Skip to content
Post Views: 3,409
அஸ்வத் செய்த கலாட்டாவில் பரபரத்து விழி பிதுங்கி உட்கார்ந்திருந்தாள்.
“என்ன ம்மா…?” என்றாள் அருந்ததி புவனாவைப் பார்த்து.
“எப்பவோ படுக்க போறேன்னு வந்த…? இன்னும் தூங்காம என்ன பண்ற…?”
“இதோ தூங்கிடுவேன் ம்மா…”
Advertisement
“ஏய் உங்கம்மாகிட்ட குடு போன” என அஸ்வத் அவளை ஒரு வழி செய்து கொண்டிருந்தான்.
“சும்மாயிருங்க…”
“அத்தை எப்படி இருக்கீங்க…? நான் உங்க வருங்கால மருமகன் பேசறேன்… கேட்குதா…?”
Advertisement
“அச்சோ என்ன இது கலாட்டா… சும்மா இருங்க” என்றாள் மெல்ல. விளையாட்டுக்கு தான் என புரிந்தாலும் அருந்ததிக்கு நெஞ்சுக் கூட்டுக்குள் மத்தளம் அடித்தது.
Advertisement
இத்தனைக்கும் புவனா இவளைப் பார்த்தபடி, கதவைப் பிடித்தபடி, அறைக்கு வெளியேதான் நின்றிருந்தார். யார் அது என்றார் பார்வையால் மகளிடம்.
“ப்ரண்டு ம்மா…”
“கேர்ள் ஃபிரண்டா…, பாய் ஃபிரண்டா கேளுங்க…?” என்றான் இங்கிருந்து அஸ்வத்.
Advertisement
அச்சோ அடங்கமாட்றானே. அம்மா வேற பக்கத்துல வந்தா காதுல விழுந்துடுமோன்னு எனக்கு இங்க பயத்துல ஹார்ட்டே வெளியில வந்துடும் போலருக்கு.
என்னைக்கும் இல்லாம இப்பதானா இவன் போன் பண்ணனும், பண்ணதும் இல்லாம சேட்டை வேற.
இவனோட… என பல்லைக் கடித்தவள் “சும்மாயிருங்க. நேரங்காலம் தெரியாம விளையாடிட்டு. அப்புறம் இப்பவே டும் டும்தான். உங்களுக்கு இல்ல. எனக்கு. அருவா கடை ஐயா சாமி கத்திய தூக்கிடுவாரு…” என முணுமுணுத்தாள்.
பயத்தில் கிசு கிசுவென பேசிய அவளது குரலைக் கேட்டு இங்கு கலாட்டா செய்தவனுக்கு இன்னும் உற்சாகம் பொங்கியது.
இப்பொழுது அவள் முகம் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பார்த்தவனுக்கு உடனேயே அவளை பார்க்க ஆசை.
“இந்நேரத்துல என்ன பேச்சு? லைட்ட வேற போட்டு வச்சுட்டு…” என உள்ளே வந்து விளக்கை நிறுத்தி, விடிவிளக்கை போட்டு, மகளுக்கு வந்து போர்வையை போர்த்தி விட்ட புவனா, “சீக்கிரம் பேசிட்டு தூங்கு. அப்பா வர நேரமாச்சு” என கதவை சாத்திவிட்டு சென்றார்.
ராஜேந்திரன் வியாபாரத்தை முடித்து வர இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிடும். ஆதலால் புவனா ஹாலில் டிவியைப் போட்டுவிட்டு கணவருக்காக காத்திருந்தார்.
அவர் சென்றதும்தான் அவளுக்கு மூச்சே வந்தது. “ஹப்பாடி..” என மூச்சை ஆசுவாசமாக இழுத்து விட்டாள்.
அந்த பக்கம் அஸ்வத்துக்கு சிரிப்புதான் இவளின் சத்தத்தைக் கேட்டு.
“அம்மா போயிட்டாங்களா…?”
