Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உன்னைப் பார்த்த முதல் நாளே 11

வசீகரன் மதிய சாப்பாட்டுக்கு வீட்டிற்குள் நுழைந்தான்.  அவனது வண்டி சத்தத்தை கேட்டதும், வசீகரனின் தங்கை, ராணியின் மகன் சர்வேஷ் ஓடி வந்து வாசலில் நின்றான்.

பைக்கை நிறுத்தி இறங்கியதும், மருமகன் வீட்டினுள் இருந்து ஓடிவருவதைப் பார்த்த வசீகரன், சந்தோஷமாகி “ஹேய்… சர்வா எப்ப வந்தீங்க…” என வேகமாக வந்து அவனை தூக்கி சுழற்றி தோளில் போட்டுக் கொஞ்சி விளையாண்டான்.  மாமன் தன்னை  தோளுக்குமேல் தூக்கி சுத்தியதும், சர்வாவுக்கும் ஏக குஷி.  இருவரும் சிரித்து விளையாண்டவாறே வீட்டினுள் நுழைந்தனர்.

வசீகரன்,  “வாங்க அகிலன்.   எங்க ராணி…யக் காணோம்…?  எப்போ வந்தீங்க….?”

அகிலன், “காலையில வந்தோம் மச்சான்” என்றான்.  அதற்குள் இவனது குரல் கேட்டு ராணியும் உள்ளேயிருந்து வெளியே வந்தாள்.



Advertisement

வசீகரன் தங்கையைப் பார்த்ததும் புன்னகையுடன் “வா ராணி” என தலையசைத்து வரவேற்றான்.

ராணி, “ஆமா.  உனக்கு எங்களையெல்லாம் நேர்ல பார்த்தா தான் கண்ணே தெரியும்.  அப்படியே தங்கச்சி மேலயும், அவள் பையன் மேலேயும் ரொம்ப அக்கறை இருக்க மாதிரிதான்” என்று முறுக்கிக் கொண்டாள்.

முன்பெல்லாம் தங்கையையும், சர்வாவையும் சென்று அடிக்கடி பார்த்து வருவான்.  இன்னொரு புதிய கடையும் திறந்ததிலிருந்து, வேலை பளு அதிமாகியிருந்தது வசீகரனுக்கு.  ஆதலால் அதிகம்  செல்ல முடிவதில்லை.  அதைதான் ராணியும் சொல்லி வருத்தப்பட்டாள்.

Advertisement

வசீகரன், “ஏய் கோவப்படாத ராணி.  அம்மா எதுவும் சொல்லலயா உன்கிட்ட?”

Advertisement

“ஏன் சொல்லாம?  எல்லாம் சொன்னாங்க.   அதைகூட உன்னால ஒரு போன் போட்டு சொல்ல முடியல.  அம்மா சொல்லி தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு.  பெரிய பிஸ்னெஸ் மேனாயிட்ட.  ம்ம்… என்னையெல்லாம் கண்டுப்பியா… இனிமே…?”.

“ச்ச… ச்ச… ஏன் அப்படி சொல்ற ராணி?  உன்கிட்ட நேர்ல வந்து சொல்லனுன்னுதான் ஆசை.  எங்க நேரம் ஒழியவே மாட்டேனுது.  வேலை சரியாயிருக்கு.  அதான் அம்மாகிட்ட சொல்லி, உன்கிட்ட சொல்ல சொன்னேன்.  மாப்பிள்ளைகிட்டகூட போன்ல பேசினனே.  உன்கிட்ட சொல்லலையா…?”

“எல்லார்கிட்டயும் பேசுவ.  என்கிட்ட பேசதான் உனக்கு நேரம் இருக்காது”.

Advertisement

“அப்படியில்லை ராணி.  போன்ல சொன்னாலும் நீ கோச்சுப்ப.  நேர்ல வரனும்னு அடம்பிடிப்ப.  எப்படியும் உன்னை நேர்ல வந்து பார்த்து சொல்லிட்டு வரனும்னுதான்  ட்ரை பண்ணேன்.  அதுக்குள்ள நீயே வந்துட்ட” என்றான் சமாதானமாக.

