Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Meendum Vikramaathithyan

Vijay’s MV – Chapter 04

வராகமிகிரர் பட்டுவிரிப்பில் கிடந்த சோழிகளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவ்வப்போது விரல்களால் கணக்கிடுவதும் ஓலைநறுக்கில் குறிப்பெழுதுவதுமாக இருந்தார்.

அந்த அறையில் இருந்த அனைவரது பார்வையும் அவர் மீதே இருந்தன, விக்ரமாதித்யரைத் தவிர.

விக்ரமாதித்யர் வராகமிகிரருக்குப் பின்னால் இருந்த மகாகாளியின் திருவுருவச் சிலையைப் பரிவுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.



Advertisement

மகாகாளியைக் கேள்வி கேட்பது போல இருந்தது அவரது முகம்.

“ஏதேனும் சொல்லுங்கள் மிகிரரே, வெறுமனே விரல்களை மடக்கி நீட்டிக் கொண்டிருந்தால் எப்படி?” சேனாதிபதி அமரசிம்மர் பொறுமையிழந்தார்.

“ஜோதிஷம் என்பது சரேலென வாளை வீசித் தலையைவெட்டுவது அல்ல அமரசிம்மரே, அது நுணுக்கமான கணக்கு! சிறிய பிழை கூட உஜ்ஜைனி சாம்ராஜ்யத்தின் பெரும் தவறாய் மாறிவிடும்… பொறுமை!”

Advertisement

காளிதாசர் நன்றாக சம்மணமிட்டுக் கொண்டு புன்னகையோடு உரைத்தார்.

Advertisement

அமரசிம்மர் முறையிடுவதைப் போல விக்ரமாதித்யரை நோக்க, அவரது பார்வை மகாகாளியின் மீதே இருந்தது.

பட்டி அவரை நோக்கி ‘அமைதி’ என்று கண்ணால் செய்கை செய்தான்.

வராகமிகிரர் எதையும் கவனிக்காமல் தனது கணக்கில் மூழ்கியிருந்தர்.

Advertisement

மீண்டும் சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது.

வராகமிகிரர் ஓலைநறுக்கையும் ஆணியையும் மெள்ள கீழே வைத்துவிட்டுச் சோழிகளைப் பொறுக்கி அவற்றிற்கான சிறிய பட்டுப்பையில் போட்டு முடித்து மகாகாளியின் பாதத்தில் வைத்தார்.

அனைவரிடமும் ஒரு மெல்லிய சலனம் ஏற்பட்டது. விக்ரமாதித்யரும் நிமிர்ந்து அவரைப் பார்த்தார்.

வராகமிகிரர் பேரரசரைப் பார்த்துத் தன் உதட்டைச் சுழித்தார்.

“தேவி திருப்தியடையவில்லை மகாராஜா… அவளுக்கான நைவேத்தியத்தை நாம் சரியாகக் கொடுக்கவில்லை!”

விக்ரமாதித்யர் ‘புரிகிறது’ என்பதைப் போல மெல்லத் தலையை அசைத்தார்.

“தாங்கள் குறிப்பிடுவது…?” காளிதாசர் வராகமிகிரரைக் கேள்வியோடு பார்க்க, வராகமிகிரர் ஆமோதித்துத் தலையை அசைத்தார்.

[the_ad id=”6605″]

“அண்ணா-”

பட்டி பேசத் தொடங்கும் முன் விக்ரமாதித்யர் கைகாட்டி அவனைத் தடுத்தார்.

“அவை கலையலாம்… இன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் அமரசிம்மர் மட்டும் வந்து என்னைச் சந்திக்கட்டும்!”

விக்ரமாதித்யர் கட்டளையாகச் சொல்லிவிட்டு யாரின் பதிலுக்கும் காத்திராமல் அங்கிருந்து விறுவிறுவெனக் கிளம்பிச் சென்றார்.

வராகமிகிரர் அமர்ந்த இடத்திலேயே கண்களை மூடி தியானத்தில் ஆழ, காளிதாசர் பட்டியைப் பார்த்து நகைத்துவிட்டு எழுந்து சென்றார்.

