Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ04_1 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  04_1

 

கூரைக் குடிசையோ தளவீடோ.. எதுவோ ஒன்று.. பெற்றவர்களோடு.. உடன் பிறந்தவர்களோடு.. சொந்தங்களோடு இருப்பதே பாதுகாப்பு தான். இன்றைய இளம் கன்றுகளுக்கு இது புரிவதில்லை.

 



Advertisement

தன் கண் முன் தெரிவது தான் உலகம் என்று நம்பிவிடுகின்றது இளம் குருத்து. அப்பா திட்டினால்.. அம்மா கை ஓங்கினால்.. தாத்தா ஒழுக்கம் சொல்லிக் கொடுத்தால்… ஆசிரியர்கள் தண்டித்தால்.. இப்படி யாராவது இதைச் செய்யாதே… இப்படிச் செய்யாதே என்றுவிட்டால் பிள்ளைகளுக்குப் பிடிப்பதில்லை. இருக்கவே இருக்கிறது தற்கொலை.. வீட்டை விட்டு வெளியேறுதல். இரண்டுமே மோசமான முடிவு என்பது சில நிமிடங்களிலோ, நாட்களிலோ  தெரிந்துவிட்டாலும், சில நேரம் உணர்ந்தும் பயனிலாம் போகிறது.

 

சிலர் தெரிந்தே முடிவுகளை எடுக்க… கோமல் தெரியாமலே வேடன் வலையில் மாட்டியிருந்தாள். வீட்டினரின் உதாசினமே, உலகமறியா சிறுமியின் இன்றைய நிலைக்குக் காரணமாய் போனது தான் அவலம். பெற்றவன் கொஞ்சம் அக்கறை எடுத்திருந்தால் பிள்ளையைக் காத்திருக்கலாம்.

Advertisement

 

Advertisement

யாமத்து வானம் போல் பதினேழு வயது மடந்தையின் நிலையும் மாறிப்போனது.

 

பெற்றவன் பாதுகாப்பை இழந்த கோமலின் கொள்ளை அழகை அன்று இரவே அந்த ஐம்பது வயது ஓநாய் கொள்ளையிட்டது. கதறக் கதற… துடிக்கத் துடிக்க அரக்கன் அவளை முழுவதுமாக விழுங்கினான்.

Advertisement

 

வீங்கிய கன்னமும் உதட்டோரம் வழிந்த இரத்தத்தோடு அவள் கதறல் அந்த மிருகத்தை அசைக்கவில்லை. அவள் பல்லும் நகமும் அவனைப் பதம் பார்க்க அடியும் மிதியும் இடியாய் அவன் அடியாட்கள் மூலம் அவள் மேல் இறங்கியது தான் மிச்சம். ஒற்றை இரவில் ஓராயிரம் முறை மாண்டாள்.

 

கேள்வி கூடப் படாத வலியை அனுபவித்தாள். உச்சக் கட்ட அருவருப்பு, உடலோடு உள்ளமும் நடுங்கிப் போனது. சிறுமி பயந்து ஒடுங்கிப் போனாள். அழுகையும் கண்ணீரும் நிற்கவேயில்லை.

[the_ad id=”6605″]

அடுத்த நாள் முழுவதும் அந்த பூட்டி வைத்திருந்த அறையின் மூலையிலிருந்த  கட்டிலோடு கட்டப்பட்ட கையோடு.. கண்ணீரில் கரைந்தாள், கோமலின் பழுத்து எரிந்த கன்னமும், கிழிந்த உதடும், கொதித்த உடலும் அவளைச் சுருட்டி அரை மயக்கத்தில் போட்டிருந்தது.

 

“கோமல்…” அதே சத்தம்.. காதலாய் காதில் ஒலித்தது. கனன்று கொண்டிருந்த மேனியை நகர்த்த முடியவில்லை. அரை மயக்கம்.. கண் திறக்க முயன்றும் தோற்றாள். ஆனால் அது கௌரவ் தான் என்றது உணர்வு.