இடையில் சரசு வந்து, “ஏற்கனவே நேரமாயிடுச்சு.  எல்லாம் உனக்காக சாப்பிடாம உட்கார்ந்திருக்காங்க.  மாப்பிள்ளை சாப்பிடட்டும்.  எல்லாரையும் கூட்டிட்டு சாப்பிட வா.  வாங்க எல்லாரும் சாப்டுட்டு வந்து பேசுங்க” என அனைவரையும் சாப்பிட அழைத்து சென்றார்.

வசீகரன் சொன்னது போல, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகிலேயே, இன்னொரு பூக்கடையை ஆரம்பித்திருந்தான்.  ஆனால் அது மார்கெட்டில் வியாபாரம் செய்வதுபோல மொத்த வணிகம் இல்லை.  மக்களிடையே நேரிடையாக விற்பனை செய்வதுபோன்ற வியாபாரம்.

அந்த இடத்தில் ஏற்கனவே பூக்கடை வைத்திருந்தவர். தனது கடையை விற்க இருக்கிறார் என கேள்விப்பட்டு, இவன் அந்த கடையை வாங்கியிருந்தான்.  மெயினான இடம்.  இவனுக்கும் ஏற்கனவே பூ வியாபாரம்தான் என்பதால் இன்னும் தோதாக இருந்தது.  என்ன மார்க்கெட்டில் பூக்களை மொத்தமாக வாங்கி உதிரிகளாகவே எடை போட்டு சில்லரை வியாபாரிகளுக்கு விற்று விடுவான்.

இங்கே பூக்களை சரமாகவும், மாலைகளாகவும் தொடுத்து விற்பனை செய்து கொண்டிருந்தான்.  கல்யாண விசேஷங்களுக்கு நேரிடையாக பேசி ஆர்டர் எடுக்கவும் தொடங்கியிருந்தான்.  ஆதலால் முன்புபோல நேரம் இருப்பதில்லை அவனுக்கு.

நீண்ட காலமாகவே இதே தொழிலில் இருப்பதால் நிறைய வாடிக்கையாளர்கள் அவனுக்கு தெரிந்திருந்தனர்.  இவனே நேரடியாக விவசாயிகளிடமிருந்து பூக்களை கொள்முதல் செய்வதால், நியாயமான விலைக்கும் கொடுக்க முடிந்தது. அதுவே விற்பனை அதிகரிக்கவும் வழி வகுத்தது.

மார்க்கெட்டில் இருந்த பூக்கடையின் வேலை முடிந்து, கடையை அடைத்து வெளி வந்தவன், அங்கேயே அவனது பைக் மேலேயே சாய்ந்து நின்று கொண்டான்.  பெரும்பாலும் அந்த வரிசையில் இருந்த கடைகள் எல்லாம் மூடி இருந்தனர்.

ஒன்றிரண்டு கடைகள் மட்டும் திறந்து இருந்தது.  கடை முதலாளிகள் உட்கார்ந்து அன்றைய கணக்குகளை பார்த்திருந்தனர்.  வசீகரன் மட்டும் தனியாக நின்றிருந்தான் யோசனையாக.

மதிய சாப்பாட்டின் போது அவனது அம்மா சரசு மகளிடமும், மருமகனிடமும் தெரிவிப்பது போல் இவனுக்கும் சேர்த்தே சொல்லியிருந்தார்.  தரகர் ராமு மூலமாக வரன் வந்தருப்பதாகவும், அவர்களும் உள்ளூரே.  பெண்ணின் அப்பாவும் மீனாட்சியம்மன் கோவிலுக்கருகில் பூக்கடை வைத்திருக்கார்.  பெயர் ராஜேந்திரன் என கூறி, தரகர் கூறிய முழு தகவலையும் அனைவரிடமும் கூறியிருந்தார்.

சரசு அகிலனிடமும், ராணியிடமும் “இப்பவே சொல்லிடறேன்.  நீங்கள் தான் முன்ன வந்து நின்னு, எல்லாம் எடுத்து கட்டி செய்யனும்” என்று சொல்லியிருந்தார்.

