Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காற்றே எனைக் கிள்ளாதிரு 11

மணமக்களை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து, அவர்களுக்கு பாலும் பழமும் தந்து, அமுதினியை விளக்கேற்றி சாமி கும்பிடச் சொன்னார்கள்.

வீடு முழுவதும் உறவுக் கூட்டம் நிறைந்திருந்தது.  திருமணத்திற்கு அடுத்தநாள் மாலையே ரிசப்ஷன் வைத்திருந்ததால் உறவினர்கள் எல்லாம் தங்கி விட்டனர்.

வந்திருந்தவர்கள் எல்லாம் ஷ்யாமளாவின் அம்மா அப்பா வழி சொந்தங்கள்.  இவர்களை கவனிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது.

“இன்னைக்கே நாள் நல்லாயிருக்கு. உன் மருமகளை சமையல் கட்டுக்கு அழைச்சிட்டு போய் பாலை காச்ச சொல்லு” என்றார்கள் உறவினர்கள் ஷ்யாமளாவைப் பார்த்து.



Advertisement

அவர்கள் சொன்னது போலவே பாலை காய்ச்சி சாமியின் முன்பு வைத்து தூபம், தீபாராதனைக் காட்டி கும்பிட்டவள், அவள் கைகளாலேயே எல்லோருக்கும் எடுத்து வந்து கொடுத்தாள்.

ஷ்யாமளாவக்கு அவர் எதுவும் சொல்லாமலே அவளே படைத்த பாலை எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுத்தது மனதுக்கு திருப்தியாக இருந்தது.

கௌதம் எப்போதோ மேலே அவனது அறைக்கு சென்றிருந்தான்.  இங்கிருந்தால் இன்னும் ஏதாவது செய்யச் சொல்லுவார்கள் என முன்னமே சென்றிருந்தான்.

Advertisement

அவன் இல்லாததைக் கவனித்த ஷ்யாமளா இவனை… என்ன பண்றதுனே தெரியலையே.  இப்பதான் கல்யாணம் ஆயிருக்கு. இவளை தனியா விட்டுட்டு, அவன் பாட்டுக்கு ரூமுக்கு போயிட்டானே என மனதிற்குள்ளேயே புலம்பி தவித்தார்.

Advertisement

யாராவது மாப்பிள்ளை எங்கன்னு கேட்டா என்ன சொல்றது என தன்னையே நிந்தித்துக் கொண்டவர், அமுதினியை அங்கிருந்த அறைகளில் ஒன்றைக் காட்டி “நீ போய் கொஞ்ச நேரம் எடுத்துக்கோடா” என்றார்.

அவருக்கு சரி என தலையசைத்த அமுதினி குழலியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு அவர் காட்டிய அறைக்குள் நுழைந்தாள்.   அந்த அறைக்குள் நிறைய லக்கேஜ்ஜும் பைகளுமாக இருந்தது.

வந்திருந்த விருந்தினர்களதாக இருக்கும் என அவற்றையெல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தனர் இருவரும்.

Advertisement

குழலி அமுதினிக்காக கொண்டு வந்திருந்து பெட்டியை எடுத்து வந்து அவளுக்கான மாற்றுப் புடவையை எடுத்துத் தந்து “போய் மாத்திட்டு வந்து கொஞ்ச நேரம் படு” என்றாள்.

புடவையை மாற்றி வந்ததும் குழலியின் உதவியுடன் தலையலங்காரத்தை எல்லாம் கலைத்துவிட்டு கட்டிலில் அயர்வாக படுத்துவிட்டாள்.

நேரம் மாலை ஆறுக்கு மேல் ஆகியிருந்தது.  “என்னடா அவனுக்கு?” என முறைத்து நின்றார் ஷ்யாமளா அரவிந்தனை.

“ம்மா… எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க.  இப்ப இதுவா முக்கியம்.  விடுங்க.  நான்தான் அவன்கிட்ட பேசிக்கறேன்னு சொல்றேன் இல்ல”.