 

கட்டியிருந்த கைகளை விடுவித்தான். கையை நீவி விட்டு.. இதழோரம் வடிந்திருந்த இரத்தத்தைத் துடைத்தான். கன்னம் வருடி “கோமல்…” என்றான் மீண்டும். என்ன முயன்றும் கண்ணைத் திறக்க முடியவில்லை.

 

‘அரக்கனிடமிருந்து காப்பாற்ற ஏன் நேற்றே வரவில்லை?’ கண்ணோரம் நீர் வழிய படுத்தேயிருந்தாள்.

 

மயக்கம் தெளிந்து பார்த்தால் அவனில்லை. கிழட்டு ஓநாய் நின்றிருந்தது. அவன் எங்கே? அவன் வரவே இல்லையா? மனம் விட்டுப்போனது. ஏன் தன்னை காக்க யாருமே வரவில்லை. தெரிந்த எல்லா கடவுளையும் கூப்பிட்டாளே.. என்ன போராடியும் அன்று இரவும்.. அடுத்து வந்த பல இரவுகளும் அந்த பிணம் தின்னிக்கு உணவாய் போனாள். பெற்றவனும் வரவில்லை… நம்பி வந்தவனும் வரவில்லை.. அழைத்த கடவுளும் வரவில்லை. ஏன்? தெரியவில்லை!

 

எப்பொழுது முழித்திருந்தாள்? எப்பொழுது மயங்கினாள்? எப்பொழுது கட்டப்பட்டாள்? எப்பொழுது கட்டவிழ்க்கப்பட்டாள்? எதுவுமே அவளுக்கு புரியவில்லை. பாதி நேரம் மயக்கத்தில் கழித்தாள்.

 

மயக்கம் தெளியும் வேளை.. பல முறை தன்னை மாய்த்துக் கொள்ள முயன்று தோற்றாள். பல முறை எதிரில் வந்தவனைத் தாக்க முயல அடித்து நொறுக்கப்பட்டாள். வெண் மேனி உடல் முழுவதும் கீறல்களும் கரும்பச்சை இரத்தக்கட்டுகளுமாய் மாறிப் போனது.

 

பட்டினி கிடந்து சாக நினைத்தாள். சாவு வருவேனா என்று தள்ளியே நின்றது. அவள் உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் அறையில் வருபவனுக்கு ஒன்றுமில்லை. பெண் உடலில் உயிர் இருந்தால் போதும் என்றுவிட்டான் போலும். அவள் பலகீனம் இன்னும் வசதியாய் போனது மிருகத்திற்கு.

 

உயிர் பாதி பிரிந்த நிலை.. உடல் அப்படி தான் சொன்னது. ஆனால் சாவு வர மறுத்தது. இரண்டு மூன்று பேராய் அவள் தொண்டைக்குள் எதையாவது ஊற்றி விட்டுச் சென்றனர்.

 

பல இரவுகளுக்குப் பின் மீண்டும் “கோமல்” என்ற அதே சத்தம். அவன் எப்படி இங்கே? மருத்துவமனையில் தானே இருக்க வேண்டும்? இன்று இமை இடுக்கின் வழி அவன் தெரிந்தான். கௌரவே தான்.

 

“எனக்காக நீ வாழ வேண்டாமா…” உயிர் உருக கேட்டான்.

 

“நான் இருக்கேன்…” என்றான். அவள் தலை வருடித் தூங்க வைத்தான்.

 

கண்விழித்த நேரம் அவனில்லை. எல்லாம் பிரமையா? அவன் நிஜத்தில் வரவே இல்லையா? என்னை இங்கிருந்து கூட்டிச் செல்ல வரவே மாட்டானா?

 

அவன் வரமாட்டான். இது என்ன திரைப்படமா ஒடிந்த காலோடு நாயகன் வந்து காப்பாற்ற?