“ஹ்ம்ம்… கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்டீங்க. மூச்சே நின்னுடுச்சு. அவங்க பக்கத்துல வரும்போது ஏதாவது பேசிடுவீங்களோன்னு. இப்படியா கலாட்டா பண்ணுவீங்க…?”.
“ஹா… ஹா… பயந்திட்டியா… ஹனி…? அது சும்மா விளையாட்டுக்கு…?”
“நல்லா விளையாண்டீங்க. அம்மா மட்டும் பார்த்திருந்தா…” என நெஞ்சை நீவிக் கொண்டாள். இன்னும் நெஞ்சில் அந்த பயத்தின் அதிர்வு மீதமிருந்தது.
“ஹேய் ஹனி. கோவமா…? சும்மா விளையாட்டுக்கு டா…?” என சமாதானப் படுத்தினான்.
“ஹ்ம்ம்…. என்ன திடீர்னு போன்லாம்…?”
“ஏன் பண்ண கூடாதா…? உன்கிட்ட பேசனும்னு தோணுச்சு…? போன் பண்ணேன். ஏன் போன் எடுக்க இவ்வளவு நேரம்?”
ஆமாம். முதல் ரிங்க் முழுதாக சென்று, அடுத்த ரிங்கில்தான் போனை எடுத்திருந்தாள். இங்கு மதுரையில் இருப்பதால் எடுக்கலாமா… வேணாமா என்ற குழப்பம் வேறு. அவள் பயந்தது போலவே புவனாவும் வந்துவிட்டார்.
“ஹ்ம்ம்… அம்மணி போன் எடுக்க லேட் பண்ண இல்ல. அதான் ஒரு சின்ன கலாட்டா. பிஸியா…?” என்றான் சிரித்துக் கொண்டே. நேரம் இரவு பத்துக்கு மேல் ஆகியிருந்தது.
“ம்ஹூம். சும்மா படுத்துதான் இருந்தேன்”.
“அதுக்குள்ள படுத்தாச்சா…?”
“டைம் என்ன ஆகுது. அதுக்குள்ள படுத்தாச்சான்னு… கேட்கறீங்க?”
“அங்கிருந்த கடிகாரத்தை பார்த்தவன், ஓ… பத்தாயிடுச்சா…?” என முனகிக்கொண்டே “நான் டைமெல்லாம் பார்க்கிறதில்ல. என் வேலை அப்படி. வீட்லருந்து எப்ப போவேன், எப்ப வருவேன், எனக்கே தெரியாது.
“டெய்லி வீட்டுக்கு வரவே லேட் நைட் ஆயிடும். எப்பவாவது தான் இந்த மாதிரி நேரத்துக்கு வந்து சாப்பிட்டு படுக்கறது. அதனாலேயே உனக்கு போன் பண்ணக் கூட முடியல. அன் டைம்ல கால் பண்ணி உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னுதான்”.
“ஹ்ம்ம்… எப்படியிருக்கீங்க…?”
“ம்ம்… நீ எப்படி இருக்க…?”
“ம்ம்… பைன். உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்.”
“என்னடா…?
கேட்க வந்துவிட்டு “ம்ஹூம்… ஒன்னுமில்ல…” என தயங்கினாள்.
“இல்ல ஏதோ கேட்க வந்தே. சொல்லுடா…”
“இல்ல. நீங்க இத்தனை நாள் கால் பண்ணுவீங்கன்னு எதிர்பார்த்தேன். பண்ணலல்ல. அத கேட்கதான்… யோசனையா இருந்தது”.
அவனுக்கும் புரிந்தது. போன் செய்து பேச வேண்டும் எனதான் நினைப்பான். போனில் பேசினால் அதோடு முடியாது. நிச்சயம் நேரில் பார்க்க தோணும். மனதை கட்டுப்படுத்த முடியாது எனதான் அவனும் பேசாமல் இருந்தது. அவனுக்கும் அவளிடம் பேச மனம் துடித்துக் கொண்டுதானே இருக்கிறது. அடக்கும் வழி தெரியாமல்தான் தவித்துக் கொண்டிருக்கிறான்.