அன்னையையும் அண்ணனையும் பார்த்து நெடு நாட்கள் ஆகிவிட்டது என்று பார்த்து செல்லவே வந்திருந்தாள் ராணி குடும்பத்துடன். கணவனுக்கும் இன்று விடுமுறை என்பதால் காலையில் வந்திருந்து மாலையே கிளம்பியிருந்தாள்.  வந்த இடத்தில் அண்ணனின் திருமணத் தகவலைப் பற்றி கேட்டதும் அவளுக்கும் சந்தோஷமே.

மருமகனும் மகளும் சரசிடம் அதுக்கென்ன நாங்க வந்து நின்னு செய்யறோம்.  இதகூட நீங்க சொல்லனுமா… என கூறி சந்தோஷப்பட்டுவிட்டு சென்றிருந்தனர்.

இங்கே வசீகரனுக்கோ சரசு சொன்னதை கேட்டதிலிருந்து மூளை நிறுத்தம் தான்.  எந்த வேலையும் செய்ய முடியவில்லை.  அவனுக்கு ராஜேந்திரனை ஏற்கனவே தொழில் முறையில் தெரியும்.  எப்போதாவது தொழில் சங்க கூட்டங்களில் பாத்திருக்கிறான்.

அவருக்கு திருமண வயதில் பெண் இருப்பது, படித்து அவள் ஆசிரியர் வேலையில் இருப்பது எல்லாம் புதிய தகவல் அவனுக்கு.  அடுத்த வாரம் பெண் பார்க்க போக வேண்டும் என ராணியிடம் சரசு அழைப்பு விடுத்திருந்தார்.

வசீகரனுக்கு தங்கையையும் அகிலனையும் வைத்துக் கொண்டு ஒன்றும் சொல்ல முடியவில்லை அன்னையிடம்.  சரசு திருமணத்தை பற்றி பேசியதிலிருந்து, அவனுக்கு ஒன்றும் புரிய வில்லை, குழப்பமான மனநிலையே.  இப்படி திடுதிப்பென்று ஆரம்பிப்பார் என எதிர்பார்க்க வில்லை.  ஆதலால் பேதலித்து நின்றிருந்தான், செய்வது அறியாமல்.

எப்படி, என்னன்னு நித்யாவைப் பத்தி பேசுவது அவரிடம் என யோசித்திருந்தான்.  பேசினால் நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்.  அவரைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும்.

ஒன்றுமில்லாமல் கஷ்டப்பட்ட காலத்திலேயே கௌரவமாகவும் ஒழுக்கமாகவும் வாழ்ந்தவர்.  பணம்தான் இல்லையே தவிர, சொந்த பந்தங்களுடன் இணக்கமாகவும், கௌரவத்துத்துடனும் வாழ  வேண்டும் என நினைத்தவர் அப்போதே.

நித்யாவைப் பற்றி அறிந்தால் நிச்சயம் ஏற்க மாட்டார்.  அவளுக்கும் சொல்லிக்கொள்ளும்படி, எந்த உறவுகளின் ஆதரவும் இல்லை.  அவளுடைய அம்மா காலத்திலேயே உறவுகளிடம் பெரிதாக நெருக்கம் இல்லை அவர்களுக்கு.  இப்பொழுது சத்தம்.

இதில் இன்னும், ஒரு கைம்பெண்ணுடன், இப்படி கல்யாணம் ஆகாமலேயே குடும்பம் நடத்துகிறோம் என சொல்லவா முடியும் அவனால்…?  நினைக்கவே அவனுக்கு பயப்பந்து உருண்டது.  இதை எப்படி நேர் செய்வது?  அன்னையிடம் அவருக்கு ஏற்ற மாதிரி எடுத்து சொல்லி, எப்படி அவரை சம்மதிக்க வைப்பது என குழம்பித் தவித்தான்.  அவரின் பிடிவாதமும் அவன் தெரிந்தவன் தானே.

