Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 14

கள்வன் – 14

 

விழிகளை தரையில் பதித்து இதயன் அறைக்குள் நுழைந்த யுக்தா இனியாவின் முதுகில் முட்டி மோதி நின்றாள்.

 



Advertisement

“என்னடி இப்படி வழியில் நிக்கிற?” என்று கடுப்புடன் யுக்தா மொழிய, சட்டென்று தன் கை கொண்டு அவள் வாயை மூடினாள் இனியா.

 

கேள்வியாய் பார்த்த யுக்தாவிற்கு தன் விழிகளால் அறையினுள் இனியா கண் காட்ட, அவளின் விழிமொழி பதிலை யுக்தா தொடர அவள் கண்ட காட்சி அவள் உதட்டினில் முறுவலை கொணர்ந்தது.

Advertisement

 

Advertisement

அங்கு இதயன் மேல் கைப் போட்டு அவனை கட்டிக்கொண்டு சிறுபிள்ளை போல் உறங்கிக் கொண்டிருந்தான் இன்பன். தமையனும் உறக்கத்தில் தான் இருந்தான். அவனை விழிகளால் யுக்தா அளந்துக் கொண்டிருக்க, இனியாவின் விழிகள் இதயனை ஒருவித பாசத்துடன் வருடியது.

 

“இன்னும் ரெண்டு மாதத்தில் நீ அங்கு இருப்ப…” இன்பன் பிடியில் இருந்த இதயனை கை காட்டி இனியா கூற, மெலிதாய் வெட்கக் கோடுகள் யுக்தாவின் கன்னக் கதுப்புகளில்… 

Advertisement

 

“நான் கூட இப்படி யோசிக்கல பேபி… நீ இருக்கியே…” யுக்தா செல்லமாய் சிணுங்கி இன்பனை கண்களில் நிரப்பி அகத்தினில் பதித்துக் கொண்டாள்.

 

“உனக்கும் சேர்த்து உன் ஆள் யோசிப்பார்… டோன்ட் ஒர்ரி…” என்று கிசுகிசுத்த இனியா, லாவகமாக யுக்தாவை வெளியே தள்ளிக் கொண்டு வந்து கதவை சத்தமின்றி மூடிவிட்டு ,

 

ஒரு நீண்ட நெடிய மூச்சை வெளியேற்றி யுக்தா புறம் திரும்பி, “இனிமே தான் நமக்கு வேலையே… வாடி யுக்தா வந்து ஹெல்ப் பண்ணு…” 

 

“என்ன ஹெல்ப்?” என்ற யுக்தாவின் கேள்வி காற்றிலே கலந்து மறைந்தது.

 

சுவரின் ஓரம் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பைகளை பிரித்து கடை பரப்பிய இனியா, யுக்தாவின் செயலற்ற நிலையை கண்டு, “மசமசன்னு நிற்காம வந்து இதையெல்லாம் செட் பண்ண உதவி செய்…” என்று கட்டளையிட்டாள்.

 

உன் வீட்டிற்கு தான் வாங்குகிறோம் என்று இனியா கூறியது இப்போது புரிந்தது யுக்தாவிற்கு. இவள் எதற்கு இதெல்லாம் செய்கிறாள் என்ற வினாவுடனே அவளுக்கு உதவ வந்தாள் யுக்தா. 

 

காகிதத்தில் சுற்றியிருந்த புத்தர் சிலையை முதலில் எடுத்தவள் அந்த கூடத்தை சுற்றி முற்றி பார்த்துவிட்டு அங்கு வெற்றிடமாய் இருந்த ஷோ கேஸினுள் கண்ணில் படும்படி வைத்தாள் இனியா. தொடர்ந்து சில ஆன்ட்டிக் சிலைகளையும் கவர்ச்சியாய் கண்ணில் படும்படி வரிசையாக யுக்தா உதவியுடன் அடுக்கினாள்.

 

இவர்களின் சத்தத்தில் வெளியே எட்டிப் பார்த்த சிவகாமி மலைத்து போய் நிற்க, இவர்கள் அதை கண்டு கொண்டதாய் தெரியவில்லை. தன் போக்கில் வாங்கி வந்திருந்த சுவற்றில் மாட்டும் ஓவியங்கள், சிறிய பொம்மைகள், செயற்கை பூக்கள் தாங்கிய ஜாடி, வண்ண தொங்கட்டான்கள், காற்றில் ஆடும் சைம்ஸ் என்று அனைத்தையும் அதற்கான இடத்தை தெரிவு செய்து பொருத்தினர்.

