Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Galattaa Kaathal

PRIYA MOHAN’S கலாட்டா காதல் 07 (2)

கலாட்டா 07 (2)

 

ன்யாவுக்கு அடக்க முயன்றும் தாளாமல் கண்களில் இருந்து நீர் வடிய, அவள் கேபினின் உள்ளே சிறியதாய் இருக்கும் ஓய்வெடுக்கும் அறைக்குள் சென்று அங்கிருந்த சோபாவில் படுத்துவிட்டாள்.  

   



Advertisement

‘அவள்  நடந்துக்கொண்டது சற்று அதிகப்படி’ தான் என அவளுக்கு புரியாமல் இல்லை. அவன் செய்த தவறை கண்டுப்பிடித்ததும், அதை சொல்லி அவனை திட்டிவிட வேண்டும் என்ற ஆவேசம். யோசிக்காமல் நடந்துக்கொண்டாள்.

 

ஒரு வருடத்திற்கும் மேலாய் தன் முகம் பார்க்கக்கூட விரும்பாத  தந்தை, இன்று திட்டுவதற்க்கேனும் பேசிவிட்டாரே என சந்தோசப்படுவதா? இல்லை, ‘நீ வெறும் வேலையாள்’ மட்டுமே என எல்லோர் முன்னும் அவர் சொல்லாமல் சொன்னதை எண்ணி வருத்தப்படுவதா என்று தெரியாது, எதற்கோ கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள்.

Advertisement

 

Advertisement

தேம்பவில்லை, புலம்பவில்லை. கண்ணீர் மட்டுமே சிந்திக்கொண்டிருந்தது கன்னங்களைத்தாண்டி.

 

அவளைப் பார்க்கவென கேபினுக்குள் வந்தவன், இருக்கையில் அவள் இல்லை என்றதும், “மேடாம்!!! மே…டா…டா…டம்! இருக்கீங்களா?” என்றான் ராகமாய், உரக்க. உள்ளே இருந்தவளுக்கு அவன் குரல் கேட்டதும், ‘ஐயோ’ என்றானது.

Advertisement

 

‘ஒரு பத்து நிமிஷம் நிம்மதியா இருக்க முடியுதா?’ என அவள் நெற்றியில் அடித்துக்கொள்ள, ஓய்வறையின் கதவு தட்டப்பட்டிருந்தது.

 

அவள் அனுமதி கொடுக்கும்முன்னே கதவை திறந்தவன், அவளை பார்த்து, “என்ன மேடாம், என்னை இன்சல்ட் பண்ணியாச்சுன்னு சந்தோசமா குலுங்கி குலுங்கி சிரிச்சுட்டு இருப்பீங்கன்னு வந்தா, குமுறி குமுறி அழுதுட்டு இருப்பீங்க போலயே!” என்றான் அவள் கன்னத்தின் ஈரத்தைக்கண்டு.

 

“உன்னை உள்ள வான்னு நான் சொல்லவே இல்லை! இதென்ன உன் வீடா? உன் இஷ்டத்துக்கு வர, போற?!” என கடுப்படித்தாள் தன்யா.

 

“ஹான்! இதான் எங்க மேடாம்! அதை விட்டுட்டு கண்ணை கசக்கிட்டு நின்னா பார்க்க நல்லாவா இருக்கு?” என ஆதி சொல்ல, பதில் சொல்ல வராது அமைதியானாள் தன்யா.

 

“மணி இப்போவே மூணு! லஞ்ச் சாப்பிட்டுருக்க மாட்டீங்க! நேரே கிளம்பி வாங்க, நந்தினி மெஸ்ல இன்னைக்கு ஆட்டுக்காலு குழம்பு! நான் சொன்னா நந்தினி ரெண்டு பீசு எக்ஸ்ட்ரா கூட குடுப்பா! அப்டியே ஜாலியா போயிட்டு வரலாமா?” என கேட்க,

 

“அங்க அவ்வளோ கோவமா என்னை முறைச்சுட்டு இருந்த? இப்போ வந்து ஜாலியா போலாமான்னு கேக்குற? என்ன மனுஷன் நீ?” என்ற தன்யாவுக்கு ஆயாசமாய் வந்தது.

 

அவள் கேட்டதற்கு பதில் சொல்லாது, “குழம்பு செம்மையா இருக்கும்! வந்தா லக்கு! இல்லனா லாஸ் உங்களுக்கு தான்!” என்றான்.

