Skip to content
Post Views: 5,454
அத்தியாயம் – 11
சிறிய அழகான அம்மன் கோவில், பச்சை பசேலென வயல்களின் நடுவே அமைந்திருந்தது. பல தலைமுறைகளை பார்த்த பெரிய அரசமரம், பல கிளைகளில் தொட்டில்கள் தொங்கிக்கொண்டிருந்தன. எதிர்புறம் மஞ்சள் பூசி நிழல் பரப்பிக்கொண்டிருந்த வேப்ப மரம்.
முதல் ரவுண்ட் இவர்கள் இருவரையும் அம்மன் சன்னிதானம் முன் அமர வைத்து, மந்திரங்கள் சொல்லி, சில பல சாங்கியங்கள் பண்ணச் செய்து, அனுப்பியிருந்தார்கள். அம்மன் அபிஷேகம் பார்த்துவிட்டு, இப்போது அலங்காரம் முடிய வேப்பமரத்தின் அடியில், பாய் விரித்து பெண்கள் மூவரும் அமர்ந்திருந்தனர். பொதுவான பேச்சுக்கள் ஒடியது.
ஒரு இடைவெளியில், “ஏன் வேதா, இப்ப படிப்பு முடிஞ்சதும், இதுக்கு என்ன பெருசா வேலை கிடச்சிடும். வாத்தியார் உத்யோகம்தானே ?”, என்று சற்று இகழ்ச்சியாக வந்தது காயத்ரியின் கேள்வி.
Advertisement
அவளைப் பார்த்தால், சத்தியமாய் கேம் தியரி பற்றிய ஒரு அறிமுகம் இருக்குமெனத் தோணவில்லை, அது கூட அவசியமில்லை, வேதாவால் விளக்க முடியும். ஆனால், அதை புரிந்துகொள்ளும் ஆர்வம் கூட தெரியவில்லை. ஒரு அலட்சியமே ஓங்கியிருந்தது. எதுக்கு ஆவியை வீணாகுனானேன் என்று, “ யோசிக்கலை அண்ணி, முடிச்சிட்டு பார்த்துக்கலாம்.”, என்று முடித்தாள்.
“படிக்கறவ, என்ன வேலை கிடைக்கும்னு தெரியாமயா படிப்ப ? கூடவே கரஸ்ல ஒரு B.Ed சேர்ந்திருந்தா, அதுவும் முடிஞ்சிருக்கும் இல்லை ? டீச்சர் உத்யோகத்துக்கு அவசியம் கேப்பாங்களே. நீ M.Sc பண்ணதுக்கு பதிலா, அதப் பண்ணிருந்தா உபயோகமா இருந்திருக்கும்.”, அறிவு பூர்வமாய் பேசுவதாக நினைத்துப் பேசிக்கொண்டிருந்தாள் காயத்ரி.
“B.Ed இல்லாட்டா வேலை கிடைக்க கஷ்டமா காயத்ரி ?”, என்று சீரியசாக பர்வதம்மா அவளை கேட்டுக்கொண்டிருந்தார்.
Advertisement
“ அது யாரையாச்சம் ரெகமண்டேஷன் புடிச்சு வாங்கிடலாம்மா. என்ன சம்பளம் கம்மியா தருவாங்க. மிஞ்சி மிஞ்சி போனா ஒரு எட்டு, பத்தாயிரம் தேரும். அதுவும் M.Scங்கறதால. “, வேலை வாய்ப்பு அதிகாரி ரேஞ்சுக்குப் பேசினாள் காயத்ரி.
Advertisement
“ஏன் வேதா, அந்த B.Ed ஐயும் படிச்சிடறதானே ?”, என்று பர்வதம்மா கேட்க, வந்த சிரிப்பை அடக்க முடியாது நெளிந்துகொண்டே விக்ரமைத் தேடினாள்.
சற்று நேரமாகவே அவள் உடல் மொழியைப் பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் தேடுவது தெரிந்ததும், வேகமே அருகில் சென்றவன், “மா, அலங்காரம் முடியறத்துக்குள்ள ஒரு இளனி சாப்பிடுறீங்களா ?”, என்று கேட்டான், கவனமாக வேதாவின்புறம் பாராது.
