Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Meendum Vikramaathithyan

Vijay’s MV – Chapter 14

எங்கோ மிகத் தொலைவில் அந்த ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

 

‘ரம்-டம்-பட்-டட்-டற-டற…’

 



Advertisement

மெல்லியதாய், ஆனால் இடைவிடாமல் அவ்வொலி கேட்டுக்கொண்டே இருந்தது.

 

விஷாலிக்கு அதைக் கேட்டுக் கேட்டுத் தலையே வெடித்துவிடும் போல இருந்தது.

Advertisement

 

Advertisement

‘தலை வெடிக்கும்’ என்ற எண்ணம் வந்தபோதுதான் அவள் அந்த வலியையும் உணர்ந்தாள்.

 

தலையிலிருந்து கால்வரை பரவி, எங்கே என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாத ஒரு அவத்தை. உண்மையில் அந்த வலி இருக்கிறதா? கற்பனையா?

Advertisement

 

விஷாலி கண்களைத் திறக்க முயன்றாள். திறந்தாளா இல்லையா? எல்லாமே இருட்டுதான்.

 

தொலைவில் அந்த ஒலி மட்டும்.

 

‘டம்-ரம்-டட்-பட்-டற-டட்…’

 

மெல்ல அந்த ஒலி அருகில் கேட்பதைப் போலத் தோன்றியது.

 

விஷாலி கண்களை இறுக்க மூடிக்கொண்டாள், இருட்டு.

 

கண்களை அகலமாகத் திறந்து பார்த்தாள், இருட்டு!

 

எவ்வளவு நேரம் இப்படி இங்கே இருக்கிறோம்? எங்கே இருக்கிறோம்?

 

கேள்விகள் அவளை மெள்ள உறுத்தின.

 

அவள் கடைசியாக எங்கே இருந்தோம் என்று எண்ணிப்பார்த்தாள். முதலில் கோர்வையற்ற காட்சிகள் மனத்தில் ஓடின.

 

மெள்ள அவளுக்கு அருணின் முகம் நினைவிற்கு வந்தது.

 

”அரூண்ண்ண்….”

 

விஷாலி தன்னையும் அறியாமல் உரக்கக் கத்தினாள். எந்தப் பதிலும் இல்லை.

 

அந்த ஒலி மட்டும் இப்போது சற்று அருகில், சற்றே சத்தமாய்க் கேட்டது.

 

‘ரம்-டம்-பட்-டட்-டற-டற…’

 

விஷாலியின் தலைவலி அதிகமானதைப் போலத் தோன்றியது.

 

அவள் மெல்ல அச்சூழலை எதிர்ப்பதை விடுத்து அதற்குத் தன்னைப் பழக்க முயன்றாள்.

 

அந்த ஒலியைக் கவனித்துக் கேட்கத் தொடங்கினாள்.

 

கேட்கக் கேட்க அது புரிவது போலத் தோன்றியது.

 

ஒரே விஷயத்தைப் பலர் ஒரே சமயத்தில் இம்மியளவும் இடைவெளியில் பிசகாமல் உச்சரிப்பதாகத் தோன்றியது.

 

‘வ்ராம்-ட்டாம்-பாட்-றாட்…’

 

கேட்கக் கேட்க விஷாலியால் அந்த ஒலியில் தனித்தனிக் குரல்களை அடையாளம் காண முடிவதாகத் தோன்றியது.

 

அந்த ஒலி ஏதோ மந்திர உச்சாடனம் என்பதாகத் தோன்றியது.

 

இதுவரை அவள் கேட்டிராத ஒரு மொழியின் மந்திரம்.

 

விஷாலி இன்னும் முனைப்பாக அதைக் கேட்டாள்.

 

கேட்கக் கேட்க அது அவளைத் தனக்குள் இழுத்துக்கொண்டது.

 

நீரில் மூழ்கி மெள்ள மெள்ள ஆழத்திற்குச் செல்வதைப் போல அந்த ஒலிக்குள் சென்றாள்.