 

அவனை சில நொடிகள் பார்த்தவள், “எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும், கிளம்பு” என்றாள்.

 

“அப்போ குழம்பு வேணாமா?”

 

“கிளம்…..பு ன்னு சொன்னேன்”

 

“ரைட்டு விடுங்க” ஆதி, திரும்பி செல்ல, “சாரி!!” என்ற தன்யாவின் குரல் அவன் செவி அடைந்தது. அவன் ‘ஏன்?’ என்றும் கேட்கவில்லை. மேற்கொண்டு பேச்சையும் வளர்க்கவில்லை. தன் நடையை இரு நொடி மட்டுமே நிறுத்தியவன், பின் திரும்பியும் பாராது அவள் கேபினை விட்டு சென்றுவிட்டான் முகத்தில் நிலைத்த புன்சிரிப்புடன்.

 

ன்று ஞாயிறு தான் என்பதால் தன்யா தன் வேலைகளை சோம்பலாகவே செய்துக்கொண்டிருந்தாள். எழுந்ததே நண்பகலில் தான்!! பின்னே, குளித்து முடித்து மதிய உணவு நேரம் தாண்டி அவள் தன் அறையை விட்டு கீழே இறங்க, அவளை எதிர்க்கொண்ட லட்சுமி, “உனக்கு எத்தனை முறை சொல்லிருக்கேன், இப்படி சோறு தண்ணி இல்லாம தூங்கிட்டு இருக்காதன்னு? ரெண்டு இட்லியாவது சாப்பிட்டுட்டு தூங்கினா என்னடி?” என்று கடிய, அன்னையின் தோளில் செல்லமாய் தொங்கியவள், “பசிக்குதும்மா!” என்றாள்.

 

“நேத்து நைட் சாப்பிட்டது! இப்போவரைக்கும் என்ன இருக்கும் இந்த வயித்துல?” என லட்சுமி கடிந்தாலும், மகளுக்கு பிடித்த பதார்த்தங்களாகவே சமைத்து வைத்திருந்ததை, எடுத்து பரிமாற, வேகமாய் உண்ண ஆரம்பித்தாள் தன்யா.   

 

உணவுண்ணும் மகளை சிறு கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் லட்சுமி. மகளுக்கும் கணவனுக்கும் இடையே ஊஞ்சலாடும் நிலை தான் அவரது.

 

‘இந்த பொண்ணும் கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டா தான் என்ன?’ என அவர் மனதுக்குள் புலம்பாத நாளில்லை. எங்கே வெளியே புலம்பினால், கணவரின் கோவத்திற்கு தூபம் போடுவது போல ஆகிவிடும் என்பதை விட, மகள் கோவித்துக்கொண்டு ‘மீண்டும்’ எங்கேனும் சென்றுவிடுவாளோ என்ற அச்சம், அவர் வாயை கட்டிப்போட்டது.

 

தன்யா உணவை முடித்துக்கொண்டு சோபாவில் சென்று டிவி ரிமோட்டுடன் அடைக்கலம் ஆனதும், லட்சுமியும் அவளுடனே சென்று அமர்ந்துக்கொண்டார். சிறுது நேரத்தில் அன்னை மடியில் தலை வைத்து படுத்தவள், ஏதேதோ அவரிடம் கதையளந்துக்கொண்டிருக்க, அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தார் ராஜகோபால்.

 

உள்ளே நுழையும்போதே அவர் முகம் சற்று கடுகடுவென தான் இருந்தது. வந்தவர் ஒற்றை சோபாவில் அமர்ந்து கண்களை மூடிக்கொள்ள, “என்னங்க, ஒருமாதிரி இருக்கீங்க?” என்றார் லட்சுமி. தன்யா டிவியே கண்ணாக இருந்தாள்.

 

“பின்ன சந்தோசமா இருக்க இங்க என்ன இருக்கு?” என்றார் விரக்தியாய்.

 

லட்சுமி, “என்னங்க பிரச்சனை?”

 

“எல்லாம் உன் மக கல்யாண விஷயம் தான்” என ராஜகோபால் சொல்ல, தன்யா திடுக்கிட்டுப் போனாள். அவள் வீட்டை விட்டு சொல்லாமல் சென்றதன் பின்னே, திருமண பேச்சை சுத்தமாய் ஒதுக்கி வைத்திருந்த தந்தை மீண்டும் ஆரம்பிக்கிறாரே? என்ற ஐயம்!

