Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 12

கள்வன் – 12

 

“ஓய்… என்ன அமைதியா ஏதோ யோசனையில் இருக்க?” யுக்தாவை இடித்தபடி வீட்டின் பின்புறம் இருக்கும் குறுகிய படிகளில் வந்தமர்ந்தான் இன்பன். 

 



Advertisement

கையிலிருந்த தம்ளரை கீழே வைத்தவள், இனியா பற்றிய சிந்தனையை கைவிட்டு இன்பனின் தோளில் சாய்ந்து கொண்டு அவன் விரல்களோடு விரல் பிணைத்துக் கொண்டாள்.

 

“அத்தைகிட்ட அம்மா சொன்னதை நீங்க சொல்லி இருப்பீங்களோனு பயந்துட்டேன்…” 

Advertisement

 

Advertisement

“புது உறவை கசப்புடன் தொடங்க விரும்பவில்லை யுக்தா. உங்க அம்மா பேசியது தெரிந்தால் மனத்தாங்கல் தான் வரும். உறவு எளிமையாக முறிந்துவிடும் பின் அதை ஒட்ட வைப்பது கடினம்.” 

 

“தேங்கஸ்.” உள்ளத்தில் இருந்தது உளமார வெளிவந்தது… இன்பனின் இந்த பெருந்தன்மையில் மனம் தன்னுடைய தேர்வை எண்ணி மெச்சிக்கொண்டது.

Advertisement

 

“பட்… உங்க அம்மாவிற்கும் எனக்குமான உறவு சுமூகமாய் இருக்கும் என்று மட்டும் நினைத்து விடாத யுக்தா… அவங்க அண்ணனை பற்றி உனக்கு அளித்த தவறான போதனை இன்னும் நினைவில் இருக்கிறது. அதை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமான்னு தெரியல.” என்றவன் குரலில் கடினம் கூடி நெகிழ்ந்திருந்த பெண்ணவளை வதைத்தது.

 

முகம் சுருங்கிவிட, அவன் தோளிலுருந்து முகத்தை நிமிர்த்தி, “கோபமா?” 

 

“இல்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை யுக்தா.” என்றான் அவளை சந்திக்காது. 

 

“அது மாறுமா?” தவிப்புடன் வந்தது பெண்ணின் ஒலி.

 

“காலம் தான் பதில்.” என்று அத்தோடு அந்த பேச்சை கத்தரித்தான். 

 

ஆனால் அவள் விடாமல், மனம் தாளாமல், “அம்மா ஏதோ தெரியாம… என் மேல உள்ள அக்கறையில் பேசிட்டாங்க… நீங்க அதை மனசுல வச்சுக்காதீங்க. இனி இதுமாதிரி நடக்காம நான் பார்த்துக்கிறேன்.” என்றவள், அவன் மனம் இலகுமா என்பதுபோல் அவன் முகத்தை பார்க்க அவன் சிறிய தலையசைப்புடன் அதை புறந்தள்ளிவிட்டான். 

 

அவளுக்குத்தான் தவிப்பாய் போனது… தன்னை பெற்றவர் தனக்கானவனின் மனதில் கீழிறங்கிவிட்டார் என்ற நிதர்சனம் மனதை வாட்டியது. இருவரும் சுமூகமாக இல்லையென்றால் இவளாலும் நிம்மதியாக இருக்கமுடியாதே… அதோடு இன்னொன்றும் புரிந்தது, அவள் மட்டும் அன்று தன் அன்னையின் பேச்சிற்கு சற்று செவி சாய்த்திருந்தால் முதலுக்கே மோசமாகியிருக்கும். அவளின் மீதான அவனின் நம்பிக்கை அறுபட்டிருக்கும். அதுவரை யுக்தா தப்பினாள்.

[the_ad id=”6605″]

பேசிய வார்த்தைகளை திரும்பப் பெறக்கூடிய சக்தியும், செவியில் விழுந்து மனதில் பதிந்த வார்த்தைகளை மறக்கக்கூடிய சக்தியும் இருந்தால் இங்கு பலரின் வாழ்வில் வசந்தமே…  

 

◆◆◆

 

“என்ன சொல்றான் என் பையன்?” என்றபடியே சிவகாமி இதயன் அறைக்குள் நுழைய, தன் கையை இப்போதாவது விடுவாளா என்பது போல் இனியாவை பார்த்தான் இதயன். 