முறையாக வீட்டில் பேசி திருமணம் செய்யும்வரை பொறுமையாக இருக்க வேண்டும் என கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான். இன்று காலையிலிருந்து அவள் நினைவு அவனை பாடாய் படுத்திக் கொண்டிருக்கவே அழைத்திருந்தான்.
“புரியுதுடா… கொஞ்சநாள் பொறுத்துக்கோ. போன்ல பேசுனா, நேர்ல மீட் பண்ணனும்னு தோணும். வேணாம்னுதான் கன்ட்ரோலா இருக்கேன். என்னால உன்னை பார்க்காம கன்ட்ரோலா இருக்க முடியுமா, தெரியல”.
“என்னவோ இன்னைக்கு உன் ஞாபகம் ஜாஸ்தியாயிருக்கு. காலையிலருந்து உன்னை பார்க்கனும் போலவே இருக்கு. அதான் கால் பண்ணேன். ஏன்டா..? உன்னை கஷ்டப்படுத்தறேனா…?”
“இல்லல்ல. ஜஸ்ட் போன்ல பேசவாது செய்யலாமில்ல…? அதான் கேட்டேன்”.
“ம்ம்… பார்க்கலாம். வீடியோ கால் வரியா…? உன் முகத்த பார்க்கனும் போல இருக்கு ஹனி” என்றான் ஆசையாக.
“அச்சோ வீடியோ கால்லயா…? திரும்ப அம்மா பார்த்துட்டாங்கனா…” என பதறினாள்.
“ஹேய் அதெல்லாம் வரமாட்டாங்க. ப்ளீஸ்மா… வீடியோ கால் பண்ணவா…?”
“பயமாயிருக்குங்க. யாராவது வந்துடுவாங்களோன்னு…?”
“ஏன், இவ்வளவு டென்ஷன்? போன்ல தான… பார்க்க கேட்கறேன்”.
“ம்ஹூம். வேணாம். மறுபடியும் அம்மா வந்தாங்கனா ரிஸ்க். வேணாம்” என பயந்தாள்.
“ஊருக்கு போறேன்னு சொல்லவேயில்லை என்கிட்ட”.
தோடா. இவர் என்னமோ டெய்லி என்கிட்ட பேசற மாதிரி…?என முனகினாள் சத்தமில்லாமல்.
“ஹேய்… என்ன அப்பப்ப ஆஃப் மோடுக்கு போயிடறே? ஏதோ முனுமுனுன்ன மாதிரி இருந்தது. ஏதாவது சொன்னியா…? இல்ல, என்னை ஏதாவது கலாய்க்கிறயா…?” என்றான் விளையாட்டாக.
“இல்லையே… அப்படிலாம்… இல்லவே…. இல்ல”.
“ஹா… ஹா… நீ சொல்றத பார்த்தாலே, அப்படிதான்னு தோணுது. அப்ப என்னை கலாய்ச்சிட்டு தான் இருந்தியா..?”
“லைட்டா…” என்றாள் மூக்கைச் சுருக்கி, கைகளை சிறியதாக குவித்து காட்டி.
“இதுக்குத்தான் முகம் பார்த்து பேசனும்னு சொல்றது. இப்ப பார் நீ பேசும்போது, உன் பேஸ பார்க்க முடியல. ப்ளீஸ் வீடியோ கால் பண்ணவா…?”
“வேணாம்… வேணாம்… ப்ளீஸ். அம்மா வந்ததால தப்பிச்சேன். அப்பா வந்திருந்தாங்கனா… அவ்வளவுதான்” என பயந்தாள்.
“ம்ம்… பொழைச்சு போ. சொல்லு. என்ன திடீர்னு ஊருக்கு போயிருக்க…? ஏதாவது விசேஷமா….?”
“ஏன் ஏதாவது விசேஷம் இருந்தாதான் வரனுமா என்ன…? ஸ்கூல்ல எக்ஸாம் முடிஞ்சு லீவ் விட்டிருக்காங்க…” அதான்.
“ஓஹ்… எத்தனை நாள்? எப்போ வருவ…?”
