Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காற்றே எனைக் கிள்ளாதிரு 20

இதோ ரக்‌ஷியை கொண்டு வந்து சேர்த்து நான்கு மணிநேரத்திற்கும் மேலாகிறது.  இன்னும் ஐ.சி.யு. வில் தான் இருக்கிறாள்.  வீட்டிலேயே முதலுதவி செய்து கொண்டு வந்திருந்ததால் ஆபத்து கட்டத்தை தாண்டியிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

குடும்பம் முழுவதும் அங்கேதான் அமர்ந்திருந்தனர்.  ரக்‌ஷியின் பெற்றோர், ஷ்யாமளா, அரவிந்தன், கௌதம், அமுதினி என மொத்த குடும்பமும் அங்கே குழுமியிருந்தனர்.

எல்லோரது மனதிலும் ஏன்?  ஏன் இப்படி செய்தாள்?  அப்படி என்ன கஷ்டம்?  இந்த அளவுக்கு முடிவு எடுக்கும் அளவுக்கு என்ற கேள்வியே மனதை குடைந்து கொண்டிருந்தது.

அவர்களது மருத்துவமனை என்பதால் போலிஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டனர்.  கீதாவும் அவரது கணவரும் மகளின் செயலில் பயந்து போய் பீதியில் பேதலித்து நின்றிருந்தனர்.  கீதாவுக்கு மகளின் இந்த முடிவு அவரை நிலைகுலைய செய்திருந்தது.



Advertisement

அவள் உயிருக்கு பிரச்சனையில்லை என்று சொல்லும் வரை அழுது கத்தி கதிகலக்கிவிட்டார்.  அவரை ஆசுவாசப்படுத்தி அமைதி கொள்ளச் செய்யவே பெரும் பாடாக இருந்தது.

அரவிந்தன் மனதளவில் ஓயுந்து போய் அமர்ந்துவிட்டான்.  மனதில் ரக்‌ஷியின் மேலிருந்த கோவம், ஆத்திரம், எரிச்சல் எல்லாம் இப்போது பயமாக மாறி மனம் வெறுமை அடைத்துக் கொண்டிருந்தது.

தான் அங்கு போகாமல் இருந்திருந்தால்…, பார்க்காமல் விட்டிருந்தால்..,  அதற்கு மேல் அவனுக்கு யோசிக்கவே பயமாக இருந்தது.  என்ன நினைத்து இந்த முடிவுக்கு வந்தாள்.  விவரம் தெரிந்த நாட்களில் இருந்து அவளுடன் பழகினதை விளையாடியது எல்லாம் நிழலாக உருவெடுத்து அவனை அமைதியில்லாமல் ஆட்டிக் படைத்தது.

Advertisement

சின்னப் பெண்ணாக மழலை மாறாமல் தத்தி தத்தி நடக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அவன் பின்னால் மாமா மாமா என அழைத்து முத்துப் பற்கள் தெரிய அழகாக சிரித்து, கைத்தட்டி, அவன் கைப்பிடித்து விளையாடி திரிந்தவளை இப்போதும் மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

Advertisement

காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அவர்களும் வளர்ந்தாலும் அதே பிணைப்புடன் இதுவரையில் அவர்களிடையே எந்த வேற்றுமையும், மனக்கசப்பும், பிரிவினையும் பெரியதாக வந்ததில்லை.  அவள் எதையும் கேட்கும் முன்னே அவனே அவள் விருப்பமறிந்து விட்டுக் கொடுத்து செய்துவிடுவான்.

ஆனால், இப்போது…?  எல்லாம் தலைகீழாக மாறியிருந்தது.  அவ்வளவு சொல்லியும் புரிந்துகொள்ளாமல், என்ன செய்து வைத்திருக்கிறாள்.  தன் உயிரையே துச்சமாக நினைத்து தன்னை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு செல்வாள் என அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் காலத்திற்கும் தன்னை  குற்றவுணர்ச்சியில் அல்லவா தள்ளியிருப்பாள்.  அப்படி என்ன அவளுக்கு ஆணவம்? அகந்தை, பிடிவாதம் என அவளை மனதிற்குள் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான்.

Advertisement

அவள் உயிர் பிழைக்கும் வரை அவனது படபடப்பும், பயமும், பதற்றமும் அவனைக் உயிருடன் கொன்று வதைத்திருந்தது.  அவனது மனசாட்சியே எல்லாம் உன்னால்தான் என குற்றம் சாட்டியது.  நீ இன்னும் இதை  பொறுமையாக அவளுக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம்.  இன்னும் நிதானமாக புரிய வைத்திருக்கலாம்.  அவள் சின்னப் பெண் தானே? என அவனை கூறு போட்டுக் கொண்டிருந்தது.

ரக்‌ஷி ஆபத்தை தாண்டும் வரை அவள் உயிர் பிழைத்தால் போதும் என வேண்டி நின்றவனுக்கு, வேறு எதுவும் நினைவில் வராமல் அவள் திரும்பி வந்தாள் போதும் என மட்டுமே இருந்தது.  அவள் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிந்த நொடியில் இருந்து அடுத்த கவலை பிடித்தாட்டியது.

அவளது இந்த செயலுக்கான காரணத்தை பெரியவர்கள் அறிய வந்தால். அய்யோ என தலையில் கைவைத்து இடிந்து உட்கார்ந்தவன்தான், இன்னும் அப்படியே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

இவனது நிலை இப்படி என்றால் அமுதினிக்கு பயத்தில் மயக்கமே வந்திருந்தது.  எதுவும் வாயைக் கூட திறக்காமல் அப்படியே அமர்ந்து விட்டாள் அதிர்ச்சியுடன்.