அ்ங்கேயே வெகு நேரம் குழப்பமாக நின்று யோசித்தவன், மனம் பொறுக்காமல், வண்டியை எடுத்துக் கொண்டு நித்யாவின் வீட்டிற்கு வந்திருந்தான்.  நித்யாவின் வீடு அவளுடைய விவசாய நிலத்தை ஒட்டியே இருக்கும்.  சாதாரண ஓட்டு வீடுதான்.  வீட்டின் வலதுபுறம் கொஞ்சம் தள்ளி சின்ன குடிசை ஒன்று போட்டு கொடுத்து, நிலத்தை பாதுகாக்க என வீட்டோடு  ஒரு குடும்பத்தை  வேலைக்காக வைத்திருந்தாள்.  குழந்தையில்லை அவர்களுக்கு கணவன் மனைவி மட்டுமே.

அவளது அம்மா காலத்தில் இருந்தே இருக்கின்றனர்.  நிலத்தில் வேலைப் பார்க்கவும், பூக்களை பறிக்கவும் என அவளுக்கு உதவிக்காக வைத்திருந்தாள்.  இது இல்லாமல் கறவை மாடுகள், ஆடு, கோழி என இருந்தது.   ஒரு பக்கம் கொட்டகை அமைத்து தனியாக வளர்த்து வந்தார்கள்.

எப்போதும் ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கும்.  அயராத உழைப்பாளியும்கூட. சின்ன வயதிலிருந்தே தாயுடன் சேர்ந்து எல்லா வேலைகளையும் கற்று தேர்ந்திருந்ததால், இன்று அவளுக்கு எல்லாற்றையும் தனியாக சமாளிக்க  ஏதுவாக இருந்தது.

எதிர்பாராமல் திடுமென வசீகரனை அந்த நேரத்தில் பார்த்ததும், அவளது முகத்தில் மலர்ச்சி பொங்கியது.  வெளி வாசலில் வேலையாக நின்றிருந்தவள், இவனைப் பார்த்ததும் தானாகவே வந்து முங்கிலால் வேயப்பட்ட படலை திறந்துவிட்டாள், இவன் உள்ளே வருவதற்கு ஏதுவாக..

நித்யா, “வரேன்னு சொல்லவேயில்லை…” என்றாள் அவனைப் பார்த்து சந்தோஷமாக.

வசீகரனுக்கு அவளது கேள்வி எதுவும் காதில் விழவில்லைபோல.  ஏதும் பேசாமல் வீட்டினுள் சென்றுவிட்டான்.  நித்யாவும் அவன் பின்னாடியே சென்றாள்.

நித்யா, “ஏதாவது சாப்பிடறீங்களா…?” என்றாள்.

மறுப்பாக தலையசைத்தான்.  உண்மையில் அவனுக்கு நல்ல பசி.  ஆனால் சாப்பிட மனதில்லை.  சட்டையை கழற்றி அங்கிருந்த ஆணியில் மாட்டியவன், பின்புறம் இருந்த கொல்லைபுறக் கதவைத் திறந்துகொண்டு சென்றான்.

அவன் திரும்ப வரும் வரை அங்கேயே நின்றவள், அவன் வந்ததும் துண்டு எடுத்து வந்து கொடுத்தாள்.

ஏதும் பேசாமல் வாங்கியவன் முகம் கை கால் துடைத்து விட்டு, வேட்டியுடன் அப்படியே சென்று அறையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த படுக்கையில் படுத்து விட்டான்.  அவனையே சில நொடிகள் பார்த்திருந்தவள், ஏதும் பேசாமல் சென்று பாலை சூடு செய்து கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.  இதுவும் வேண்டாம் என்றால் விட மாட்டாள் என அதனை ஒன்றும் சொல்லாமல் வாங்கி குடித்து விட்டு திரும்பவும் படுத்து விட்டான்.

சில நிமிடங்களில் அவளும் வந்து, அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.  வசீகரன் மல்லாந்து படுத்துகொண்டிருந்தான்.  முன்கையை தூக்கி அணைவாக கண்களின் மேல் வைத்துகொண்டு படுத்திருந்தான்.

