Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ06 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  06

 

கௌஷி.. அவள் அந்த பகுதியில் பெயர் போனவள். இச்சையை அடக்கத் தெரியாத ‘பெரிய மனிதர்கள்’ மத்தியில் மிகவும் பிரசித்தம். அவர்கள் புண்ணியத்தில் அவள் செய்யும் தொழிலில் உச்சத்திலிருந்தாள். அதற்காக அவள் பலி கொடுத்த சிறுமிகளும் பெண்களும் ஏராளம். இரக்கம் என்றால் என்ன என்பாள். ‘அடியா மாடு படியாது’ என்பது அவள் வேதம்!

 



Advertisement

என்றாவது சில நல்ல மனித நெஞ்சங்கள் ‘ரெய்ட்’ என்று திடீர் சோதனைக்கு  வந்தால் பிள்ளைகளை அந்த கோட்டைச் சுவரில் மறைத்து விடுவாள். இன்று வரை அவள் சட்டத்திடம் மாட்டவில்லை, பண முதலைகளுக்கு அவள் போடும் தீனியினால் கூட இருக்கலாம்.

 

அவளைப் போல் தனியே தொழில் துடங்கத் தான் கௌரவிற்கு ஆசை. அவன் கனவென்று கூட சொல்லாம். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையே தொழிலாய் செய்பவன் என்பதால் சிற்றின்பத்திற்காகப் பணத்தை விரயம் செய்யும் பண முதலைகளைத் தெரியும். அவன் தொழில் துடங்கும் வேளை இவர்கள் அவனுக்குத் தேவை என்பதால் அவ்வப்போது முனைந்து செல்லும் பெண்களை அவர்களுக்கு அனுப்பி வைத்து பணம் பார்த்தான். இன்று வரை அப்பாவி பிள்ளைகளை ஏமாற்றி கௌஷி போன்றவர்களிடம்  கொண்டுவந்து விடுவதை மட்டும் தான் முழுநேர தொழிலாக செய்து கொண்டிருந்தான்.

Advertisement

 

Advertisement

கோமல் என்ற தேவதை அவன் கண்ணில் படும் வரை.. அவன் கனவு கனவாய் மட்டும் தான் இருந்தது. அவளை மட்டும் அவன் வழியில் கொண்டுவந்து விட்டால்..? அவளும் இந்த தொழிலுக்கு ஒப்புக்கொண்டால்..? அவன் கனவு நினைவாகிவிடும் என்பதில் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

 

நான்கு மாதம் இழுத்துப் பிடித்துக் காத்திருந்தான்.. கோமல் அவனை நம்பி வீட்டை விட்டு வெளிவர. இரண்டு வாரம் போராடினான்… கோமலோடு உறவாட.. அவன் எண்ணத்தை அவளிடம் உரைக்க!

Advertisement

 

[the_ad id=”6605″]

 

அவன் போறாத காலம், அவள் அவனை நெருங்கவிட வில்லை. அவளோடு இணைந்து தொழில் துடங்குவது சாத்தியமில்லையோ என்ற சந்தேகம் எழ நம்பிக்கை துரோகத்தின் அடுத்த கட்டத்திற்குச் சென்றான். அவன் நல்லவன் வேஷம் போடப் பெண் மாற்றான் கையில் கசங்கினாள்.

 

ஐந்து மாதத்தில் அவள் இதற்குப் பழக்கப்பட்டிருப்பாள் என்று எதிர்பார்க்க… அவளோ இன்னும் அதிகமாக முரண்டு பிடிக்கிறாள். அவனும் என்ன தான் செய்வான் பாவம்? ஒருத்தியைக் காக்கக் கோட்டை கட்ட முடியாது. அவளையே பார்த்துக்கொண்டிருக்கவும் முடியாது. எங்கு நிஜம் உணர்ந்து  ஓடிவிடுவாளோ என்று நான்கு ரவுடிகளுக்கு சோறு போட முடியாது. ஒருத்தனுக்கு அழவே அவன் வருமானம் பாதியும் கரைய.. இவளை வைத்துப் பாதுகாப்பது கடினம் என்பதை உணர்ந்தவன்.. கௌஷிடம் வந்து நிற்கிறான்.

