Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 1

கள்ளி காட்டு காதலியே!…

அத்தியாயம் 1

        ஓசூர் நகரத்தில் தமிழ் மக்கள் கொஞ்சம் அதிகமாக வாழும் பகுதி அது… மாலை நான்கு மணி இருக்கும், தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு கீழ், தனது ஐந்து மாத வயிற்றை கையால் தாங்கிய படி மெல்ல நடந்து கொண்டிருந்தாள் பிரபாவதி.

        காலையிலே கணவன் உடன் ஒரு மோதல். மோதல் என்றால் இரு பக்கம் கிடையாது. ஒரு பக்கம் மட்டும் தான். அவனே சண்டை போட்டு, அவனே கத்தி , அவனே கோபம் கொண்டு என்று எல்லாம் கணவன் பக்கம் தான். இவள் சுத்த அமைதி. எதிர்த்து கூட பேச மாட்டாள். ஆனால், சாரல் போல கண்ணில் தூறல் மட்டும் நிற்காமல் விழும்.



Advertisement

     தப்பு அவன் பேரில் கூட கிடையாது. இவள் தான் அம்மா வீட்டை நினைத்து கொண்டு ஒடுங்கி போகிறாள். முழுதாக ஐந்து வருடத்தின் பின் கிடைத்த பொக்கிஷத்தை போற்றி பாதுகாக்காமல், கடந்ததை எண்ணி கலங்கி, உடல் நிலையை சீர் குழைப்பவள் மேல் கோபம் கொண்டு கத்த தான் செய்வான். பிரபா பதிலே சொல்ல மாட்டாள். மொத்தமும் அமைதியாகி போக, காற்றில் காட்டு கத்து கத்தி விட்டு வேலைக்கு செல்வான்.

   பிரபாவதியும் பாவம் தான். கர்ப்ப காலத்தில் தாயின் அரவணைப்பை நாடுகிறாள். அது கிட்டாமல் போக, மனதிலே வைத்து ஒடுங்கி போகிறாள். இவர்களது காதல் திருமணம். யாரின் ஆதரவும் இல்லாமல், மனம் மாற்றி கொண்டவர்கள் மட்டுமே ஒருத்தருக்கு ஒருத்தர் துணை என்று வாழ தொடங்கி விட்டார்கள்.

        எப்போது தாய்மை வரம் கிட்டியதோ அப்போது இருந்து வீட்டு நினைவு அதிகம் வாட்டியது பிரபாவை. வாய் திறந்து எதுவும் சொல்ல வில்லை. அவள் ஏக்கம், ஆசை எல்லாம் மனதோடு தான். இந்த ஜென்மத்தில் தாய் வீடு என்ற ஒன்று அவளுக்கு கிடையாது என்று நன்றாக தெரியும். ஆனாலும், மனம் பெற்றவர்களை எண்ணி வாட துவங்கியது.

Advertisement

    கணவனுக்கு இது எல்லாம் வீண் நினைப்பு என்ற எண்ணம் தான். ஆகாத, நிறைவேறாத ஒன்றிற்காக ஏங்கி வயிற்று பிள்ளைக்கு பாதிப்பை ஏன் கொடுக்க வேண்டும் என்பது தான் அவன் வாதம். அவளுக்கும் புரிய செய்கிறது, ஆனால் நினைப்பை மாற்ற முடியவில்லை.

Advertisement

        இவ்வளவு நாள் பொறுமையாக எடுத்து சொல்லியவன், இன்று கோப பட்டு கத்தி விட்டான். இவ்வளவு மன அழுத்தம் குழந்தைக்கு ஆகாது என்று டாக்டர் சொல்லி விட, குதித்து கொண்டு இருக்கிறான் கணவன்.

  அங்கிருக்கும் ஒரு மேடையில் மெல்ல அமர்ந்தாள் பிரபா. கொஞ்சம் தன்னை நிதானபடுத்தி கொண்டாள். தனக்கு மட்டுமா வருத்தம். கணவனும் அல்லவா அவன் குடும்பத்தை இழந்து தவிக்கிறான். அவனுக்கும் தன்னை போல அவன் வீட்டை நினைத்து ஏக்கம், ஆசை எல்லாம் இருக்கும் தானே. யாருக்காக எல்லாவற்றையும் உதறி போட்டான். இவள் ஒருத்திக்காக தான். அதுவும் அவனை இளவரசனாக தாங்கும் குடும்பத்தை தனக்காக விட்டு வந்தான்.