 

அவன் விழியில் இருந்த யாசகம் புரிந்ததோ என்னவோ இனியா கைபிடிப்பை தளர்த்த, உணர்ச்சியற்ற அவன் கை கட்டுப்பாடின்றி டொம்மென்று கட்டிலில் விழுந்தது.

 

“அச்சச்சோ… சாரிங்க… வலிக்குதா?” பதறியடித்துக் கொண்டு இனியா அவன் கையை தடவ, ஒரு வெற்றுப் பார்வை தாய் மற்றும் சேயினிடம்.

 

“அவனுக்கு வலிக்காதுமா… நீ பதறாத…” சலனமின்றி வந்தது தாயினிடமிருந்து.

 

“அதெப்படி ஆன்ட்டி வலிக்காம போகும்? நான் வேறு அப்படியே டொம்மென்று விட்டுட்டேன்.” தவிப்பாய் வந்தது இனியாவின் வார்த்தைகள். பதட்டமின்றி யோசித்திருந்தால் தன்னால் அவன் நிலைமையை புரிந்து கொண்டிருக்க முடியும் அவளால்… 

 

பதிலின்றி இனியாவின் கையை பிடித்து நிறுத்தியவர், “அவனால் உணர முடியாதுமா.” என்றார் வெற்றுக் குரலில்.

 

உணர்ச்சியற்று வந்து விழுந்த நிதர்சனத்தில் விக்கித்து நின்றாள் இனியா. எவ்வளவு கட்டுப்படுத்தியும் வேதனை முகத்தில் படர, இதெல்லாம் பழக்கப்பட்ட ஒன்று தான் என்பது போன்று கண்களை மூடிக் கொண்டான் இதயன்.

 

“என்னாச்சு ஆன்ட்டி? ஏன் இப்படி இருக்காங்க? டாக்டர் என்ன சொல்றாங்க? சரி செய்யக்கூடியது தானே? எவ்வளவு நாளாய் இப்படி இருக்காங்க?” விடையறியா வினாக்களுக்கு விடைகள் பெற கேள்விகளை தொடுத்துக்கொண்டே போனாள் இனியா. அவள் வந்த நோக்கமும் அது தானே…!

 

உள்ளுணர்வு இயக்கத்தினால் காரிய காரணமின்றி ஏனோ அவன் நெருக்கமாய் தோன்றிவிட, மனம் அவனைப்பற்றி தெரிந்துக்கொள்ள விழைய, மூளையயோ கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கும் அவள் மனதை கட்டிப்போடும் முயற்சியோடு ஒருபுறம் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்க, சிவகாமியின் வேதனையில் மனம் வென்று ஆர்வம் அதீதமாகியது. 

 

சிவகாமியின் பார்வையோ வேகமாய் இதயனிடம் சென்று வந்தது. எச்சில் கூட்டி விழுங்கியவர் இதயனின் சிகையை மென்மையாய் வருடிவிட்டு அவ்வறை விட்டு வெளியேறினார். இனியாவும் அவனின் மூடிய விழிகளை பார்த்துக் கொண்டே சிவகாமியைத் தொடர்ந்தாள்.

 

“ஆன்ட்டி…” அன்று போல் இன்றும் அவளை ஒதுங்கச் சொல்லிவிடுவாரோ என்ற தயக்கத்துடன் அழைக்க அவர் தரையில் அமர்ந்துகொண்டு இனியாவை அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார்.

 

“பரவாயில்லை ஆன்ட்டி,” அவர் அருகிலே கீழேயே அமர்ந்து கொண்டாள்.

 

ஓரிரு நிமிடம் அமைதியை கடைபிடித்தவர் மெல்ல வாய் திறந்தார்.

[the_ad id=”6605″]