“என்னவோ பண்ணுங்கடா…?  எனக்கு நிம்மதியே இல்ல.  ரொம்ப பண்றான் அவன்.  வர ஆத்திரத்துக்கு இரண்டு வைக்கலாமான்னுகூட இருக்குது.  என்ன சின்ன குழந்தையா இவன்.  இன்னும் ஒதுங்கி ஒதுங்கியே நிக்கிறான்.  பார்க்கிறவங்க என்ன சொல்வாங்க?  ஏதோ அந்த பொண்ணு நல்லவளா இருக்கப் போய் நாம தப்பிச்சோம்” என புலம்பிக் கொண்டிருந்தார் அரவிந்தனிடம்.

“அம்மா நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகாதீங்க.  நான் இருக்கேன் இல்ல.  நான் பேசிக்கறேன் அவன்கிட்ட.  ம்ம்…  நீங்க ரிலாக்ஸா இருங்க”.

“சரி நீ அவனைப் பாரு.  நைட்டு விசேஷத்துக்கும் ஏதாவது காரணம் சொல்லி மறுக்க போறான்.  எப்ப என்ன பண்ணுவான்னே பயந்து பயந்தாடா கல்யாணம் பண்ண முடியும்” என முனகிக்கொண்டே நகர்ந்துவிட்டார்.

அன்று முழுவதும் மகன் அமுதினியை கண்டு கொள்ளாமல் அறையினுள்ளே புகுந்திருந்ததை வைத்து ஷ்யாமளாவுக்கு எரிச்சலானது.  அதற்குதான் அரவிந்தனிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

நல்லவேளை  யாரும் இவர்கள் பேசியதை கேட்கவில்லை.  ஷ்யாமளாவுக்கு மகன் எங்கே அன்றைய இரவு சாங்கியத்திற்கும் ஏதும் மறுத்து பேசிவிடுவானோ என பயம் மனதில்.  அதுதான் அரவிந்தனிடம் வெடித்துவிட்டார்.

அமுதினியும் குழலியும் வீட்டின் மேல் தளத்தில் வந்து நின்று கொண்டிருந்தனர்.  எவ்வளவு நேரம் தான் அறைக்குள்ளே அடைந்து கிடப்பது என வீட்டின் டெரசுக்கு வந்திருந்தனர் இருவருமாக.

இருள் பரவி வெளிச்சம் மங்க தொடங்கியிருந்தது.  குழலி வானத்தில் தெரிந்த நிலவு நட்சத்திரங்களை எல்லாம் ரசித்து கொண்டிருந்தாள்.

அமுதினி முகத்தில் மோதிய ஈரக் காற்றில் கண்களில் விழுந்த முன் நெற்றி முடிகளை ஒரு கையால் ஒதுக்கிய வண்ணம் சுற்றிலும் தெரிந்த வீடுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.

“செமையா இருக்குல்ல.  நல்ல கிளைமேட்.  இங்கிருந்து பார்த்தா மொத்த ஊரே தெரியும்போல” என்றாள் குழலி அமுதினிக்கு பக்கத்தில் வந்து நின்றுகொண்டு.

“ம்ம்…”

“ஹேய் என்ன டல்லாயிட்ட”.

“ம்ஹூம்…”

“என்ன புது இடம்னு பயமாயிருக்கா?  எல்லாம் கொஞ்ச நாள்ல பழகிடும்.  உனக்காவது பரவாயில்ல.  மாமா அத்தை எல்லாம் முன்னமே தெரிஞ்சவங்களா இருக்காங்க.  என்னை நினைச்சு பாரு.  அங்க போய் அவங்கள பழகறதுக்குள்ள நான் ஒரு வழியாயிட்டேன்”.

குழலி சொன்னதை கேட்டு முறுவலித்து கொண்ட அமுதினி ஒன்றும் பதில் பேசவில்லை.  அவளது சிந்தனை எல்லாம் கௌதமைப் பற்றியே இருந்தது.

