Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ07 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  07_1

 

1980 – 1990 ஆரம்பங்களில், அனைவர் வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டி இருக்காது. வசதி வாய்ப்பு இருக்கும் வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி பெட்டி இருக்கும். வாடகைக்கு டெக் (VCR PLAYER) எடுத்து படம் பார்த்த காலம் அது.

 



Advertisement

இன்று போல் தட்டை திரை (flat screen) இல்லை அன்று. அதற்கென்று கால்வாசி வீட்டை அடைத்துக்கொண்டு தனி மேசையில் வீற்றிருக்கும் அன்றைய தொலைக்காட்சி பெட்டி. சிலர் வீட்டு டி.வி. பெட்டிக்கு கதவும் பூட்டு சாவியும் உண்டு. அதையும் பத்திரப்படுத்த போர்வையால் மூடிவைத்து விடுவார்கள் (தூசி படாமல் இருக்க) தொலையியக்கியும் (ரிமோட் கண்ட்ரோல்) கிடையாது. அதிக அலைவரிசைகளும் கிடையாது. தூர்தர்ஷன் மட்டுமே. 1990s டிடி2 என்று தூர்தர்ஷனின் இரண்டாம் அலைவரிசை அறிமுக படுத்தப்பட்டது.

 

திரைப்படம் வெளிவந்து பல மாதங்களுக்கு பின் அது வீடியோ கேசட்டுகளில் வெளிவரும்.

Advertisement

 

Advertisement

வீடியோ கேசட்டுகளை டெக்கில் சொருகி படம் பார்க்கவேண்டும்.

 

நூறு ரூபாய் செலவு செய்தால்.. நான்கு படமும் டெக்கும் ஒன்றோ இரண்டோ நாள்கள் வாடைக்குக் கிடைக்கும்.

Advertisement

 

 

கங்கு மூர்த்தியின் விரலைச் சுட.. அவள் தோய்ந்த முகம் அவன் இதயத்தைச் சுட்டது. முகம் யோசனையை தழுவி நிற்க..

 

“என்ன மூர்த்தி? பிரச்சினையா?” நின்று கொண்டிருந்த நான்கு பேரில் கேட்டுக்கொண்டிருப்பது சத்யன். சத்யன். ஐ.பி.ஸ். நினைத்தால் நினைத்ததை முடிக்கும் ரகம். ஒரே ஊரில் அருகருகே வசித்த மூர்த்தி-சத்யா நட்பின் வருடங்களும் அவர்கள் வயதும் ஒன்று.

 

இருவரும் சில நாள் வித்தியாசத்தில் பிறக்க..  சத்யன் பிறந்த சில தினங்களில் அவன் தாய் விஷக்காய்ச்சலில் படுக்க… அவர் உடல் நிலை சீராகும் வரை சத்யன் வயிற்றை நிரப்பியது முத்துமங்கை, மூர்த்தியின் தாய்.

 

ஒரே தாயிடம் பாலை குடித்து ஒன்றாய் பள்ளியில் படித்து, ஒரே விடுதி அறையில் தங்கி கல்லூரி முடித்து.. மேற்படிப்பு வேலை என்று வந்தபின் வழி மாறினாலும்… இடம் மாறினாலும் இருவரின் நட்பிலும் பாசத்திலும் இடைவெளி ஏற்படவில்லை.

 

“என்ன டா… அவன் கேட்டுடே இருக்கான்… நீ யோசிச்சுட்டே இருக்க?” – ப்ரேம். ஐ.பி.ஸ். கல்லூரியிலிருந்து தோழமை.

 

மூர்த்தி, “ம்ம்..?”

 

“பச்… சொல்லுடா?” – ஜானகி ராமன், மருத்துவர். பள்ளிப் பருவ நட்பு.

 

“சொல்ற அளவுக்கு ஒன்னும் இல்ல..” என்றான்.

 

அவன் ‘ஒன்றும் இல்லை’யில் என்ன இருக்கிறது என்று சத்யனுக்கு மட்டும் தான் தெரியும்.

 

சத்யன், “கிளம்பலாம் டா… அம்மா சாப்பிடமா காத்திட்டு இருப்பாங்க..”

 

அனைவரோடும் சத்யன் வீட்டை அடைய.. இருதினங்களில் சத்யன்-அனுபமா திருமணத்தை ஒட்டி அங்கு வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது.