“என்னாச்சு மாமா…? ஏன் ஓரு மாதிரி இருக்கீங்க…? உடம்புக்கு எதுவும் முடியலையா…?”

“ம்ப்ச்…. அதெல்லாம் இல்லை” என்றான் கையை எடுக்காமலே.

நித்யா அவன் நெற்றியில் கைவைத்து பார்த்தாள் உடல்நிலை சரியில்லையோ என.  அப்படி எதுவும் தெரியவில்லை.  அவனையே சில நொடிகள் பார்த்திருந்தவள், என்ன பேசுவது என தெரியாமல்,  மெதுவாக அவனது முடிக்குள் தனது கைவிரல்களை நுழைத்து, இதமாக கோதிவிட துவங்கினாள்.

நித்யாவின் விரல்கள் அவன் தலையில் பட்டதும், அவளது கையை பிடித்து நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டவன், அவளையே கண் எடுக்காது பார்க்க ஆரம்பித்தான்.

“என்னைக்கும் இல்லாம இது என்ன புதுசா… இப்படி பார்க்கறீங்க…?”

அதற்கும் அவனிடமிருந்து பதிலில்லை.  மௌனமாக அவளையே பார்த்திருந்தான்.

அவளுக்கே அவன் பார்வையில் கூச்சம் வந்தது.  “என்ன மாமா…?” என்றாள் அவனது மௌனத்தை கலைக்க.  இதுவரை இதுமாதிரி அவன் இறுக்கமாக இருந்து, அவள் பார்த்ததில்லை.  ஏன் இப்படி இருக்கிறான் என்ற யோசனையும் இருந்தது உள்ளுக்குள்.

“ஏதாவது பேசுங்க.  என்னன்னாவது சொல்லுங்க.  எவ்வளவு நேரம் இப்படியே இருப்பீங்க…?”

நீண்ட பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன், “அம்மா எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க நித்தி” என்றான். எப்படியும் அவளிடம் சொல்லதானே வேண்டும்.  மறைக்க முடியாதில்லையா…?  மறைக்கும் விஷயமும் இல்லையே.

“என்ன…?” என அதிர்ந்தவள், அவன் சொன்னதைக் கேட்டு அப்படியே அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.

“எ…ன்ன சொல்றீங்…க…?  சரியா காதுல விழல.  திரும்ப சொல்லுங்க…” என்றாள்.  ஏதோ தனக்குதான் தவறாக கேட்டுவிட்டதா… என சந்தேகமாக.

அவளது முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைக் கண்டவனுக்கும் வருத்தம்தான் வந்தது.  முன்னமே இது எல்லாம் எதிர்பார்த்ததுதானே.  தாங்கிதானே ஆகவேண்டும் என மனதை திடப்படுத்தி, “நிஜமாதான் சொல்றேன் நித்தி” என்றான்.

“எவ்வளவு சாதாரணமா சொல்றீங்க….?  அதுக்கு நீங்க ஒன்னும் சொல்லலையா…?”

“இன்னைக்கு ராணியும், அவள் வீட்டுக்காரரும் வந்திருந்தாங்க.  அவங்க இருக்கும் போதுதான் இந்த விஷயத்தையே அம்மா சொன்னாங்க.  அவங்க முன்னாடி, என்ன பேச முடியும்.  ஒன்னும் பேசலை நான்”.

“எனக்கும் அம்மா சொன்னதுல இருந்து ஒரே குழப்பமாதான் இருக்கு.  என்ன பண்ணறதுன்னு தெரியலை.  கல்யாணம் இப்ப வேணாம்னு தள்ளி போட்டாலும், என்னைக்காவது ஒரு நாள் நம்ம பத்தி தெரியதான வேணும்.  எப்படி நம்மளபத்தி வீட்டுல சொல்றதுன்னு பயமாவும் இருக்கு.  யோசனையாவும் இருக்கு”.

“அப்படியே நான் சொன்னாலும், அம்மா இதுக்கு நிச்சயம் ஒத்துக்க மாட்டாங்க”.