 

அதனால் ஏற்பட்ட அவத்தைகள் மெள்ளக் கரைந்தன. விஷாலி இப்போது அந்தச் சூழலை இரசிக்கத் தொடங்கினாள்.

 

அந்த ஒலி ஒரு இயந்திரச் சங்கீதம் போல அவளைச் சூழ்ந்தது.

 

முன்பிருந்த எந்த வலியும் எரிச்சலும் குழப்பமும் இப்போது இல்லை.

 

இதிலேயே காலமெல்லாம் இலயித்துவிட முடியும் என்பதைப் போல விஷாலி அந்த ஒலிக்குள் மூழ்கியிருந்தாள்.

 

அவளுக்கு இனிமையான எதையும் அவளுக்குத் தரக்கூடாது என்பதைப் போல அந்த ஒலி சட்டென நின்றது.

 

காதை அடைக்கும் ஒரு பேரமைதி அங்கு ஒரு கணம் நிறைந்தது.

 

சட்டென அவள் முன் ஒரு ஒளிப்பெருக்கம்.

 

சடாலென அவளது உலகம் மாறியது.

விஷாலியின் கண்கள் கூசின. கண்கள் திறந்திருந்தன என்பதை அவள் அப்போதுதான் உணர்ந்தாள்.

 

அனிச்சைச் செயலாய்க் கண்களை மூடிக்கொண்டாள்.

 

அப்போதும் அவளால் முன்னால் இருந்த வெளிச்ச வெள்ளத்தை உணர முடிந்தது.

 

மூடிய நிலையிலும் கண்கள் கூசின. அந்த வெளிச்சத்தின் தாக்கம் தாங்காமல் அவளது உடலில் மெல்லிய வலி  பரவியது.

 

எவ்வளவு நேரம் என்று தெரியாமல் சில நிமிடங்கள் அப்படியே கழிந்தன.

 

விஷாலி மீண்டும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அந்த வெளிச்சத்திற்குத் தன்னைப் பழக்கிக்கொள்ள முயன்றாள்.

 

சில நிமிடங்களில் அவளால் கண்களைத் திறக்க முடிந்தது.

 

முதல் ஒரு சில நொடிகள் பெரும் வேதனையாய் இருந்தன, பல்லைக் கடித்துக்கொண்டு அந்த வெளிச்சத்தை வெறித்தாள்.

 

மெள்ள அவளுக்குக் காட்சிகள் புலப்படத் தொடங்கின.

 

அவள் ஒரு அறைக்குள் சிறை வைக்கப்பட்டிருந்தாள். அவளது கைகளும் கால்களும் அவள் அமர்த்தப்பட்டிருந்த நாற்காலியோடு பிணைக்கப்பட்டிருந்தன. கைகளும் கால்களும் இலேசாய் ரத்தம் கட்டி மரத்துப் போயிருந்தன.

 

அது என்ன மாதிரியான அறை என்பதை அவளால் ஊகிக்க இயலவில்லை. அதில் சன்னல்கள் இருப்பதாய் தெரியவில்லை. இருந்தாலும் அவை இறுக்கமாக மூடப்பட்டிருந்தன. அறைக்குள் வந்த தீடிர் வெளிச்சத்தின் காரணம் அதன் வாசல் கதவு திறக்கப்பட்டதுதான் என்பதை அவள் உணர்ந்துகொண்டாள்.

 

கதவு திறக்கப்பட்டதும் அறைக்குள் மெல்லியதாய் ஒரு புகைப் படலம் பரவத் தொடங்கியது. நல்ல காய்ந்த விறகுகளை எரிக்கும் பசுமையான மணத்துடன் பரவிய அந்தப் புகையில் மெள்ள ஒரு துர்நாற்றமும் கலந்து பரவியது.

 

தொலைவில் கேட்ட அந்த மந்திர உச்சானடன் ஒலி இப்போது மீண்டும் மிக அருகில் மிகத் தெளிவாய்க் கேட்டது.

 

‘ஈம்… வ்ராம்-ட்டாம்-பாட்-ஹாட்… ஈம்ம்ம்…’

 

விஷாலிக்குத் தலை வெடித்துவிடும் போல வலித்தது.