 

லட்சுமி, “ஏங்க? அதுக்கென்ன இப்போ?”

 

“அந்த வைத்தீஸ்வரன் பையன் பிரகாஷ், கல்யாணம் பண்ணா இவளைத்தான் பண்ணுவேன்னு சொல்றானாம்! இந்த ஒரு வாரமா தினமும் கேட்டுட்டே இருக்கான் வைதீஸ்வரன், எப்போ பொண்ணு பாக்க வரட்டும்ன்னு!!!” என்றவர், “இன்னைக்கு கிளப்ல வைதீயை நேர்ல மீட் பண்ற மாறி ஆகிடுச்சு! தொழில் போட்டியை மறந்துட்டு சம்பந்தி ஆகிடுவோம்ன்னு சொல்றான்! என் பொண்ணுக்கு ‘கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்றா’ன்னு எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேட்கல அவன்” என்றார் அலுப்பாய்.

 

லட்சுமிக்கும் வைதீஸ்வரன் குடும்பத்தை பற்றி பல ஆண்டுகளாய் தெரியும் என்பதால், “பையன் இப்போ எப்படி இருக்கான்? சின்னதுல பார்த்தது” என்றார் ஆவலாய்.

 

“அவனுக்கென்ன ஜம்முன்னு இருக்கான்! பாரின்ல இருந்ததுக்கு நல்ல கலரா வேற ஆகிட்டான்”

 

தன்யாவுக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. எழுந்து போய்விடலாம் என்றால், அது மரியாதையாய் இராதே என்று கடினப்பட்டு இயல்பாய் அங்கிருக்க முயன்றுக்கொண்டிருந்தாள்.

 

“வீட்டுக்கு ஒரே வாரிசு! வைதீக்கு அப்புறம் சொத்தெல்லாம் அவனுக்கு தான்! மாமியார் தொல்லையும் இல்லை, அவனோட சின்ன வயசுலேயே போய்ட்டாங்க! எல்லாத்துக்கும் மேல நம்ம கண் பார்க்க வளர்ந்த பையன்! ஒரு குறை சொல்ல முடியாது! இதுக்கு மேல என்ன வேணும்?”

 

ராஜகோபால் பேசிய விதமே ‘இந்த வரனில் எனக்கு பரிபூரண சம்மதம்’ என தன்யாவுக்கு புரிய செய்தது. அதற்காக ‘திருமணம்?’. வாய்ப்பே இல்லையே!

 

அன்னை மடியில் இருந்து எழுந்தவள், “ம்மா, நான் கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்” என சொல்லிவிட்டு நிற்காமல் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

 

கைப்பையுடன் உடைமாற்றி அவள் வெளியே வருகையில் தந்தை கத்துவதும், அன்னை தவிப்புடன் அவரை சமாதானம் செய்வதும் கண்ணில் பட, ‘என்ன?’ ‘ஏது?’ என்றுக்கூட கேட்காது வாசலை நோக்கி நடைப்போட்டாள் தன்யா.

 

அவள் செல்வதை கண்டதும், “நான் இங்க பேசிட்டு இருக்கேன்! அவளை ஒரு முடிவு சொல்லிட்டு போக சொல்லு லட்சுமி” என கத்தினார் ராஜகோபால்.

 

சட்டென நின்றவள், “ம்மா… எவ்வளோ நல்ல வரன் வந்தாலும் சரி, எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னா, இஷ்டம் இல்லைதான்!!” என்றாள் மெல்லிய உறுதியான குரலில்.

 

“அதான் ஏன்னு கேக்குறேன்… பையனுக்கு தான் குறைன்னு ஊருக்கே தெரிஞ்சு போச்சு! பொண்ணுக்காவது காலாகாத்துல கல்யாணம் பண்ணலாம்ன்னு பார்த்தா முடியுதா? இவளும் வேண்டாம் வேண்டாம்ன்னு சொன்னா இவளுக்கும் ஏதோ குறை இருக்குனு தானே நினைப்பாங்க எல்லாரும்?”     

 

கணவரின் பேச்சு உண்மை தானே! லட்சுமியால் மகளுக்கு ஆதரவாய் பேச முடியவில்லை.

