Neeyindri Vaazhvaeno 23 2
ப்ரீதா ரிஷிக்கும் அழைத்து ஜோதி வருத்தமாக இருப்பதைச் சொல்லி விட்டாள். ரிஷி தன் அம்மாவை செல்லில அழைத்துப் பேசினான்.
“என்ன மா கோபமா?”
“பின்ன இருக்காதா… நாங்க என்ன யாரோவா? எங்களுக்கு இவ்வளவு லேட்டா சொல்றீங்க. இதே அவங்க அம்மா இருந்திருந்தா சாதனா சொல்லாம இருந்திருப்பாளா…”
“உன் பாட்டி என்னை ரொம்பக் கேவலமா பேசுறாங்க. நீயும் உன் புருஷனும் அவளைத் தலையில வச்சிட்டு ஆடுனீங்க. உன்கிட்ட கூட மாசமா இருக்கிறதை சொல்லலையான்னு கேட்கிறாங்க.”
Advertisement
“நான் தான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்.”
“ஏன் டா?”
“சொன்னா நீங்க இங்க அவளை அனுப்ப மாட்டீங்க. அதனால தான் வேண்டாம்னு சொன்னேன்.” ஜோதிக்கு சாதானா மீது இருக்கும் கோபத்தைக் குறைப்பதற்காக ரிஷி பழியை ஏற்றுக்கொண்டான்.
Advertisement
ரிஷி சொன்னதைக் கேட்டுச் சாதனா கவலையாகப் பார்க்க… அந்தப் பக்கம் ஜோதிக்கு மனசு லேசானது. “நான் அப்பவே நினைச்சேன் சாதனா இப்படியெல்லாம் பண்ண மாட்டாளேன்னு… உன் வேலை தான இது. இங்க வா உன்னைக் கவனிக்கிறேன்.” என்றவர் தொடர்ந்து,
Advertisement
“நீ எப்பவுமே புத்திசாலின்னு நினைச்சுக்கக் கூடாது ரிஷி. சில விஷயங்கள் பெரியவங்க சொன்னா கரெக்ட்டா தான் இருக்கும். முதல் நாலு மாசம் ரொம்பக் கவனமா இருக்கணும். இந்த நேரத்தில போய் அவளை அலைய வச்சிருக்க…. சரி அவளைப் பத்திரமா கூடிட்டு வந்து சேரு…” என்றவர் போன்னை வைக்க…. கேட்டியா என்பது போல் ரிஷி சாதனாவை பார்த்தான்.
அவள் அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். தன்னால் இனி ரிஷிக்கு வேறு அனைவரிடமும் இருந்து திட்டு விழும் என்று தெரியும். பத்திரமாக ஊருக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்று இருந்தது.
Advertisement
[the_ad id=”6605″]
ரிஷிக்கு வந்த வேலை இன்னும் முடியவில்லை… அவன் திரும்பச் சில மாதங்கள் சென்று லண்டன் வர வேண்டியது இருந்தது. சாதனாவிற்கு இப்போது மசக்கை இன்னும் அதிகமாகியது. அவள் கஷ்ட்டபடுவதைப் பார்த்து ரிஷி “இப்படி உடம்பை வச்சிக்கிட்டு எப்படி ப்ளைட்ல போவ.. ஒழுங்கா அங்கேயே இருந்திருக்கலாம்.” என்றான்.
சாதனா ஓய்வு எடுக்க… ரிஷி தான் கொண்டு வந்த எல்லாவற்றையும் பெட்டியில் அடுக்கி வைத்தான். இதில் ஷாப்பிங் செய்தது வேறு நிறைய இருந்தது. சாதனாவிற்கு நாம் படுத்திருக்க அவன் மட்டும் வேலை பார்கிறானே என்று இருந்தது. ஆனால் வேலை செய்ய அவள் உடல் ஒத்துழைக்கவில்லை.
ஒருவழியாக அவர்கள் இந்தியாவிற்குக் கிளம்பும் நாளும் வந்தது. சாதனாவிற்கு வழியில் சாப்பிட உணவு, பழங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பினர். சோதனைக்கென்று அன்று பார்த்து விமானம் நான்கு மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது.
ஏற்கனவே அதிக நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தது. பிறகு பயணம் என்று சாதனா மிகவும் களைத்திருந்தாள். அதனால் உடனே சென்னையில் இருந்து மதுரை கிளம்பாமல்… சென்னையில் இரண்டு நாட்கள் தங்கி விட்டு பின்னர் அவள் உடல் நிலையைப் பொருத்து விமானத்திலோ அல்லது காரிலோ பயணம் செய்வோம் என ரிஷி நினைத்தான். அதனால் நேராகச் சென்னையில் இருக்கும் அவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.