“ஒன் வீக் லீவ். நேத்துதான் வந்தேன். இந்த வீக் ஃபுல்லா இங்கதான் இருப்பேன். சன்டே நைட் கிளம்பி மன்டே அங்க வருவேன்” என்றாள்.
“ஒரு வாரமா…? அம்மாடியோ… அவ்வளவு நாள் ஆகுமா…?”
“ஏன், என்னாச்சு?”
“உன்னை பார்க்கனும் போல இருந்தது…”
“ஹ்ம்ம்… நெக்ஸ்ட் வீக் பார்க்கலாம்”.
“எப்படா நம்ம கல்யாணம் முடியும்னு இருக்கு எனக்கு. தினமும் உன்னை பார்க்க முடியாம, பேச முடியாம, ஏதோ நெஞ்சுக்குள்ள முள் குத்தற மாதிரி அவஸ்தையா இருக்கு” என புலம்பினான் அவளிடம்.
அவளுக்கும் அதேபோல் தான் இருந்தது. அவன் அவளிடம் சொல்லிவிட்டான். அவளால் வெட்கத்தை விட்டு பகிர முடியாமல் இருந்தாள். கிட்டதட்ட காதலர்களின் மனநிலை ஒன்றாக தான் இருந்தது.
“நீ இப்பவே என் பொண்டாட்டியா பக்கத்தில இருக்கக் கூடாதான்னு ஏக்கமாயிருக்கு. இங்க, இப்பவே, என் பக்கத்துல இருந்தா, உன் மடியில தலை வச்சு படுத்துட்டு, உன் கையை பிடிச்சுட்டு ஆசை தீர பேசலாம். இதெல்லாம் எப்ப நடக்குமோ…ன்னு இருக்குடா” என பெருமூச்சுவிட்டான்.
இருவருக்குள்ளும் சற்று நேரம் அமைதி மட்டும்தான் அவன் சொன்னதை நினைத்து. இருவரின் மூச்சு காற்று மட்டுமே ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது.
“எனக்கு உன் அட்ரஸ், உன்னோட அப்பா போன் நம்பர் எல்லாம் வேணும். வாட்சப்ல அனுப்பிவிடு”, என்றான்.
“ஏன், எதுக்கு….. எதுக்கு….?”
“ஹா… ஹா… ஏன் இத்தனை எதுக்கு…?” என சிரித்தவன் “எதுக்குன்னா…. என் பொண்டாட்டிய எனக்கு கட்டிகுடுங்கன்னு, உங்க அப்பா கிட்ட கேட்க வேணாமா…? அதுக்குதான்….” என்றான் பாவனையாக.
“ஹோய்… இருக்கியா லைன்ல….? அப்பப்ப ஆப் ஆயிடற”
“ம்ம்… இருக்கேன்”. என அருந்ததியும் அஸ்வத்தும் வெகு நேரம் பேசிவிட்டே போனை வைத்திருந்தனர்.
அஸ்வத்தின் மனதிலை இப்படிதான் இருந்தது. ப்பா… இதுக்கு மேல தாங்காதுடா சாமி. விட்டுலருந்து சீக்கிரம் பேச சொல்லனும் என முடிவெடுத்துக் கொண்டான்.
விடுமுறை முடிந்து அருந்ததி சென்னைக்கு திரும்பியிருந்தாள். அவள் சென்னைக்கு வந்தே இரண்டு வாரத்துக்கு மேல் ஆகியிருந்தது.
அன்று போனில் பேசியதுதான் இருவரும், அதற்கப்புறம் பேசவில்லை. போனில் அடிக்கடி பேசினால் நேரில் பார்க்கத் தோணும்.
அது அவளுக்கும் தேவையில்லாத சங்கடத்தை ஏற்படுத்தும் என நினைத்து பேசாதிருந்தான்.
அவனே பேசாதபோது அவளும் முயற்சிக்கவில்லை. எல்லாம் முறையாக பெரியவர்களின் ஆசியுடன் நடக்க வேண்டும் என இருவரும் பொறுமையாக இருந்தனர்.