“ஆறு வருஷம்மா… எம் புள்ள படுக்கை படுக்கையாகிட்டான்… எல்லாம் அந்த பாழாய் போன விபத்தினால்… அதுவும் சாதாரண விபத்தல்ல, சிலரின் அலட்சியத்தால் வந்த வினை எங்கள் தலையில் விடிந்துவிட்டது. எம் புள்ள அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு வண்டில வேலைக்கு போய்ட்டு இருந்தான். யார் வச்ச பேனரோ வண்டில போயிட்டு இருந்த என் புள்ள மேல விழுந்து… இவன் நிலை தடுமாறி கீழே விழ… ஆட்டோ அவன் மேல ஏறி… ஹாஸ்பிடல்ல தலையில் அடிபட்டு அட்மிட் செய்திருக்கோம்னு போன் வந்தது. பதறியடிச்சி போனால் முக்கியமான நரம்புல பாதிப்பு ஏற்பட்டதால மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்குமான தொடர்பு முற்றிலும் அறுந்து அவனால் எதையும் உணர முடியாது, கை கால் வேலை செய்யாது, குரல்வளையும் டேமேஜ் ஆகிட்டுனு சொல்லிட்டாங்க… முகத்தில் இருக்கும் தசைகள் மட்டுமே வேலை செய்யும். அங்கு மட்டுமே உணர்ச்சிகளை உணர முடியும். ஆரம்பத்தில் வாய் கூட தானாய் அவனால் அசைக்க முடியாதுமா… மூன்றாம் நபர் தான் இழுத்து பிடித்து உணவு கொடுக்க முடியும்… இப்போது தான் அவனாக கொஞ்சம் உணவிற்காக வாய் திறக்கிறான். கை மற்றும் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு மட்டும் குணமாகிடிச்சு…” என்றவரின் தொண்டை அடைக்க மேலே பேச முடியாமல் கண்களில் கசிந்த நீரை தன் சேலையால் துடைத்துக் கொண்டார்.

 

அவரின் உணர்வுகள் இவளுக்குள்ளும் கடத்தப்பட, துக்கம் தொண்டையை அடைத்தது. சூழ்நிலையின் கணம் தாளாது அவருக்கும் அவளுக்குமாக சற்று அவசாகம் அளித்து மேலும் தொடர்ந்தாள் இனியா, “ஹெல்மெட் போடலயா ஆன்ட்டி?”

 

“போட்டு இருந்தான்மா… விதி யாரை விட்டது? அவனுக்கு தலையில் அடிபட்டு இப்படி முடங்கணும்னு இருக்கு முடங்கிட்டான்…” விரக்தியின் உச்சம் அவர் வார்த்தைகளில் வெளிப்பட்டது. ஏனோ சில நேரங்களில் தற்காப்பையும் மீறி தவறுகள் நிகழ்ந்துவிடுகிறது. அதைதான் விதி என்கிறார்களோ என்னவோ… 

 

“ஏதோ கல்யாணத்திற்கு வைத்த பேனராம்… எங்கிருந்தோ காற்றில் பறந்து வந்து இவன் மேல விழுந்துடுச்சு… இரண்டு நாள் எல்லாரும் துக்கம் விசாரிச்சங்களே தவிர அதன் பிறகு யாரும் கண்டுக்கல… நாங்களும் உடைஞ்சி போய்ட்டோம்… போலீஸ் கேஸுன்னு படியேற முடியல… இன்பனும் காலேஜ் முடிஞ்சு வேலைக்கு சேர்ந்த புதுசு… அப்படியே ஆறு வருடம் ஓடிடுச்சு… இவன் விபத்திற்கு காரணமானவர்கள் சொகுசா இருக்காங்க என் பையன் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கிறான்…”

 

“டிரீட்மென்ட்?”

 

“இதயனோட வேலை செய்த தம்பி தான் இவனுக்கு சிகிச்சை கொடுக்குது… நர்ஸ் செல்வியை கூட அந்த தம்பி தான் ஏற்பாடு செய்து இங்கே அனுப்பியது.”

 

“இவரோட வேலை செய்தவர்னா… உங்க பையன் டாக்டரா?” அவரின் வார்த்தைகளிலிருந்து நிதர்சனம் கண்டுகொண்ட அப்பட்டமான அதிர்ச்சி இனியாவின் விழியிலும், மொழியிலும்.

 

“ம்… கார்டியலாஜிஸ்ட். மேற்படிப்பு முடித்து ஒரு ஆறு மாசம் தான் ப்ராக்டிஸ் பண்ணான் அதற்குள் இந்த விபத்து நடந்து அவனை முடக்கிடுச்சு…” என்றவர் குனிந்து தன் சேலையை ஆராய்வது போல் மெளனமாய் கண்ணீர் சிந்தினார், “இன்பன் தான் எல்லாத்தையும் பார்த்துக்குறான்… இப்பொது கூட வெளிநாட்டில் சிகிச்சைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கான்.”

 

[the_ad id=”6605″]

 

“அங்கிள்?” தயங்கியே கேள்வியாய் விழுந்தது வார்த்தைகள்.