 

வீடு முழுவதும் பேச்சும் சிரிப்பும் நிறைத்திருக்க… அந்த கொண்டாட்டம் ஒருவனை மட்டும் தொற்றிக்கொள்ளவில்லை. சத்தியனுக்காக இன்முகமாய் அமர்ந்திருந்தாலும் மனம் முழுவதும் ஒருத்தியின் வாடிய முகம் தான். சத்யனின் குடும்பம் அவனுக்குப் புதிதல்ல.. அவனும் அந்த வீட்டுப் பிள்ளை தான். இருக்க பிடிக்கவில்லை என்று எழுந்ததெல்லாம் போய்விட முடியாது.

 

சுற்றி நண்பர்கள் கூட்டம் சலசலக்க அவன் உடல் மட்டும் தான் அங்கே! அவள் நினைவுகள் குரங்காய் அவன் மனதைக் கீறிக் கிழித்துக் கொண்டிருந்தது.

 

[the_ad id=”6605″]

 

‘அவன் வேணும்ன்னு என்னை மறந்திட்டு போன… இப்போ என்ன?’ ஒன்றரை வருடமாக அழியாமல் பதிந்து போன குறும்பு முகம்.. இன்று, களை இழந்து சோகத்தைப் பூசிக் கொண்டு…! ஏனாம்? அவன் சரியில்லையோ?

 

‘அவனும் அவன் மூஞ்சியும்?’ எரிச்சலாய் வந்தது.

 

மனதில் சிறிதளவு ஆசை கூட இல்லாமலா அப்படி எல்லாம் பேசினாள்? மனம் வலித்தது.

 

‘ஏன் துளசி என்னை மறந்த?  என்னால உன்ன மறக்க முடியலியே துளசி…’

 

‘ஏன் என்னை மறந்த?’ கத்தவேண்டும் போல் கோபம் வந்தது.

 

கேள்வி.. எரிச்சல்.. வருத்தம்… கோபம்.. இன்னும் என்ன என்ன மூர்த்தி?

 

உள்ளே எழுந்த புகைமூட்டத்தைத் தணிக்க வேறு புகை தேவைப்பட்டது. வீட்டில் புகைக்க முடியாது. கால் தன்னால் வாசலுக்குச் சென்றது.

 

கோபப்பார்வை பார்த்தான் தான். ஆனால் அவனால் அவள் மேல் கோபப்பட முடியவில்லை.

 

எதற்கு அப்படிப் பார்த்து வைத்தாள்? மனம் பிசைந்தது. கையில் புகைந்து கொண்டிருந்ததை மறந்து கண்ணை மூடி அமர்ந்துகொண்டான். மாற்றான் தாலியை அவள் கழுத்தில் பார்க்கும் நாள் அவன் வாழ்வில் வரும் என்று அவன் கனவு கூட காணவில்லையே…

 

‘துளசி..?’ மனம் கூப்பாடு போடுவதை நிறுத்தவே இல்லை. அன்று பார்த்து மலைத்து நின்றானே… அந்த துளசியா இது? மனம் இல்லை என்றது.

 

“ஏய் சுந்தரி… பிடி டீ.. அந்த ஆட்டு குட்டிய பிடி டீ..” தலை தெறிக்க அன்று அவனைக் கடந்து ஓடினாள் ஒருத்தி..

 

“இதுக்கு மேல என்னால முடியாது போ… அதுவே வரட்டும்… உக்காருவோம்..” என்று மரக்கிளையில் சுந்தரி அமர.. மற்றவளுக்கு வால் கொஞ்சமே கொஞ்சம் நீளமாய் போக..

 

”நல்லா குதிடி..” என்று அமர்ந்திருந்தவளுக்கு வேலை கொடுத்தாள்.

 

“அம்மா பார்த்தா… ரெண்டு பேரும் செத்தோம்…” சொல்லிக்கொண்டே இரண்டு வாலும் ஒரு மரக்கிளையின் நின்றுகொண்டு… மேலே இருந்த மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு ஆட ஆரம்பித்தனர். அவர்கள் வேகம் கூட்டக் கூட்ட கிளையும் பலமாய் மேலும் கீழும் ஆட… இருவருக்கும் அப்படி ஒரு உற்சாகம்.

 

பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும் உற்சாகம் அது.

 

அன்று தான் அவன் துளசியை முதலில் பார்த்தது. இதோடு நின்றிருந்தால் கூட அவன் கவனித்திருக்க மாட்டான் அந்த பரட்டை குட்டியை..

 

இரட்டை ஜடை இரண்டும் பாதி பிரிந்து தொங்கிக் கொண்டிருக்க… அதில் காய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது கனகாம்பர சரம். சலங்கை ஒலி திரைப்படத்தை டெக்கில் பார்த்துவிட்டு நடிகை ஜெயப்பிரதா போல் முன்னிருந்த முடியை கத்தரித்து விட்டிருக்க.. அதுவும் அவள் ஆடிய ஆட்டத்தில் எல்லா திசையிலும் பறந்து கொண்டிருந்தது. தாத்தா சட்டை போன்ற பெரிய.. சேற்றில் புரட்டி எடுத்த சட்டையும்.. இடுப்பில் தூக்கிச் சொருகியிருந்த பெரிய பாவாடையும் அவளை மீண்டும் பார்க்கத் தூண்டாது.