“முன்னாடியே என்கிட்ட சொல்லியிருந்தாகூட, ஏதாவது சொல்லி நிப்பாட்டியிருப்பேன்.  எல்லாத்தையும் அவங்களே முடிவு பண்ணிட்டு, கடைசியா சொல்றாங்க.  என்ன பண்றதுன்னு புரியலை.  அதுவும் அடுத்த வாரமே பொண்ணு பார்க்க போகனும்னு, ராணியையும் அவ வீட்டுக்காரரையும் வேற வரசொல்லியிருக்காங்க…” என்றான் சோகமாக.

நித்யாவுக்கு இவன் சொல்ல சொல்ல கண்களில் இருந்து தானாகவே கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.  அதனை துடைக்ககூட உணர்ச்சியில்லாமல், அவனையே அதிர்ச்சியில் பார்த்துகொண்டு அப்படியே பேயறைந்ததுபோல உட்கார்ந்திருந்தாள்.

சொல்லப் போனால் வசீகரனின் மீது ஆத்திரமாக வந்தது.  எவ்வளவு ஈசியா சொல்றான்?  எனக்கு பொண்ணு பார்க்கிறாங்கன்னு….?  அப்ப நான் யாருடா உனக்கு…?  என்னை பார்த்தா எப்படியிருக்கு உனக்கு…?

கல்யாணமாம், பொண்ணு பார்க்கறாங்களாம், என் கிட்டயே வந்து சொல்றான்….?  என்ன நெஞ்சழுத்தம் இவனுக்கு…? என குமைந்துகொண்டிருந்தாள் உள்ளுக்குள்.

வசீகரனை நிற்க வைத்து, அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி, கேள்வி கேட்க மனம் ஆத்திரப்பட்டாலும், வாய் ஊமையாக இருந்தது.  இப்பொழுது இவள் அப்படியே இறுக்கமாகியிருந்தாள் மௌனமாக.  அவளால் ஏதும் பேச முடியவில்லை.

கையறுந்த நிலை தான் அவளுக்கு.  இது நிலையான வாழ்வு இல்லை என்பது முன்னமே அவளுக்கும் தெரிந்ததுதான்.  என்றாவது இந்த பூகம்பம் வெடிக்கும் என அவளும் எதிர்பார்த்தாள்.

இருந்தாலும் வசீகரன் தன்னை கைவிடமாட்டான் என உள்ளுக்குள் ஆழமாக நம்பிக் கொண்டிருந்தாள்.  அது இப்போது தண்ணீரில் எழுதிய எழுத்தாக கரைந்து கொண்டிருந்தது, அவளது கண்ணீரில்.

நிஜம் சுடும் என்பார்களே அதுமாதிரி தான்.  அவன் மீதான மயக்கத்தில் அவனுடன் இணைந்து மோகத்தில் மூழ்கியபோது எழாத பயமெல்லாம், இப்பொழுது ஒன்றொன்றாக  தலைதூக்கி, அவளை கொன்று குவித்து கொண்டிருந்தது.

அப்பொழுது இருந்த மயக்கத்தில் எதையும் யோசிக்க பிடிக்கவில்லை.  அப்போதைய சந்தோஷம், அன்றைய இன்பம் என கனவினில் மிதந்தவளுக்கு நிதர்சனம் வலிக்கதான் செய்தது.

புதைகுழி  என தெரிந்தே காலை வைத்தால். யார் காப்பாற்ற முடியும்?  இன்று அதற்கு முடிவும் வந்துவிட்டது.  உள்ளத்தில் ஏமாற்றமும், பயத்துடன் கூடிய நடுக்கமும் ஒருங்கே எழுந்து, அவளை வதைக்க ஆரம்பித்திருந்தது.

அவ்வளவு தானா இந்த வாழ்க்கை…? இவனோட இத்தன நாள், நான் வாழ்ந்தது எல்லாம்…, அவ்வளவுதானா…?  அப்போ இவ்வளவு நாள் நான் இவனோட வாழ்ந்த வாழ்க்கைக்கு பேர்தான் என்ன…? என அவளது மனம் அரற்றிக் கொண்டிருந்தது உள்ளுக்குள்ளேயே.