 

“இதயன் படிச்சிட்டு இருக்கும்போதே நிம்மதியாக தூக்கத்தில் போய் சேர்ந்துட்டார். இந்த கொடுமையெல்லாம் நான் பார்த்து செத்துட்டு இருக்கேன். அவருக்கு அப்புறம் பொருளாதார ரீதியா ரொம்ப நலிஞ்சிட்டோம். இதயனுக்கும், இன்பனுக்கும் பீஸ் கட்டுவதே ஒவ்வொரு முறையும் பெரும் போராட்டமாக இருக்கும். இந்த ரெண்டு பசங்களும் தான் மெனக்கெட்டு எங்கெங்கோ கடன் வாங்கி படித்து முடிச்சாங்க. இன்பன் தான் இந்த ஆறு வருடம் ஓவர்டைம் பார்த்து, என் வீட்டுக்காரர் உறவுகளிடம் போராடி பூர்வீக வீட்டை விற்று அதில் வந்த பணத்தை வைத்து கடனை அடைத்தான். அதோட இதயனின் மருத்துவ செலவும் சேர்ந்து… ம்ம்… எங்களை நெருங்கினால் எங்கே இதயனுக்காக ஏதாவது பண உதவி கேட்டுவிடுமோனு சொந்தங்களும் ஓரடி தள்ளி போய்விட்டனர். இது எல்லாத்தையும்விட இதயன் முன்னே மாதிரி எழுந்து நடமாடி அவனுக்குனு ஒரு வாழ்க்கை அமைஞ்சிட்டா நானும் நிம்மதியா போய்டுவேன்… இல்லையா எங்க இரண்டு பேரையும் சேர்த்து ஆண்டவன் கூப்பிட்டுக்கிட்டாலும் சரி.., இன்பனாவது நிம்மதியாய் வாழட்டும்…” என்று மனம் வெம்பி வெறுமையாய் பேச,

 

“அம்மா…” என்ற இன்பனின் அதிகாரக் குரல் குறுக்கிட்டு கண்டித்தது. இனியாவிடம் இதயனைப் பற்றி கூறிக்கொண்டிருக்கும் போதே அவ்விருவரும் வந்துவிட்டனர். மனதில் உள்ளதை கொட்டட்டும் என்றே இன்பன் காத்திருந்தான். ஆயினும் எதிர்மறையாய் பேச்சு எழவும் தாங்க மாட்டாது குறுக்கிட்டான்.

 

“ஏன் தான் நீ இப்படி பேசிறியோனு தெரியல… அவனும் அவ்வப்போது முகத்தை திருப்பிக்கிறான் நீயும் இப்படியே பேசிட்டு இரு நானும் எங்கேயாது போய் தொலையுறேன்…” அடைத்து வைத்திருந்தது கட்டவிழுந்து அடைபடாமல் வார்த்தை தடித்தது இன்பனுக்கு. 

 

“ஒரு புள்ள வாழவும் முடியாம சாகவும் முடியாம தவிச்சிட்டு இருக்கான். நீ அவனுக்காக என்று உன் சத்து தீர நேரமில்லாமல் உழைச்சிட்டு இருக்க… நான் மட்டும் தனியாக இதெல்லாம் சும்மா பார்த்துகிட்டு மறுகிட்டு இருக்கேன் நானும் வேற என்ன தான் செய்றது…” கேவலை அடக்க வழியற்று வெடித்தது சிவகாமியின் குரல்.

 

இவ்வனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பெண்களுக்கு புரிந்தது  அவ்வீடே ஒருவித மன அழுத்தத்தில் இருக்கிறதென்று.

 

எதிர்மறையாய் சென்று கொண்டிருக்கும் தங்கள் வாழ்க்கைக்கு ஒரு நேர்மறையான திருப்பம் தேவை என்று இன்பன் வேண்டியதற்கான அர்த்தம் இப்போது விளங்கியது யுக்தாவிற்கு. அவள் கணித்ததை விட மோசமாக இருந்தது அக்குடும்பத்தின் நிலை. அதை சரி செய்யும் ஆவலும் எழ, மனதில் ஒரு முடிவு, முகத்தில் ஒரு தெளிவு. அதே முடிவு மற்றும் தெளிவை இனியாவிடமும் தென்பட்டதை இம்முறை கோபமற்று தனக்கு சாதகமாகப் பார்த்தாள் தன் குடும்பத்திற்காக சுயநலவாதியாக உருமாறிய யுக்தா.

[the_ad id=”6605″]

இனியா ஆதரவாய் சிவகாமியை தன் மேல் சாய்த்துக்கொள்ள, யுக்தா இன்பன் கையை கெட்டியாக பிணைத்துக் கொண்டு அழுத்தம் கொடுத்தாள். 

