Skip to content
Post Views: 4,274
கையில் பழச்சாற்றை திணித்த அர்ஜுன் முகம் பார்க்கவே பயந்த இலக்கியாவின் முகம் வெளியே தைரியமாக இருந்ததாலும் உள்ளுக்குள் சற்று உதறல் தான்.
மருத்துவமனை வாசம் முழுதாக ஒரு நாள் இழுத்துக்கொள்ள வீட்டிற்கு வந்து இரண்டு நாள் ஆகின்றது. அவனும் வேலைக்கு செல்லவில்லை அவளையும் அனுமதிக்கவில்லை.
அதே சமயம் இந்த மூன்று நாட்களில் இருவரிடம் ஒரு வார்த்தை பரிமாற்றம் கூட இல்லை. அர்ஜுன் கோவத்தில் அமைதியாக இருந்தான் என்றால், இலக்கியா ஆச்சிரியத்தில் மௌனமாகினாள். எல்லாம் அர்ஜுன் வேலை தான்.
உணவை அவளிடம் வந்து கொடுப்பது, மாத்திரை கொடுப்பது என விழி விரித்து அதிசயித்து தான் போனாள். போதா குறைக்கு சோபாவில் ஒரு பட்டன் அழுத்த மெத்தையாக மாறிப்போனது. அவனையும் அந்த சோபாவையும் மாறி பார்த்தவள் அமைதியாக அதில் படுத்துகொண்டாள்.
Advertisement
‘இத்தனை நாள் ஏன் சொல்லல? வேணும்னே தான் சொல்லல போல. இருக்கட்டும்’
அவளும் அவனிடம் அது பற்றி கேட்கவே இல்லை. ஒரு நாள் அமைதி ஒன்றும் பாதிக்காமல் போக, இரண்டாவது நாள் இலக்கியவை தின்றது. பேச உறவுகள் இல்லை, அதிகம் நண்பர்களும் இல்லை.
அந்த வரவேற்பறையை தாண்டி எதுவும் இல்லாது போக பைத்தியம் பிடித்தது போல் ஆகியது. இரண்டாவது நாளே மருத்துவமனைக்கு கிளம்பியவள் கதவை திறக்க முடியவில்லை.
Advertisement
எப்பொழுதும் பயன்படுத்தும் கடவுச்சொல்லை உபயோகித்தும் பலனில்லாது போக, காலை நாளிதழை கையில் வைத்து தன்னை ஓரக்கண்ணால் பார்த்தவனை பார்த்துக்கொண்டே சத்தம்பரும்படி கதவை திறக்க முயற்சி செய்துகொண்டிருக்க அவன் கண்டுகொள்ளவே இல்லை.
Advertisement
தன்னை கணவன் வெளியில் விடப்போவதில்லை என அறிந்து மீண்டும் உள்ளே முடங்கிக்கொண்டாள். இரண்டாம் நாள் பாதிக்கு மேல் முடியவில்லை. மூச்சு முட்டுவது போல் இருந்தது. ஜன்னல்களை திறந்து அமர்ந்தும் முடியவில்லை.
இதே போல் அடுத்த நாளும் ஓட மூச்சு வாங்கியது. அவனும் எங்கும் அசையவில்லை. காலையில் கீழே வருபவன் ஏதேனும் ஒரு வேலையை செய்துகொண்டு இரவு வரை அங்கேயே தான் இருப்பான்.
இலக்கியா தன்னையும் அறியாமல் உறங்கி போக அதன் பிறகே மேலே செல்வான். இதோ இப்பொழுதும் இலக்கியா முன்பு தான் அர்ஜுன். யாருடனோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான்.
Advertisement
பேசி முடியும் மட்டும் பொறுமையாக காத்திருந்தவள், “என்ன எதுக்கு இப்டி ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க?” என்றாள்.
அர்ஜுனை பொறுத்தவரை அவளது நிலையை தேற்ற வேண்டும், அல்சர் ஏற்கனவே இருக்க இப்பொழுது இதையும் இழுத்து வைத்திருக்கும் மனைவியின் உடலை தேற்றவே அவன் எண்ணம் கொண்டான். அதற்கான சிறு முயற்சியே இந்த சிறைதண்டனை.