ஹப்பா வீடு வந்துவிட்டோம் என்ற நிம்மதிபட முடியாமல் வந்ததில் இருந்து சாதனாவிற்குக் காய்ச்சல். வயிற்றில் குழந்தை இருப்பதால் மாத்திரை போடாமல் சமாளித்துப் பார்ப்போம் எனச் நினைத்து ஜுரத்தை பொறுத்துக் கொள்ள முடிவு செய்தாள். அதோடு ஓய்வு எடுத்தால் சரி ஆகிவிடும் என அவள் நினைக்க…. ஜுரம் விடுவதாக இல்லை.
காய்ச்சல் என்று ரிஷியிடம் சொன்னால்… அவன் வேறு பதட்டப்படுவான். ஒருநாள் பார்க்கலாம் என நினைத்து சாதனா அவனிடமும் சொல்லவில்லை… பயணத்தால் களைப்பாக இருக்கிறாள் ஒய்வு எடுக்கட்டும் என நினைத்து ரிஷியும் அவளைத் தொந்தரவு செய்யாமல் விலகி இருந்தான்.
நள்ளிரவில் சாதனாவின் அனத்தல் கேட்டு கண்விழித்த ரிஷி அவள் உடம்பு அனலாகக் கொதிப்பதை பார்த்து, அவளைத் தட்டி எழுப்ப… சாதனாவிற்குக் கொஞ்சம் கூட உணர்வே இல்லை… அவள் மயக்கத்திற்குச் சென்று கொண்டு இருந்தாள்.
அவளை உடனே தூக்கிக்கொண்டு கீழே வந்தவன், வேலை ஆட்களை அழைத்துக் காரை எடுக்கச் சொல்லி சாதனாவோடு மருத்துவமனைக்கு விரைந்தான்.
காய்ச்சல் அதிகமாக இருக்கவும் அதுவும் கருவுற்று இருக்கிறாள் என்றதும், உடனடியாக அவளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
சாதனாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதை வீட்டிற்கு அழைத்துச் சொல்ல வேண்டும். இதைக் கேட்டால் பெரியவர்கள் எல்லோரும் பதட்டப்படுவார்கள். அவர்களிடம் நிதானமாகச் சொல்ல வேண்டும். தனக்கு அவ்வளவு நேரம் இல்லை என்று நினைத்தவன், வெற்றியை அழைத்தான். அவன் மற்றவர்களைப் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை தான்.
வெற்றி சிறிது நேரத்திற்கு முன்பு தான் வந்து படுத்திருந்தான். அதனால் இன்னும் அசந்து உறங்காமல் இருந்ததால்… செல் அடிக்கும் சத்தம் கேட்டதும், உடனே எழுந்து பார்க்க… அழைப்பது ரிஷி என்றதும் அவனுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது.
ரிஷி அவனை அழைக்கிறான் என்றால் கண்டிப்பாக எதோ நடந்திருக்கிறது என அவனுக்குப் புரிந்தது. இல்லையென்றால் ரிஷி அதுவும் இந்நேரம் அவனை அழைக்க வாய்ப்பே இல்லை. அதனால் எடுத்ததும் வேறு எதையும் கேட்டு நேரத்தை வீணாக்காமல் “சொல்லுங்க ரிஷி?” என்றான்.
“சாதனாவிற்கு ரொம்ப ஜுரம். அவ கண்ணே திறக்கலை… அவளை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன். இதை நீங்களே ரெண்டு வீட்லயும் பக்குவமா சொல்லிடுங்க. நான் போய்ச் சாதனாவை பார்க்கணும்.”
“சீரியஸா எதுவும் இருக்காது இல்ல….”
[the_ad id=”6605″]
“தெரியலை… டாக்டர் இப்ப தான் அவளைப் பார்த்திட்டு இருக்காங்க. உடனே எதுவும் சொல்ல முடியாதுன்னு சொன்னாங்க.”
“ஒன்னும் இருக்காது. நானும் ப்ரீதாவும் உடனே கிளம்பி வரோம். அத்தை வந்தா அவங்களையும் கூடிட்டு வரேன்.”
“சரி நான் வச்சிடுறேன்.”
வெற்றியை தானே அழைத்துப் பேச வேண்டிய நிலை வரும் என்று ரிஷி நினைத்து கூட இருக்க மாட்டான். ஆனால் இன்று அதுதான் நடந்தது. உறவுகளுக்குள் நிரந்தரப் பகை என்று எப்போதும் கொள்ள முடியாது.
இரண்டு மணி நேரம் சென்றே மருத்துவர் ரிஷியை பார்க்க அழைத்தார்.