 

தன்யா பொறுமையாகவே, “இப்போ எனக்கு கல்யாணம் பண்ண என்ன அவசரம்? ஜஸ்ட் டுவண்டி சிக்ஸ் தானே? ஒன்னும் பார்ட்டி சிக்ஸ் இல்லையே?” என்றாள்.

 

ராஜகோபால் அவளை உக்கிரமாய் ஒரு பார்வை பார்த்து, “இருவத்தி ஆறு இல்ல, முப்பதுல பண்ணிக்குறேன்னு சொன்னா கூட எனக்கு சம்மதம் தான்! ஆனா, நீதான், ‘பண்ணிக்குறேனே’ சொல்ல மாட்டேங்குறியே!” என்றார் நேரிடையாய்.

 

“பண்ணிக்கோ, பண்ணிக்கோன்னா? எனக்கு இஷ்டம் இல்லை!!”

 

“ஏன் இல்லை?”

 

“ஏன் இல்லன்னா என்ன கேள்வி இது? எனக்கு பிடிக்கல, வேண்டம்”

 

“அப்போ பெத்தவங்க எங்க கடமையை செய்ய வேண்டாமா?”

 

“உங்க கடமையை அண்ணன் கிட்ட காட்டுங்க! எனக்கு வேண்டாம்”

 

“ஏன்?”

 

“….”

 

“ஏன்னு கேட்டேன்?”

 

“….”

 

“சரியான காரணம் சொல்லு, நான் விட்டுடுறேன்”

 

“…”

 

“உன்னைத்தான் கேக்குறேன்”

 

“….”

 

“ஏன்னு சொல்ல போறியா இல்லையா?” ராஜகோபால் பொறுமை இழந்து கத்த,

 

“ஏன்னா, எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு… போதுமா?” என அவரை மீறிய குரலில் கத்தியிருந்தாள் தன்யா.

 

குண்டூசி விழுந்தால் கூட இடியென சத்தம் கேட்கும் அளவுக்கு அந்த பெரிய வீடு ஆழ்ந்த நிசப்தத்தில் மூழ்கியது.

 

பீச் காற்று சிலுசிலுவென அடிக்க, கையில் ஏந்திய ஷூக்களுடன், மணலில் காலை புதைத்து புதைத்து நடந்துக்கொண்டிருந்தனர் கோகுலும் ஆதியும்.

 

கோகுல், “காத்து ஜில்லுன்னு அடிக்குது இல்லடா?”

 

ஆதி, “நீதான் வர மாட்டேன்னியே! இப்ப பாரு என் உபயத்துல உனக்கு ப்ரீ ஆக்சிஜன்” என சொல்ல, “ஆமா, இல்லன்னா மட்டும் நாங்க இவ்ளோ நாளும் காத்தை காசு குடுத்து வாங்கிட்டு இருந்தோமாக்கும்!” என நொடித்த கோகுல்,

 

பின்னே, “நம்ம இப்படி சேர்ந்து நடந்து எத்தனை வருஷம் ஆச்சு? இல்லடா?” என சிலாகித்தான் பழைய நினைவுகளில்.

 

“ஆமா மச்சி! அது ஒரு கனா காலம்!” என ஆதியும் உடன் சேர, “உனக்கு அந்த பாட்டு நியாபகம் இருக்காடா?” என திடுமென கேட்டான் கோகுல்.

 

“எந்த பாட்டுடா”

 

“நம்ம பாட்டு தான்…”

 

“எது?” என யோசித்த ஆதி, சட்டென பிரகாசமாய், “அது….வா?” என நகைக்க, “பாடலாமா?” என்றான் கோகுல்.

 

“ரெடி… ஒன்… டூ…த்ரீ…” என ஒன்றாய் கோரசாய் இருவரும் ஒருசேர ‘சுருளிராஜன்’ மாடுலேஷனில் பாடினர், இல்லை கத்தினர்.

 

“ஏபிஸிடி மொட்டைமாடி…

கீழ விழுந்தா டெட்பாடி…

பொண்ணுங்களை பார்த்தா மேக்கப்பு…

போலிஸ் வந்தா எஸ்கேப்பு…

பீச்சுக்கு போனா ஜாலி…

சுறா மீன் வந்தா காலி….” என அவர்கள் கத்திக்கொண்டிருக்கையில் அவ்வழியே போன சிறார்கள் இவர்களை விநோதமாய் பார்ப்பதைக்கண்டு பீறிட்டு வந்தது சிரிப்பு.