[the_ad id=”6605″]

சாக வேண்டும்… ஆனால் கண்டிப்பாக இங்கு இல்லை என்ற எண்ணம் வந்தது. தப்பிக்க வேண்டும்.. எப்படி? கொடுக்கும் உணவை உண்டு.. உடலை பலமாக்கிக் கிடைக்கும் சின்ன இடுக்கில் நுழைந்து தப்பிக்க வேண்டும் என முடிவெடுத்தாள்.

 

கிடைத்த சந்தில் ஓட எத்தனிக்கச் சிறுமி கணுக்காலும் பாதமும் தாக்கப்பட்டது! அடங்கிப் போனாள்.

 

மாதம் ஒன்று சென்ற பின் மெல்லப் பிடிப்பில்லாமல் நடக்க ஆரம்பிக்க, மருத்துவமனை வாசலில் இறக்கி விடப்பட்டாள். கௌரவிடம்!

 

கௌரவை பார்த்தபின், அவனிடம் மனதைத் திறந்தபின் மாண்டு போக முடிவெடுத்தாள்.

 

கௌரவை பார்த்து எல்லாவற்றையும் கூறி கதற நினைத்தவளுக்கு வாய் திறக்க முடியவில்லை. நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்..?

 

அவளைப் பார்த்த கௌரவ் வாடிய முகம் மலர.. வாஞ்சையாய், “கோமல்..” என்றான். அவன் ஒற்றை அழைப்பு.. அதிலிருந்த காதல்… உடைந்தே போனாள். பேச முடியவில்லை. அவன் உள்ளங்கையில் முகம் புதைத்து அழ, அவனும் கண்கலங்கினான்.

 

அவன் பார்க்கப் படு சுமார் தான்… ஆனால் குரல்? அதில் அப்படி ஒரு மென்மை இருக்கும். காலத்திற்கும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

 

அதுவும் அவன் “கோமல்..” என்ற அழைப்பு… அதை அவள் கேட்டுக் கொண்டே இருப்பாள் நாள் முழுவதும்.

 

“நீ இன்னைக்கு வருவ.. நாளைக்கு வருவேன்னு தினமும் வாசலையே பார்த்திட்டே படுத்திருந்தேன். உன்ன நல்லா பார்த்துக்கிறாங்களா? முதலாளி பொண்ணு வீட்டுக்கு நீ போய்ட்டதா சொன்னாங்க! அங்க பிரச்சினை இல்லையே? என்னை எல்லாம் ஏன்னு கேட்கக் கூட நாதி இல்ல.. அப்படிப் பட்ட என்னையே நல்லா பார்த்துக்கறாங்க. உன்ன வேலைக்கு வச்சிருக்காங்க இல்ல.. அதனால தானாம். கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.. நான் நடக்க ஆரம்பிச்ச பிறகு, நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம்.” அவள் கன்னம் துடைத்துச் சொன்னான்.

 

கொழு கொழு கன்னம் குறைந்து போயிருக்க… “ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா? உன் கன்னம் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அதைப் போய் கொறச்சிட்டியே இப்படி பட்டினி இருந்து? நீ கொழு கொழுனு இருந்தா தான் நானும் நிம்மதியா இருக்க முடியும். என்னை நினைச்சு பட்டினி இருந்தியா? நான் உன் புண்ணியத்தில நல்லா இருக்கேன்… நீயும் உடம்பை பார்த்துக்கணும் எனக்காக..” என்றான் அவள் தலை வருடி.

 

அவள் உடல் காயமும் உள்ளக் காயமும் அவன் கண்ணுக்குத் தெரியவே இல்லையா? ஏன்? கை பிடித்து ஆசை தீரப் பேசினான். ஜீவன் வடிந்த கண்களோடு அமர்ந்திருந்தாள்.