திருமணம் ஆகியும் காலையிலிருந்து கௌதம் தன்னிடம் எந்த ஒட்டுதலும் இல்லாமல் இருப்பதை நினைத்து குழம்பி தவித்தாள்.  ஷ்யாமளாதான் ஒவ்வொரு முறையும் அவனை இழுத்து தன்னோடு ஒட்ட வைக்க முயல்வதாக அவளுக்கு தோன்றியது.

ஷ்யாமளாவின் விருப்பத்தின் பேரில்தான் இவன் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டானா என சந்தேகமும் அமுதினியின் மனதில் உருவாகியிருந்தது.  அதைதான் யோசித்து நின்றிருந்தாள்.

அவளுக்கு முதன்முறையாக அச்சம் எழ ஆரம்பித்திருந்தது திருமண வாழ்க்கையை நினைத்து.

கையிலிருந்த போன் ஒலிக்கவே எடுத்துப் பார்த்தாள்.  சாரதாதான் அழைத்திருந்தார்.  அவருடன் பேசிய சிறிது நேரத்தில் ஷ்யாமளாவும் அழைத்து விட்டார்.  இருவரும் கீழே இறங்கி சென்றனர்.  இரவுக்கான விருந்து உபச்சாரம் நடந்து கொண்டிருந்தது.

உணவு முடிந்ததும், அமுதினியை தயார் செய்து கௌதமின் அறை வரை கொண்டு வந்து விட்ட குழலி “கதவைத் தட்டிட்டு உள்ள போ” என்று சென்றுவிட்டாள்.

அவனை தனியாக அறையில் சந்திக்க தயங்கி அங்கேயே நின்றிருந்தாள்.  அறைக் கதவை தட்டுவதற்கும் கூச்சமாக இருந்தது.

எவ்வளவு நேரம் இங்கேயே இருப்பது யாராவது வந்தால் என அச்சப்பட்டவள் லேசாக கதவைத் தட்டினாள்.

உள்ளிருந்து எந்த பதிலோ சத்தமோ வராததால், அவளே கதவைத் திறந்து கொண்டு மெல்ல உள்ளே சென்றாள்.

அங்கே கட்டிலில் தலையணையை முதுகுக்கு கொடுத்து சாய்வாக காலை நீட்டி உட்கார்ந்திருந்தான் கௌதம்.  கதவு திறந்த சத்தத்தில் நிமிர்ந்து இவளைப் பார்த்தான்.

அவனைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டாள்.  அதுவரை மனதில் இழுத்துப் பிடித்திருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் சென்றிருந்தது.  ஏதோ அந்நியரிடம் மாட்டிக்கொண்டதைப் போன்ற உணர்வு அவளுக்குள்.

ஏதாவது கௌதம் பேசுவானா என்று அங்கேயே நின்று பார்த்திருந்தாள்.

அவன் அவளை அணுஅணுவாக கீழிருந்து மேல் வரை பார்த்துக் கொண்டிருந்தானே தவிர அசையக்கூட இல்லை.

என்னடா இது மியூசியம்ல வச்ச சிலை மாதிரி அசையாம இருக்கான்.

இந்த குழலியாவது ஏதாவது சொல்லிட்டு போனாளா…?  கதவை தட்டிட்டு உள்ள போன்னு மட்டும் சொன்னா.  அப்புறம் என்னன்னு ஒன்னுமே சொல்லாம போயிட்டாளே.  நானாவது அவள்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டிருக்கலாம்.

இப்ப நான் என்ன பண்ணனும்?  அவன் கிட்ட போகனுமா…?  இல்ல அவன் என்கிட்ட வருவானா…?

சும்மாயிருடி நிறைய சினிமா பார்த்து கெட்டுப்போயிட்ட நீ.  ம்க்கும் இல்லன்னா மட்டும் சார் எழுந்து டூயட் பாடிடுவாரு என நொடித்து கொண்டாள்.  காலையில் இருந்து அவளை அவன் கண்டு கொள்ளாததில் அவளுக்குதான் காண்டாகியது.