 

கௌஷிக்கு, கோமலின் ஆளை வீழ்த்தும் வசீகரம் மிகவும் பிடித்துப் போனது. கௌரவிற்கு அதில் சந்தேகம் இருக்கவில்லை.

 

கொழுத்த பணம் கை மாறும் தருணம் வந்து விழுந்தது அதி முக்கிய கேள்வி.. ‘புத்தம் புது மலரா?’ என்ற கேள்வி தான் அது. இல்லையே.. ஐந்து மாதம் அவனுக்கு உழைத்த உடம்பல்லவா அது. தலை சொறிந்தான்.

 

“பிரச்சினை இல்ல.. போய் மித்ரா-ட்ட இவளுக்கு நோய் பிடிக்கலைன்னு  டெஸ்ட் எடுத்துட்டு வா..” என்றுவிட்டாள்.

 

அவள் வாடிக்கையாளர்கள் நம்பி வரவேண்டுமே.. அதனால் ஆறு மாத்திற்கு ஒரு முறை அங்குள்ள பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்துவிடும்.

 

“என்ன கௌரவ் நெளியற…? புதுசா ஒன்னும் நான் சொல்லலியே… இங்க நடக்கிறது தானே… போ போய்ட்டு.. மித்ராவ பார்த்துட்டு வா.

 

எப்பொவும் புதுசா கொண்டு வருவ… பொண்ணு அழகுல மயங்கிட்டியா?”

 

கௌஷி ஏதோ கௌரவிடம் கூறினாள். ஒன்றும் புரியவில்லை. இவனும் ஏதோ வாதாடினான். அவள் என்ன சொன்னாளோ.. இவன் முகம் தோய்ந்து போனது. இரண்டே தினம் வந்துவிடுவேன் என்றான். அது மட்டும் புரிந்தது.

 

இவன் கிளம்பும் வேளை சாந்தினி கௌஷியிடம் வந்தாள்.. பணம் வாங்கி சென்றாள்.

 

பார்த்த நின்ற இவனிடம்… “நீயும் நேரா இங்க கூட்டிட்டு வந்திருக்கணும்.. இப்போ இடத்தை காலி பண்ணு!”

 

“இன்னைக்கு எப்படிப் பார்த்தேனோ அப்படியே வரணும். சின்ன டேமேஜ் கூட இருக்கக் கூடாது.” கண்டிப்பாய் கூறி அனுப்பினாள்.

 

“வா கோமல்.. போகலாம்” என்று மீண்டும் அழைத்துச் சென்றான். ஜெயிலிருந்து வெளி வர மூச்சுக் காற்று சீரானது.

 

“இது என்ன இடம் கௌரவ்?”

 

மீண்டும் அவனோடு அவள் வருவாள் என்று எண்ணவில்லை.  அவன் திட்டம் சறுக்கியதில் வருத்தத்தோடு எரிச்சலும் சேர்ந்து கொள்ள, “ஏன் தெரிஞ்சு என்ன பண்ணப் போற? இந்த மாதிரி ஒண்ண எனக்கு வச்சு தரப்போறியா?”

 

“பேசாம வா…” எரிந்து விழுந்தான்.

 

இரவு தூக்கம் பிடிக்கவில்லை. அவன் படுத்திருக்க இவள் வெளியே அவள் பாறை சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாள்.

 

அழ அழ இழுத்து செல்லப்பட்ட குழந்தை மனதை குடைந்தாள். அது வீடு மாதிரி இல்லை. இத்தனை பெண்கள்…? விடுதியா? என்ன மாதிரி விடுதி? அவர்களைக் காவல் காக்கத் தடி மாடு கணக்காக ஆண்கள். பூட்டி வைத்திருந்த சிறை போன்ற அமைப்பு.. கோமலால் இயல்பாய் இருக்கவே முடியவில்லை.

 

இப்படி எல்லாம் பணத்திற்க்காக நடக்கும் என்று பெண் அறியவில்லையே. இது உலகம் முழுவதும் பெண்களுக்கு நடக்கும் அவலம் என்று அவளிடம் எடுத்துக் கூற ஆளில்லையே. ஏதோ இச்சை அலை மோத, தனியே மாட்டும் பெண்களிடம் தகாதவாறு நடப்பார்கள் என்று அவள் எண்ண.. அதையே பகிரங்கமாய் செய்வார்கள் என்பது இன்னும் அறியவில்லை.