 

அவன் ஏதேதோ பேச, அவளுக்குத் தான் பேச்சு வரவில்லை. ஒரு மாதம் ஒருவரிடமும் பேசியிருக்கவில்லை… கெஞ்சவும் கதறவும் சண்டையிடவுமே தொண்டை இருந்தது போல் உணர்ந்தாள். அதனால் பேச்சு வரவில்லையோ? வாழ்வு பாரமாய் போனதால் கூட இருக்கலாம்.

 

“நீ என் வாழ்க்கையில கிடைச்சது நான் செஞ்ச பாக்கியம். நீ இல்லாம போயிருந்தா.. செல்லாகாசா.. அனாதை பிணமாயிருப்பேன்.” நெகிழ்ந்து அவள் கையை கண்ணில் ஒற்றிக் கொண்டான்.

 

பேச வந்த வார்த்தை எல்லாம் அவளைப் போலவே உள்ளுக்குள் மாண்டு புதைந்தது.

 

அவனை இந்த நிலையில் ஆதரவு இல்லாமல் தனியே விட முடியாதே..  ஏதாவது வேலை தேட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். விதியை நொந்து வீடு வந்து சேர்ந்தாள். இன்னுமே மாராட்டி பேசவும் தெரியவில்லை. பேசினால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.  அடைக்கப்பட்டிருந்த அறையில் மொழி கற்றுத்தரபடவில்லை. ஹிந்தி என்ற குட்டையை நீந்த தத்தளித்தவளுக்கு மாராட்டி கொடுமையான கடலாய் போனது.

 

தட்டுத் தடுமாறி முதல் நாள் பார்த்த சிறுவன் தயவில் வீடு வந்து சேர்ந்த அன்று இரவே தகரக் குடிசையிலிருந்து தூக்கிச் செல்லப் பட்டாள். ஏன் அவள் கதறல் அந்த ஊர் மக்கள் காதில் விழவே இல்லை? பார்க்கத் தான் செய்தார்கள் இவளை இழுத்துச் சென்று அந்த நீல நிற ப்ரீமியர் பத்மினியில் ஏற்றியதை.

[the_ad id=”6605″]

ஏன் ஒருவர் கூட ஒரு பெண்ணில் குரலுக்கு உதவ வரவில்லை. ‘இது என்ன விதமான இடம்? இந்த மக்கள் எல்லாம் யார்?’ மனம் ஒரே ஒரு மனிதனை தேடியது. மனிதனைக் காணவே இல்லை.. மனித உருவில் பேயும் பிசாசும் அவளை அங்கம் அங்கமாகத் தின்று கொன்றது.

 

அவள் வளர்ந்ததும் கிராமம் தான். ஆனால் இந்த ஊரும் இதில் இருக்கும் மனிதர்களின் மனமும் போல் வறண்ட பூமியில்லை. கண்ணை நிறைக்க பச்சை வயல்வெளியும்.. கீச்சு கீச்சு என்று காதில் இசைக்கும் குருவிகளும்… பூமியை ஈரப்படுத்திய ஆறும்.. பூஞ்சோலைகளும் நிறைந்த கிராமம். ஒருவருக்கு ஒரு பிரச்சினை என்றால் ஊரே ஒன்று கூடுமே. ஒரு பெண் கையை யாராவது தொட்டால்.. தொட்டவன் கையை வெட்ட அவளுக்கு அண்ணன் இருக்க வேண்டாம். பார்ப்பவனே அண்ணனாய் மாறிப் போவானே…

 

இது மனிதர்கள் வாழும், ஊரா…? இல்லை செத்துக் கொண்டிருப்பதை தின்னும் கழுகுக் கூட்டமா…? இல்லை, அது கூட உயிர் பிரியும் வரை காத்திருக்குமே! இது  ஓநாய்களும்.. குள்ள நரிகளும் வாழுமிடம்! அப்படி தான் அவளுக்குத் தோன்றியது.

