Skip to content
Post Views: 5,584
நாட்களும் விரைவாகவே சென்றது. பத்திரிக்கை அடித்து குலதெய்வக் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு முதல் பத்திரிக்கையை குலதெய்வத்துக்கு வைத்துவிட்டு, எல்லோருக்கும் பத்திரிக்கை வைக்கவும் ஆரம்பித்திருந்தனர்.
இன்று இருவீட்டாரும் சேர்ந்து முகூர்த்தப் புடவை எடுக்க தி.நகருக்கு வந்திருந்தனர். சாரதா பூபதியுடன் பெண்கள் மூவருமே வந்திருந்தனர். அமுதினிக்கு கௌதம் வருவானா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. திருமணம் பேசி முடித்த இத்தனை நாட்களில் அவனது பார்வை கூட அவள் மேல் படவில்லை.
வேலை நிமித்தமாக ஹாஸ்பிட்டலில் பார்க்க நேர்ந்தால்கூட யாரோ போல்தான் ஒதுங்கிக் கொள்வான். அவனாக ஏதாவது பேசுவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவள் இருக்கும் பக்கம் கூட அவன் வருவதில்லை. அவளுக்கு சில சமயம் சந்தேகமே வந்தது. நிஜமாகவே அவனுடன் தனக்கு திருமணமா என்று. அந்த அளவுக்கு இருந்தது அவனது பாராமுகம். ஒருவேளை அவனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ என்ற சந்தேகம் அவளுக்குள் தோன்றி வதைத்து கொண்டிருந்தது.
ஆதலால் இன்றைய தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்தாள். இன்றாவது அவனை நேருக்கு நேர் பார்த்து பேசுவதற்கான சந்தர்ப்பம் அமையும் என எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்.
Advertisement
இவர்கள் கடைக்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஷ்யாமளாவும், ஷ்யாமளாவின் பெரியம்மா மகனின் மனைவியுமான கீதாவும், அரவிந்துடன் வந்திருந்தனர். காரிலிருந்து கடை வாசலில் இவர்களை இறக்கி விட்ட அரவிந்தன் “நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன். நீங்க உள்ள போங்க” என கூறிவிட்டு சென்றிருந்தான்.
ஷ்யாமளாவையும் கீதாவையும் கனிமொழிதான் முதலில் பார்த்தாள். “அம்மா… அவங்க வந்துட்டாங்க” என்றாள் இவர்கள் வரும் திசையில் கையைக் காட்டி. அமுதினி ஆசையுடன் சட்டென திரும்பி பார்த்தாள். அங்கே ஷ்யாமளாவுடன் கீதா மட்டும் வருவதைப் பார்த்தவளுக்கு உள்ளக்குள் ஏமாற்றமானது.
எல்லோரும் சேர்ந்து முதலில் முகூர்த்தப் புடவையை நல்ல நேரத்தில் எடுத்துவிடலாம் என்று, பட்டுப் புடவைகளுக்கான செக்ஷனுக்கு சென்றனர். ஷ்யாமளா “அனி உனக்கு பிடிச்ச மாதிரி நீயே பார்த்து எடுடா” என்றார்.
Advertisement
“ம்ம்…” என தலையசைத்தவளுக்கு எங்கே புடவையின் மீது கவனம் இருந்தது. அவளது எண்ணம் முழுவதும் ஏன் கௌதம் வரவில்லை என்பதில்தான் உழன்று கொண்டிருந்தத்து. அமுதினி புடவை எடுக்க தடுமாறுவதைப் பார்த்த சாரதா ” “என்னடா…?” என்றார் மகளிடம்.
Advertisement
“ம்ஹூம்… ஒன்னுமில்ல ம்மா… என்ன மாதிரி எடுக்கறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு அதான்” என சமாளித்து புடவை எடுப்பதில் கவனம் வைக்க முயன்றாள்.
பூங்குழலிக்கு புரிந்தது அமுதினியின் தடுமாற்றத்திற்கான காரணம். அவள் ஷ்யாமளாவிடம் வாய் திறந்தே கேட்டு விட்டாள்.