ஓவர் ஸ்பீடா போகாத, உடம்புக்கு ஆகாது.  அவன் உன்கிட்ட இன்னும் பேசவே செய்யலை. இதுல டூயட் கேட்குதா உனக்கு என நக்கலடித்தது அவளது மனது.  அதானே இங்க பார்வைக்கே பஞ்சமாயிருக்குது என நினைத்தவளுக்கு இப்படியே எவ்வளவு நேரம்தான் நிக்கறது?

ஒருவேளை சீரியல்ல காட்ற மாதிரி அவன் காலுல விழனுமோ…?  அதுக்குதான் வெயிட் பண்றானோ…?  இல்ல நானே அவன்கிட்ட பேசனும்னு எதிர்பார்க்கிறானா..?

அவளுடைய முகமாறுதல்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.

நிமிஷத்துல எத்தனை சேன்ஜஸ் இவள் பேசுல என தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

அப்போது தான் கையில் இருந்த பாலை உணர்ந்தவள், இத வேற கொண்டு போய் கொடுக்கனுமா?   குத்து கல்லு மாதிரி நின்னுட்டிருக்கேன்.  வாயை திறக்கிறானா?  அட்லீஸ்ட் வான்னாவது ஒரு வார்த்தை சொல்றானா…?  இல்ல ஏன் அங்கயே நிக்கறனாவது கேட்கறானா…?

இவன் பேசுவானு நாம எதிர்பார்த்தா விடிய விடிய நின்னிட்டிருக்கனும் போல என தைரியத்தைக் கூட்டியவள் அவன் அருகே சென்று பாலை அவனிடம் நீட்டினாள்.

அவளையே விடாது சில நொடிகள் பார்த்தவன் கண்களாலேயே பக்கத்தில் இருந்த மேசையை காட்டி அதில் வைக்கச் சொன்னான்.

பக்கத்தில் இருந்த மேசையில் பால் சொம்பை வைத்தவள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தாள்.  அவளையே சில நொடிகள் பார்த்தவன், “ம்ப்ச்…” என சலித்தவாறு எழுந்து பால்கனிக்கு சென்றுவிட்டான்.

அவன் அப்படி சலிப்பாக முகத்தை சுளித்து சென்றதும், அதுவரை இருந்த உற்சாகம் எல்லாம்  வடிந்து அமுதினிக்கு முகம் சுருங்கிவிட்டது.

நிஜமாவே இவனுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையா?  அதான் என்கிட்ட பேசமாட்டேன்றானா?

அப்புறம் எதுக்கு கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான்? என நினைத்தவளுக்கு  ச்ச… ச்ச… அப்படி இருக்காது.  இவனைபோய் யாராவது கம்பெல் பண்ணி கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க முடியுமா…? என சமாதானப்படுத்தி கொண்டாள்.

அந்த அறையை சுற்றி பார்வையை ஓட்டினாள், சுவரோடு ஒட்டிய வாட்ரோப், அறையின் நடுவில் கட்டில், அதையொட்டி மேசை, மூன்று பேர் அமரும் அளவில் சோபா என கச்சிதமாக இருந்தது.  அத்தியாவசியத்தை தவிர, அழகு அலங்கார பொருட்கள் என எதுவும் இல்லை.  ஏன் ஒரு போட்டோ கூட அறையில் இல்லை.

நெடு நேரம் நின்றிருந்ததால் கால் வலிப்பதுபோல் இருந்தது.  அங்கிருந்த சோபாவில் போய் உட்கார்ந்தாள்.

இத்தனை நாள் பேசல சரி.  இப்ப நான் அவன் பொண்டாட்டி தான.  இப்ப கூட பேச மாட்டானா…?  ஏன் இப்படி இருக்கான்…? என அதையே திரும்ப திரும்ப யோசித்துக் கொண்டிருந்தவள் அப்படியே சோபாவில் தலை சாய்த்து உறங்கியிருந்தாள்.