 

“ஹஹஹா….”

 

“நம்மளை பைத்தியம்ன்னு நினைச்சுருப்பாங்க” என கோகுல் சிரிக்க, ஆதியும் சத்தமாய் நகைத்தான்.

 

ஆங்காங்கே இருவர் இருவராய் கூட்டுப்பிராத்தனையில்(!?) இருந்ததைக் கண்ட கோகுல், “நான் எந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணோட பீச்சு, தியேட்டர், மாலுன்னு வரப்போறேனோ? தெரியலை?” என்றான் சிறுது ஏக்கத்துடன்.

 

“உனக்கென்ன மச்சி குறை? நீ ஒரு லுக்கு விட்டா போதுமே, பல பொண்ணுங்க…” என ஆதி சொல்லிக்கொண்டிருக்க, ‘போதும், நிறுத்து’ என்பதை போல கை நீட்டி தடுத்தான் கோகுல்.

 

“வேணாம்! நானே வருத்தப்பட்டுக்குறேன்! நீ ஆறுதல் சொல்றேன்னு என்னை பேசி பேசியே அழ வச்சுடுவ” என்றான் ஆரூடம் தெரிந்ததை போல.

 

ஆதி, ‘ச்ச! உஷார் ஆகிட்டானே!’

 

கோகுல் கனவு காண்பவன் போல, “எனக்கும் ஒரு பொண்ணு வருவாடா! அப்போ அவளைப்பார்த்து நான் பாடுவேன்!” என்றவன்,

“ஒரு தே..வதை வந்து விட்டா….ள்… என்னைத்தே….டியே…” என பாட,

 

ஆதி, “டொட… டொட… டொய்ங்…” என்றான்.

 

கோகுல், “வண்ண மா…லைகள் சூட வந்தா…ள்…! தங்கத்தே….ரிலே….” என பாட, ஆதி மீண்டும், “டொட… டொட… டொய்ங்…” என்றதும்,  “ஏய், லவ் மூட்ல பாடுறப்போ, என்னடா ‘டொட டொடன்னு” என கடுப்படிக்க,

 

“நீ பாடுற பாட்டுக்கு பேக்ரவுன்ட் மியூசிக்டா” என்ற ஆதியை கண்டு நாக்கை மடக்கி கடித்த கோகுல், கீழே ஏதேனும் சிக்குமா என தேட, “சரி சரி! நீ தனியா பாடு, நான் வரலை” என இரண்டடி அவனை விட்டு ஓடினான் ஆதி.

 

மீண்டும் ட்ரீம் மோடுக்கு மாறிய கோகுல், “நான்… என் பொண்டாட்டி.. எங்களுக்குன்னு ஒரு மாடி வீடு.. பக்கத்துலையே இப்படி ஒரு கடல்… சாயங்கால நேரம் கடலை பார்த்துக்கிட்டே கைல காபியோட, கட்டினவக்கிட்ட கடலைப்போட்டா எப்…..படி இருக்கும்?” என கேட்க,

 

“செம்மையா இருக்கும் மச்சி!” என்ற ஆதி, “ஆமா, சுனாமி வந்துட்டா என்ன பண்ணுவ?” என்றதும், ட்ரீமில் அவன் குடித்துக்கொண்டிருந்த காபி புரை ஏறி போனது கோகுலுக்கு.

 

பாவமாய், “ஏன்டா?” என கோகுல் கை விரிக்க, “டவுட்டு மச்சி!?”  என்றான் ஆதி அப்பாவி போல.   

 

“கனவுல கூட நிம்மதியா டூயட் போக முடியலடா” என சலித்தே போனான் கோகுல், விரைவில் டூயட் ஆட ஆள் வரப்போவதை அறியாது!

 

சிறிது நேரம் வேடிக்கை பார்த்தபடி இருவரும் நடந்துக்கொண்டிருக்க, எதிரே கும்பலாய் ஏழெட்டு கல்லூரி பெண்கள் வருவதை கண்டதும், கோகுல் இயல்பாய் அவர்களை நோட்டமிட, அதில் நான்கைந்து பெண்கள் இவர்களை பார்ப்பது போல தெரிந்தது அவனுக்கு.

 

அதை ஆதியிடம் சொல்லலாம் என அவன் பக்கம் கோகுல் திரும்ப, அந்த பெண்களை பார்த்தும் பார்க்காமலும்,  சிரித்தும், சிரிக்காமலும் ஆன பாவனையில் வசீகரமாய் நோட்டமிட்டுக்கொண்டிருந்தான் ஆதி.

