Skip to content
Post Views: 2,781
அவன் தூக்கியடித்த சொம்பு சுவற்றில் மோதி ஒரு பக்கமாய் நசுங்கி கீழே விழுந்தது.
அங்கிருந்த அனைவரும் கிடுகிடுத்து நிற்க, அவனின் அம்மா மட்டும்,” இப்ப என்ன சொல்லிட்டாவனு கொந்தளிக்கிற நீயி.?”என்று மகனை அதட்டியவர், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை,
“ஏலேய் இங்க என்ன படமா காட்டுறான் எம்மவன்…போய் சோலியைப் பாருங்கடா”என்று சத்தமிட்டு அனைவரையும் வெளியேற்றினார்.
Advertisement
“இன்னொருக்க பொண்ணு பாக்குறேன் பொடவை வாங்குறேன்னு போன அம்புட்டு தான்”என்று எச்சரித்தவன் வெளியே செல்ல
“ம்ம்க்கும் போறாங்க இப்பத்தான், பொடவை வாங்க ரவிக்கை வாங்கனு. வாங்கி எவ உடுக்க காத்துக் கெடக்காளாம் ?” என்று அவருமே அவனுக்கு சமமாக தன் பங்கிற்கு எகிறிவிட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டார். ‘உன் கோபம் என்னை என்ன செய்துவிடும்?’ என்ற இறுமாப்பு அவர் நடையில்.
“என்ன ராசா எதுக்கு ஓ அம்மை கத்துறா?” காதை குடைந்தபடி கேட்ட தந்தையை தன்னால் ஆனவரை முறைத்தவன் வெளியே சென்று விட
Advertisement
“உள்ளார தான் அப்பளம் பொரிச்சுட்டு இருக்காக பெரியப்பா, பெரியம்மா கிட்டவே கேட்கறது தான?” என்று காத்தமுத்து சொல்லி விட்டுச் செல்ல
Advertisement
“என்னத்துக்கு அப்பளமா என்னைய சட்டியில போடவா… நானே சிவசிவா’னு இருக்கேன்.” என்றார் தெருவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே.
“நீரு சிவசிவா’னு இருக்கிறதாலதேன் அவக கத்துறாக” என்று குரல் கொடுத்தான் காத்து.
“செர்றா செர்றா ரொம்ப கூவாம போய் உங்கொண்ணனைப் பாரு என்னவோ சடைச்சுக்கிட்டு போறான் ஆத்தான்னா வையத்தான் செய்வா நானெல்லாம் வாங்காத ஏச்சா பேச்சா” என்றபடி அவர் விட்ட வேலையைத் தொடர்ந்தார்.
Advertisement
ஒமக்கு அவக ஏச்சு பேச்செல்லாம் செமிக்கும் (செரிக்கும்) எங்களுக்கு அப்படியா என்று காத்தமுத்து கிண்டல் பேச
ரெண்டு லிட்டரு சோடா வாங்கி ஊத்து எல்லாஞ்செமிக்கும் போடா உன் நொண்ணன் போய் நேரமாச்சு என்றார்.
போறோம் போறோம் ஆனாலும் பெருசு ஒமக்கு இருக்க ஏத்தத்துக்குத்தேன் பெரியாத்தா ரவுண்டு கட்டுது என்றபடி கலைச்செல்வனிடம் ஓடினான்.
கலைச்செல்வன் அங்கே தனது வண்டியை துடைத்துக் கொண்டிருக்க அண்ணே குடுங்க நா தொடைக்கிறேன். இதெல்லாம் நா பார்க்க மாட்டேனா என்று படபடப்புடன் துணியை வாங்கிக் கொண்டான்.
சோலிக்கு போனா வண்டியை தொடைக்கணும் னு தெரியும் தான. பெறவு நீங்க செய்யலைனா நாந்தான் செய்வேன் என்றதும் மன்னிச்சுக்கிடுண்ணே என்ற காத்த முத்து சில நிமிடங்கள் அமைதிக்குப் பிறகு
“எண்ணே… இன்னிக்கு மறவம்பட்டில ஒரு பஞ்சாயத்து” என்று இழுத்த காத்தமுத்துவை முறைத்துப் பார்க்கவும்
அவனோ,”நீங்க கட்டப்பஞ்சாயத்து பண்ண எல்லாம் வரமாட்டீயனு சொன்னேன். ஆனா வெளியாளு இருந்தா நல்லா இருக்கும்’னு ரோசனையாம். ரெண்டு பக்கமும் மத்துசமா பேசணும்ல” என்றான் .