இருளை வெறித்துக் கொண்டு பால்கனியில் நின்றிருந்தவனுக்கும் குழப்பமான மனநிலைதான்.

ஷ்யாமளா திருமணத்திற்கு நாள் குறித்து பேசிவிட்டு வந்ததிலிருந்து, அவனும் மனதை சரிசெய்யதான் முயல்கிறான்.

ஆனால் சட்டென பழைய விஷயங்களை மறந்து இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மனம் ஒத்துழைக்கவில்லை.  எங்கே நெருங்கினால் தன்னையறியாமல் அவளை ஏதாவது சொல்லி காயப்படுத்தி விடுவோமோ என அச்சம் இருந்தது.

இதுவரை அவன் வாழ்க்கையில் எல்லாம் அவன் விருப்பமாகதான் இருந்தது.  அவனுக்கு பிடிக்காத எதுவும் நடந்ததில்லை.

இந்த திருமணமும் அன்னையின் விருப்பத்திற்காக,  அவரை மேன்மேலும் வருத்தப்படுத்த விரும்பாமல் அவன் சம்மதித்ததுதான்.  ஒத்துக்கொண்டானே தவிர மனதால் ஏற்க போராடிக் கொண்டிருந்தான்.

திருமணத்திற்கான நாள் நெருங்க நெருங்க அவன் மனதில் நிறைய குழப்பங்களும் சஞ்சலங்களும்தான் அதிகமானது.

இத்தனை காலம் திருமணத்தை தடுத்துக் கொண்டிருந்தவன்,  அன்னைக்காக சம்மதித்துவிட்டு, அவசரப்பட்டுட்டோமோ என முழித்துக் கொண்டிருந்தான்.

திருமணம் நிச்சயித்த இத்தனை நாட்களில், என்ன முயன்றும் அவனால் அவளை நெருக்கமாக உணரவோ, அவளுடன் பேசவோ இயலவில்லை.  ஏன், அவளை நிமிர்ந்து பார்க்க கூட விடாமல் ஏதோ தடுத்து கொண்டிருந்தது.

அமுதினியே சில முறை அவனிடம் பேச முயன்றதும் அவனுக்கு தெரியும்.  அதற்கும் அவன் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.  அவளிடமிருந்து வேலையிருப்பதுபோல விலகியிருந்தான்.

இதுவரை அவனுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த அவன் அறையில், இன்று முதல் அவளும் இருப்பாள் என நினைத்துப் பார்க்கவே என்னவோ போலிருந்தது.  உள்ளுக்குள் தகித்த உணர்வுகளை வெளிக்காட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.  அவனுக்கும் புரிந்தது.  இதுதான் நிதர்சனம்.  ஏற்றுக்கொள்ள வேண்டும் என மூளை சொல்கிறது.  ஆனால் மனம் இன்னும் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.

இனி அவள் உன் வாழ்க்கையில ஒரு அங்கம்.  அவளை ஒதுக்கவும் முடியாது.  தள்ளி வைக்கவும் முடியாது.  கல்யாணம்னா என்னனு தெரிஞ்சு தான உன் அம்மாகிட்ட ஓகே சொன்ன? என அறிவு அவனை இடித்துரைத்துக் கொண்டிருந்தது.

எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தானோ?  தெரியவில்லை.

ஊப்… என வாயால் காற்றை இழுத்து விட்டவனுக்கு தன்னை சமன்படுத்தி நிகழ்வுக்கு  வர சற்று நேரம் பிடித்திருந்தது.

அறைக்கு திரும்பியவன் சோபாவில் சாய்ந்த வாக்கில் அவள் உறங்கிக் கொண்டிருப்பதைக் பார்த்து, அவள் அருகில் போய் நின்று பார்த்தான்.

முதல் முறையாக அவளை வெகு அருகில் பார்க்கிறான்.  வட்ட முகம், கூரான நாசி, குண்டு கன்னம், வரைந்தது போன்ற உதடுகள், நல்ல சிவந்த நிறம்.