 

அவள் சித்தி, சுந்தரியின் தாய் “அடி எருமைகளா… இறங்குங்க டீ குரங்குகளா.. பூவெல்லாம் கொட்டி போய்டுமே.. விளக்குமாறு பிஞ்சா தான் உங்க ரெண்டு பேருக்கும் அறிவு வரும்..” சத்தம் போட்டுக் கொண்டே கீழே கிடந்த சுள்ளி ஒன்றை எடுத்துக்கொண்டு  அவர் ஓடி வர..

 

‘செத்தாளுங்க..’ என்று இவன் நினைத்து முடிக்கும் முன்..

 

வேகமாய் ஆடிக் கொண்டிருந்த முத்திரி மரக்கிளையிலிருந்து ஒரே குதியாய் தள்ளியிருந்த மணல் மேட்டில் குதித்து இரண்டு நண்டுகளும் உருண்டு புரண்டு ஓட.. பார்த்துக் கொண்டே நடந்தவன் அப்படியே நின்று விட்டான்.

 

அன்று இதழ் விரிந்தது.. இன்று நெஞ்சைக் கரித்துக் கொண்டு வந்தது.

 

[the_ad id=”6605″]

 

தெரு முக்கிலிருந்த தேநீர்க் கடையில் அமர்ந்திருந்தவன் புகைக்க ஆரம்பித்தான்.  அவள் நினைவிலிருந்து வெளிவரப் புகையை உள்ளனுப்ப நினைத்தவன் அனுமதியில்லாமலே செவிப்பறை வழி உள்ளே சென்றுக் கொண்டிருந்தது எஸ்.பி.பாலசுப்பிரமணி அவர்கள் உருகி உருகிப் பாடிக்கொண்டிருந்த பாடல், வானொலியின் புண்ணியத்தில்.

 

“தேரே மேரே பீச்சுமே.. (உனக்கும் எனக்கும் நடுவில்)

 

தேரே மேரே பீச்சுமே..

 

கேசா ஹே ஏ பந்தன் அஞ்சானா (இது என்ன விதமான பந்தம்)

 

கேசா ஹே ஏ பந்தன் அஞ்சானா…”

 

கமல்ஹாசன் எப்படி உருகினாரோ..? இவன், அதை விட அதிகமாய் உருகிக் கொண்டிருந்தான்.

 

அவனுக்குமே புரியவில்லை.. இருவருக்குமான பந்தம் எப்படிபட்டதென்று.

 

‘என் பிள்ளைகளுக்கு அம்மாவா இருப்பேன்னு சொன்னியே துளசி?’ மனம் வலித்தது. ‘அதையுமா மறந்து போன?’

 

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…”  சிகரெட்டை கீழே விட்டு கையை உதறிக்கொண்டான்.

 

அமர்ந்திருந்தவன் தோள் மேல் அரவணைப்பாய் கை போட்ட சத்யன்.. “இன்னும் எத்தன தரம் சுட்டுக்கப் போற?”

 

பதிலில்லை. முகம் பார்க்கவும் விழையவில்லை. கீழே உயிரை விட்டிருந்த சிகரெட்டையே பார்த்து அமர்ந்திருந்தான்.

 

“துளசியா அது?”

 

இவனுக்கும் மேலோட்டமாக தெரியும். ஒரு பெண்ணின் மேல் ஆசைப்பட்டு அவளை தொலைத்துவிட்டான் என்பது வரை தெரியும். நான்கு மாதம் முன் இனி அவள் எனக்கில்லை என்று மனம் ஒடிந்து.. இந்த வேண்டாத பழக்கத்தைப் பழகிக் கொண்டாலும் என்றாவது அதிக மன அழுத்தமிருந்தால் மட்டுமே புகைப்பான்.

 

இன்றோ.. தெருவில் ஒருத்தியைப் பார்த்தபின் இது நாலாவது.

 

“அது அவ புருஷனா?”

 

முறைத்தான். மனம் குமைந்தது. அந்த தேவதைக்கு அவனா புருஷன்? நினைக்கக் கூட பிடிக்கவில்லை. எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தும் ரகமில்லை அவன். எதிர்பார்க்கவில்லை.. கைமீறிவிட்டது. பதினேழு வயது பெண் எவன் பின்னோடு ஓடி விடுவாள் என்று கனவா கண்டான்?