“அது அ….வங்க வரலை…யா அத்தை….?” என்றாள் பூங்குழலி தயக்கத்துடன் ஷ்யாமளாவிடம்.
Advertisement
“யாருடா…?” என்றார் ஷ்யாமளா.
“அ…து… மாமாதான் த்தை. அவங்களதான் கேட்கறேன்”.
சாராதாவும் அவர்களைதான் பார்த்திருந்தார். அவருக்கும் கௌதம் வந்திருக்கலாமே எனதான் இருந்தது. பெண்ணின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை அவரும் பார்த்திருந்தாரே. “மாப்பிள்ளையதான் கேட்கிறா. குழலி பார்க்கலைல்ல. அதான்…” என்றார் சாரதா ஷயாமளாவிடம்.
அவருக்கு பூங்குழலி கேட்டதை வைத்து ஷ்யாமளா தவறாக ஏதும் எடுத்துக் கொள்ள கூடாதே என்ற பதைப்பு. அதுதான் அவராகவே காரணத்தை கூறியிருந்தார்.
“ம்ம்… புரியுது. பட் அவனுக்கு இன்னைக்கு ஒரு இம்பார்ட்டன்ட் வொர்க் இருந்ததால வர முடியலடா” என்றார் ஷ்யாமளா. அது உண்மையும்கூட. ஆனால் காரணம் அதுமட்டுமில்லையே. அவன்தான் அவனுடைய எண்ணத்தை முதலிலேயே பகிர்ந்திருந்தானே. இருந்தும் இன்று கிளம்புவதற்குமுன் மகனை ஒரு முறை அழைத்து பார்த்தார் ஷ்யாமளா. அவன் எதற்கும் செவி சாய்க்கவில்லை.
ஷ்யாமளாவின் முகத்தில் தெரிந்த வருத்தத்தை பார்த்ததும் பூங்குழலி, “இல்ல த்தை. மாமாவும் வந்திருந்தா அவங்களுக்கும் பிடிச்ச மாதிரி சேரி எடுக்கலாம்னுதான் கேட்டேன்” என்றாள்.
அவளைப் பார்த்து முறுவலித்தவர், “தெரியுதுடா. அவன் இதுவரைக்கும் இதுல எல்லாம் பெருசா இன்ட்ரஸ்ட் காட்னதில்ல. ஒருவேளை அனி வந்ததுக்கு அப்புறம் மாறுனா சந்தோஷம்தான்” என்றார் மருமகளைப் பார்த்து புன்னகையுடன். இவர்கள் சம்பாஷணையைக் கேட்டு கொண்டிருந்த அனிக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. அவளும் மௌனமாக ஷ்யாமளாவை பார்த்து புன்னகைத்து கொண்டாள்.
கீதாதான் அவர்களின் கவனத்தை திருப்பி புடவை எடுத்து போட சொல்லி பார்க்க ஆரம்பித்தார். அமுதினியும் அவருடன் சேர்ந்து தனக்கு என்ன மாதிரியான நிறத்தில் வேண்டும் என சொல்லி புடவையை எடுத்து போட சொல்லி பார்க்க ஆரம்பித்தாள். அமுதினியை சுற்றி பெண்கள் எல்லோரும் குழுமியிருந்தனர் சேலையை தேர்வு செய்வதற்காக.
ஆளாளுக்கு அவரவர் கருத்தைச் சொல்லி அமுதினியைக் குழப்பிக் கொண்டிருந்தனர். கனிமொழிக்கு அங்கே நிற்கப் பிடிக்காமல் அப்பாவிடம் சொல்லிவிட்டு அங்கேயே எதிர்பக்கத்தில் இருந்த கௌண்டருக்கு வந்து நின்று கொண்டாள்.
அவள் வந்து நின்ற சில நிமிடங்களில், “கல்யாணத்துக்கு புடவையா கட்டப் போற…” என்ற குரல் அவள் காதின் அருகில் கேட்க துள்ளிகொண்டு திரும்பினாள்.
“ஹேய்… ரிலாக்ஸ். நான்தான்” என அவள் தோள்களுக்கு மிக நெருக்கமாக அரவிந்தன் நின்றிருந்தான்.