அவளுக்கும் மனதில் ரக்‌ஷியின் செயலைக் கண்டு உள்ளம் நடுங்கியது.  ரக்‌ஷி உயிர் பிழைக்கும் வரை எல்லாக் கடவுள்களையும் வேண்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

எதையும் நேர்கொண்டு தைரியமாக சமாளிப்பவள் இன்று மனதளவில் துவண்டுப் போய் அமர்ந்திருந்தாள்.  மனம் சோர்ந்திருந்ததில் முகமும் அயர்ச்சியுடன் காணப்பட்டது.

ரக்‌ஷிக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால் அது தன்னையும் தன் குடும்பத்தையும் அல்லவா பாதித்திருக்கும்.  தான் ஒன்றும் செய்யாத போதும், அவளின் செயல் தங்களை எவ்வளவு பெரிய இழிச்சொல்லுக்கு கொண்டு போயிருக்கும்.

தங்களின் குடும்பத்திற்கு எப்படிப்பட்ட அசிங்கத்தை, அவமானத்தை தேடித் தந்திருக்கும் என சிந்தித்து பார்த்தவளுக்கு அச்சத்தில் வயிறெல்லாம் கலங்கியிருந்தது.  அவள் பிழைத்து எழும் வரை ஒவ்வொரு நிமிடமும் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருந்தாள் மனதில் துயரத்துடன்.

அந்த நிமிடங்களில் வாழ்வின் மீதான நம்பிக்கையும், தைரியமும் அவளை விட்டு எங்கோ சென்றிருந்தது.  சொல்லொணா வேதனையுடன் விட்டேற்றியாக உட்கார்ந்திருந்தாள்.

இவளைக் கவனித்திருந்த கௌதம், ஏன் இவள் இப்படி பேயறைஞ்ச மாதிரி உட்கார்ந்திருக்கா?  ரக்‌ஷி பண்ணதுக்கு இவள் என்ன பண்ணுவாள்?   அதான் ரக்‌ஷிக்கு ஆபத்தில்லாம காப்பாத்தியாச்சு இல்ல என மனைவியையே கவனித்துக் கொண்டிருந்தான்.

உண்மையிலேயே அமுதினியின் மனதில், ஷ்யாமளாவுக்கும், கௌதமுக்கும் உண்மை தெரிந்தால் என்னாகுமோ என பயம் வந்திருந்தது.  தன்னிடம் ரக்‌ஷி பேசியதை ஏன்? சொல்லவில்லை என கோவப்படுவார்களோ சண்டை பிடிப்பார்களோ என நடுங்கிக் கொண்டிருந்தாள் உள்ளுக்குள்.

ரக்‌ஷி ஆபத்து கட்டத்தை தாண்டியதும் கௌதம்தான் ஷ்யாமளாவையும் அமுதினியையும் வற்புறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தான்.  அமுதினி ஹாஸ்பிட்டலிலேயே இருக்கிறேன் அவள் கண்முழித்ததும் பார்த்துவிட்டு செல்கிறேன் என மறுத்த போதும் ஷ்யாமளாவைக் காரணம் காட்டி தாயுடன் அனுப்பியிருந்தான்.

கணவனே தன்னிடம் வந்து நேரிடையாக பேசி வீட்டிற்கு போகச் சொல்லும் போது அதற்கு மேல் அவளாலும் மறுக்க முடியவில்லை.

இப்படி நடந்ததற்கான விவரம் தெரியவந்தால், தான் அவனிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் விட்டதற்கு தன்னை அறவே வெறுத்து ஒதுக்கிவிடுவானோ என கணவனை நினைத்து பயம் நெஞ்சைக் கவ்வியது.

ஆத்திரம், பயம், நெஞ்சின் படபடப்பு என எல்லாம் சேர்ந்த கலவையான உணர்வினை இத்தனை நேரம் நெஞ்சில் அடைத்து வைத்திருந்தவளுக்கு தன்னுடைய அறைக்கு வந்ததும், பாத்ரூம் சென்று கதவடைத்து அதன் மேலேயே சாய்ந்து நின்று வாய் விட்டு கதறி அழுதாள்.

சில நிமிடங்கள் நின்று அழுகையில் கரைந்தவள் உடல் அசதியால் நிற்க முடியாமல், முகத்தை தண்ணீர் அடித்து கழுவி, அழுந்த துடைத்துவிட்டு வந்து அமைதியாக படுத்துவிட்டாள்.

நடுசாமத்திற்கு மேல் வீட்டிற்கு வந்தவள் விடியும் வரை அழுதிருந்துவிட்டு பின்பு அசதியில் தானே உறங்கியிருந்தாள்.  காலையில் குளிப்பதற்காக வீட்டிற்கு வந்த கௌதம் இவளது அழுத தோற்றத்தை பார்த்தவனுக்கு ஏன் அழுதாள்… என யோசனாயானது.

ரக்‌ஷிக்காக என்று அவனால் எடுத்துக் கொள்ளவும் இயலவில்லை, நம்பவும் முடியவில்லை.  அவளையே சந்தேகமாக பார்த்திருந்தவனுக்கு என்னவோ இருக்கு.  மனசுல வச்சிட்டு வெளிய சொல்லாம மருகிட்டிருக்கா என ஓரளவு ஊக்கித்திருந்தான்.