 

கோகுல், ‘அதானே! பொண்ணுங்க உன் கண்ணுல படாம இருந்தா தான் அதிசயம்’ என மனதோடு நொந்துக்கொண்டு நடக்க, பெண்கள் அவர்களை கடந்ததும், “சும்மா உன்னை பார்த்து சிரிக்குறாங்கன்னு பெருமை பட்டுக்காதடா!” என்றான் கோகுல்.

 

சட்டென ஆர்ப்பாட்டமாய் சிரித்த ஆதி, “நான் என்னடா செஞ்சேன்? அவங்களா பார்க்குறாங்க” என்றான்.

 

“உன்னை பார்க்குற பொண்ணை பாக்க வைக்கிறது மேட்டர் இல்ல, உன்னை பார்க்காத பொண்ணை பார்க்க வைக்கிறது தான் மேட்டர்” என கோகுல் வாயை விட்டதும், “அப்படி யாராவது இருந்தா சொல்லு, பாக்க வச்சுடுவோம்” என்றான் ஆதியும்.

 

ஏதோ விளையாட்டு பேச்சாய் இது போய்க்கொண்டிருக்க, சில நிமிடங்கள் யோசித்த கோகுல், “யாரையோ எதுக்கு? நம்ம மேடமே இருக்காங்களே?! அவங்களை உன்னால பாக்க வைக்க முடியுமா? ஜஸ்ட் ஐஞ்சு நிமிஷம் உங்ககிட்ட சிரிச்சு பேச வைக்கவாது முடியுமா?” என்றவன்,

“முடியாது! ஏன்னா, அவங்க நீ என்ன செஞ்சாலும் உன்னை திரும்பிக்கூட பார்க்க மாட்டாங்க! உன் பின்னாடி சுத்துற சாதாரண பொண்ணுங்க மாறி கிடையாது தன்யா மேடம்!” என்றான் உறுதியாய்.

 

அவன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த ஆதிக்கு சிரிப்பாய் இருந்தது. யாரோ தூரத்தில்…

‘சீனியர்… ஐ…. லவ்….யூ……’ என குரல் உடைய கத்துவதை போல ஒரு பிரம்மை எழ, தலை குலுக்கி அதை ஒதுக்கித்தள்ளினான் ஆதி.

 

கோகுல் பேசிக்கொண்டே இருந்தவன், திடீரென ஆதியின் கரத்தை பிடித்து, “வாடா வாடா ஓடிடலாம்” என இழுக்க, ஒன்றும் புரியாததால், “ஏன்டா, என்னாச்சு?” என்றான் ஆதி!

 

தூரத்தில் கைக்காட்டி, “சாத்தானை நினைச்சா, ‘இந்தா இருக்கேன் பாருன்’னு அதுவே முன்ன வந்து நிக்குமாம்! அதுமாறி இப்போதானே மேடமை பத்தி சொல்லிட்டு இருந்தேன்… அதுக்குள்ள கண்ணுல சிக்குறாங்க பாரு” என அவன் காட்டிய திக்கில், இலக்கில்லாத பார்வையுடன் ஒரு படகில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் தன்யா.

 

கோகுல் ஆதியின் கரம் பற்றி இழுக்க, ஆதி தன்யாவை பார்த்தபடி அசையாமல் நின்றான்.

 

“ஏய் வாடா!”

 

“பேசிட்டு போலாம்டா” என ஆதி சொல்ல, “அட நீ என்னடா, டீச்சரை பார்த்த ஸ்கூல் புள்ள மாறி வணக்கம் போட கூப்பிடுற? ப்ரொபசரை பார்த்த காலேஜ் ஸ்டுடென்ட் மாறி இந்நேரம் நம்ம தெரிச்சு ஓடிருக்க வேணாம்? வாடா” என்றான்.

 

“ப்ச்! நீ போ, நான் பேசிட்டு வரேன்” என ஆதி அவளை பார்த்துக்கொண்டே சொல்ல, “அப்போ நான் பைக் எடுத்துட்டு போய்டுவேன், நீ பஸ்ல தான் வரணும்” என்றான் மிரட்டலாய்.