பட்டியும் அமரசிம்மரும் ஒருவரையொருவர் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டனர்.

***

இரவு முதல் ஜாமத்தின் மூன்றாவது நாழிகை.

விக்ரமாதித்யர் தனது உணவறையில் பலகையில் அமர்ந்து மெள்ள இரவுணவை உண்டுகொண்டிருந்தார்.

வேதாளப் பட்டன் ஓசைபடாமல் அறைக்குள் வந்து பேரரசருக்கு அருகில் நின்றான். பட்டியும் அதே நேரத்தில் மற்றொரு வாசல் வழியாக உள்ளே வந்தான்.

இருவரும் ஒருவரையொருவர் கேள்வியோடு பார்த்துக்கொண்டு தலையசைத்து வந்தனம் தெரிவித்துக்கொண்டனர்.

விக்ரமாதித்யர் அவர்கள் வந்ததைக் கவனிக்காதவரைப் போல உணவுண்பதில் கவனம் செலுத்தினார்.

“ம்ஹும்” வேதாளப் பட்டன் தொண்டையைச் செறுமினான். பேரரசர் தலையைத் திருப்பவில்லை.

“உணவு மிக ருசியாய் இருக்கிறது போல? என்ன பட்டி இது, நம் அரண்மனையில் சமைத்ததுதானா? நம் அரண்மனையில் சுவையான உணவா?”

வேதாளப் பட்டனின் கிண்டலைப் பட்டி என்றுமே இரசித்ததில்லை. பார்வையில் எரிச்சல் தொனிக்க அவனை நோக்கினான்

ஆனால் விக்ரமாதித்யரின் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. வேதாளப் பட்டனை ஏறிட்டுப் பார்த்தார்.

“சொல்ல வந்ததைச் சொல்…”

“விஷயம் பெரிது… மகாராஜர் உணவை முடித்துக்கொள்ளட்டும்!” கைகளைக் கட்டிக்கொண்டு பணிவாய்க் குனிந்து பதிலளித்தான் வேதாளப் பட்டன். அவனது பணிவிலும் ஒரு கிண்டல் தொனிப்பதாய்த் தோன்றியது பட்டிக்கு.

விக்ரமாதித்யர் தட்டிலேயே கைகழுவிக்கொண்டு எழுந்தார். ஒரு பணியாள் ஓடி வந்து பணிவாய்ப் பட்டுத் துணி ஒன்றை நீட்ட அதை வாங்கிக் கையையும் வாயையும் துடைத்துக்கொண்டார்.

அடைப்பக்காரன் பணிவுடன் நீட்டிய வெற்றிலை மடிப்பை வாங்கி வாயில் அதக்கிக்கொண்டபடி வாசலை நோக்கி நடந்தார். இருவரும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

சமயற்கூட அடுக்குகளைத் தாண்டி அரண்மனைத் தோட்டத்திற்கு வந்தனர். விக்ரமாதித்யர் வேகத்தைக் குறைத்துக்கொண்டாலும் நடப்பதை நிறுத்தாமல் மெள்ள நடந்தார்.

“அண்ணா…”

பட்டி தயங்கியபடி அழைக்கப் பேரரசர் நடந்தபடியே திரும்பி அவனை ‘என்ன?’ என்பதைப் போல நோக்கினார்.

”வராகமிகிரர் சொன்ன நிமித்தம்…” பட்டி முடிக்காமல் இழுத்தான்.

“நீ என்ன சொல்லப் போகிறாய் என்று எனக்குத் தெரியும் பட்டி! அதை நான் ஏற்கமாட்டேன்!” விக்ரமாதித்யரின் குரலில் குழைவு இருந்தது.

“வேறுவழி என்ன அண்ணா?”

கேட்கும்போதே பட்டியின் முகத்தில் ஒரு தெளிவு மின்னல் வெட்ட அவனது முகத்தில் அதிர்ச்சி மேகம் மூடியது.

”அண்ணா? உங்கள் உள்ளக்கருத்து…?”