இரண்டு நாளாவே அழுதிட்டிருக்கா.  அப்படி என்ன இவளைப் போட்டு வாட்டுது?  எதனால் இப்படி கஷ்டப்படறா என அவன் குழம்பித் தவித்தான் மனதில்.

கௌதம் குளித்து வந்து உடைமாற்றி சென்றது கூட தெரியாமல் இன்னும் உறக்கத்திலேயே இருந்தாள் அமுதினி.  காலையில் அவள் எழுந்திருக்கும் போதே மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது.  அரக்க பரக்க எழுந்தவள் குளித்து முடித்து கீழே சென்றாள்.

சமையல் செய்பவர் மட்டும் இருந்தார் கிட்சனில்.  ஷ்யாமளாவும் கிளம்பி சென்றிருந்தார் ஹாஸ்பிட்டலுக்கு.  அரவிந்தன், கௌதம் வீட்டிற்கு வந்தார்களா? என தெரியவில்லை அவளுக்கு.  இவளைப் பார்த்ததும் சமையல் செய்யும் சுப்பு இவளிடம் “என்னம்மா தூங்கிட்டிங்களா?  உடம்பு சரியில்லையா?  காபி தரவா?” என அக்கறையாக விசாரித்தார் அவளிடம்.

ஏனென்றால் எப்போதும் அவர் வருவதற்கு முன்பே அமுதினி கிட்சனுக்குள் பாதி வேலையை முடித்து வைத்திருப்பாள்.  இன்று அவர் வந்தும் வராமல் இருக்கவே சந்தேகப்பட்டு கேட்டார்.

அவரிடம் ஒன்றும் சொல்ல முடியாமல், “ஹாஸ்பிட்டல்ல கொஞ்சம் வேலை அதிகம் க்கா.  வீட்டுக்கு வர லேட் நைட் ஆயிடுச்சி.  அதான் டையர்ட்ல தூங்கிட்டேன்” என அவரை சமாளித்தாள்.

“ஓஹ்… அதான் அம்மா கூட லேட்டா எழுந்தாங்களா..?  பெரிய தம்பிதான் வந்து கதவை திறந்து விட்டுச்சி காலையில”.

ஓ.. இவர் காலையில வந்திருந்தாரா…?  அதுகூட தெரியாமல் நாம தூங்கியிருக்கிறோம் என நினைத்தவள், “காலையில இரண்டு பேரும் சாப்பிட்டாங்களா… க்கா” என் விசாரித்தாள் சுப்புவிடம்.

“ம்ம்… அம்மாவும், தம்பியும் டிபன் சாப்பிட்டு தான் போனாங்க ம்மா…”

அமுதினி ஷ்யாமளாவுக்கு போன் செய்து ரக்‌ஷியை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டாள்.  அவர்களுக்கு மதிய சாப்பாடு வீட்டிலிருந்து கொண்டு வர வேண்டுமா எனவும் கேட்டறிந்தவள், அவர் வேண்டாம் இங்கேயே கேன்டீனில் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறியதும் அவளும் கிளம்பியிருந்தாள் ஹாஸ்பிட்டலுக்கு.

ரக்‌ஷி கண் விழித்ததும் அவளை ஐ.சி.யு. விலிருந்து அறைக்கு மாற்றியிருந்தனர்.  அவள் கண்விழித்ததும் எல்லோரும் சென்று பார்த்து வந்தனர்.  அரவிந்தன் ரக்‌ஷி கண்விழித்ததும் அவளைச் சென்று பார்த்தவன் ஏதும் பேசவில்லை.

ஏதாவது தன்னிடம் பேசுவான்.  தன்னை அட்லீஸ்ட் ஏன் இப்படி பண்ண என திட்டவாவது செய்வான் என எதிர்பார்த்தாள் ரக்‌ஷி.  ம்கூம்… அவளையே வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான்.

தனது இந்த செயலுக்காக தன்னிடம் பேசி வருத்தப்படுவான், அல்லது கண்டிக்கவாவது செய்வான், ஆதங்கப்படுவான், இல்லையென்றால் ஆறுதலாக நாலு வார்த்தையாவது சொல்வான் என எதிர்பார்த்தவளுக்கு அவனது ஒட்டாத பார்வை அச்சத்தையும் வேதனையையும் கொடுத்தது.

தூரவே நின்று அவளை கண்ணெடுக்காது பார்த்திருந்தவன் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக சென்றுவிட்டான்.  ரக்‌ஷிக்கு அவனது ஒதுக்கத்தைப் பார்த்து அழுகை வந்தது.  தேம்பி தேம்பி அழுதாள்.  அவளின் பக்கத்திலேயே இருந்த பெற்றோர்தான் மகள் எதற்கு அழுகிறாள் என தெரியாமலேயே அவளைத் தேற்றினர்.

மகள் எதற்கு அழுகிறாள் எனக் கூட தெரியாது அவர்களும் பரிதவித்திருந்தனர்.  அவள் கண்விழித்ததிலிருந்து இன்னும் யாரும் அவள் எதற்காக உயிர் விடத் துணிந்தாள் என்பதைப் பற்றி எந்த விசாரணையும் செய்யவில்லை.

ஷ்யாமளா, ரக்‌ஷியிடம் யாரும் எதுவும் கேட்கக்கூடாது. அவளை எதுவும் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது.  அவள் உடல் தேறி தெளிந்து வரட்டும்.  அவளுக்கு டைம் கொடுங்க.  திரும்ப திரும்ப அதையே நினைவுப் படுத்தற மாதிரி பேசி அவளை இன்னும் வருத்தப்படுத்தாதீங்க என கண்டிப்புடன் சொல்லியிருந்தார்.

