Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Meendum Vikramaathithyan

Vijay’s MV – Chapter 09

செழியன் மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தார்.

 

சத்தம் கேட்டுப் பட்டியும் அங்கு வந்து சேர்ந்தான். கலங்கியிருந்த விஷாலியையும் செழியன் கையில் இருந்த மோதிரத்தையும் பார்த்து அவன் அங்கு நடந்ததை ஊகித்துக்கொண்டான். தலையை மெள்ள ஆட்டினான்.

 



Advertisement

விஷாலி பழையபடி ஆசுவாசமாகி எழுந்து நன்றாக அமர்ந்துகொண்டாள். தேவியும் அவளுக்கு அருகிலேயே அவளது தோளை இலேசாய்ப் பிடித்தபடி அமர்ந்துகொண்டாள்.

 

அனைவரது கவனமும் செழியனின் மீது திரும்பின.

Advertisement

 

Advertisement

“உஜ்ஜைனி மாகாளி விக்ரமாதித்யரோட குல தெய்வம். இஷ்ட தெய்வமும் அதுதான். விக்ரமாதித்யரோட சக்தி வெற்றி எல்லாத்துக்கும் மூல காரணம் அவரோட காளி உபாசனைதான். அதனால அவரோட வாள் உஜ்ஜைனி காளி கோயில்ல இருக்குங்குறதுல எந்த வியப்பும் இல்ல! சிக்கல் என்னன்னா அந்தக் காளி கோயில் எங்க இருக்குன்றதுதான்!”

 

“என்ன சார், வாள் எங்க இருக்குனு விஷாலிக்குத் தெரியும்னு சொன்னீங்க, அவ ’காளி கோயில்’னா, இப்ப காளி கோயில் எங்க இருக்குனு புதுசா கேக்குறீங்க?!”

Advertisement

 

அருண் அலுப்போடு சொன்னான்.

 

“உங்க அலுப்பு எனக்குப் புரியுது அருண். ஆனா, நாம ஈடுபட்டிருக்கிறது சாதாரண விஷயமில்லனு உங்களுக்கும் புரியும்னு நினைக்குறேன்! நான் மித்திகல் ஆர்க்கியாலஜிக்குள்ள நுழைஞ்ச காலத்துல எடுத்துக்கிட்ட ஆராய்ச்சிகள்ல விக்ரமாதித்யர் பத்தின ஆராய்ச்சியும் ஒன்னு, ஆனா, என்னால அதுல அதிகம் எதுவும் தெரிஞ்சுக்க முடியல, கிட்டத்தட்ட நானும் விக்ரமாதித்யர் வெறும் கற்பனைதான்ற முடிவுக்கு வந்தேன்…”

 

“சரி, உஜ்ஜைனில எத்தன காளி கோயில்கள் இருக்கும்? அதுல இதுதான் விக்ரமாதித்யர் வழிபட்ட கோயில்ன்னு நம்மால ஊகிக்க முடியாதா?”

 

விக்ரம் சிந்தனையுடன் கேட்டான். செழியன் ஒரு மெல்லிய புன்னகை செய்தார்.

 

”என்ன செழியன் சார் சிரிக்குறீங்க?” விக்ரம் தனது வலது புருவத்தை மட்டும் உயர்த்தினான்.

 

“நீதான் விக்ரமாதித்யர்னு நம்புறோம், ஆனா நீயே ஊகிக்க முடியாதான்னு கேக்குற… அதான்!”

 

“அதான!” தேவியும் மெல்லிய புன்னகையோடு சொன்னாள்.

 

விக்ரமின் முகத்தில் சட்டென ஒரு மின்னல் வெட்டியது. அவன் பட்டியைத் திரும்பிப் பார்த்தான்.

 

“பட்டி… எனக்குத்தான் எதுவும் தெரியல, ஆனா, நான்தான் விக்ரமாதித்யர்னு சொன்னதே நீதான? உனக்குத் தெரிஞ்சிருக்குமே…?”

 

எல்லோரின் பார்வையும் சட்டெனப் பட்டியின் மீது விழுந்தன. பட்டியின் முகத்தில் ஒரு மெல்லிய கலக்கம் தெரிந்தது. சற்றுத் திணறலுடன் பேசினான்.