கால் முதல் தலை வரை, அங்குலம் அங்கலமாக பார்வையிட்டவனுக்கு மெல்ல உதடு வளைந்தது புன்னகையில்.

பன்னீர் ரோஜா கலரில் மெல்லிய ஐரிகை போடப்பட்ட புடவையில், அதே கலர் ப்ளவுஸ், கையில் தங்க வளையல், கழுத்தில் சின்ன ஆரம் என சிம்பிளான அலங்காரத்துடன் இருந்தாள்.

காலையில் அவன் கட்டியிருந்த புது மஞ்சள் கயிறு வெளியே சேலையின் மீது வந்து விழுந்திருந்தது.

சேலையின் கலருக்கும், அவளது உடல் நிறத்திற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.  கழுத்தின் வளைவிலிருந்த அவளது பின்னலும் சூடியிருந்த ஜாதி மல்லி பூவும் தோளில் சரிந்திருந்தது.

இவன் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருப்பதை கூட உணராமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.  உரிமை தந்த உணர்வா, மஞ்சள் கயிறு மேஜிக்கா அவளை முழுமையாக பார்த்து ரசித்தவனது பார்வை அவள் சேலையில் மேலிருந்த மஞ்சள் கயிற்றில் வந்து நிலைத்தது.

அதைக் கையில் எடுத்துப் பார்க்க கைகள் பரபரத்தாலும் ஆசையை அடக்கி நின்றிருந்தான்.  அவனுக்கே அவனை நினைத்து சிரிப்பு வந்தது.  இது என்ன புதுசா?  இவ்வளவு நேரம் இவளோட சேர்ந்து எப்படி ஒரே அறையில இருக்க போறேன்னு புலம்பிட்டு, இப்ப அவள் கழுத்துல இருக்கற மஞ்சள் கயிறை எடுத்துப் பார்க்கனும்னு ஆசை வருது என அவனே அவனை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான்.

அங்கேயே சில நிமிடம் நின்றிருந்தவன், விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் சென்று அவளைப் பார்த்துக் கொண்டே படுத்துவிட்டான்.

அதிகாலை நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டு விழித்தவன், திரும்பி அமுதினியைப் பார்த்தான் எழுவாளா என்று.  ம்கூம் அவள் அசையக் கூட இல்லை.  சிறிது நேரம் பொறுத்தவன் எழுந்து சென்று கதவைத் திறந்து பார்த்தான்.

வெளியே பூங்குழலி நின்றிருந்தாள், அமுதினியை எழுப்புவதற்காக வந்தவள், இவன் வந்து கதவைத் திறந்ததும் தயங்கி நின்றாள்.  இவன் சாதாரணமாக பார்ப்பதுகூட அவளுக்கு முறைப்பதாக இருந்தது.

எச்சிலைக் கூட்டி முழுங்கியவள் “அ…து அ…னிய எழுப்ப வந்தேன்.  தூங்கறாளா…?  அவளை எழுப்பி விடறீங்களா?”  என்றாள்.

சரி என தலையசைத்தான்.  அவ்வளவுதான் ஏதோ பூச்சாண்டியிடம் இருந்து தப்பி செல்வதைபோல கடகட வென படியில் இறங்கி  ஓடி விட்டாள்.

“ப்பா… இவரை என்னன்னு அனி சமாளிக்க போறாளோ.  பார்வையிலே மெரட்ராரு” என்று வாய் விட்டே புலம்பிக் கொண்டு சென்றாள்.

கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தவன் அவள் அருகே வந்து நின்று பார்த்தான்.

சரியான கும்பகர்ணியா இருப்பா போல. கதவைத் தட்டற சத்தம் கூட கேட்காம எப்படி தூங்கறா.  இவளை எப்படி இப்ப எழுப்பறது? என யோசித்தான்.

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் அலுங்காம கசங்காம அன்றில் பூத்த மலர் போல தூங்கியவளை ரசனையாக பார்த்து கொண்டே நின்றிருந்தான்.