அவரின் பேச்சை மீற அவரது அண்ணனுக்கும் அண்ணிக்கும் மனதில்லை.  அவர்களுக்கும் மகள் ஏன் இப்படி செய்தாள்? என மனதில் தவிப்பிருந்தாலும், கேள்வியிருந்தாலும், மகளின் நலன் பொருட்டு அவளிடம் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.

ரக்‌ஷிதா கண்விழித்ததும் கீதா அவளைக் கட்டிக் கொண்டு கதறியழுதிருந்தார்.  “ஏன்டா இப்படி செஞ்ச? பெத்து இத்தனை காலம் உன்னை சீராட்டி வளர்த்த எங்களை கொஞ்சம் கூட நீ நினைச்சு பார்க்கலையா” என வாய்விட்டு துக்கத்தை அடக்க முடியாமல் கதறிவிட்டார்.

ஷ்யாமளா அறிவுறித்தியது போல், மகள் கண்விழித்ததும் அவள் மறுஜென்மம் எடுத்தது போல்தான் இருந்தது.

இப்போது தான் பிழைத்து கண் விழித்திருக்கிறாள். அவளை மேலும் ஏன்? எதற்கு? என கேள்வி கேட்டு வதைக்ககூடாது என நிதானமாக இருந்தார்.

ஷ்யாமளா அவர்களுக்கு தைரியம் கொடுத்திருந்தார். என்ன பிரச்சினை? எதற்காக இப்படி செய்தாள் என யாருக்கும் தெரியாது.  உடல்நிலை நன்கு தேறிய பின் அவளுக்கு கௌன்சிலிங் கொடுத்து என்ன ஏதென கேட்டறிந்து, மனதளவில் அவளைத் தேற்ற வேண்டியது என் பொறுப்பு எனக் அவரே கூறியிருந்தார்.  அதன் பொருட்டு அவர் மீதிருந்த நம்பிக்கையின் பேரில் அமைதியாக இருந்தனர் பெற்றவர்கள்.

அமுதினி வந்து ரக்‌ஷியைக் காணும் போது அவள் மாத்திரையின் உபயத்தால் உறங்கிக் கொண்டிருந்தாள்.  கீதாவுடன் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்துவிட்டு அவருக்கு ஆறதல் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அரவிந்தன் வீட்டுக்கு கூட செல்லவில்லை.  அங்கிருந்த அவனது ஓய்வறையில் சென்று படுத்துவிட்டான்.  இரண்டு நாட்களாக மனதின் மனவுளைச்சல், தூக்கமின்மை, சரியாக உணவு எடுத்துக் கொள்ளாதது என அவனை எல்லாம் சேர்ந்து உறக்கத்தில் தள்ளியிருந்தது.

நேற்று ரக்‌ஷியை இங்கு கொண்டு வந்து சேர்த்ததிலிருந்து இருந்த இடத்தை விட்டு அசையாமல் உட்கார்ந்திருந்தவன் , அவள் கண்விழித்ததும் அவளைச் சென்று பார்த்து விட்டு வந்தவன், வந்து படுத்தது தான் தெரியும்.  நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

ஷ்யாமளா, கௌதம் எல்லோரும் வந்து காலையில் அவனை வீட்டிற்கு சென்று ரெஸ்ட் எடுத்து வரச் சொல்லியும் மறுத்துவிட்டு அங்கேயே அவனுக்கென்று இருந்த ஓய்வெடுக்கும் அறையில் படுத்துவிட்டான்.

அமுதினி வீட்டிலிருந்து வந்து ரக்‌ஷியை காண வரும் சமயத்தில் அரவிந்தன் அங்கேயிருக்கவில்லை.  அதற்கு முன்னரே சென்றிருந்தான்.  அவன் வீட்டிற்கு சென்றிருப்பான் என அவளும் விட்டுவிட்டாள்.

மாலைவரை தூக்கத்தில் ஆழ்ந்திருந்தவனை கௌதம்தான் வந்து எழுப்பி வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

இரண்டு நாள் கழித்து ரக்‌ஷியை ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு அழைத்துவந்தனர்.  அவளை டிஸ்சார்ச் செய்யும் போதும் ஷ்யாமளா அவரது அண்ணன் அண்ணியிடம் திரும்பவும் வலியுறுத்தி சொல்லியிருந்தார்.

அவளை எதுவும் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள்.  இந்த வாரக் கடைசியில் அவளை ஒரு முறை செக்கப்பிற்கு அழைத்து வரும்படி இருக்கும்.  அப்ப அவளுக்கு இங்கே கவுன்சிலிங் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியிருந்தார் அவர்களிடம்.  அவர்களும் சரி என தலையசைத்து சென்றிருந்தனர்.

ரக்‌ஷி கண்விழித்ததும் வந்து பார்த்தவன்தான் அரவிந்தன்.  அதன்பின்பு அவன் வரவில்லை.  ஹாஸ்பிட்டலில் இருந்த இரண்டு நாட்களும் அவனை எதிர்பார்த்திருந்தவளுக்கு, அவனது விலகல் பாராமுகம் வேதனையைத் தந்தது.  அவனைபோல் அவளால் எளிதாக ஒதுக்கமுடியவில்லை.