 

“அ- அது வந்துண்ணா… எ- எனக்கும் கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடிதான் நான்தான் பட்டினு தெரிஞ்சுது… இந்த மோதிரம் எனக்கு கி- கீழ கெடச்சுது, அதத் தொட்டவுடனே இப்ப உங்களுக்கு ஆகுறா மாதிரி எனக்கும் ஆச்சு… மண்டைலாம் கனமா, கண்ணுக்குள்ள படபடனு என்னென்னவோ காட்சிலாம் வந்து… மெல்ல மெல்லத்தான் என்னால அந்த மோதிரத்தக் கைல பிடிக்க முடிஞ்சுது…”

 

பட்டியின் மூச்சு வேகம் சற்று அதிகரித்திருந்தது. அவன் சற்று இடைவெளிவிட்டு மூச்சு வாங்கிக்கொண்டு தொடர்ந்தான்,

 

”அ- அப்புறம் எனக்குக் க- கனவு வர ஆரம்பிச்சுது… கனவுல நான் க- காளி முன்னாடி நிப்பேன், காளி என்கிட்ட பேசுறா மாதிரி வரும்… கொஞ்சம் கொஞ்சமாத்தான் எனக்கு எல்லாம் புரிய ஆரம்பிச்சுது… விக்ரமாதித்யர- உங்களத் தேடனும்னு புரிஞ்சுது…”

 

பட்டி விக்ரமைப் பரிதாபமாகப் பார்த்தான். விக்ரமிற்கு அவன் மீது இரக்கம் தோன்றியது.

 

“பட்டிக்கும் உஜ்ஜைனி பத்திச் சரியாத் தெரியாது அப்ப?”

 

விக்ரம் “அடுத்து என்ன” என்பதைப் போலச் செழியனைப் பார்த்தான்.

 

”அப்ப ஒரே வழி நீதான் விக்ரம்!”

 

செழியன் உறுதியாகச் சொன்னார்.

 

“நானா?”

 

விக்ரம் வியப்போடு கேட்டான்.

 

“நீதான விக்ரமாதித்யர்?”

 

“இருக்கலாம், ஆனா எனக்கும்தான் ஒன்னும் தெரியலயே!”

 

விக்ரம் சற்றே எரிச்சலோடு சொன்னான்.

 

“உண்மைதான், இப்போதைக்கு உனக்கு எதுவும் தெரியல, ஆனா நீ தெரிஞ்சுக்கலாம்… இதோ-”

 

செழியன் விக்ரமின் முன் அந்த மோதிரத்தை நீட்டினார்.

 

விக்ரம் அதை வாங்காமல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

விஷாலி அதைச் சற்று அச்சத்தோடு பார்த்தாள்.

 

தேவி சட்டென எழுந்து அந்த மோதிரத்தை வாங்கினாள்.

 

அதைத் தொட்ட நொடி அவளுக்குள்ளும் காட்சி மின்னல்கள் வெட்டின.

 

நந்தவனமும், அரண்மனையும், காளிகோயிலும், மந்திரகூடமும், போர்க்களமும்… ஆயிரமாயிரம் காட்சிகள் அவள் மனக்கண்ணில் சடசடவெனத் தோன்றி மறைந்தன.

 

ஆனால், தேவி மயங்கவில்லை. சற்றே நிலைகுலைந்தவள் இடது கையை இருக்கையில் ஊன்றிச் சுதாரித்துக்கொண்டு அமர்ந்தாள். மோதிரம் அவளது கையிலிருந்து நழுவியது.

 

“தேவீ…” விக்ரம் பரபரப்புடன் எழுந்து அவளுக்கருகில் சென்றான்.

 

அவளுக்கருகிலேயே இருந்த விஷாலி அவள் நிலைகுலைந்தபோது சட்டென அவளைப் பிடித்துக்கொண்டாள்.

 

மற்றவர்களும் பரபரப்புடன் எழுந்துகொண்டனர்.

 

“ஒ- ஒன்னுமில்ல… சட்டுனு எழுந்து நின்னதுல தல சுத்திடுச்சு!”

 

தேவி மெல்ல இயல்பானாள்.

 

”அந்த மோதிரம் உன்னையும் படுத்துதா?”

 

விக்ரம் வாஞ்சையுடன் கேட்டான். அவனது குரலில் கவலையும் குழப்பமும் கூட இருந்தன.