 

“என்னமா இதெல்லாம்?” குரலை தேடிப் பிடித்து கேட்டார் சிவகாமி.

 

“எல்லாம் உங்கள் மருமகளின் திட்டம் தான்… நீங்க உங்க வேலையை தொடருங்கள் ஆன்ட்டி. முழுதும் முடித்தவுடன் வந்து பாருங்க…” என்று அவரை அனுப்பி வைத்துவிட்டு திரும்ப மீண்டும் யுக்தாவின் முறைப்பை எதிர்க்கொள்ள வேண்டி இருந்தது.

 

“இப்போது எதற்கு பேபி… இவ்வளவு பொய் சொல்ற? நீ தானே ஏதேதோ செஞ்சிட்டு இருக்க…” நல்ல பெயரை எல்லாம் தனக்கு தாரை வார்க்கிறாளே என்ற ஆதங்கத்தில் வெளிவந்தது யுக்தாவிடமிருந்து வார்த்தைகள்.

 

“ஒரே கல்லில் இரண்டு மாங்காய் மாதிரி என் ஒரே பொய்யில் இரண்டு காரணம் பொதிந்திருக்கு யுக்தா… ஒன்று ஆன்ட்டிக்கு உன் மேல் நல்ல அபிப்ராயம் உருவாகும், இன்னொன்று நான் செய்கிறேன் என்று சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவார்கள்… அதனால் தான் இப்படி… எப்படி என் பொய்?” என்று இல்லாத காலரை பெருமையாய் தூக்கிவிட்டுக் கொண்டாள் இனியா.

 

“பொய் சொல்வதில் புத்திசாலி ஆகிட்ட பேபி…” என்று புருவம் உயர்த்தி அவளை மெச்சிக் கொண்ட யுக்தா,

 

“ஆனாலும் நீ ஏன் பேபி இதெல்லாம் செய்ற?”

 

“ஸ்… வியாதி இருக்கோ இல்லையோ நம்மை கட்டுப்படுத்துவது மனது தான். மனசு ஒன்றை இருக்கு என்று நினைத்தால் இருக்கு, இல்லை என்று நினைத்தால் இல்லை. அதனால் முதலில் இவங்க மனசை தான் குணப்படுத்தனும்.

 

நம் சுற்றுப்புறத்திற்கு நம் மனதை, நம் உணர்வுகளை மாற்றும் சக்தி இருக்கு. நீயே யோசித்து பாரேன் நாம் சோகமாய் இருந்தால் தனிமையாய், வண்ணமற்ற இடத்தை தேடிச் சென்று அமர்ந்துகொண்டு, அந்த நேரத்திற்கு தேவையற்ற சோகப் பாடல்களை தேடி தேடிச் சென்று ஒலிக்க விட்டுக் கேட்கிறோம். அதுவே நம் மனம் உல்லாசமாய் இருந்தால் துள்ளலான பாடல்களை ஓடவிட்டு நம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் நமக்கு பிடித்த இடத்திற்கு செல்வோம். இவ்வளவு ஏன் நம்ம கூகிள் சர்ச் வைத்து நம்முடைய மனநிலையை கணிக்க முடியும்.”

 

அவளின் விளக்கம் புரிந்தவளாய் யுக்தா, “ஓ… இது தான் இந்த வீட்டின் மனநிலையை மாற்ற நீ எடுக்கும் ஸ்டெப்பா?” 

 

“இது முதல் படி தான்… இன்னும் கைவசம் நிறைய இருக்கு…” என்று கண்ணடித்தாள் இனியா.

 

“நீ நடத்து நடத்து…. எனக்கு கூட இதெல்லாம் தோணலடி…” என்று யுக்தா சிலாகித்து சொல்ல,

 

நக்கல் சிரிப்புடன், “அதுக்கெல்லாம் மேல் பார்ட்ல ஏதாவது இருக்கணும்டி…” 

 

“போடி லூசு…” இனியாவின் தலையை தட்டி  அவளுடன் இணைந்து அவ்வீட்டை அலங்கரிக்க இணைந்தாள். 

 

சுமார் அரைமணி நேரத்திற்குள் பேசிக் கொண்டே தோராயகமாக அனைத்தையும் அடுக்கி முடிக்க, ஒரே ஒரு பை மட்டும் மீதமிருந்தது. 