முதல்முறை அமுதினி வந்து பார்க்கும் போது உறக்கத்தின் பிடியில் இருந்தவள். அடுத்த முறை அவள் குரலைக் கேட்டு தானாகவே தூங்குவதுபோல கண்களை மூடிக் கொண்டாள்.

அமுதினியின் முகத்தை பார்க்கும் தைரியம் அவளுக்கு இல்லை.  அவள் அமுதினியிடம் பேசிய வார்த்தைகளை எண்ணி அவளுக்கே கூசியது.  இதில் எங்கிருந்து எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளை நேர்கொண்டு பார்ப்பது.

அமுதினியை ஏறிட்டுப் பார்க்கும் துணிவின்றி அவளைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டாள்.  அமுதினி கீதாவிடம் பேசும் போதும் எங்கே தான் பேசியதை எல்லாம் கீதாவிடம் சொல்லிவிடுவாளோ எனற பயமும் நெஞ்சை அடைத்தது.

அமுதினி ரக்‌ஷியின் உடல்நலனை கீதாவிடம் கேட்டறிந்து, கொஞ்ச நேரம் அவரிடம் ஆறுதலாக பேசியிருந்து விட்டு சென்றுவிடுவாள்.

ரக்‌ஷியின் மனதில், தான் அமுதினியை அசிங்கமாகப் பேசியும், அவமானப்படுத்துவது போல் நடந்தும், தன் அன்னையிடம் அவள் எத்தனை பெருந்தன்மையாக நடந்து கொள்கிறாள் என எண்ணியவளுக்கு தன்னை எண்ணியே வெட்கமாக இருந்தது.

அரவிந்தன் வராததை பற்றியே நினைத்திருந்தவளுக்கு ஒருவேளை தான் தூங்கும்போது வந்து சென்றானோ என அன்னையிடம் விசாரித்து பார்த்தாள்.

“நீ கண் முழிச்சதும் வந்து பார்த்தவன்தான்.  அதுக்கப்புறம் வரல” என கூறியவருக்கு அப்பொழுதுதான் அவன் அவளைக் காண வீட்டிற்கு வந்தது பற்றி நினைவு வந்தவராக அரவிந்தன் வீட்டிற்கு அன்று மாலை வந்ததையும் அவளைக் காப்பாற்றி கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்ததையும் கூறிக்கொண்டிருந்தார்.

“அவன் மட்டும் அன்னைக்கு வீட்டுக்கு உன்னைப் பார்க்க வராம  இருந்திருந்தா, நானும் நீ ஏதோ அசதில மாத்திரை போட்டு தூங்கறேன்னு விட்டிருப்பேன்” என கண் கலங்கினார்.

“எப்ப செஞ்ச புண்ணியமோ, தெய்வம் போல சரியா அந்த நேரத்துக்கு வந்து உன்னை காப்பாத்தி, இங்க கொண்டு வந்து சேர்த்துட்டான்.  நான் கும்பிடற சாமியே அரவிந்தன் ரூபத்தில வந்து உன்னை எங்களுக்கு காப்பாத்தி கொடுத்ததா தான் நினைக்கறேன்.  அவன் நல்லாயிருக்கனும்…” என அவனை வாயார புகழ்ந்து கொண்டேயிருந்தார்.

“பிள்ளை பாவம்… நீ இப்படி ஆனதும் உன்னை கொண்டாந்து ஐ.சி.யு.வில சேர்த்துட்டு உட்கார்ந்தவன் தான்.  பச்சை தண்ணிக் கூட பல்லுல படாம அப்படியே உட்கார்ந்துட்டான்.  நீ கண்முழிக்கற வரைக்கும் அவனை பார்க்கமுடில.  பேயறைஞ்சமாதிரி உட்கார்ந்திருந்தான் தெரியுமா?”

இத்தனை நேரம் அவன் வந்து தன்னை கண்டுகொள்ளவில்லை என தவித்திருந்தவளுக்கு இதனைக் கேட்டதும் ஒரு வகையில் அவன் தன் மீது கொண்டுள்ள பாசம் அக்கறையை எண்ணி அவள் மனது உவகை அடைந்தது.

அப்புறம் ஏன் என்னைப் பார்க்க அவன் வரல என அவளது  மனம் அவனை எதிர்பார்த்து ஏங்கியது.

ரக்‌ஷி வீட்டிற்கு வந்தவுடன் அவளைக் கண்ணுக்குள் வைத்துக் கவனித்துக்  கொண்டாலும் அவளை விட்டு எங்கேயும் செல்லாமல் அடைகாப்பது போல் மாற்றி மாற்றி அவளுடனே இருந்தனர் அவளது பெற்றோர்.

ரக்‌ஷிக்கு அரவிந்தன் ஏன் அன்று வீட்டிற்கு தன்னைத் தேடி வந்தான் என மனதில் குடைந்து கொண்டேயிருந்தது.

அமுதினி அவனிடம் சொல்லியிருப்பாளோ?  இல்ல அன்னைக்கு மால்ல என்கிட்ட அவன் சொல்லாம போனதுக்கு என்னை சமாதானப்படுத்த வந்திருப்பானோ என கண்டதையும் நினைத்து கொண்டிருந்தாள் குழம்பிக் கொண்டிருந்தாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பூபதி, “சீக்கிரம் கிளம்புடா பர்ஸ்ட் டேவே லேட்டா போக கூடாது”.

“நான் ரெடி ப்பா.  நீங்க சாப்பிட்டீங்களா…?” என்றாள் கனிமொழி.