 

”இ- இல்ல… அப்படிலாம் ஒன்னுமில்ல…”

 

தேவி அவர்களைச் சமாளிக்க முயன்றாள். அவளால் இயலவில்லை.

 

“சும்மா சொல்லாத! காம்பேட் (combat) டிரைனிங் எடுத்தவ நீ, உனக்குச் சட்டுனு எழுந்தா தலைசுத்துமா?”

 

விஷாலியின் குரலில் கிண்டல் இருந்தாலும் கூடவே கவலையும் தொனித்தது.

 

“சரி… ஒத்துக்குறேன்… அந்த மோதிரத்தைத் தொட்டா எனக்கும் உள்ளுக்குள்ள என்னவோ பண்ணுது… போதுமா?”

 

தேவியிடம் குழப்பமும் வியப்பும் இலேசான எரிச்சலும் கலந்திருந்தன.

 

”ஐய்யா… அப்ப நீயும் விக்ரமாதித்யரோட தொடர்புடையவள்தான்…”

 

விஷாலி குறும்பும் மகிழ்வும் கலந்து குதித்தாள்.

 

தேவி அவளைப் புன்னகையுடன் பார்த்தாள்.

 

அருண் சட்டெனக் குனிந்து கீழே கிடந்த மோதிரத்தை எடுத்து தனது உள்ளங்கையில் வைத்து அழுத்தி மூடிக்கொண்டான். ஒன்றும் நிகழவில்லை.

 

“என்னப்பா என்னை மட்டும் ஆட்டத்துல சேர்த்துக்குமா விட்டுட்டீங்க?”

 

அவனது குரலில் கிண்டல் இருந்தாலும் உண்மையான ஒரு ஏமாற்றமும் இலேசாய் இருந்தது.

 

“ஹ்ம்ம்ம்…”

 

செழியனின் பெருமூச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

 

“விக்ரம் நீ அந்த மோதிரத்தை உன் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்தே ஆகனும்… நாம முதல்ல அந்த வேலைல ஈடுபடுவோம்… நீ வெறும் விக்ரமா இருந்தா நாம தொடர்ந்து முன்னேற்றம் அடையுறது கஷ்டம்!”

 

செழியன் பேசிக்கொண்டிருக்கும்போதே “சர்ர்ர்ர்ர்க்க்க்க்” என்று ஒரு குறுவாள் பாய்ந்து வந்து அவர்கள் முன் மேசையில் குத்தி நின்றது.

 

அவர்களது கவனம் அந்தக் குறுவாள் வந்த திசையை நோக்கித் திரும்ப அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை உறைய வைத்தது!

 

என்ன நடக்கிறது என்று அவர்கள் உணருமுன் அவர்களது வீட்டிற்குள் சடசடவென நாற்பது ஐம்பது வீரர்கள் நுழைந்தனர்.

 

அந்த வீரர்கள் அனைவரும் முழுக்க கறுப்பு உடை அணிந்திருந்தனர். முகத்தையும் கறுப்பு முகமூடியால் மறைத்திருந்தனர். அவர்கள் மார்பில் கறுப்பு உலோகக் கவசம் இருந்தது. அதன் நடுவில் நீண்ட குதிரை முகச்சின்னம் இருந்தது. சிலரது கையில் வாளும், சிலர் கையில் ஈட்டியும், சிலர் கையில் வில்லம்பும் இருந்தன.

 

“சகவீரர்கள்!” பட்டி அலறினான், அவனது குரலில் அச்சமும் வியப்பும் கலந்திருந்தது.

 

தேவிதான் அதிர்ச்சியிலிருந்து முதலில் மீண்டாள். சட்டென ஓடிச் சென்று எகிறி முன்னால் வந்த வீரனின் மார்பில் உதைத்தாள், அவன் அப்படியே கீழே சரிந்தான், தேவி சட்டென அவனது கையில் இருந்த ஈட்டியை எடுத்துக்கொண்டு அடுத்த வீரனைத் தாக்கத் தயாரானாள்.

 

மற்றவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். விக்ரம் சட்டென நினைவு வந்து விஷாலியைத் தனக்குப் பின்னால் நிறுத்திக்கொண்டான்.

 

அதைப் பார்த்தவுடன் அருணும் அவர்கள் அருகில் வந்து நின்று கொண்டான்.