 

“இன்னும் ஒரு பை இருக்குடி…” ஆயாசமாய் கூறினாள் யுக்தா. ஒரு நாள் முழுதும் உட்கார்ந்து இருந்தே வேலை பார்த்தது, அதற்கு நேர்மாறாய் மால் முழுதும் சுற்றி ஷாப்பிங் செய்தது என்று துவண்டிருந்தாள் யுக்தா.

 

“அது கர்டைன்ஸ்டி… நானே மாட்டி விடுகிறேன். நீ ரெஸ்ட் எடு…” என்றுவிட்டு அந்த பையிலிருந்து இலகுவான நூலில் தறித்து, விழிகளுக்கு குளிர்ச்சியூட்டக் கூடிய வர்ணங்களால் ஆன திரைச்சீலையை எடுத்துக் கொண்டு இதயன் அறைக்கு சென்றாள். 

 

நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சகோதரர்களை தொந்தரவு செய்யாமல் விடிவெளிச்சத்தின் ஒளியில் ஒரு ஸ்டூலை இழுத்து போட்டுக்கொண்டு அங்கிருந்த ஜன்னல்களை புதிய திரைசீலை கொண்டு மூட முற்பட்டாள். அரவம் கேட்டு பதறி கண் விழித்த இன்பன் இனியாவை கண்டு குழப்பத்துடன் எழுந்து அமர்ந்தான்.

 

“நீங்க எப்படி இங்க?” குழப்பத்துடன் வந்தது தூக்க கலக்கத்தில் இருந்து வெளிவர முற்பட்டுக் கொண்டிருந்த இன்பனிடமிருந்து… 

 

அவனின் கேள்வியில் திரும்பியவள் ஸ்டூலின் மேலிருந்தே, “சும்மா அப்படியே வந்துட்டு போகலாம்னு…” 

 

தற்போது முழு உறக்கமும் கலைந்துவிட வேகமாக கட்டிலை விட்டு இறங்கியவன், தாங்கள் நித்திரையில் இருக்கும் போது ஒரு பெண்ணை அவர்கள் அறைக்கு அனுப்பிய தன் அன்னையை திட்டிக்கொண்டே இனியா அருகில் சென்றான், “குடுங்க… நான் போடறேன்…”

 

மறுபேச்சின்றி அவனிடம் ஒப்படைத்துவிட்டு பின்னே நகர்ந்து கொண்டாள். அவள் வெளியேறுவாள் என்று எதிர்பார்த்து காத்திருந்தவன் அவள் அங்கேயே நிற்கவும் யோசனையுடன் ஸ்டூலில் ஏறி திரைச்சீலையை மாட்டினான். அந்த இடைப்பட்ட நேரத்தில் அவ்வறை முழுதும் நோட்டமிட்டாள். ட்ரிப்ஸ் ஏற்ற வசதியாக ஸ்டான்ட் ஒன்று இதயன் படுத்திருக்கும் கட்டில் அருகிலேயே இருக்க, அதன் பக்கத்தில் ஒரு டேபிளில் நிறைய மருந்து மாத்திரைகள் சீராய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

 

“ட்ரிப்ஸ் அடிக்கடி போடுவீங்களா?”

 

அவள் கேள்வி எழுப்புவாள் என்று எதிர்பாராதவன் ஓரிரு நிமிடம் முழித்துவிட்டு பின் சுதாரித்துக் கொண்டான், “எப்போதாவது சாப்பாட்டை உடல் ஏற்றுக் கொள்ளாவிட்டால் ட்ரிப்ஸ் ஏற்றுவோம்…” 

 

தீவிரமாய் அதை காதில் வாங்கிக் கொண்டவள் தயங்கிக் கொண்டே, “எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் செய்யணுமே…”

 

“சொல்லுங்க…”    

 

தயக்கம் உருண்டு தொண்டையை அடைத்தாலும் இதயனை ஒரு பார்வை பார்த்த பின்பு தயக்கமென்ன தயக்கம்… எல்லாம் பறந்தோடிவிட்டது, “உங்க அண்ணனை ஹாலில் அமர வைக்க முடியுமா?” 

 

“என்ன?” தான் சரியாகத் தான் காதில் வாங்கினோமா என்றொதொரு சந்தேகத்தில் மீண்டும் கேட்க அவளின் தோரணை தான் கேட்டது சரியென்றே உரைத்தது.

 

“ப்ளீஸ்… கேள்வி கேட்காமல் செய்யுங்களேன்… உங்களுக்கே போகப் போகப் புரியும்.”