மனதிலோ ஸ்ஸப்பா ஒரு சேதி சொல்லங்காட்டியும் மூச்சு நின்றும் போல என மனதினுள் ஆசுவாசமடைந்தான்.
“என்ன பஞ்சாயத்து…ஆளுக மத்த வெவரம் எல்லாம் என்னனு சொல்லு, இந்த பொம்பளைப்புள்ள வெவகாரம்னா நா வரமாட்டேன். அதுக்கு உசிலம்பட்டிகாரங்கதேன் சரி. அவிங்க தான் செவுள்ல நாலு விட்டு நிமுத்துவாய்ங்க” என்றான் கலைச்செல்வன்.
ஆத்தே ஆரம்பத்துலேயே கட்டைய போடுறாரே என்று அதிர்ந்தவன் விட்றா முத்து நீ பார்க்காததா என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு பேச்சைத் துவங்கினான்.
“பொம்பளைப்புள்ள வெவகாரம்னா அங்கேயே நிறுத்தி இருப்பேன் ண்ணே ஒனக்குத் தெரியாதா.இது ஊட்டு பெரச்சனை” என்றான் மேம்போக்காக.
“ஏன்டா வூட்டு பெரச்சனை எதுக்கு நம்ப கிட்ட வருது. எடத் தகராறுனா வக்கீலு யாரையாச்சும் வச்சு பைசல் பண்ண வேண்டியது தான நம்மள கூப்புடுறாய்ங்க. செரி போவோம் இங்கருந்தா இவக பொண்ணு பாக்க கூப்புடுவாக” என்றவன் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அவன் கலைச்செல்வன் பெயர் தான் மென்மையாக இருந்தது. உடலும் உள்ளமும் இறுக்கத்தின் குடியிருப்பு தான். வயது முப்பதுகளின் துவக்கத்தில் இருக்க வாலிபமோ இன்னும் இருபதில் நின்றது. கருப்பு சட்டையும் தும்பைப்பூ வேட்டியும் அவனின் நிறத்துக்கு எடுப்பை எக்குத்தப்பாக ஏற்றிக் கொடுக்க, இளங்குமரிகளின் இதயத்தில் கனவு நாயகன். சிரித்தால் மொத்தமாய் அள்ளிவிடுவான் எதிரில் இருப்போரின் மனங்களை. ஆனால் எங்கே சிரிக்கிறான். விழிகளில் ரௌத்திரமும் இறுகிய உடல்மொழியும் ஏனையோரை தள்ளியே நிறுத்தியது. அண்ணனை விழிகளில் நிரப்பிய காத்த முத்து கைபேசியை எடுத்தான்.
“யாரு பெருமாளண்ணனா?, செல்வாண்ணே வர ஒத்துக்கிட்டாப்டி, அட கேளும்ய்யா லேசுபாசா தான் விஷியத்தை சொல்லி இருக்கேன். நீ ஏழ்ரையை இழுத்து விட்ராத, பொண்ணு விசியம்னா அண்ணே ஏ மென்னிய நிமுத்திடுவாக” என்று இணைப்பைத் துண்டிக்க செல்வனின் அன்னை வந்து அவன் பின்னால் நின்றார்.
“எலேய் கோணங்கி என்னடே பஞ்சாயத்து…அவேங்கிட்ட சொல்லாத அளவுக்கு?” என்று விஷயத்தை சரியாக நூல் பிடிக்க
“ஆத்தா ஒங்காலுல விழுதேன். அண்ணேங்காதுல போட்ராத அப்பறம் ராவுக்கு எந்தலக்கறிதேம் பாத்துக்க” என்று பம்மினான் காத்தமுத்து.
“இம்புட்டு அச்சமிருக்கவேன் எதுக்குடா ஒளிச்சு மறைச்சு பண்ற?” என்று கேட்க
“சொன்னா வெஞ்சாமரத்துல வீசிப்புட மாட்டியே?”என்று முன்னெச்சரிக்கையாக கேட்டுக் கொள்ள
“அது நீ ஓ வாப்பெட்டியை தொறக்கறத பொறுத்து…என்னடே சோலி?” என்று வினவ
அவனும் விலாவாரியாக சொல்லி முடிக்க, அவரோ விழி விரித்து வாயில் கை வைத்தார்.
“ஓ முதுவுத்தோலு உரியப்போகுதுடி, செத்த அவேங்கிட்ட…என்ன சோலிடா பாத்து வச்சிருக்க?” என்று பதறி கேட்க
“ஏத்தா பெரியாத்தா நா என்ன செய்ய…? அந்தப்புள்ள இவருதேன் வரணுமின்னு பொட்டுல அடிச்சாப்ள சொல்லிப்புடுச்சு” என்றான் அவனுமே செல்வனின் கோபத்திற்கு ஆளாகப் போவதை நினைத்து.