 

வாய்விட்டுக் கத்தலாமா என்று எண்ணினாள். எண்ணினாளா? கத்தியேவிட்டாளா? ஒன்றும் புரியவில்லை!

 

எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் சுழல்வதைப் போல இருந்தவளுக்குச் சட்டென வாசலின் முன் வந்து நின்ற அவனின் உருவம் ஒருவகை ஆறுதலை அளித்தது!

 

வாசலின் வெளிச்சச் சட்டத்தில் நிழல் வடிவாய் அவன் நின்றிருந்தான்.

 

விஷாலி கண்களை வெளிச்சத்திற்குப் பழக்கிக்கொண்டு அவனைக் காண முற்பட்டாள்.

 

அவன் மெள்ள நடந்து அறைக்குள் வந்தான்.

 

“பட்டீஈஈ…”

 

விஷாலியின் குரலில் ஆறுதலும் மகிழ்ச்சியும் நிம்மதியும் பொங்கின.

 

பட்டி மெள்ளப் புன்னகைத்தபடியே இன்னும் அருகில் வந்தான். எதுவும் பேசாமல் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

விஷாலி உற்சாகமானாள். அவளது வலிகளும் துன்பங்களும் இருந்த இடம் தெரியாமல் காணமல் போயின.

 

‘இதோ, பட்டி வந்துவிட்டான், கண்டிப்பாக விக்ரமிற்கும் அருணிற்கும் நாம் இருக்கும் இடத்தைச் சொல்லியிருப்பான், இதோ என்னை இங்கிருந்து வெளியே கூட்டிப் போகப் போகிறான்…’

 

விஷாலியின் உள்ளத்தில் நம்பிக்கை ஊற்றெடுக்கத் தொடங்கியது.

 

ஆனால், அடுத்த நொடியே அவளின் உற்சாகமும் நம்பிக்கையும் சட்டென வடிந்தன.

 

பட்டி தன் இடுப்பிலிருந்து ஒரு கட்டாரியை மெள்ள உருவி எடுத்து அவள் முன் நீட்டினான். நீண்ட குதிரைமுகக் கைப்பிடி கொண்ட சகர் கட்டாரி அது. அவனது முகத்தில் இருந்த புன்னகை மெதுவாக கோரமாக மாறியிருந்தது.

 

”பட்- பட்டி… எ- என்ன பண்ணப் போற?”

 

“யாஸ்னா… உன்னை அழிக்கப் போறேன்…”

 

அவன் சர்வ சாதாரணமாகச் சொன்னான்.

 

“யா- என்ன? டேய் பட்டி… என்னை விடுடா, என்னைக் கழட்டிவிடு, விக்ரம்கிட்ட கூட்டிட்டுப் போ… இந்த மாதிரிலாம் விளையாடாத… கைலாம் வலிக்குது…”

 

விஷாலி வலி நிறைந்த குரலில் கெஞ்சினாள்.

 

பட்டி பதில் சொல்லாமல் தன் கோரப் புன்னகை மாறாமல் இவளை உற்றுப் பார்த்தபடி அருகில் வந்தான்.

 

“டேய்… எதுக்குடா இப்படிலாம் பண்ற?”

 

விஷாலி இப்போதும் அவன் அப்பாவியான, தான் கேலியும் கிண்டலும் செய்து சீண்டும் பட்டிதான் என்று நம்ப விரும்பினாள். முடியவில்லை!

 

“ரத்னாங்கி…”

 

அவனது குரல் சூடான கல்லில் தண்ணீர் பட்டுத் தெறிப்பதைப் போல ஒருவகை ‘ஹ்ஹ்ஸ்ஸ்ஸ்’ ஒலியுடன் ஒலித்தது. கேட்கும்போதே விஷாலியின் காதில் வெப்பம் பரவியது.