சாரதா, “இரண்டு பேரும் லன்ச் எடுத்துக்கோங்க.  கனி சாமி கும்பிட்டியா?”

“கும்பிட்டேன் ம்மா…”

“கனி மறுபடியும் சொல்றேன், உன் வால் தனத்தையெல்லாம் அங்க காட்டக் கூடாது.  பொறுப்பா நடந்துக்கனும்.  அப்பா நீ கேட்டேன்றதுக்காகதான் அங்க வாங்கி குடுத்துருக்காரு” என்றார் எச்சரிக்கையாக சாரதா.

“ம்மா… எத்தனை தடவை இதையே சொல்வீங்க.  அதெல்லாம் நான் பார்த்துப்பேன்”.

பூபதியும் கனிமொழியும் சாரதாவிடம் சொல்லிவிட்டு புறப்பட்டனர்.

கனிமொழி பி.பி.ஏ படித்து கொண்டிருக்கிறாள்.  அவள் நினைத்தது போலவே இன்டர்ன்ஷிப்காக பூபதி அவரது கம்பெனியிலேயே பேசி வாங்கி தந்திருந்தார்.

அலுவலகம் வந்ததும் அவளை கொண்டு போய் மார்கெட்டிங் டிபார்ட்மென்டில் சொல்லி விட்டுவிட்டு, அவருடைய கேபினுக்கு சென்றுவிட்டார்.

மார்கெட்டிங் டிபார்ட்மென்டின் இன்சார்ஜ் ஆதவன்.  அங்கு ஆதவனுக்கு கீழ் இவள் வேலை.  ஆதவனுக்கு இதுமாதிரி ட்ரைனிங் என்று யார் வந்தாலும் சேர்க்கவேமாட்டான்.

அவனுக்கான வேலையை செய்யவே அவனுக்கு நேரமிருக்காது.  இதில் இதெல்லாம் பார்க்க வேண்டுமா என அலுத்துக் கொள்வான்.  பூபதி நேரிடையாகவே சித்தார்த்திடம் பேசி ஒப்புதல் பெற்றிருந்ததால் மறுக்க முடியவில்லை.

ஆதவனுக்கு கீழே வேலைக்கு என நான்கு பேர் இருந்தனர்.  எல்லோருக்கும் தனி தனி சிஸ்டம் இருந்தது.   இது இல்லாமல் வெளியே மார்கெட்டிங்கிற்கு என தனி டீம் இருந்தது.

ஆதவன் அங்கு அவர்களது வேலையின் சாராம்சத்தை மேலோட்டமாக கனிக்கு சொல்லி, அவளிடம் படீலர்ஸ், ரீடெய்லர்ஸ் போன் நம்பர்கள் அடங்கிய ஒரு லிஸ்ட்டை கொடுத்து, அவர்கள் எல்லோருக்கும் போன் செய்து பேசி மார்கெட்டிங் செய்வது பற்றி மேலோட்டமாக சொல்லித் தந்து அவளையே போன் செய்தும் பேச சொன்னான்.

அவன் எதிரிலேயே உட்கார்ந்து பேச சொன்னவன், எப்படி பேச வேண்டும் எனவும் சொல்லி தந்திருந்தான்.  அவன் சொன்னது போல் அதிலிருந்த நம்பருக்கு எல்லாம் கால் செய்து பேச ஆரம்பித்தாள்.

முதலில் பயமும் தடுமாற்றமும் இருந்தாலும் பேச பேச பயம் தெளிந்து கொஞ்சம் பிடிபட்டது.

இரண்டு மணிநேரமாக போன் செய்து பேசிக் கொண்டிருந்தாலும் இதுவரை எந்த பாசிட்டிவ்வான பதிலும் இல்லை.  இதுவரை இந்த வேலையை சாதாரணமாக நினைத்திருந்தவளுக்கு இப்போது மலைப்பாக இருந்தது.

ஒரு ஆர்டர் கூட எடுக்க முடியவில்லை என மனம் சுருண்டது.  எல்லோரும் விவரங்களை விசாரித்து அறிந்து கொண்டு பிறகு சொல்வதாக போனை வைத்துவிட்டார்களே தவிர யாரும் ஆர்வம் காட்டவில்லை.  அதிலும் சில பேர் எடுத்த உடனே வேண்டாம் என முகத்தில் அடித்ததுபோல் சொல்லி வைத்திருந்தனர்.

ஆதவன் வேலையில் கவனமாக இருந்தாலும், இவள் மீதும் ஒரு கண் வைத்திருந்தான்.  அவன் வேலையில் அசகாய சூரன்.  இல்லையென்றால் இவ்வளவு பெரிய கம்பெனியின் மார்கெட்டிங் டிபார்ட்மென்டில் ஹெட்டாக இருக்க முடியுமா?

அவனைப் பொறுத்தவரை காலை எப்போது ஆஃபிஸ் வருகிறான்? மாலை எப்போது செல்கிறான் என கேட்டால் அவனுக்கே தெரியாது.  அவனுக்கு தெரிந்ததெல்லாம் வேலை வேலை வேலை இதுமட்டும்தான்.  அளவுக்கு அதிகமாக சிரித்துகூட யாரிடமும் பேசமாட்டான்.  அந்த அளவு சின்சியர்.  இப்படியே கனிமொழிக்கு நான்கு நாட்கள் சென்றிருந்தது.

ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்கு வரும்போது இன்று எப்படியாவது பேசி ஒரு ஆர்டராவத் எடுத்து அவனிடம் நல்லபெயர் வாங்கிட வேண்டும் என அவளும் எண்ணுவாள்.  ம்கூம் அவளது எண்ணம் பலித்தபாடில்லை.

அன்று பூபதியைக் கிளப்பிகொண்டு காலையிலேயே அலுவலகத்திற்கு வந்திருந்தாள்.  ஆதவன் இருக்கும் கேபினுக்குள் நுழைந்தவள் உற்சாகத்துடன் “குட்மார்னிங் ஸார்” என்றாள் சிரித்தமுகமாக.

“குட்மார்னிங்…” என ஆச்சர்யமாக பார்த்தவன் “என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்தாச்சு?” என்றான்.

“நீங்க மட்டும் டெய்லி சீக்கிரமா வந்திடறீங்க.  அதான் உங்களுக்கு முன்னாடி இன்னைக்கு வந்திடனும்னு ப்ளான் பண்ணி சீக்கிரமா வந்தேன். ம்கூம்… இப்பவும் நீங்க எனக்கு முன்னாடி வந்து உட்கார்ந்திருக்கீங்க”.

அவளது பேச்சைக் முறுவலித்தவன், “சீக்கிரம் வந்து என்ன பண்ணப் போற?  கரெக்ட் டைமுக்கு வந்தாலே போதும்.  இதுல உங்க அப்பாவையும் பிடிச்சி இழுத்துட்டு வந்தியா?” என்றான்.

“ம்ம்…”

“இப்ப என்ன வேலையிருக்கு உனக்கு?  நீ சீக்கிரம் வந்தாலும், போன் பண்ணி பேசற டீலர்ஸ், ரீடெய்லர்ஸ் எல்லாம் பத்து மணிக்கு மேல தான் அவெயிலபலா இருப்பாங்க”.

“ஆமாம்…” என தலையாட்டியவளுக்கு அப்போதுதான் அது ஞாபகம் வந்து அசடு வழிந்தாள்.

“இதுக்கு பேர்தான் ஆர்வக் கோளாறுன்னு சொல்றது.  ஆரம்பத்தில எல்லாம் நல்லா வேலை செய்வீங்க.  அப்புறம் போக போக கண்டுக்கவே மாட்டீங்க” என்றான் கிண்டலாக.

“இல்ல ஸார்.  நான் அப்படி எல்லாம் இருக்கமாட்டேன்” என வாதிட்டாள்.

“இப்பக் கூட உங்க கிட்டயிருந்து வேலை கத்துகிட்டு நல்ல பேர்  எடுக்கனும்ற ஆர்வத்தில தான் சீக்கிரமா வந்ததே” என்றாள் தன்னை அவனுக்கு விளக்கி விடும் பொருட்டு.

“ம்ம்… பார்த்தியா இதைதான் ஆர்வக் கோளாறுன்னு சொல்றது.  உனக்கு குடுத்த வேலையை ஒழுங்கா செஞ்சாலே போதும்…”

“திரும்ப… திரும்ப… அதையே சொல்லாதீங்க ஸார்.  நான் ஒன்னும் ஆர்வக் கோளாறு இல்ல.  நீங்க வேற எந்த வேலையும் சொல்லித்தராம, சும்மா என்னை ஆர்வக் கோளாறு சொல்வீங்களா….?

அவளைத் திரும்பி பார்த்து முறைத்தவன், “உனக்கு ரொம்ப தைரியம்தான், என்கிட்டயே இப்படி பேசுற…?” என்றான்.

அப்போது தான் இருக்கம் இடத்தின் சூழ்நிலையை உணர்ந்தவள், அச்சோ அப்பாக்கு தெரிஞ்சது கொன்னுடுவாரு என பயந்து, “ஸாரி ஸார். அது நீங்க என்கிட்ட எந்த வித்தியாசமும் இல்லாம நல்லா பழகவும் நானும் பேசிட்டேன்.  தப்பா பேசிட்டனா?  உங்களை ஹர்ட் பண்ணிட்டனா..? ரியலி ஸாரி” என்றாள் உணர்ந்து வருத்தமாக.

அவளது முகத்தில் வருத்தத்தைப் பார்த்தவன் “ஹேய்.. கூல்.  நான் சீரியஸா எல்லாம் பேசல.  நீ பேசினதை சொன்னேன்”.

“ம்ம்…. புரியுது.  இங்க வந்ததுல இருந்து உங்களைப் பார்க்கிறேன் இல்ல, என்னவோ மனசுல உங்களை மாதிரி நானும் சின்சியரா எல்லா வேலையும் கத்துகனும்னு ஆசையா வந்தேன்.  நீங்க அதை ஆர்வக் கோளாறுன்னு கிண்டல் பண்ணவும் கோவமாயிடுச்சு.  அதான் பட்டுன்னு பேசிட்டேன்.  ஸாரி”.

நாற்காலியை திருப்பி அவளைப் பார்த்தவாறு அமர்ந்தவன், “எத்தனை தடவை ஸாரி கேட்ப விடு.  இங்க உன்ன மாதிரி ட்ரைனிங் வரவங்க எல்லாம் வந்த புதுசுல நல்லா வேலைப் பார்ப்பாங்க.  அப்புறம் இன்ட்ரெஸ்டே இல்லாம கடமைக்குன்னு செஞ்சுட்டு சர்டிபிகேட் கிடைச்சா போதும்னு கிளம்பிடுவாங்க”.