“சரிடா, எல்லாருக்குமே வாங்கு “, என்று பர்வதம்மா சொன்னதும். வேதா, வா, ரெண்டு பேருக்கும் கொண்டாரலாம் என்று அவளை அழைத்துக்கொண்டு சற்று தள்ளி இளனி விற்பவரிடம் சென்றவாறே, “என்ன, எதுவும் குடைச்சல் குடுத்தாளா ? நெளிஞ்சிட்டு இருந்த ?”, என்று அவள் முகம் பார்த்தான். அடக்கப்பட்ட புன்னகை மட்டுமே இருந்தது.
Advertisement
“இன்னும் கொஞ்சம் விட்டுருந்தா, என்னை B.Ed கோர்ஸ் சேர்த்துட்டுதான் மறு வேலை பார்த்திருப்பாங்க உங்க அம்மாவும் அக்காவும்”, என்று நடந்த பேச்சுகளைக் கூறினாள்.
“தான்தான் அதிமேதாவின்னு நெனப்பு அவளுக்கு, சரியான அரைவேக்காடு. லூஸ்ல விடு. அவளுக்கு விளக்கவே முடியாது. தான் சொன்னதுதான் கரெக்ட்டுன்னு பிடிவாதம் பிடிப்பா, இல்லைன்னா, பாயின்ட விட்டுட்டு நம்மள மட்டம் தட்டி பேசுவா.” என்று விளக்கியவன், அவளுக்கு ஒரு இளனியை வாங்கிக் கொடுத்து, அம்மாவிற்கும், அக்காவிற்கும் இரண்டை வாங்கிக்கொண்டு போனான்.
“அவளை அனுப்ப வேண்டியதுதானே, நீ ஏன் வந்த ?”, என்று கேட்டவாறே இளனியை வாங்கிக்கொண்டாள் காயத்ரி. ‘உனக்கு சேவகம் பண்ணத்தான் அவளை கல்யாணம் பண்ணிக்கூட்டிட்டு வந்தேன் பாரு..’, என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்தவன், பதில் பேசாது திரும்பினான். அண்ணனுக்கும் அவனுக்கும் வாங்கிக்கொள்ள.
பூசாரி உள்ளே கூப்பிட, ஆராதனை பார்த்து, அம்மன் பாதத்திலிருந்த தொட்டிலை வாங்கிச் சென்று, அரச மரத்தடியில் தம்பதியாய் கட்டி, மூன்று முறை மரத்தை வலம் வந்து, மரத்தின் கீழே இருந்த அம்மனை விழுந்து வணங்கினார்கள். பர்வதத்தின் முகத்தில் இப்போதுதான் திருப்தி. பிரசாதம் உண்டு ஒரு வழியாக வேறு குதர்க்க பேச்சுகள் எதுவுமின்றி வீடு வந்தார்கள்.
மதியம், வேதா வீட்டில் விருந்து என்பதால், உடனே அங்கே கிளம்ப, இரவுக்கு வெளியே செல்வதாய் விக்ரம் சொல்லவும், ஆரம்பித்தது பிரச்சனை.
“டேய், அத்தை வீட்டுக்கு வருவன்னு சொல்லிருக்கேண்டா. நீ எங்க போற.”, என்றார் பர்வதம்.
“யாரகேட்டுமா சொன்னீங்க ? இப்டிதான் உங்க இஷட்துக்கு பூஜைக்கு சொன்னீங்க, சரின்னு நானும் வந்தேன். இப்ப அடுத்த ப்ளான் போடரீங்க ? என்னால போக முடியாது. நான் என் ஃப்ரண்ட்ஸ் ஏற்பாடு பண்ண டின்னருக்கு போகணும். யார் விருந்துக்கு கேட்டாலும், எங்கிட்ட பேச சொல்லுங்க. நான் என் தோது பார்த்து சொல்லிக்கறேன்.” என்று கடிந்தான்.
“என்ன ஏண்டா காயற, அவங்க கேக்கவும் சரின்னேன். இதே ரூலை உன் மாமியார் வீட்லயும் சொல்லி வை.”, என்று ஒரு கொட்டு வைத்தார் வேதாவையும் பார்த்தவாறே.
“போனதும் மொதல் வேலையா சொல்றேன்.”, என்றான் விக்ரம்.
“வெறுங்கையோட போகாதீங்க, கோவில் பிரசாதம் மட்டும் போறாது, பூ, பழம், ஸ்வீட், காரம்னு வாங்கிட்டு போங்க”, கடமை தவறாமல் முறையையும் சொல்லி அனுப்பினார்.