 

இவள் எதற்கு இதெல்லாம் செய்கிறாள். என்னதான் வீட்டில் நடக்கிறது? இந்த அம்மா வேறு இந்த பெண்ணை இங்கே அனுப்பிவிட்டு என்னதான் செய்கிறாரோ… என்று மனதில் கடுப்பு மூண்டாலும், இனியாவின் முன் எதுவும் வெளிப்படுத்தாது, “அது… கொஞ்சம் கஷ்டமாச்சே… நாம் தாங்கிப் பிடித்தாலும் அவனால அதிக நேரம் உட்கார முடியாது… அவனும் உட்காருவதை விரும்ப மாட்டான்…” என்று பதிலுரைத்தான்.

 

“ம்… ஒன்னும் பிரச்சனை இல்லை. அவரால் எவ்வளவு நேரம் முடியுமோ அதுவரை அமர்ந்திருந்தால் போதும்…” பளிச்சென்று மலர்ந்த புன்னகையுடன் சம்மதித்தாள் இனியா.

 

அவளின் இந்த பொலிவு அவனை யோசனைக்கு இழுத்துச் செல்ல, அவளும் யுக்தாவும் நேற்று அவர்களுக்கு துணை நின்று தெம்பூட்டியதன் விளைவு அவள் சொல்பேச்சை கேட்க வைத்தது, “ஓகே… நான் கூட்டிட்டு வரேன்… நீங்க நாற்காலியை சுவரை ஒட்டி நகர்த்தி வையுங்கள்…”

 

சரியென்றவள் கதவை நன்றாக திறந்து வைத்துவிட்டு இதயனை ஒரு முறை விழிகளில் அவசரகதியாய் பருகி வெளியேறினாள்.

 

இன்பன் கூறியது போலவே நாற்காலியை சுவரோரம் ஒட்டிப் போட்டவள் கூடத்தில் இருக்கும் எல்லா ஜன்னல்களையும் திறந்து விட்டாள். யுக்தா யோசனையுடன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க, இதயன் அறையிலிருந்து இன்பன் தம்கட்டி அவனை தூக்கிக் கொண்டு வருவது அவள் கண்ணில் விழுந்தது. பட்டென்று எழுந்தவள் ஓரமாய் நின்று கொள்ள, இனியா ஒரு ஆவலுடன் அவனுக்கு உதவ அந்த நாற்காலியின் அருகிலேயே நின்று கொண்டாள். மெதுவாய் இதயனை இறக்கி அமர வைத்த இன்பன் பக்கவாட்டில் நின்று கொண்டு இதயன் விழாமல் இருக்க தன் மேலே சாய்த்துக் கொண்டு, “அம்மா அண்ணனோட பெல்ட் எங்க?”

 

“இப்போது எதற்குடா பெல்ட் கேட்கிற?” என்றபடியே வெளியே எட்டிப்பார்த்தார். பார்த்தவர் திகைத்து நோக்க, இன்பனின் கூவல் அவரை மீட்டு வந்தது.

 

இதயன் அமர்ந்திருப்பதைக் கண்டு வேகமாக அறைக்குச் சென்று பெல்ட்டை எடுத்து வந்து தர, அந்த பட்டையான சேப்டி பெல்ட்டை இதயன் இடை சுற்றி நாற்காலியோடு கட்டினான் இன்பன். அந்த பெல்ட் இதயனை விழாமல் பிடித்துக் கொண்டது.

 

“நீ உட்கார்ந்திருடா நான் முகம் கழுவிவிட்டு வரேன்…” என்று கூறிய இன்பன், இதயன் முகம் பாராமல் அங்கிருந்து நகர்ந்தான். வரமாட்டேன் என்று பிடிவாதமாய் தலையாட்டி மறுத்த அண்ணனை வற்புறுத்தி அல்லவா தூக்கிக் கொண்டு வந்தான்… அதுவும் இனியா தான் வெளியே அழைத்து வரச் சொன்னாள் என்றவுடனேயே இதயனின் மறுப்பு பலமடங்கானது. ஒருவித இறுக்கத்துடன் புருவங்கள் சுருங்க இன்பனை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் இதயன். அதற்கு நேர்மாறாய் இனியாவின் கருவிழிகள் ஒருவித ஆர்வத்தை தாங்கி அனைத்தையும் உவப்புடன் நோக்கியது. 

 

*^*^*

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!