“ப்பா….ஹ்” என நெஞ்சில் கைவைத்து ஆசுவாசப்பட்டவள், ஒரு நிமிஷம் யாரோன்னு பயந்தே போயிட்டேன். இப்படியா… சொல்லாம கொள்ளாம வந்து பின்னாடி நிப்பீங்க”.
அவளைப் பார்த்து சிரித்தவன், “அவங்க எல்லாம் எங்க, நீ மட்டும் தனியா இருக்க?” என்றான் கேள்வியாக.
“அதோ அங்க இருக்காங்க” என எதிர்புறமாக கையைக் காண்பித்தவள், “நீங்க எப்போ வந்தீங்க?” என்றாள் அவனிடம்.
“இப்பதான். நீ என்ன பண்றே இங்க தனியா நின்னுட்டு?”
“அங்க எல்லாரும் அக்காவுக்கு சேரி எடுக்கிறாங்க. எனக்கு போரடிச்சதுன்னு, இங்க வந்து சும்மா சேரி பார்த்துட்டு இருந்தேன்”.
“யாருக்கு உனக்கா? கல்யாணத்துக்கா…?”
“ம்ம்… இன்னும் டிசைட் பண்ணலை. சேரியா என்னன்னு…”
“சேரியே எடுத்துக்கோ. இதுவரைக்கும் நீ சேரி கட்டி நான் பார்த்தது இல்ல”.
“தோடா… என்னை எத்தனை முறை பார்த்திருப்பீங்க, இரண்டு மூனு தடவை இருக்குமா?” என்றாள் கிண்டலாக.
“ம்ம்…” என தலையசைத்தவன், அவளது கிண்டல் மொழியில் புன்னகைத்துகொண்டே, “உன் ஹைட்டுக்கு சேரி கட்னா நல்லாயிருக்கும்னு சொன்னேன்”. என்றான்.
“ம்ம்…” என ஆமோதிப்பாக தலையசைத்தவளுக்கும் அந்த எண்ணம்தான். குழலி திருமணத்துக்கு பாவாடை தாவணி அணிந்தவளுக்கு இந்த முனற சேரி கட்டினால் நன்றாக இருக்கும் என தோன்ற வந்து நின்று பார்த்து கொண்டிருந்தாள்.
“காலேஜ் பங்ஷன்ல எல்லாம் சேரிதான் கட்டுவேன்”.
“ஓஹ்…, நான் பார்த்தது இல்லல்ல”.
மறுபடியுமா… என அவனைப் பார்த்தாள்.
“என்ன லுக்கு? நீ என்ன இன்னும் சின்னப் பொண்ணா? சேரி கட்டேன் கல்யாணத்துக்கு…” என்றான் உரிமையாக.
அவன் உரிமையைப் பார்த்து, அவள்தான் ‘ஆங்’ என விழிக்க வேண்டியிருந்தது. இவங்க என்ன இவ்வளவு அதிகாரமா வந்து நின்னு சேரி எடுன்னு நம்மள விரட்டிட்டு இருக்காங்க என பார்த்திருந்தாள்.
அவளது விரிந்த விழிகளைப் ஆசையாக பார்த்தவன் ‘லவ்லி ஐஸ்’ என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் ரசனையான குரலில்.
அவனது பேச்சில் அவளுக்குதான் லஜ்ஜையானது. பட்டென எதிரில் இருந்த விற்பனையாளர் அவன் பேசியதை கவனித்துவிட்டாரா என பதட்டத்துடன் பார்த்தாள்.
அவர் பக்கத்தில் இருந்தவருடன் பேச்சு மும்முரத்தில் இருந்ததால் ஹப்பா என மனதிலேயே ஆசுவாசப்பட்டவள், அதற்கு மேல் அவனுடன் இருக்க சங்கோஜப்பட்டு “ஆன்ட்டி எல்லாம் அங்க இருக்காங்க. நீங்க அங்க போங்க. அவங்க உங்களுக்காக வெயிட் பண்ணுவாங்க” என்றாள். அவனை அங்கிருந்து அகற்றும் விதமாக.