அதை அவள் உணரும் நிலையில் இல்லை. வீட்டில் இருக்கும் நேரம் கூட வீட்டினுள் இருக்காமல் வாயிலில் கட்டிலை போட்டு வெளி காற்றை வாங்கும் ரகம் அவளுக்கு இந்த மூடிய அறையின் சூடான காற்று மூச்சு திணறலை கொடுத்தது.
தலை உயர்த்தி அவளை பார்த்தவன் தன்னுடைய வேலையை தொடர, “சார் உங்கள தான். எனக்கு ஹாஸ்பிடல் போகணும். லீவ் கூட சொல்லல”
“வேலை பாக்குறவங்க தானே லீவ் சொல்றத பத்தி யோசிக்கணும்?”
புருவம் உயர்த்தி பார்த்தான். இலக்கியாவிற்கு பல நாள் மன அழுத்தம் கோவத்தை ஏற்படுத்தியது, “என்ன பண்ணீங்க நீங்க?” என்றாள் கோவமாக.
அவள் கோவம் அவனை சிறிதும் அசைக்கவில்லை, “சார் ப்ளீஸ்… என் வாழ்க்கையே அந்த வேலைய நம்பி தான் இருக்கு” கண்ணீர் மல்க அவனிடம் கெஞ்சினாள்.
அவளது அழுகை கெஞ்சல் எல்லாம் அவன் சினத்தை அதிகரித்தது, ‘எதற்காக எதற்கும் கெஞ்சுகிறாள்?’ என்று.
“எதுக்குடி இப்ப அழுகுற?” என்றான் கோவமாக. தனக்கு இருந்த ஒரே நம்பிக்கை போனதில் பெண்ணுக்கு சொல்லில் அடங்காத வருத்தம், அந்த பணத்தை வைத்து அவளுக்கு பல கடமைகளும் உள்ளது.
“எங்க வீட்டுக்கு அந்த பணத்துல தான் நான் லோன் கட்டணும், அப்பாக்கு மாத்திரை வாங்கணும். ப்ளீஸ்… உங்கள கெஞ்சி கேக்குறேன் சார்” கண்ணீர் ஊற்றாய் உருமாறி அவள் வேதனையின் சாயலை வடித்தது.
“அதுக்கு எதுக்குடி அழுகுற. பணம் தான நான் தர்றேன். இனிமேல் நீ அங்க ஹாஸ்பிடல் போக கூடாது”
“வேணாம். எனக்கு உங்க பணம் சொத்து எதுவும் வேணாம். இந்த வேலை மட்டும் போதும்”
“இந்த பணத்துக்காக தானே கல்யாணம் பண்ண, அது கைக்கு வரவும் ஓவரா சீன் கிரியேட் பண்ற”
“அது உங்களோட நம்பிக்கை. நீங்களும் வேணாம் உங்க பணமும் வேணாம். நீங்க என்ன சொன்னாலும் நான் வேலைக்கு போய் தான் தீருவேன். பாக்கலாமே எவ்ளோ நாள் தான் நீங்களும் என்ன இப்டியே அடைச்சு வக்கிரிங்கனு”
உன்னை விட எனக்கு அதிகம் அழுத்தம் உள்ளதென பிடிவாதமாக அவனுக்கு எதிரே மார்போடு கை கட்டி அமர்ந்தாள்.
‘அப்படியா?’ புருவம் உயர்த்தி அவன் கேட்க பட்டென இன்னொரு துளி கண்ணீர் கன்னத்தை தொட அர்ஜுன் இதழ் கடையோராம் வளைந்து அவளை முகத்தை திருப்ப வைத்தது.
“உன்ன என் ஹாஸ்பிடல்ல விட்டு அதோட எதிர்காலத்தை பயந்துட்டே இருக்க சொல்ற ரைட்?”