“ஆமா அது கெடக்கட்டும் புள்ள எப்படி இருக்கும்?” என்று அவர் ஆர்வத்துடன் வினவ
“அந்தப் புள்ளைக்கே கல்யாணம் ஆகி ஒரு புள்ள இருக்குதாம்” என்று அவர் ஆர்வத்திற்கு அணைபோட்டான் காத்தமுத்து.
“த்த ச்சே கெரகத்த நாங்கூட வயசுகொமரியோனு நெனைச்சேன். இவனுக்கு ஒரு கலியாணத்தை பண்ணி வைக்கங்காட்டியும் எங்கட்ட காடு போய் சேந்துடுமாட்டுக்கு. என்று புலம்பிக் கொண்டே செல்ல
ஏனாத்தா அம்புட்டு வெசனமின்னா எனக்குத்தேன் ஒரு பொண்ணை பாரேன் என்று காத்தமுத்து சொல்ல
இந்தா போறேன் உம் பொண்டாட்டியையும் சேர்த்து பொண்ணு பார்க்க கூட்டிப் போறேன் என்று அவர் நக்கலாய் சொல்ல
நீயி எங்குடியை கெடுத்துடுவ போலவே என்று அவன் வாயில் கை வைக்க
நட்டமா நிமுத்த முடியாதவனுக்கு நாளுக்கு ஒரு சொகுசு கேட்குதாம் போடா போ போய் சோலியை பாரு வந்துட்டான் பொண்ணு பாரு பொழப்ப பாருன்னு . நாம எல்லாம் புள்ள குட்டினு ஆகிட்டோமே நமக்கு படியளக்குறவன் ஒத்தையா நிக்கானேன்னு எவனுக்காவது ரோசனை வருதா இல்ல கவலைதேன் அப்பிக் கெடக்கா எல்லாம் நானே பட்டுக்கணும் என்று புலம்பிக் கொண்டே அவர் சென்றார்.
அதெல்லாம் அண்ணனுக்கேத்த அல்லி ராணியை பார்த்து அண்ணியா கொண்டாந்துர மாட்டோம் நீ வெசனப்படாதத்தா என்று கலைச்செல்வன் குரலுக்கு இந்தா வந்துட்டோம்ண்ணே என்று குரல் கொடுத்தவாறு ஓடினான் காத்த முத்து.
***********
“ஹவ் டேர் யூ ...?” என்று ஆக்ரோஷமாக கையை ஓங்கியிருந்தாள் இளம்பெண்ணொருத்தி.
ஆனால் எதிரில் இருந்தவனின் மீது அடி விழவில்லை. ஓங்கிய கை அந்தரத்தில் நிற்க, அதை இறுகப் பற்றியிருந்தான் கலைச்செல்வன்.
செங்காந்தளாய் சிவந்த விழிகளால் அவனை கூர்ந்து நோக்கி மூக்கை விடைக்க அவனோ அசட்டையாக அவளைப் பார்த்தான்.
“என்ன பழக்கம் இது நடுரோட்டுல கையை ஓங்குறது… இதான் படிச்ச லட்சணமா?” என்று கேட்கவும்
அவளோ கையை அவனிடமிருந்து விலக்க முயன்றபடி,” நடந்தது தெரியாம இன்வால்வ் ஆகாதீங்க மிஸ்டர்” என்று எச்சரிக்கை விடுக்க
“என்னவேனா நடந்துருக்கட்டும். அதுக்காவ நடு வீதியில ஆம்பளையை கையை ஓங்குறது என்னப் பழக்கம் த்தா?” என்று மீண்டும் அவன் அங்கேயே நிற்க
“படிச்ச திமிரு ண்ணே, அதேன் ஒடம்பெறந்தவனையே கையை ஓங்குது. வீட்டுலயும் இது ஆட்டிவைக்க ஆடுதாகல்ல அந்த கொழுப்பு.” என்றான் சற்று முன் அடிவாங்க இருந்தவன்.
“இலக்கி, என்னம்மா நான் தான் பேசுறேன்னு சொன்னேன்ல அப்புறம் ஏன் இப்படி?” என்று ஒரு பெரிய மனிதர் ஓடிவந்தார்.
கலைச்செல்வன் அவளது கையை விட்டுவிட்டு,” ஒங்க மகளா?” என்றான் அழுத்தமான குரலில்.