இரவு, இருவருமாக, காண்டில் லைட், வாலன்டைன் டின்னரில் அமர்ந்திருந்தார்கள். காதலர் தினத்திற்கான ப்ரத்யேக டின்னர் அந்தப் பிரபல ஹோட்டலில். கடல் பச்சை அனார்கலி சல்வாரில் அழகோவியமாய் அவளும், கருப்பு பாண்ட், டக் செய்த வெளிர் நீலத்தில் காஸுவல் ஷர்ட்டில் அவனும், காதல் ஜோடியாய் அமர்ந்திருந்தனர்.
“இதை வீட்ல சொல்லமுடியாமதான், ப்ரெண்ட்ஸ் கூட டின்னர்னு சொன்னீங்களா ?”
“இல்ல தேனு, என்னோட சி.ஏ படிச்சானுங்களே, பிரபு, ராம்னு ரெண்டு பேரு, கல்யாணத்துல கூட இன்ட்ரோ குடுத்தேனே ?”
“ஆமா..”
“அவங்க வெட்டிங்க் கிஃப்டா, டிக்கெட் வாங்கி குடுத்தானுங்க. சோ, இது ப்ரண்ட்ஸ் ட்ரீட் தான்.” , என்று கண்ணடித்தான்.
இரவு உணவினூடே, DJ வின் சிறு விளையாட்டுக்கள், காதல் பாடல்கள், டான்ஸ் என்று மகிழச்சியாகச் சென்றது பொழுது.
“நல்லாருந்தது உங்க சர்ப்ரைஸ். ஹிந்து பேப்பர்ல விளம்பரம் பார்க்கும்போது, யார் இதுக்கெல்லாம் போவான்னு நெனப்பேன். நானே வருவேன்னு நெனக்கலை. இந்த ஐடியா வந்ததுக்கு, உங்க ப்ரெண்ட்சுக்கு நான் தாங்க்ஸ் சொன்னேன்னு சொல்லுங்க.”, என்றாள் வேதா.
நேரே, அவர்கள் புது வீட்டிற்கு வந்தனர். இரவு படுக்கைக்கு தயாரானபோது, “இன்னொரு சர்ப்ரைசும் இருக்கு. இது நானே வாங்கினது, என்று ஒரு கிஃப்டைக் கொடுத்தான்.
“கலக்குறீங்களேபா, நான் எதுவுமே வாங்கலையே’, என்று வருத்தப்பட்டவாறே, அதைப் பிரித்தாள். உள்ளே இரண்டு ஆங்கிலப் புத்தகங்கள். தாம்பத்திய வாழ்வின் சுகங்கள் என்று ஒன்று அவளுக்கு, மற்றது அவனுக்கு.” , அதிர்ந்து நிமிர்ந்து அவனைப் பார்க்க, ஒன்றுமறியா குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு, ஒரு கள்ளச்சிரிப்போடு, “என்ன தேனு, எப்படி என் செலக்ஷன் ? நம்ம பரீட்சைக்கு இத சிலபசா வெச்சிக்குவோமா ?”
“அட கேடி..”, என்று அவனை அடிக்கத் துரத்த, அவளுக்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தான் , அந்த காலி ஹாலில்.
“ இதுவும் உன் சொந்த சரக்கில்லை மாமே..அந்த டாக்டர் குடுத்த ஐடியாவை நீ செயல்படுத்தின அவ்வளவுதான். நீயேவாப்பா போய் வாங்கின ? நம்ப முடியலையே ?”, சந்தேகப்பார்வை பார்த்தாள்.
“ஹே லூசு, இதை வேற யார்கிட்டயோவா வாங்க சொல்லமுடியும் ? எந்த புக் நல்லாருக்குன்னு அமெசான்ல ரிவ்யு எல்லாம் பார்த்து, அப்பறம் லாண்ட்மார்க் போய் வாங்கி, அதவேற, ஒளிச்சி வெச்சி, இங்க கொண்டு வரதுக்கு எவ்ளோ பாடு தெரியுமா ?”, ரோஷமாய் விளக்கினான்.
“சமத்து சக்கரகட்டி இவ்ளோ வேலை பார்த்துருக்கீங்க ? ஐ ஆம் ப்ரௌட் ஆப் யு…”, என்று வடிவேலு தொனியில் முடித்தாள்.