 

செழியனும் பட்டியும் வரும் வீரர்களைப் பார்த்தபடியே பின்வாங்கி நடந்து அவர்களுக்கு அருகில் வந்தனர்.

 

இதற்குள் தேவி ஈட்டியால் மேலும் இரண்டு வீரர்களைத் தாக்கி முன்னேறி வீட்டின் வாசல்வரை சென்றிருந்தாள். உள்ளே வந்த வீரர்கள் வட்டமாகப் பரவி நகர்ந்தனர்.

 

தேவி மேலும் ஒரு வாள்வீரனைத் தன் கையில் இருந்த ஈட்டியால் குத்தியபடியே வாசலுக்கருகில் மயங்கிக் கிடந்த காவலரின் கையிலிருந்த துப்பாக்கியைத் தேடிக் கண்களைச் செலுத்தினாள்.

 

ஒருவழியாக அவள் சண்டையிட்ட வீரனைக் கொன்று வீழ்த்திவிட்டு ஓடிச்சென்று காவலரின் துப்பாக்கியை எடுத்தாள்.

 

அவள் துப்பாக்கியின் பாதுகாப்புப் பூட்டை நீக்கிக்கொண்டு சுடத் தயாராய் நிமிர்ந்தபோது உள்ளே முன்னேறியிருந்த வீரர்களின் வட்டம் விக்ரம் குழுவைச் சுற்றி வளைத்திருந்தனர்.

 

அது இலகுரக தானியங்கித் துப்பாக்கி (LMG – Light Machine Gun). எனவே, விக்ரம் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீது குண்டு பட்டுவிடாமல் இருக்க தேவி நிதானமாகத் தன்னை நிறுத்திக்கொண்டு அவர்களை நெருங்கும் வீரர்களின் வட்டத்தின் நடுவே சுடாமல் விளிம்பை நோக்கி…

 

“டட்-டட்-டட்-டட்-டட்-டட்-டட்…”

 

துப்பாக்கியின் வெடிப்பும் குண்டின் உறைத் தெரிப்பும் புகையும் வந்தனவே தவிர எதிரே இருந்த வீரர்களின் வட்டத்திற்கு ஒன்றும் ஆகவில்லை!

 

தேவி குழப்பத்தில் ஆழ்ந்தாள். சுடுவதை நிறுத்திவிட்டு அந்த வீரர்களையே உற்றுப் பார்த்தாள்.

 

அவள் சுட்டதற்கான அடையாளம் எதுவுமே அவர்களிடம் இல்லை!

 

சட்டென நினைவு வந்தவளாய் அவள் அருகே கிடந்த அவள் அடித்து வீழ்த்திய வீரர்களைப் பார்த்தாள்.

 

உடனே ஏதோ புரிந்தது அவளுக்கு, தனது கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு அருகில் கிடந்த ஈட்டியை மீண்டும் எடுத்துக்கொண்டு அந்த வீரர்களை நோக்கி நகர்ந்தாள்.

 

இதற்குள் அந்த வீரர்களின் வட்டம் விக்ரமையும் மற்றவர்களையும் நெருங்கியிருந்தனர்.

 

அவர்கள் மேலும் ஒருவரோடு ஒருவர் நெருங்கி நின்றுகொண்டனர்.

 

நெருங்கி வரும் வீரர்களின் வட்டத்திலிருந்து ஒருவன் சட்டெனத் தனது ஈட்டியை நீட்டியபடி விக்ரமைக் குறிவைத்து முன்னால் ஓடி வந்தான்.

 

விக்ரம் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்ததால் அவனை முதலில் கவனிக்கவில்லை.

 

ஆனால் அவர்களை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த தேவியும், விக்ரமிற்குப் பின்னால் இருந்த விஷாலியும் முன்னால் நெருங்கியவனைக் கவனித்தனர்.

 

“விக்க்க்ரம்ம்ம்ம்ம்…”

 

“அண்ண்ண்ணாஆஆ…”

 

இருவரும் ஒருசேரக் கத்த விக்ரம் அப்போதுதான் அவனைக் கவனித்தான், அதற்குள் அவன் மூன்றடி தொலைவில் நெருங்கியிருந்தான், தனது ஈட்டியைப் பின் வாங்கி வேகமாய் விக்ரமை நோக்கிக் குத்தினான்…

 

என்ன நடந்தது என்று அவர்கள் உணர்வதற்குள் அந்த ஈட்டி வீரன் பின்னால் எகிறி நெருங்கி வந்த வீரர்களின் மீது விழுந்தான். அவனது ஈட்டி விக்ரமின் கையில் இருந்தது.