“ஆமா நான் போறதால உங்க ஹாஸ்பிடல் எதிர்காலம் பாலா போகும். உங்க அஞ்சுஸ்ரீ போனா மகாலக்ஷ்மி கடாக்ஷமா இருக்கும்”
ஆத்திரம் ஆத்திரம், அத்தனை ஆத்திரமாக இருந்தது அவளுக்கு. இதற்கு மேல் அவனுக்கு என்ன கூறி உண்மையை புரிய வைக்கவென தெரியவில்லை.
“என் அஞ்சுஸ்ரீயா?” கேலியாக சிரித்தான் தலை அசைத்து.
“ஆமா, அவங்களுக்காக தானே ஒரு ஹாஸ்பிடல் பேரையே கெடுக்க பாக்குறீங்க”
“உனக்கு என்னமோ ஆச்சு. சரி கெளம்பு வெளிய போகலாம்” என்றான் பெரிய மனதோடு.
“உங்ககூட என்னால வர முடியாது. வீட்டை மட்டும் ஓபன் பண்ணி விடுங்க” என்றாள் முகத்தை தூக்கி வைத்து.
“ஓகே நோ ப்ராப்லம். அகைன் ஒரு நாள் இதே ஹால், இதே கவுச்” ஜம்பமாக அமர்ந்தவன் புத்தகத்தை கைகளில் எடுத்துக்கொண்டான்.
அவளும் பிடிவாதமாக இரண்டு மணி நேரம் பொறுத்து பார்த்தாள், என்ன செய்வது, சமைப்பதற்கு கூட வேலையில்லை. அவள் சமையலறை பக்கம் சென்று இரண்டு நாட்கள் ஆகியது.
வேறு வழியே இல்லை என உணர்ந்து வேறொரு புடவையை அணிந்து வந்து நின்றாள். தன்னருகில் வந்து நின்றவள் உருவம் பார்த்து தலை தூக்கினான். எளிமையான காட்டன் புடவை, மங்கிய சாம்பல் நிறத்தில். முகம் கழுவி சீராக தலை வாரியிருந்தாள் வெளியே வர தயார் என.
“எங்கையோ கெளம்பிட்ட போல”
அவன் நக்கல் உணர்ந்து அப்படியே அவள் அமர்ந்துவிட, “வேற புடவை இல்லையா?” தன்னை குனிந்து பார்த்தாள்.
இந்த புடவைக்கென்ன, நன்றாக தானே உள்ளது, அவனோடு செல்வதற்காக இருப்பதில் நல்ல புடவையை தேர்ந்தெடுத்திருந்தாள். அதிலும் அவனுக்கு சம்மதம் இல்லை போல் இருந்ததுஅவன் பார்வை.
இதில் தான் வருவேன் என அவளும் அடமாக அமர்ந்திருக்க இவனும் சென்று எளிமையான ஆலிவ் நிற முழுக்கை டீ-ஷர்ட், கிரீம் நிற பேண்ட்டும் அணிந்து வந்தான்.
காலில் வெள்ளை கேன்வாஸ் ஷூ, டீ-ஷர்டின் நடுவே ஒரு கருப்பு கண்ணாடி. சென்ற ஐந்தே நிமிடத்தில் கீழே இறங்கியிருந்தான். அதற்குள் இத்தனை நேர்த்தியாக கண்ணை அவனிடமிருந்து பிரிக்க முடியாத அளவிற்கா வந்து நிற்க முடியுமென ஆராய்ந்தே அவனை விட்டு பார்வையை இலக்கியா அகற்றவில்லை.
தன்னை அவள் பார்ப்பதை கவனித்தவன் சமையலறை சென்று தண்ணீரை சில சில்வர் வாட்டர் கேனில் நிரப்பி அவள் முன்னே இரண்டை வைத்து, “எடுத்துட்டு வா” என வெளியே நடக்க, வெளியே செல்லும் ஆர்வத்தில் அவன் கூறியதை செய்து வேகமாக பின்னே நடந்தாள்.
எங்கு என தெரியவில்லை. ஆனால் அவனோடு பயணம், அதுவே மனதிற்கு போதுமானதாக இருந்த்தது. அர்ஜுன் எப்பொழுதும் மருத்துவமனைக்கு பயன்படுத்தும் வாகனம் அல்லாது இன்று சிகப்பு நிற ஜாகுவார் இ பேஸ் வகை வாகனத்தை எடுத்திருந்தான். பார்க்கவே மிகவும் பிரமாண்டமாக தெரிந்தது.