விக்ரமாதித்யரின் முகத்தில் ஆழ்ந்த அமைதி கலந்த புன்னகை பரவியது.

“அன்னை பராசக்தியின் விளையாட்டு அளப்பரியது பட்டி, நாம் வெறும் காய்கள், நகர்த்துபவள் அவள்! இது என் உள்ளக்கருத்து இல்லை பட்டி, அன்னையின் ஆணை இது!”

“அண்ணா… கண்ணை விற்றா ஓவியம் வாங்குவது? நீங்கள் இல்லாமல் உஜ்ஜைனி இல்லை, நாங்களும் இல்லை!” பட்டியின் குரலில் சோகம் இழையோடியது.

“ம்ஹும்…” வேதாளப் பட்டன் தொண்டையைச் செறுமினான். இருவரும் அவன்பக்காமாகத் திரும்ப அவன் கிண்டல் தொனிக்கக் குனிந்து வணங்கிப் பேசத் தொடங்கினான்.

”மூவுலகையும் ஒரு குடை கீழ் ஆளும் பேரரசருக்கு ராஜ பரிபாலனத்தின் சில அடிப்படை விஷயங்கள் தெரியாமல் இருப்பது மிகவும் வியப்பளிக்கிறது…”

“பேச்சைக் குறைத்து கருத்தை விளம்பு பட்டா… உன் வளவளப் பேச்சைக் கேட்க எமக்கு நேரமில்லை!” பட்டியின் குரலில் எரிச்சல் கொந்தளித்தது.

வேதாளப் பட்டன் பட்டியைக் கவனிக்காதவனைப் போல விக்ரமாதித்யரைப் பார்த்தான்.

“அதுதான் நீதி-தர்ம-அஸ்திர-சஸ்திர-கலா மகா நிபுணனாய் நீ என் உடனிருக்கிறாயே… பாதகமில்லை, உஜ்ஜைனி பிழைத்துக்கொள்ளும், விஷயத்தைச் சொல்!”

விக்ரமாதித்யர் வேதாளப் பட்டனின் விளையாட்டுகளை ஊக்குவிப்பது பட்டிக்கு அறவே பிடிக்கவில்லை.

[the_ad id=”6605″]

“வந்தனம் பிரபோ… இச்சிறுவனை நீங்கள் அதிகம் புகழ்கின்றீர்கள்… ஆனாலும் மகா-மகாராஜர் பொய் சொல்வதில்லை…”

“வேதளப் பட்டா!”

விக்ரமாதித்யர் சட்டெனத் தீவிரமாக, வேதாளப் பட்டனும் தன் விளையாட்டை நிறுத்திக்கொள்ளும் நேரம் வந்ததை உணர்ந்துகொண்டான்.

“பிரபோ! நீங்களும் மகா-மகா மந்திரி பட்டியாரும் எதைப் பற்றிப் பேசிக்கொண்டீர்கள் என்பதை நான் அறிவேன்… உங்கள் சம்பாஷனைக்குத் தேவையே இல்லை என்பதைத்தான் நான் சொல்ல வந்தேன்…”

விக்ரமாதித்யர் சட்டென நின்று வேதாளப் பட்டனைக் கேள்வியோடு பார்த்தார். பட்டியும் வேதாளப் பட்டனையே பார்த்தபடி சற்று அருகில் வந்து நின்றுகொண்டான்.

“மகாகாளி இச்சிக்கும் நைவேத்தியம் அவளுக்குப் படைக்கப்பட்டுவிட்டது! உங்கள் யக்ஞம் பூர்த்தியாகிவிட்டது!”

வேதாளப் பட்டன் சொல்ல இருவரின் முகத்திலும் அதிர்ச்சியும் குழப்பமும் கலந்து பரவின.

”யார்?”

விக்ரமாதித்யர் கேள்வியைக் கேட்கும் பொழுதே பதிலை உணர்ந்துகொண்டார் என்பதற்கான அறிகுறி அவரது முகத்தில் தெரிந்தது.