 

[the_ad id=”6605″]

 

 

படுத்திருப்பவனிடம் கேட்கலாம் என்றால் அவனோ வந்ததிலிருந்து எரிந்து எரிந்து விழுகிறான்.

 

மறு நாள் காலை வெளியே சென்று வந்தவன்.. “கோமல்..” என்று ஆரம்பித்தான். ஆனால் பாவம் அவன் ‘காதல்’ அழைப்பு அவளிடம் எடுபடவில்லை.

 

“என்ன கௌரவ்? வெளியில போறோமா?” என்றாள்.. ஒருவித தோரணையோடு..

 

“ம்ம்..” என்றான். மருத்துவரைக் காணவேண்டுமே.. நன்றாய் இருப்பவளை என்ன சொல்லி அழைத்துச் செல்ல… பேராசை படாமல் எப்பொழுதும் போல் கூட்டிவந்த உடனே கௌஷியிடம் விட்டிருக்க வேண்டுமோ..? இவளை எப்படிச் சமாளிப்பது?

 

எண்ணியவன்.. “கிளம்பு போகலாம்” என்றான்.

“ஓ போகலாமே.. அதுக்கு முன்ன சொல்லு. நேத்து போனோமே ஒரு இடத்துக்கு? அது என்ன இடம்? அங்க எதுக்கு நாம போனோம்?”

 

‘இவளைக் கொன்றால் என்ன’ என்று தோன்றியது அவனுக்கு. அவன் கனவெல்லாம் இவளால் மண்ணாய் போனது. மருத்துவரை மட்டும் பார்த்துவிட்டால்… அனுப்பிவிடுவான்.. எப்படியாவது கௌஷியிடம் மிதி பட்டுச் சாவு என்று!

 

“உனக்கு காலேஜ் பாக்கணும்னு சொன்னேன் இல்ல. அதுக்குத் தான் ஹாஸ்டல் பாக்க. அங்க ரொம்ப சேஃப்… அதனால அங்க இடம் இருக்குமான்னு கேட்கத் தான் கூட்டிட்டுப் போனேன். இங்க நல்ல வேலை கிடைச்சிருக்கு ஆனா அப்பப்போ டெல்லி… கல்கட்டான்னு சுத்த வேண்டி வரும். அது தான் உனக்கு இடம் கிடைச்சா நீ பத்திரமா இருக்கன்னு நானும் வேலையைப் பார்ப்பேன்… நான் இங்க வரும்போது எல்லாம் உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுறேன். என்ன சொல்ற?”

 

நம்பும்படியான கதையா? பெண் நம்பிவிட்டாள் போலும்!

 

“என்ன வேலை?”

 

கோவத்தை யாரிடம் காட்டுவது? எதற்கும் கேள்வியா?

 

“ட்ரைவர்..”

 

“என்ன வண்டி? ஏற்கனவே நொண்டிட்டு இருக்க… ஓட்டிடுவியா..?”

 

அவன் பொறுமை ஏகத்திற்கும் காற்றில் பறக்க.. பொறுமையை இழுத்து பிடித்து பதில் கொடுக்கவேண்டியதாய் போனது.

 

“எனக்கு அங்க பிடிக்கலை… வேற எங்கேயாது பார்ப்போமா?” என்றாள் யோசனை முகமாய்.

 

“சரி.. பார்ப்போம். ஆனா எங்க போகணும்னாலும் உன் உடம்பு நல்லா இருக்குன்னு டாக்டர் சொன்னா தான் இடம் கிடைக்கும். டாக்டர பார்த்திட்டு வந்திடுவோம்.. சரியா?”

 

“யாரு மித்ராவா?” என்றது தான் தாமதம்… அவனுக்குத் தூக்கி வாரிப் போடக் கொஞ்சம் பதட்டப் பட்டுவிட்டான்.

 

“ஏய்.. எப்படி.. எப்படி உனக்கு தெரிஞ்சுது? யாரு.. யாரு சொன்னா?”

 

அவன் பரபரக்க.. அவளோ நிதானமாய் பேசினாள்.