ஒரு பக்கம் அவளது மனசாட்சியோ, எல்லாம் தெரிஞ்சுதான…, அவனோட வாழ ஆரம்பிச்ச…?  இப்போ குத்துது, குடையுதுனா…?  அனுபவி… என இடித்துரைத்தது.

எதரில் படுத்திருந்தவனுக்கும் அவள் நிலைதான்.  என்ன பேசுவது அவளிடம் என அவனுக்கும் தெரியவில்லை.  அவனுக்குள்ளும் ஆயிரம் கேள்விகள், யோசனைகள், குழப்பங்கள்.

முதலில் இவ இல்லாம என்னால இருக்க முடியுமா…?  யாரோ ஒரு பொண்ணோட என்னால நித்யாவ மறந்துட்டு குடும்பம் நடத்த முடியுமா…? என அவனுக்கும் மண்டை குழம்பியது.  யோசித்து யோசித்து தலைவலி வந்ததுதான் மிச்சம்.  எந்த கேள்விக்கும் விடையில்லை அவனிடம்.

இருவரும் சூழ்நிலையின் இறுக்கத்தோடே பேசாது முழித்திருந்தார்கள்.  வசீகரனுக்கு ஏதோ புரிந்ததுபோல இருந்தது.  ஆரம்பத்துலயே யோசிக்காம, எப்படி நம்ம வாழ்க்கைய சிக்கலாக்கியிருக்கிறோம் என சரியாக யோசிக்க ஆரம்பித்திருந்தான்.  நம்மளோட சேர்த்து இவ வாழ்க்கையும் வீணாக்கி வச்சிருக்கோமே… என வருந்தினான்.

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல, முதலிலேயே வீட்டில் சொல்லி, கௌரவமாக இவளை திருமணம் செய்திருக்கலாம் என எண்ணத் தோன்றியது அவனுக்கு.

அவன் மனசாட்சியே அவனை குத்தி குதறி கிழித்து கொண்டிருந்தது.  பெரிய பாதுகாப்பு குடுக்கறேன்னு, அவள் வாழ்க்கையும் சேர்த்து நாசம் பண்ணி வச்சிருக்கியே நீ.  இப்ப என்ன பதில் சொல்ல போற அவளுக்கு.

முதல்ல அவள் உன்கிட்ட வந்து, எனக்கு வேற வழியில்லைன்னு நின்னாளா…?  என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டாளா…?  இல்லை பாதுகாப்பா நீ இருன்னு சொன்னாளா…?

இவளை அப்படியே விட்டுட்டு, நீ மட்டும் கல்யாணம் பண்ணி, புது மாப்பிள்ளையா வாழனும்னு நினைக்கிறியா…?  அவள் மனசுலயும் ஆசைய வளர்த்து விட்டுட்டு, அவளோட வாழ்க்கையையும் சேர்த்து அழிச்சிட்டு, என்ன செஞ்சு வச்சிருக்கேன்னு உனக்கு புரியுதா?

நீ இவளோட இப்ப இருக்கறதுக்கு என்ன பேர் தெரியுமா?  சமூகம் அதை எப்படி சொல்லும் தெரியுமா?  ஆசை நாயகியா?  வப்பாட்டியா?  இவளை பத்தி எப்பவாவது யோசனை பண்ணி பார்த்திருக்கியா…?  நீ இப்ப  இவள அம்போன்னு அப்படியே விட்டுட்டு போயிட்டனா, சமூகம் இவளுக்கு என்ன பேர் வைக்கும்னு தெரியுமா…? என உமிந்து கொண்டிருந்தது அவனது மனசாட்சி.

வாழ்க்கைன்றது விளையாட்டுதனம் இல்ல.  நீ எவ்வளவு சம்பாதிச்சு என்ன புண்ணியம்.  ஒழுக்கமில்லாத உன்னை யாரும் மதிப்பாங்களா?  இந்த விஷயம் மட்டும் வெளில தெரிஞ்சுது, மத்தவங்க உன்னை பார்க்கற கண்ணோட்டமே மாறிடாதா?