 

“ய- யாரு ரத்னாங்கி? டேய் பட்டி… நான் விஷாலி டா… நீ- நீ விளையாடுறதான? விக்ரமும் அருணும் இதுக்கு உடந்தையா? எங்க ஒளிஞ்சிருக்காங்க அவங்க? போதும்… இதைலாம நிறுத்துங்க… எனக்கு உண்மையாவே கை கால்லாம் வலிக்குது!”

 

விஷாலி பாவமாகச் சொன்னாள். இது விளையாட்டல்ல என்பதை அவள் நன்றாகவே உணர்ந்திருந்தாள். அவள் உடலின் ஒவ்வொரு அங்குலத்திலும் வலி ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. ஆனாலும், இதையெல்லாம் விளையாட்டு என்று சொல்வதன் மூலம் இவை உண்மையிலேயே விளையாட்டாக மாறிவிடும் என்று அவளின் மனம் ஒரு மூளையில் நம்பியது!

 

“ரத்னாங்கி… என்னோட குறிலேர்ந்து யாரும் தப்பிச்சதே கிடையாது… ஆனா நீ மட்டும் மூனு முறை தப்பிச்சுட்ட… நீ பெரிய வித்தைக்காரிதான்… ஆனா, இனிமே உன்னால தப்பிக்க முடியாது!”

 

அவன் தன் கோர புன்னகை மாறாமல் சொன்னான்.

 

“நான் ரத்னாங்கி இல்ல… நா- நா… விஷாலி டா!”

 

விஷாலி கத்தினாள்.

 

“நீ யாருனு இதோ இப்ப தெரிஞ்சுடும்… உன்னை இந்த யஸ்னால பலி கொடுத்தாத்தான் எனக்கு நான் தேடுறது கிடைக்கும்!”

 

அவன் அந்தக் கட்டாரியால் காற்றில் கீறியபடியே சொன்னான்.

 

‘நடந்த கொலை முயற்சிலாம் விஷாலி மேலத்தான்’

 

‘ஆனா, அவங்க நோக்கம் விஷாலியைக் கொல்றது இல்ல, கடத்துறதுதான்’

 

‘விஷாலி மூலமா அவங்களுக்கு ஏதோ ஆக வேண்டியிருக்கு’

 

தேவியும் செழியனும் பேசிக்கொண்டதெல்லாம் விஷாலிக்குச் சட்டென நினைவிற்கு வந்தன.

 

தன்னை வைத்து இவர்களுக்கு ஏதோ ஆக வேண்டியிருக்கிறது. எனவே இவர்கள் தன்னைக் கொல்லமாட்டார்கள் என்ற எண்ணம் விஷாலியின் மனத்தில் பதிந்தது.

 

“என்னைக் கொன்னுட்டா உனக்கு எந்த பிரயோஜனமும் இல்ல!”

 

விஷாலி சட்டென நம்பிக்கை பெற்றவளாய் அவனைப் பார்த்துச் சொன்னாள்.

 

“ஹா ஹா ஹா”

 

அவன் அந்த அறையே நடுங்கும்படி கொடூரமாகச் சிரித்தான்.

 

“உன் கணக்குத் தப்பு, ரத்னாங்கி! எங்களுக்கு நீ தேவையே இல்ல… உன்னை அழிச்சாத்தான் எங்களுக்கு பிரயோஜனமே… உன்னோட இந்த அப்பாவி விஷாலி வேஷத்தைப் பார்க்க எனக்கே பரிதாபமாத்தான் இருக்கு… நான் பட்டியா அங்க வந்திருந்தப்ப நீ ஒருத்திதான் என்கிட்ட உண்மையான பரிவோட இருந்த… அதுக்கு என் நன்றி… ஆனா, நான் என் கடமையைச் செய்தே ஆகனும்…”

 

ஒரு நொடி அமைதியோடும் பரிவோடும் காட்சியளித்த அவனது முகம் அடுத்த நொடியே கோரமாகியது.

 

கையில் இருந்த கட்டாரியை விஷாலியின் நெஞ்சைக் குறிவைத்து ஓங்கினான்…

 

“தேவீஈஈஈ…” விஷாலி அனிச்சையாக அலறினாள்!

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!