 

“நேத்து நீங்க ரெண்டு பேரும் எதோ மெடிகல்… மித்ரா… ரெண்டு நாள்-னு பேசிக்கல?”

 

‘இதற்கு மேல் இவளை இங்கு வைத்திருந்தால் சரி படாது’ என்று நினைத்தவன் அதற்கு மேல் தாமதம் செய்யவில்லை.

 

நேரே நின்றது மித்ராவின் சிறிய க்ளீனிக் முன் தான். ஒற்றை அறையை இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்த சிறிய சிகிச்சை முகாம் சென்றபின் தான் தெரிந்தது அது மித்ரா அல்ல மித்ரன் என்று!

 

இவன் வெளியே காத்திருக்க.. உள்ளே அவளுக்கு இரத்தம் எடுக்கப்பட்டது.

 

“எதுக்கு?” என்றாள் ஹிந்தியில்

 

அவன் அவளை நக்கலாய் பார்க்க… அவளுக்கு பிடிக்கவில்லை அவன் திமிர்.

 

இதயத் துடிப்பு.. இரத்த அழுத்தம் என்று பரிசோதனை செய்ய… அவன் கை அத்துமீற.. கையை தட்டிவிட்டவள்.. “நீ எனக்குப் பார்த்து கிழிச்சது போதும்” என்று எழவும்,

 

“ஆமா வந்திருக்கது எயிட்ஸ் இருக்காணு பாக்க.. இதுக்கு இத்தன சீன் ஆகாது” என்றான் ஹிந்தியில்.. நக்கலாய்.

 

[the_ad id=”6605″]

 

கேள்விப் பட்டிருக்கிறாள் இந்த நோயைப் பற்றி. அன்று புரியாதது இன்று புரிந்தது. மனம் அடிபட்டுப் போனது. அதன் பின் பேசவே இல்லை கௌரவிடம்.

 

வழி எல்லாம் யோசனை.. பயம்… உள்ளம் நடுங்கியது.

 

நோயிருந்தால்? புண் பிடித்து எதிர்ப்பு சக்தியில்லாமல் சாக வேண்டுமா? அழுகை முட்டிக் கொண்டு வந்தது. செய்யாத தவறுக்கு அவள் அனுபவிக்கும் தண்டனை போதவில்லையா?

 

அவள் முகம் சரி இல்லை என்றதும்.. மருத்துவர் எதையாவது உளறிவிட்டானா? அவளுக்குத் தெரிந்துவிட்டதா என்ற பதட்டம் அவனுக்கு.

 

“என்ன ஆச்சு?” என்று அவன் முகம் பார்க்க

 

முகத்தில் தெளிவில்லை.

 

“உன்ன தான்… என்ன ஆச்சு கோமல்?”

 

நடந்து கொண்டிருந்தவள் நின்றுவிட்டாள்.

 

“எனக்கு இங்க இருக்க வேண்டாம். நான்… நான் என் வீட்டுக்கு போகணும். ” என்றாள் பிடிவாதமாய்.

 

அவனுக்கு இருந்த எரிச்சலுக்கு இங்கே தூக்கிப் போட்டு நாலு சாத்து சாத்தலாம் என்று தோன்றியது. நடுத் தெரு… என்ன தான் அவனும் செய்வான்?

 

“சரி… போகலாம்… இப்போ வா..” அமைதியாக பதில் அளிக்க முயன்றான்.

 

“இல்ல… இப்போவே.. இங்க இருந்தே… இப்போவே போகணும்! காசு குடு நானே போறேன்” முகத்தில் தீவிரம்.. குரலில் பிடிவாதம்.

 

பாவம் அவன் என்ன செய்வான்… பிணம் தின்னிக்கு அவள் உயிர் பிரியாதது பெரும் பிரச்சினை. அவள் கடைசி சதையையும் விற்று அவனுக்குப் பணம் கொடுத்துவிட்டால் அவன் அடுத்த குழந்தையை தேடியாவது போகமுடியும்! அதனால் வந்த கோபம் அவனுக்கு நியாயமானது தானே…

 

“ஏய்… நீ என்ன லூசா? உனக்காக நான் நாயா பேயா அலைஞ்சு… அடிபட்டு… இடுப்பு உடைஞ்ச பிறகும் உன் சந்தோஷம் தான் முக்கியம்னு உனக்கு காலேஜ் பார்க்கிறதும் ஹாஸ்டல் பார்க்கிறதும்… டாக்டரை பார்க்கிறதும்ன்னு அலைஞ்சா… நீ மனசாட்சியே இல்லாம போறேன் போறேன்னு சொல்ற?” என்று ஏகத்திற்கும் குதித்தான்.