 

“பரவால்ல.. போ” என்றான் ஆதி. சொன்னதோடு அவன் கால்கள் அவளை நோக்கி நடைப்போட, ‘இவனுக்கு பைத்தியம் தான் பிடிச்சுருக்கு’ என நெற்றியில் அடித்துக்கொண்ட கோகுல், பைக்கை எடுக்க சென்றுவிட்டான்.

 

எங்கோ வெறித்தபடி மனதில் பல குழப்பங்கள் வட்டமடிக்க அமர்ந்திருந்த தன்யாவின் செவிகளில் அட்சர சுத்தமாய் விழுந்தது, “மேடாஆஆஆம்…” என்ற அலறல்.

 

திரும்பி பார்க்க தேவையே இன்றி உணர்ந்துக்கொண்டாள் அவன் வருகையை.

 

“இன்னா மேடாம்! பீச்சுக்கு சிங்கிளா வந்து தெய்வக்குத்தம் பண்றீங்களே!” என்ற ஆதி அவள் முன்னே நின்றிருந்தான்.

 

அவனை கண்டதும் அங்கிருந்து எழுந்தவள் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தபடி, “ஆபிஸ்ல தான் உன் தொல்லைன்னு நிம்மதியா இருக்க இங்க வந்தா, இங்கயும் வந்து என் கண்ணுல சிக்குற?” என்றாள் எரிச்சல் படர.

 

“அய்……யோ…! மேடாம்! உங்களுக்கும் எனக்கும் செம்ம வேவ் லென்த் தெரியுமா? இங்க, இப்போ உங்களை பார்த்ததும், நானும் அத்தே தான் நினைச்சேன்!” என சொல்ல, “வாட்…???” புசுபுசுவென கோவம் ஏற அப்படியே நின்றுவிட்டாள் தன்யா.

 

அவள் நடையை நிறுத்தவும், “அட, வாங்க மேடாம்! இதுக்கே கோவப்பட்டா எப்படி?” என்றான் சிரித்தபடி.

 

தன்யாவின் இதழ்கள் ஜிப் போட்டபடி மூடிக்கொண்டன. ஆனால் மனமோ, ‘ஒரு வார்த்தை பேச முடியல இவன்க்கிட்ட! கவுண்டரை பாக்கெட்லையே வச்சுக்கிட்டு சுத்துவான் போல’ என அவனை மனதில் இடித்துக்கொண்டிருந்தாள்.  

 

“என்ன மேடாம், பேசவே மாட்டேங்குறீங்க?”

“……”

 

“ஆமா, பீச்சுக்கு யாரை பார்க்க வந்தீங்க?”

 

“….”

 

“பிரண்டா?”

 

“…..”

 

“ஓ!!! பாய்பிரன்ட்டா?”

 

சட்டென திரும்பி அவனை முறைத்தாள் தன்யா.

 

“சும்மா யாராது வருவாங்களா மேடாம்?”

 

“மனசு சரியில்லை வந்தேன்… போதுமா?”

 

“ஓஓஓஓ….” என பலமாய் இழுத்தான் ஆதி. அதற்குள் தன்யா தன் காரை நிறுத்தியிருந்த இடத்தை அடைந்துவிட, டிரைவர் சீட்டில் ஏறி அவள் அமர்ந்ததும், மறுப்பக்கம் கதவை திறந்து அவள் அருகே அமர்ந்துக்கொண்டான் ஆதித்யா.

 

அவனை தன் காரில் கண்டதும், “ஹே… வாட்?” என்றாள் திகைப்பாய்.

 

“கோகுல் என்னை விட்டுட்டு ஓடிட்டான்! எங்க ஏரியா தாண்டி தானே நீங்க போனும்? அப்டியே போற வழில இறக்கி விட்டுடுங்க” என்றான் முன்புறம் இருந்த கண்ணாடியில் தலைமுடியை சரி செய்துக்கொண்டே.

 

“நான் என்ன உனக்கு டிரைவரா?”

 

“அப்போ நான் ஓட்டவா?”

 

“ஓ காட்!!!!!!”

 

“யோசிக்காதீங்க மேடாம்! வண்டிய எடுங்க… கார் தானே என்னை சுமக்குது!” என்றவன், பின்னே மெதுவாய், “என்னவோ நான் உங்க மடில உட்காந்து வர மாறி அலுத்துக்குறீங்க?” என்றிட, அதன் பின்னே ஒரு வார்த்தை வரவில்லை தன்யாவிடம் இருந்து. அவள் அறியாது, அவன் போக்கிற்கு வளைந்துக்கொண்டிருந்தாள்.