ராஜேந்திரன் இரவு உணவு முடிந்து ஹாலில் உட்கார்ந்திருந்தார். நீண்ட நேரம் மகன் ஏதோ யோசனையுடன் உட்கார்ந்திருப்பதை பார்த்த பாரிஜாதம் ராஜேந்திரனிடம் “என்னப்பா, எதுவும் பிரச்சினையா?” என்றார்.
பாரிஜாதம் மகனுக்கு எதிரில் அமர்ந்திருந்தார். புவனாவும் வேலையெல்லாம் முடித்து அப்போதுதான் வந்து உட்கார்ந்தார்.
தாயை நிமிர்ந்து பார்த்தவர், “நம்ம அருந்ததிக்கு ஒரு வரன் வந்திருக்கு. அதான் யோசிட்டிருக்கேன்” என்றார்.
“நல்ல விஷயம் தானே. அதுக்கேன் இப்படி உட்கார்ந்திருக்கே…? யார் என்னன்னு சொல்லு.”
“பையன் போலீஸ்ல வேலை பார்க்கிறான். ஒரு பையன் ஒரு பொண்ணு. பொண்ணுதான் மூத்தது. கட்டிக் குடுத்துட்டாங்க. ஊர் திருநெல்வேலி”.
“ம்ம்… நல்ல இடமாதான் இருக்கு, அப்புறம் என்ன யோசனை”.
“ஆனால், நம்ம ஆளுங்க இல்லம்மா. அதுதான் யோசனையா இருக்கு”.
“யார் மூலமா வந்ததுங்க?” என்றார் புவனா.
“அவங்களே போன்ல பேசினாங்க புவனா”.
“அப்படியா…? நம்ம வீட்டுல பொண்ணு இருக்கறது அவங்களுக்கு எப்படி தெரியும்…?” என்றார் புவனா சந்தேகமாக.
“நானும் அததான் யோசிச்சிட்டு இருக்கேன். ஆனால் போன்ல பேசும்போது எதையும் நான் கேட்டுக்கல. அந்த நேரம் கடையில வேற பிஸியா இருந்ததால, அவங்க சொன்னத மட்டும் கேட்டுகிட்டேன்”.
“இது ஒரு விஷயமா…? கல்யாணத்துக்குன்னு பொண்ணு இருந்தா நாலு பேர் கேட்கதான் செய்வாங்க. இவன்தான் இரண்டு மூனு இடத்தில பதிஞ்சு வைச்சிருக்கானில்ல. அதிலிருந்து கூட பார்த்திருக்கலாம்” என்றார் பாரிஜாதம்.
“ம்ம்… இருக்கலாம். நான் அதுக்கு கேட்கல த்தை. உங்க பிள்ளை தரகர்கிட்ட சொல்லி வச்சிருக்கேன்னு சொன்னாரே, அதனால கேட்டேன்”. என்றார் புவனா.
“அதான் சொல்லிட்டானே. அவங்களே போன்ல பேசினாங்கன்னு. இப்ப அதுவா முக்கியம். என்ன ஏதுன்னு விசாரிப்பா… நீ” என்றார் மகனிடம்.
“இந்த இடம் சரி வருமா மா. ஓகேன்னு சொல்றியா…?செய்யலாம்னு சொல்றியா. எனக்கு இன்னும் யோசனையாதான் இருக்கு” என தடுமாறுவது அவரது பேச்சிலேயே தெரிந்தது.
“இதுல என்னப்பா யோசனை உனக்கு. நல்ல இடமாயிருந்து உனக்கு பிடிச்சிருந்தா பேசவேண்டிதான” என்றார்.
“நம்ம ஆளுங்க இல்லையேம்மா”.