 

“எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல… உன் கூட வரப் போய் எனக்குக் கண்ட கண்ட நோய் எல்லாம் இருக்குமான்னு டெஸ்ட் எடுக்கறாங்க…. நான் போறேன் என் அப்பாட்ட..” அவள் பிடிவாதமாய் கூற… இரண்டு நாள் சமாளித்தால் போதும்.. அவசர படாதே என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு… அவளிடம் பக்குவமாய் பேச ஆரம்பித்தான். நடு ரோட்டில் அவள் அழுது ஊரைக் கூட்டிவிட்டால்? அதில் யாருக்காவது அவள் பேசுவது புரிந்துவிட்டால்?

 

“ஆமா நான் தான் டெஸ்ட் பண்ணச் சொன்னேன். நீ தானே சொன்ன… உன்ன அசிங்கப் படுத்தி உன் உடம்பை கெடுத்திட்டாங்கன்னு…”

 

அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வர…. “இல்ல இல்ல… நான் அசிங்கம் இல்ல… என் உடம்பு கெடலை… அவங்க தான்.. அவங்க தான் அசிங்கம்.. அவங்க உடம்பும் மனசும் தான் கெட்டது…” என்றாள் குரல் நடுங்க.

 

அவனுக்கு வேண்டியது கிடைத்துவிட்டது. இனி பெண் தன்னை நினைத்தே கழிவிரக்கத்தில் ஒரு வாரம் கழிப்பாள். என்ன அவ்வப்போது இதையே சொல்லிக் கொண்டிருந்தால். பெண் இங்கிருந்து போகக் கூட நினைக்காமல் ஒரு ஓரம் சுருண்டு கிடப்பாள்…

 

பெண் வாய் மூடி அவனோடு நடக்க ஆரம்பித்தாள்.

 

எதையோ சாதித்துவிட்ட உணர்வு அவனுக்கு.

 

“உன் உடம்பு களங்கமாகிடுச்சு கோமல்.. நீ போய் உன் அப்பாட்ட இத சொல்லி பாரு… என்னை மாதிரி அப்பவும் உன் மேல் அன்பாவா இருப்பார்? ஏற்கனவே உன்னை அங்க யாருக்கும் பிடிக்காது. உன் சித்தி உன்னை அடிச்சு எல்லார் முன்னாடியும் அவமானப் படுத்தி உன்னை அங்க இருந்து துரத்திடுவாங்க.. அந்த ரிஷி உன்னை அடிச்சே சாகடிச்சிடுவான். இந்த கெட்டுப் போன உடம்பை வச்சுகிட்டு எங்க போவ… உனக்காக அடி வாங்கின இந்த நொண்டி தான் அப்பவும் உனக்காக இருப்பேன்…”

 

பெண் அடிவாங்கிப் போனாள். துக்கம்.. வலி .. இயலாமை எல்லாம் உள்ளுக்குள் அழுத்த ஆரம்பித்தது. அழுதால்.. ஒரு அன்பு தோள் கிடைத்தால்… கொஞ்சமேனும் மனம் சமன்படும். அதற்கு எங்குப் போவாள்.

 

ஏதோ சிந்தனையில் அவன் பின்னோடு சென்றாள். அவன் வேக எட்டெடுத்து நடக்க… அவளுக்கு நடை கூட மறந்தே போனது.

 

தெருவின் இருபுறமும் கடைகள். கூட்டம் அதிகமில்லை என்றாலும் கூட்டமே. ஆனால் அவள் கவனத்தில் எதுவும் பதியவில்லை. எதையும் யோசிக்கும் நிலையில் மனம் இல்லை.