    நாம் இருவர் மட்டும் போதும் என்று தான் ஓடி வந்தது. இன்று வருந்தி ஒன்னும் ஆக போவதில்லை. பிள்ளை சுமப்பவளுக்கு கொஞ்சம் மன ஏக்கம். அவ்வளவு தான் வேற ஒன்றும் இல்லை. இனி கணவனை வருத்த கூடாது என்று நினைக்கும் போதே, அவளின் பின் பக்கம் ஒரு வண்டி சத்தம்.

Advertisement

      பிரபா முகத்தில் ஒரு முறுவல். இது அவள் கணவன் தான். விக்ரமன். அதாவது, ஜெய விக்ரமன். நல்ல வளர்த்தி, தென் தமிழக நிறம், அடர்ந்த முடி, கட்டை மிசையோடு கொஞ்சம் தாடி எப்போதும் இருக்கும். நீல வண்ண சட்டையில் வந்து இறங்கினான். இந்த சட்டை அவளுக்கு எப்போதும் ஸ்பெஷல். இவர்களின் முதல் சந்திப்பின் போது விக்ரமன் அணிந்த உடையின் நிறம் அது தான்.

         பிரபாவதிக்கு முகம் மலர்ந்தது. தன்னை நோக்கி வரும் கணவனை திரும்பி பார்த்தாள்.

           பிரபாவதி வசித்த சொந்த ஊர், ஒரு மலையோர குக்கிராமம். ஒரு முன்னூறு வீடுகள் இருக்கும். இவர்கள் ஊர் தான் கடைசி. அதன் பின் மூன்று பக்கமும் மலை தான். கிணற்று நீர் பாசனம் என்பதால் விவசாயம் செழித்து எல்லாம் இல்லை. அதனால் பிரதான தொழில் பனை ஏறுவது தான். அத்தோடு ஆடு, மாடு வளர்ப்பு தான் இவர்கள் ஊர் மக்களின் முக்கிய தொழில். கொஞ்சம் படித்த மக்கள் வெளியூர் வேலைக்கு சென்று விட, சொந்த மண்ணை நேசிக்கும் சிலர் மட்டும் தான் அங்கு வாழ்கிறார்கள். ஊர் கோவில், திருவிழா என்றால் மட்டும் சொந்த ஊர் வாசம் வீசும்.

    அதுவும் அந்த தெக்கத்தி பகுதியில் பிரபாவதி ஊர் தான் கடைசி எல்லை. அதை தாண்டி மூன்று பக்கமும் மலை சூழ்ந்து நிற்கும். அங்கு கள்ளி செடி ஒரு எட்டுக்கு ஒன்று என்ற அளவில் குவிந்து கிடப்பதால். மலையூத்து என்ற அவர்களின் கிராமம் கள்ளி காடு என்று தான் சுற்று வட்டார மக்கள் அழைப்பார்கள்.

   மெயின் ரோட்டில் இருந்து ஒத்தையடி பாதையில் நான்கு கிலோமீட்டர் தள்ளி போக வேண்டும் கள்ளி காட்டுக்கு. காலை ஆறு மணிக்கு மட்டும் கள்ளி காட்டு ஸ்டாப்க்கு ஒரு பஸ் வரும், அதை பிடிக்க தான் பிரபா வேகமாக கிளம்பினாள். வீட்டிற்க்கு மூத்த மகள், அவளுக்கு பின் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தம்பி வீர பிரபாகரன் இருக்கிறான்.

    தந்தை தமிழ் செல்வன் ஓய்வு பெற்ற இராணுவ வீரர். அந்த ஊரில் மதிப்பும், மரியாதையும் மிக்கவர். பத்தாவது முடித்த உடன் இரண்டு வருடம் வீட்டில் வைத்து சொந்தத்தில் இருக்கும் மாப்பிள்ளைக்கு கட்டி கொடுக்கும் தன் கிராம மக்களின் வழக்கத்தை எதிர்த்து, பெண் பிள்ளைகளை படிக்க வைக்க போராடியவர், போராடி கொண்டும் இருப்பவர். நல்ல சமூக சிந்தனை கொண்டவர்.

   ஆனால், அவருக்கு எதிர் பதம் தான் அவரது மனைவி கலை செல்வி. ஊரே வந்து பார் என்று நிற்கும் ரகம். பன்னிரண்டாவது முடித்த உடன், தன் சொந்த அண்ணன் மகனுக்கு பிரபாவை முடிக்க வேண்டும் என்று மல்லு கட்டியவரை, தமிழ் செல்வன் தான் சண்டை போட்டு கல்லூரி படிக்க அனுப்பி வைத்தார்.