“மவளே, நக்கலா….இரு, நான் முதல் சாப்டர் படிச்சிட்டேன். இப்போ ப்ராக்டிகல் பழகிக்கறேன். அப்போ தெரியும் நான் எவ்ளோ சமத்துன்னு “ , என்று அவள் கத்த கத்த தூக்கிக்கொண்டு போனான்.
சனி, ஞாயிறு வீட்டை மாற்றுவதிலும் , காயத்ரியை கிளப்புவதிலும் , விருந்தாடுவதிலும் சென்றது.
வெள்ளிகிழமையே, மாலினி ராகவனிடம் தனிமையில் “ ராகவ் அவங்களை ஒரு நாலு அஞ்சு நாள் எங்காச்சம் தேனிலவு அனுப்பிவெக்கலாம். சீக்கிரமே ஆளா ஒரு பக்கம் இருக்கப்போறாங்க. நெனச்சிக்க கொஞ்சம் ஸ்வீட் மெமரீஸ் இருந்தா பரவால்லையா இருக்கும்தானே ?”
எப்போதும் தன் குடும்பத்தைப் பத்தி யோசிப்பவளை ஆதுரமாய் பார்த்தவன், “ஒரு இருவது, இருவத்தஞ்சாயிரமாவது ஆகும்மா, நல்ல ரிசார்ட் புக் பண்ணி, போக்குவரத்து, சாப்பாடு எல்லாம் பாக்க. இப்ப டைட்டா இருக்கேடா, அவங்கிட்டயும் பெருசா பாலனஸ் இல்லை, அதான் பாக்கறேன். வீடு முடிக்கணுமேன்னு சேகர், வெங்கட் கிட்டயும் கடன் வாங்கியாச்சு. பாங்க்காரன் பைனல் பேமண்ட்னால இழுத்தடிக்கிறான் அத இத வெரிஃபை பண்ணணும்னு….அதான் யோசிக்கறேன்.”
பீரோவிற்கு சென்றவள், தன் காசு மாலையுடன் வந்தாள். “ரொம்ப நாள் ஆச்சுல்ல, இதை படிக்க அனுப்பி, நாளைக்கு அனுப்பிடுங்க. சேகர், வெங்கட் அண்ணாக்கு பாதி பாதி காச திருப்பி குடுத்துட்டு, விக்ரமுக்கு இருவத்தஞ்சாயிரம் பாங்க்ல போட்டுட்டு சொல்லுங்க, நம்ம கிஃப்ட்டுன்னு.”
“மயிலு, கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும், இன்னுமும் உன் நகையை கொண்டுபோய் வெக்க அவமானமா இருக்குடி”, குரல் கரகரத்தது ராகவனுக்கு.
“ச்சு, ஏன்ப்பா அப்படி நெனக்கற. கல்யாணத்துக்கு போட்டாச்சு. இனி அடுத்த விசேஷத்துக்குதானே வேணும். அதுவரை சும்மாதான் இருக்கப் போகுது. எட்டு சவரத்துல எங்கம்மா செஞ்ச ஒரே நல்ல காரியம், இத போட்டது. நம்மள நெறைய வாட்டி மீட்டிருக்கு. இப்பவும் செய்யட்டுமே. இத வெச்சி செய்யற காரியமெல்லாம் நமக்கு ராசிதானே. அப்படி நினச்சிக்குவோம்.”, என்றாள் மாலினி. அப்படியும் அவன் முகம் தெளியாதது கண்டு,
“ராகவ்… இது லாஸ்ட் மைல். அப்பறம், நமக்காகத்தான் சேர்க்கப்போறோம், நம்ம பிள்ளைங்களுக்குத்தான் செலவு செய்யப்போறோம். விக்ரம் குழந்தை பிறந்தா சவரன் போடணும். அத விட்டா வேற ஒரு செலவும் அடுத்து சில வருஷங்களுக்கு இல்லை. லோன் இன்ஸ்டால்மெண்ட் வந்தா மீட்டுடலாம். ரொம்ப யோசிக்காதீங்க.” என்று அவனை பேசிக் கரைத்திருந்தாள்.
அவள் சொல்படியே செய்தவன், ஞாயிறு மாலையே விக்ரமிடமும், வேதாவிடமும் சொல்லி, தேனிலவைத் திட்டமிட சொன்னான். விக்ரமின் கண்கள், நன்றியுடன் அவன் அண்ணியைத்தான் தேடியது. சம்பளம் வந்ததும் அடுத்த மாதம் அவளை எங்கேனும் அழைத்து செல்லலாம் என்று நினைத்திருந்தான், ஆனால் அவள் வகுப்புகள் பாதிக்குமோ என்று கவலையில் இருந்தான்.