எப்போதும் அவரது மனத்தில் இருப்பதைப் பளிச்செனப் புரிந்துகொள்ளும் வேதாளப் பட்டன் இப்போதும் அவ்வாறே புரிந்துகொண்டான்.

“ஆம் பிரபோ… மதனமாலையாரேதான்!”

****

இரவு இரண்டாம் ஜாமம் தொடங்கி இன்னும் ஒரு நாழிகை முடிந்திருக்கவில்லை.

காளிகோயிலின் வாயிலில் அனைவரும் பரபரப்புடன் காத்திருந்தனர்.

காளிதாசரும் வராகமிகிரரும் அமரசிம்மரும் ஒன்றாக நின்று மெல்லப் பேசிக்கொண்டிருந்தனர்.

பட்டியும் வேதாளப் பட்டனும் அருகருகில் நின்றாலும் ஒருவரையொருவர் பார்க்காமலும் பேசிக்கொள்ளாமலும் நின்றனர்.

இவர்களைவிட்டு இருபதடி இடைவெளியில் பேரரசரின் மெய்க்காவல் படையினரும் மற்ற பிரதானிகளின் உதவியாளர்கள் காவலர் முதலிய பரிவாரங்களும் தேர்களும் குதிரைகளும் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தனர்.

அத்தனை பேர் இருந்தும் அந்த இடத்தின் அமானுஷ்ய அமைதியும் அதை அவ்வப்போது அலறும் கோட்டான் நரி முதலியவற்றின் குரல்களுமே ஓங்கியிருந்தன.

நூற்றுக்கணக்கான தீப்பந்தங்களின் ஒளி இருளை விரட்டியடிக்க முயற்சி செய்து ஒரு சிறிய வட்டத்திற்குள் மட்டும் வென்றுகொண்டிருந்தது.

விக்ரமாதித்யர் மட்டும் கோயிலுக்குள் சென்றிருந்தார். ஒரே ஒரு மெய்க்காவலன் மட்டும் கையில் தீப்பந்தத்துடன் அவருக்கு முன்னால் வழிகாட்டிச் சென்றான்.

[the_ad id=”6605″]

வெளிப்பிரகாரத்தைக் கடந்து மெல்ல முன்மண்டபத்தை நெருங்கியவர் அங்கிருந்தே நேராய் உள்ளே தெரிந்த மகாகாளியின் மூல விக்கிரகத்தைப் பார்த்தார். சட்டென நின்றார்.

கருவறையின் பிறைகளில் இருந்த அகல்விளக்குகளின் மங்கிய ஒளியில் மகாகாளி பயங்கரமும் வாஞ்சையும் கலந்து காட்சியளித்தாள்.

ஒரு நொடி அசுரனைக் கொன்ற கோர வடிவினளாயும் மறு நொடி குழந்தையை வாரி அணைக்கும் அழகிய அன்னையாயும் மாறி மாறித் தெரிந்தாள்.

“மகாராஜா?”

விக்ரமாதித்யர் நின்றுவிட்டதை உணர்ந்து திரும்பி வந்த மெய்க்காவலன் பணிவுடன் அழைக்க பேரரசர் சிந்தனை கலைந்து அவனை நோக்கினார்.

’நட!’ என்று விக்ரமாதித்யர் தலையசைத்து உத்தரவிட அவன் மேற்கொண்டு முன்னால் சென்றான். பேரரசரும் அவனைத் தொடர்ந்து நடந்தார்.

அவரது பார்வை மீண்டும் மகாகாளியின் மீதே நிலைகுத்தியது.

கருவறையின் வாயில் அருகே சென்றதும் மெய்க்காவலன் மகாகாளியையும் பேரரசரையும் வணங்கிவிட்டுத் தீப்பந்தத்தை உயர்த்திப் பிடித்தபடி சிலைபோல நின்றான்.

விக்ரமாதித்யரின் பார்வை மெல்ல மகாகாளியின் முகத்திலிருந்து பாதத்தை நோக்கி இறங்கியது.

மகாகாளியின் பாதத்தில்…

விக்ரமாதித்யர் சட்டெனத் தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டார்.

