ சும்மா உள்ளுணர்வு அது இதுவென்று கனவு கண்டுக்கிட்டு இருக்காதமா… நாம் பார்க்காத எதிர்பாரா நிகழ்வுகளா? எது வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கணுமா… 

 

வாழ்க்கை என்றுமே கடலில் செல்லும் ஓடம் தான். காற்று சீராய் இருந்தால் ஓடம் சிறிய அலைகளை எதிர்நீச்சலிட்டு கடந்துச் சென்றுவிடும். அதுவே அசுரக்காற்று வீசினால் ஓடத்தை வீழாமல் காப்பதே பெரும்பாடு. விவேகம் உள்ளவன் பிழைத்துக் கொள்வான், இல்லையேல் வீழ்வான். நீ எதுவாயினும் நிதானமாய் செய்.” வாழ்வில் வீழ்ந்து எழுந்தவன் போல் தெள்ளத்தெளிவாய் பேசினான் இன்பன்.

 

சிவகாமி அவன் வார்த்தைகளை உள்வாங்கி அதை ஆமோதிக்க, இன்பன் உண்டு முடித்து எழுந்து அங்கிருந்த வரிசையான இரு அறைகளில் வாசலிலிருந்த முதல் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டான்.

 

அந்த அறையை கண்ட சிவகாமியிடம் பெருமூச்சொன்று வெளிப்பட்டது. விழிகளில் நீர் வறண்டு ஒரு வெற்றுப் பார்வையே எஞ்சியது.

◆◆◆

[the_ad id=”6605″]

இருளை கிழித்துக் கொண்டு செஞ்சுடரோன் தன் இதமான கதிர்களால் இப்பூமியை ஒளிர்விக்க, அங்குமிங்குமாய் தப்பிப்பிழைத்த குயில்கள் ஆதவனை தன் கீச்சு குரலால் கானம் இசைத்து வரவேற்றது.

 

எப்போதும் ஒலிக்கும் காயத்ரி மந்திரம் மட்டுமே இன்று அவ்வீட்டின் மூளை முடுக்கும் கேட்டது. இனியா நித்திரையின் ஆதிக்கத்திலிருந்து வெளி வந்திருந்தாலும் ஏனோ தன்னுடைய ஆதர்சன பாடல்களை அலறவிடாமல் அமைதியாய் கட்டிலில் உருண்டு கொண்டிருந்தாள். முதல் நாள் அவ்வீட்டில் நிகழ்ந்தேறியதே அவளை இப்படி ஆக்கிவிட்டிருந்தது.

 

“இனியா எழுந்திரிமா…” என்றும் இல்லாத திருநாளாய் கீதாவின் குரல் காட்டமில்லாமல் ஒலித்தது. மகளின் திருமண வயது செய்யும் பாடு அனைத்தும். அது புரியாதவளா இனியா… அதுவே ஒரு கசப்பை கொடுத்தது அவளுக்கு. 

 

திருமணம்…

 

இந்த ஒற்றை வார்த்தைக்குள் தான் எத்தனை உணர்வு ஜாலங்கள்… 

 

மகிழ்ச்சி, ஆவல், வெட்கம், காதல், காமம், ஆசை, அவா, பயம், படபடப்பு, வருத்தம், மனநிறைவு… 

 

தனிப்பட்டவரை பொருத்து இவ்வனைத்தும் கூடவோ, குறையவோ இருக்கிறது.

 

இனியாவை பொறுத்தவரை கண்ணை கட்டி காட்டில் விட்ட கதை தான். ஏன் அரேஞ் மேரேஜ் செய்யும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு களிப்பான இக்கட்டு தான் இந்த குறிப்பிட்ட நேரம்.

 

“இனியா எழுந்திருடி… இன்னும் என்ன தூக்கம் வேண்டிக்கிடக்கு உனக்கு?” இனியாவின் அமைதியை கண்டு கடுப்பாகி சமையலறையிலிருந்து தன் உயரழுத்த குரலில் அவளை எழுப்ப, சட்டென்று எழுந்தாள் இனியா. அவரின் அதட்டலில் மனதில் இருந்த சஞ்சலங்கள் மறைந்துவிட்ட ஒரு உணர்வு. விரல்கள் தன்னாலே சிங்கப்பெண்ணே பாடலை சொடுக்க அவ்வறையே சிங்கத்தைப் போல் கர்ஜித்தது.

 

நிதானமாய் கிளம்பி அமைதியாய் உண்டு தன் வேலைக்கு சென்றுவிட்டாள் இனியா. எவரும் அவள் சங்கடப்படும் விதமான விஷயத்தை பேசவில்லை. மனம் சமன்பட்டு அந்த வேளை நன்றாகவே போயிற்று.

 

“பேபி என்ன இன்று கொஞ்சம் அடக்கி வாசிப்பது போல் இருக்கிறது?” என்றபடியே அவள் அருகில் வந்து சேர்ந்தாள் பக்கத்து கேபினில் இருக்கும் யுக்தா. அவள் பக்கத்து கேபினால் மட்டுமல்ல கல்லூரியில் இருந்தே பழக்கம். இருவரும் இணைபிரியா தோழிகள் என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும் ஒன்றாய் வேலைக்கு சேர்ந்தவுடன் இணைபிரியாதவர்கள் ஆக மாறிவிட்டார்கள்.