வேதாவைப் பார்த்து அவள் தோது கேட்க, மகிழ்ச்சியுடன் சரி என்றாள். “வர வெள்ளி கல்சரல்ஸ், சோ, பெருசா கிளாஸ் எதுவும் இருக்காது. புதன்லர்ந்து லீவ் போட்டுக்கலாம்.” என்றாள். தேனிலவுக்கான கனவு அப்போதே இருவர் கண்ணிலும்.
மறு நாள் இரவு உணவு அருந்தும் போது, மூணாறு செல்வதற்கான ரயில் மற்றும் ரிசார்ட் முன்பதிவு முடித்தது பற்றி அன்னையிடமும், அண்ணன், அண்ணியிடமும் சொல்லிக்கொண்டிருந்தான் விக்ரம்.
மாலினி சித்துவை மேய்க்க, வேதா மற்றவர்களுக்கு பரிமாறிக்கொண்டிருந்தாள். பர்வதம்மா, “ஏன் வேதா, அந்த பி.எட் படிக்கறது பத்தி முடிவு பண்ணிட்டியா ? எப்ப படிக்கப் போற ?”,என்றார்.
அவள் படிப்பைப் பற்றி அறிந்த ராகவனும் மாலினியும், ‘இதென்ன புதுக் கதை ‘என்று பார்த்தனர். விக்ரம் முகத்தில் அதிருப்தி தெரிந்தது.
“இல்லை அத்தை, இந்த படிப்பு முடிஞ்சிதான் எதுவும் யோசிக்கணும்.”
“நீ எப்ப முடிச்சி, எப்ப யோசிக்கிறது ? படிப்பு முடிஞ்சி, அவங்கூட சிங்கபூர் போயிட்டா எப்படி படிப்ப ? அங்க போனா டீச்சர் உத்யோகத்துக்கு இது இருந்தாதானே சீக்கிரம் வேலை கிடைக்கும் ?”, என்றார் பர்வதம்.
வேதா முழிக்கவும், விக்ரம், “ஏம்மா, நீங்கதானே உடனே குழந்தை பிறக்கும்னு சொல்றீங்க ? அவ வேலைக்கு போனா, குழந்தைய என்ன பண்றது ?”, என்றான்.
“அதுக்குன்னு இடம் இருக்காமேடா ? காயத்ரி சொன்னா. இல்லைன்னாலும் வேலைக்கு ஆள் வெச்சிக்கலாமாம். அங்க சம்பளம் கம்மியா கிடைச்சாலும், நம்ம ஊர் காசுக்கு நெறையதானேடா ?”, என்றவர். “ நீ அங்க வேலைக்கு சேர என்ன படிக்கணும்னு பார்த்து செய். அங்க போய் எதுக்கு வெட்டியா வீடல இருப்பானே ? காயத்ரி கடன், வீட்டு லோன்னு ஏகப்பட்டது இருக்கு.”
விக்ரமுக்கு அதற்கு மேல் உண்ணக்கூட முடியவில்லை. அவன் போராடுவதைப் பார்த்த வேதா, மாமியாரின் மீது வந்த எரிச்சலை மறைத்து, “ அங்க குழந்தைய காப்பகத்துல விடணும்னா, இல்லை வேலைக்கு ஆள் வெச்சா, நான் சம்பாரிக்கறதை அவளுக்கு குடுக்கறா மாதிரி ஆகிடும் அத்தை. கவலைப் படாதீங்க, நாலு பிள்ளைங்களுக்கு கணக்கு ட்யுஷன் எடுத்தாலே காசு வரும். அப்படியெல்லாம் வெட்டியா உக்கார்ந்து சாப்பிடமாட்டேன். நீங்க கவலைபடாம இருங்க. காயத்ரி அண்ணிகிட்டயும் சொல்லுங்க.”, உண்மையில் சொல்கிறாளா, நக்கலடிக்கிறாளா என்று பிரித்தறிய முடியாமல் அவளைப் பார்த்தார் பர்வதம்.
“அதெல்லாம் எதுக்கு ? காயத்ரிக்கு காசை குடுக்கற வரை, குழந்தையை தள்ளிப்போட்டா, நம்ம ரெண்டு பேரும் வேலைக்கு போய் காசை சேர்த்துடலாம். என்னம்மா ?”, என்றான் விக்ரம் நக்கலாய்.