“ரிஷி அவங்களுக்கு வந்திருக்கிறது ஒரு வகையான தொற்று காய்ச்சல். அவங்க வெளியூர் எங்காவது போய் இருந்தாங்களா…”
“ஆமாம் பத்து நாள் முன்னாடி லண்டன் வந்திருந்தா… நாங்க திரும்ப நேத்து தான் அங்கிருந்து இங்க வந்தோம்.”
“ஓ… ரொம்ப முக்கியமா போக வேண்டியதா இருந்ததா…”
ரிஷி இதற்குப் பதில் சொல்லாமல்…. மௌனம் காக்க…
“இல்லை ஏன் கேட்கிறேன்னா… இந்த மாதிரி கர்ப்பமா இருக்கிற நேரத்தில அவாய்ட் பண்ணி இருக்கலாம்.”
“ஏன் டாக்டர் எதுவும் பிரச்சனையா?”
“இப்ப எதுவும் சொல்ல முடியாது ரிஷி. அவங்க கர்ப்பமா இருக்கிறதுனால அவங்களுக்கு ரொம்ப மைல்ட் டோஸ் மெடிசின்ஸ் தான் கொடுத்திருக்கோம். ஆனா இதுல அவங்க ஜுரம் கண்ட்ரோல் ஆகலைன்னா… பவர்புள் மெடிசன்ஸ் தான் கொடுக்கணும் வேற வழியில்லை… அது குழந்தையை எதுவும் பாதிக்காம இருக்கணும்.”
“குழந்தைக்கு என்ன ஆகும்?”
“குழந்தையோட உடல் வளர்ச்சிய பாதிக்கலாம். இல்லை மூளை வளர்ச்சியைக் கூடப் பாதிக்கலாம்.”
ரிஷிக்கு இதையெல்லாம் கேட்டதும் அதிர்ச்சியில் மயக்கம் வரும் போல் இருந்தது. அவன் அங்கிருந்த நீரை எடுத்து வேகமாகப் பருகினான்.
“ரிஷி, நான் அப்படித்தான் ஆகும்னு உறுதியா சொல்லலை… காய்ச்சல் குறைஞ்சிட்டா ஒன்னும் பயம் இல்லை… இன்னைக்கு நைட் வரை பார்க்கலாம்.”
“அவங்களுக்கு உடம்புல ரொம்ப நீர் சத்துக் குறைஞ்சிருக்கு. அதனால ட்ரிப்ஸ் போட்டிருக்கோம். நாம நல்லதையே நினைப்போம்.”
மருத்துவர் அறையில் இருந்து வெளியே வந்த ரிஷி, வெளியே இருந்தவாறு கதவில் பொருத்தியிருந்த கண்ணாடி வழியாக சாதனாவை ஒருமுறை பார்த்துவிட்டு, அந்த அறைக்கு வெளியே இருந்த இருக்கையிலேயே தளர்வாக உட்கார்ந்து கொண்டான். ரொம்பச் சோதனையான நேரம். இதைக் கடந்து தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை.
வெற்றி முதலில் விமானத்தில் செல்ல டிக்கெட் ஏற்பாடு செய்து விட்டுத்தான் ப்ரீதாவை எழுப்பினான். அவளிடம் விஷயத்தைச் சொன்னவன், இதை அவள் அம்மாவிடமும் சொல்லச்சொல்ல…. போனிலேயே இருவரும் ஒப்பாரி வைத்தனர்.
“இங்க பாரு இப்படி அழுது ரகளைப் பண்ணா…. நீங்க ரெண்டு பேரும் வர வேண்டாம். இங்கேயே இருங்க.”
அவன் பேசியது ஜோதிக்கும் கேட்க…. இருவரும் அழுகையை நிறுத்தி விட்டு கிளம்ப ஆரம்பித்தனர். காலை எட்டு மணிக்கெல்லாம் மருத்துவமனைக்கு வந்தும் விட்டனர்.
[the_ad id=”6605″]
அவர்கள் மருத்துவமனைக்கு வந்த போது… ரிஷி மிகவும் ஓய்ந்து போய் இருந்தான். இரவெல்லாம் அவன் கொஞ்சம் கூட உறங்கவில்லை…. அவனிடம் சாதனாவை பற்றி விசாரிக்க “சாதாரண ஜுரம் தான். சரி ஆகிடுவா…” என்றான்.
அவனுக்குத் தெரியாமல் ஜோதியும் ப்ரீதாவும் சென்று மருத்துவரை சந்திக்க… அவர் அவர்களிடம் உண்மையைச் சொல்லி விட… அதன்பிறகு ஜோதி ஆரம்பித்த புலம்பலை நிறுத்தவே இல்லை.