அவரது கை அனிச்சையாய் நெற்றியைப் பிசைந்தது.

சில நொடிகள் கழித்து நிமிர்ந்தவரின் கண்களில் கண்ணீர் மெல்லியதாய்த் திரையிட்டிருந்தது.

காவலனை நோக்கி அவர் செய்கை செய்ய அவன் ஒரு நொடி தயங்கிப் பின் தீப்பந்தத்தை அருகில் இருந்த தாங்கியில் பொருத்திவிட்டு விக்ரமாதித்யரை குனிந்து வணங்கியபடியே பின்வாங்கி வந்த வழியே திரும்பிச் சென்றான்.

விக்ரமாதித்யர் மகாகாளியின் பாதத்தருகே மண்டியிட்டார்.

கீழே தனித்தனியாக கிடந்த அவளது தலையையும் உடலையும் பார்த்து அவரது கண்களில் பெருகிய கண்ணீர் கழுத்துவரை வழிந்தது.

“ஹே மகாகாளி… இதோ… உன் நைவேத்தியம்… போதவில்லை என்றால் சொல் என் தலையையும் காணிக்கையாக்குகின்றேன்…”

விக்ரமாதித்யரின் குரலில் ஆக்ரோஷம் நிறைந்தது.

சடாலென எழுந்து நின்றார்.

மீண்டும் கீழே கிடந்த தலையற்ற உடலைப் பார்த்தவரின் வாயிலிருந்து அனிச்சையாக அந்தப் பெயர் வெளிப்பட்டது: “மதனமாலை…”

அப்போதுதான் அருகில் கிடந்த அவளது இரத்தம் தோய்ந்த வாளையும் கண்டார்.

சட்டெனக் குனிந்து அந்த வாளைக் கையில் எடுத்தவர் மகாகாளியின் முகத்தை நோக்கினார்.

“ஹே காளி!” என்று உரக்கக் கத்தியபடி வாளை உயர்த்திச் சுழற்றித் தன் கழுத்தை நோக்கி வீசினார்…

“விக்ரமா…”

அந்தக் குரல் இனிய பாடலைப் போல, ஒரே குரலாய் ஆனால் எல்லாத் திசையிலிருந்தும் கேட்பதைப் போலக் கேட்டது.

விக்ரமாத்தியர் வீசிய வாள் காற்றைப் போல அவரது கழுத்தின் ஊடாகச் சென்று வெளிவந்தது.

அவர் கையில் இருக்கும்போதே உருகி உறைந்து உருமாறியது.

தன் கையிலிருந்த புதிய வாளை விக்ரமாதித்யர் வியப்புடன் பார்த்தார். காய்ச்சிய இரும்பைப் போல அவ்வாள் மஞ்சளாய் ஒளிர்ந்தது.

“விக்ரமா…” மீண்டும் அந்த இனிய குரல், “செல், கட்டளையை நிறைவேற்று!”

விக்ரமாதித்யர் மகாகாளியை நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கினார். அவரது முகத்தில் அதீத தெளிவும் உற்சாகமும் இருந்தன.

விக்ரமாதித்யர் கோயிலைவிட்டு வெளியில் வந்ததும் அங்கிருந்த அனைவரும் பரபரப்புடன் அவரை நோக்கினர்.

பட்டி, வேதாளப் பட்டன், வராகமிகிரர், காளிதாசர், அமரசிம்மர் அனைவரும் அருகில் வந்து வணங்கி நின்றனர்.

அனைவரது முகத்திலும் ஆயிரமாயிரம் கேள்விகள் இருந்தன.

அவர்களது பார்வை விக்ரமாதித்யரின் கையில் ஒளிர்ந்த வாளை நோக்கி அனிச்சையாகச் சென்றன.

விக்ரமாதித்யர் அவ்வாளை அவர்களுக்குக் காட்டுபவரைப் போலத் தன் நெஞ்சருகே உயர்த்திப் பிடித்தார்.

வெற்றிக்களிப்போடு அப்பெயரை உச்சரித்தார்:

“மன்யாக்னி!”

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!