   அதற்கும் கலை செல்வி முனங்கி கொண்டே, தன் சொந்த பந்தம் எல்லாம் இருக்கும் ஊரான விருதுநகர் தாண்டி இருக்கும் ஒரு கல்லூரியில் தான் படிக்க அனுமதித்தார். இளநிலை கணிதம் தான் பிரபாவதி படித்தது. மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கை தேனாக தான் இனித்தது. அதை தொடர்ந்து ஆசிரிய பயிற்சி இரண்டு வருடம் படிக்க ஆசை என்று பிரபா கூறிய போது கூட சந்தோசமாக அதே கல்லூரியில் படிக்க வைத்தார் தமிழ் செல்வன். கலை செல்வி கத்தியது எல்லாம் காற்றோடு தான் போனது.

   அந்த ஆறு மணி பஸ்ஸில் மட்டும் பிரபா ஏறாமல் இருந்திருந்தால், அவள் வாழ்க்கையே வேற மாதிரி தான் அமைந்து இருக்கும். இவர்கள் ஊரில் இருந்து எடுக்கும் பஸ் தான், தாமதமாக பிரபா ஓடி வந்து ஏற, சீட் கிடைக்க வில்லை. கூட்டமும் அதிகமாக இருந்தது.

   தன்னையே நொந்து கொண்டாள் பிரபா. முதல் நாள் கல்லூரி என்று தலைக்கு குளித்து செல்ல, நேரம் ஓடி விட்டது. திங்கள் கிழமை காலை என்பதால் அடுத்தடுத்து கூட்டம் அல்லும். ஐயோ! விருதுநகர் தாண்டி, சிவகாசி போகும் பஸ் பிடித்து பாதியில் இறங்க வேண்டும். எப்படியும் மூன்று மணி நேரம் ஆகும். முதல் நாள் என்பதால் சலுகை உண்டு தான். ஆனாலும், சேலை கட்டி வேறு செல்ல வேண்டும். அதற்கும் சீனியர் அக்காக்களை தாஜா செய்து, சேலையை ஒழுங்காக கட்டி, கல்லூரி செல்ல எவ்வளவு நேரம் ஆகும்.

    அடுத்தடுத்து செய்ய வேண்டியதை நினைக்கையிலே சோர்வாக இருந்தது. அதிலும் உட்கார இடமும் இல்லை, புத்தக பை, துணி பை, தின்பண்ட பை என்று மூன்றையும் பாதுகாப்பாக எடுத்து வேறு செல்ல வேண்டும்.

   அப்பா அப்பவே சொன்னார் நான் கொண்டு போய் விடுகிறேன் பாப்பா என்று, எங்கே கேட்டாள். அது எங்க காலேஜ், எனக்கு எல்லாம் தெரியும் என்று பகுமானமாக ஓடி வந்தாள். இன்று கூட்டத்தில் மாட்டி கொண்டாள்.

    குளத்துகரை ஸ்டாப் என்று அடுத்த சத்தம் கேட்க. பிரபா மனம் அலறியது. இது பெரிய ஊர். அங்கு இருந்து ஒரு படையே ஏறும். பள்ளி, கல்லூரி, கட்டிட வேலை, கடை வேலை என்று ஒரு கூட்டம் ஏற, நசுங்கி போனாள். ரெகுலராக ஏறும் மக்கள் அடித்து பிடித்து முன்னே செல்ல, பிரபா எளிதாக பின்னே வந்து விட்டாள்.

   அந்த பக்கம் ஆண்கள் கூட்டம் அலைமோதி நிற்க, ஒற்றை கம்பியை பிடியாக பிடித்து கொண்டாள். பஸ் நகர கொஞ்சம் காத்து வந்தது, இல்லையென்றால் இவள் மயக்கம் தான். ஒரு பக்கம் பாட்டு அலற, ஒரு பக்கம் பசங்க சத்தம் என்று படு எரிச்சல் தான் பிரபாவதிக்கு. எப்போதடா டவுனுக்கு போவோம் என்று இருந்தது.

    அந்த கம்பியில் சாய்ந்து பிரபா கண் மூட, கூட்ட நெரிசலில் ஒரு கை அவளின் இடுப்பு பகுதியில் மெல்ல வர, பயந்து போய் திரும்பி பார்த்தாள். நல்ல கூட்டம் யாரையும் சொல்ல முடியாது. கொஞ்சம் முன்னே நகர்ந்து நிக்க, மீண்டும் அதே உரசல். பிரபாக்கு அந்த பக்கம் ஒரு ஆண் நிற்க, பரவாயில்லை என்று அந்த ஆளை ஒட்டி நின்று கொண்டாள்.