“டேய் டேய், அதெல்லாம் வேண்டாம். அவ சொன்னா மாதிரி வீட்ல ட்யூஷன் எடுக்கட்டும்.”, என்றார் அவசரமாக.
“மா, போதும். அவங்களுக்கு தெரியும் என்ன பண்ணணும்னு. காயத்ரிய தேவையில்லாத விஷயத்தில தலையிட வேண்டாம்னு சொல்லு. அவ அதை சொன்னா, இதை சொன்னான்னு இங்க வந்து சொல்றதை நிறுத்து. “, ராகவன் முற்றுப்புள்ளி வைத்தான்.
மகன் கோபமாய் சொல்லவும், பர்வதம்மா அத்துடன் தட்டை எடுத்துக்கொண்டு கை கழுவச் சென்றார்.
மாலினி, வேதாவின் அருகில் வந்து, அவள் தோளை அழுத்தி, “சாரி வேதா, அவங்க ஏதோ பேசிட்டு போறாங்க. உன் படிப்பை பத்தியோ, உன் ஆசை பத்தியோ தெரியாம பேசறாங்க. இதை பெரிசா எடுத்துக்காத.” என்றாள்.
“அதுமட்டுமா ? வேதா, வீட்ல இருந்து தண்ட சோறு சாப்பிடகூடாது. அப்படி பார்த்தா, இவங்க பொண்ணு பத்து வருஷமா அவ வீடல அதே தண்ட சோறுதான சாப்பிடுறா ? அது மட்டும் கண்ணுக்குத் தெரியாது.”, விக்ரம் வெறுப்பை உமிழ்ந்தான்.
“விடு விக்ரம். வந்தவ ஸ்க்ரூவை நல்லா திருகிட்டு போயிருக்கா. இவங்க அதை கேட்டு ஆடறாங்க. தெரிஞ்சது தானே.”
“கடனை அடைச்சிட்டு பேசிக்கறேன் அண்ணி. இப்ப நான் எது சொன்னாலும் எடுபடாது. ஆனா, இதுக்கு கண்டிப்பா பதிலடி கொடுப்பேன்.”, உறுதியாய் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
வேலை முடித்து, அறைக்குள் வந்தவள், அவன் எரிச்சல் தணியாதது கண்டு, “ சொன்னவங்களும், சொல்லிக்குடுத்தவங்களும் நிம்மதியா தூங்கறாங்க. கேட்ட நீங்களும் இக்னோர் பண்ணுங்க. இல்லாட்டி உங்க மூட்தான் கெடும், உங்க தூக்கம்தான் பாழாகும். இப்ப அவங்க சொல்லிட்டாங்கன்றதுக்காக நம்ம செய்யபோறோமா ? விட்டுத் தள்ளுங்க.”, என்று ஆறுதலாய் அணைத்தாள்.
இறுக்கி அணைத்து விடுவித்தவன், “எப்ப தேனு இவ்ளோ அறிவாளியான ? தத்துவமெல்லாம் சொல்ற ?”
அவன் முடியைப் பிடித்து செல்லமாக ஆட்டியவள், “எங்கம்மாவும் இப்படித்தான் அறையும் குறையுமா தெரிஞ்சிகிட்டு படுத்துவாங்க. சரி சரின்னு சொல்லிட்டே நான் என்ன நெனைக்கிறேனோ, அதை அண்ணா மூலமா சாதிச்சிப்பேன். இப்ப அதே டெக்னிக்தான் இங்கயும் யூஸ் பண்ணனும்.”, தோளைக் குலுக்கினாள்.
“இந்த பேச்சை விடுவோம். நாளைக்கு மூணாறு கிளம்ப துணியை அடுக்கலாம் வாங்க. மொதல்ல அந்த புக்ஸை எடுத்து பாக் பண்ணுங்க, “, கண்ணடித்து அழைத்தாள்.
“அடிப்பாவி, இந்த ரேஞ்சல போச்சுன்னா, நாந்தான் வெக்கப்படணும் போல ? உனக்குள்ள இருக்க வேதாளத்த நானே கிளப்பிவிட்டுட்டேன்னே…”, என்று கலாய்த்தான்.அவளின் அடிகளைப் பெற்றுக்கொண்டே, பெட்டியைத் திறந்தான், துணிகளை அடுக்க.
error: Content is protected !!