இதில் தானா என்கிற தாழ்வுமனப்பான்மையும் அவளையும் மீறி அவளை முந்தி வந்து அமர்ந்துகொண்டது. இருவரும் உள்ளே ஏற, அவள் கையிலிருந்த தண்ணீரை வாங்கி அங்கு இருந்த சிறிய குளிர்சாதன பெட்டியில் வைத்தான்.
வாகனம் வாசல் தாண்டி சாலையில் அப்படியே நின்றது. என்னவென அவனை திரும்பி பார்க்க, பார்வையை வெளியே வைத்து, “சீட்பெல்ட்” என்றான்.
நிதானமாக அவள் போட்டு முடிக்க, வாகனம் சாலையில் மிதக்க துவங்கியது. ஆம் மிதந்தது.
அத்தனை பள்ளம், மேடு என ஒரே குலுங்களாக காட்சி கொடுத்தாலும் உள்ளே இருந்தவளுக்கு காற்றில் மிதப்பது போல் ஒரு அசைவும் தெரியவில்லை. ஏன் சிறுசத்தம் கூட இல்லை.
பஞ்சு போன்ற இருக்கை, அந்த இருக்கையில் அமர்ந்தவாக்கில் படுத்தாள் கூட உறக்கம் அருமையாக வரும். கால் நீட்டி பார்த்தாள், அவள் உயரத்திற்கு இன்னுமே இடம் இருந்தது.
அழகாய் அமைதியாக சென்ற அந்த வாகனத்தின் பிரமிப்பில் யாரோடான பயணத்தை ரசிக்க வந்தாலோ அதனை மறந்து அந்த வாகனத்திற்கு விசிரியானாள்.
சிறுபிள்ளை போல் அவள் ரசித்து பார்க்கும் காட்சியை ஓரக்கண்ணால் பார்த்த அர்ஜுன் இதழிலும் மர்ம புன்னகை. இதில் எந்த ஒரு வஞ்சகமும் அவன் பார்த்துவிட முடியவில்லை.
அழகை ரசிக்கும் ஒரு ரசிகனின் ரசனை தான் அவளிலும் கண்டான். நேரம் செல்ல, மெல்ல இருட்ட துவங்கிய வானிலையில் சுகம் பெற்றவள் ஜன்னலை மெல்ல திறந்து வைத்தாள்.
“கிளோஸ் பண்ணு, ஏ.சி தான் போட்ருக்குல?” என்றான் அதனை அடைத்து.
“இல்ல கொஞ்ச நேரம். எனக்கு வெளி காத்து வேணும்” என்றாள்.
அமைதியாக அவள் கேட்டதை செய்து சில நிமிடத்தில் அந்த பேரங்காடி முன்பு நிறுத்தினான்.
ஒரு பெரிய ஜவுளி கடையினுள்ளே நுழைந்தவன் தன் பின்னே வந்தவளிடம், “ஒரு வாரம் யூஸ் ஆகுற மாதிரி டிரஸ் எடுத்துக்கோ. டாப் டூ பாட்டம் எல்லாம்” அவளோ திரும்பி வெளியே நடந்து வந்தாள்.
புரியாமல் வேகமாக வந்த அர்ஜுன், “என்ன தான்டி உன் பிரச்சனை?” என்றான் பற்களை கடித்து.
“நீங்க மட்டும் தான் எப்பவும் எனக்கு பிரச்சனை. எதுக்கு இந்த டிரஸ் எல்லாம். அப்றம் பணத்தை புடுங்க வந்த, சொத்தை பறிக்க வந்தனு கூவிட்டே இருப்பிங்க”
பரிதவிப்பு, கோவம் இரண்டையும் சரி விகிதத்தில் காட்டிய அந்த விழிகள் அர்ஜுனுக்கு புதிது. மருத்துவமனையில் அவள் அதிகம் பேசி கூட அவன் கண்டது இல்லை.
error: Content is protected !!