    கொஞ்சம் நகர்ந்தது மீண்டும் அதே கை வர, பிடித்து கொண்டான் பிரபா அருகில் நின்றவன். நல்ல வாட்ட சாட்டமாக நின்றவனை கண்டு, அந்த சில்மிஷ ஆசாமி பயந்து பின் வாங்க.

  “எந்த ஊர் நீ?…” என்று வளர்ந்து நின்றவன் கேட்க.

    அவன் கொஞ்சம் தயங்கினான்.

   “மாப்பிள்ளை, இவன் மோட்டார் வேலை பாக்குறவன். நம்ம ஊர் பக்கம் கிடையாது. டவுனுக்காரன்னு நினைக்கிறேன்…” எடுத்து கொடுத்தான் மதன்.

  “அது தான் மச்சான் நம்ம ஊர் பிள்ளைகளை சீண்டி பாக்குறான். டவுனு வரட்டும் இவனுக்கு இருக்கு…” என்று கையை லேசாக முறுக்கி விட்டான் ஜெய விக்ரமன்.

   அத்தோடு விடாது பிரபாவை பார்த்து, “நீ முன்ன நில்லுமா, நாங்க தள்ளி நிக்குரோம்…” என்று விக்ரம் நகர்ந்து விட,

   “தாங்ஸ்…” என்று நகர்ந்து நின்றாள் பிரபா.

    அப்போது தான் விக்ரம் அவள் முகத்தை சற்று ஊன்றி கவனித்தான். எங்கும் பார்த்த அடையாளம் தெரியாமல் போக, நகர்ந்து கொண்டவன்.

 “மச்சான் யாரு இந்த புள்ளை. நம்ம பிள்ளையா? பார்த்த மாதிரி தெரியலையே?…” என்று யோசனையாக விக்ரம் கேட்க.

  “இல்லை மாப்பிள்ளை. இந்த புள்ளை கள்ளி காடு…” மெல்லிய குரலில் மதன் சொல்ல,

   “ஓ…” கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து, அசட்டையான குரலில் முடித்து கொண்டான் விக்ரமன்.

   முன் பக்கம் நின்று இருந்த பிரபாவதிக்கு இவர்கள் பேச்சு தெளிவாக விழுந்தது. அதுவும், அவன் ஓ… சொல்லிய விதத்தில் இவளுக்கு அவன் மேல் இருந்த நல்ல அபிப்பிராயம் கலைந்து போனது.

    அடுத்தடுத்து மக்கள் ஏற கூட்டம் இன்னும் அதிகமாக. திரும்பவும் அந்த ஆசாமி பிரபாவை நெருங்கி நிற்க, இப்போது துணிந்து கொண்டாள். ஆள் நடமாட்டம் இல்லாமல் தனியாக இருந்தால் ஒதுங்கி போவது தான் பாதுகாப்பு. சுற்றி இத்தனை பேர் இருக்கையில் துணிந்து நின்றால் தான் என்ன?…

  நன்றாக திரும்பி நின்றவள், “என்ன வேணும் உங்களுக்கு?…” என்று நேர்கொண்டு கேட்டாள். சத்தம் அதிகமாக, மற்றவர்களுக்கு கேட்கும் படி தான் கேட்டாள்.

    அவள் நினைத்தது போல பலர் திரும்பி பார்க்க, திணறினான் அந்த ஆள்.

  “என்ன… எனக்கு என்ன வேண்டும்?…” தடுமாற்றம் அவன் குரலில்.

  “நான் போட்டு இருக்குற சுடிதார் உங்களுக்கு புடிச்சு இருக்கா?…” பார்வை கொஞ்சமும் தளரவில்லை.

   “இல்லையே…” பயந்து போனான் அவன்.

  “அப்போ ஏன் அப்ப இருந்து என் சுடிதாரையே தொட்டு பார்த்துட்டு இருக்கீங்க…” அசராமல் பிரபா கேட்க, மற்றவர்கள் புரிந்து கொண்டார்கள்.

  பஸ் நின்று விட, யார் நீ? எங்க போற? என்று ஆளாளுக்கு அவனை கேள்வி கேட்க.