 

சாயத் தோள் கிடைத்தவுடன் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் மேல் எழுந்து அடக்கமாட்டாது ஒரு மூச்சு அழுது தீர்த்தார் சிவகாமி. இன்பனின் கண்களும் கலங்க மற்றவர்கள் அறியாது அதை துடைத்து விட்டாள் யுக்தா.

 

“சரிபண்ண முடியாதுனு ஒன்றுமே இல்லை ஆன்ட்டி… மனசு தான் எல்லாவற்றிற்கும் காரணம். அவர் குணமாகிவிடுவார் என்று நீங்கள் முதலில் நம்புங்கள், அவருக்கும் நம்பிக்கை கொடுங்கள். அசைக்க முடியாத தைரியம் மற்றும் நம்பிக்கை கண்டிப்பாக உங்களை மீட்கும். இப்படி சுய இரக்கத்தை வளர்த்துக் கொண்டு உங்கள் மகன்களை பலவீனம் ஆக்கிவிடாதீர்கள் ஆன்ட்டி… நாங்களும் உங்க கூட இருக்கோம், நீங்க எதுக்கும் கவலைப்படாதீர்கள்.”

 

“ஆமாம் அத்தை… நாங்கள் இருக்கோம் உங்களுக்கு. அத்தானை சீக்கிரம் குணப்படுத்திடலாம். நீங்க தைரியமாக இருங்க…” என்று யுக்தாவும் சமாதானம் செய்தாள். அதில் சற்று தெளிந்த சிவகாமி கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு,

 

“முதன்முதலாய் வந்த மருமகளை சந்தோசமா வச்சிக்காம அழுது வடிஞ்சிகிட்டு இருக்கேன்… டேய் இன்பா இதெல்லாம் சொல்ல மாட்ட நீ?” என்று அவனை கடிந்து கொண்டே எழுந்தார்.

 

“அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி எங்களையும் எமோஷனல் ஆக்குனது நீ…  இதில் என்னை எதற்கு குறை சொல்ற?” 

 

“போடா போடா போய் இதயன் என்ன பண்றான்னு பாரு… செல்வி கூட இல்லை தனியா எதையாவது மனதில் போட்டு குழப்பிட்டு இருப்பான். இவங்க இரண்டு பேரும் வீட்டிற்கு வந்ததே ஏதோ தெம்பு வந்தது போல இருக்கு… நான் ஸ்வீட் செய்து எடுத்துவரேன்…” என்று கிளம்ப யுக்தாவும், இனியாவும் கனிவுடன் அவரை பின் தொடர்ந்தனர்.

 

“என்னமா ரெண்டு பேரும் என் பின்னாடியே வந்துட்டீங்க… இங்கே அடுப்பு அனலில் வியர்க்கும்மா… போய் ஹால்ல உட்கார்ந்து பேசிட்டு இருங்க கால் மணி நேரத்தில் வந்துறேன்…” என்க இருவரும் மறுத்து அவருக்கு உதவி செய்து இனிப்புடன் தான் வெளியே வந்தனர். 

 

ஆளுக்கு ஒரு கிண்ணத்தில் இனிப்பை எடுத்துக்கொண்டு இதயன் அறைக்கு செல்ல அங்கு இன்பன் தமையனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு கிண்ணத்தை திணித்துவிட்டு சிவகாமி இதயனை தன் மடியில் கிடத்திக்கொண்டு சிறிது சிறிதாய் இனிப்பை ஊட்டிவிட, அவர்கள் அருகிலேயே ஒரு நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு அவர்களை பார்த்துக் கொண்டே அமைதியாய் தன் இனிப்பை உண்ண ஆரம்பித்தாள் இனியா. இதயனின் ஒவ்வொரு முக அசைவுகளும் அவள் அறியாமலேயே அகத்தில் பதிந்து கொண்டிருந்தது.

 

“இந்த அறையில் மருந்து வாடை வீசும்மா… நீங்கள் வேண்டுமென்றால் ஹாலில் உட்கார்ந்து கொள்ளுங்களேன்… நான் இவனுக்கு கொடுத்துவிட்டு வருகிறேன்…” என்று சிவகாமி அவர்களின் செளகர்யத்தை எண்ணி கூற, அதனை மறுத்து இதயன் கட்டிலை ஒட்டியே அனைவரும் தத்தம் இனிப்பை உண்ண, இனிமையாய் துவங்கியது அக்குடியின் இன்னலற்ற நிலை… 

 

*^*^*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!