 

“இப்போ அவ நினைப்பில் தான் இப்படி புகைச்சு தள்ளுறியா?”

 

“..”

 

“அந்த நெத்தி என்னடா உன்ன பண்ணிச்சு… காலைல இருந்து அத இந்த பிராண்டு பிராண்டற?”

 

நெற்றியை தேய்த்துக்கொண்டே கண்மூடி அமர்ந்திருந்தவனைக் கடியவும் முடியவில்லை.

 

“சொன்னா தான் மூர்த்தி தெரியும்? என்ன விஷயம்? வேண்டாம்னு போனவள விடுடா… வந்த வேலைய பாரு டா..”

 

மூர்த்தி கண்மூடினாலும்.. கண் திறந்தாலும் அவளின் கண்ணீர் நிறைந்த கண்ணும்.. துடித்துப் பிதுங்கி நின்ற உதடுமே… அப்பாவிடம் எதையோ எதிர்பார்த்து அது கிடைக்காமல் போகவே ஏமாற்றம் தாங்காமல் பிஞ்சு அழத் தயாராகுமே.. அப்படி தான் தோன்றியது அவனுக்கு.

 

‘என்னிடம் எதிர்பார்க்க என்ன இருக்கிறது?’ அவனால் அமைதியாய் இருக்க முடியவில்லை. ‘ஏன் அப்படிப் பார்த்தாள்?’ ‘என்ன வேண்டும் துளசி? என்ன எதிர்பார்க்கிறாய் என்னிடம்?’

 

“என்ன டா மூர்த்தி? என்ன உன்ன படுத்தி எடுக்குது? எனக்கு ரெண்டு நாள்ல கல்யாணம்… உன்ன இப்படி பார்த்துட்டு என்னால அத செலிப்ரேட் பண்ணக் கூட முடியலை..”

 

மூர்த்தி இருக்கும் இடமே அப்படி கலகலப்பாக இருக்கும். சிரித்த முகம்.. முறுக்கிய மீசையையும் தாண்டின ஒரு மென்மை இருக்கும். சில மாதங்களாகவே அவை எல்லாம் போன இடம் தெரியவில்லை. சிரிப்பது இருக்கட்டும்.. இரண்டு வார்த்தை சேர்ந்தாற்போல் அவன் வாயிலிருந்து வந்துவிட்டால்.. நிச்சயம் அன்று மழை தான் என்ற நிலையில் இன்று!

 

“எனக்கு அவளை பத்தின எல்லா விஷயமும் வேணும்..” எதோ முடிவெடுத்துவிட்டான் போலும்.

 

“டேய்.. நான் லீவ்ல இருக்கேன் டா… ரெண்டு வாரம் லீவ்…”

 

திரும்பிப் பார்க்க மட்டும் தான் செய்தான்.

 

“போ டா. ரொம்ப பண்ற டா நீ… நாளைக்கு நலங்கு. அதுக்கப்புறம் வெளியில விடமாட்டாங்க.. ”

 

“எனக்கு இன்னைக்கே வேணும்…”

 

“டேய்…? மணி நாலு டா..! இதுக்கு மேல..? பச்!”

 

அவள் கண்.. அந்த உதடு… அவனால் எப்படி முடியும் கண்டு கொள்ளாமல் இருக்க?

 

“கண்டிப்பா வேணும்… உன்னலா முடியும் சத்யா… நீ போலீஸ் தானே. செய்”

 

[the_ad id=”6605″]

 

“இவன் ஒருத்தன்..! சரி… காலையில பார்த்த இடத்தில இருந்து ஆரம்பிப்போம். ஃபோட்டோ ஏதாவது இருக்கா?”

 

பர்சிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தான். அவன் பட்டுச் சட்டையில் நிற்க அவன் முன் இடது கையை ஒட்டி அவன் துளசி, பட்டுடுத்தி, சர்வ அலங்காரத்தில். அவன் தலை வலது புறம் சரித்து அவள் முகம் பார்க்க விழைய.. அவளும் அழகான புன்னகை முகமாய். தலை கொஞ்சமாய் சரிந்திருக்க, ஓரப்பார்வையால் பின் நின்றிருந்தவனைப் பார்க்க முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளை எடுத்திருந்தனர் அந்த அழகான வண்ணப் படத்தை. 

 

இந்த முகமா இன்று பார்த்தது?

 

“சரி.. வா வீட்டுக்கு போலாம். முடிஞ்சத பார்க்கிறேன்…”

 

இவர்கள் கண்டு பிடித்து பொறுமையாய் செல்லும் வரை அவள் இருப்பாளா? அவன் மனநிலை இப்படி இருக்க அவள்?

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!