     “என்னமா? என்ன பிரச்சனை? நீ மிலிட்டரிகாரன் மவ தான? என்று ஒருவர் கேட்க.

    தெரிந்த முகமாக இருக்கவும், நடந்ததை சொல்லி விட்டாள் பிரபா.

   அடுத்து என்ன, அவனை பிரித்து மேய்ந்து, பாதி வழியிலே இறக்கி விட்டார்கள். நிமிர்ந்து கொண்ட பிரபாவதி, விக்ரமை பார்த்து நன்றாக முறைத்து விட்டு, வெடுக்கென்று கழுத்தை திருப்பி கொண்டாள்.

   “அட! இந்த புள்ளை ஏன் மச்சான் நம்மளை பார்த்து முகம் திருப்புது…” என்று புரியாமல் பார்த்தான் விக்ரம்.

    பிரபாக்கு பயங்கர கோபம். யார் என்று தெரியாத போது உதவி செய்தான். இந்த ஊர் என்று தெரிந்த பின் ஒதுங்கி கொண்டானே… அவ்வளவு இளக்காரமா?….

    டவுனில் பஸ் நிற்க, அவசரமாக மக்கள் இறங்கி அவரவர் வேலையை பார்க்க ஓடினார்கள்.

   விக்ரமும் இறங்கி நடக்க, “ஒரு நிமிசம்…” என்றாள் பிரபாவதி.

   திரும்பி பார்க்க, “ஒரு பொண்ணுக்கு ஆபத்துன்னா உதவி செய்ங்க அது தப்பில்லை. ஆனா, யாரு, எந்த ஊருன்னு பார்த்து உதவி செய்யாதீங்க. அது தப்பு, அத்தோட அசிங்கம்…” என்றவளை அதிர்ந்து பார்த்தவன்,

  “இந்தாம்மா என்ன சொல்ற?…” என்றான் புரியாமல்.

  “நான் உங்க ஊரு பொண்ணுன்னு உதவி செய்ய கிட்ட வந்தீங்க. இதுவே நான் அசலூர்ன்னு தெரியவும் ஒதுங்கி போனீங்க தான…” என்றவள், அவன் கையில் வைத்திருந்த புத்தகத்தை பார்த்து,

  “சிந்தனையும், செயலும் பொதுவானத, சமூகம் சார்ந்ததா இருக்காங்க தான் மக்களுக்கு சேவை செய்ய தகுந்தவங்க. அது நீங்க இல்லை…” முகத்திற்கு நேர சொல்லி விட்டு, வேகமாக கடந்து போய் விருதுநகர் பஸ்ஸில் ஏறி கொண்டாள்.

    காற்றோட்டமான நல்ல இடம் கிடைக்க, மனம் கொஞ்சம் அமைதியாக இருந்தது. தற்போது பிரபா யோசிக்கையில் தேவையில்லாத வம்போ என்று நினைத்தாள். அதுவும் கலை செல்வி சொன்ன வார்த்தை,

   “இங்க பாருடி, நான் சொல்ல சொல்ல கேட்காம உங்க அப்பரு தான் மேல படிக்க வைக்கிறாங்க. அந்த மனுசனுக்கு ஒத்த வார்த்தை வரும்படி நடக்க கூடாது. ஏதாவது, வம்பு அது இதுன்னா என்னால வந்து பஞ்சாயத்து பண்ண முடியாது. உம் முதுகு தோலை தான் உறிச்சு புடுவேன் பார்த்துக்க. படிச்சா, படிச்ச மாப்பிள்ளை. இல்லையா உம் மாமா வீட்டுக்கு போ…” என்று தீர்க்கமாக சொல்லி தான் பிரபாவை படிக்க அனுப்பி வைத்தது.

   இதையெல்லாம் நினைக்கும் போது ஒதுங்கி போயிருக்கலாம் என்று தான் அவள் நினைத்தாள். அதன் பின் ஒரு நாளும் ஆறு மணி பஸ்ஸில் அவள் ஏற வில்லை.

   வெள்ளி கிழமை மாலையிலும் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் சனிக்கிழமை காலையில் வீட்டுக்கு கிளம்பி செல்பவள். அதே போல ஞாயிறு மதியம் கிளம்பி விடுவாள். ஒரு நாள் சேர்த்து இருக்க ஆசை பட்டு, ஒன்பது தொல்லை எதற்கு?…

   ஆனால், அங்கோ ஆறு மணி பஸ்ஸில் தினமும் அவளை தேடி கொண்டு இருந்தான் விக்ரம்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!