அவளைக் கண்டு கொண்டவன் நமுட்டுச் சிரிப்புடன், “பரவாயில்லை அண்ணிக்கு ஹெல்ப் பண்ணதான் அத்தனைப் பேர் இருக்காங்க இல்ல. உனக்கு ஹெல்புக்கு நான் இங்க இருக்கேன்” என்றான் போனாப் போகுது என்னும் விதமாக.
அச்சோ இவன் என்ன இந்த வழிசல் வழியறான் என நினைத்துக் கொண்டு அவனையே பார்த்திருந்தாள்.
அவளது பார்வையில் குதூகலமானவன், “நல்லாயிருக்கனா…?” என்றான் கண்களை சிமிட்டி விளையாட்டாக.
“அய்யோடா… வழியுது தொடைங்க” என்றாள் கையைக் கட்டி அவனை முறைத்துக் கொண்டு.
அவள் முகத்தை வைத்து கொண்டு சொன்ன பாவனையில் அவனுக்குதான் சிரிப்பு வந்தது. அதில் ஹா… ஹா… என கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட்டான்.
“அய்யோ… என்ன பண்றீங்க?” என கையால் அவனது வாயை மூடவந்து முடியாமல் பதறி நின்றவள், “அப்பா அங்கதான் நின்னுட்டு இருக்காங்க. யாராவது பார்த்திடப் போறாங்க…” என்றாள் கண்களில் கெஞ்சலுடன்.
“கூல் பேப் யாரும் இங்க பார்க்கல”.
அவனிடம் மேலும் பேச்சு கொடுக்காமல், சேலையைப் பார்க்கும் சாக்கில் திரும்பிக் கொண்டாள். “நான் செலக்ட் பண்ண்ட்டுமா…?” என்றான் இன்னும் அவளை நெருங்கி நின்று கிசுகிசுப்பாக.
“ம்ப்ச் சும்மாயிருங்க. கலாட்டா பண்ணது போதும்”. முதலில் ஏதோ கேலி செய்கிறான் என நினைத்தவளுக்கு, போக போக அவனது பார்வையின் அர்த்தமும், பேச்சின் த்வனியும் அவளுக்கு வேறு எதையோ உணர்த்துவது போல் இருந்தது.
அதில் பெரியவர்களை நினைத்து கூடவே பயமும் எழுந்தது. தேவையில்லாம யாராவது பார்த்தா, எதாவது சொல்ல போறாங்க என மனதில் நினைத்தவள், அவனிடமிருந்து விலகப் பார்த்தாள்.
“ஹேய் விளையாட்டுக்கு இல்ல. நிஜமாதான் கேட்கறேன்” என இவள் பதில் சொல்லகூட இடம் தராமல், எதிரில் இருந்த சேல்ஸ் மேனிடம் லேட்டஸ்ட் டிஸைன்களை எடுத்து போடச் சொல்லி பார்க்க ஆரம்பித்தான்.
கன்மொழியோ அவன் கவனிக்காதவாறு, சேரியை பார்ப்பதை விட்டு ஓரக் கண்ணால் அவனையே பார்த்திருந்தாள்.
ஒரு வழியாக ஜவுளிகளை எடுத்து முடித்தவர்கள், பக்கத்திலேயே இருந்த புகழ் பெற்ற நகைக் கடைக்கும் சென்று திருமணப் பெண்ணிற்காக ஷ்யாமளாவும், மாப்பிள்ளைக்காக அமுதினி வீட்டிலிருந்தும் நகைகளை எடுத்து முடித்து, சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றனர்.
அரவிந்த் யாருடைய கவனத்தையும் கவராமல் கனிமொழியின் எதிரில் அமர்ந்து கொண்டான். வந்ததிலிருந்து இவனுடைய சேட்டையை எல்லாம் கவனித்து இருந்தவளுக்கு, இங்கேயும் எல்லோரின் முன்னேயும் அவளுக்கு எதிரிலேயே தைரியமாக அமருவான் என்று எதிர்பார்க்க வில்லை.