 

காரில் ரேடியோ ஓட, அதை விட பெரிய ரேடியோவாய் வாய் மூடாது பேசிக்கொண்டிருந்தான் ஆதித்யா.

இவளிடம் இருந்து, ஒரு ‘ம்ம்ம்’ ‘ஆஆ’ வரவில்லை என்பதை கூட அவன் கணக்கிலெடுக்கவில்லை.

 

வண்டியை அவன் சொல்லிய அப்பார்ட்மென்ட் வெளியே நிறுத்திய தன்யா, அமைதியாய் இருக்க, அதுவரை சலசலத்துக்கொண்டிருந்தவன், மௌனமாய் அவளை பார்வையிட்டான்.

 

காரை நிறுத்தியும் அவன் இறங்காது இருக்கவே, அவனிடம் திரும்பியவள் அவன் மௌனப்பார்வையில் திடுக்கிட்டு தான் போனாள்.

வாயத்திறந்து, ‘என்ன?’ என்று கேட்கவோ, ‘எதுக்கு பார்க்குற?’ என மிரட்டவோ அவளுக்கு நா எழவில்லை. அவன் பார்வை அவளை ஊடுருவியது.

 

சற்றே சரிந்து அவள் அருகே வந்தவன், “வீம்புப்பிடிக்குறது நல்லதுக்கு இல்ல தன்யா! நம்மளை நேசிக்குறவங்களோட மனசை காயப்படுத்துறது ரொம்ப தப்பு! எல்லா விஷயத்துலயும், ‘சுயநலமா’ இருக்கக்கூடாது!” என ஆழ்ந்த குரலில் சொன்ன ஆதி, “எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது! இதை நான் பொதுவா தான் சொன்னேன்” என்றுவிட்டு, சின்ன சிரிப்புடன், “ஸீ யூ டுமாரோ” என விடைபெற்றான்.

 

அவன் காரை விட்டு இறங்கிய பின், எப்படி வண்டியை இயக்கிக்கொண்டு வீடு வரை வந்து சேர்ந்தாள் என அவளுக்கே தெரியாது! அவன் வார்த்தைகள் செவிகளில் சுற்றிக்கொண்டே இருந்தது. அதிலும் அவளை நெருங்கி வந்து ஆழமாய் அவன் பார்த்த பார்வை…!!!

 

மகள் கோவித்துக்கொண்டு சென்றுவிட்டாளோ என்ற பதைபதைப்புடன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்த லட்சுமி, தன்யா திரும்பி வந்ததும் ஆசுவாசப்பட்டு அவளிடம் பேச வர, சுற்றி இருப்பவை எல்லாம் மங்கலாகி போனதை போல, எதையும் கவனிக்காது அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள் தன்யா.

 

சுரேன் அழைத்ததற்கு கூட பதில் சொல்லவில்லை. அதைவிட அவன் அழைத்தது அவள் கருத்தில் கூட இல்லை!    

 

இரவு உணவையும் தவிர்த்து ஏதோ சிந்தனையில் உழன்றுக்கொண்டிருந்தவள், உறக்கம் வேண்டி, ஒலிக்க விட்டாள் அந்த சிடி ப்ளேயரை…!!!

 

அவள் கவலைகள் எல்லாம் மரத்துப்போகும் படி, அவளை வேறு உலகிற்கு அழைத்து சென்றது அந்த குரல்.

அதிலும் அந்த வரிகள்… அவளுக்கெனவே செதுக்கியதை போல!!!

 

‘அஞ்சு நாள் வரை அவன் பொழிந்தது,

ஆசையின் மழை, அதில் நனைந்தது

நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்…

அது போல… இந்த நாள் வரை உயிர் உருகிய

அந்த நாள் சுகம்… அதை நினைக்கையில்

ரத்த நாளங்கள்… ராத்திரி வெடிக்கும்…

 

ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை…

விவரம் ஏதும் அவன் அறியவில்லை…

என்ன இருந்த போதும் அவன் எனதில்லையே…

மறந்து போ என் மனமே!!!’

 

வரிகளிலும் அந்த குரலிலும் தன்னை மறந்தவள் விழியோர நீர்துளியுடன் உறங்கிப்போனாள்.

 

-கலாட்டா தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!