“அந்த அனுபவத்துல சொன்னேன்.  இப்ப என்ன உனக்கு என்கிட்ட வேலை கத்துக்கனும்.  அவ்வளவு தான.  நான் சொல்லித் தரேன்.  நல்லா யோசிச்சுக்கோ.  நீ நினைக்கற மாதிரி ஈசியா எல்லாம் இருக்காது.  கஷ்டமாதான் இருக்கும்.  பின்னாடி ஜகா வாங்கக் கூடாது”.

“சும்மா ட்ரைனிங்காக வந்த, சர்ட்ஃபிகேட் போதும்னா, இப்ப செஞ்சிட்டிருக்ற வேலையே போதும் உனக்கு. ட்ரைனிங் பீரியட் முடிஞ்சதும் சர்டிஃபிகேட் கிடைக்கும்”.

“அச்சோ… மறுபடியும் போன் பண்ணி பேசற வேலையா….?  அதுல இருந்து எஸ்கேப் ஆகனும்னுதான் உங்களை ஐஸ் வைக்கறதே” என்றவள், கண்ணைச் சுருக்கி நாக்கைக் கடித்து அய்யோ உண்மையை உளறிட்டனா என சொன்னவள் திரு திரு என முழித்தாள் மாட்டிக் கொண்டவளாக.

“ஹா… ஹா… உண்மை வெளியில வந்துடுச்சா.  உன்னை நாலு நாளா போன் பண்ணி கஸ்டமர்கிட்ட பேச சொன்னது, உன் எக்ஸ்பீரியன்சுக்காக.  நீ பேசும் போது நிறைய விஷயம் கத்துக்கலாம்.  அவங்ககிட்டயிருந்து நிறைய இன்னும் நிறைய தெரிஞ்சுக்கலாம்”.

“நான் எல்லாம் வேலையில சேர்ந்த புதுசுல, மாசக் கணக்குல சலிக்காம இது மாதிரி போன் பண்ணி பேசியிருக்கேன்.  யாரும் எடுத்ததுமே எல்லாம் கத்துக்க முடியாது.  சின்சியரா வேலை செய்ய ஆரம்பிச்சோம்னா வேலை பழக பழக நமக்கே கான்பிடன்ட் வர ஆரம்பிச்சு, வேலை பிடிபட்டுடும்”. என்றான் பொறுமையாக.

“ஆனாலும் உனக்கு வாய் அதிகம்தான்” என்றான் சிரித்துக் கொண்டே, “என்கிட்டயே தைரியமா பேசறே நீ?”

“இதுவே வாயா…?  இதெல்லாம் ரொம்ப கம்மி..”

“ஆஹாங்… உங்க வீட்டில உன்னை எப்படி சமாளிக்கறாங்க….”

………………

“என்ன பண்ணப் போற?  நீ சொன்ன மாதிரி என்கிட்ட வேலையை கத்துக்கனுமா?  இல்ல பழைய மாதிரி போன் பண்ணி டீலர்ஸ்கிட்டயே பேசறியா…?”

“நீங்க என்ன சொல்றீங்களோ அதுமாதிரியே செய்யறேன்”.

“குட்.  இந்த வீக் புல்லா கஸ்டமர் கிட்ட பேசி பழகு.  நெக்ஸ்ட் வீக்ல நான் கொஞ்சம் பிரியா இருப்பேன் அப்ப நானே உனக்கு அடுத்து என்னன்னு சொல்லித் தரேன் ம்ம்…” என்றான் தலையசைத்து.

சரி என தலையசைத்தவள், “ஒன்னு சொல்லட்டா…?” என்றாள்.

என்ன எனப் பார்த்தான்.

“என்னைவிட உங்களுக்குதான் வாய் அதிகம்,  பேசி பேசி என்னை ப்ரைன் வாஷ் பண்ணி என் வாயாலேயே என்னை ஒத்துக்க வைச்சிட்டீங்க.  சும்மாவா உங்கள மார்கெட்டிங் டீம்ல உட்கார வைச்சிருக்காங்க,  இப்படிதான் பேசி பேசியே மார்கெட்டிங் பண்றீங்களா..?” என்றாள்.

“ஹா…  ஹா… நிஜமாவே உனக்கு வாய்தான்.  தைரியமும்கூட. என்னையே கலாய்க்கிறயா நீ…? என்றான் சத்தமாக சிரித்துக் கொண்டே

“ச்ச… ச்ச…… உண்மையதான் சொல்றேன் ஸார்.  பொய்யில்ல.  நிஜமா நான் கலாய்க்கல”.

“ம்ஹூம்…. நம்பிட்டேன்” என்றான் தலையை ஆட்டி. சிரித்துக் கொண்டே.

கனிமொழி அவளுக்கான வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.  கொஞ்ச நேரம் சென்று அவளைத் திரும்பி பார்த்தவன், சான்சே இல்ல இவள் என சிரித்துக் கொண்டே தலையை அசைத்துக் கொண்டான்.

பூபதி ஸாரின் மகள் என்பதால்தான் ஆரம்பத்தில் அவளுடன் நன்றாக பேச ஆரம்பித்தான்.   அதன் பின்பு அவளது பேச்சு செயல் என அவனை கவர்ந்திருந்தது.

எந்தப் பூச்சும் இல்லாமல் மனதில் பட்டதை வெளிப்படையாக அவள் பேசுவதே அவனைக் கவர்ந்திருந்தது.  அந்தப் பக்கமாக வந்த சித்தார்த் ஆதவனின் சிரிப்புச் சத்தம் கேட்டு கேபினுள் நுழைந்தான்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!