 

[the_ad id=”6605″]

 

தேநீர்க் கடை முன் ஆட்கள் கூட்டமாய் நின்று பேசிக் கொண்டிருப்பதோ… அவள் முன்னும் பின்னும் குட்டி வாண்டுகள் ஓடிக் கொண்டிருந்ததோ அவள் கண்களில் நுழையவும் இல்லை கவனத்தில் பதியவும் இல்லை.

 

அவள் பின்னோடு ஓடிக் கொண்டிருந்த ஒரு வாண்டு நிலை தடுமாறி அவள் செருப்பில் மிதித்து அவள் மேல் விழ.. சுற்றம் உணராமல் நடந்து கொண்டிருந்தவளும் நிலை தடுமாறி பிடிமானம் இல்லாமல் முன்னால் போய் விழுந்தாள்.

 

“டேய் மூர்த்தி… பொண்ணுடா…” என்ற சத்தம் அவள் காதில் விழுந்து முடிக்கும் முன் நான்கு பேராய் நின்று பேசிக்கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவன் மேல் இடித்து விழுந்தாள்.

 

நின்று கொண்டிருந்த தூணில் இடித்து கீழே விழுந்த தாக்கம். சுற்றம் உணர்ந்தாள். நின்று கொண்டிருந்த தூணைப் பார்த்தாள்.

 

அவள் மூச்சு நின்று மீண்டது. கண்ணோடு வாயும் திறந்தது. அவன் தானே? அவனே தான் என்றது மூளை. திடகாத்திரமான வசீகரமான தேக்கு மர கிரேக்கச் சிலை. ஆறடிக்குக் குறையாமல் ஓங்கி உயர்ந்து.. மாநிறத்தில்.. பரந்து விரிந்த மார்போடு எந்த வித தாக்கமுமின்றி நின்றிருந்தது. பூ இடித்து எந்த பாறைக்கு வலித்தது?

 

இடது கை ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவே புகைந்து கொண்டிருந்தது, சிசர்ஸ் ஃபில்டர். சிகரெட் பிடித்திருந்த கையின் கட்டை விரலால் மீசையை மேல் நோக்கித் தூக்கிவிட்டுக் கொண்டே கீழே கிடந்தவளைப் பார்த்தான்.

 

தீர்க்கமான ஊடுருவும் பார்வை அவளை ஊடுருவியது. சட்டென்று புருவம் உயர்ந்து அமர்ந்தது. ஆச்சரிய பார்வை.. வாய் எதையோ சொல்ல நினைத்து பின் மூடிக்கொண்டது. ஆச்சரியம் மாற.. கண்ணில் ஒரு வித கோபம்.

 

கோபம்..? ஏனாம்? இடித்ததாலா?

 

புருவம் நெளிய.. ஒரு முறை அவளை முழுதாக மேலிருந்து கீழ் வரை பார்த்தான். ஆராய்ச்சி பார்வை மட்டுமே! வாஞ்சையோ.. ஆர்வமோ கலந்திருக்கவில்லை.

 

கீழே கிடந்தவளை எழுப்பி விடும் நோக்கமில்லை போலும். ஏன் உதவ முற்படவில்லை? நீ தானே இடித்துக்கொண்டு விழுந்தாய்? விழுந்த நீ முயன்று எழுந்திரு என்று விட்டுவிட்டானா? இல்லை.. நீ எல்லாம் நான் தொடக் கூட அருகதையற்றவள் என்று விட்டுவிட்டானா? கண்டிப்பாக இரண்டாவது காரணமாய் இருக்க வாய்ப்பில்லை என்று தான் தோன்றுகிறது. கண்ணில் தெரிந்த கோபம் ஒரு காரணமாய் இருக்கலாம்.

 

மெள்ள எழுந்தவள் பார்வை முழுவதும் அவன் மீது மட்டும் தான். அவன் உயரத்திற்கு அண்ணாந்து பார்த்து நின்றாள். மூக்கு விடைக்க ஆரம்பித்தது. கீழ் உதடு துடிக்க.. தாயைக் கண்ட பத்து மாத குழந்தை போல்… துடித்துக்கொண்டே கீழ் உதடு பிதுங்க ஆரம்பித்தது. கீழே சொட்டவா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு திரண்டு நின்றது கண்ணீர். இப்படி தான் தாத்தா முன் நிற்பாள் கீழே விழுந்து முட்டியை தேய்த்துக் கொண்டு வரும் நாட்களில். தாத்தா முன் மட்டும் தான் இப்படி நின்றிருக்கிறாள்.