 

விக்ரம் அந்த ஈட்டியைச் சுழற்றிச் சரியானபடி பிடித்துக்கொண்டு உறுதியுடன் நின்றான். அவனது முகத்தில் ஒருவிதக் கிளர்ச்சியும் ஆவேசமும் இருந்தன.

 

கீழே விழுந்த வீரனும், அவனால் தடுமாறிய வீரர்களும் சுதாரித்து எழுந்து நிற்பதற்குள் விக்ரம் அவர்கள் மீது பாய்ந்தான். அவர்கள் எதிர்த் தாக்குதல் செய்வதற்குள் விக்ரம் கையில் இருந்த ஈட்டி ஐந்து பேரைக் கொன்றுவிட்டிருந்தது.

 

அதற்குள் தேவியும் அவர்களை நெருங்கிப் பின்னாலிருந்து தாக்கினாள்.

 

அதுவரை வட்ட அணிவகுப்பைக் கச்சிதமாகக் கடைபிடித்த அந்த வீரர்கள் இந்த எதிர்பாராத தாக்குதல்களால் தங்கள் அணிவகுப்பைக் கைவிட்டு இவர்கள் இருவரையும் சூழ்ந்துகொண்டனர்.

 

தேவி தனது பயிற்சியின் காரணமாக நன்றாகப் போராடினாலும் மெள்ள மெள்ளச் சோர்வடைந்து கொண்டே வந்தாள்.

 

ஆனால், விக்ரம் சற்றும் சளைப்பவனாகத் தெரியவில்லை. போர்க்களத்திலேயே பிறந்து வளர்ந்தவனைப் போல இலாவகத்துடன் ஈட்டியைச் சுழற்றிச் சண்டைபோட்டான். அடுத்தடுத்து அவனது ஈட்டிக்குப் பலியாகி அந்த வீரர்கள் வீழ்ந்துகொண்டிருந்தனர்.

 

செழியன், பட்டி, அருண் ஆகியவர்களும் கீழே கிடந்த வீரர்களின் வாள் ஈட்டி முதலியவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு விஷாலியைச் சுற்றி நின்றுகொண்டனர். அவ்வபோது அவர்களை நோக்கி வந்த ஒன்றிரண்டு வீரர்களை அவர்கள் கஷ்டப்பட்டுப் போராடி வீழ்த்தினர்.

 

கையில் வில்லம்பு ஏந்திய சில வீரர்கள் வீட்டின் முனைகளில் மறைவாக நின்றுகொண்டு மையத்தில் இருந்த இவர்களை நோக்கி அம்புகளை எய்தனர்.

 

விக்ரம் அதீதமான வேகத்துடன் போரிடுவதைப் பார்த்துவிட்டுத் தேவி அந்த வில்வீரர்களை நோக்கி நகர்ந்தாள்.

 

இலாவகமாய் அவர்களது அம்புகளைத் தவிர்த்தபடி அவர்களை நெருங்கிச் சண்டையிட்டு வீழ்த்தினாள்.

 

சற்று நேரத்தில் அவர்கள் உள்ளே வந்திருந்த அந்த நாற்பதைம்பது வீரர்களையும் கொன்று குவித்திருந்தனர்.

 

தேவி இன்னும் யாராவது எங்காவது மிச்சம் இருக்கின்றானா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளுக்கு மூச்சு வாங்கியது. உடலெல்லாம் வேர்வையில் நனைந்திருந்தது.

 

மற்றவர்களும் அச்சமும் படபடப்படமும் ஏறியவர்களாய் நின்றிருந்தனர்.

 

விக்ரம் மட்டும் எந்தச் சோர்வும் களைப்பும் இன்றி திடமாய் நின்றான். அவனது முகத்தில் அந்தக் கிளர்ச்சியும் ஆவேசமும் சற்றும் குறையாமல் இருந்தன.

 

மற்றவர்கள் அவனை நெருங்கவே அஞ்சி நின்றிருந்தனர். தேவி மட்டும் மெல்ல “விக்ரம்ம்ம்…” என்று வாஞ்சையோடு அழைத்துக்கொண்டே நெருங்கினாள்.