படுத்த பொசிஷன்ல அப்படியே படுத்திருக்கா. திரும்பகூட இல்லை.  ம்ப்ச் இவளை யாரு இங்க படுக்க சொன்னது.  கட்டில்ல படுத்திருக்க வேண்டியதுதான.

என்னவோ அவனுக்கு புதுவிதமான காலைப் பொழுதாக மனதுக்கு இதமாக இருந்தது.

அவளை தொட்டு எழுப்பவும் தயங்கியவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.  அவனது மொபைல் கண்ணில் பட்டது.  அதனை கையில் எடுத்தவன், அடுத்த இரண்டு நிமிடத்தில் அடிக்குமாறு அலாரத்தை செட் செய்து, மொபைல் சவுண்டை அதிகமாக வைத்து, கட்டில் மேல் மொபைலை வைத்துவிட்டு பால்கனிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று நின்று கொண்டான்.

மொபைல் சத்தம் கேட்டு முழித்தவளுக்கு சில நொடிகள் தான் எங்கே இருக்கிறோம் என நினைவில் பதியவே சற்று நேரமாகியது.  பின்பு அறையைச் சுற்றிப் பார்த்து தெளிந்தவள், கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டே எழுந்து கட்டிலை பார்த்தாள்.

அங்கு கௌதம் இல்லையென்றதும், ஓஹ் விடிஞ்சிடுச்சா… அதுக்குள்ள எழுந்து போயிட்டாங்களா என நினைத்து கொண்டே குளிக்கச் சென்றாள்.

இவள் குளியல் அறைக்கு சென்றதும் உள்ளே வந்து பார்த்தவன், அவள் குளித்து விட்டு வரட்டும் என்று கதவைத் திறந்துகொண்டு மாடிக்கு சென்று விட்டான்.

குளித்து வந்தவள் அறையில் கௌதம் இல்லாததை உறுதி செய்து கொண்டு, புடவையை கட்டிக் கொண்டு, தலையைப் துவட்டி, இரண்டு பக்கமும் முடி எடுத்து கிளிப் போட்டுக் கொண்டு கீழே சென்றாள்.

அங்கு பூங்குழலி இவளுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.  அவளைப் பார்த்ததும், மலர்ச்சியுடன் “குட்மார்னிங்” என்றாள்.

குழலி, “குட்மார்னிங்” என்றவள், இவளையே குறுகுறு என்று பார்த்தாள்.

குழலியின் குறுகுறு பார்வையை கண்டு சிரிப்பு வந்தது அமுதினிக்கு.  “என்னடி… அப்படி என்ன தெரியுது? என் ஃபேசுல” என்றாள் கல கல என்று சிரித்துக் கொண்டே.

அவளும் சிரித்துக் கொண்டே “ஒன்னும் இல்லடி. சும்மாதான் பார்த்தேன்” என அசடுவழிந்தாள்.

“ம்ம்… நம்பிட்டேன்” என பாவனையாக சொன்னவள்,  “இப்ப என்ன உனக்கு தெரியனும்?  நேரிடையாவே கேளு” என்றாள்.

“ஹேய்… அதெல்லாம் ஒன்னுமில்லை, சும்மாதான் பார்த்தேன்”.

அமுதினி அவளை செல்லமாக முறைத்தாள்.  “என்ன என் முகத்தில தேஜஸ், ஒளிவட்டம் ஏதாவது தெரியுதான்னு பார்க்கறியா…?” என்றாள் சிரித்துக் கொண்டே.

“ஹா… ஹா… கண்டுபிடிச்சிட்டியா…?”  என்றாள் சிரித்துக்கொண்டே.

“அத்தை எழுந்துட்டாங்களா?  யார் இருக்கா கிட்சன்ல? லைட் எரியுது”.

“இன்னும் யாரும் எழுந்திருக்கல.  சமைக்கறவங்க வந்திருக்காங்க.  அவங்கதான் எனக்கும் காபி குடுத்தாங்க.  உட்காரு.  நான் போய் காபி வாங்கிட்டு வரேன்” என சென்றாள்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!