 

“பிற உயிரை நேசி! அதை வதைக்காதே… யாரேனும் வதைத்தால்.. பார்த்துக்கொண்டு நிற்காதே. கொடுமையை எதிர்த்து தைரியமாக நில்!” தாத்தா இப்படி தானே கூறி வளர்த்தார். இவர்கள் வீட்டிலெல்லாம் சொல்லிக் கொடுக்கப்படவில்லையா?

 

நீல நிற பத்மினி சென்ற இடங்கள் மாறியது, ஆட்கள் மாறினர், ஒவ்வொரு இடத்திலும் நாட்களோ வாரங்களோ… அவள் அறியவில்லை.  எங்குச் சென்றாலும் எல்லா இரவும் நெருப்பில் வெந்தாள். பல நாட்களில்.. பகல்களும் கசந்தது. தப்பிக்க வழி தெரியவில்லை.

 

தலை தெறிக்க ஓட முற்பட.. முட்டியில் தான் அடித்தனர். அடிவயிறு தான் தாக்கப்பட்டது. உயிர் போகும் வலி.. ஓட முடியா முடம் போல் கிடந்தாள். அடிவாங்கப் போவது தெரிந்ததுமே உடல் நடுங்க ஆரம்பித்தது. இருந்தும் ஒவ்வொருமுறையும் வலியோடே போராடித் தோற்றாள்.

 

பத்தினி பெண்கள் கோபமாய் பார்த்தால் பச்சை மரங்களும் பற்றி எரியுமாமே..  உண்மையா? உண்மை என்றால், அந்த ஊரைக் கோபமாய் பார்த்தாளே? ஊர் எரியவேண்டாம்… தன்னை தீண்டும் ஓநாய்கள் மட்டுமாவது எரியலாமே? கற்பு என்பது என்ன? பத்தினி என்றால் என்ன? கோமல் பத்தினி இல்லையோ? கோமல் எங்குக் கற்பை இழந்தாள்? இந்த கற்பு என்பது எங்கு தான் அடங்கியுள்ளது? இந்த சமுகம் அதைக் குணம் சம்பந்தப் பட்டதாக எண்ணவில்லையோ? அது வெறும் உருப்பு சம்பந்தப் பட்டதாக யார் மாற்றியது?

 

சிறுமி குழம்பிப் போனாள். அவளுக்குப் பாட்டி கற்பித்த சிலப்பதிகாரம் இன்று புரியாமலே போனது! ‘யாரும் எரியவேண்டாம்… நானாவது சாகக் கூடாதா?’ மனம் ஏங்காத நொடியில்லை. ஏனோ அவளுக்கும் சாவும் வரவில்லை சுற்றியிருந்த ஓநாய்களும் சாம்பல் ஆகவில்லை. 

 

[the_ad id=”6605″]

 

அவள் வாழ்வின் முடிவுகளை யார் அவளுக்காக தீர்மானிப்பது? எல்லாம் தவறாய் தோன்றியது. மன வலிமை போதவில்லை, உடலைக் காக்க! இப்பொழுதெல்லாம் அந்த மனதிற்கும் வலு இருப்பதாகத் தெரியவில்லை.

 

ஒவ்வொரு இடமாக யார் அனுப்பி வைப்பது? எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. மொத்தம் இருமுறை கௌரவை காண மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டாள்.

 

இருமுறையும் அவன் மட்டும் தான் பேசினான். அவன்  நன்றிகளை உதிர்த்தான். கீழே விழுந்து தெறித்த நன்றிகளைப் பொறுக்கிக்கொள்ளக் கூட தோன்றாமல் அமர்ந்திருந்தாள். தகர டப்பா வீட்டை பார்த்து வாரங்கள் ஆனது.

 

அனிச்சம் பூ துவண்டு போனது. மனதாலும் உடலாலும். மனம் வெறுத்துப் போனது. கௌரவை காண காத்திருப்பது கூட கிடையாது.. அவன் ‘கோமல்’ கூட காதில் ஏறவில்லை.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!