 

அவள் மெல்ல அவனை நெருங்கி அவனது கையில் இருந்த ஈட்டியை வாங்கிக்கொண்டாள். எதுவும் பேசாமல் விக்ரம் ஈட்டியை அவளிடம் கொடுத்துவிட்டு வெறித்துப் பார்த்தபடி நின்றான்.

 

”விக்ரம்… என்னாச்சு விக்ரம்…”

 

தேவி அவனது தோளைப்பிடித்துக் குலுக்கினாள்.

 

இதற்குள் மற்றவர்களும் அருகில் வந்திருந்தனர்.

 

“இங்க பாருங்க!”

 

செழியன் மிகுந்த வியப்போடு சொல்லியபடியே விக்ரமின் வலது கையைப் பிடித்து உயர்த்தினார்.

 

விக்ரமின் வலதுகை மோதிர விரலில் விக்ரமாதித்யரின் கணையாழி இருந்தது.

 

அனைவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் விக்ரமையும் அந்த மோதிரத்தையுமே பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

செழியன் மெள்ள அந்த மோதிரத்தைக் கழற்றினார்.

 

விக்ரம் இலேசாகத் தள்ளாடினான். அருண் சட்டென நெருங்கி அவனைப் பிடித்துக்கொண்டான். விக்ரம் அனிச்சையாகத் தன் தலையைப் பிடித்துக்கொண்டான்.

 

”எ- என்ன ஆச்சு? இ- இவங்கலாம்…”

 

விக்ரமின் முகத்தில் குழப்பமே ஓங்கியிருந்தது.

 

”இப்போதைக்குப் பயப்பட ஒன்னுமில்ல விக்ரம்… ரிலாக்ஸ்…”

 

தேவி அக்கறையோடு சொன்னாள்.

 

“ஆமாண்ணா… அமைதியா இருக்கப் பாரு…”

 

விஷாலியும் மெள்ளச் சொன்னாள், அவளுக்கு ஏற்பட்டிருந்த அச்சமும் படபடப்புமே இன்னும் நீங்கியதாகத் தெரியவில்லை.

 

“எ- எப்படி இவங்களாம் மயக்கமானாங்க?”

 

விக்ரம் கீழே கிடந்த அந்த வீரர்களின் உடல்களைப் பார்த்துக் கேட்டான்.

 

”மயக்கம் இல்ல விக்ரம், நீயும் தேவியும் இவங்களைத் தீர்த்துக்கட்டிட்டீங்க!”

 

செழியனின் குரலில் இருந்தது வியப்பா கிண்டலா என்று புரியாமல் இருந்தது.

 

“தீர்த்- யு மீன், கொன்னுட்டோமா?”

 

“ம்ம்ம்…”

 

விக்ரம் அந்த வீரர்களை உற்றுப் பார்த்தான்.

 

”உடம்புல கத்தி ஈட்டிலாம் குத்திருக்கு ஆனா ஒருத்தன் உடம்புலேர்ந்தும் இரத்தமே வரலியே?”

 

விக்ரம் கேட்டபின்னர்தான் மற்றவர்களும் அதைக் கவனித்தனர்.

 

அதுவரை அவர்களைக் கொன்று குவித்த தேவியும் அப்போதுதான் அவர்களின் உடம்பிலிருந்து இரத்தமே வரவில்லை என்பதை உணர்ந்தாள்.

 

அனைவருக்கும் குழப்பம் அதிகமாயிற்று.

 

“இவங்க சகவீரர்கள்… இவங்க மனிதர்கள் இல்ல… மாயத்தினால உருவாக்கப்பட்டவர்கள்…”

 

பட்டி பேசிக்கொண்டிருக்கும்போதே அங்குக் கிடந்த அந்த வீரர்களின் உடல்கள் காற்றில் கற்பூரம் கரைவதைப் போலக் கரைந்து காணாமல் போயின!

 

சற்று நேரத்தில் அந்த இடத்தில் அப்படி ஒரு சண்டை நடந்தது என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது!

 

“என்ன சார் ஆச்சு? ஏன் எல்லாரும் ரொம்ப களைப்பா இருக்கீங்க?”

 

அவர்கள் வீட்டின் மேலாளர் அங்கு வந்ததை அப்போதுதான் அவர்கள் கவனித்தனர்.