“உண்டாகி இருக்கும் போது யாரவது இப்படி ஊர் சுத்த போவாங்களா… இப்ப குழந்தைக்கு எதாவது ஒண்ணுன்னா யார் பொறுப்பு?”
“நல்லா சாப்பிட்டு நடக்க ஓட இருந்தா தான வயித்துல இருக்கிற குழந்தை ஆரோக்கியமா இருக்கும். இப்படி ஜுரமா படுத்து கிடந்தா… குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய சத்து கிடைக்குமா…”
“பெரியவங்க கிட்ட சொன்னா நாம எதாவது யோசனை சொல்லலாம். நம்மை மதிக்களைன்னா நாம என்ன பண்றது? இப்ப சாதாரணமா இருக்கிறவங்களுக்கே குழந்தை சில நேரம் பிரச்சனையோடத்தான் பிறக்குது. இங்க என்ன அகப்போகுதோ தெரியலையே….”
இவர்கள் தாங்கிக்கொள்ள என்று ஒரு அறை மருத்துவமனையில் ஒதுக்கி இருந்தனர். அங்கு உட்கார்ந்து தான் ஜோதி புலம்பிக்கொண்டு இருந்தார்.
அவர் புலம்புவதைக் கேட்டு வெற்றிக்கு கடுப்பாக இருந்தது. குழந்தையைப் பற்றித் தான் பேசுகிறாரே தவிர…. சாதனாவை பற்றி நினைக்கவே காணோமே என்று நினைத்தான். ரிஷி வேறு என்ன நினைக்கிறான் என்று அவன் முகத்தில் இருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை… அவன் இறுகி போய் உட்கார்ந்து இருந்தான்.
எப்படியும் சாதனாவிற்கு ஒன்றும் ஆகாது என்ற தைரியத்தில் தான் ஜோதி குழந்தையைப் பற்றி மட்டுமே புலம்பிக்கொண்டு இருந்தார். ஆனால் வெற்றியால் அதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை… தன் தங்கையின் நிலையைப் பார்த்து அவன் மிகவும் கவலை கொண்டு இருந்தான்.
மதியம் வரை சாதனாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவளுக்குக் காய்ச்சல் குறையவும் இல்லை….நினைவும் திரும்பவில்லை. அவளுக்கு எதுவும் ஆகி விடுமோ என ரிஷிக்கு மிகவும் பயமாகப் போய்விட்டது. அவன் மருத்துவரை சந்திக்கச் சென்றான்.
“டாக்டர் நீங்க அவளுக்கு வேற மருந்து கொடுங்க. குழந்தைக்கு எதாவது ஆகிட்டா கூடப் பரவாயில்லை… முதல்ல எனக்குச் சாதனா தான் முக்கியம். அவ எனக்கு நல்லபடியா திரும்ப வந்தாலே போதும்.” என்றான்.
“சாயங்காலம் வரை பார்க்கலாம் ரிஷி…”
“இல்லை ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம். எனக்குச் சாதனாவிற்கு எதுவும் ஆகிடுமோன்னு பயமா இருக்கு.”
“ஓகே ரிலாக்ஸ்…. நான் பார்த்துகிறேன்.” என்ற மருத்துவர் சாதனாவின் அறை நோக்கி சென்றார்.
அவனுமே அவளுக்கு ஜுரம் குறைந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தான். நேரம் செல்ல செல்ல… சாதனாவிற்கு எதுவும் ஆகிவிடுமோ என அவனுக்குப் பதட்டம் தொற்றிக் கொண்டது. அவள் இல்லாமல் தன்னால் இனி ஒரு நொடி கூட இருக்க முடியாது போன்ற தவிப்பு. அவள் கண் திறந்து அவனைப் பார்க்கும் அந்த நொடிக்காக அவன் கடவுளிடம் மிகவும் வேண்டினான்.
சில நேரம் காய்ச்சல் அதிகமாக இருப்பது கூடக் குழந்தையைப் பாதிக்கும் என்பதால்… இன்னும் கொஞ்சம் வீரியம் அதிக உள்ள மருந்துக்கள் சாதனாவிற்குக் கொடுக்கப்பட்டது. இருவேளை கொடுக்கத் தொடங்கியதுமே சாதனாவின் காய்ச்சல் பெருமளவு குறையத் தொடங்கியது. அதோடு அவள் கண்ணும் திறந்து விட எல்லோரும் சந்தோஷப்பட்டனர்.
காய்ச்சல் குறையத்தொடங்கியதும் அவளுக்குக் கொடுத்த மருந்துக்கள் நிறுத்தப்பட்டது. மறுநாள் அவள் சாதாரண வார்டுக்கு மாற்றப் பட்டாள்.
இனி எல்லாம் சரி ஆகிவிடும் என்று நினைத்தால்… அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