முதல்ல தொழில் வட்டத்துல உனக்கிருக்கற மதிப்பு மரியாதை சரிஞ்சிடாதா?  இப்ப பொண்ணு தரேன்னு சொல்றவங்க, இதை கேள்விப்பட்டா தருவாங்களா?  அதுக்கு முன்னாடி உன் வீட்ல, உன் அம்மா தங்கச்சி உன்ன மதிப்பாங்களா?  உன் அம்மா இதை தாங்குவாங்களா?  பொண்ணு கொடுத்த சம்மந்தி வீடான உன் தங்கச்சி வீட்ல, அவளோட நிலைமை என்னன்னு கொஞ்சமாவது நினைச்சி பார்த்தியா…? என மனசாட்சி அவனை கேள்வி மேல் கேள்வி கேட்டு குத்தி குதறியது.

“ஐயோ… என்னை கொல்லாத…? இதுக்கு மேல என்னால முடியாது…” என தலையை பிடித்துக் கொண்டான் இரண்டு கையாலும்.  எவ்வளவு நேரம் அப்படியே இருந்தான்  அவனுக்கே தெரியாது.

எனக்கே இவ்வளவு கஷ்டமாயிருக்கே.  அவளுக்கு என யோசித்தவனாக மெல்ல நித்யாவைத் திரும்பி பார்த்தான்.  அப்படியே அழுதழுது உறங்கி விட்டிருந்தாள்.  எப்பொழுது உறங்கினாள் என அவனும் கவனிக்க வில்லை.  அழுததற்கான கண்ணீர் தடம் கன்னத்தில் தெரிந்தது.  அது அப்படியே கோடாக கறைபோல கன்னத்தில்  காய்ந்து படிந்திருந்தது.

தனது கையால் அவளது கன்னத்தை துடைத்து விட்டவன்.  முன்நெற்றியில் கலைந்திருந்த முடியை, காதோரத்தில் ஒதுக்கிவிட்டு,  தூங்கும் அவளையே கனிவுடன் பார்த்திருந்தான்.

ஸாரி நித்தி.  எதையும் யோசிக்காம, என்னோட சேர்ந்து உன் வாழ்க்கையும் அழிச்சிட்டேன்.  என்னை மன்னிப்பியா…?  உன்னை இப்படி கஷ்டப் படுத்துவேன்னு நான் நினைக்கலடி என அவளுடன் மௌனமாக பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருந்தான்.

அவளைப் பார்க்கும்வரை அவனுக்கே தெரியாத அவனின் மென்மையான பக்கத்தை உணர செய்தவள்.  அதிர்ந்து கூட பேச மாட்டாள்.  சிரித்த முகம்.  குண்டு கன்னம்.  கூரான நாசி.  அதில் ஒற்றைக் கல் மூக்குத்தி. சிரித்தால் குழி விழும் கன்னங்கள்.  எப்பவும் நடையில் ஒரு நளினம் என மனதைக் கவர்ந்தவளை இமை சிமிட்டாமல் பார்த்திருந்தான்.

அவளது கொஞ்சலும் மிஞ்சலும் அவனை போதை கொள்ளச் செய்யும் அவளிடத்தில் மட்டுமே.  அவன் வந்துவிட்டால் போதும், சிறு குழந்தைபோல அவனையே தான் சுற்றி வருவாள்.  அவளுக்கு அவன் அவளை இரட்சிக்க வந்த இராஜ குமாரன் என்ற நினைப்பு மனதில்.

அதற்கு மேல் அவனால் அங்கிருக்க முடியவில்லை.  நேரம் என்ன என்று கூட பார்க்கவில்லை.  எழுந்து கிளம்பி விட்டான் சட்டையை போட்டுக் கொண்டு, அவளிடம் சொல்லாமலே.

ராஜேந்திரன் நினைத்ததுபோல எல்லோரையும் சமாளித்து, வசீகரனின் குடும்பத்தை பெண்பார்க்க  வரவழைத்திருந்தார்.  சரசும் தனது மகள் மருகனுடன், மகனை அழைத்துகொண்டு அருந்ததியை பெண் பார்க்க வந்திருந்தார்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!