“இல்ல தம்பி என் தம்பி மக. நீங்க நீங்க செல்வம் தான… நல்லா இருக்கீங்களா ? ஏதும் வேலையா தம்பி?” திருத்தமாக பேசினார் கிராமத்து பாங்கில்லாமல்.
இலக்கியா அவனை ஆராய்ச்சியாக பார்த்தவள்,” சொல்லி வைங்க பெரியப்பா. இன்னொரு தடவை ஓங்கறதோடு நிறுத்த மாட்டேன்”என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
கலைச்செல்வன் அவரிடம் திரும்பி,” ஏதோ வீட்டு பிரச்சினை. பஞ்சாயத்து பண்ண வரணுமின்னு கேட்டு இருந்தீங்களாம். இப்ப ஏதும் வேலையா வந்தீகளானு என்னைய கேட்குறீங்க என்ன சங்கதி?” என்று அவன் சற்று மிரட்டலாய் கேட்க
“அது பாப்பா இருந்துச்சேனு சமாளிச்சேங்க தம்பி. நீங்க கோவிக்காதீங்க. பிரச்சினையே அதுனால தான் தம்பி.பெறவு அது இருக்கும் போது ஒடைச்சு பேச முடியுங்களா?”என்றவர்,” தோப்பு வீட்டுல தான் பேச்சு வார்த்தை தம்பி அங்கன போயிருவோம்.” என்று அழைத்தார் அவர்.
“என்ன பொம்பளைப்பிள்ளையை வச்சா..?, என்ன வெளையாடுறீகளா?” என்று அவன் தன் கையை இருப்பக்கமும் ஏத்தி விட்டு முறைக்க
அவரோ சட்டென பம்மி,” இருங்க இருங்க தம்பி… இலக்கி இலக்கியா வச்சு இல்ல. அது சம்பந்தமான பிரச்சினை அவ்வளவு தான்.” என்று சமாளித்தார்.
கலைச்செல்வனுக்கோ அடங்காத கோபம் பீறிட்டது. அழைத்து வந்த காத்த முத்து கையில் கிடைத்திருந்தான் என்றால் இந்நேரம் அவனை ஒரு வழியாக்கி இருப்பான்.
“ஏ முத்து?!” என்று சத்தமாக அழைக்கவும் காத்த முத்து தலைதெறிக்க ஓடி வந்தான்.
“எங்கிட்ட என்ன சொன்ன நீ? என்று குரலில் கடினமேற்றிக் கேட்க
“அது வந்து…” என்று அவன் தயங்க
“என்ன சொல்லி கூட்டி வந்தன்னு கேட்டேன் காதுல ஈயத்தை காச்சி ஊத்தணுமா நானு ?”என்று அவன் முறைத்துப் பார்த்ததில் வெலவெலத்துப் போனான் காத்த முத்து.
“இல்லண்ணே அது வந்து, நான் சொன்னேன் நீங்க இதெல்லாம் பாக்க மாட்டீங்க பஞ்சாயத்து பண்ண மாட்டீங்கனு ஆனா…?” என்று இழுத்தான்.
“என்ன ஆனா ஆவான்னா வா கெளம்பு மொதோ வர்றியா நான் போவவா?” என்று அவன் விழிகளை உருட்டியதில்,” போகலாம் ண்ணே” என்று சொல்லி விட
அங்கிருந்த பெரியவரோ,” தம்பி என்ன நீங்களே இப்படி சொல்றீங்க எப்பா முத்து உன்னை நம்பி தான் இருக்கேன் “என்று அவர் அவன் கையைப் பிடித்துக் கொள்ள காத்த முத்து சில காரணங்களால் அங்கே நின்றான் தயங்கி.
“அண்ணே!” எனும் போதே,” தம்பி உங்களுக்கு இதால எதுவும் வராது, நா உத்தரவாதம் தர்றேன்.பஞ்சாயத்த மட்டும் முடிச்சுவிடுங்க” என்றார் அவர்.
” இந்தாருங்க பொம்பளைப்புள்ளைய முன்ன வச்ச சங்கதிக்கு எல்லாம் நா வாரதுல்ல… என்னைப் பத்தி தெரியும்ல” என்று மீண்டும் அவரிடம் திரும்ப
“ஏன் பொண்ணுங்கன்னா அவ்வளவு பயமா மிஸ்டர் கலைச்செல்வன்?” என்ற குரலில் அவன் திரும்பி பார்க்க அங்கே இலக்கியா நின்றிருந்தாள்.
….. தொடரும்.
error: Content is protected !!