 

ஒரு மென்னைகையுடன் அவளை ஏறிட்டவள், “அதெல்லாம் ஒன்னுமில்லையே…”

 

“சும்மா நடிக்காதிங்க மேடம்… உங்களை பற்றி எனக்குத் தெரியாதா? என் எனெர்ஜியை வேஸ்ட் செய்வதற்கு முன் ஒழுங்கு மரியாதையாய் சொல்லு… எனக்கு லயிட்டா பசிக்கிற மாதிரி வேற இருக்கு. கேன்டீன் போகணும்.” 

[the_ad id=”6605″]

“விடமாட்டீயே…” என்று போலியாய் சலித்துக் கொண்டவள், “வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் யுக்தா…”

 

“அதற்கு ஏன் லூசு இப்படி இருக்க? ஜாலியா இருக்க வேண்டியது தானே புதுப்பொண்ணே?” என்றவாறே யுக்தா அவள் தோளை ஒரு தட்டு தட்டினாள்.

 

“போடி… இன்னைக்கு தான் பெண்ணான மாதிரி அது என்ன புதுப் பொண்ணு? கல்யாணம் நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் தானே… அதை ஏன் முடிவாய் பார்க்கின்றனர்? மணமானால் நம் குடும்பத்துடன் இருக்கும் தொடர்பு முறிந்துவிடுமா என்ன? பொறுப்புகள் கூடி விட்டால் நமக்கான நேரம் குறையும் தான் ஒத்துக்கொள்கிறேன், அதற்காக என் வீடு அம்மா வீடாகி விட வேண்டுமா? எனக்கு அந்த வீட்டில் உரிமை குறைந்து விடுமா என்ன? அதுவும் என் வீடாகவே இருக்கக் கூடாதா? என்னவோ பரபரப்பா எல்லாவற்றையும் செய்றாங்க… திடீரென்று கண்ணிற்கு புலப்படாத ஒன்று என்னை என் வீட்டில் இருந்து பிரிப்பது போல் உள்ளதுடி. அம்மா, அப்பா, தம்பி என்றே இருந்துவிட்டு இப்போது போய் யாரென்றே தெரியாத ஒருவருடன் என் வாழ்க்கையை இணைத்துக் கொண்டு அந்த குடும்பத்தையே என் குடும்பமாய் நினைக்க வேண்டும் என்று சொல்வதை என்னால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை யுக்தா. ஆனாலும் அம்மா, அப்பாவின் ஆசையையும் ஒதுக்க முடியாமல் சரி என்று விட்டேன்…”

 

“நீ நன்றாக குழம்பி போய் இருக்கிறாய் இனியா. திருமணம் முடிவல்ல, ஆரம்பம். முடிவை விட முதலுக்குத் தான் நாம் நினைப்பது நடக்குமா, நடக்காதா என்று எப்போதுமே ஒரு ஆர்வம், எதிர்பார்ப்பு இருக்கும்டி… இன்னொன்று சொல்லவா நீ இன்னும் உனக்கானவரை சந்திக்கவில்லை, அந்த குழப்பத்தில் தான் என்னென்னவோ போட்டு மனதில் குழப்பிக் கொள்கிறாய். நீ வேண்டுமென்றால் பாரேன் உன் மனதிற்கு பிடித்தவரை பார்த்ததும் உன் வீடாய் இப்போது இருப்பது தானாய் அம்மா வீடாகிவிடும். அவர் இருக்குமிடம் தான் உனக்கான இடமாய் தோன்றும். நீ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு. மனதில் எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாதே…” என்று ஆறுதல் மொழி பேசிய யுக்தாவின் வார்த்தைகள் கூடிய விரைவில் மெய்யாகப் போவதையோ, தன் வீட்டினரை பிரியப்போவதை எண்ணி கலங்கிப்போய் இவ்வளவு கவலைப்படும் இதே இனியா அந்த வீட்டையே எதிர்த்து நிற்கப் போவதையோ அந்தக் கணம் யாருமே அறிந்திருக்கவில்லை.

 

அவள் ஆறுதலை ஆமோதித்தவள், “என்னவோ சொல்கிறாய். பார்ப்போம்… நம் வீட்டை விட்டு வெகு தூரம் சென்று விடுவோமோ என்று ஏதோ ஒரு பயம் வந்து ஒட்டிக்கொண்டது. நவ் ஐ பீல் பெட்டர்.” 

 

“தட்ஸ் குட் பேபி… நீ வேணும்னா ஹாஃப் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பேன்… இப்போது தான் பெரிதாக வொர்க் எதுவும் இல்லையே…” யுக்தா பரிந்துரைக்க, ஓரிரு நிமிடம் யோசித்தவள், “நீ இல்லைனா என்ன செய்வேன் என்றே தெரியவில்லைடி… காலையில் அமைதியாக கிளம்பி வந்து விட்டேன். அம்மா என்ன நினைச்சாங்கன்னு தெரியல… நான் வீட்டிற்கு போகிறேன்.” என்றாள் இனியா.

 

ஹச். ஆரிடம் விடுப்பு சொல்லிவிட்டு தன் ஸ்கூட்டி செஸ்ட்டில் தன் வீட்டை நோக்கிப் பறந்தாள். கூடவே தன் இருதயத்தை தொலைக்கவும் தான்.

  

*^*^*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!