 

இன்று இவன் முன்… காங்கேயம் காளை முன்!

 

“ஏய்.. என்ன ஆச்சு?” பதறிக் கொண்டு வந்தான் கௌரவ். இவனைக் கண்டதும் பெண் கண்ணில் நீரோடு ஒரு கலக்கம் எட்டிப்பார்த்தது. தொண்டையில் மாட்டி நின்ற துக்கம் முகத்தில் மாட்டி நின்றது.

 

அவள் சிவந்த முகம் பார்த்த கௌரவிற்கு பயம்.. எங்கே இவள் வாய் திறந்துவிட்டால்?

 

“என்ன டா… பொண்ணு கிட்ட வன்பு பண்றியா…?” வந்தவன் மராட்டியில் எகிற

 

எதிரில் நின்றவனை, மூர்த்தியால் ஒரு மனிதனாய் கூட பார்க்க முடியவில்லை. ‘போடா டேய்.. போடா…’ பதரை பார்ப்பது போன்ற ஒரு அலட்சிய பார்வை மட்டுமே..

 

நின்று கொண்டிருந்த இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தவன் பார்வையில்… முகபாவத்திலிருந்த அருவருப்பும்… அலட்சியமும்… இவளை அசைத்துப் பார்த்தது. இது வரை பார்த்திராத பார்வை. இப்படி ஒற்றை பார்வையில் கேவலமாக கூட உணரவைக்க முடியுமா? உணர்ந்தாள்.

 

ஏன் இவளை இப்படிப் பார்த்தான்? அவளுக்கு புரியவில்லை. வேறு யாராவதாய் இருந்தால் கவனித்துக் கூட இருக்க மாட்டாள். இவனிடம் என்றதும் வாய் அடைத்துப் போனது.

 

[the_ad id=”6605″]

 

 

முறுக்கி விட்ட மீசை. கரை வைத்த வெள்ளை வேட்டி. கை முட்டி வரை இழுத்து விட்டிருந்த முழுக்கைச் சட்டை. சட்டைக்குள் அடங்க மறுத்த திடகாத்திரம். ‘மோதி தான் பாரேன்..’ என்ற தோரணை….

 

இப்படி நிற்பவனிடம் வம்புக்குப் போக கௌரவிற்கு என்ன பைத்தியமா… அதுவும் அவன் அருகில் அவனைப் போலவே திடகாத்திரமாய் பெல்பாட்டமில் நிற்கும் உருவங்கள்.. பீதியைக் கிளப்ப,

 

“வா.. போகலாம்…” என்று கைபிடித்து அழைத்து (இழுத்து?) சென்றான். இவளைக் காக்கும் தடியன் கொஞ்சம் தள்ளி நிற்கத் தான் செய்கிறான். இருந்தும் இங்கு வம்பை வளர்ப்பது உகந்ததல்ல.

 

திரும்பித் திரும்பி இவனை பார்த்துக்கொண்டே சென்றாள். அவள் தலை மறையும் வரை இவனும் அவளைத் தான் பார்த்து நின்றான். கையிலிருந்து புகைந்து கொண்டிருந்ததை விட அவன் உள்ளம் புகைந்தது உண்மை.

 

கண்மூடி இடது கை கட்டை விரலால் நெற்றியை சுரண்டி கொண்டிருந்தவனைக் கங்கு சுட்டு சுயநினைவுக்கு மீட்டது.

 

“என்ன மூர்த்தி? என்ன யோசனை? தெரிஞ்சவங்களா?”, கேட்டவனைப் பார்த்தான். பதில் சொல்லவில்லை. முகத்தில் யோசனை ரேகை.

 

மூர்த்தியின் வாயிலிருந்து வரப் போகும் வார்த்தைக்காகக் காத்திருந்த மூவரில் இருவர் முகமும் தோரணையும்… ‘நாங்கள் ஐ.பி.ஸ்’ என்றது.

 

மூர்த்தியின் வாயை தவிர உடலின் இருந்த அத்தனை அணுக்களும் ‘துளசி..’ என்று கூப்பாடு போட்டது.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!