“ஆமாம். நம்ம ஆளுங்கன்னுதான் ஒருத்தனை பார்த்து முடிக்க இருந்தே. நாங்கலாம் படிக்காத மாப்பிள்ளை வேணான்னு அவ்வளவு சொல்லியும், அவனை மாதிரி உண்டான்னு பிடிவாதமா நின்ன, அவனைத்தான் முடிப்பேன்னு. என்ன ஆச்சு கடைசில…?” என்றார்
ராஜேந்திரனுக்கும் தலையிறக்கமாக இருந்தது. பாரிஜாதம் கூறியதைக் கேட்டு. அது உண்மைதானே. வீட்டில் உள்ளவர்கள் அத்தனை மறுத்தும் அவர்தானே பிடிவாதமாக அந்த வரனை முடித்திட வேண்டும் என்பதில் அத்தனை உறுதியாக இருந்தார். தொழில் வட்டத்தில் கூட எல்லோருக்கும் விஷயம் பரவியிருந்தது.
முதலில் வசீகரனுக்கும் இவரது பெண்ணுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்ட நிலையிலும் எல்லோருக்கும் செய்தி தெரிந்திருந்தது. உள்ளூர் என்பதாலும், இருவரும் ஒரே தொழிலில் இருப்பதாலும் இருவரையும் தெரிந்த தொழில் சார்ந்த நண்பர்கள் வட்டம் அதிகம் என்பதாலும், உடனுக்குடனே செய்தி பரவியிருந்தது. இப்போது வசீகரன் வேற ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்ததும் தெரிந்திருந்தது.
வசீகரன் தனது மகளை பெண் கேட்டு வந்த போது கர்வமாகவும் கௌரவமாகவும் பார்த்த ராஜேந்திரனுக்கு, இப்போது அவமானமாக இருந்தது.
திருமண ஏற்பாடுகள் எல்லாம் ஆரம்பித்து பாதியில் நின்றிருந்த நிலையில், சொல்ல முடியாத வருத்தமும் கூட அவருக்கு. இதில் கேட்பவர்களுக்கு பதில் சொல்லியே சலித்துவிட்டார். இப்பொழுதுதான் அதை கொஞ்சம் மறந்திருக்கிறார் என சொல்லலாம்.
பாரிஜாதமே அதைப்பற்றி சொல்லிக் காட்டியதும், ஒன்றும் பேச முடியவில்லை. சுருக்கென வலிதான் அவருக்கு.
மனதில் பெண்ணுக்கு அந்தஸ்திலும், கௌரவத்திலும் வசீகரனை விட உயர்ந்த இடமாக பார்த்து முடிக்க வேண்டும் என வைராக்கியதுடன் இருக்கிறார். அவனை விட நல்ல மாப்பிள்ளையாக பார்த்து பெண்ணுக்கு திருமணம் நடத்திட வேண்டும் என்ற வீம்பும் இருந்தது மனதில்.
மனதில் வசீகரனைக் கொண்டு நீ என்னடா…, உன்னை விட நல்ல மாப்பிள்ளை என் பெண்ணுக்கு பார்த்து ஊர் மெச்ச திருமணம் செய்கிறேனா இல்லையா பார் என தீர்மானமே செய்திருந்தார்.
இப்பொழுது இந்த வரன் வந்ததும் ஏகத்துக்கும் யோசனை மனதில். இதற்கு முன்னமே இரண்டு வரன் வந்திருந்தது. ஆனால் அது ஜாதகம் பொருந்தி வரவில்லை என விட்டிருந்தார்.
இப்பொழுது இந்த வரனில் அவர்கள் இனத்தை தவிர மற்ற எல்லாம் சரியாக இருக்கிறது. இருந்தும் குழப்பமும் யோசனையாகவே இருந்தார். முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.
இவரது தெளியாத நிலை கண்ட பாரிஜாதம் “சரிப்பா ஏன் உனக்கு குழப்பம்? நம்ம வச்சிருக்கிறது கருவேப்பிலைக் கொத்து மாதிரி ஒன்னே ஒன்னு. அவளுக்கு முதல்ல மாப்பிள்ளையை பிடிக்கனும் இல்ல. போன தடவைதான் அவள்கிட்ட கேட்காம உன் இஷ்டமா முடிவு பண்ண. இது அவள் வாழப்போற வாழ்க்கை. அவகிட்ட கேட்டு முடிவேடு என்றார். சரியென தலையசைத்து கொண்டார் ராஜேந்திரன்.
தொடரும்.
error: Content is protected !!