அவளுக்குத்தான் ஹார்ட்பீட் அதிமானது இவனது அலப்பறையால். புடவை எடுக்கும் போது கூட ஏதோ விளையாடுகிறான் என நினைத்திருந்தவளுக்கு உண்மையாகவே அவன் அவளுக்கான சேலையை தேர்வு செய்து எடுத்து தந்ததும் அதை வாங்க மறுத்து மலைத்து நின்றாள்.
என்ன என கண்களால் கேள்வி எழுப்பி நின்றவனிடம் ஒன்றுமில்லை என தலையசைத்தவளுக்கு, அந்த சேலையை மறுக்கவும் மனம் வரவில்லை. மாம்பழ கலர் புடவையில், வயலட் கலர் பார்டர் போட்டு, பார்டரில் தங்க சரிகையிட்ட குட்டி மயில் தோகையை விரித்திருப்பது போல டிசைன் செய்திருந்த புடவையைப் பார்த்ததும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதற்குள் பூபதி இவர்களைப் பார்த்துவிட்டு அருகில் வரவே அரவிந்தே அவரிடம், “அங்கிள் இந்த சேலை அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம். கல்யாணத்துக்காக சூஸ் பண்ணியிருக்கா. எடுத்துக்கோன்னா…, நீங்க என்ன சொல்லுவீங்களோன்னு தயங்கறா…” என்றான்.
இவன் சொன்ன பாவனையில் இன்னும் விழி விரித்து வியந்து பார்த்தாள் அவனை. அப்படியே அந்தர் பல்டி அடிச்சிட்டானே. நான் எடுத்ததா சொல்லிட்டான் என இவன் சொன்ன பாவனையில் ஆங் என அவனை பார்த்து நின்றாள்.
என்ன என்றான் ஒற்றை புருவத்தை உயர்த்தி நமுட்டுச் சிரிப்புடன்.
சரியான கேடியா இருப்பான் போல என நினைத்தவள் பார்வையை மாற்றிக் கொண்டாள்.
“எடுத்துக்கோடா. புடவை நல்லாயிருக்கு” என்றார் பூபதியும்.
ஏதும் சொல்ல முடியாமல், “ம்ம்…” என தலையசைத்தவள் பூபதியின் கையைப் பற்றி கொண்டு பெண்கள் இருக்குமிடம் நகர்ந்தாள் அவருடன்.
எடுத்திருந்த சேரியை பில் போட சொல்லி கொடுத்துவிட்டு, அவர்களை பின் தொடர்ந்தவனுக்கு, தான் பூபதியிடம் பேசும்போது அவள் முகம் போன போக்கை நினைத்து சிரிப்பு வந்தது.
இதோ இப்போதும் எல்லோருக்கும் சேர் அரேன்ஜ் செய்வதுபோல் யாருடைய கருத்தையும் கவராமல் கனிமொழிக்கு எதிரில் அமர்ந்திருந்தான்.
அய்யடா… இவன் என்ன எதிர்ல உட்கார்ந்துட்டு இப்பிடி லுக் விடறான். யாராவது பார்ப்பாங்கன்னு கொஞ்சமாவது பயம் இருக்கா? என்னை டென்ஷன் பண்றான் என அவளுக்குதான் சங்கோஜமாக இருந்தது அவனது செயலில்.
எல்லோருக்கும் என்னன்ன வேண்டும் என கேட்டு அக்கறையாக ஆர்டர் செய்தாலும். கேசுவலாக எல்லோரிடமும் பேசிக் கொண்டே, யாரின் கவனத்தையும் ஈர்க்காமல், என்ன அவள் சாப்பிடுகிறாள்? எனப் பார்த்து அவள் பக்கம் உணவுப் பதார்த்தங்களை நகர்த்திக் கொண்டிருந்தான் அரவிந்த்.
இவனது செய்கையில் அவள் இவனை முறைக்க கூட முடியாமல் நெளிந்துக் கொண்டிருந்தாள். ஆனால் இதையெல்லாம் இரண்டு விழிகள் அழகாக படம் பிடித்துக் கொண்டிருந்தது.
தொடரும்.
error: Content is protected !!