 

அவருக்குப் பின் சற்று தொலைவில் மற்ற பணியாளர்கள் நின்றிருந்தனர்.

 

“என்ன ஆச்சா? யோவ், இங்க ஒரு பெரிய யுத்தமே நடந்துச்சுயா! ஒருத்தருமா அதப் பார்க்கல?”

 

அருண் எரிச்சலோடும் கோவத்தோடும் கேட்டான்.

 

“இரு அருண்…” விக்ரம் அவனைச் சமாதானப்படுத்திவிட்டு மேலாளர் பக்கம் திரும்பினான்,

 

“ரஞ்சித், நிஜமாவே இங்க என்ன நடந்துச்சுனு நீங்கலாம் கவனிக்கலயா?”

 

விக்ரமின் பார்வை அந்த மேலாளரைத் தாண்டி பின்னால் இருந்த பணியாளர்கள் மீதும் சென்றது.

 

அனைவருமே “இல்லை” என்று தலையாட்டினர். ஒரு சிலர் “இல்ல சார்!” என்று உரக்கவும் சொல்லினர்.

 

“சார், நாங்க பார்த்தோம் சார், கறுப்பு டிரெஸ் போட்டுட்டுச் சட்டுனு ஒரு நாப்பது அம்பது பேர் உள்ள நுழைஞ்சாங்க…”

 

அவர்கள் வீட்டில் நியமிக்கப்பட்டிருந்த தனியார் காவலர்களும் அங்கு வந்திருந்தனர். அவர்கள் பலத்த அடிவாங்கியவர்களைப் போலச் சோர்ந்து களைத்திருந்தனர்.

 

”எப்படி உள்ள வந்தாங்க? அவங்க வந்ததக் கவனிக்காம நீங்களாம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”

 

தேவி கடுமையுடன் கேட்டாள்.

 

“சாரி மேடம்… அவங்க இந்த வாசல்கிட்ட வர வரைக்கும் எங்க யார் கண்ணுலயுமே படல! நாங்க ஒழுங்காத்தான் கவனிச்சுட்டு இருந்தோம், அவங்க எங்கேர்ந்து வந்தாங்கன்னே தெரியல!”

 

அவரது குரலில் குழப்பம் இருந்தது. தேவி எதுவும் சொல்லாமல் தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டாள்.

 

சற்று நேரம் அனைவரும் மௌனமாக இருந்தனர்.

 

விக்ரம் காவலரையும் பணியாள்களையும் போகச் சொல்லிச் செய்கை செய்தான்.

 

அவர்கள் அனைவரும் சென்றபின் இவர்கள் மீண்டும் இருக்கைகளில் அமர்ந்துகொண்டனர். முன்பு போல இயல்பாக அமராமல் ஒருவித விறைப்புடன் அமர்ந்திருந்தனர்.

 

”அவங்க யாருனு சொன்ன?”

 

தேவி பட்டியைப் பார்த்துக் கேட்டாள்.

 

“சகவீரர்கள்! சகர் மன்னனின் படைவீரர்கள்!”

 

“ம்ம்ம்! எல்.எம்.ஜி.யால (இலகுரகத் தானியங்கித் துப்பாக்கி!) சுட்டுக்கூட அவங்களுக்கு ஒன்னும் ஆகல விக்ரம்!”

 

தேவியின் குரலில் குழப்பமும் வியப்பும் கவலையும் எரிச்சலும் கதம்பமாய் இருந்தன.

 

“இனிமே இவங்களைத்தான் நாம சமாளிச்சாகனும்!”

 

செழியன் சோர்வுடன் சொன்னார்.

 

“எப்படி?”

 

தேவியும் அருணும் ஒருசேரக் கேட்டனர்.

 

“விக்ரமாதித்யர்!”

 

விக்ரம் சட்டென எழுந்து நின்றுகொண்டான்.

 

அவன் கையை நீட்ட செழியன் அந்த மோதிரத்தை அவன் கையில் கொடுத்தார்.

 

விக்ரமின் முகத்தில் வலியைப் பொறுத்துக்கொள்ளும் பாவனை தெரிந்தது, ஆனால் அவனிடம் எந்தத் தள்ளாட்டமும் இல்லை.

 

சற்று நேரம் அந்த மோதிரத்தையே உற்றுப் பார்த்தவன் அதைத் தன் வலது கைவிரலில் அணிந்துகொண்டான்…

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!